Tuesday, February 6, 2024

விவாகரத்தான பெண்கள் Vs பொதுமக்கள்


'நீயா நானா'வில் நடந்த "விவாகரத்தான பெண்கள் Vs பொதுமக்கள்" அத்தியாயத்தில் கூமுட்டைத்தனமாக ஒருவர் "இந்த மாதிரி பெண்கள் சமூகத்திற்கு நல்லதல்ல" என்று கூறினார். மணமுறிவால் பாதிக்கப்பட்ட பெண்களால் இளைய சமுதாயமும் கெட்டு விடும் என்று எப்படித்தான் பேச முடிகிறதோ? உண்மையிலேயே பாதிக்கப்பட்ட பெண்களின் துயரத்தை அறியாத மூடன். குற்றம் சொல்வதாக இருந்தால் அந்தப் பெண்களின் நிலைமைக்குக் காரணமான ஆண்களைத் தானே குற்றம் சொல்ல வேண்டும்? எடுத்தவுடன், "மணமுறிவால் பாதிக்கப்பட்ட பெண்கள் தனியாக வாழக் கற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. தவறான முன்மாதிரியாக இருக்கிறார்கள்" என்று பொதுவில் வந்து பேசுகிறார். அவரும் அவர் மனைவியும் 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டு செல்வது போல் ஏன் இந்தப் பெண்கள் அவர்கள் கணவர்களுடன் சமாதானம் செய்து கொண்டு செல்லவில்லை என்று கேட்கிறார்.

இப்படித்தான் பல ஆண்களும் பெண்களின் மீது குறைகளைக்கூறி ஆண் சமுதாயத்தைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள்.

கணவன், மனைவி உறவுக்குள் நடக்கும் சண்டைகள், மனவருத்தங்கள், கோபதாபங்கள் வெளியுலகத்திற்குத் தெரிய வரும்பொழுது மேற்சொன்ன நபர்களைப் போன்றவர்கள் உண்மையை உணராமல் கூறும் தவறான அறிவுரைகள் முடிவில் இருவரையும் வெகுவாகப் பாதிக்கிறது. திருமணம் செய்து கொண்ட பலரும் சேர்ந்து மகிழ்ச்சியாக குடும்பமாக வாழ் வேண்டும் என்று தான் வாழ்க்கையைத் துவங்குகிறார்கள். சில குடும்பங்களில் ஆணின் அதிகாரப்போக்கோ பெண்ணின் அலட்சியப்போக்கோ அல்லது அவர்களது குடும்பத்தார்களின் இடையீடோ அல்லது வேறு பல எதிர்பார்ப்புகளோ நிர்ப்பந்தங்களோ மணமுறிவிற்குக் காரணமாகி விடுகிறது.

எளிதில் பெண்களைக் குற்றம் சொல்பவர்கள் ஆண்களைச் சொல்வதில்லை. பிரச்சினை எங்கிருந்து துவங்கியது? எதனால் ஏற்பட்டது? சரி செய்யக்கூடிய விவகாரங்களா? இல்லையென்றால் பிரிவில் தான் பாதிக்கப்பட்டவருக்கு நிம்மதியா? என்று யோசித்துப் பார்ப்பதற்குள் பணம், உறவுகள், அந்தஸ்து என்று பிரிவினையை ஏற்படுத்துவதும் நடக்கிறது.

இந்த விவாதத்தில் பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் தங்களின் சுயசார்பில் குழந்தைகளை வளர்த்தாலும்பெற்றோர்களின் பிரிவால் பல மனவலிகளைச் சுமந்ததைக் கூறினார்கள். ஆம், மணமுறிவில் பாதிக்கப்படுவது ஒருவர் மட்டுமல்ல. அவர்களின் குழந்தைகளும் தான். அவர்கள் அனுபவிக்கும் துயரங்களும் ஏராளம். அன்புடன் அரவணைத்துச் செல்லும் குடும்பங்கள் அமைந்து விட்டால் நல்லது. இல்லையென்றால் நித்தம் நித்தம் துயரம். மனக்கசப்பு. கோபம். என்று எல்லா நிலைகளிலும் அவர்கள் வெளிப்படுத்துவார்கள். அமெரிக்காவில் பள்ளிகளில் இத்தகைய குழந்தைகளைக் கையாள, அறிவுரை கூற குழந்தை உளவியல் நிபுணர்கள் இருக்கிறார்கள். பெற்றோர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறார்கள்.

இந்தியாவில் இன்னும் அந்த அளவிற்குப் பள்ளிகளோ,அரசுகளோ குழந்தைகளின் மனநலன் மீது அக்கறை கொள்வதில்லை.

இந்த விவாதத்தில் பொதுமக்கள் சார்பில் பேசிய பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் வலியை உணராதவர்களாக பேசியது போல் தோன்றியது. நம் சமூகம்எப்படிப்பட்டது என்று புரிந்தும் தெரிந்தும் தெரியாதது போல் பேசினார்கள்.

மணமுறிவில் பாதிக்கப்படுவது பெண்கள் அதிகம் என்றாலும் ஒரு சில நல்ல ஆண்களும் அவர்களின் மனைவிகளால் அதிகம் மனஉளைச்சலுக்கு ஆள்கிறார்கள் என்பதையும் பாதிக்கப்பட்ட பெண்களைப் போலவே விவாகரத்தான ஆண்களின் தர்மசங்கடங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். வலி பொதுவானது. அதில்ஆண், பெண் பேதமில்லை.

சில பெண்கள் கூறியது போல, பிரச்சினையின்பொழுது உடனிருந்த குடும்பம் அந்தப் பெண்கள் தனியே வந்தவுடன் ஒரு கட்டத்தில் விலகிச் செல்ல, ஏன்டா திருமண பந்தத்தை விட்டு வெளியே வந்தோம் என்று தோன்றுவதும் நடந்து கொண்டு தானிருக்கிறது. மீண்டும் சேர வாய்ப்பு கிடைத்தால் சேர்ந்து விடுவேன் என்று கூறிய பெண்களுக்கு அன்றைய தேவை எல்லாம் சில காலம் பிரிந்திருந்து வாழ்ந்திருத்தல் மட்டுமே. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் மேலும் புரிந்து கொள்ள சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கும். தவறு யார் மீது என்று சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க வசதியாக இருந்திருக்கும். ஆனால், சுற்றியிருப்பவர்களின் தலையீட்டால் அநாவசியப் பிரச்சினைகள் வளர்ந்து ஒருவரை ஒருவர் வெறுக்கும் அளவிற்குச் சென்று பின் வருந்திக் கொண்டிருக்கும் நிலைமைக்கு ஆளாகிறார்கள்.

எதையும் ஆராயாமல் அறிவுரைகளை அள்ளித் தெளிப்பதை முதலில் மக்கள் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான கவுன்சிலிங் அளிக்க வேண்டும். அதுவும் பலனளிக்கவில்லையென்றால் தான் பிரிவைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பலருக்கும் பிரிவு ஒன்று தான் நிரந்தர தீர்வாக இருக்கும். குறிப்பாக, மனநோயாளிகளைத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு. இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் நரகம் தான்.

இன்று பெண்களும் படித்து பணியில் சேர்ந்து சுயமாகச் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் அளவிற்கு முன்னேறி விட்டதால் சைக்கோக்களின் சித்திரவதைகளுக்குப் பலியாகாமல் தப்பிக்க முடிகிறது.

என்ன ஒன்று? சமூகம் என்று சொல்லிக்கொண்டு திரியும் சில மக்கள் தான் இன்னும் வளராமல் கூமுட்டைத்தனமாகப் பேசிக்கொண்டு காயமுற்றவர்களை (ஆண்/பெண்) மேன்மேலும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல விவாதம்.

இனியாவது ஆணோ, பெண்ணோ விவாகரத்தாகியிருந்தால் அவர்களின் வலிகளை உணர்ந்து நடந்து கொள்ளும் மனிதர்களாக சமூகம் மாறட்டும். அவர்களுக்கு ஆதரவாக மனிதத்துடன் நடந்து கொள்ள முயற்சிப்போம்.



No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...