ஸ்மார்ட்போன்கள் மூலம் தகவல்தொடர்பு, தகவல் அணுகல், டிஜிட்டல் கல்வியறிவு போன்ற மறுக்க முடியாத பலன்களை பெற முடிகின்ற அதே வேளையில், கவனச்சிதறல், சைபர்புல்லியிங் தொடர்பான சவால்களையும் அவை முன்வைக்கின்றன.செல்ஃபோன்களால் பள்ளி மாணவர்களின் கவனம் சிதறுகிறது. அதனால் மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ஃபோன்கள் கொண்டு வருவதைத் தடை செய்வது பற்றி நியூயார்க் மாநில ஆளுநர் கேத்தி ஹோக்குல் பள்ளி தாளாளர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக ஆசிரியர்கள் தரப்பில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும். மாணவர்கள் முறைப்பார்கள். ஆனால் வழக்கம் போல "சில பெற்றோர்கள்" தனிமனித சுதந்திரம், நேந்திரம்பழம் என்று குழப்புவார்கள்.
கைப்பேசி இல்லாத காலங்களை இன்று நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நம் வாழ்க்கையுடன் இரண்டற கலந்துவிட்டிருக்கிறது கைப்பேசிகள். வெளியில் செல்லும் பொழுது எடுத்துச் செல்ல வேண்டிய மறக்க முடியாத பொருட்களில் ஒன்றாகி சதா சர்வ காலமும் நம்முடனே ஒட்டிக்கொண்டித் திரிகிறது. பெரியவர்கள் என்றால் ஓகே. ஆனால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இது அவசியமா? அதுவும் வகுப்பறைகளில் என்ற விவாதம் நியூயார்க் மாநில கல்வித்துறையில் சில நாட்களாகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இன்று வானொலியில் நேயர் ஒருவர் தன்னுடைய 10 வயது மகனுக்கு செல்ஃபோன் கொடுக்கலாமா என்று கேட்டார். அதற்குப் பலரும் ஆறாம் வகுப்பிலிருந்து கொடுக்கலாம். வீட்டில் மேல்நிலைப்பள்ளி செல்லும் வயதில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய இளைய உடன்பிறப்புகள் வெகு சீக்கிரத்தில் கைப்பேசியைக் கேட்டு அடம்பிடிப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. நிச்சயமாக இந்த 'தொல்லைபேசி'கள் மனதளவில் குழந்தைகளிடையே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது உண்மை. இந்தக்கால பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சங்கடமும் இது தான். தவழும் வயதிலிருந்தே குழந்தைகள் இதன்பால் ஈர்க்கப்பட்டு வருவதும் அவர்களைக் கையாளத் தெரியாமல் பெற்றோர்கள் அவதிப்படுவதும் கண்கூடாகத் தெரிகிறது.
செல்போன்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இடையே ஒரு முக்கிய தொடர்பு வளையமாக இருக்கிறது. முன்பு எப்படி இருந்தோம் என்று யோசித்துப் பார்க்கும் நிலையில் இன்றைய தலைமுறை இல்லை. பள்ளியில் அவசரநிலை அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளில், குழந்தைகள் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய, உதவிகள் கேட்க என்று தான் பெற்றோர்கள் முதலில் இதனை அனுமதித்தார்கள்.
கொரோனா காலத்தில் கல்வி சார்ந்த பயன்பாடுகள், மின் புத்தகங்கள், டிஜிட்டல் உலகத்திற்கான அணுகல் மூலம் வகுப்பறைக்கு வெளியே தங்கள் கல்வி அனுபவத்தைப் பெற குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தததை யாரும் மறுக்க இயலாது. குழந்தைகள் டிஜிட்டல் கல்வியறிவை வளர்க்க தொலைபேசிகள் உதவும். அதனால் டிஜிட்டல் தளங்களை பொறுப்புடன் வழிநடத்த கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
செல்போன்கள் சமூக தொடர்புகளை வளர்க்க உதவுகிறது. நண்பர்கள், குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும் பள்ளித் திட்டங்களுக்கான குழு உரையாடல்களில் பங்கேற்கவும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடவும் உதவுகிறது.
இருப்பினும், பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் செல்போன்கள் பொறுப்புடன் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.'FamilyKeeper' போன்ற பெற்றோர் கட்டுப்பாட்டு பயன்பாடு இதற்குச் சரியானது. ஆன்லைன் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை உருவாக்கி, வெளிப்படையான உரையாடல்களை ஊக்குவிப்பதன் மூலம் தவறுகள் நடப்பதைக் குறைக்கலாம்.
பள்ளிகளில் ஃபோன்களை அனுமதிப்பது கல்வி அனுபவம், மாணவர் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் மேம்படுத்தும். மாணவர்களுக்கு கல்வி ஆதாரங்களுக்கான உடனடி அணுகலை வழங்கும் சக்திவாய்ந்த கற்றல் கருவிகளாக ஃபோன்கள் செயல்படுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்த உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவுகிறது. குறிப்பாக, துரதிருஷ்டவசமான அவசரநிலைகளில். அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பள்ளிகளில் நடக்கும் தீவிரவாதம் என்றுமே பெற்றோரை அச்சுறுத்தும் வேளையில் கைபேசிகள் முக்கியமான தகவல் தொடர்பு மையங்களாக செயல்படுகிறது.
கைப்பேசிகளை முறையாகப் பயன்படுத்தினால் நேர விரயம் குறையும்.
கவனச்சிதறல்கள், தவறான பயன்பாடு பற்றிய கவலைகளை, தெளிவான வழிகாட்டுதல்களின் மூலம் குறைக்கலாம். பள்ளிகளில் மாணவர்களுக்குப் பல விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கிக்கொண்டிருந்தாலும் பெற்றோர்களுக்கு மிகவும் சிரமமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இளவயதில் செல்ஃபோன் வாங்கிக்கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பிரச்சினை எனும்பொழுது அவரவர் குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் அதன் சாதக, பாதகங்களை எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். முதலில் பெற்றோர்களுக்குத் தான் விழிப்புணர்வு தேவை என்று நினைக்கிறேன்.
"தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் செல்போன் வைத்திருக்க வேண்டுமா?" என்ற விவாதம் பெரும்பாலும் பாதுகாப்பு, சமூகமயமாக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. அவசர காலங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கான கருவியாக ஸ்மார்ட்போன்கள் செயல்படும். கூடுதலாக, கல்விப் பயன்பாடுகள், டிஜிட்டல் ஆதாரங்கள் என வகுப்பறைக் கற்றலுக்கு துணைபுரியலாம். இளம் மாணவர்களுக்கு அத்தியாவசிய டிஜிட்டல் கல்வியறிவுத் திறன்களை வளர்க்க உதவுகின்றன என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
மறுபுறம், சிறு குழந்தைகளின் வளர்ச்சியில் திரை நேரத்தின் எதிர்மறை விளைவுகள் குறித்து எதிர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதிகப்படியான ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு, கற்றல் அனுபவங்கள், வெளிப்புற விளையாட்டு, சமூக தொடர்புகளிலிருந்து அவர்களை விலக்கி அந்நியப்படுத்துகிறது. மேலும் சிறு குழந்தைகளுக்கான திரை நேர வரம்புகளின் முக்கியத்துவத்தை ஆய்வுகள் கடுமையாகப் பரிந்துரைத்துள்ளன. இளம் மாணவர்கள் இணைய அச்சுறுத்தல் போன்ற ஆன்லைன் அபாயங்களுக்கு ஆளாக நேரிடலாம் போன்ற காரணங்களால் ஆரம்ப பள்ளிக்கூடங்களில் அனுமதிக்கக் கூடாது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.
வாட்ஸ் அப் தொடர்புகள் பெருகிவிட்ட காலத்தில் ஃபோன்களால் ஏற்படும் பாதிப்புகளைப் புரிய வைக்க வேண்டிய கடமை, பெற்றோர்கள், பள்ளிகள், அரசிற்கு உண்டு. முழுவதுமாக கைப்பேசியைக் கொடுக்க முடியாது என்று யாராலும் கூற முடியாது. ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்காவது கொடுக்காமல் இருக்கலாம்.
இந்தத் தலைமுறைக் குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகப்பெரும் சவாலான ஒன்று தான்.
என்னவோ போடா மாதவா!