நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அதுவும் ஓரளவு வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு அவர்களுடைய கனவை நனவாக்குவதில் அதிக சிரமங்கள் இருப்பதில்லை. வேளாவேளைக்கு உணவும், பயிற்சிவகுப்புகளும் பெற்றோர்களே பார்த்துப் பார்த்து செய்து விடுவார்கள். ஏழைகள் நிலைமை தான் பெரும்பாடு. தற்காலத்தில் படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருக்கும் மாணவ, மாணவிகள் கூட யாரிடமாவது பணத்தைக் கடனாகவோ இலவசமாகவோ பெற்று படித்து முன்னேறிவிடுகிறார்கள்.
எங்கோ ஒரு கிராமத்தில் இருப்பவனுக்கு நேர்மையான அதிகாரியாக வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் காக்கிச்சட்டை அணிந்து சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் வருவது அரிது. அப்படியே வந்தாலும் இந்த சமூகம் துணை நிற்குமா என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும் அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாமையே அவனுடைய கனவைச் சிதைத்து விடும். ஆனாலும் விடாப்பிடியாக கனவைத் துரத்துபவனால் தான் நினைத்த இடத்திற்குச் செல்ல முடியும். தடைகளைக் கடந்தால், கடினமாக உழைத்தால் மட்டுமே கீழ் நிலையிலிருந்து மேல்நிலைக்கு உயர முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டுகிறது இப்படம்.
கதாநாயகனின் தந்தை நேர்மையான அதிகாரி. ஊழலுக்குத் துணைபோக மாட்டார். அதனாலேயே வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவார். அதனால் குடும்பம் பல இன்னல்களுக்கு ஆளாகும். இதே போன்று நிஜத்தில் எங்களுடைய உறவினர் ஒருவருக்கு நடந்தது. அப்பொழுது அவர் தமிழ்நாட்டில் அரசுப் பொதுப்பணித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மேலும் கீழும் பதவியில் இருந்தவர்கள் ஏகமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். இவரோ நேர்மை, கண்ணியம் என்று இருந்ததால் அங்கிருந்த ஊழல் பேர்வழிகள் அவர் மீது இல்லாத பழிகளைச் சுமத்தி வேலையிலிருந்து நீக்கி விட்டனர். பல வருடங்கள் நீதிமன்றத்திற்கு அலைந்து திரிந்து கடைசியில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வெளியானது. அதற்குள் அந்தக் குடும்பம் பட்ட சிரமங்கள் இருக்கிறதே! யாருக்கும் அந்த நிலைமை வரக்கூடாது.இந்தப்படத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கது. ஒன்று கதாநாயகனின் அப்பாவிற்கு நீதியே கிடைக்காது மனம் வெறுத்துப் போய்விடுவார். நேர்மைக்கு இங்கே வழி இல்லை என்று நினைத்தாலும் சில நேர்மையானவர்களால் தான் இன்றைய அரசாங்கமே இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் எத்தனை கோடிக்கணக்கில் ஊழல்கள் நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது. இலவசங்கள் என்ற பெயரில் மூடர்களின் வாயை அடைத்து ஊழல் ஆட்சி புரிபவர்களுடன் நேர்மையாக படித்து வந்த IAS, IPS அதிகாரிகள் படும் அவலம் இருக்கிறதே! கொடுமை. அவர்களில் பலரும் இந்த ஊழல் அரசியல்வியாதிகளைப் போலவே மாறிவிடுவது கொடுமையிலும் கொடுமை.
இரண்டாவது, IAS, IPS தேர்வுகளுக்குத் தயாராகி பட்டம் பெறுவது அத்தனை எளிதல்ல. அப்படிப் படித்து அரசியலுக்கு வந்த ஒருவரை தமிழ்நாட்டில் தகுதியற்ற தற்குறிகள் அவருடைய கல்வியை கேவலப்படுத்துவது அவர்களின் தகுதியைத் தான் வெளிப்படுத்துகிறது. அதுவும் அவர் கற்ற கல்வி "யுனெஸ்கோ உருட்டு புரட்டு ஆசாமியால் தான்" என்று புரூடா வேறு. ஒழுங்காக படித்திருந்தால் தானே இந்த அறிவற்ற ஜடங்களுக்கு அதன் கஷ்டம் புரியும். பொய்க்கதைகள் பேசி வரலாற்றைத் திரித்து சாதி, மதப்பிரிவினைகளை உண்டாக்கும் இந்த கேவலமான பிறவிகளுக்குத் தெரிந்ததெல்லாம் திருடுவது தான். அது அறிவானாலும் சரி. பணமானாலும் சரி.
இப்படிப்பட்ட சூழலில் நேர்மையாக வாழ, வழிகாட்டிட அதிகாரத்திற்கு வந்தால் தான் என்று கடும் போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி பெற்ற மனோஜ் குமார் ஷர்மா போன்ற மாணவர் சமுதாயம் பெருக வாழ்த்துகள்!
கதாநாயகனாக நடித்திருந்த விக்ராந்த்திற்குப் பொருத்தமான கதாபாத்திரம். கதாநாயகி மேதா ஷங்கரும் குறைவில்லாமல் நடித்திருந்தார். அம்மா, அப்பா, பாட்டி, தங்கை, நண்பன், அண்ணன் என்று அவரவர் கதாபாத்திரங்களில் அருமையாக நடித்திருந்தார்கள். மருமகளிடம் சண்டை போட்டாலும் மகன், பேரன், பேத்திகளிடம் அன்பாக வீட்டிற்கு ஒரு பாட்டி இருப்பார். படத்திலும் அப்படியே!
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் முன்னேற சிலர் முன்மாதிரிகளாக இருப்பார்கள். அப்படி ஒரு நேர்மையான அதிகாரியைக் கண்டவுடன் கதாநாயகனின் எண்ணங்களும் செயல்களும் மாறி தன்னுடைய கனவை நனவாக்கிக் கொள்கிறான். டாக்டர்.அப்துல் கலாம் தனக்கு மிகவும் பிடித்த மனிதர் என்று கதாநாயகன் கூறுவது போல் பலருக்கும் அந்த மாமனிதர் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இருக்கிறார். வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு துவளாதவனே வெற்றி பெறுவான்.
படத்தில் கிராமத்துக்காட்சிகள் இயற்கையாக இருந்தது. இறுதிக்காட்சிகளில் அவர் எப்படியாவது வெற்றி பெற்றிட வேண்டும் என்று நம்மையும் நினைக்க வைத்து விட்டார்கள். நடுவில் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும் நம்பிக்கையூட்டும் நல்ல திரைப்படம்.
No comments:
Post a Comment