Saturday, July 6, 2024

தமிழா தமிழா...


'ஜீ' தொலைக்காட்சி 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் 'விதவிதமாக பொருட்களை வாங்கிக் குவிப்பவர்கள் Vs அதை விமரிசிப்பவர்கள்' என்ற தலைப்பில் ஒரு விவாதத்தை ஒலிபரப்பினார்கள். இந்த மாதிரி தலைப்பில் அதிகம் பெண்கள் தான் பங்கெடுப்பார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? தற்பொழுதைய பல பெண்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறதென்றால்,

"எனக்குப் பிடித்த பொருட்களை வாங்க என்னிடம் தேவையான வசதி இருக்கிறது. அதற்காக என் இஷ்டப்படி வாங்கி குவிப்பேன்" - அது அவர்கள் இஷ்டம். ஒன்றும் சொல்வதற்கில்லை.

"எனக்குப் பிடித்திருக்கிறது. இதில் தனித்துவமாகத் தெரிகிறேன். சந்தோஷமாக இருக்கிறது." - பொருட்களை வாங்கிக் குவிப்பதில் தான் சந்தோஷம் என்பது ஒரு மாயை. அதிலிருந்து இந்த மாதிரி ஆட்களால் வெளியே வரமுடியாது. அடுத்தவரை விட தன்னிடம் எல்லாம் இருக்கிறது என்று காண்பிக்க வேண்டும். எங்கு சென்றாலும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக தனியே தெரிய வேண்டும் என்ற மெனக்கெடல்."ஆகா! உங்களைப் போல வருமா?" என்று ஏத்திவிடும் ஒரு பொய்யான கூட்டம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றி ஜால்ரா போடும். அதற்கு இவர்கள் கொடுக்கும் மொய் தான் இந்த வீண் பகட்டு. தெரிந்தே தான் செய்கிறார்கள். அதற்கு கூறும் விளக்கம், "எனக்குப் பிடித்திருக்கிறது. என் காசில் தானே வாங்குகிறேன். உனக்கென்ன வந்தது?" 

தீவிரமாக ஆராய்ந்தால் ஏதோ ஒரு விதத்தில் உன்னை விட நான் ஒரு படி மேலே என்று நிரூபிக்கப் போராடிக்கொண்டிருப்பார்கள். அதனால் மேலும் மேலும் எதையாவது போட்டிப் போட்டு வாங்கிக் கொண்டே இருப்பார்கள். மாலையிட்ட மணாளன் தான் அங்கே 'குணா'வாகி குகையில் மாட்டிக்கொண்ட சிங்கமாக இருப்பான். எப்படியோ, அவர்கள் நினைத்த சந்தோஷம் கிடைத்தால் நல்லது.

தவணை முறையில் தேவையான பொருட்களை மட்டுமே வாங்கியிருப்பதாக ஒரே ஒரு குரல் மட்டும் அந்தக் கூட்டத்தில் தீனமாகக் கேட்டது.

30 ஷூக்கள், 40 கைப்பைகள், 2 லட்ச கைப்பையைத் தள்ளுபடியில் ஒன்னேகால் லட்சத்திற்கு வாங்கியது என்று பீதியைக் கிளப்பினார்கள் பல அம்மணிகளும் சில ஆண்களும். ஒரு பெண்மணி புது ஃபிரிட்ஜ் சந்தையில் வந்தால் நன்றாக இருக்கும் பழைய ஃபிரிட்ஜை மாற்றிவிடுவாராம்! என்னவோ போடா மாதவா! அந்தம்மாவின் கணவர் இப்படி தேவையற்ற பொருட்களை வாங்கி 10 லட்சம் வரை கடனில் இருப்பதாகக் கூறினார். பாவப்பட்ட ஜீவன்😟 "சாப்பாடு கிடைக்காது சார். அதனாலா தான். நிம்மதியா குடும்பம் நடத்தணும்னா இப்படித்தான் 'பூம்பூம்' மாடு மாதிரி தலைய தலைய ஆட்டிட்டு கடனை கிடனை வாங்கி வாழ்க்கைய ஓட்டணும்"னு அனுதாப ஒட்டு வாங்கிக்கிட்டார். ஆனாலும் மனுஷனுக்கு குசும்பு ஜாஸ்தி. சந்தடி சாக்கில் "ஃபிரிட்ஜை  மாத்துவது போல மனைவியை அப்படி மாற்ற முடியவில்லை" என்று மனதிலிருந்ததை  சொல்லிவிட்டுப் போனார்.

ஒரே ஓரு பெண், தன்னுடைய குழந்தை பக்கத்து வீட்டில் தொலைக்காட்சி பார்க்கச் சென்று கால் மிதியடி பக்கத்தில் உட்கார வைத்தார்கள் என்ற அவமானத்தில் கடனை வாங்கி டிவி வாங்கப் போய் பிறகு வேறு பொருட்களையம் வாங்க ஆரம்பித்திருக்கிறார். அவருடைய கணவர் கடனில்லாத வாழ்க்கை வாழ நினைத்தாலும் வரவுக்கு மீறிய செலவு செய்கிறார் தன் மனைவி. சில நேரங்களில் குழந்தைகளும் மனைவியும் செய்யும் செயல்கள் மிகுந்த மனவருத்தத்தைத் தருவதால் சில நாட்கள் வீட்டிற்குக் கூட வருவதில்லை என்று வருத்ததுடன் கூறியதைக் கேட்க வருத்தமாக இருந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. நான்கு பேர் முன்னால் நன்றாக வாழ்வதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று எல்லோரும் நினைப்போம். ஆனால் அதன் எல்லை எது வரை என்று தெரியாததால் வரும் குழப்பங்கள் இவை. குடும்பத்தின் நிம்மதியைக் கெடுக்கும் பிரச்சினைகள்.

கடுமையாக உழைத்து மனைவி, குழந்தைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வர நினைக்கும் பல ஆண்களின் வாழ்க்கையும் இப்படித்தான். புரிந்து கொள்ள வேண்டியது பெண்கள் தான். சில குடும்பங்களில் இது ஆண்களாகவும் இருக்கிறது. வரவுக்கு மீறி செலவுகள் செய்வது நல்லதல்ல என்று பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தி குழந்தைகளுக்காகச் சேமித்து வைத்து அவர்கள் எதிர்காலத்தைப் பொற்காலமாக்கின பலரையும் பார்த்து வளர்ந்ததால் இந்த மாதிரிப் பெண்களை நினைத்து வருத்தப்படத்தான் முடிகிறது.

மற்றவர்கள் வாழும் பகட்டான வாழ்க்கையை எண்ணி இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைப்பதை விட, கடனில்லாத வாழ்க்கை, குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்திற்கான சேமிப்பு, அடிப்படைப் பொருட்கள் மட்டும் தான் நிம்மதியைத் தரும் என்றுணர்ந்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாகுமே!


No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...