Saturday, January 6, 2024

அமேசிங் பிரிட்டன் - 1 - Stratford-upon-Avon


ஒவ்வொரு பயணமும் கற்றுத்தரும் பாடங்கள் ஏராளம்.பயணிக்கும் வழியில் நாம் காணும் மனிதர்கள், புகழ்பெற்ற இடங்கள், உணவு, உறைவிடம் என்று நாட்டுக்கு நாடு வேறுபடுவதும் வரலாறு, கலாச்சாரம் என்று அறிந்து கொள்ள முடிவதும் தான் பயணங்களின் சுவாரசியமே. எல்லா பயணங்களைப் போலவே பிரிட்டன் பயணமும் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. கடவுளுக்கு நன்றி. எங்களுடைய 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரை சொல்வனத்தில் தொடராக வெளிவருகிறது. முதல் பகுதியாக உலகின் தலைசிறந்த ஆங்கில இலக்கியவாதியான 'வில்லியம் ஷேக்ஸ்பியர் ' பிறந்து, வளர்ந்து., வாழ்ந்த ஊருக்குச் சென்று வந்த பயணக்குறிப்பை வாசிக்க இங்கே சொடுக்கவும்.


25 வருடங்களுக்கு முன் முதன்முதலாக பிரிட்டிஷ் ஏர்வேஸ்ல் சென்னையிலிருந்து டொரொண்டோ, கனடா செல்லும் வான்வழிப் பயணம். வழியில் லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் குளிரில் இறங்கி மறுவிமானத்திற்காக காத்திருந்த நினைவுகள் கண்முன்னே வந்து சென்றது. எங்களுடைய முதல் விமானப்பயணத்தில் சாப்பாடு பிடிக்காமல் எதை, எப்படி உண்பது என்று தெரியாமல் ஒரே வாந்தியும் மயக்கமுமாய் அந்நியமாய் உணர்ந்த அதே விமானநிலையத்தில் ‘கிரேட் பிரிட்டன்’ஐச் சுற்றிப் பார்க்க நானும் ஈஷ்வரும் இறங்கிய பொழுது அன்றைய மனநிலையிலிருந்து இன்று முற்றிலும் வேறுபட்டு நிற்பதை உணர்ந்து கொண்டிருந்தோம். காலம் தான் எப்படியெல்லாம் மனிதர்களை மாற்றிவிடுகிறது! இன்றோ விமானத்தில் கொடுத்த உணவுகளை எல்லாம் ஒன்று விடாமல் சாப்பிட்டேன்😆 “படத்தைப் பார்க்காமல் தூங்கு.” என்று ஈஷ்வர் சொன்னாலும் நன்றாக இரவு உணவைச் சாப்பிட்டு விட்டதால் தூக்கம் வரும் வரை எனக்குப் பிடித்த நடிகர்கள் நடித்திருந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் கண்ணயர்ந்தது போல இருந்தது அதற்குள் காலை உணவைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பசியில்லை. வெறும் மஃபின், காஃபி, பிஸ்கட் இத்யாதிகள். எடுத்து வைத்துக் கொண்டேன்.

ஆங்கில இலக்கியத்தில் தீராக்காதல் கொண்ட ஈஷ்வரின் கனவுப்பயணம் இது. தன்னுடைய ஆதர்ச ஆங்கில இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பிறந்து வளர்ந்த ஊரை, தான் படித்த இலக்கியங்களின் கதாபாத்திரங்கள் உலாவிய, கவிஞர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட ஏரிகளை, பூங்காக்களைக் காண வேண்டும் என்ற விருப்பத்தின் தூண்டுதலால் இங்கிலாந்து சென்று வரத் தீர்மானித்தோம். ஈஷ்வருடைய பெரியப்பா ஐரிஷ் பெண்மணியை மணந்து அங்கேயே குடியேறிவிட்டதால் அவருடைய வாரிசுகளையும் நேரில் சந்திக்கும் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பதும் மற்றொரு காரணம். அது மட்டுமில்லாமல் தன்னுடைய இசைப்பயணத்தைத் தொடர ‘லண்டன் டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக்’கிற்குச் செல்லும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டு இன்றும் வருந்திக் கொண்டிருப்பவருக்கு இந்தப்பயணம் மிக முக்கியமானதால் திடீரென்று முடிவெடுத்து மே மாதம் கிளம்பி விட்டோம். எங்கள் இருவருக்கும் அழகான, பசுமையான இங்கிலாந்தின் கிராமப்புறங்களைக் காண வேண்டும் என்ற ஆசையும் கூடுதல் காரணம்.



‘யுனைடெட் கிங்டம்’ (UK) என்பது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து பகுதிகளை உள்ளடக்கியது. ‘கிரேட் பிரிட்டன்’ என்பது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து பகுதிகளை உள்ளடக்கியது என்று தெரிந்து கொண்டேன். பாஸ்டனிலிருந்து இரவு புறப்பட்ட விமானம் தாமதமாக காலை 9.45க்கு லண்டனில் இறங்க உடலை ஊடுருவும் ‘சில்ல்’லென்ற குளிரும் மழைமேகங்களும் எங்களை வரவேற்றது. ஆகா! இது நியூயார்க் குளிரை விட மோசமாக இருக்கிறதே! வானிலிருந்து அழகிய லண்டன் நகரம் மனதை ஈர்க்கிறது. நியூயார்க் நகரத்திற்கும் இதற்கும் எத்தனை வேறுபாடுகள்! அமெரிக்காவின் பிரம்மாண்டம் அதுவும் நியூயார்க் நகரின் உயர்ந்த கட்டடக்குவியல்கள் தரும் பிரமிப்பு இல்லாவிட்டாலும் குட்டி குட்டி கட்டடங்கள், வீடுகள், மரங்கள் வசீகரிக்கிறது. விமான நிலையத்தை விட்டு வெளியில் வருவதில் சிரமமில்லை. மனம் ஒவ்வொரு விஷயத்தையும் நியூயார்க் நகரத்துடன் ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது. வாடகை வண்டி இருக்கும் இடத்திற்குச் செல்ல ஷட்டில் பஸ் வரும் என்று காத்திருந்தோம்.

நம்முடைய ராசி என்னவென்றால் அருகில் நின்றவர்கள் எல்லாம் அவரவர் ஷட்டில் பஸ்சில் ஏறி ‘ஜல்’லென்று சென்று விடுவார்கள். நாம் மட்டும் அங்கே தவிப்புடனே இருப்போம். எங்களுக்கும் அன்று அப்படித்தான் நடந்தது. அந்த ஓட்டுநர் பஞ்சாபியர் அங்கேயே நின்றிருக்கிறார். நாங்கள் பலமுறை அழைத்தும் அவருடைய எண்ணைத் தராமல் வண்டி அங்கு தான் இருக்கிறது என்று அலைக்கழித்தார்கள். ஒருவழியாக அங்கிருந்து கிளம்பினோம்.



முன்பதிவு செய்திருந்த வாடகை வண்டியை எடுக்க ‘ஈரோப்கார்’ நிறுவனத்திற்குள் நுழைந்தால் பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் கதைத்தவர்கள் நம் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் போலத் தெரிந்தார்கள். பிரிட்டிஷ் ஆங்கில பேச்சில் ஒரு கிறக்கம் இருக்கத்தான் செய்கிறது. நமக்குச் சுட்டுப்போட்டாலும் இந்திய ஆங்கிலமே ‘தகிடுதத்தோம்’ போடுகிறது😄 எப்படியோ சமாளித்து நியூயார்க்கில் வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். குழந்தைகளே இப்படி பேச வேண்டும் அப்படி பேச வேண்டும் என்று திருத்த முனைகிறார்கள். “இதெல்லாம் பிரிட்டிஷ் இங்கிலிஷ் தெரியுமா?” என்று அவர்களிடம் உதார் விட்டு யூகே ஆங்கிலத்தைக் கேட்டவுடன் தான் அடடா நாம் பேசுவதெல்லாம் இந்திய ஆங்கிலம் அதுவும் தமிழக ஆங்கிலம் என்று புரிந்தது😂

இந்த வாடகை வண்டி நிறுவனங்கள் நயமாகப்பேசி நாம் கேட்ட வண்டியைக் கொடுக்காமல் வேறு வண்டியை அதிக வாடகைக்கு நம் தலையில் கட்டிவிடுவதில் கில்லாடிகள்! ஏற்கெனவே அயர்லாந்து, நெதர்லாந்து நாடுகளில் ஷிஃப்ட் வண்டியை ஈஷ்வர் ஒட்டியிருந்தாலும் தானியங்கி வண்டியை எடுத்துக் கொள்வது பத்து நாள் பயணத்திற்கு நல்லது. அதுவும் ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ என்றதும் ஆசை யாரை விட்டது? உடனே ஒப்புக்கொண்டோம். வெளியிலிருந்து பார்க்க அம்சமாக இருந்தாலும் உள்ளே குனிந்து தாழ்வாக இருந்த இருக்கையில் அமரும் பொழுது தான் இது உபத்திரவமாக இருக்கப் போகிறது என்று உணர்ந்தோம். அமெரிக்காவில் உயரமான வண்டிகளை ஓட்டிப் பழகிவிட்டு இந்த மாதிரி வண்டிகளை ஓட்டுவதும் அமர்ந்து செல்வதும் கொஞ்சம் கொடுமையாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? ஒவ்வொரு பயணத்திலும் ஒன்றை கற்றுக் கொள்கிறோம். இனி அடுத்த முறை வாடகை வண்டி எடுக்கும் பொழுது இருக்கை உயரமாக இருக்கும் வண்டியைக் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற வாடகைப்பணமும் உயரத்தில் தான் இருக்கும். வாழ்க்கையில் ஒன்றை விலைகொடுத்துத் தான் ஒன்றைப் பெற வேண்டியிருக்கிறது! ம்ம்ம்ம்…. ஒவ்வொரு முறை காரினுள் உட்காரும் பொழுது குழிக்குள் இறங்குவது போல் இருந்தது😧



இந்தியாவில் இருப்பதைப்போல பிரிட்டனிலும் இடதுபுறம் ஓட்டுகிறார்கள். பழக்கமில்லாதவர்களுக்குச் சற்று சிரமம் தான். அதனால் அந்தப் பக்கமெல்லாம் நான் போவதில்லை. பயணம் முழுவதும் சாரதி அவதாரம் ஈஷ்வருக்கே. ஹை ஜாலி ஜாலி. நன்றாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் படங்கள் எடுத்துக் கொண்டும் இருக்கலாம்😊 அந்த வண்டியில் கண்ட்ரோல்கள் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் விரைவில் ஈஷ்வர் கற்றுக்கொண்டார். வண்டியில் ஏறிய நொடியிலிருந்து “தூங்கிடாத. நான் பழக்கதோஷத்துல வலது பக்கம் போயிடுவேன். நீ தான் கவனமா இருந்து சொல்லிட்டு வரனும்.” என்று கட்டளையிட, தொடக்கத்தில் கொஞ்சம் அப்படி இப்படி வண்டி சென்றாலும் சாலையில் இறங்கியவுடன் தான் பதட்டம் தொற்றிக் கொண்டது.

மிகவும் குறுகிய சாலைகள்! நல்லவேளை! நான் ஒட்டவில்லை😕 நாங்கள் இறங்கிய நேரம் போக்குவரத்து வேறு பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது! இதற்காகத்தான் காலை நேரத்தில் வந்து சேருகிற மாதிரி விமானச்சீட்டு வாங்கியிருந்தோம். எங்கள் நேரம்! விமானம் தாமதமாக வந்து இறங்கி நெரிசலில் மாட்டிக்கொண்டோம்.



அந்த வார இறுதியில் ‘பேங்க் ஹாலிடே’ என்று மக்கள் குறுக்குநெடுக்காக பயணித்துக் கொண்டிருந்தார்கள். ‘லாங் வீக்கெண்ட்’ என்று அமெரிக்காவில் சொல்வதைப் போல அரசு விடுமுறையைத் தான் ‘பேங்க் ஹாலிடே’ என்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அதுவுமில்லாமல் இங்கிலாந்தின் இளவரசராகவே வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்து விட்ட ‘சார்ல்ஸ்’ தன்னுடைய 74வது வயதில் மன்னராகப் பதவியேற்பதால் லண்டனை நோக்கி வரும் கூட்டத்திலிருந்து தப்பிக்க விமானநிலையத்திலிருந்து முதலாவதாக ‘Stratford-upon-Avon’ நகரத்திற்குச் செல்வதாகத் திட்டம். அதற்கு M25, M40 சாலைகள் வழியே செல்ல வேண்டியிருந்தது. அமெரிக்காவில் ‘ஹைவேஸ்’ என்பதை இங்கே ‘மோட்டர்வேஸ்'(M) என்றழைக்கிறார்கள். 70mph என்றவுடன் ஒரே குழப்பம்! கனடாவில் கூட கிமீ என்றிருக்குமே! இங்கு என்னடா மைல் என்றிருக்கிறதே என்று. மூன்று, நான்கு வழிப்பாதைகள் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்தது. எப்பொழுதும் இப்படித்தான் இருக்குமாம்!

பழக்க தோஷத்தில் இடப்பக்கத்து வண்டிகள் செல்லும் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈஷ்வரை “அந்தப் பக்கம் போங்க” என்று கையால் ஆட்டுரலில் மாவைத் தள்ளுவது போல் சைகையால் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது. சாலையிலிருந்து வெளியே செல்ல அமெரிக்காவில் வலப்பக்கத்தில் வரும் ‘exit’கள் இங்கே இடப்பக்கத்தில் என்று சிறிது குழப்பம். நெடுஞ்சாலையின் இருபுறமும் நெருக்கமாக மரங்கள். பனிக்காலம் முடிந்து மழைக்காலத்தில் துளிர்க்கிற மரங்கள் பச்சை வண்ணங்களைப் போர்த்தித் தொடர்ந்து வந்தது அழகு! பச்சை வண்ணத்தில் தான் எத்தனை விதமான நிறங்கள்! அதுவும் துளிர் விடும் பருவத்தில் அத்தனையும் அழகு!



நெடுஞசாலையோரங்களில் பசும்புல்வெளிகள், மரங்கள் என்று கண்ணுக்கு குளுமையான காட்சிகள். வேலிகளுக்குப் பின்னால் செம்மறியாடுகள் பரந்த வெளியில் சுகமாகத் திரிவதைக் காண முடிகிறது. அயர்லாந்து சாலைகளில் கண்ட அதே காட்சி தான். என்ன? அங்கே கற்களால் சுற்றுச்சுவர்களை வேலியாகக் கட்டியிருந்தார்கள். இங்கு அப்படியில்லை. வழியெங்கும் கருமேகங்கள் கூடிவருவதும் விலகி மறைவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தது. நகரைத் தாண்டியவுடன் போக்குவரத்து நெரிசல் குறைந்து அமைதியாகிவிட்ட சாலைகளில் சிறிய கார்கள் தான் அதிகம் தென்பட்டது. இந்நேரம் அமெரிக்காவில் பெரிய பெரிய டிரக்குகளும் வேன்களும் கப்பல் போன்ற கார்களும் கடந்து போயிருக்கும்.அதனால் தான் சாலைகளும் பெரிதாக அகலமாக இருக்கிறது. ஐரோப்பா முழுவதுமே சிறு கார்கள் தான் அதிக பயன்பாட்டில் இருக்கிறது. சாலைகளும் அப்படித்தான். அயர்லாந்தில் குறுகிய சாலைகளில் ஓட்டுவது பெரும் சவாலாக இருந்தது போல் ‘கிரேட் பிரிட்டன்’ சாலைகளிலும் ஓட்டுவது சிரமமான வேலை தான்! பாவம் ஈஷ்வர்!

களைப்பாக இருக்கிறது என்று துரித உணவகங்கள் இருக்கும் எக்ஸிட்டை எடுத்து வண்டியை நிறுத்தினால் பர்கர் கிங், ஸ்டார்பக்ஸ், சப்வே , கேஎஃப்சி என்று ஒரே அமெரிக்க கடைகள் பெயர் தான் கண்முன்னே தெரிந்தது. உள்ளே சென்று இந்திய உணவகம் ஒன்றில் காஃபி வாங்கிக் கொண்டோம். சுவையாக இருந்தது. மாம்பழ லஸ்ஸியை தயார் செய்து வைத்திருந்தார்கள். அங்கே அதிக பிரபலம் போல! லேட்டஸ்ட் வண்டியில் செல்ஃபோனை இணைக்க புது கேபிள் ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டோம்😌 அங்கு செல்பவர்கள் மறக்காமல் வாங்கிச்செல்ல வேண்டும். பவுண்டில் செலவழிக்கும் பொழுது கஷ்டமாகத் தான் இருந்தது.



என்ன கொடுமை! ‘ரெஸ்ட்ரூம்’கள் இல்லை, இல்லை ‘டாய்லெட்’கள் கூட சிறிதாக இருக்கிறது இங்கே! கைகழுவும் இடங்களில் எல்லாம் அனாவசியமாக காகிதங்கள் இல்லை. ஈரக் கைகளை உலர்த்தும் இயந்திரங்கள் மட்டுமே! அமெரிக்கா நம்மை எப்படில்லாம் கெடுத்து வைத்திருக்கிறது! என்னவோ போடா மாதவா! ஆசுவாசப்படுத்திக் கொண்டதில் கொஞ்சம் தெளிந்திருந்தோம். பெரியப்பா மகள் நாங்கள் வந்து சேர்ந்த விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

இரண்டு மணிநேரத்தில் ‘Avon’ ஆற்றங்கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய ‘Stratford-upon-Avon’ நகரத்திற்கு வந்து சேர்ந்தோம். இங்கிலாந்தில் வண்டிகளை நிறுத்த இடங்களைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. ஒருவேளை பழகாத ஊர் என்பதால் அப்படித் தோன்றியதோ என்னவோ! தானியங்கி இயந்திரங்களில் காசுகளைப் போட்டு வாகனங்களை நிறுத்தும் வசதிகள் இருப்பதால் சட்டென்று உதவிக்கு ஆட்களைத் தேடுவதில் சிரமம் இருக்கிறது. எங்கும் தானியங்கி இயந்திரங்கள் பெருகி மனிதர்களை விட்டு விலகி கொண்டிருக்கிறோம்! ஹ்ம்ம்…



வண்டியை விட்டு இறங்கியவுடன் ஈஷ்வருக்கோ ஒரே குஷி!இருக்காதா பின்ன? அவருக்கு மிகவும் பிடித்த ‘ஷேக்ஸ்பியர்’ பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊருக்கல்லவா வந்திருக்கிறோம். அநேகமாக அவருடைய எல்லா நாடகங்கள், கதாபாத்திரங்கள், கவிதைகளைப் பற்றி நிறைய பேசியிருக்கிறார். மகளும் பள்ளியில் கவிதைகளைப் பற்றிப் பேசி போட்டிகளில் கலந்து கொண்டதால் இருவருக்கும் எப்பொழுதும் ஷேக்ஸ்பியரைப் பற்றிப் பேசுவதில் ஆர்வம் அதிகம். கல்லூரியில் பகுதி நேர ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் ஆர்வத்துடன் மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுத்திருக்கிறார். அதே ஆர்வத்துடன் வீட்டிற்கு வந்து எனக்கும்😭 அதுவும் ‘மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்’ பற்றி சிலாகித்துப் பேசிய நாட்கள் எல்லாம்…

ஆங்கில இலக்கியத்தில் வெகுவாக கொண்டாடப்படும் அந்த மாமனிதர் பிறந்து வளர்ந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தோம். கற்கள் பதித்த தெருவில் நுழையும் பொழுதே பயணிகள் கூட்டம் தெரிந்தது. ‘பேங்க் ஹாலிடே’ என்று சென்ற பக்கமெல்லாம் கூட்டம். ஹென்லி தெருவின் நுழைவாயிலில் ‘As you like it ‘நாடகத்தில் வரும் கதாபாத்திரம் ‘ஜெஸ்பெர்’ கோமாளியின் சிலையை வைத்திருக்கிறார்கள்.



“The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool” அடிக்கடி ஈஷ்வர் சொல்லும் வசனம். அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டால் நாம் யார் என்பது நமக்கே தெரிந்து விடும்😎அதைப் பற்றிப் பேசிக்கொண்டே அழகான தெருவிலிருந்த ஷேக்ஸ்பியர் பிறந்த வீட்டிற்குச் சென்றோம். நல்ல வசதியான குடும்பத்தில் தான் பிறந்திருக்கிறார். மேலைநாடுகளில் அருங்காட்சியகத்திற்குச் சென்றால் அங்கு பணிபுரிபவர்களுக்கு அதைப் பற்றின அடிப்படை ஞானம் இருக்கிறது. என்ன கேள்விகள் கேட்டாலும் தெளிவாகப் பதில் சொல்கிறார்கள். வாங்கிய கட்டணத்திற்குத் தரமான சேவை. நம் நாட்டின் சுற்றுலாத்துறைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியப்பாடம்.

அருங்காட்சியகம் முழுவதும் ஷேக்ஸ்பியரின் புதினங்கள், நாடகங்கள், அவரைப் பற்றின தகவல்களை வெகு அழகாக நேர்த்தியாக வைத்திருந்தார்கள். அங்கிருந்து அவரது வீட்டிற்குச் செல்ல வழிசெய்திருந்தார்கள்.



இங்கிலாந்து வீடுகளில் அழகான தோட்டங்களும் சிறிது புல்தரையும் இருக்கிறது. அமெரிக்காவில் புல்தரைகளுக்குத் தான் முதலிடம். அதற்குப் பிறகு தான் தோட்டங்கள். இங்கும் நுழைவாயிலில் அழகான பூந்தோட்டம். வளைத்து வளைத்துப் பூக்களைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். கற்கள் பதித்த தரை. 16ம் நூற்றாண்டாய்ச் சேர்ந்த பழைய வீட்டினை அழகாகப் பராமரித்து வைத்திருக்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் தந்தை ஆட்டுத்தோலினால் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதில் விற்பன்னராக இருந்திருக்கிறார். அவருடன் சில வருடங்கள் தங்கி தொழிலைக் கற்றுச் செல்லவும் மாணவர்கள் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு அறையாகச் சுற்றிவந்தோம். சமையல் செய்ய, சாப்பிட, பொதுவான அறைகள் கீழ்த்தளத்திலும் மாடியில் படுக்கையறைகளும் இருந்தது. அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த மரக்கட்டில்கள். பிறந்த குழந்தைகள் படுக்க சிறு தொட்டில். சிறுகுழந்தைகளுக்கான கயிற்றுக்கட்டில் பெற்றோரின் கட்டிலுக்கு அருகில். இளவயதினருக்குத் தனியறைகள் என்று வசதியான வீடு. கயிற்றுக்கட்டிலில் ஏற்படும் தொய்வைப் போக்கி சுகமாகத் தூங்க, ஒரு கருவியை உபயோகப்படுத்தி தினமும் கயிற்றை இறுக்குவார்களாம்.அப்படித்தான் ‘குட் நைட். ஸ்லீப் டைட்’ என்று உருவாகியிருக்கிறது என்று அந்த வீட்டைச் சுற்றிக் காண்பித்த பெண்மணி கூறினார். இது தெரியாமல் இத்தனை நாள் ‘ஸ்லீப் டைட்’ என்று கூறியிருக்கிறோமே! ம்ம்ம்… குழந்தைகளிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டேன்.

வீட்டுத் தோட்டத்தில் ஷேக்ஸ்பியருடன் அவர் காலத்தில் வாழ்ந்த சைனீஸ் எழுத்தாளர் டாங் ஷியாங் சிலை. அங்கே நமக்குத் தெரிந்தவர் சிலை ஒன்றும் இருந்தது. அட! நம்ம தாகூர்!



தன் ஆதர்ச நாயகனின் வீட்டின் முன், வீட்டினுள் நின்ற ஒவ்வொரு நொடியிலும் ஈஷ்வர் பரவசமாக இருந்தார். கண்ணில் தென்படும் இடங்களில் எல்லாம் அவருடைய புத்தகங்களிலிருந்து மேற்கோள்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தது. வாசிக்கையில் அவருக்குப் பல நினைவுகள்! அங்கிருந்து ஷேக்ஸ்பியர் படித்த பள்ளிக்கூடத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம். கருமேகங்கள் வேறு கர்ஜித்துக் கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் மழை கொட்டும் அபாயம். தெருவில் இருந்த உணவகங்களில் நல்ல கூட்டம். தெரு முக்கில் கம்பீரமாக ஷேக்ஸ்பியரின் சிலை ஒன்று. சிலபல படங்களை எடுத்துக் கொண்டு தூறல் வருவது போல் இருக்கவே ஷேக்ஸ்பியரின் புதிய வீட்டிற்குச் செல்ல தீர்மானித்தோம்.

செல்லும் வழியிலேயே வானம் இடிந்து விழுவது போல கனத்த மழை! குடை பறந்து விடும் அளவிற்கு பலத்த காற்று. நாங்களும் ஒரு துரித உணவகத்திற்குள் நுழைந்து கொண்டோம். அங்கு நின்றதால் உணவு ஒன்றுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு ‘ஜோ’வென்று கொட்டும் மழையில் நனைந்து செல்லும் மக்களையும் அருகில் இருந்த தேவாலயத்தையும் மழையையும் ரசித்துக் கொண்டிருந்தோம். அங்கிருந்த ஒருவர் கட்டட வேலைக்காக அருகிலிருக்கும் நகரிலிருந்து வந்து செல்வதாகவும் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டார். மனிதர் பேசிய ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்தது.


அரை மணிநேரம் பெய்த கனமழை சட்டென்று தூறலாக மாற, ஓடிச்சென்று ‘சேப்பல்’ தெருவில் இருக்கும் ஷேக்ஸ்பியரின் புதிய வீட்டை அடைந்தோம். இங்குச் செல்ல ஏற்கெனவே சீட்டு வாங்கி விட்டதால் குழுவாகச் சேர்ந்து ஒருவர் அழைத்துச் சென்றார். அவருக்கு வயது 70க்கு மேல் இருக்கலாம். ஆனால் உற்சாகமாக இருந்தார். அந்த வீட்டைப் பற்றின முழுத்தகவல்களைச் சுவாரசியமாகக் கூறிய விதம் மிகவும் பிடித்திருந்தது. மதுரையில் திருமலை நாயக்கர் மகாலைப் பற்றின ஒரு தகவலைக் கேட்க விட்டேத்தியாக அங்கிருந்தவர் சொன்ன பதில் நினைவிற்கு வந்தது. ம்ம்ம்ம்ம்… நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. இங்கு வரும் பயணிகளிடமும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அங்கிருப்பவர்களுக்கும் மக்களுக்கு வேண்டிய தகவலைச் சொல்லிக் கொடுக்கும் ஆர்வமும் இருக்கிறது. அதுவும் பலரின் ஆதர்ச நாயகன் என்றால் அலட்சியமாக இருக்க முடியாது அல்லவா?



அந்த ஊரிலேயே 20-30 அறைகள் கொண்ட பெரிய வீடும் தோட்டமும் கொண்ட வீட்டை தன் குடும்பத்திற்காக கிளாப்டன் குடும்பத்தினரிடமிருந்து 1597ல் வாங்கியிருக்கிறார் ஷேக்ஸ்பியர். மரங்கள், செடி, கொடிகள் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்ததால் தோட்டங்களை அவரே பராமரித்திருக்கிறார். அதை இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். அந்தக் காலத்தில் அதிக சம்பளம் பெற்றுக் கிடைத்த பணத்தில் முதலீடு செய்துள்ள வீட்டை யாரிடமிருந்து வாங்கினாரோ அந்த குடும்பத்தின் வாரிசுகளிடமே வீடு மீண்டும் சேர்ந்திருக்கிறது. ஷேக்ஸ்பியருக்குப் பின்னர் அவருடைய மகள், தன் கணவன், மகளுடன் அந்த வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அவருடைய மகள் எலிசெபத்திற்கு வாரிசுகள் இல்லாததால் வீட்டை மீண்டும் கிளாப்டன் குடும்பத்தினர் வாங்கி விட்டனர். அந்த வீட்டை ஷேக்ஸ்பியர் டிரஸ்ட் வாங்கி தற்பொழுது அவருடைய வாசகர்களும் பயணியர்களும் கண்டுகளித்துச் செல்லுமிடமாக மாற்றியுள்ளார்கள்.

அந்த ஊரிலிருந்த வீடுகள் எல்லாம் கண்களை உறுத்தாத வண்ணங்களில் மர வேலைப்பாடுகளுடன் சிறிய பூந்தொட்டிகளுடன் சுவிட்சர்லாந்து வீடுகளை நினைவூட்டியது. சுத்தமான தெருக்கள். மன்னரின் பதவியேற்பு விழாவிற்காக நகரம் தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டிருந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சதுக்கங்கள். எங்கும் புது மன்னரின் புகைப்படங்கள், பரிசுப்பொருட்கள் என்று காட்சிகளுக்குக் குறைவில்லை.



காலத்தால் அழியாத காவியங்களைத் தந்த மனிதன் பிறந்து வளர்ந்த ஊர் இன்று சுற்றுலாவினர் தவறாமல் வந்து செல்லும் இடமாக மாறியுள்ளது. அங்கே அவருடைய நாடகத்தை எப்படியாவது ‘ராயல் ஷேக்ஸ்பியர் தியேட்டர்’ல் பார்த்து விட வேண்டும் என்று நினைத்தோம். சீட்டு கிடைக்கவில்லை. அந்த அரங்கையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தால் காட்சி நடந்து கொண்டிருந்ததால் அங்கிருந்தவர்கள் “லண்டனில் கூட இருக்கிறது. அங்கே பார்க்கலாம்.” என்று கூற, அங்கிருந்து வெளியேறினோம்.

அந்த இடத்தைச் சுற்றிப்பார்க்க 1/2 நாட்கள் போதும். விரைவிலேயே மூடி விடுகிறார்கள். சுற்றுலாவினர் சென்ற பிறகு அந்த இடமே வெறிச்சோடி இருக்கிறது. அங்கிருந்து பெரியப்பா மகள் வீட்டிற்குச் செல்ல இரண்டு மணிநேரம் ஆகும் என்பதால் விரைவில் ஷேக்ஸ்பியரின் மனைவி ‘ஆன் ஹாத்தவே’ வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்துக் கிளம்பிவிட்டோம். தூறலும் நின்று விட்டிருந்தது. லண்டனுக்கே உரிய இரண்டடுக்குப் பேருந்துகள் குறுகிய தெருவில் செல்வதைப் பயத்துடன் பார்த்துக் கொண்டே வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.



குறுகிய சாலைகளைக் கடந்து மரங்கள் அடர்ந்த பகுதியில் காட்டேஜ் லேனில் ‘ஆன் ஹாத்தவே குடில்’ உள்ளது. ‘thatched roof’ என்று சொல்லப்படும் வைக்கோல் வேய்ந்த கூரைகளுடன் அழகான சிறிய வீடு. தன் காதலியைச் சந்திக்க ஷேக்ஸ்பியர் ஆன் ஹாத்தவேவின் குடும்ப வீட்டிற்கு வந்து சென்றதால் இந்த வீடும் சுற்றுலாவினர் விரும்பிப் பார்க்கும் இடமாக மாறியுளளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுப் பல ஆண்டுகளாக மாறுதல்களைக் கண்டிருந்தாலும் படுக்கை அறை, உணவருந்தும் அறை , குடிசைத் தோட்டங்கள் என்று பலவும் சீராகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் சென்ற இடங்கள் அனைத்தும் வழிகாட்டிகள் தகவல்களைக் கூறி அழைத்துச் சென்றதால் சுவாரசியமாக இருந்தது. கட்டணம் வசூலித்தாலும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை மிகுந்த ஆர்வத்துடன் எடுத்துரைக்கிறார்கள். சிறிது நேரம் அங்கிருந்த தோட்டத்தில் உலாவினோம். காதலியுடன் ஷேக்ஸ்பியர் நடந்த இடங்களாயிற்றே! தன்னை விட வயதில் மூத்த பெண்ணைக் காதலிப்பதே அன்றைய காலத்தில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கும். அதையெல்லாம் கடந்து நின்றிருக்கிறது அவர்களின் காதல்😍 ஆகா! காதல் என்பது எதுவரை…💞💞💞

அங்கிருந்து பெரியப்பா மகள் வீட்டிற்குப் புறப்பட்டோம். இரண்டு மணிநேரப் பயணம். அவளும் அழைத்து வீட்டிற்குச் செல்லும் வழிகளைச் சொல்லி விட, அன்றைய நாளின் களைப்பை ஷேக்ஸ்பியர் என்னும் பெருமனிதன் முற்றிலும் நீக்கி விட்டிருந்ததை வியந்து பேசிக்கொண்டே பயணித்தோம்.

(சஞ்சரிப்போம்)

 


No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...