முரண்பாடுகள் நிறைந்தது தான் வாழ்க்கை. அதை உணர்ந்தவர்கள் என்றுமே வாழ்க்கையில் தோற்பதில்லை. நம் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி காலங்களை விட சமீப காலத்தில் அதிக அளவில் மக்கள் மனநிம்மதியின்றி இருக்கிறார்களோ என்று எண்ணுவதுண்டு. அவர்களுடைய காலத்தில் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தார்கள். 'மினிமலிஸ்ட்' வாழ்க்கையும் அதற்கு ஒரு காரணம். போட்டி, பொறாமை குறைவான சமூகம், குடும்பங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்த காலங்கள் மறைந்து வருகிறது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை அன்னியமாக, நியூக்ளியர் வாழ்க்கையில் அடுத்தவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டு தங்களுடைய இன்பமான வாழ்க்கையைத் தொலைத்து நிம்மதியின்றி புலம்பல்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்குப் பல காரணங்கள் இருப்பினும், சில மூல காரணமாக இருப்பது நம் அறியாமை தான்.
வெற்றியடைந்த மனிதர்களை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறாமைப்படக் கூடாது. தோல்விகளில் இருந்து தான் வெற்றி கிடைக்கும். ஒரு செயலில் ஏற்படும் முதல் தோல்வியிலேயே மனம் துவளக்கூடாது. மேலும் மேலும் தோல்விகள் கிடைத்தாலும் தோல்விகளில் இருந்து கற்ற பாடங்களே வெற்றிப் படிக்கட்டுகளாக மாறும் என்பதை உணர வேண்டும். அதனால் தோல்வியை எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் அதிலிருந்து கற்றுக் கொள்ளும் அறிவுத்திறனும் இருந்தால் எந்த செயலிலும் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். ஒருவர் தோல்வி மேல் தோல்வி அடைந்தவராக இருந்தால் ஒன்று அவர் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை ஆராயவில்லை. மற்றொன்று தோல்வி கற்றுத்தந்த பாடத்திலிருந்து எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். எடுத்தவுடன் வெற்றி என்பது அதிசயமாக சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. அறிவியல் ஆராய்ச்சிகள் பலவும் பல தோல்விகளைக் கண்டு பின் வெற்றியடைந்தவைகள் என்பதை மீண்டும் மீண்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று நாம் காணும் வெற்றிகள் யாவும் சில பல தோல்விகளுக்குப் பின் தான் என்ற அறிவு மட்டும் இருந்தால் மனம் துவளாது வெற்றியை நோக்கி வீறுநடை போடும்.
அதே போல், நம்மில் பலரும் இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து வருந்துவார்களே ஒழிய நிகழ்காலத்தைக் கண்டுகொள்வதில்லை. இந்த நொடி மட்டுமே நம் கையிலிருப்பது. அதை மட்டும் தான் நாம் நிர்வகிக்க முடியும் என்பதை உணர்ந்தால் போதும். வாழ்க்கையின் பல பிரச்சினைகள் தீரும். நேற்று நடந்தவைகளோ நாளை நடக்கவிருப்பதோ இப்பொழுது நம் கையில் இல்லை. நேற்றைய தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டால் நாளை மீண்டும் அதே தவறுகள் நிகழாமல் இருக்க, இன்று அதற்கான வேளைகளில் நாம் முனைப்பாக இருக்க வேண்டும். அப்படிச் செய்யாதவர்கள் தான் என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். வாழ்க்கையின் அற்புதமே ஒவ்வொரு விநாடிகளில் புதியதாய் பிறக்கிறோம் என்பதை உணர்தலும் வாழும் இக்கணமே நிலையானது என்று அறிந்து செயல்படுதலும் தான்.
மேலும், சிறு சிறுவெற்றிகளில் நாம் கவனம் செலுத்த மறுத்து பெரிய வெற்றிக்காக காத்திருக்கையில் தான் மனசலிப்பும் ஏற்படுகிறது. எல்லாவற்றையும் கொண்டாட வேண்டும். இன்றைய நாளில் ஏதோ சில நல்ல விஷயங்கள் நம்மையறியாமல் நடந்திருக்கலாம். நினைத்துப் பார்த்து மகிழ வேண்டும். குழந்தைகள் பள்ளியில் பாராட்டைப் பெற்றிருக்கலாம். வேலையிடத்தில் சிறு குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம். வீட்டில் விருந்தினர் வந்திருக்கலாம். ஆனால், சொந்த வீடு இல்லை. பணியில் திருப்தி இல்லை. கையில் நிறைய பணம் இல்லை என்று புலம்புபவர்கள் இந்தச் சிறு இன்பங்களைத் தொலைப்பதால் தான் மனப்புழுக்கத்திற்கு ஆளாகி துன்பத்தில் உழல்கிறார்கள். 'என்னடா பொல்லாத வாழ்க்கை' என்று கொண்டாடும் மனநிலையில் இருப்பவர்கள் எப்பொழுதும் உற்சாகத்துடன் வளைய வருவதை நாமே நேரில் பார்த்திருப்போம். அதனால் இந்தக்கணம் நாம் செய்ய வேண்டிய வேலைகளில் முழுக்கவனம் செலுத்தினால் அதுவே போதுமானது. 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்பதே வாழ்க்கையின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மட்டுமே நாம் சிந்திக்க வேண்டும். நம்முடைய விருப்பங்கள் அதிகமானால் தொல்லைகளும் அதிகமாகும் என்பதை உணர வேண்டும். நாம் தேர்வு செய்யும் நம்முடைய விருப்பங்களே நமக்கு மனநிம்மதியைத் தரும் என்பதை காலம் உணர்த்துமுன் நாம் உணர்ந்து கொள்வதே சிறப்பு.
இன்றைய சமூக வலைதள உலகில் முகம் தெரியாத நட்புகள் அதிகமாகி அதை உண்மையென நம்பி அருகில் உள்ள மனிதர்களை மறந்து விடுகிறோம். சமூக வலைதள சண்டைகள் பலருக்கும் மனநிம்மதியைக் கெடுப்பதாகவே உள்ளது. எதையும் அளவுடன் வைத்துக் கொண்டால் நல்லது. பலரும் அங்கு படம் காட்டுபவர்களை வைத்து தன் வாழ்க்கை தான் இப்படி ஒன்றுமில்லாமல் இருக்கிறதோ என்று தாழ்வு மனப்பான்மை கொண்டு கவலையுடன் திரிகிறார்கள். மனச்சோர்விற்கு உள்ளாகிறார்கள். தனிமையில் வாடுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. 'அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதை உணருவோம்.
மரணம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. வயதான பிறகு தான் மரணம் நிகழும் என்று நாம் தான் நினைத்துக் கொண்டிருக்கோமே ஒழிய, அது நிகழ வேண்டிய நேரத்தில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும், கொரோனா காலத்திற்குப் பிறகு மரணத்தைப் பற்றின பயம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. சிலர் அதனையும் எளிதாக எடுத்துக் கொண்டாலும் பலரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இறுதியில் , மரண பயம் ஆட்டிப்படைக்கிறது.
இப்படி வாழ்க்கை முழுவதும் முரணாபாடுகள் இருந்தாலும் வாழும் கணத்தில் மட்டும் வாழ்ந்து விட்டால் போதும். நிறைவான நிம்மதியான வாழ்க்கையாக அது மாறி விடும்.
"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே/நடப்பதையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை"
நடந்ததையே/நடப்பதையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை"
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளில் பொதிந்துள்ள அர்த்தத்தை உணர்ந்து சிறப்புற வாழ்தலே வாழ்க்கை.
No comments:
Post a Comment