Sunday, January 21, 2024

அமேசிங் பிரிட்டன் - 2- யார்க் , ஹேட்ரியன்ஸ் வால் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 310ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் இரண்டாவது பாகம்.  

யார்க் , ஹேட்ரியன்ஸ் வால் பயணக்குறிப்புகள்

பயணங்களின் சுவாரசியமே வழியில் காணும் காட்சிகள் தான். நாம் செல்லப்போகும் இடங்களைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருப்போம். ஆனால் வழியில் எதிர்பாராத காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்ளும். மழைமுகில்கள் தொடர, வழியெங்கும் பச்சைப்பசேல் புற்களும் மஞ்சள் நிற மஸ்டர்டு பூக்கள் பூத்துக் குலுங்கிய நிலங்களுமாய் மழைக்கால அழகு சாமரம் வீசிக்கொண்டிருந்தது. திகட்டத் திகட்ட ஷேக்ஸ்பியர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இடங்களைச் சுற்றிப்பார்த்து விட்டு பெரியப்பா மகள் வீட்டிற்குக் கிளம்பினோம். M69 சாலை வழியில் தென்பட்ட ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் நியூஇங்கிலாந்து மாநிலங்களிலும் உள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அமெரிக்கா வரை இருந்ததற்கான சாட்சி!

இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு குடியிருப்புப்பகுதிகள் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். அமெரிக்காவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலவமைப்பு. சிறியதாக, நேர்த்தியாக அணிவகுத்து நின்றிருந்த கற்கள் அல்லது செங்கற்கள் பதித்த வீடுகள். கஸின் வீட்டிற்கு நேரத்தோடு வந்து சேர்ந்து விட்டோம். அவர்களுடைய தனி வீடு கைக்கு அடக்கமாக இருந்தது. நிச்சயம் இந்திய அமெரிக்கர்கள் வசிக்கும் வீடுகள் இவர்களைப் பிரமிக்க வைத்திருக்கும்! பெரியப்பா மகளும் என் வயதினள். அவள் கணவர் அங்கு மருத்துவராகப் பணிபுரிகிறார். இவளும் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். விடுமுறை நாள் என்பதால் இருவரும் ஆற, அமர பேச முடிந்தது. மிக நன்றாகச் சமைப்பாள். சைவம், அசைவம் என்று அமர்க்களப்படுத்தியிருந்தாள். சாப்பிட்டு முடித்த பிறகு, பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம். பேசுவதற்கு விஷயங்களா இல்லை? அதுவும் பெண்கள் இருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது😛 எல்லார் மண்டையையும் உருட்டிய பிறகு தூங்கச் சென்றோம்😂

மறுநாள் காலையில் மிகச்சீக்கிரமாகவே தயாராகி இறங்கி வருவதற்குள் தட்டு இட்லி, தோசை, பூரி, மசாலா என்று மதுரைக்குச் சென்று வராமலே அனைத்தும் சுவையுடன் மேஜை மீது காத்திருந்தது. நன்றாகச் சாப்பிட்டோம். அங்கிருந்து நாங்கள் செல்லவிருக்கும் ‘யார்க்’ நகரத்தில் பார்க்க வேண்டிய இடங்களையும் அதற்குப் பிறகான பயணத்தைப் பற்றியும் பேசி முடித்தோம். ஸ்காட்லாந்து சென்று திரும்பும் வழியில் மீண்டும் வீட்டிற்கு வந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார்கள். பயணத்தின் போது நாங்கள் சாப்பிடுவதற்காக “புளியோதரை” கூடவே அவித்த தட்டைப்பயறு, சிப்ஸ், கடலை, ரொட்டி, பழங்கள் என ஒரு மூட்டை தயாராக இருந்தது. ஆகா! ‘குப்பா’ வீட்டுப்பெண் என நிரூபித்துவிட்டாளே என்று மனம் மகிழ்ந்தது. எங்கள் சமூகத்தினரின் புளியோதரையைச் சுவைத்தவர்கள் வேறு எந்த புளியோதரையையும் விரும்ப மாட்டார்கள். நாங்கள் விரும்ப மாட்டோம். அதனுடன் சைவ, அசைவ “சைட் டிஷ்கள்”, ஊறுகாய் வகைகள் என்று ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அதைப் பற்றி தனிக்கட்டுரையே எழுதலாம்!

பரிசுப்பொருட்கள், நொறுக்குத்தீனிகள் என்று மேலும் இரண்டு பெரிய பைகளுடன் அவர்களிடமிருந்து விடைபெற்று “யார்க்” நகரம் நோக்கிய பயணம் ஆரம்பமாயிற்று. குடியிருப்பு பகுதிகள் சிலவற்றில் ஒருபுறம் வண்டிகள் அணிவகுத்து நின்றிருக்க நெதர்லாந்து வீடுகளை நினைவுறுத்தியது. என்ன? அங்கு பார்க்கும் இடங்களில் எல்லாம் பசுமையும் கால்வாய்களும் இருக்கும். இங்கு கால்வாய்கள் இல்லை. அன்று தான் அந்நாட்டின் மன்னராக “சார்ல்ஸ்”ன் பதவியேற்பு விழா  நடைபெறுவதால் சாலைகள் ‘வெறிச்’சென்று இருந்தது. 

மழை மேகங்கள் தொடர, அழகான வானவில்லின் தரிசனமும் கிடைக்க, மனம் குழந்தையைப் போல குதூகலித்தது. மழைக்குப் பின்னே வானவில்லைத் தேடி படமெடுப்பது எங்களுக்குப் பிடித்த ஒன்று. அதுவும் இரட்டை வானவில் என்றால் அமெரிக்க நண்பர்கள் ‘பித்ருக்களின் ஆசீர்வாதம்’ என்று மகிழ்வார்கள். ரசித்தபடியே ஒன்றரை மணிநேரத்தில், புகழ்பெற்ற “York Castle”ஐச் சுற்றிப்பார்க்க வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

1068ல் கட்டப்பட்டுள்ள கோட்டை வளாகத்தில் நல்ல கூட்டம் இருந்தது. “யார்க் கோட்டை” அரச குடியிருப்பு, இராணுவம், சிறை உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோட்டையின் குறிப்பிடத்தக்க அம்சம் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட “Clifford’s Tower”. குன்றின் உச்சியில் இருக்கும் இந்த கோட்டை முதலில் மரத்தால் கட்டப்பட்டு பின் கல் கோட்டையாக உருமாறியுள்ளது. இங்கிலாந்தின் வடக்கில் நார்மன் இனத்தின் ஆதிக்கத்தின் அடையாளமாகச் செயல்பட்டு யார்க் நகரத்தையும் அதன் சுற்றியுள்ள பகுதிகளையும் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இன்று பார்வையாளர்களைக் கவரும் இடமாக வரலாற்றினை அறிந்து கொள்ள உதவுகிறது.

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயங்கள், கோட்டைகள், மிகப்பெரிய கட்டடங்கள், குறுகிய தெருக்கள் என்று நடந்து சென்று பார்க்கும் இடங்கள் இங்கு ஏராளம். பேருந்து வசதிகளும் இருக்கிறது. அங்கிருந்து பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கியமான “The Shambles” என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தெருவிற்குச் சென்றோம். 8வது நூற்றாண்டு கால வீடுகள், கடைகளைப் பராமரித்து வருகிறார்கள். அதைக் காண அத்தனை கூட்டம்! கற்கள் பதித்த குறுகிய, நீண்ட தெரு. கூட்டத்தோடு ஐக்கியமானோம். ஈஷ்வருக்கு அங்கே என்ன இருக்கிறது என்று மக்கள் இப்படி அடித்துப்பிடித்துக் கொண்டு வருகிறார்கள் என்று கேள்வி!

அங்கு இரு வீடுகளின் மேல் கட்டடங்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்வது போல நிற்கிறது. அத்தனை குறுகலான தெரு. நெருக்கமான வீடுகள். மெடிவல் காலத்தில் கசாப்புக்கடைகளாக இருந்திருக்கிறது. தற்பொழுது காலத்திற்கேற்ப துணிகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் விற்கும் கடைகளாக உருமாறியுள்ளது. ‘ஹாரி பாட்டர்’ தொடரில் வரும் ‘Diagon Alley’ இந்தத் தெருவை வைத்துப் புனையப்பட்டது என்பதால் அங்கு ஒரு கடையை வைத்திருக்கிறார்கள். ‘ஹாரி பாட்டர்’ ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். உள்ளே சென்று வர நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள்! எனக்குப் பிடித்தது முத்தமிட்டுக்கொள்வது போல நின்றிருந்த இரு கட்டடங்கள்! பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த தெருவின் சாராம்சத்தை மாற்றாமல் கட்டடங்களைப் பாதுகாத்து இன்றைய தலைமுறையினரும் கண்டுகளிக்க வசதிகள் செய்திருப்பது சிறப்பு. யார்க் என்றால் “The Shambles” என்றாகியிருக்கிறது.

அங்கிருந்து மிகவும் பிரபலமான ‘York Minister’ தேவாலயத்திற்குச் சென்றோம். தேவாலயங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வண்ண கண்ணாடிகள் காண்போரை வசீகரிக்கும். உள்ளே ஓரிடத்தில் தொலைக்காட்சியில் பட்டத்து இளவரசரை மன்னராக்கும் சடங்குகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. தேவாலய பங்குத்தந்தைகள் புடைசூழ மன்னருக்கு லண்டன் மாநகரில் ‘வெஸ்ட்மினிஸ்டர் ஆபி’யில் முடிசூட்டு விழா அரங்கேறிக்கொண்டிருந்ததைப் பலரும் புளங்காகிதமாக பார்த்துக் கொண்டிருக்க, மகுடம் சூட்டும் விழாவை நாங்களும் சிறிது நேரம் பார்த்தோம். 

‘யார்க் மினிஸ்டர்’ தேவாலயத்தின் பிரம்மாண்டம், விரிவான வேலைப்பாடுகள் அனைத்தும் கவரும் விதத்தில் இருந்தது. ஐரோப்பிய நகரங்களில் மிக அழகான தேவாலயங்கள், அதுவும் ‘gothic’ கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட அனைத்தும் அழகு. நாங்கள் இதற்கு முன் சென்று வந்த ஐரோப்பியா நாடுகளிலும் இப்படி ஏகப்பட்ட பெரிய தேவாலயங்கள். சில இடங்களில் வழிபாடு செய்யும் இடமாக இருந்தாலும் பல பெரிய தேவாலயங்கள் பயணிகள் வந்து செல்லும் இடங்களாக, காட்சிப்பொருட்களாக மாறிவிட்டிருக்கிறது. மேற்குலகில் கிறித்துவம் வீழ்ந்து விட்டதோ? அதனால் தான் கிறித்துவத்தை கிழக்கில் நிறுவ துடிக்கிறார்களோ? அமெரிக்காவில் என்னுடைய அமெரிக்க நண்பர்கள் பலரும் தேவாலயங்களில் நடந்த/நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு ஏதிஸ்ட்டாக மாறிவிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் நடக்கும் பேயாட்ட மதமாற்றக் காணொளிகளைக் கண்டு அதிர்ந்திருக்கிறார்கள்! இன்று வரையில் பங்குத்தந்தைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு அலைகிறார்கள். தொடர் சோகம்😌 இப்படி பல எண்ணங்களுடன் வெளியே வந்தால் தெருச்சந்திப்பில் நாட்டின் புதிய மன்னரை கௌரவிக்கும் பொருட்டு இசைவாத்தியங்கள் முழங்கிக்கொண்டிருந்தன. சிறிது நேரம் அதையும் கண்டுகளித்தோம். 

பிறகு அங்கிருந்த “ஷாம்பிள்ஸ் மார்க்கெட்” சதுக்கத்திற்குள் நுழைந்தோம். விதவிதமான உணவகங்கள், சாக்லேட் கடைகள்,பழங்கள், காய்கறிகள் சந்தை முழுவதும் நிறைந்திருந்தது. மதிய நேரம். உணவகங்களில் மக்கள் கூட்டம் ! பழங்களை வாங்கிச் சுவைத்துக் கொண்டே ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வெளியேறினோம். இங்கிலாந்து வரலாற்றில் ‘வைகிங்’ ஆட்சியாளர்களுக்கு இன்றியமையாத இடம் உள்ளது. அவர்களைப் பற்றின அருங்காட்சியகங்களும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல தீனி தான். காலையில் 11 மணியிலிருந்து மூன்று மணிவரை நடந்து நடந்து சுற்றிப்பார்த்தோம். சில பல படங்களை ‘கிளிக்’கிக் கொண்டோம். மொத்தத்தில் “யார்க் ‘ ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

அந்தக் குட்டி நகரத்திலிருந்து நெடுஞ்சாலைக்கு வருவதற்குள் பல குடியிருப்புப் பகுதிகளைக் கடக்க வேண்டியிருந்தது. சுத்தமான தெருக்கள், ஒரே மாதிரியான அடுக்கு வீடுகள் என்று எங்கும் எதிலும் இருந்த நேர்த்தி மேற்கத்திய நாடுகளுக்கே உரியது! அமெரிக்காவில் இல்லாத ஏதோ ஒரு அழகு இங்கிலாந்தில் இருக்கிறது. 

அடுத்து “Hadrian’sWall” என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்குப் பயணமானோம். இரண்டரை மணிநேரப் பயணம். வழியெங்கும் மஞ்சள் வண்ண ‘மஸ்டர்ட்’ மலர்கள் மலைகளில் வியாபித்திருந்தது அழகு. அதைப் பண்ணைகளில் வளர்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டோம்.

கருமேகங்களும் விடாப்பிடியாக எங்களைத் தொடர்ந்து கொண்டே வந்தது. நடுவில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி புளியோதரையைச் சுவைத்தோம். ஆகா! எங்கோ வனாந்தரத்தில் சுவையான வீட்டுச் சாப்பாடு! அம்மாவின் கைப்பக்குவதில் செய்தது போலவே அத்தனை சுவையாக! உப்பும், காரமும், புளிப்பும் சரிவிகிதத்தில்! தெய்வீகம்! கூடவே இன்ஸ்டன்ட் டீ மசாலா வேறு கஸின் கொடுத்திருந்தாள். சுடுதண்ணியைக் கலந்தால் டீ. அப்பவே சுடச்சுட! திவ்யம்! திவ்யம்! சுற்றிலும் பரந்த புல்வெளிகள்! செம்மறி ஆடுகள் இயற்கையாக விளைந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தது அழகு!

அங்கிருந்த பசும்புற்கள் கூட அத்தனை அழகாக இருக்கிறது! ஓரிடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தைக் கடந்து விட்டிருந்தாலும் மீண்டும் திரும்பி வந்து சிறிது நேரம் நின்று ஆட்டத்தை ரசித்து விட்டுத் தொடர்ந்தோம். வெள்ளைச்சீருடையும் மேலே ஸ்வெட்டரும் அணிந்த கிரிக்கெட் வீரர்கள். பால்ய நினைவுகள் நிழலாடியது😎 மழை தூற ஆரம்பித்து விட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எங்களைத்தவிர யாரையும் சாலையில் காணவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். சாலை குறுகிக் கொண்டே வளைந்து வளைந்து சென்றது. பெரிய வண்டிகள் எதிரில் வந்தால் காத்திருந்து வழிவிட வேண்டிய அளவிற்குச் சிறிய சாலை! உட்கார்ந்து ரசிக்கத்தக்க இடங்கள் ஏராளம். ஆனால் வண்டியை எங்கும் நிறுத்த முடியாது என்பதில் சிறிது ஏமாற்றம் தான். ‘வியூபாயிண்ட்ஸ்’ வைக்கும் அளவிற்கு இடமில்லை. அதனால் ஓடும் வண்டியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். ஈஷ்வர் தான் பாவம்😔.

ஆளரவமே இல்லாத இடத்தில் ஜிபிஎஸ் காட்டிய வழியில் சென்று கொண்டே இருந்தோம். மரங்களில் இலைகள் துளிர் விட்டுக் கொண்டிருந்த காலம். ஒருவேளை இலைகள் நிறைந்திருந்தால் அந்தப் பகுதியே மிக அழகாக இருந்திருக்கும். “தூறல் போடும் மேகங்கள் நானாக வேண்டும்” மனதிற்குள் ஒலிக்க, மேடும் பள்ளமுமாய் சென்று கொண்டிருந்தது சாலை. முடிவில் வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றது ஜிபிஎஸ். அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் பல மைல்கள் தொலைவிற்கு வளைந்து வளைந்து செல்கிறது சுற்றுச் சுவர். இதுதான் ஹேட்ரியன்ஸ் வாலா? அதற்குள் அதனைப் பற்றின தகவல்களை ஈஷ்வர் விவரித்திருந்தார். கைகாட்டி காட்டிய “ரோமன் ஃபோர்ட்”டின் உள்ளே செல்லும் பொழுது அலுவலகத்தை மூட தயாராகிக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்த இரு பெண்கள்!

“நாங்கள் அம்ரீக்காவிலிருந்து இதைப் பார்க்க ஓடோடி வந்திருக்கிறோம்” என்றவுடன் அங்கிருந்த ரேஞ்சர்களுள் ஒருவர் அந்த இடத்தைப் பற்றின வரலாற்றை விரிவாகக் கூறினார். இங்கிலாந்தின் வட பகுதியில் ரோமானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிரிட்டானியா மாகாணத்தை ஸ்காட்லாந்திடமிருந்து காத்துக் கொள்ள, கிழக்கு மேற்காக 73 மைல்களுக்கு (117 கிலோமீட்டர்) 15அடி உயரத்தில் கற்களால் சுவர் எழுப்பியிருக்கிறார் ஹேட்ரியன் என்ற ரோமானிய பேரரசர். பல இடங்களில் சுவற்றின் உயரம் குறைந்துவிட்டிருக்கிறது. ரோமானியர்கள் தாங்கள் எது செய்தாலும் அதை முறையாக ஆவணப்படுத்துவதில் கில்லாடிகள். தற்பெருமை மிக்கவர்கள். அதனால் வரலாற்றுப்பிழைகள் அவர்கள் வரலாற்றிலேயே இல்லை என்று அந்தப் பெண்மணி சிரித்தபடி கூறினார். அவர்கள் அப்படிச் செய்திருக்கா விட்டால் உண்மை நிலவரம் இத்தனை வருடங்களுக்குப் பிறகு நமக்கு எப்படி தெரியும்? வரலாறு முக்கியம்ல? அவர்களாவது உண்மையைப் பொறித்து வைத்திருக்கிறார்கள். நாம் பொய்களைத் தானே வரலாறு என்று படித்து இன்றைய தலைமுறையினருக்கும் கற்பித்துக் கொண்டிருக்கிறோம். பொய்களைக் கட்டமைத்து தமிழ்நாட்டில் ஆட்சி நடப்பதெல்லாம் … என்னவோ போடா மாதவா😡

‘ஹேட்ரியன்ஸ் வால்/ரோமன் ஃபோர்ட்’ யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இயங்குவதால் நன்கு பாதுகாக்கப்பட்டு பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறது. ரோமானியர்களின் கதைகளில் ஆர்வம் கொண்ட ஈஷ்வரும் கதைக்க ஆரம்பிக்க, நிஜமாகவே ஆர்வமுள்ளவர்கள் போல என்று நினைத்தாரோ என்னவோ ஒரு அரைமணி நேரமாவது எங்களுக்காகக் காத்திருந்து அந்த ரேஞ்சர் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கிருந்து ‘Northumberland National Park’ செல்லும் வழியைக் கூறி முடிந்தால் அதையும் பார்த்து விட்டுச் செல்லுங்கள் என்று கூறினார். கையில் கேமெரா இருப்பதைப் பார்த்து ஒரு பிரபலமான இடத்தைப் பற்றிக் கூறி அங்கே ஒற்றை மரம் இருக்கும். அழகான இடம். அதிகமான புகைப்படங்கள் எடுக்கப்பட்ட மரம். அங்கும் மறக்காமல் சென்று படமெடுத்துக் கொள்ளுங்கள் என்று அதனைப் பற்றின தகவல்களையும் வழியையும் கூறினார் .

அவருக்கு நன்றி கூறி விட்டு மழையில் நனைந்த படி சிறிது தூரம் சுவரோரம் நடந்து சென்றோம். வெளியே மழை ‘கொட்டோகொட்டெ’ன்று கொட்டிக் கொண்டிருந்தது. ஒரு இளம்பெண் கைகளை அசைத்துக் கொண்டே மழையில் துள்ளியபடி மனம் போன போக்கில் நடனமாடிச் சென்று கொண்டிருந்தது கொள்ளை அழகு! யாரைப் பற்றின கவலையேதும் இல்லாமல் கண்களை மூடியபடி நனைந்து சென்றவளின் ஆண் நண்பரும் குழாமும் முன்னே சென்று கொண்டிருந்தது. தன்னியல்பில் இருக்கும் பெண்கள் தான் எத்தனை அழகு! ம்ம்ம்ம்ம்….😍மழை தரும் பரவசம் நனைந்தவர்களுக்கு மட்டுமே புரியும் அதிசயம்💖

வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள். பரந்து விரிந்திருந்த பச்சைப்பசேல் புல்வெளி. மழை. அங்கிருந்து செல்லவே மனமில்லை. ஆனால் அந்தப் .பெண்மணி சொன்ன ஒற்றை மரத்தைப் பார்த்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து வண்டியை எடுத்துக் கொண்டு சாலைகளில் மீண்டும் பயணம். இருட்டிக் கொண்டு வேறு இருந்தது. நீண்ட சாலை. சென்று கொண்டே இருந்தது. சரியான பாதையில் தான் போகிறோமோ என்று சந்தேகம். யாரைக் கேட்பது? மனிதர்கள் யாரும் தான் கண்ணில் படவே இல்லையே😓 இப்பொழுது மழை முற்றிலுமாக நின்று விட்டிருந்தது.

விடுதி ஒன்று கண்ணில் பட்டதும் அங்கு இறங்கி நாங்கள் செல்ல வேண்டிய இடத்தைப் பற்றிக் கேட்டதும் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் வரைபடம் ஒன்றைக் கொடுத்து அந்த இடம் எங்கிருக்கிறது என்று காண்பித்தான். நன்றி கூறி அங்கிருந்து செல்ல, மீண்டும் மழை. சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் என்று சிலரைப் பார்த்தவுடன் தான் அப்பாடா என்றிருந்தது! அந்த மழையிலும் மலையில் சைக்கிள் ஒட்டிக் கொண்டு செல்பவர்கள் நிச்சயம் பணியிலிருந்து ஓய்வெடுத்தவர்கள் போலத் தெரிந்தார்கள்.

எங்களுடைய பெரும்பாலான பயணங்களில் குறிப்பாக, ஐரோப்பாவில் தம்பதியர் சமேதமாக ஊரைச்சுற்றிப் பார்க்க வருபவர்கள் பலரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார்கள். நாம் ஐம்பதிலும் ஆசை வரும் என்று பாடினால் அவர்கள் அறுபதிலும் ஆசை வரும் என்று பாடுகிறார்கள். பொறாமையாக இருக்கிறது! “வயசான அக்காடான்னு ஒரு இடத்தில உட்காரணும்”என்று சொல்லாத ஆட்கள் இருக்கும் வரையில் இவர்கள் உலகம் சுற்றும் வாலிபர்களாக இருக்கிறார்கள். நாங்கள் பார்த்த மனிதர்களும் படு ‘ஃபிட்’டாக இருந்தார்கள். அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டே மலையில் ஏறுவதும் இறங்குவதுமாய் தொடர்ந்தது எங்கள் பயணம்.

சாலையிலிருந்து சில மைல்களுக்கு நடந்து உள்ளே சென்றால் ஹேட்ரியன்ஸ் வால் அருகில் ‘சைகமோர் இடைவெளி’ மரத்தை அருகில் சென்று பார்க்கலாம். நேரமின்மை காரணமாக நாங்கள் சாலையில் நின்று படத்தை எடுத்துக் கொண்டோம். ஹாலிவுட் படங்களில் இடம்பெற்று பிரபலமாகியுள்ள இடத்தை நாங்கள் தவறவிடக்கூடாது என்று தகவல் மையத்தில் உள்ள ரேஞ்சர் உற்சாகமான குரலில் எங்களிடம் கூறியிருந்தார். இரண்டு மலைகளுக்கு இடையில் ஒரு அழகான இடத்தில் தனிமரமாக நின்றதைக் கண்டோம். அதிக புகைப்படம் எடுக்கப்பட்ட மரங்களில் ஒன்றாக இருந்ததில் ஆச்சரியமில்லை. தனித்து நிற்கும் மரங்கள் எல்லாம் ஒருவித அழகுடன் ஏதோ ஒன்றைக் கூறுவது போலவே இருக்கும். அல்லது எனக்கு அப்படித்தோன்றும். கலிஃபோர்னியாவில் பசிஃபிக் கடலோரத்தில் சைப்ரஸ் மரம் பாறையில் தனியே நின்று கொண்டிருக்கிறது. அதுவும் பிரபலமான இடம். ஆனால் மலை முகடுகளுக்கு நடுவில் இந்தத் தனிமையான மரம் அதீத அழகு! சில நேரங்களில் திரைப்படம் தயாரிப்பவர்கள் தேடிப்பிடித்து அழகழகான இடங்களைக் காண்பித்து விடுகிறார்கள். நல்ல வேளை! நாங்கள் தவற விடவில்லை. ரேஞ்சருக்கு நன்றி கூறிக்கொண்டோம். 

மீண்டும் மலைகள் சூழ்ந்த நீண்ட சாலைப் பயணம் . அங்கொன்றும் இங்கொன்றுமாக செம்மறியாடுகள் மலைகளில் ஹாயாக மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்க்க, பச்சை வண்ண சேலையில் வெள்ளைப் பூக்கள் போல அழகு💕

வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு சிறிது தூரம் அந்தச் சாலையில் நடந்து வந்தோம். அருகே தனியாக கற்கள் பதித்த பழைய வீடு ஒன்று இருந்தது. ஆங்கில புதினங்களில் பார்த்த படங்களை நினைவூட்டும். அதையொட்டிய சாலையில் நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லலாம். நாங்கள் வண்டியை எடுத்துச் சென்று பாதை குறுகியவுடன் படபடத்துத் திரும்பி வந்தோம். நாயுடன் வந்த பெண்மணி, “ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி விட்டேன். உங்கள் வண்டி பெரியதாக இருக்கிறது. எதிரில் வண்டி வந்திருந்தால் கஷ்டம். நல்ல வேளை! நீங்களே திரும்பி விட்டீர்கள்.” என்று கூறி சிறிது நேரம் அந்த இடத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். “நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்” என்று கூறி விடைபெற்றோம்.

இப்படியே நேராகச் சென்றால் இயற்கை எழில் கொஞ்சும் ‘Northumberland National Park’ வரும். அங்கு பலவிதமான மரங்கள், செடிகள், பறவைகள் இருக்கிறது என்று அவர் வேறு ஆசையைக் கிளப்பி விட்டார். நாங்களும் பாதி தூரம் வரை செல்லலாமா என்று கூட யோசித்தோம். ஆனால் திட்டமிடாமல் செல்வதில் அர்த்தமில்லை என்று ஆசைக்காக சாலையில் சிறிது தூரம் நடந்து விட்டு ஸ்காட்லாந்து நோக்கி வண்டியைத் திருப்பினோம்.

No comments:

Post a Comment

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்

மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...