சிறுவயதிலிருந்தே யானை, குரங்கு, காகம், குருவி, கிளி, நாய், பூனை என்று மனிதர்களோடு பழகும் மிருகங்களைப் பார்க்க மிகவும் பிடிக்கும் எனக்கு. கோவில்களுக்குச் சென்றால் யானையைப் பார்க்காமல் ஆசீர்வாதம் வாங்காமல் வருவதில்லை. அதன் பெரிய கண்களும், தும்பிக்கையும், கால்களும் கம்பீரமாக நிற்கும் அதன் அழகும் பயத்துடன் அதனை நெருங்க வைக்கும். தெருக்களில் யானை வந்தால் குழந்தைப் பட்டாளங்களுக்கு ஒரே குஷி. யானை மீது ஏற ஆசை என்றாலும் அதன் முடி குத்துமே என்ற கவலை. சிறுவயதில் பீதியுடன் ஏறி அழுதுகொண்டே இறங்கியிருக்கிறேன். பாட்டி வீட்டிற்கு அருகில் தெற்கு கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த யானை தும்பிக்கையை ஆட்டிக் கொண்டே புல்லைச் சாப்பிடுவதும் அதனைக் குளிப்பாட்டும் நேரத்தில் தரையில் சாய்ந்து கொண்டும் இருக்கும். பல நேரங்களில் மெதுவாக கதவைத் திறந்து பார்த்து வருவதுண்டு. இப்பொழுது அங்கே யானை இல்லை😔 யானைப்பாகன்கள் சொல்வதை சிறுகுழந்தை போல் கேட்டுக் கொள்ளும். பாண்டிச்சேரியில் காலில் கொலுசு போட்டுக் கொண்டிருந்த யானை கொள்ளை அழகு.
இப்பொழுதெல்லாம் விலங்குகளைப் பற்றின அழகான ஆவணத்தொடர்கள் காண கிடைக்கிறது. தொழிநுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பிப் பார்க்கும் வண்ணம் கவிதை பேசும் காட்சிகளுடன் விலங்குகளை மிக அழகாக படமெடுத்துக் காட்டுகிறார்கள். அறிந்திராத புதிய தகவல்களும் நமக்கு கிடைக்கிறது. அப்படி ஒரு ஆவணத்தொடர் தான் நான்கு பாகங்களாக வெளிவந்திருக்கும் 'Secrets of the Elephants'. 'பூமி தின'த்தை முன்னிட்டு 'நேஷனல் ஜியாக்ராபி' தயாரித்து டிஸ்னி பிளஸ், டைரக்ட் டிவி, ஹுலுவில் வெளிவந்துள்ளது.
நடிகையும் விலங்கின ஆர்வலரும் ஆன நடாலி போர்ட்மென் பின்னணிக் குரலில் முதலில் ஆப்பிரிக்காவில் சவான்னா ஜிம்பாப்வேயில் புல்வெளிப்பகுதியில் வாழும் யானைகளைப் பற்றி ஆரம்பமாகிறது. எத்தனை பெரிய விலங்கினம்! 4 மாதக் குழந்தை அம்மாவின் காலடியில் நடந்து செல்லும் அழகுடன் தண்ணீரைத் தேடி கூட்டமாகச் செல்லும் 30 யானைகளுடன் காட்சி விரிகிறது. இருப்பதிலேயே வயதான பெண் யானை தான் அந்தக் கூட்டத்தை வழிநடத்திச் செல்கிறது. யானைகள் ஒரு முறை கடந்து வந்த பாதையை மறக்காமல் அதனை தலைமுறை தலைமுறையாக கடத்தி விடும் பண்பு கொண்டதாம். வழிகாட்டும் யானைக்கு எங்கு நீர் கிடைக்கும் என்று தெரிந்து வேகமாக அதனை நோக்கிச் செல்ல மற்ற யானைகள் அதனைப் பின்தொடர்ந்து செல்கிறது. வழியில் பெரிய பள்ளம். மணல்பாறை. இறங்குவது சிரமம் என்று தெரிந்தாலும் கொஞ்சம் யோசித்து வேறு வழியின்றி மிக கவனமாக தும்பிக்கையால் ஒவ்வொரு அடியையும் அளந்து இறங்க, மற்ற யானைகளும் இறங்குகிறது. அந்தக் குட்டி யானை தான் கொஞ்சம் சிரமப்படும். அதை முன்னும் பின்னும் அம்மாவும், அம்மாவின் உடன்பிறப்புகளும் கவனமாக வழிநடத்திச் செல்லும். அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டு தண்ணீரைக் கண்டவுடன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டாடும் சத்தமும் அழகு!
பிறகு தண்ணீர் அரிதான 'நம்பிப்' பாலைவனக்காடுகளில் வசிக்கும் யானைகளைப் பற்றியது. மனிதர்கள் வாழ்வதே கடினம்! பாவம் தண்ணீருக்கும் புல்லுக்கும் பல மைல் தூரம் நடந்து கொண்டே இருக்கிறது. இங்கு பிறக்கும் யானைகள் உயிரோடு தப்பித் பிழைப்பதே அரிது என்பதால் யானைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு குட்டியானை கடுமையான வெயிலையும் தாண்டி உயிர்பிழைத்திருக்கிறது. குட்டியானைக்குப் பால் கொடுக்க தாய் யானை அதிகளவில் உண்ணவும் தண்ணீரையும் குடிக்க வேண்டுமாம். தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணும் இலைகளில் இருந்து கிடைக்கும் நீரை வைத்துக் காலத்தை ஓட்டுகிறது இங்குள்ள யானைகள். தண்ணீர் கிடைக்கும் இடத்தையும் அறிந்து வைத்துள்ள யானைகள் ஒரே நேரத்தில் அதிகளவு தண்ணீரைக் குடிக்கும் உடலமைப்பையும் கொண்டுள்ளது! சுடுமணலில் நடந்து செல்ல அதன் கால்கள் பெரிய பாதங்களைக் கொண்டுள்ளது. சவான்னா யானைகளை விட மெலிதாகவும் இருக்கிறது. பெண் யானைகள் குழுவாக எப்பொழுதும் இருந்தாலும் குழந்தையாக இருந்த ஆண்யானைகள் 14 வயதிற்குப் பிறகு அந்தக் கூட்டத்தை விட்டுத் தனியே சென்று விடுகிறது. அவர்களுடைய வாழ்க்கை கொஞ்சம் கடினமானதாக இருக்கிறது. பாவம்!
மூன்றாவது பாகத்தில் மழைக்காட்டு யானைகளைப் பற்றின குறிப்புகள். சிறிய காதுகளுடன் உருவத்திலும் கொஞ்சம் சிறியதாக மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும் யானைகள். உணவுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தந்தத்திற்காக வேட்டையாடுபவர்களால் ஆபத்து அதிகம். ஆனா, பெண் யானைகளுக்குத் தந்தங்கள் இருக்கிறது.
நான்காவது பாகத்தில் ஆசிய நாடுகளில் வாழும் யானைகளைப் பற்றி ஆராய்கிறார்கள். உருவத்தில் சற்றே ஆப்பிரிக்கா யானைகளை விட வேறுபடுகிறது. அவர்கள் வாழ்ந்து வந்த காட்டுகளை அழித்து பனைமரங்களை வளர்த்து வருகிறார்கள் மலேசியாவில். அதனால் மனிதர்களோடு மனிதர்களாக வாழ கற்றுக் கொண்டிருக்கும் வித்தையைக் காண்பித்தார்கள். பனைமரங்களை வெட்டிபி போடும் சத்தம் கேட்டவுடன் கூட்டமாக வந்து சாப்பிட்டு விட்டுப் போகிறது. தாய்லாந்தில் லாரியில் கரும்பு எடுத்துச் செல்லும் நேரத்தில் சரியாக சாலையில் ஆஜராக, சில பல கரும்புகளை அதற்குப் போட்டுவிட்டுச் செல்கிறார் வண்டியோட்டுபவர். இந்தியாவிலும் இந்தக் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் Dr.Paula Kahumbu, யானைகள் பேசிக்கொள்ளும் மொழியை ஆராய்ச்சி செய்யும்
Cynthia Moss பகிர்ந்து கொள்ளும் பல சுவாரசியமான தகவல்களுடன் குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் வெளிவந்துள்ளது ஜேம்ஸ் காமெரூனின் இயக்கத்தில் 'Secrets of the Elephants'. கூட்டுக்குடும்பமாக வாழும் யானைகள் பலவும் மனிதனின் பேராசைக்காக உயிரிழக்கின்றன. அதன் குட்டிகளை வளர்த்துப் பராமரிக்கும் அன்பர்கள் அதனைத் தங்கள் குழந்தையாக பாவித்து வளர்க்கிறார்கள். பின்பு காட்டில் அதனை விட்டு விடுகிறார்கள்.ஆஸ்கார் விருது வாங்கிய "The Elephant Whisperers' குறும்படமும் அழகான படம்.
No comments:
Post a Comment