Friday, January 12, 2024

அன்னபூரணி

அன்னபூரணி, பார்வதியின் அம்சமான அன்னை. கையில் கரண்டியும் உணவுப்பாத்திரத்துடனும் காட்சி தருபவள். பலரும் தங்கள் வீடுகளில் வைத்து வழிபடும் தேவி அவதாரம். இந்தத் திரைப்படமும் ஒரு பெண் சமையல் வல்லுநரைப் பற்றினது என்பதால் இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. நமக்குத் தான் சமையல் என்றால் பிடித்து விடுமே என்று பார்க்க ஆரம்பித்தேன்.

கதைப்படி, ஸ்ரீரங்கம் கோவிலுக்குத் தளிகை செய்து கொடுக்கும் பிராமண வீட்டில் பிறந்த பெண் ஒருத்திக்குச் சமையலில் அதிக ஈடுபாடு. சிறுவயதிலிருந்தே உணவின் சுவையை வைத்தே என்ன பதார்த்தம் என்று கண்டுபிடிக்கும் அளவிற்குச் சாமர்த்தியசாலி. தான் ஒரு சிறந்த சமையற்கலைஞராக வேண்டும் என்று கனவு காண்பவள். மேற்படிப்பு படிக்கச் செல்லும் பொழுது நண்பர்கள் கூட்டம் அவளுடைய கனவுப் படிப்பைப் படிக்கத் திருட்டுத்தனமாக உதவுகிறார்கள். வீட்டில் யாருக்கும் தெரியாமல் குற்றவுணர்வுடன் படிப்பவளுக்குச் சோதனை வருகிறது. அதாவது, வகுப்பில் அசைவ உணவைச் சமைக்க வேண்டும். "பெருமாள் என்னை மன்னிக்க மாட்டார்" என்று புலம்புபவளுக்கு அவளுடைய இஸ்லாமிய நண்பன் சமஸ்கிருதத்தில் வால்மீகி சொல்லியதாகக் கூறும் வசனங்கள் ஆகட்டும். "எந்தக் கடவுளும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று கூறவில்லை." என்று கூறும் இடங்கள் திராவிடத்தனமான வலிய திணிக்கப்பட்ட தேவையில்லாத ஆணிகள். சமையல் படிப்பில் அதையெல்லாம் சொல்லிக்கொடுப்பார்கள் என்று கூட தெரியாமல் தான் படிக்கக் கிளம்பினாளா அந்தப்பெண்? இப்படி இன்னும் நிறைய ஓட்டைகளைக் கேட்கலாம்.

சரி. அவன் கூறுகிறபடி எந்தக்கடவுளும் சொல்லவில்லை தான். அப்படிச்சொல்பவன், "நான் கூட பன்றிக்கறி சாப்பிடுகிறேன் பார். என் கடவுள் என்னை ஒன்றும் செய்ய மாட்டார்" என்று பேசும் வசனத்தை வைத்திருக்கலாமே? ஒரு காட்சியில் அவன் பன்றிக்கறி சாப்பிடுவது போல காட்டியிருக்கலாமே? அப்படி வைத்தால் அவர்களின் முகமூடி அங்கேயே 'டர்ர்ர்ர்ர்'ரென்று கிழிந்து தொங்கிவிடும். ஆனால் பிராமண கதாபாத்திரத்தை வைத்து எப்படி வேண்டுமானாலும் பேசலாம். காட்சிகள் அமைக்கலாம். அதையெல்லாம் விடக் கொடுமை, பிரியாணி செய்வதற்குப் பர்தா அணிந்து பாயில் அமர்ந்து நமாஸ் செய்வாளே இந்த அக்ரகாரத்துப் பெண். கொடுமையிலும் கொடுமை. பிரியாணி நன்றாக வரவேண்டுமென்றால் 'ஜாபர் பாய் பிரியாணி ரெசிபி'யைப் பின்பற்றினாலே போதும். எதற்கு இந்த முக்காடு வேஷம்?

ஒரு பெண் தன்னுடைய கனவை நனவாக்க சில பல கலாச்சார விதிமீறல்களைச் செய்ய வேண்டி வருகிறது. அதைக் கூட ஒத்துக் கொள்ளலாம். உலகத்தில் எங்காவது சிலர் செய்து கொண்டிருக்கலாம். திரைப்படம் தானே என்று சகித்துக் கொள்ளலாம். அதுவரையில் படம் நன்றாகத் தான் போகிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் தேவையில்லாத ஆணிகள் தான் இந்தப்படத்திற்கு ஆப்பு வைத்திருக்கிறது.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தெலுங்கு பிராமணர். அமெரிக்காவில் சமையற்கலையைக் கற்க கல்லூரியில் சேர்ந்தார். அங்கே அவர் சாப்பிடாத அசைவ உணவுகளை வேறு வழியின்றி சமைத்தாகக் கூறியுள்ளார். அது தொழில் சார்ந்தது. அதனால் கற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம். இது புரிந்துகொள்ளக்கூடியது தான். கல்லூரியில் எனக்குத் தெரிந்த பிராமண குடும்பத்தில் பிறந்த ஒரு மாணவன் நன்றாக அசைவம் சாப்பிட்டான். எங்களுக்குத் தான் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் ஊரார் அவனை ஒதுக்கி வைத்துவிடவில்லை. நிச்சயமாக அவன் பெற்றோருக்குத் தெரிந்து செய்திருக்க வாய்ப்பில்லை. இது அவன் மனம் சம்பந்தப்பட்டது.அவனுக்குச் சரியென்று பட்டதைச் செய்திருக்கிறான். இன்று எப்படி இருக்கிறானோ தெரியவில்லை. பல பிராமணர்களும் சாப்பிடுகிறார்கள். ஆனால் பெருமாளுக்குப் படைக்கும் உணவைச் சமைப்பவர் வீட்டுப் பெண்ணை கதாபாத்திரமாக்கி வேண்டுமென்றே வசனங்களை வைத்ததற்கு நல்ல பலனை அனுபவிக்கிறார்கள்.

படத்தைப் படமாகப் பாருங்கள் என்று இன்று இந்தப்படத்திற்கு வரும் எதிர்ப்பைக் கண்டிப்பவர்கள் யார் என்று பார்த்தால் "விஸ்வரூபம்", "பம்பாய்", "டாவின்சி கோட்" என இன்னும் பல படங்களுக்குத் திரையிட எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் சென்றவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களும் தான். தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளிச்சட்னி என்பது தான் இவர்களுடைய நிலைப்பாடு.

அவ்வளவு தைரியமான இயக்குநர் என்றால் இமாம் வீட்டுப்பெண் வீட்டிற்குத் தெரியாமல் இந்துப் பையனின் அறிவுரையைக் கேட்டுப் படிப்பது போலவும் "பன்றிக்கறியைச் சாப்பிடக்கூடாது என எந்த மதமும் கடவுளும் சொல்லவில்லை" என்ற வசனங்கள் வைக்கும் பொழுது தான் இவர்களுடைய சமூக நீதி முகமூடி வெளிச்சத்திற்கு வரும்.

இனி இந்து மதத்தவரின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் படங்கள் வந்தால் அதே வேகத்திலேயே அடுப்படிக்குள் போய் உட்கார்ந்து கொள்ளும் என்று இப்படத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். என்ன கொடுமை? நெட்ஃப்ளிக்ஸ்காரனே பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டு எடுத்து விட்டான்.

இனியாவது நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படத்தைப் படமாக எடுங்கள்.

No comments:

Post a Comment

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்

மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...