Monday, March 27, 2023

8. கேதார்நாத்

 எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. எட்டாவது தொடராக கேதார்நாத் பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் கேதார்நாத்

 

கருமேகங்கள் கூடுவதும் கலைவதுமாய் வானில் வித்தை காட்டிக் கொண்டிருக்க, திட்டமிட்டபடி கேதர்நாத் பயணம் அன்று சாத்தியப்படுமா என்று அலைக்கழித்துக் கொண்டிருந்தது என் மனம். நினைத்தபடி ‘சரர்தாம்’ யாத்திரை நடக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஒருமணிநேரத்திற்குப் பிறகு எங்களுக்கு முன்னால் காத்திருந்த ஒரு குழுவினருடன் ஹெலிகாப்டர் கிளம்பிச் சென்றவுடன் தான் அப்பாடா என்றிருந்தது! செட்டியார் குடும்பங்களும் “நாம் நினைத்தபடி சேர்ந்து போய் விடலாம்” என்று கூற மகிழ்ச்சியானோம். ஆறு நபர்கள் கொண்ட குழுவாக செல்ல ஆரம்பித்து மூன்றாவது முறையாக வானில் வட்டமடித்துக் கீழிறங்கிய ஹெலிகாப்டரில் ‘சலோ சலோ’ என்று எங்களை அழைத்துக் கொண்டு அங்கே பணிபுரிந்தவர்கள் தலையைத் தாழ்த்திக் கொண்டு ஓடுமாறு எங்களை விரட்ட, எங்கள் உடைமைகளைத் தூக்கிக் கொண்டு இன்னொருவர் ஹெலிகாப்டரின் பின் பகுதியில் தூக்கிப் போட, நல்லவேளை கையில் கேமெராவை எடுத்துக் கொண்டேன் என்று நிம்மதியாக இருந்தது.

ஹெலிகாப்டரில் இருந்து படமெடுக்கக் கூடாது என்பது பைலட்டின் கடுமையான எச்சரிக்கை. அதனால் பயந்து கொண்டே ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இரு நிமிடங்களுக்குள் ஆட்களை ஏற்றி கைவிரலை பணியாளர் ஒருவர் உயர்த்திக் காண்பிக்க, அழகாக மேலேறி சாய்ய்ய்ந்து மலைகளுக்கிடையில் ‘விர்ர்ர்ர்ர்ர்’ரென நுழைந்து பறக்கையில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வயிற்றில் படபடக்க.. தெய்வமே…. எத்தனை அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்! இயற்கை அன்னை ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப்பயணம் சாத்தியப்படும். இல்லையென்றால் நினைக்கவே நடுங்கியது. சுற்றிலும் ஓங்கி உயர்ந்த ‘பச்சைப்பசேல்’ இமயமலை. கீழே மந்தாகினி ஆறு வளைந்து வளைந்து அழகாக ஓடிக்கொண்டிருக்க, நடைப்பயணம் செல்லும் பாதையும் தூரத்தில் தெரிந்தது. கொஞ்சம் எட்டிப் பார்க்கக் கூட பயம்! மனமெல்லாம் சிவனைத் துதிக்குக் கொண்டே வர, ஐந்தாவது நிமிடத்தில் கேதர்நாத் மலையுச்சியில் வான் பறவை இறங்கியது.



அங்கேயும் ‘உத்தர உத்தரன’ என்று விரைவாக இறங்கச் சொல்ல வேகவேகமாக கீழே இறங்கி தலையைத் தாழ்த்திக் கொண்டு ஓடினோம். ஒருவர் எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார். ஹெலிகாப்டர் சுழலி ‘ட்ர்டர்ட்ர்டர்’ என்று உறுமிக் கொண்டே இருந்தது. அங்கிருந்து ஏற்றிச் செல்ல வேண்டியவர்களை ஏற்றிக் கொண்டு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தது ஹெலிகாப்டர். ஆட்களை ஏற்றி மலையில் கொண்டு வந்து இறக்கி விட்டு அங்கிருக்கும் பயணிகளை ஏற்றிக் கொண்டு ‘சோன்பிரயாக்’ செல்ல பத்து நிமிடங்கள் தான் ஆகிறது. ஒருநாள் முழுவதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது இந்த வான்பறவை! ஐந்து மணிக்கு கேதர்நாத் வந்து சேர்ந்து புண்ணிய பூமியில் கால் பதித்தவுடன் வார்த்தைகளால் விவரிக்க இயலாத உணர்வு மெய்சிலிர்க்க வைத்தது! கடல்மட்டத்திலிருந்து 3500மீட்டருக்கும் மேலான உயரத்தில் இருப்பதால் ‘சில்ல்ல்ல்ல்ல்ல்’ குளிர். வழியெங்கிலும் பக்தர்கள் தங்கிச் செல்லக் கூடாரங்கள். 2013ல் நடந்த இயற்கை சீற்றத்தில் இழந்த பகுதிகளைச் சீர்படுத்தும் பணிகளும் புதிய கட்டிட வேலைகளும் நடந்து கொண்டு இருந்தது. பனியின் ஆக்கிரமிப்பால் வருடத்தில் பாதி நாட்கள் மக்கள் நடமாட்டம் இருப்பதில்லை. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

மேடுகளைக் கடந்து சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு குடியிருப்புக் கட்டடங்களும் கடைகளும் இருந்தது. அங்கிருந்து கோபுர தரிசனம்! ‘சிவசிவ’ என்று கைகூப்பி வணங்கினோம். அனைவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர்! “பார்த்தீங்களா! நாம் பத்திரமா வந்து சேர்ந்துட்டோம்!” என்று அவர்களுடைய மற்ற குழுவினரையும் சந்தித்துப் பேசி அறிமுகப்படுத்திக் கொண்டோம். நினைத்தபடி சித்தன் குடியிருக்கும் மலையில் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தோம்! வார்த்தைகளால் சொல்லிட இயலாத பேரானந்த பெரு அனுபவம் அது!



எல்லோரும் சேர்ந்து கோவிலுக்குச் செல்லும் முன் நந்திக்கு நெய் அபிஷேகம் செய்து விட்டுச் செல்ல எங்களையும் தங்களுடன் செட்டியார் நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். ஊரிலிருந்து நெய், விபூதி, மஞ்சள், குங்குமம் எல்லாம் எடுத்து வந்ததில் தெரிந்தது அவர்களுடைய முன் பயண அனுபவங்கள்! எங்களுக்கும் அவற்றைக் கொடுத்து அபிஷேகம் செய்ய உதவ, நண்பர்களுக்கு நன்றிகள் கூறி நாங்களும் பூஜைகள் செய்து வேண்டிக் கொண்டோம்.

மழை நின்ற பின் மலைக்கு வருபவர்கள் கூட்டம் அதிகரிக்க, கோவிலுக்குள் செல்லும் வரிசையும் நீள ஆரம்பித்து விட்டது. பூஜைப் பொருட்களை விற்கும் சிறு கடைகள் அந்தப் பகுதி முழுவதும் நிரம்பியிருந்தது. நீண்ட ஜடாமுடியுடன் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டிருந்த சாமியார்களிடம் ஆசிகளை வாங்கிக் கொண்டும் படங்களை எடுத்துக் கொண்டும் ஒரு கூட்டம். மணியடித்து “ஹரஹர மஹாதேவ்” குரல்கள் எல்லா திசைகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. மக்கள் அனைவர் முகங்களும் திவ்யமாக சிவனைக் கண்ட ஆனந்தத்தால் மலர்ந்திருந்ததைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. கனவு நனவாகிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியும் பிரமிப்பும் கலந்து அமைதியாக இருந்தோம். கோவில் வாசலில் சிவ நாமம் கேட்கக் கேட்க பரவசமாக, வேகவேகமாக உள்ளே சென்று சுவாமியைத் தரிசித்து விட்டு வெளியில் வந்தோம். உள்ளே சென்றவுடன் நந்தி தரிசனம். அவர் எதிரே சிவ சன்னிதி. மதுரையில் வீற்றிருக்கும் எம்பெருமான் சுந்தரேஸ்வரர் போலன்றி வேறு உருவம்! சரியாக கவனித்தேனா என்று எனக்குள்ளேயே சந்தேகம் வந்து விட்டது. எதற்கும் மீண்டும் ஒருமுறை கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.



வெளியில் வந்தவுடன் கோவிலைச் சுற்றி வலம் வருகையில் தான் தெரிந்தது எத்தகைய பேரிடரிலிருந்து நம் கோவிலைக் காப்பாற்றியுள்ளது அந்த பெரும்பாறை என்று! “பீம் ஷிலா” (பீமன் பாறை) என்று அன்புடன் அழைக்கப்படும் அந்தப் பாறை கிட்டத்தட்டக் கோவிலின் அகலம் இருக்கிறது. சிறு சிறு பாறைகள் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளது. ஜூன் 16, 2013ல் பெருமழையுடன் சீறி வந்த காட்டாற்று வெள்ளத்தில் கேதர்நாத் மலையில் ஏற்பட்ட பிளவில் பாறைகள் உருண்டு வந்திருக்கிறது. அதில் ஏகப்பட்ட உயிர்கள் பலியானதும் கோவிலும் வெள்ளத்தில் மூழ்கியதையும் செய்திகளில் படித்ததும் காணொளிகளைக் கண்டதும் பலருக்கும் நினைவில் இருக்கலாம். அப்படியொரு நிகழ்வை அங்கு அக்கணத்தில் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது. பெரும் வெள்ளத்தால் கோவிலுக்கு அதிக பாதிப்பை உண்டாக்காமல் தடுத்த ‘பீம் ஷிலா’வை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். நாங்களும் எங்களது நன்றியைக் கூறி வணங்கி கோவிலைச் சுற்றி வந்தோம். ஓரிடத்தில் விதவிதமான வடிவத்திலும் அளவிலும் சிவலிங்கங்கள், சூலங்கள் வைக்கப்பட்டிருந்தது. மலை மீதேறி மக்கள் சிலர் சென்று கொண்டிருந்தார்கள். அந்தி சாயும் பொழுதில் பனிச்சிகரத்தின் மேல் பகலவனின் தரிசனம் சிறிது ஆறுதலைத் தந்து மனதையும் கொள்ளை கொண்டது.



ஆறு மணிக்கு இருள் கவிழ, மாலை நேர ஆராதனைக்காக கூட்டம் சேர ஆரம்பித்தது. வண்ண விளக்குகளால் கோவில் மேலும் பொலிவுற்று நின்றிருந்த அழகைப் பலரும் வளைத்து வளைத்து படங்களும் விடீயோக்களும் செல்ஃபிக்களும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் எங்கள் பங்கிற்கு எடுத்துக் கொண்டோம். ஆராதனைப் பாடல் ஒலிக்க, மணிச்சத்தத்தில் கூட்டம் மெய்மறந்து நின்று கொண்டிருந்தது. எத்தனை முறை கோவிலைச் சுற்றி வந்தோம் என்று நினைவில்லை. நிற்காமல் நடந்து கொண்டே இருந்தோம். ஓரிடத்தில் சூடாக ‘சாய்’ சாப்பிட அந்த குளிருக்கு அத்தனை இதமாக இருந்தது. இரவு இரண்டு மணியளவில் சிறப்பு தரிசனத்திற்கு செட்டியார் நண்பர்கள் டிக்கெட் வாங்கி அனுமதி பெற்று விட்டார்கள். எங்களையும் வரச் சொல்லி விட்டு அவரவர் தங்கும் விடுதிக்குச் சென்று சிறிது நேரம் இளைப்பாறி விட்டு வரலாம் என்று அங்கிருந்து கிளம்பினோம். வழியில் ஓரிடத்தில் கூடாரம் போட்டு பஜனைப்பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். கார்த்திகை மாதத்தில் பெரியப்பா வீட்டில் நடக்கும் ஐயப்பன் பஜனை நாட்கள் நினைவிற்கு வந்து சென்றது.



எங்களுடைய பயண முகவர் கோவிலின் அருகே இருந்த தெரு ஒன்றில் இருந்த விடுதியில் இரவு தங்க அறையை ஏற்பாடு செய்திருந்தார். தெருவில் நுழைய, வழியெல்லாம் ‘சொதசொத’வென்று சாக்கடையும் மழைநீரும் கலந்த சகதி 😑 அப்படியொரு விடுதியை இதுநாள் வரை கண்டதில்லை. குறுகலான படிகள். சிறிய அறை. அதற்குள் இத்தினிக்கோண்டு பாத்ரூம்! ஜன்னல் மூடியிருந்தது. ஆனால் சுவற்றிற்கும் ஜன்னலுக்கும் இடையே இருந்த விரிசல் வழியாக -3 டிகிரி குளிர்க்காற்று உள்ளே வந்து கொண்டிருந்தது. கட்டில் ஏதோ ஹீட்டர் இல்லாத இக்ளூவில் இருப்பது போல அத்தனை குளிராக. பற்கள் தந்தியடிக்க, குளிர்ந்த போர்வையை ஒன்றுக்கு இரண்டாகப் போர்த்திக் கொண்டாலும் குளிர் அடங்கவில்லை. தூங்கின மாதிரி தான்!

அதற்குள் குப்தகாசி விடுதியில் சந்தித்த மும்பை பெண் வித்யா நாங்கள் எங்கிருக்கிறோம் என்று கேட்டு இரவு உணவு சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்ல, நாங்களும் நேரத்தைச் சொல்லி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். சாப்பாடும் விடுதியில் கேட்டால் கிடைக்கிறது. நாங்கள் வெளியே செல்வதால் அங்கே சாப்பிடவில்லை. நல்ல கூட்டம். முன்பதிவு செய்யவில்லையென்றால் விடுதிகளில் அறைகள் கிடைப்பது கடினம். இல்லையென்றால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். வசதிகளை அதிகம் எதிர்பார்த்துச் செல்லக் கூடாது😐

அந்த விடுதியின் உரிமையாளர் கோவில் அர்ச்சகரும் கூட! இரவு தரிசனத்திற்கு உதவிகள் வேண்டுமா என்று கேட்டார். அவருடைய தம்பி பெங்களூரு இன்ஃபோஸிசில் இந்த வருடம் தான் வேலைக்குச் சேர்ந்திருக்கும் இளைஞன். வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும் வார விடுமுறையில் மலையேறி இங்கு வருவதாகக் கூறினான். நன்றாகப் பேசிக்கொண்டிருந்தான். 2013 வெள்ளத்தில் அவனுடைய சகோதரன், அப்பா, பெரியப்பா என்று குடும்ப உறுப்பினர்கள் பலரை இழந்திருப்பதாக கூறியதைக் கேட்க கஷ்டமாக இருந்தது. யாரும் எதிர்பாராத நேரத்தில் எப்படியான அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது! இயற்கையின் முன் நாம் ஒன்றுமில்லை என்று தெரிந்தும் இயற்கைக்கு முரணான செயல்களைச் செய்வதை என்று மனித ஜென்மம் நிறுத்துமோ தெரியவில்லை. ஹ்ம்ம்ம்!



வித்யாவை கோவில் அருகில் சந்திப்பதாகக் கூறி விடுதியை விட்டு வெளியில் வந்தோம். பஜனை கனஜோராக நடந்து கொண்டிருந்தது. பஜாரில் விளக்கொளியில் கடைகள், உணவகங்கள் ஜொலிக்க எங்கும் மக்கள் வெள்ளம்! உணவகங்களிலிருந்து ‘கமகம’வென வாசனை பசியைத் தூண்டியது. வித்யா நெற்றியில் மஞ்சள் பட்டை குங்குமத்தில் திரிசூலம் வைத்துக் கொண்டிருந்தார். எங்களுக்கும் அப்படியே வைத்து விடச்சொல்லி அங்கிருந்த பெண்மணியிடம் கூறி பணத்தைக் கொடுத்தார். நாங்கள் மூவரும் கோவிலைச் சுற்றி வந்து படங்கள் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்த ‘பஞ்சாபி தாபா’விற்குச் சென்று சாப்பிடலாம் என்று அழைத்துச் செல்ல, கூட்டமோ கூட்டம். எப்படியோ இடத்தைப் பிடித்து அமர்ந்து எங்களுக்கும் சேர்த்து அவரே உணவுகளைக் கேட்டு ஆர்டர் செய்தார். ரொட்டி, காரசாரமான கிழங்கு மசாலா, சன்னா மசாலா சுவையோ சுவை. அவர் தங்கியிருக்கும் அறை அத்தனை சுகமாக இல்லை என்று தெரிந்தது. “இரவு இரண்டு மணிக்கு முடிந்தால் கோவிலுக்கு வருகிறேன். இல்லையென்றால் மும்பை வந்தால் வீட்டுக்கு கண்டிப்பாக வாருங்கள். வாட்ஸப்பில் தொடர்பில் இருக்கலாம்.” நாளை ‘சொப்தா’ சென்று அங்கிருந்து துங்நாத்திற்கு மலையேறிச் செல்வது தான் அவரது திட்டம். நாங்களும் அவரைச் சந்தித்ததில் மகிழ்ந்தோம் என்று கூறி அங்கிருந்து கிளம்பி கடைகளைச் சுற்றிப்பார்த்து விட்டு விடுதி வந்து சேர்ந்தோம்.

போர்வையின் கதகதப்பு எல்லாம் போதவில்லை. எப்பொழுது மணி இரண்டாகும் என்று காத்திருந்த நேரத்தில் எப்படி தூங்கினேன் என்று தெரியவில்லை! இந்தக் குளிரிலும் நன்றாகத் தூங்குகிறாய் என்று ஈஷ்வர் எழுப்பும் பொழுது மணி அதிகாலை 1.30. விரைந்து தயாராகி கோவிலுக்குச் செல்வதற்குள் மணி இரண்டே கால் ஆகிவிட்டிருந்தது. செட்டியார் குடும்பங்கள் அதற்குள் கோவிலுக்குள் சென்று விட்டிருந்தார்கள். அடடா! மிஸ் பண்ணிட்டோமே! என்று அங்கிருந்த காவலரிடம் சொன்னால் வரிசையில் வாருங்கள் என்று கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். சிறப்பு தரிசனத்திற்கான கட்டணம் கட்டி நண்பர்கள் உள்ளே சென்று விட்டார்கள் என்று கூறியும் நம்பவில்லை. பிறகு என்ன நினைத்தாரோ உள்ளே சென்று நண்பர்களிடம் இருந்து டிக்கெட்டை கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளே விட்டார். எங்களுக்கு முன் நின்று கொண்டிருந்த பெண்கள் குளிருக்கு ஜாக்கெட் கூட போட்டுக் கொள்ளாமல் எப்படி இந்த மைனஸ் குளிரில் இப்படி நடமாட முடிகிறது என்று அதிசயிக்க வைத்தார்கள். சிலர் காலில் செருப்பு கூட போட்டுக் கொள்ளவில்லை! கூட்டம் மிக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மூன்று மணியளவில் கோவிலுக்குள் நுழைந்தோம். அங்கே ஒரு சிறுவன் சுவாசிக்கத் திணறிக் கொண்டிருந்தான். அத்தனை அடி உயரத்தில் இது சகஜம் என்றாலும் அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது. அந்த மாதிரியான குடும்பங்கள் விரைந்து சென்று தரிசிக்க அனுமதிக்க வேண்டும். செட்டியார் நண்பர் குடும்பங்கள் வழிபாடு முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.



இப்பொழுது தான் கோவிலை அமைதியாகப் பார்க்க முடிந்தது. நடுவே குட்டி நந்தி. சன்னிதானம் முழுவதும் தங்க முலாம் பூசிய தகடுகளால் வேய்ந்திருந்தார்கள். அதுவும் சமீபத்தில் தான் என்று கேள்விப்பட்டோம். பாண்டவர்கள், குந்தி மாதா, திரௌபதியின் திருவுருவங்களைச் செதுக்கியிருந்தார்கள். மஹாபாரதப் போருக்குப் பின் முக்தி வேண்டி பாண்டவர்கள் சிவனை நோக்கித் தவம் புரிய, சிவன் காட்சியளித்த இத்தலத்தில் பாண்டவர் வழித்தோன்றலான அபிமன்யுவின் பேரன் ஜன்மேஜயா தன் முன்னோர்கள் நினைவாக இந்தக் கோவிலைக் கட்டியுள்ளார். இங்கு சிவன், நந்தியின் முதுகு வடிவில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். 12 ஜோதிர்லிங்களில் கேதர்நாத் கோவிலும் ஒன்று. ‘கே’ என்றால் மோக்ஷம். ‘தர்’ என்றால் வாசல். இங்கிருந்து பாண்டவர்கள் சொர்க்கத்தை அடைந்ததால் கேதர்நாத்தில் இருக்கும் சிவனை தரிசித்தோருக்கு மோக்ஷத்திற்குச் செல்லும் வழி கிடைக்கும் என்பது ஐதீகம். 1000 ஆண்டுகளுக்கும் பழமையான கோவிலைச் சுற்றி முனிவர்களும் பெரியவர்களும் தவங்கள் பல புரிந்து வந்த இதே இடத்தில் தான் ஸ்ரீஆதிசங்கராச்சாரியார் கேதரேஷ்வரை வணங்கி யோக சமாதி அடைந்திருக்கிறார்.

கோவிலில் பொறுமையாக அனைவரும் நின்றிருந்தோம். உள்ளே சன்னிதானத்தில் பூஜைகள் செய்து சிவனைத் தொட்டு வழிபட அனுமதிக்கிறார்கள். அருகே செல்லும் பொழுது தான் மேரு மலையைப் போன்ற தோற்றத்தில் காட்சி தரும் சிவன் என்று அறிந்து கொண்டோம். பாலாபிஷேகம் செய்து அர்ச்சனை செய்த அங்கிருந்த பல நிமிடங்கள் உலகமே மறந்து விட்ட உணர்வு! எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக மாறிவிட்டது. மனநிறைவைத் தந்த தரிசனத்தை முடித்து வெளியில் வரும் பொழுது நான்கு மணி. இன்னும் கூட்டம் காத்திருந்தது. அதற்குள் காலைநேர தரிசனத்திற்காக மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்திருந்தார்கள். இரவு நேர தரிசனம் முடியும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும்.



விடியலுக்காக காத்திருந்த அமைதியான காலை. பனியில் உறைந்திருந்த மலைகள். பக்தி முகங்கள். எங்கோ தூரத்தில் ‘ஹரஹர ஷம்பு ஷம்பு ஷிவ மஹாதேவா…’ பாடல் கேட்க ஆனந்தமாக இருந்தது. மக்களின் நடமாட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த இரு நாய்கள் உறக்கம் கலைந்து எழுந்தது. அதில் ஆண் நாய் பெண் நாய்க்கருகே வந்து முகத்தோடு முகம் உரசி காதலைப் பரிமாறிக் கொண்டிருந்த காட்சி கொள்ளை அழகு! அவள் தான் கண்டுகொள்ளாமல் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் அவளுக்காக அருகிலேயே காவல் காத்துக் கொண்டு கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். நம் இனம்😊

மீண்டும் அந்த குளிர்ந்த விடுதி அறைக்குச் செல்ல மனமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தோம். கோவிலைச் சுற்றி மக்கள் நடமாட பரந்த இடத்தைச் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். ஓரிடத்தில் நெருப்பு வைத்துக் குளிர்காய்ந்து கொண்டிருந்த மக்களோடு சிறிது நேரம் நாங்களும் அமர்ந்திருந்தோம். இரவில் மலையேறிய டெல்லியைச் சேர்ந்த இளைஞனும் அவருடைய வருங்கால மனைவியும் திருமணத்திற்கு முன் சிவனைத் தரிசிக்க அந்தப் பெண்ணின் அக்காள் குடும்பத்துடன் வந்திருந்தனர். உபியைச் சேர்ந்த கணவன்-மனைவி பிரசாதத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டனர். டெல்லியிலிருந்து இரு பள்ளி மாணவர்கள். அதில் ஒருவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் பிறந்து வளர்ந்தது டெல்லியில் என்பதால் அவருடைய பேச்சுத்தமிழ் இந்திக்காரர்கள் பேசுவது போல் இருந்தது. அவர்கள் மலையேறி கோவிலுக்கு வந்திருந்ததைப் பாராட்டினோம். இப்படியும் இளைஞர்கள் இருக்கிறார்கள்! நெருப்பின் கதகதப்பிற்கு நாய்களும் அருகில் வந்து படுத்துக் கொண்டது.

சுடச்சுட காபியோ டீயோ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஓரிடத்தில் பவுடர் பாலில் காபி கிடைத்தது. அதற்கு குடிக்காமலே இருக்கலாம் என்று மீண்டும் கோவிலை ஒரு சுற்று சுற்றினோம். நல்ல குளிர். எப்படித்தான் மக்கள் போதிய உடைகளை அணியாமல் இருக்கிறார்களோ என்று ஆச்சரியமாக இருந்தது! மணி ஐந்தே கால் ஆகிவிட்டது. முன்தினம் டீ குடித்த கடை திறந்து ஆட்கள் தென்பட, டீக்குச் சொல்லிவிட்டு உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டோம். அங்கே வந்திருந்தவர்கள் மறக்காமல் பார்லே-ஜி ரொட்டி சாப்பிட்டுக் கொண்டே தேநீரைக் குடித்தார்கள். நமக்கு வடை, போண்டா, பஜ்ஜி போல வட இந்தியர்களுக்கு ‘சாய்’ சாப்பிடும் பொழுது கொறிக்க ரொட்டி வேண்டியிருக்கிறது😋 மெதுவாக குடித்து முடித்து அறைக்குச் சென்று எங்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு ஹெலிகாப்டர் நிற்கும் இடத்திற்கு அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தோம்.



குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது. முகம், கை, கால்கள் ஜில்லிட, வலி பின்னியது. சரியாக ஆறு மணியிலிருந்து ஹெலிகாப்டர் சேவை தொடங்கும் என்று அறிவித்திருந்தார்கள். அங்கே பல ஹெலிகாப்டர் நிறுவனங்கள் மூலமாக வந்தவர்கள் அவரவர் இடங்களில் காத்திருந்தார்கள். செட்டியார் நண்பர்களும் வந்துவிட்டார்கள். பாவம்! பலரும் முறையான உடைகளை அணியாமல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். பசிக்கும் நேரத்தில் பிஸ்கட் கொடுத்து உதவினார்கள். சூரியபகவானின் பொற்கதிர்கள் பனிச்சிகரங்களின் மேல் உலாவரும் அழகைக் காண கண் கோடி வேண்டும்! திவ்யமாக இருந்தது!

அடித்துப் பிடித்து வரிசையில் நின்று நான்காவது ட்ரிப்பிற்கு அனுமதி கிடைத்தது. மற்ற எல்லா நிறுவன ஹெலிகாப்டர்கள் வந்தாலும் நாங்கள் செல்ல வேண்டிய ஹெலிகாப்டர் மட்டும் ஏழு மணி வரை வரவில்லை. ஹெலிகாப்டரில் செல்ல முதலில் அங்கு வருபவர்களுக்கு First-In-First-Out முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படியெல்லாம் ஒரு அமைப்பும் இல்லை. அங்கே இருந்த அலுவலர் உடம்பெல்லாம் திமிராக சர்வாதிகாரத்தனமாக பேசிக் கொண்டிருந்தார். சிலர் அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்ததைச் சற்றும் கண்டுகொள்ளாமல் எப்படி இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களோ என்று ஆச்சரியமாக இருந்தது. அந்தக் குளிரில் மக்கள் படும் கஷ்டத்தை மனிதாபிமான முறையில் பார்த்தால் கூட உதவியிருக்கலாம். என்ன மனிதனோ? யார் பேச்சும் கேட்க மாட்டேன் என்று உரக்கப் பேசி அனைவரின் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டிக் கொண்டிருந்தார். தான் அனுமதித்தால் மட்டுமே ஹெலிகாப்டரில் செல்ல முடியும் என்ற சிறு அதிகார போதையில் அவர் நடந்து கொண்ட விதம் மிக மோசமானது.



7.30 மணிக்கு எங்களது முறை வந்தவுடன் ஓடினால், ஈஷ்வரைக் காத்திருக்கச் சொல்லி விட்டு தமிழ் நண்பர்கள் குடும்பம் ஒன்றோடு என்னை மட்டும் அனுப்பிவிட்டார்கள். ‘விர்ர்ர்ர்ர்’ரென ஹெலிகாப்டர் உயரே பறக்க, மலைகளில் வரையாடுகளும் எருமைகளும் மேய்ந்து கொண்டிருந்த அழகுக்காட்சியும், படிகளில் ஏறி வரும் மக்களும், பாய்ந்து ஓடோடிச் செல்லும் மந்தாகினி ஆறும் மனதை இலகுவாக்கின. எங்களை இறக்கி விட்டுச் சென்ற சில நிமிடங்களில் ஈஷ்வரும் வந்து சேர்ந்தவுடன் அங்கிருந்த உணவகத்திற்குச் சென்றோம். இரண்டு வேன்களில் வந்திருந்த செட்டியார் குடும்பங்கள் அனைவரும் அங்கிருந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் தோசைக்காக காத்திருந்து உண்டோம். பூரியும் சுவையாக இருந்தது. மதுரையில் சாப்பிட்டது போல அத்தனை சுவை! காபியை விடுவானேன் என்று அதையும் குடித்து விட்டு எங்கள் வண்டிக்காரரை அழைக்க, அவர் அங்கே தான் இருந்தார்.

செட்டியார் நண்பர்களிடம் இருந்து விடைபெற்று வண்டியில் ஏறியவுடன் தூக்கமும் கண்களைச் சுழற்ற, குப்தகாசி விடுதி வந்து இறங்கி அறைக்குள் சென்று தூங்கியது தான்! பத்து மணி இருக்கும் என்று நினைக்கிறேன். திடீரென யாரோ ‘டொக்டொக்’ என்று கதவைத் தட்டுவது போல் இருந்தது. கண்விழித்துப் பார்த்தால் மணி நான்காகி விட்டிருந்தது. பறவை ஒன்று ஜன்னலைக் கொத்திக் கொண்டிருந்தது. கதவைப் பூட்டிவிட்டு ஈஷ்வர் வெளியில் சென்றிருந்தார். இவ்வளவு நேரமா தூங்கியிருக்கிறேன்! பசிக்கிற மாதிரி இருந்தது. குளித்துத் தயாராகி ஈஷ்வரை அழைத்தேன். “போதுமா தூக்கம்? என்ன சாப்பிடற?” என்று கேட்டுக் கொண்டே வந்தவரிடம் அப்போதைக்கு ‘சாய்’ மட்டுமே போதும் என்று கூறி அதை ஆர்டர் செய்தோம். அவர் மதியம் ஏதோ சாப்பிட்டிருந்தார். 

“மலைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தால் மனதிற்கு அத்தனை அமைதியாக இருக்கிறது.” என்றார். உண்மை தான் “ஹிமாலயாஸ் காலிங்” என்பது இதற்குத்தானே! ஏதோ ஒரு சக்தி. அது மலையின் அமைதியோ, அழகோ, பரந்து விரிந்த வானமோ, துள்ளியோடி வரும் நதியோ தெரியவில்லை. கண்களையும் மனதையும் நிறைத்து யோகநிலைக்குக் கொண்டு செல்லும் அதிஅற்புதமான சக்தி அங்கே இருந்தது. முழுமையாக அனுபவித்தோம். இப்படியே இரண்டு மணிநேரங்கள் ஓடிவிட்டது.



திடீரென்று ரிசார்ட்டில் ஐந்து பேர் வந்து இறங்கினார்கள். இரு ஆண்கள் ஒரு 60+ பெண்மணி என மூவர் வெளிநாட்டினர். மற்ற இருவரில் ஒருவர் காவி உடையணிந்து யோகிபாபு தலைமுடியுடன் பார்க்க வேடிக்கையாக இருந்த குட்டையான மனிதர். இன்னொருவர் அவர்கள் வண்டியை ஓட்டி வந்த டிரைவர். சத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டு அமைதியைக் குலைத்து எரிச்சலை உண்டாக்கினார். அவர்களைப் பார்த்ததும் விடுதி மேனேஜர் கிருஷ்ணாவின் முகத்தில் அதிருப்தி. இவர்களைப் பற்றித் தெரியும் போல! நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வெளிநாட்டினர் மூவரும் அமர்ந்து கொண்டார்கள்.

ஒரு சினேகமான புன்னகை. எங்கிருந்து வருகிறோம்? என்று ஆரம்பித்து இரவு உணவு வரை நீண்டது எங்கள் உரையாடல். அவர்கள் ஏதோ ஒரு குருஜியுடன் (மகாராஜா) சார்தாம் யாத்திரை வந்திருந்தார்கள். அங்கே தங்குவதற்கு அறை இல்லை என்று வேறு வண்டியில் வரும் குருஜிக்காக காத்திருந்தார்கள். ரஷ்யாவிலிருந்து அடிக்கடி வந்து செல்பவர்களாம். கும்பமேளாவிற்கும் வருவோம் என்று ஆச்சரியப்படுத்தினார்கள். அவர்களின் கும்பமேளா பேட்டி இந்திய செய்தித்தாளில் வந்திருந்ததைக் காட்டினார்கள். இந்தியாவைப் பற்றி, இந்து மதத்தைப் பற்றி வெகுவாக பாராட்டி மனிதகுலத்திற்குத் தேவையான அத்தனை நல்ல விஷயங்களும் இங்கே இருக்கிறது. அது தான் எங்களைக் கவர்ந்தது என்று கூறியதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களைப் போல பலரும் அவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். அந்தப் பெண்மணி நல்ல வசதியானவர் போல தெரிந்தார். பேசிக் கொண்டே இருந்தார். அமெரிக்கா, ரஷியா, உக்ரைன் போர் என்று நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம். ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் ஒரு அமெரிக்கப்பெண்மணி தங்கி ஆசிரமத்திற்கு நல்லது செய்வது போல் இந்தியர்களின் மனதில் இந்தியாவைப் பற்றின வெறுப்பை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் செய்து கொண்டிருக்கிறார். மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். எந்த ஆசிரமம் என்று கேட்க நினைக்கையில் அவர்களுடைய குருவும் அவருடைய மனைவியும் வந்து சேர்ந்தனர். தாடி, நீண்ட தலை முடி, பிரகாசமான முகத்துடன் குருஜி அட்டகாசமாக இருந்தார். அவர் மனைவி பார்வையாலேயே மக்களை எடை போடுபவர் போல தெரிந்தார். அவர்கள் எங்களைப் பற்றி குருவிடமும் அவருடைய மனைவியிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் விடுதியை விட்டுச் செல்லும் பொழுது பேசிவிட்டுச் சென்றார்கள்.

ரஷ்யர்கள் விடைபெற்றுச் செல்ல, இரவு உணவிற்கு காத்திருந்தோம்.

“சரியான டுபாக்கூர் சாமியார். இவரையும் நம்பி மேலை நாட்டு மக்கள் வருகிறார்கள். நல்லவேளை இங்கே அறை காலியாக இல்லை. இவர்களோடு மல்லுக்கு கட்ட முடியாது” என்று விடுதி மேலாளர் கிருஷ்ணா சொல்லவும் ஆச்சரியமாக இருந்தது. பழகிய இரு தினங்களில் அவருடைய தன்மையாக பழகும் குணமும் சிரித்த முகத்துடன் பயணிகளைக் கவனித்துக் கொண்ட விதமும் எங்களை மிகவும் கவர்ந்திருந்தது. கிடைக்கும் நேரத்தில் அரசாங்க வேலைக்காகான தேர்வுகளுக்காக படித்துக் கொண்டிருந்தார். “கஷ்டப்பட்டு எழுதி தேர்ச்சி பெற்றாலும் அரசாங்க அதிகாரிகள் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு வேலைகளைக் கொடுத்து விடுகிறார்கள். பாஜக ஆட்சியில் இருந்தாலும் இன்னும் இந்த மாதிரி கூட்டம் இருக்கிறது. இவர்கள் எல்லாம் ஒழிந்தால் தான் நல்லது” என்று விரக்தியோடு பேசினார். “கொரோனா காலத்தில் இந்த விடுதியை எப்படி சமாளித்தீர்கள்?” என்று கேட்டதற்கு, இலவச இணைய இணைப்பு, உணவு என்று அறிவித்ததில் பலர் அங்கே வந்து தங்கியிருந்திருக்கிறார்கள். நல்ல யோசனை தான். அருமையான இடம். நாங்கள் செல்வதற்கு இரு நாட்களுக்கு முன்பு ஹிந்தி படக்குழு ஒன்று ஒரு வாரத்திற்குத் தங்கி அருகில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். 

‘திடுதிடு’ப்பென்று மிகப்பெரிய மலேசிய பயணியர் கூட்டம் வந்திறங்கியது. இதனால் தான் அறை இல்லை என்று ரஷ்யர்களிடம் கிருஷ்ணா சொன்னார் என்று புரிந்தது. இதோடு நாங்கள் சந்திக்கிற மூன்றாவது மலேசிய கூட்டம். அவர்கள் அடுத்த நாள் கேதர்நாத் செல்வதாக கூறினார்கள். அதற்குள் சுடச்சுட சுவையான இரவு உணவு தயாராகி எல்லோரும் சாப்பிட்டு முடித்தோம். பன்னீர் இல்லாமல் வடஇந்தியர்களால் இருக்க முடியாது போலிருக்கு. சுவையான பன்னீர் பட்டர் மசாலா! சூடான குலாப்ஜாமூன்! சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். யம்மி யம்😋


அடுத்த நாள் எங்களுடைய பத்ரிநாத் பயணம். குப்தகாசி, கேதர்நாத் அனுபவங்கள் மிக திருப்தியாக அமைந்ததில் மகிழ்ச்சியுடன் உறங்கச் சென்றோம். பத்து மணி போல் இருக்கும். பக்கத்து அறையில் இருந்து பூம் பாக்ஸில் விளங்காத பாடலைச் சத்தமாக அலற விட்டுக் கொண்டிருந்ததில் தூக்கம் போயிற்று. கூடவே பாட்டில்கள் உருளும் சத்தம் வேறு. அமைதியான மலைப்பிரதேசம். மற்ற அறைகளில் பயணியர்கள் தங்கி இருக்கிறார்கள் என்ற அறிவு கூட இல்லாமல் குடித்துக் கும்மாளமிட வந்திருக்கும் தறுதலைகள். கோபத்தில் சுவற்றை நான்கு முறை தட்டினேன். சத்தத்தைக் கொஞ்சம் குறைத்தார்கள். ஆனால் நிறுத்தவில்லை. விடுதியின் அலுவலகத்திற்குப் ஃபோனைப் போட்டால் தூக்க கலக்கத்தில் “கிருஷ்ணாவிற்கு போன் செய்யுங்கள்” என்று ஹிந்தியில் சொல்லி வைத்து விட்டார் அங்கே இருந்த சிப்பந்தி. சிறிது நேரத்தில் கிருஷ்ணாவே அழைக்க, பக்கத்து அறையில் தங்கியிருப்பவர்களின் அட்டகாசத்தைக் கூறினேன். அதற்குப் பிறகு தான் அந்தப் பொறுப்பற்றவர்களின் கொட்டம் அடங்கியது. புண்ணிய பூமியில் இப்படியும் சில ஜென்மங்கள்! இவர்களைப் போன்றவர்கள் மத்தியில் கிருஷ்ணா போன்ற பொறுப்பான இளைஞர்கள் தான் நம்பிக்கையைத் தருகிறார்கள்.

ஜெய் ஸ்ரீகேதர்! ஜெய் போலோநாத்!

கேதார்நாத்

வில்லேஜ் ரிசார்ட்

வில்லேஜ் ரிசார்ட்2

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...