Monday, February 5, 2024

அமேசிங் பிரிட்டன் - 3 - எடின்புரஃஹ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 311ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் மூன்றாவது பாகம்.

அமேசிங் பிரிட்டன் - 3 - எடின்புரஃஹ் பயணக்குறிப்புகள்

மலையோடும் மழையோடும் நீண்டு கொண்டே சென்ற ‘ஹேட்ரியன்ஸ் வால்’ஐ நாங்களும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். அங்கிருந்து ஸ்காட்லாந்து செல்ல இரண்டரை மணிநேரம். நெடுஞ்சாலையை எதிர்பார்த்து இங்கிலிஷ் கிராமங்கள் வழியே செல்லும் வழியெங்கும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது! பரந்து விரிந்த பசும்புல் நிலப்பகுதிகளும், குறுகிய சாலைகளும், உயர்ந்த மரங்களும் கூடவே தொட்டுத்தொடரும் மழையும் இங்கிலாந்தின் புறநகர் பயணத்தை மேலும் மெருகூட்டுகிறது. இவையெல்லாம் அமெரிக்காவில் நாங்கள் வாழும் பகுதியில் கூட சாத்தியமென்றாலும் ஏதோ ஒரு தனித்துவமான அழகு அங்கு இருக்கிறது. புற்களின் இயற்கையான நிறமும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு வரும் கருமேகங்களும் அவ்வப்போது வந்து கொட்டி விட்டுச் செல்லும் மழையும் தூறலும் கூட காரணங்களாக இருக்கலாம்.

மலைப்பகுதியில் பயணித்துக் கொண்டு இருந்ததால் மூடுபனி வேறு சேர்ந்து கொண்டு அந்த இடத்தையே ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது. பனியில் தெரிந்தும் தெரியாமலும் இலைகளற்ற மரங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக ‘வாட்டர்கலர்’ ஓவியங்கள் போல இருக்க, மனதில் அழகாகத் தீட்டிக் கொண்டேன்😎 எல்லா இடங்களிலும் சிறிது நேரம் வண்டியை நிறுத்தி அமைதியான சூழலை அனுபவிக்கத் தோன்றும். நிறுத்துவதற்குத் தான் எங்கும் இடமில்லை. மனிதர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் இயற்கை தனித்து நின்று சொக்க வைக்கிறது. மனமும் மயங்குகிறது. நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றோம். எங்குச் செல்கிறோம்? செல்லும் வழி சரி தானா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூட அங்கு யாரும் இல்லை. ஜிபிஎஸ் தான் வழிகாட்டி. அதை மட்டுமே முழுமையாக நம்பி ஆளரவமற்ற சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தோம்.

மாலை நேரம். வானம் தெளிந்து அஸ்தமிக்கும் சூரியன் சிறிது நேரம் தலையை வெளியே நீட்டி விட்டு மறைந்து கொண்டிருந்தான். இப்பொழுது வீடுகள் நிறைந்த குடியிருப்புகள் வழியே சென்று கொண்டிருந்தோம். கலிஃபோர்னியாவின் ஃபால்சம் நகரின் புதிய குடியிருப்புப்பகுதிகளை நினைவூட்டியது. ஒவ்வொரு வீடும் கொள்ளை அழகு! மனித நடமாட்டமற்ற அமைதியான தெருக்கள். வீட்டு வாசலில் குட்டி டிரைவ் வே. அதில் சிறிய கார்கள் தான் நின்று கொண்டிருந்தது. அமெரிக்காவைப் போல டிரக்குகளும் ஜீப்களும் வேன்களும் பெரிய டிரைவ்வேக்களும் தென்படவில்லை!

சரியான பாதையில் தான் செல்கிறோமோ என்று ஈஷ்வருக்கு அடிக்கடி சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. ஆனாலும் ஜிபிஎஸ் சொல்வதை மட்டுமே நம்ப வேண்டிய நிலை. வேறு என்ன செய்வது? கடைகள் எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

சிறிது நேரத்தில் காற்றாலைகளுடன் மலைகள் தெரிய ஆரம்பித்தது. சரியான பாதையில் தான் செல்கிறோம் என்ற நம்பிக்கையும் பிறந்தது. மலையில் புற்களை நன்றாக வெட்டி ‘சம்மர் கட்டிங்’ போட்ட தலையைப் போல இருந்ததைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது😉 நெடுஞ்சாலை வழியாகச் செல்லாமல் புறநகர்ப்பாதைகள் வழியே சென்றதால் பண்ணைகள் பல கடந்து சென்றோம். அமெரிக்காவில் பண்ணைகள் என்றாலே தூரத்திலிருந்து தெரிந்து விடும். சிகப்பு வண்ணம் அடித்த பண்ணை வீடுகள், உள்ளே பால் பதப்படுத்தும் நிலையங்கள், கால்நடைகளுக்குத் தேவையான தீனிகளை வைக்க பெரிய உயர்ந்த சேமிப்புக்கிடங்குகள், விதவிதமான இயந்திரங்கள் என்று பண்ணைகளுக்கென்றே சில அடையாளங்கள் இருக்கும். இங்கோ, செம்மறியாடுகள், ஆங்கிலப் புத்தகங்களில் இருக்கும் அழகான வீட்டுப் படங்களைப் போன்ற வீடுகள், பரந்த புல்வெளிகள் என்று குறுகிய சாலைகளில் அமைந்திருந்த நிலப்பரப்பும் மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறது. சாலைகளில் பெரிய மரங்கள் இங்கு குறைவு தான். மேற்கில் கதிரவன் நித்திரை கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். மரங்கள் அடர்ந்த மலைக்குன்றுகள் வலம் வர, ஸ்காட்லாந்து எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தோம். மேகங்களைத் தழுவும் பனிமூட்டத்தில் சிக்கிக் கொண்டிருந்தான் அஸ்தமனத்துச் சூரியன்.


அழகான சாலைகளின் ஓரம் மஞ்சள் Daffodil பூக்கள் வசீகரிக்க, இலைகளுடன் மரங்கள் இருந்திருந்தால் அந்த இடமே சொர்க்கபுரி தான்! கதிரவன் மறைய, போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது வானம். அதிசயமாக ஓரிரு வண்டிகள் கடந்து சென்றது. மலைகளில் பனி இறங்கி மரங்களை அணைத்து நின்றது அழகு! குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து விட்டோம். மணி இரவு 8.30. இதோ நெருங்கி விட்டோம் ‘எடின்பர்க்’ என்று நான் நினைத்திருந்த ‘எடின்புரஃஹ்’ நகரத்தை!

அமெரிக்காவில் இருக்கும் வீடுகளை ஒப்பிடுகையில் சிறிய வீடுகள் தான்! வீடுகளின் முன் இருக்கும் புல்தரைகளும் சிறிய அளவில் தான் இருந்தது. எளிதாகப் பராமரிக்க முடியும். ஒரு குடும்பம் தங்கி இருக்க இந்த வீடுகளே போதுமானது. ஆனால், அமெரிக்காவில் எல்லாமே மெகா சைஸில் தான்😐

பெரிய சாலையில் வரிசையாகப் பெரிய வீடுகள். அதில் ஒன்றை தங்கும் விடுதியாக மாற்றிப் பராமரித்து வருகிறார்கள் ஒரு சைனீஸ் தம்பதியினர். அங்கு தான் நாங்கள் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தோம். நான்கு வாகனங்கள் இடித்துப் பிடித்துக் கொண்டு நிற்க முடியும் அளவிற்கு கார் பார்க்கிங் ஏரியா. வீட்டின் உள்ளே சென்றால் சிறிய அலுவலக அறை. நாங்கள் வந்து சேர்ந்த விஷயத்தைக் கூற, அங்கிருந்த ஆப்பிரிக்க இளைஞன் பெட்டிகளை எடுத்துக் கொண்டு மாடியிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். நான்கு அறைகள். இரண்டு பாத்ரூம்கள். மற்ற அறைகளில் ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியவில்லை. அத்தனை அமைதி. சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த பொழுது நடுஇரவில் கூச்சலும் கும்மாளமும் போட்டுக் கொண்டு அங்குத் தூங்கிக்கொண்டிருப்பவர்களைப் பற்றின பிரக்ஞை எதுவுமில்லாமல் கடந்து சென்ற குடிகார தடியர்கள் கூட்டம் நினைவிற்கு வந்தது. நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. ம்ம்ம்ம்ம்….

பெட்டிகளை வைத்து விட்டு அங்குச் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டோம். அந்த ஆப்பிரிக்க இளைஞர் படிப்பதற்காக வந்து அங்கேயே தங்கி இருக்கிறார். வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு “தாய்நாட்டை விட பரவாயில்லை. உள்ளூர் மொழி தான் பிரச்சினையாக இருக்கிறது” என்றார். விவரங்கள் அறிந்தவராகவும் நட்புடனும் ஆங்கிலத்தில் நன்றாகவும் பேசினார். காலை உணவைக் கீழே இருந்த கூடத்தில் வந்து சாப்பிடலாம். ‘சுடச்சுட’ கேட்டது கிடைக்கும். அதாவது, அவர்கள் வைத்திருந்த உணவுப்பட்டியலில் இருந்து என்றார். இருக்கு நல்ல வேட்டை என்று நினைத்துக் கொண்டேன்😜

காலாற சிறிது நடந்து விட்டு வரலாம் என்று வெளியில் வந்தால் சில அடிகளுக்குள் பேருந்து நிறுத்தம். அதைக் கடந்து சிறிது தூரம் சென்றால் வரிசையாக வீடுகள். நல்ல மேடான பகுதி தான். ஏறுவதற்குள் மலையில் ஏறுவதைப் போல மூச்சுவாங்கியது. கண்களை உறுத்தாத வண்ணங்களில் ஸ்டக்கோ சுவர்களுடன் மலர்த்தொட்டிகளுடன் வீடுகள். ஒவ்வொரு வீட்டையும் பார்த்து இது எனக்குப் பிடித்திருக்கு அது பிடித்திருக்கு என்று விலையைப் பார்த்தால் அடி ஆத்தீ! நீ அமெரிக்காவுக்கே திரும்பிப் போயிடு சிவாஜி மொமெண்ட் தான். கஷ்டம்😞

நாங்கள் தங்கியிருந்த அறை சிறியதாக😒 அடிப்படை பொருட்களைத் தவிர வேறு எதுவுமில்லை.அமெரிக்க விடுதிகளில் இருக்கும் அறைகளை விட சிறியதாக இருந்ததது😟 கஸின் கொடுத்திருந்த புளியோதரை, பழங்களுடன் அன்றைய இரவு உணவை முடித்து விட்டோம். மறுநாள் காலை சீக்கிரமே கிளம்பி நகரைச் சுற்றிப்பார்க்க வேண்டும். விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமிருக்கும் என்று ஆப்பிரிக்க இளைஞர் ஏற்கெனவே கூறியிருந்தது ஞாபகத்துக்கு வர, முழுநாளும் சுற்றிய களைப்பும் சேர, சீக்கிரமே தூங்கி விட்டோம்.

மறுநாள் எழுந்து தயாராகி சுவையான காலை உணவை உண்டு முடித்து பேருந்தில் ஏறி ‘பிரின்சஸ் தெரு’விற்குச் சென்றோம். அங்கே பேருந்துகளில் நடத்துநர் எல்லாம் கிடையாது. ஓட்டுநர் மட்டும் தான். வண்டியில் ஏறுபவர்கள் அவர் முன் இருக்கும் இயந்திரத்தில் பணத்தைப் போட்டால் அல்லது கிரெடிட் கார்டை தட்டினால் சீட்டு வருகிறது. ஓட்டுநரிடம் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்ததும் சொல்லி விடுங்கள் என்று கூறி அமர்ந்து கொண்டோம். பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களிடமும் பேசிக்கொண்டே வர, அவர்களே நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் கூறிவிட்டார்கள். அவர்களுக்கு நன்றி கூறி இறங்கி தெருவைப் பார்த்தால் அப்ப்ப்பப்ப்ப்பா!

ஒரு மைல் நீளத்தில் இருக்கும் தெருவில் புதுமையும் பழமையும் கலந்த கட்டடங்கள் வியப்பைத் தருவதாக இருந்தது. சிறு குன்றின் மேல் தெரிந்த கோட்டையோ ஸ்காட்லாந்தின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கிறது. காலம்காலமாக மன்னர்கள் ஆண்ட பூமி என்பதைப் பறைசாற்றும் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க (ஓல்டு சிட்டி)பழைய நகர கட்டடங்கள் ஒரு தெரு முழுவதும் ஆக்கிரமித்துள்ளது என்றால் அதற்கு இணையான தெருவில் நவீன வர்த்தக கட்டடங்கள் மிகுந்த ரசனையுடன் இருந்தது அழகு. கிங் ஜார்ஜ் III மகன்களின் பெயரால் அழைக்கப்படும் ‘பிரின்சஸ் தெரு’வில் அத்தனை கடைகள் இருக்கிறது! ஸ்காட்லாந்தின் தலைநகர் ‘எடின்புரஃஹ்’ என்பதாலும் சுற்றுலாவினர் அதிகளவில் வருவதாலும் எதைத்தொட்டாலும் குதிரை விலை தான். சுற்றுலாவிற்கு வந்து அங்கும் கடைகளுக்குச் சென்று ஷாப்பிங் செய்பவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கென்றும் கைப்பைகள் முதல் உடைகள் வரை ஒரு பாணி உள்ளது. அது தான் கவருகிறது போல! இங்கே விஸ்கி பிரபலம். அதற்காகவே அநேக கடைகள்! குடிமகன்களுக்குக் கொண்டாட்டமான நகரம்.

பிரின்சஸ் தெருவில் தனியார் வண்டிகளை நிறுத்த எங்கும் வசதிகள் இல்லை. பேருந்தில் செல்வது தான் நல்லது. வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு எளிதான முறையில் வந்து செல்ல ரயில்வே நிலையமும் பிரின்சஸ் தெருவின் மையத்தில் இருக்கிறது. நடந்து செல்லும் வழியில் நன்கு பராமரிக்கப்பட்ட “பிரின்சஸ் ஸ்ட்ரீட் கார்டன்ஸ்”. கோடைகாலத்தில் வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பூங்காவில் அத்தனைப் பூச்செடிகள், நிழல் தரும் மரங்கள், நடுவே நீரோடை, குழந்தைகள் ஓடிவிளையாட, பெரியவர்கள் இளைப்பாற என்று அனைத்து வசதிகளுடன் திவ்யமாக இருக்கிறது. அதைச் சுற்றிப்பார்க்கவே நிறைய நேரம் வேண்டும்! அங்கே அமர்ந்த நிலையில் “FORGET-ME-NOT ELEPHANT” எனும் குட்டி யானை வெண்கலச்சிலை. பார்த்ததும் பிடித்துப் போன சிலைக்குப் பின்னால் அப்படி ஒரு சோகமான வரலாறு😔


தெருக்களில் ஸ்காட்லாந்தின் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு ‘bagpipes’ என்னும் மரத்தாலான வாத்தியத்தை இசைப்பவர்கள் அதிகம் தென்பட்டார்கள். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் இசைக்கருவியில் இருந்து வரும் இசையும் அந்த நிலப்பரப்போடு ஒத்துச் செல்லும் விதத்தில் இருப்பது அழகு. இதிலும் ஸ்காட்டிஷ், ஐரிஷ் பேக்பைப்ஸ் என்று இருவகை இசைகள் பிரபலமாம். என்னுடன் பணிபுரிந்த மேலதிகாரி ஒருவர் ஐரிஷ் வம்சாவளியில் பிறந்தவர். நியூயார்க் தலைநகரில் உள்ளூர் விடுமுறை பேரணிகளில் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு தீயணைப்பு வீரர்களின் இசைக்குழுவினருடன் bagpipe வாசிப்பார். அவரவர் கலாச்சாரத்தைப் பெருமையுடன் அறிந்து கொண்டு புலமை பெறுவதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் அவர்களும் அதனை ரசிப்பதும் இப்படித்தான் பன்முக கலாச்சாரம் ஆரோக்கியமாக வளர்கிறது. நினைவுகள் எங்கெங்கோ செல்ல, சிறிது நேரம் இசையைக் கேட்டு விட்டு பணத்தைக் கொடுப்பவர்களும், சேர்ந்து நின்று படத்தை எடுத்துக் கொள்ளும் சுற்றுலாவினர்களின் கூட்டத்தைக் கடந்து அங்கிருந்த இடங்களில் எதைப் பார்ப்பது எதை விடுப்பது என்று தெரியாமல் மேலே தெரிந்த கோட்டைக்குச் செல்ல வழி கேட்டு நடந்தோம் நடந்தோம் நடந்து கொண்டே இருந்தோம். மேட்டில் வேறு நடந்து செல்ல வேண்டியிருந்தது.

“வாடகை வண்டியில் வந்திருக்கலாம் போல. ‘ஜல்’லுன்னு கோட்டை வாசல்ல கொண்டு வந்து விட்டுட்டுப் போறான். ம்ம்ம்ம்ம்”.

“நீ தான நடந்து ஊரைப் பார்க்கணும்னு சொன்ன?”

என்னை நானே நொந்து கொண்டு மூச்சு வாங்க ஏறிக்கொண்டிருந்தேன். ஓரிடத்தில் குறுகிய பாதையில் குறைந்தது 50 படிகளாவது இருந்திருக்கும். புகைப்படங்கள் அதிகம் எடுக்கப்பட்ட அழகான இடங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்களும் ‘க்ளிக்’கிக் கொண்டோம். புராதன கட்டடங்கள் பலவும் தற்பொழுது கல்லூரிகளாகவும் அரசு அலுவலகங்களாகவும் மாறியுள்ளது. பல நூற்றாண்டு கட்டடங்கள் சுற்றுலாவினரைக் கவரும் விதமாக சீர்கெடாமல் பராமரிக்கப்பட்டு வருவது தான் அந்நகரின் சிறப்பு.


வேடிக்கைப் பார்த்துக் கொண்டே “Edinburgh Castle” முன் வந்து சேர்ந்தோம். அப்படியொரு கூட்டம்! சில வாரங்களுக்கு முன்பே அனுமதிச்சீட்டு வாங்கியிருக்க வேண்டும். கூட்டம் குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டும் அங்கே சீட்டு கிடைக்குமாம். மற்ற நேரங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி என்றார்கள். விடுமுறை வாரத்தைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் பல இடங்களில் அரண்மனைகளைப் பார்த்து விட்டதால் ஒன்றும் ஏமாற்றமாக இல்லை. வெளியிலிருந்து பார்க்க கொள்ளை அழகு. உள்ளே இன்னும் அழகாக இருந்திருக்கும். சிறிது தூரம் வரை சென்று பார்த்துவிட்டு வர அனுமதித்தார்கள். படங்களை எடுத்துக் கொண்டோம். பல திரைப்படங்களை இங்கு எடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அருகிலேயே தங்கும் வசதிகளும் இருக்கிறது. வாடகை விலையைக் கேட்டால்…😲

வெளியே வந்தால் ‘ஸ்காட்டிஷ் விஸ்கி’ யுடன் மதிய உணவு சரியாக 12 மணிக்கு கிடைக்கும் என்று கூறி அதுவரையில் அந்தக்கடையில் கிடைக்கும் விஸ்கியின் தரம், செய்யும் முறை என்று விளக்கிக் கொண்டிருந்தார் ஊழியர் ஒருவர். சரி, ஊரைச் சுற்றி விட்டு வரலாம் என்று ‘bagpipers’களையும் மேலும் பல புராதன கட்டடங்களையும் கடந்து கற்கள் பதித்த சாலைகளில் சென்று கொண்டிருந்தோம். குப்பைகளே இல்லாத அகலமான தெருக்கள். நடுநடுவே பிரபலமானவர்களின் மிகப்பெரிய சிலைகள். மக்கள் நடந்து செல்ல ஏதுவாக, வண்டிகள் எதற்கும் அனுமதி இல்லை. நெருக்கமான கற்கட்டடங்கள். எங்கும் சுற்றுலாவினர். கைப்பேசியில் விதவிதமாக படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். சாலையின் நடுவே அந்தக்கால ‘டெலிஃபோன் பூத்’. இன்றைய தலைமுறையினருக்கு அது என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் நிச்சயம் அதிசயித்துப் பார்ப்பார்கள்!

‘ஓல்ட் டவுன்’ மற்றும் உலக பாரம்பரிய தளத்திற்குள்ளேயே, ‘ராயல் மைல்’ என்று ஒரு மைல் தூரத்திற்கு நீளும் தெருவில் கலாச்சார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அதிகமாக உள்ளது. ஒரு ‘ஸ்காட்ஸ் மைல்’ நீளம் இரண்டு அரசு குடியிருப்புகளை (கோட்டை மற்றும் ஹோலிரூட் ஹவுஸின் அரண்மனை) இணைக்கிறது, பழைய மற்றும் புதிய பாராளுமன்றங்கள், நீதிமன்றங்கள், தேவாலயங்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் பரந்த அளவிலான பூங்காக்கள், கடைகள், உணவகங்கள், கஃபேக்கள், பப்கள் என்று ஏராளமாக இருக்கிறது. அத்தனை துடிப்பான அழகான நகரத்தில் தெருவில் பிச்சை எடுப்பவர்களும் அதிகமாக இருந்தது தான் வியப்பாக இருந்தது! புலம்பெயர்ந்தவர்களைப் போல தென்பட்டார்கள். வயதானவர்கள் அதிகமாக இருந்தார்கள். வறுமை கொடியது. ம்ம்ம்ம்…

அங்கிருந்து பழமையான ‘பார்லிமெண்ட் ஸ்கொயர்’ சென்றோம். அங்கிருந்த ‘Mercat Cross’ என்ற கட்டமைப்பு அரச பரம்பரையினரின் சரித்திரத்தை உணர்த்துவது போல பல முத்திரைகளைத் தாங்கி நிற்கிறது. நகரைச் சுற்றிப்பார்க்க வழிகாட்டிகள் பலரும் உள்ளனர். அவர்களுடன் சென்றால் அங்கிருக்கும் ஒவ்வொரு இடத்தைப் பற்றின வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இங்கிலாந்தைப் போலவே இங்கும் ‘ghost tours’ என்று அழைத்துச் செல்கிறார்கள். அதனால் தான் ‘ஹாரி பாட்டர்’ மாதிரி கதைகள் அத்தனை பிரபலமாகியிருக்கிறது போலும்! அதனை வைத்தே நன்கு காசு பார்க்கிறார்கள். அந்நாட்டின் பிரபல நூலாசிரியர் ‘Sir Walter Scott’ ஐப் போற்றும் விதமாக ‘Scott Monument’ ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். ஒரு நூலாசிரியருக்காக உலகில் எழுப்பப்பட்ட இரண்டாவது பெரிய நினைவுச்சின்னம் என்பதால் மிகவும் பிரபலமான இடமாக உள்ளது.

மதிய நேரம் நெருங்க, பசிக்கவே எங்கு செல்வது என்று குழப்பம். உணவகங்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் காத்திருக்க வேண்டியிருந்தது. மதுக்கோப்பைகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு இவர்கள் எப்பொழுது சாப்பிட்டு முடிக்க? அங்கிருந்த இந்திய உணவகத்தில் மட்டும் தான் கூட்டம் இல்லை. சுவை நன்றாக இருந்தாலும் விலை தான்😲 நாங்கள் சென்ற பிறகு சுற்றுலாவினர் பலரும் அங்கு வந்துச் சாப்பிட்டார்கள். இந்திய உணவு அங்கும் பிரபலம் போலிருக்கு! அந்தத் தெருவில் மட்டும் மூன்று இந்திய உணவகங்களைப் பார்த்தோம்!

சாப்பிட்டு விட்டு மீண்டும் நடை. நடந்து நடந்து தான் இந்த ஊரைப் பார்த்து அனுபவிக்க முடியும். அதனால் கால், முட்டி, கணுக்கால் நன்றாக இருக்கும் பொழுதே சென்று விட வேண்டும்😔 சுற்றுலாப் பேருந்துகளில் அமர்ந்து கொண்டே ஊரைச் சுற்றிப்பார்க்கும் வசதிகளும் இருக்கிறது. தெருவில் ஒரு சிறுவனும் சிறுமியும் வாசித்துக் கொண்டிருந்த இசையை சிறிது நேரம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தோம். திறமைசாலிகள்! பலரும் காசுகளைப் போட்டுவிட்டுச் சென்றார்கள்.

இப்படி ஒவ்வொரு இடத்தையும் பார்த்துக் கொண்டே ராயல் மைல் சாலையின் முடிவில் இருக்கும் ‘Holyrood Palace’ வந்து சேர்ந்தோம். ஸ்காட்லாண்ட் வந்தால் இங்கிலாந்து அரசி தங்கும் அரண்மனை. ‘Edinburgh Castle’ல் ஆரம்பித்த ராயல் சாலை Holyrood Palace’ல் வந்து முடிகிறது. அருகிலேயே ஸ்காட்டிஷ் பார்லிமெண்ட் கட்டடம் உள்ளது. எதிரில் இருக்கும் மலையில் ஏறினால் அந்த தெரு முழுவதையும் உச்சியிலிருந்து பார்க்க நன்றாகத் தான் இருக்கும். இளவட்டங்கள் ஏறிக்கொண்டிருந்தார்கள். எனக்கோ நடந்து நடந்து கால்கள் சலித்துப் போயிருந்தது. இப்பொழுது மீண்டும் வந்த வழியே நடந்து சென்று பேருந்து நிறுத்தத்திற்குச் செல்ல வேண்டும். நினைத்தாலே மலைப்பாக இருந்ததால் மலை ஏறும் நினைப்பை விட்டு விட்டு நடக்க ஆரம்பித்தோம்.

பேருந்தைப் பிடித்து விடுதிக்கு வந்து சிறிது நேரம் இளைப்பாறிய பிறகு எங்கு செல்வது என்று யோசித்தோம். அயர்லாந்தில் அட்லாண்டிக் கடற்கரையோரம் பயணித்தது போல ஸ்காட்லாந்தில் செய்ய முடியவில்லை. அதனால் ஒன்றைமணிநேரத் தொலைவில் கடற்கரையோரம் இருக்கும் ‘St.Abb’s Head’ என்னும் அழகிய கிராமத்திற்குச் சென்று வர தீர்மானித்தோம். அங்கு எங்களுக்கு இனிய அனுபவம் காத்திருக்கும் என்று அப்பொழுது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...