Monday, February 26, 2024

அமேசிங் பிரிட்டன் -4 - எடின்புரஃஹ் - செயின்ட் ஆண்ட்ரூஸ் பயணக்குறிப்புகள்


எடின்புரஃஹ் - செயின்ட் ஆண்ட்ரூஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.

எடின்புரஃஹ் - செயின்ட் ஆண்ட்ரூஸ் பயணக்குறிப்புகள்

“யுனைடெட் கிங்டம்” என்றழைக்கப்படும் பிரிட்டனின் அழகே அதன் மாறுபட்ட நிலப்பரப்பு தான். அயர்லாந்தில் கடலும் பாறைகள் நிறைந்த மலைகளும் சிறிய வீடுகளும் மனதையும் கண்களையும் நிறைத்தால் ஸ்காட்லாந்தில் பசுமை போர்த்திய மலைகளும் வெண்நுரையுடன் கடற்கரைகளும் ஏகாந்தமாக இருக்கிறது. எடின்புரஃஹ் நகரிலிருந்து ஒரு மணிநேரத் தொலைவில் ‘St.Abb’s Head’ என்னும் கடற்கரையோர கிராமத்திற்குச் சென்று வருமாறு நாங்கள் தங்கியிருந்த விடுதியின் காப்பாளர் ஏற்கெனவே கூறியிருந்தார். பெரும்பாலும் பயண நிறுவனங்கள் நாட்டின்/நகரின் முக்கிய இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்வார்கள். நமக்குப் பிடித்த இடங்களுக்கு அல்லது நாட்டின் அரிய அழகுப்பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் நாமே வண்டியை ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. ஒட்டிக்கொண்டுச்செல்வது அதைவிட நல்லது.அதனால் இந்த இடத்தைத் தவறவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

கருமேகங்கள் வான் உலா வர, சிறிது தூறலும் சேர்ந்து கொண்டது. சாலையோரங்களில் இதுவரையில் கண்டிராத அடர்ந்த மஞ்சள் நிறப்பூக்கள் ஆவாரம் பூக்களை நினைவுறுத்தியது. மழைக்காலத்தின் அழகைச் சுமந்து நின்ற மலைகளும் தொடர, காலையிலிருந்து மதியம் வரை பிரின்சஸ் தெருவில் நடந்த களைப்பே தெரியாத அளவிற்குப் போக்குவரத்து நெரிசல் இல்லாத ‘குளுகுளு’ சாலைப் பயணம். கடற்கரையோரத்தை நெருங்கும் பொழுது ‘டண்பர்’ நகரம் தென்பட்டது. காசா? பணமா? உள்ளே சென்று பார்க்கலாம் என்று வண்டியை ஒட்டிக் கொண்டு அமைதியான தெருக்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தோம். புதிதாக கட்டப்பட்ட அழகான பெரிய வீடுகள். பழமையைப் பறைசாற்றும் பழைய கல் வீடுகள் என்று ரம்மியமாக இருந்தது. அங்கிருந்தவர்களிடம் கடற்கரைக்குச் செல்லும் வழியைக் கேட்டுக் கொண்டு வந்தால் ஒரு தெருவில் நுழைந்தவுடன் சில அடிகளில் கடல் தெரிந்தது!

ஓரிருவர் நடைப்பயணம் சென்று கொண்டிருந்தார்கள். ஸ்காட்டிஷ் எல்லையில் இருக்கும் அழகிய நகரம் இது. கடற்கரையோர வீடுகள் எல்லாம் அமெரிக்க கடற்கரையோர வீடுகளைப் போல பிரம்மாண்டமாக இல்லாமல் எளிமையாக அதே நேரத்தில் ஒருவித அழகுடன் இருந்தது. ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கண்டால் யாருக்குத் தான் பிடிக்காது? ஓடிச்சென்று காலை நனைத்து நுரை பொங்க ஓடிவரும் அலைகளோடு விளையாட ஆசை இருந்தாலும் ‘சில்ல்ல்’லென்றிருந்த தண்ணீர் தொலைவிலேயே நிறுத்தி விட்டது😒 கடற்கரைக்கென்றே ஒரு வாசம் உண்டு. முகர்ந்தும் முகராமலும் கொண்டே கரையோரம் ஒதுங்கியிருந்த கடற்பாசி, ஓடுகளைத் தாண்டி சிறிது தூரம் மணலில் நடந்தோம். இளம்பெண்கள் இருவர் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தவர்களைச் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் மட்டுமே அப்பொழுது அங்கு இருந்தோம். பொங்கி எழும் அலைகளின் ஓசையைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. கடல் மேல் அலையாடிக் கொண்டிருந்த பறவைகள் அழகு😍

கரையின் மீதிருந்த வழிகாட்டியில் ‘ஜான் முய்ர் லிங்க்’ என்று எழுதப்பட்டிருந்தது. ஸ்காட்டிஷ் அமெரிக்கரான ‘ஜான் முய்ர்’ டண்பர் நகரில் பிறந்தவர். இயற்கை ஆர்வலர். காடுகளை, மலைகளைக் காத்திட போராடியவர். பல புத்தகங்களை எழுதியவர். பிரபலமானவர். அவருடைய பெயரில் கலிஃபோர்னியாவில் பெரிய பூங்காவே இருக்கிறது. அவருடைய பிறந்த நாடான இங்கும் அவரைக் கொண்டாடும் விதமாக நாட்டின் இயற்கைப்பகுதிகளைக் கண்டுகளிக்கும் விதத்தில் ‘ஜான் முய்ர் லிங்க்’ ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அதன் வழியே பயணித்தால் நாட்டின் அனைத்துச் சிறப்புமிக்க இயற்கைவளங்களையும் பூங்காக்களையும் கண்டுகளிக்கலாம். அதற்குப் பல மாதங்கள் தங்கி இருக்க வேண்டும் அல்லது உள்ளூர் ஆட்களாக இருக்க வேண்டும். இப்போதைக்கு இது போதும் என்று அங்கிருந்து நகர மனமில்லாமல்

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
கடல் மட்டுமா அழகு நுரைபொங்கும் அலை கூட அழகு
கரை மட்டுமா அழகு கரையோரவீடுகளும் அழகு…. பாடிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தோம்.

திட்டமிடாத பாதைகளில் செல்லும் பொழுது நாம் காணும் மனதிற்கினிய காட்சிகள் தான் பயணங்களைச் சுவாரசியமாக்குகிறது. நல்லவேளை! இந்த ‘Dunbar’ நகரைத் தவற விடவில்லை என்று நினைத்துக் கொண்டோம்.இன்னும் எத்தனை இடங்களில் நிறுத்தப்போகிறோம் என்று தெரியவில்லை. வழியெங்கும் அழகான காட்சிகள் கவர்ந்து கொண்டே இருந்தது. ஒரு வண்டி மட்டுமே செல்லக்கூடிய மலைப்பாதையில் நடந்து செல்லும் மனிதரைக் கண்டு அதிசயித்தோம்😀 மரங்களற்ற பகுதியில் கற்சுவர்கள் சூழ வீடுகள் கொள்ளை அழகு! தூரத்திலிருந்தே கடல் தெரிய, மலையின் உச்சிக்குச் சென்று கொண்டிருந்தோம்.

இப்பொழுது மக்கள் நடமாட்டம் சிறிது அதிகமானது போல் இருந்தது. கையில் surfing boardஐச் சுமந்து கொண்டு நீச்சல் உடையில் மக்களைப் பார்த்தவுடன் தெரிந்து விட்டது. எங்களுடைய அடுத்த மண்டகப்படி இங்கே தான் என்று. பலரும் வண்டியை நிறுத்தி அங்கேயே உடைமாற்றிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ‘Pease Bay Leisure Park’ அறிவிப்புப்பலகையைக் கடந்து கார் நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தினோம். நாங்கள் இருவர் மட்டும் தான் வெளிநாட்டினர். அங்கிருந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ளூர் ஆட்கள் தான். கடல் அலையில் சறுக்கி விளையாடுவது இவர்களின் பொழுதுபோக்கு போல😲 கடலில் கால் வைக்கவே எனக்கு நடுக்கமாக இருந்தது. காட்டான்கள்! வாளியில் தண்ணீர் பிடித்து வெயிலானாலும் சுடு தண்ணீரில் குளித்த பரம்பரை😄😇 இந்த விளையாட்டெல்லாம் எனக்கில்லை எனக்கில்லை😂 ஆனால் வேடிக்கைப் பார்க்கப் பிடிக்கும். நகரத்திலிருந்து ஒதுக்குப்புறமான இடத்தில் இருப்பதும் வார இறுதி என்பதாலும் நல்ல கூட்டம். பிரபலமான இடம் போலிருக்கிறது!

அங்கே விடுமுறையில் தங்கிச் செல்ல ‘மொபைல் ஹோம்ஸ்’ என்றழைக்கப்படும் அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக வீடுகளை விற்றுக்கொண்டிருந்தது நிறுவனம் ஒன்று. அந்த வீடு ஒன்றை வாங்கி கரையோரம் அதற்கென இருக்கும் இடத்தில் வைத்துவிட்டால் விடுமுறையை இன்பமாக கழி(ளி)க்கலாம் . கிட்டத்தட்ட நகரத்தில் வாழ்வதைப் போல தங்குபவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் கூட இருந்தது! விலை அதிகம் தான்! இதற்குப் பதிலாக அவ்வப்பொழுது அங்கிருக்கும் வாடகை வீடுகளில் தங்கிக்கொள்ளலாம். விவரமானவர்கள், வசதியானவர்கள் இந்த வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டுச் சம்பாதித்துக் கொள்ளலாம். காசிருந்தால் சொகுசு வாழ்க்கை வாழ முடியும். எங்கும்ம்ம்ம்ம்ம்….

யோசித்துக் கொண்டே கடந்து வந்தால் கடற்கரையில் நின்று கொண்டிருந்தோம். கருமேகங்கள் எங்கே மறைந்தனவோ? நீல நிற வானம். அதன் பிரதிபலிப்பில் கடல் கொள்ளை அழகு. டண்பரை விட இங்கே அலைகள் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. இதை விட என்ன வேண்டும் அலையில் சறுக்கி விளையாடுபவர்களுக்கு? ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அலையின் போக்கில் வளைந்து வளைந்து லாவகமாக விளையாடுவதைப் பார்த்தால் பயமும் வருகிறது! ஆனால் பயமின்றி சிறு குழந்தைகளும் டால்ஃபின்களைப் போல அலையாடிக் கொண்டிருந்தார்கள். கடலை ஒட்டியிருந்த மலைமுகடுகள் அயர்லாந்தின் ‘Cliffs of Moher’ஐப் போல இருந்தது. ஐம்பூதங்களும் ஆட்சி செய்து கொண்டிருந்த அழகு நேரம் அது! அலையாடுபவர்களையும் மலைகளையும் அலைகளையும் பார்த்துக்கொண்டு சிறிது தூரம் நடந்தோம். மலை மேலே நடந்து செல்லும் பாதை ஒன்றும் இருந்தது. எங்கே ‘ஹைக்கிங்’ போகலாமா என்று கேட்டு விடுவாரோ என்று பயம். நல்ல வேளை! ஈஷ்வர் அப்படியேதும் கேட்கவில்லை. அங்கிருந்து செல்ல மனமில்லாமலே நகர வேண்டியிருந்தது.

எங்களின் மலைப்பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் மூடுபனி பவனி வர, காட்சிகள் மறைந்து காற்றாடிகள் மங்கலாகத் தெரிய, ஒருவழிப்பாதை நீண்டு வளைந்து வளைந்து சென்று கொண்டே இருந்தது. வழியில் பெரிய காய்கறித் தோட்டங்கள். பண்ணைகளில் மாடுகளும் ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்ததை நின்று வேடிக்கைப் பார்த்தால், “யாரடா இந்த மனிதர்கள்?” என்று எங்களை வேடிக்கைப் பார்க்க ‘செண்பகமே செண்பகமே’ கூட்டம் சாலையை நோக்கி நகர்ந்து வந்தது. அத்தனையும் ‘கொழுகொழு’ மாடுகள்! இயற்கையாக விளைந்த புற்களை உண்டு வாழும் கால்நடைகளின் திரட்சியில் தெரிந்தது ஆரோக்கியம் !

ஒருவழியாக நாங்கள் பார்க்க வந்திருந்த ஊரை வந்தடைந்தோம். அமைதியான மீனவ கிராமம் அது! வீடுகள் எல்லாம் கொள்ளை அழகு! மீனவர்கள் என்றாலே ஏழ்மையும் குடிசை வீடுகளும் தான் நமக்குத் தெரியும். நகரத்தில் இருக்கும் சகல வசதிகளுடன் இங்கும் வீடுகள் இருக்கிறது!

குப்பைகள் எதுவுமில்லாத தெருக்களில் வரிசையாக வீடுகள். விடுமுறை நாள். மாலை நேரம் வேறு என்பதால் கடைகள் மூடியிருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு சிறிது தூரம் நடந்து கீழே இறங்கினால் மீன்பிடி படகுகளுடன் கடல். நண்டு, லாப்ஸ்டர் நிறைய கிடைக்கும் போல. அதைப்பிடிக்கும் கூடைகளைச் சங்கிலிகளில் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். நடுநடுவே கரடுமுரடான பாறைகள். சீரும் அலைகளுடன் ‘St.Abb’s Head’ மனதைக் கொள்ளை கொண்டது. கடற்பறவைகள் ஆனந்தமாக உலாத்திக்கொண்டிருந்தது. ‘க்ளிக்’. ‘க்ளிக்’. உள்ளூர்க்காரர் ஒருவர் அவருடைய வேனில் தங்கி அங்கேயே கேம்ப் போட்டு தனிமையை அனுபவித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார் ஒருவர்😊

பனியில் கடற்பாறைகள் மங்கலாகத் தெரிய, அக்கம் பக்கம் யாருமில்லாத பூலோகம் ஏகமாக இருந்தது😍 கரையைத் தொட்டுத்தொட்டுச் செல்லும் அலைகள் பாடும் ராகம் மட்டுமே ஆக்கிரமித்திருந்த அந்த இடத்தை வளைத்து வளைத்துப் படங்களையும் வீடியோக்களையும் எடுத்துக் கொண்டோம். ‘அவென்ஜர்ஸ் எண்ட்கேம்’ படத்தில் இந்த இடம் வருகிறது. (https://www.youtube.com/watch?v=Pl9lW_oxQHo)

கோடைக்காலத்தில் பூக்களும் பறவைகளும் வண்ணத்துப்பூச்சிகளும் நிறைந்து இருக்கும் என்று அறிந்து கொண்டோம். மலையேற்றம், கடல் விளையாட்டு, இயற்கை ஆர்வலர்களுக்கு நல்ல இடம். அமைதியான நேரத்தில் அங்குச் சென்றதும் கூட நல்லது தான்.

அங்கிருந்து திரும்பிச்செல்லும் பாதை வேறு வழியில் செல்கிறது. இரு வண்டிகள் எங்களைக் கடந்து சென்ற பிறகு நாங்கள் இருவர் மட்டுமே அந்தச் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தோம். வண்டியை நிறுத்தி விட்டு சிறிது தூரம் நடந்து செல்ல, மழைக்காற்று செல்லமாக வருடியது. ‘பச்சைப்பசேல்’ மலை மீதிருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கடல் தான். மாலைச்சூரியன் மேகச்சீலைக்குள் ஒளிந்து கொண்டிருந்தான். வெகு தூரத்தில் தனியே இருந்த வீடு அந்தச் சூழலுக்கு மேலும் அழகைச் சேர்த்துக் கொண்டிருந்தது. வார்த்தைகளால் விவரிக்க இயலாத இயற்கை அழகு அங்கே குடி கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. அங்கு வாழ்பவர்கள் பாக்கியசாலிகள்!

மழைத்தூறல் ஆரம்பிக்க, மலையை விட்டு கீழிறங்கி எடின்புரஃஹ் திரும்பினோம். குட்டையான சுற்றுச்சுவர்களுடன் வழியில் தெரிந்த வீடுகள் டப்ளின் நகரை நினைவூட்டியது. வரும் பொழுதே இரவு உணவை கடையில் வாங்கிக்கொண்டோம்.அருகில் குட்டியாக ஒரு காஸ் ஸ்டேஷன். வண்டி உபயோகிப்பவர்கள் குறைவோ? பேருந்துகளில் பயணிப்பவர்கள் அதிகம் இருக்கலாம். அமெரிக்கா வந்தால் இந்நாட்டு மக்களுக்கு மயக்கமே வந்து விடும்😂

விடுதிக்குத் திரும்பி அடுத்த நாள் செல்லவிருக்கும் ஊரைப் பற்றின தகவல்களையும் பார்க்க வேண்டிய இடங்களையும் குறித்துக் கொண்டோம். மழையில்லாத நாட்கள் அபூர்வம் தான் போலிருக்கு! எப்படி இருந்தாலும் திட்டமிட்டபடி செல்வது என்று தீர்மானித்து ஆனந்தமாக உறங்கி விட்டோம். மறுநாள் காலையில் சுவையான காலை உணவை விடுதியில் உண்டு ‘St.Andrews’ நோக்கிய பயணத்தைத் துவங்கினோம். பை, பை எடின்புரஃஹ்💖

பெட்ரோல் போடலாம் என்று வண்டியை நிறுத்தி விலையைப் பார்த்தால்…அய்யோடா! எப்படித்தான் இங்கே வாழ்கிறார்களோ😟அமெரிக்காவில் தான் விலை குறைவு போலிருக்கு! நான் யோசித்துக் கொண்டிருக்க, ஈஷ்வர் என்ன செய்தும் பெட்ரோல் போட முடியாமல் அருகிலிருப்பவர் மட்டும் எப்படிப் போட முடிந்தது என்று பார்த்துக் கொண்டிருந்தார். அவர் திண்டாடுவதைப் பார்த்து அருகில் இருந்தவர் வண்டியைக் கடையை நோக்கி நிறுத்தினால் மட்டுமே பெட்ரோல் போட முடியும் என்று விளக்கிய பின்னர் தான் எங்களுக்குப் புரிந்தது. என்னவோ போடா மாதவா! இப்படியெல்லாம் கூட இருப்பார்களா? என்ன மாதிரியான லாஜிக் என்று தெரியவில்லை. ஆனால், அந்த மனிதர் பேசியதைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும் நன்றாக இருந்தது. ஸ்காட்டிஷ் மக்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்💕ஒருவித ராகத்துடன் பேசுகிறார்கள்.

மழைத்தூறல் ஆரம்பித்து விட்டது. குறுகிய சாலையில் மழையும் துணைக்கு வர இனிதே தொடர்ந்தது எங்கள் பயணம். எங்கும் நிறுத்தாமல் சென்றால் ஒண்ணேகால் மணிநேரத்தில் St.Andrewsஐச் சென்றடைந்து விடலாம். நொறுக்குத்தீனிகள் நிறைய வாங்கிக்கொண்டோம்😋😋😋

வழியெங்கும் இயற்கை தாலாட்டுகிறது. கடலோரத்தில் அமைந்துள்ள மிக அழகான ஊர் இது. மழை நிற்பதும் தொடருவதுமாய் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் என்று தான் அங்கு சென்றோம். பிறகு தான் தெரிந்தது அது கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நிறைந்த ஊர் என்று. முதலில் நாங்கள் சென்ற இடம் St.Andrews Cathedral. திங்கட்கிழமை ஆதலால் வண்டியை நிறுத்த இடத்தைத் தேடி அலைய வேண்டியிருந்தது. சுற்றிச்சுற்றி வந்து எப்படியோ தேவாலயத்திற்கு அருகிலேயே இடம் கிடைத்து விட்டது. தெருக்களில் வண்டியை நிறுத்த கப்பம் கட்ட வேண்டும்! அமெரிக்காவிலும் இதே கதை தான்.

மழையும் நின்று விட்டிருந்தது. St.Andrews Cathedral, ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய மிடீவல் காலத்து தேவாலயம். உள்ளே சென்று பார்க்க 7.50பவுண்ட்ஸ் என்று தகவல் பலகையில் போட்டிருந்தார்கள்😧 உள்ளே சென்றால் கல்லறை இருந்தது. என்ன கொடுமைடா மாதவா! ஏமாற்றமாகி விட்டது எனக்கு😞 அயர்லாந்திலும் ஊருக்கு வெளியே அநேக தேவாலயங்கள் சிதைந்த நிலையில் கல்லறைகளாக மாறிவிட்டிருந்தது நினைவிற்கு வந்தது.

1158ல் கட்டப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் அங்கே இருந்ததற்கான அறிகுறியாக உயர்ந்த கோபுரங்கள், நுழைவாயில், சுற்றுச்சுவர்கள் உடைந்த நிலையில் பார்க்கவே பரிதாபமாக. முடிந்தவரையில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். யார் கீழே படுத்திருக்கிறார்களோ என்று உள்ளே நடந்து செல்லவே பயமாகத் தான் இருந்தது. மயான அமைதி தான்! அங்கிருந்து ‘St.Andrews Castle’க்கு நடந்தே சென்று விடலாம். ஃபய்ஃப் (Fife) என்ற ஊரில் அமைந்திருக்கும் 450 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட கோட்டை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. பிஷப்பின் தங்குமிடமாக, அரண்மனையாக, சிறைச்சாலையாக ஒவ்வொரு காலகட்டத்தில் இருந்துள்ளது. கடற்கரையோரம் அமைந்துள்ள அழகிய கோட்டையின் உள்ளே கோட்டை முற்றுகையிடப்பட்டதை, மிடீவல் போர்க்காலங்களில் நடந்த கொலை, சூழ்ச்சிகளை மிக அழகாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இதன் கீழே ஒரு சுரங்கமும் இருக்கிறது.

உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் முறையான தகவல்களை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறையினருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதில் மேற்கத்தியர்களை அடித்துக் கொள்ளவே முடியாது. இந்தியர்கள் நாம் மறந்துவிட்ட மிக முக்கியமான வரலாற்றுப்பிழை. அதனால் தான் பொய்களைச் சொல்லி நம்மை எளிதில் ஏமாற்றி வரலாறு என்று உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் படிக்க வைக்கிறார்கள். இனியாவது நாம் விழித்துக் கொள்வோமோ? இப்படித்தான் எதையாவது ஒன்றைப் பார்த்தால் நம் நாட்டில் கூடச் செய்திருக்கலாமே என்று தோன்றும்.

பேசிக்கொண்டே வண்டியை எடுத்துக் கொண்டு நகரின் மையத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களைக் காணச் சென்றோம். மீண்டும் வண்டியை நிறுத்த இடம் தேடி அலைந்து தொலைவில் நிறுத்தி விட்டு நடந்து வருகையில் குறுகிய தெருக்களையும் பிரமிக்க வைக்கும் வகையில் பழமையைச் சுமந்து நிற்கும் கட்டடங்களையும் காண அதிசயமாக இருந்தது. புராதன நகரம். இங்குள்ள பல்கலையில் தான் இங்கிலாந்தின் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட் மிடில்டனும் சந்தித்துக் கொண்டார்களாம். ‘தி கிரௌன்’ நெட்ஃப்ளிக்ஸ் தொடரில் காண்பித்தார்கள். அட! நாம் சென்று வந்த ஊராச்சே என்று மகிழ்ச்சியாக இருந்தது.

மாணவர்கள் இருக்கும் இடம் என்றால் இளமை ஊஞ்சலாடத்தானே செய்யும்😄 கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பட்டாளம் எங்கும். அதுவும் நம்மவர்கள் நிறைய கண்களில் பட்டார்கள்! 2022ல் ‘ஸ்காட்டிஷ் கறி அவார்ட்’ வாங்கிய ‘மரிஷா’ இந்திய உணவகம்! சப்வேயில் சிக்கன் டிக்கா கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இங்கும் இதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் ஏராளமான கோட்டைகளும் தேவாலயங்களும் இருக்கிறது. அங்கே ‘அவுட்லாண்டெர்’ தொலைக்காட்சித் தொடரை எடுத்திருக்கிறார்கள். நாங்கள் பார்த்து ரசித்த இடங்களைத் திரையில் நிச்சயமாக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதற்காகவே பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்துள்ளேன். ‘கால்ஃப்’ விளையாட்டு இங்கு தான் துவங்கியிருக்கிறது. அதன் தொடர்பான அருங்காட்சியகங்களும் இருக்கிறது. இந்த விளையாட்டை விளையாடுபவர்களுக்குப் பிடிக்கலாம். எங்கு பார்த்தாலும் மனத்தைக் கவரும் காட்சிகள் ஏராளம் இங்கு கொட்டிக்கிடக்கிறது. பயணிகள் பலரும் வந்து செல்லும் பிரபலமான ஊராக இருப்பதில் வியப்பேதுமில்லை.

இங்கிருந்து மூன்றரை மணி நேரத்தில் ‘இன்வெர்னஸ்'(Inverness) என்ற ஊருக்குப் பயணம். வழியில் பல இடங்களில் நிறுத்திச் சென்றாலும் கூட இரவு 9 மணிக்குள் சேர்ந்து விடலாம். இருட்டுவதற்குள் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவுடன் கிளம்ப , மழையும் சேர்ந்து கொண்டது.

இந்தப் பயணத்தில் ஒன்று மட்டும் நன்கு புரிந்தது. ஸ்காட்லாந்தைச் சுற்றிப் பார்க்க நாமே வண்டியை ஒட்டிச் செல்வதே நல்லது. சிறிய நாடாக இருந்தாலும், ஸ்காட்லாந்தின் ஒவ்வொரு மூலைக்குப் பின்னாலும் ஆச்சரியங்களும் வசீகரங்களும் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு இடமும் தந்த இனிய அனுபவத்துடன் ‘இன்வெர்னஸ்’ நோக்கிய பயணம் தொடர்ந்தது.

No comments:

Post a Comment

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்

மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...