Saturday, July 6, 2024

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 - முதல் விவாதம்


உலகெங்கும் தேர்தல் திருவிழா உற்சாகமாக நடந்து வருகிறது. இந்தியாவில் பிரதமராக 'ஹாட்ரிக்' அடித்துள்ளார் திரு.நரேந்திர மோதி. சமீபத்தில் பிரான்சிலும் இங்கிலாந்திலும் தேர்தல் முடிந்துள்ளது. அந்த வரிசையில் அமெரிக்காவும் நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்காக 2003ல் இருந்து தயாராகி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு குழப்பமான தேர்தல் முறை. முதலில் யார் அதிபர் வேட்பாளராக ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடுவது என்பதே 'மினி' தேர்தலாக மாநிலங்களில் நடக்கும். அதற்காக வேட்பாளர்கள் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று விவாதங்கள் செய்து மக்கள் அவர்களுக்குப் பிடித்தவருக்கு வாக்களித்து அவரும் தேர்தல் நிதிகளை அள்ளினால் ஆட்டத்தில் தொடரலாம். இல்லையென்றால் ஒவ்வொருவராக கழன்று கொண்டே வருவார்கள்.

குடியரசுக்கட்சியின் சார்பில் பலரும் போட்டியிட்டார்கள். ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட நிக்கி ஹேலி, ட்ரம்ப்பிற்கு கிடைத்த பலத்த ஆதரவிற்கு முன் தோற்றுப் போய் விலகிக்கொண்டார். முன்னாள் நியூஜெர்சி ஆளுநர் Chris Christie வந்த வேகத்திலேயே அவுட்டானார். ஃபுளோரிடா ஆளுநர் Ron DeSantisம் நியூ ஹாம்ப்ஷயர் வேட்பாளர் தேர்தலுக்கு முன்பே நிலைமையைப் புரிந்து விலகிக் கொண்டார். முன்னாள் துணை அதிபர் பென்ஸ் இருந்த இடமே தெரியவில்லை. விவேக் ராமசாமியும் இந்த ஆட்டம் தனக்கானதல்ல என்று சென்று விட, ஒரே ஒருவர் மட்டும் வரலாறு காணாத அளவில் தேர்தல் நிதிகளை அள்ளிக்கொண்டு முன்னணியில் நின்றார். அவர் தான் முன்னாள் அதிபர் 'டொனால்ட் ட்ரம்ப்'. அவர் மீது அத்தனை நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருந்த பொழுதிலும் அவர் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் செய்த அநீதிகளைத் தெரிந்தும் ஆதரவு பெருகி முன்னணியில் இருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போனது ஜனநாயக கட்சி.

அதனால் ஜனநாயக கட்சியின் சார்பில் முதலில் இருந்தே அதிபர் பைடன் போட்டியிடுவதாக அறிவித்தவுடன் யாரும் மறுப்பேதும் சொல்லவில்லை. அவரை விட்டால் 'மிச்செல் ஒபாமா' தான் பொருத்தமான வேட்பாளராக இருந்திருப்பார். அவரோ இந்த வெறுப்பரசியலில் நாட்டமில்லை என்று ஒதுங்கிக்கொண்டார். வேறு இளவட்டங்களுக்கு கட்சியே வாய்ப்பளிக்கவில்லையோ? கமலா ஹாரிஸை முன்னிறுத்தவும் விரும்பவில்லை அல்லது ஆதரவில்லை?

இதில் என்ன வினோதம் என்றால் அதிபர் வேட்பாளர்களைக் கட்சி நடத்தும் மாநாட்டில் தான் அறிவிப்பார்கள். இனி வரும் மாதங்களில் தான் மாநாடுகள் நடக்கும். கட்சியின் சார்பில் அனைவரும் ஒருங்கே இருந்து வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கட்சி ஆணையிடும். ஆனால் எனக்குத் தெரிந்து முன்னணியில் இருப்பவர்கள் தான் இதுவரையில் அதிபர் வேட்பாளராக இருந்திருக்கிறார்கள். அவர்களைத் தான் கட்சியும் ஆதரித்து வருகிறது. ட்ரம்ப்பிற்குப் பெருகும் ஆதரவைக் கண்டு குடியரசுக்கட்சியினருக்கே அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்கும். துவக்கத்தில் அவருக்குக் கட்சி ஆதரவு தருவதா இல்லையா என்றெல்லாம் கூட விவாதங்கள் நடந்தது. அப்படி ஒன்று நடந்தால் தனித்துப் போட்டியிடுவேன் என்று ட்ரம்ப் தனது பாணியில் மிரட்டிய பின் கட்சியும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. அந்த வகையில், இன்றைய தேதியில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடனும் குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பும் வேட்பாளராக களமிறங்குகிறார்கள்.

தேர்தலுக்கு முன் மக்கள் மன்றத்தில் இந்த வேட்பாளர்கள் தங்கள் கொள்கைகளை, திட்டங்களைப் பற்றி விவாதிப்பார்கள். அப்படியான முதல் விவாதத்தை ஜூன், 27 2024 அன்று 'சிஎன்என்' தொலைக்காட்சி நிறுவனம் நடத்தியது. இதில் பொது மக்கள் பங்கேற்கவில்லை. கடந்த அதிபர் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக பைடனும் ட்ரம்ப்பும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதால் ஆவலுடன் அமெரிக்காவே எதிர்பார்த்த விவாத மேடை.

நிமிர்ந்த நடையுடன் வந்த ட்ரம்ப் முன், நடந்து வரவே சிரமப்பட்ட பைடன் அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க, இருவரும் முகமன் கூடச் சொல்லிக்கொள்ளவில்லை. வழக்கமான கேள்விகள். அதுவும் தற்போதைய பொருளாதார தேக்கம், அமெரிக்க பாரளுமன்ற தாக்குதல், வெளியுறவுக்கொள்கைகள், இஸ்ரேல் ஆதரவு, எல்லைப்பிரச்னை என்று பைடனுக்கு அடித்துப் பேச அத்தனை வாய்ப்பு இருந்தும் ஏனோ பேச்சு குளறி பதட்டத்துடன் எதிர்கொண்டதை அவரது கட்சி ஆதரவாளர்கள் யாரும் விரும்பவுமில்லை. தான் சொல்வது பொய் என்று தெரிந்தும் பைடனின் பிரச்னைகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார் ட்ரம்ப். முடிவில் இந்த விவாதத்தில் பைடன் தோற்றுப்போனதாக ஒரு பிம்பத்தை எளிதாக உருவாக்கி விட்டார். கேட்ட கேள்விகளுக்கு நேரிடையான பதில்களைக் கூறாமல் தந்திரமாகத் தவிர்ப்பது ட்ரம்ப்புக்கு கைவந்த கலை. பல கேள்விகளையும் அப்படித்தான் எதிர்கொண்டார். கள்ளக்குடியேறிகள், பொருளாதாரம், இஸ்ரேல் ஆதரவு, ஆப்கானிஸ்தான் போர் என்று அவருடைய ஆதரவாளர்களுக்குப் பிடித்தவகையில் பேசினார். ஆனால் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் நடந்த அத்துமீறல், 2020 தேர்தல் முடிவுகள், வெளியுறவுக்கொள்கைகள், கருக்கலைப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு நேரிடையாக பதில் கூற முடியாமல் மழுப்பியதையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

பதில்கள் தெரிந்தும் பல கேள்விகளுக்கும் தொடர்ச்சியாகப் பதிலளிக்க முடியாமல் தடுமாறிய பைடனைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது. அவர் கடுமையாக விவாதித்து ட்ரம்ப்பைத் தோலுரித்துக் காட்டுவார் என்று எதிர்பார்த்திருந்த கூட்டத்திற்கு முன் இத்தனை வயதானவரால் அடுத்த நான்கு ஆண்டுகள் முழுமையாகச் செயல்பட முடியுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாகி கட்சியை ஆட்டம் கொள்ள வைத்திருக்கிறது. 'அவருக்குப் பதிலாக இவர்' என்று வேறு ஒருவரை அறிமுகம் செய்வார்களா? அது கமலா ஹாரிஸாக இருந்தால் அவரால் ட்ரம்ப்பை எதிர்கொள்ள முடியுமா?

இனிவரும் விவாதங்கள் கடுமையாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இரு அதிபர் வேட்பாளர்களையும் பிடிக்காதவர்கள் இந்த தேர்தலில் அதிகம். அதுவும் இஸ்ரேல்-பாலஸ்தீன நிலைப்பாட்டில் ஆளும்கட்சியின் செயற்பாடுகள் பல அதிருப்திகளை உருவாக்கியுள்ளதால் வெற்றியாளர்களை இவர்கள் தான் தீர்மானிக்கப்போகிறார்கள். நான்கு மாதங்களில் தெரிந்து விடும். 81 வயதிலும் தன்னால் திறமையாகச் செயல்படமுடியும் என்று மக்களிடையே நம்பிக்கையை வளர்க்க வந்த பைடன் தடுமாறி அன்று தோற்றுத்தான் போனார். அடுத்த விவாதம் நிச்சயமாக இருவரும் கடுமையாக மோதும் வகையில் இருக்கப்போகிறது.

விவாதத்தில் தோற்றாலும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இன்னும் பைடனுக்குத் தான் அதிகமாக இருக்கிறது. ட்ரம்ப்பும் நெருங்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறது. யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்காத வாக்காளர்களை யார் கவரப்போகிறார்கள் என்பதில் தான் இவர்களின் வெற்றியும் அமெரிக்காவின் எதிர்காலமும் இருக்கிறது.


No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...