Friday, March 6, 2026

இராணுவ உடையில் ஒரு கூலிப்படை

ஜனநாயக நாடாக இருந்தபோதிலும் பாகிஸ்தான் ராணுவம் தான் நீண்ட காலமாக இஸ்லாமாபாத் அரசாங்கத்தின் அதிகாரப் புலங்களை மறைமுகமாகக் கட்டுப்படுத்தி வருகிறது என்பதை உலகம் அறியும். தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்காதவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சிறையில் அடைப்பது, மரண தண்டனை வழங்குவது ராணுவத்தினரின் செயல்களாக இருந்து வருகிறது. இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றிருந்தாலும் வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் இஸ்லாமியப் பயங்கரவாதத்தையும் இந்திய வெறுப்பையும் சுமந்து கொண்டு அலையும் நாட்டிற்குத் தங்களுடைய சுய லாபத்திற்காகப் பிற நாடுகள், குறிப்பாக அமெரிக்கா இதுவரையில் பணத்தை வாரி இறைத்தது.

ஆப்கானிஸ்தான் போரின் போது முக்கியமான வான்வழி, பொருட்கொடுப்பு வழிகளை வழங்கியதற்காக பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் அமெரிக்காவிடமிருந்து பில்லியன் டாலர் அளவிலான நிதியைப் பெற்றன. ஆனால் 2018ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தங்களிடம் நிதியைப் பெற்றுக் கொண்டு தாலிபானுக்கும் பாதுகாப்பு தஞ்சம் அளித்து வருகிறது என்று குற்றம்சாட்டி, பெரும்பாலான பாதுகாப்பு உதவிகளை நிறுத்தி விட்டார். 2021ல் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பின்னும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டின் பணவரவு முற்றிலுமாக குறைந்து விட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் செய்யும் உதவிகள் மட்டும் தொடர்ந்து வருகிறது. மேலும் “ஆபரேஷன் சிந்தூர்”-ல் வாங்கிய அடி பலமாக இருந்தாலும் “வலிக்கல” என்று கைப்புள்ளையாகி விட்டது பாகிஸ்தான். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சறுக்கலிலிருந்து மீண்டுவர, மீண்டும் மீண்டும் பன்னாட்டு நிதி அமைப்பு, கூட்டாளிகளிடம் கையேந்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலைமையைத் தவிர்ப்பதற்காக புதிய அவதாரம் எடுத்துள்ளது. 2021ம் ஆண்டு அப்போதைய ராணுவத் தளபதி காமர் ஜாவேத் பஜ்வா “புவிசார் பொருளாதார பார்வை” பற்றின முக்கிய உரையில், “நாட்டின் உள்ளும் வெளியும் அமைதியை நிலைநாட்டவும், பாகிஸ்தானை ஒரு பொருளாதார மையமாக நிறுவி உள்பிராந்திய வர்த்தக இணைப்பை அதிகரிக்கவும் ராணுவத்தின் பங்கு அவசியம்” என்பதனைக் கோடிட்டுக் காட்டினார். பாஜ்வாவிற்குப் பின் பதவியேற்ற அசிம் முனிரின் முதன்மை முயற்சியாக, கட்டுக்கோப்பான ராணுவத்தின் அதிகாரத்துவ செல்வாக்கைப் பயன்படுத்தி வலுவான பொருளாதாரத்தை அடைய 2023ல் தொடங்கப்பட்டது தான் SIFC. (Special Investment Facilitation Council) செப்டம்பர் 8, 2025ல் அமெரிக்காவுடனான $500 மில்லியன் கனிம ஒப்பந்தத்திற்கான கையெழுத்து விழாவில் ராணுவத் தளபதி அசிம் முனிரும் பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரிஃப்புடன் கலந்து கொண்டது, அவர்களின் தலைவர்களை விட ராணுவமே தேசியக் கொள்கையை நிரந்தரமாக வடிவமைக்கும் என்ற கோட்பாட்டினை நிரூபித்துள்ளது.



அதனைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க தங்களின் ஒரே பலமான ராணுவத்தைக் கொண்டு பொருளீட்டத் திட்டமிட்டது தற்போதைய பாகிஸ்தான் அரசு. செப்டம்பர் 17, 2025 அன்று சவுதி அரேபியாவுடன் “பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்” மூலமாக இரு நாடுகளுக்கு இடையே நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதி செய்துள்ளது பாகிஸ்தான்.

இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் போன்ற வெளிநாட்டுத் தாக்குதல்களுக்கு எதிரான பாகிஸ்தானின் பாதுகாப்பு உத்தரவாதமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இதில் இரு நாடுகளுக்கும் எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என்றிருந்தாலும் உண்மையில், இது சவுதி அரேபிய நிர்வாகத்தின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்கும் கூலிப்படையாக பாகிஸ்தான் ராணுவத்தின் நிலையை உறுதிப்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் பாகிஸ்தானை “உதவி பெறும் நாடு” என்ற நிலையிலிருந்து, அமெரிக்காவின் பிராந்திய ஆதிக்கத்தில் நம்பிக்கை இழந்து வரும் நாடுகளுக்கு “பாதுகாப்பு வழங்கும் நாடாக” மாற்றும் நோக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும், தோஹாவில் ஹமாஸ் தலைமையைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய முன்னறிவிப்பில்லாத வான்வழித் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பிறகு வெளிவந்த இந்த ஒப்பந்த அறிவிப்பு தான் தற்பொழுது உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை, சக வளைகுடா நாடும் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான கத்தார் மீதான தாக்குதல், அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே என்பதனை ஊர்ஜிதம் செய்துள்ளது. அதனால் பாகிஸ்தானின் அணுசக்தி குடையின் கீழ் இருப்பதும் அதன் ராணுவமும் ரியாத்திற்கு பாதுகாப்பாக இருப்பது சவுதிக்கு அவசியமானதாக இருக்கிறது.

இஸ்லாமாபாத்தைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான பொருளாதார உயிர்நாடியாகியுள்ளது. ஐந்து பில்லியன் டாலர் சவுதி முதலீட்டுத் தொகுப்பும் பில்லியன் கணக்கான வணிக ஒப்பந்தங்களும் இந்தியாவிற்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தானுடனான மோதலில் சவுதியின் தலையீட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது.



அது மட்டுமில்லாமல், ட்ரம்ப்பின் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களைக் குறிவைத்தும், தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருந்தாலும் வேறு யாராவது தன்னைப் புகழ்ந்து பேசமாட்டார்களா’ என்று ஏகத்திற்கும் காத்திருந்த ட்ரம்ப்பை ‘அமைதிக்கான மனிதர்’ என பொய்யாகப் புகழ்ந்தும் தந்திரமாகக் காய்களை நகர்த்தி தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார் ஷெரிஃப். அது மட்டுமா? இந்தியாவுடனான பாகிஸ்தானின் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப்பின் பொய்யை இவரும் சேர்ந்து புளுகி அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்து அங்கிள்சாமை கவிழ்த்த நாடகங்களை உலகம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு தான் இருந்தது.

எப்படியாவது ட்ரம்ப்பிடம் நல்ல பெயர் வாங்கி மீண்டும் பணத்தைக் கறந்து விட வேண்டும் என்று பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வேறு முடுக்கிவிட்டுள்ளது. அதை நிரூபிக்கும் விதமாக 2021ம் ஆண்டு காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் 13 அமெரிக்கப் படைவீரர்களைக் கொன்ற இஸ்லாமிய அரசு தீவிரவாதியை இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்தது. இதற்கெல்லாம் ஈடாக, கடந்த மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த ஷெரிஃப், முனீர் இருவரையும் “சிறந்த மனிதர்கள்” என்று ட்ரம்ப் பாராட்டியுள்ளார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அரசியல் தலைவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முகஸ்துதி செய்து கொள்வதைப் பார்த்து முகஞ்சுளித்துக் கொண்டது உலக நாடுகள்.

ஆனால் அதைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை இருவரும். பொருளாதார ரீதியாக, பாகிஸ்தானுக்குச் சாதகமான 19 சதவிகித வரி விகிதமும் அமெரிக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ளாமல் சவுதியுடனான கூட்டணியை வலுப்படுத்தும் சுதந்திரத்தையும் பெற்றுள்ளது பாகிஸ்தான்.



சவுதி ஒப்பந்தம் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருந்தாலும் ஆப்பிரிக்காவிலும் புதிய கடல்சார் தளங்களிலும் அதன் விரிவாக்கம் கவனத்தைப் பெற்றிருக்கிறது. செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பாகிஸ்தானின் ஆதிக்கத்தை வலுப்படுத்த ஆகஸ்ட் மாதத்தில் சோமாலிய அமைச்சரவை பாகிஸ்தானுடன் ஐந்து ஆண்டு ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.

வடக்கே, கிழக்கு லிபியா அரசாங்கத்துடன் பாதுகாப்பு உறவுகளை உறுதிப்படுத்தியுள்ளது. அங்கு ஜெனரல் கலீஃபா ஹப்தாரின் சுயமாக அறிவிக்கப்பட்ட லிபிய தேசிய ராணுவம், திரிபோலியில் ஐ.நா. ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அரசை அமைத்துள்ளது. ஹப்தாரின் மகன் சதாம் ஹப்தார், ஜூலை மாதம் இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்து ஷெரீப்பையும் முனீரையும் சந்தித்து இரு தரப்பிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் மத்தியதரைக்கடலில் தனது கடற்படை இருப்பை விரிவுபடுத்தியது மட்டுமில்லாமல் அதன் போர்க்கப்பல்கள் துருக்கிய கடற்படையுடன் கூட்டு ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளன. இந்த எல்லைமீறலை கிரீஸ் எதிர்த்துள்ளது.

பாகிஸ்தானின் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பு, சூடானின் ஆயுதப் படைகளுடன் ஆகஸ்ட் மாதம் கையெழுத்திட்ட 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகும். சூடான் நாட்டுப் படைகள், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுடன் (RSF) பேரழிவுகரமான உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளன. சவுதி அரேபியா, சூடான் படைகளுக்கு ஆதரவாக இருப்பதால் RSFஐ எதிர்த்துப் போரிட, இந்த ஒப்பந்தத்திற்கான நிதியை வழங்கியதாகக் கூறப்படுகிறது. (With foreign cash, strategic location and cover)



பரஸ்பர நன்மை பயக்கும் இந்த ஒப்பந்தத்தால் அண்டை நாட்டுப் பிரச்சினையைக் குறைக்க ரியாத்திற்கு மிகவும் உதவும். இஸ்லாமாபாத்தைப் பொறுத்தவரை, இது ராணுவ-தொழில்துறை வளாகத்திற்கான ஒரு லாபகரமான ஒப்பந்தமாகும். இதன்மூலம், சீனாவால் உருவாக்கப்பட்ட ராணுவ வன்பொருட்களை ஆப்பிரிக்கப் போருக்கு வழங்கும் ராணுவ சப்ளையராகவும் வளைகுடாவின் புதிய பாதுகாப்பு கட்டமைப்பிலும் அதன் பங்கை உறுதிப்படுத்துகிறது. (Saudi Arabia loaned Pakistan $3 billion)

பாகிஸ்தானின் இத்தகைய லட்சிய முயற்சிகளால் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் இல்லாமல் இல்லை. 2015ல் ஏமனில் சவுதி தலைமையிலான ஹவுதிகளுக்கு எதிரான போரில் சேர இஸ்லாமாபாத் மறுத்துவிட்டது. ஆனால் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள், பயிற்சியுடன் தொடர் ஆதரவை ஈரான் வழங்கி வருவதால் புதிய ஒப்பந்தத்தை இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா பாகிஸ்தானைப் பயன்படுத்த விரும்புகிறது என்றும் நம்புகிறது. ஈரானும் சவுதி அரேபியாவும் தங்கள் உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வந்தாலும், காசா போர் மத்தியகிழக்கில் புதிய உறுதியற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இந்த ஜூன் மாத தொடக்கத்தில், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் சவுதி வான்வெளியைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால் பாகிஸ்தானின் ஆதரவு நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். சவுதிஅரேபியாவுடனான அதன் ஒப்பந்தத்தில் உள்ள பரஸ்பர பாதுகாப்பு விதி, பிராந்திய மோதல்களுக்கு நாட்டை இழுக்கக்கூடும். பணத்திற்காகப் போடப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு ஒப்பந்தங்களால் வெளிநாட்டுப் போர்களில் சிக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். முதன்மை எதிரியான இந்தியா, உள்நாட்டுத் தீவிரவாதக் குழுக்களான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம் முதல் பலூச் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களைச் சமாளிப்பதில் பிரச்சினைகள் வரலாம். (private military company notorious for providing mercenary services)

தற்போதைய நிலைப்பாட்டால் பாகிஸ்தான் ஒரு “கூலிப்படை நாடாக” மாறி ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் ஈடுபட்டு வருகிறது என்று அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். 9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இஸ்லாமாபாத் ஒரு “முன்னணி நட்பு நாடாக” இணைந்ததால் உள்நாட்டில் பின்னடைவை ஏற்படுத்தி 90,000 உயிர்களுக்கும் 150 பில்லியன் டாலர் பொருளாதார இழப்புகளுக்கும் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



மேற்கூறிய வரலாற்று இழப்புகளும் பிரச்சினைகளும் இருந்தபோதிலும், வாய்ப்புகளும் ஆபத்துகளுமாய் இரட்டை முனைகள் கொண்ட வாள் தான் பாகிஸ்தானின் இந்த புதிய முயற்சி. பாதுகாப்பு மற்றும் புவிசார்-பொருளாதார உத்தியை இணைப்பதற்கான அதன் முயற்சிகளின் இறுதி நிலைத்தன்மை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் ஒன்று மட்டும் நிச்சயம்: பாகிஸ்தானுக்கு விற்க கைவசம் ஒரு தயாரிப்பு உள்ளது. தற்போதைய நிலையற்ற உலகில், ராணுவ வணிகம் செழித்து வருகிறது. அதுவும் வளைகுடா பகுதிகளில் அதன் தேவை அதிகமாகவே இருக்கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை ராணுவம் செய்து வருகிறது.

பாகிஸ்தான் ராணுவம் பெரும்பாலும் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனம் என்று தவறாக அடையாளப்படுத்தப்படுகிறது. உண்மையில் இது ஒரு கூலிப்படை நிறுவனமாகும்.1970 ஆம் ஆண்டு ஜோர்டானில் ஜியா-உல்-ஹக்கின் கட்டளையின் கீழ் பாகிஸ்தான் துருப்புக்கள் 25,000 பாலஸ்தீனியர்களைக் கொன்ற கறுப்பு செப்டம்பர் முதல் தற்போதைய ரியாத்துடனான புத்தம் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் வரை, பாகிஸ்தானின் படைத்தளபதிகள் மிகப்பெரிய காசோலைகளில் கையெழுத்திடுபவர்களுக்காக நீண்ட காலமாகப் போராடி வருவது வரலாறு (1979 Grand Mosque seizure in Mecca). அணு ஆயுதக் கேடயம் என்ற வாக்குறுதியுடன் சவுதி அரேபியாவுடனான சமீபத்திய ஒப்பந்தம், ராவல்பிண்டியின் நீண்ட கூலிப்படை பேரேட்டில் புதிய அத்தியாயமாகும். (signed a mutual defence pact with Saudi Arabia)

பாகிஸ்தானுடனான அரபு நாடுகளின் உறவு என்பது சகோதரத்துவ அடிப்படையில் அமைந்தது அல்ல. பரிவர்த்தனை சார்ந்தது. வளைகுடா அவர்களுக்குப் பணத்தையும் எண்ணெயையும் வழங்க, பாகிஸ்தான், துருப்புக்களையும் போலி கண்ணியத்தையும் வழங்குகிறது. அதற்கு ஈடாக, இரு தரப்பினரும் உலக அரங்கில் தாங்கள் முக்கியமானவர்கள் என்று பாசாங்கு செய்து வாஷிங்டனுக்கு நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.

பாகிஸ்தான் தளபதிகளின் விசுவாசம் தங்கள் நாட்டிற்கோ, இஸ்லாத்திற்கோ, காசாவிற்கோ அல்ல. தங்கள் காசோலைகளில் கையெழுத்திடுபவர்களுக்கு மட்டுமே. என்று பாகிஸ்தானியர்கள் ராணுவ நிறுவனம் தங்கள் பாதுகாவலர் அல்ல. சுயலாபத்திற்காக இயங்கும் கூலிப்படை என்பதை உணருகிறார்களோ அன்று நாடு
பிளவுபடும். வரலாறு அவர்களைப் போர்வீரர்களாக நினைவில் கொள்ளாது. பேரரசிற்கு விலைபோனவர்களாக மட்டுமே நினைவில் கொள்ளும் என்பதையும் ராணுவ அதிகாரிகள் அறிவார்கள். தற்பொழுது மக்களை ஏமாற்ற, தேசபக்தி, “உம்மாவின் பாதுகாப்பு” போன்ற வெற்று முழக்கங்களிட்டு உயரடுக்கினரின் வங்கிக் கணக்குகளைப் பாதுகாத்துக் கொள்கிறது.

திவாலான நாடு மீண்டும் கூலிப்படை நாடாக அவதரித்திருப்பது வளைகுடா பாதுகாப்பையும் பிராந்திய மறுசீரமைப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த களேபரங்களுக்கு மத்தியில், இந்தியாவுடனான சவுதி அரேபியாவின் உறவுகள் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளன என்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து வளரும் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது அமெரிக்கா வேறுபட்ட நலன்களைச் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வரும் ஆண்டுகளில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கை வடிவமைக்கவும் நம்பிக்கையைப் பெறவும் அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது உலகம்.

King Hussein of Jordan flanked by Pakistani soldiers. In 1970, Pakistan deployed an infantry regiment in Jordan to suppress Palestinian fighters. Pakistan Army is a mercenary force, once butchered 25,000 Palestinians – India Today

Sources:

  • Najib Azad, Treason: The Engineered Collapse of the Republic of Afghanistan (Liberty Hill Publishing 2023).
  • Hassan Abbas, Pakistan’s Drift into Extremism: Allah, the Army, and America’s War on Terror (M E Sharpe 2005).
  • Vahid Brown and Don Rassler, Fountainhead of Jihad: The Haqqani Nexus, 1973–2012 (Columbia UP 2013).
  • Steve Coll, Ghost Wars: The Secret History of the CIA, Afghanistan, and bin Laden, from the Soviet Invasion to September 10, 2001 (Penguin Press 2004).
  • George Crile, Charlie Wilson’s War: The Extraordinary Story of the Largest Covert Operation in History (Grove Press 2003).
  • Robert M Gates, From the Shadows: The Ultimate Insider’s Story of Five Presidents and How They Won the Cold War (Simon & Schuster 1996).
  • Lester W Grau and Michael A Gress (eds), The Soviet–Afghan War: How a Superpower Fought and Lost (University Press of Kansas 2002).
  • Antonio Giustozzi, Koran, Kalashnikov, and Laptop: The Neo-Taliban Insurgency in Afghanistan (Columbia UP 2008).
  • Husain Haqqani, Pakistan: Between Mosque and Military (Carnegie Endowment 2005).
  • International Crisis Group, Pakistan: Countering Militancy in FATA (Asia Report No 178, 2009) and subsequent Pakistan/Afghanistan reports (2009–2016).
  • International Human Rights and Conflict Resolution Clinic (Stanford Law School) and Global Justice Clinic (NYU School of Law), Living Under Drones: Death, Injury, and Trauma to Civilians from US Drone Practices in Pakistan (2012).
  • Ayesha Jalal, The State of Martial Rule: The Origins of Pakistan’s Political Economy of Defence (Cambridge UP 1990).
  • Seth G Jones, In the Graveyard of Empires: America’s War in Afghanistan (W W Norton 2009).
  • Seth G Jones and C Christine Fair, Counterinsurgency in Pakistan (RAND Occasional Paper 2010).
  • Anatol Lieven, Pakistan: A Hard Country (Allen Lane 2011).
  • Iftikhar H Malik, Pakistan: Democracy, Terror and the Building of a Nation (Atlantic Books 2010).
  • Shuja Nawaz, Crossed Swords: Pakistan, Its Army, and the Wars Within (OUP 2008).
  • OCCRP and others, Suisse Secrets (Credit Suisse leaked accounts) (February 2022).
  • Ahmed Rashid, Taliban: Militant Islam, Oil and Fundamentalism in Central Asia (Yale UP 2000).
  • Bruce Riedel, What We Won: America’s Secret War in Afghanistan, 1979–1989 (Brookings Institution Press 2014).
  • Olivier Roy, Islam and Resistance in Afghanistan (2nd edn, Cambridge UP 1990).
  • Thomas Ruttig, How Tribal Are the Taleban? (Afghanistan Analysts Network Discussion Paper 2010).
  • Victoria Schofield, Kashmir in Conflict: India, Pakistan and the Unending War (I B Tauris 2003).
  • Ashley J Tellis, C Christine Fair and Jamison Jo Medby, Limited Conflicts Under the Nuclear Umbrella: Indian and Pakistani Lessons from the Kargil Crisis (RAND 2001).
  • Peter Tomsen, The Wars of Afghanistan: Messianic Terrorism, Tribal Conflicts, and the Failures of Great Powers (PublicAffairs 2011).
  • US Department of State, Foreign Relations of the United States (FRUS): Afghanistan–Pakistan (1977–1989).
  • United Nations Security Council, Reports and Sanctions Listings concerning the Taliban and al-Qaeda (2001–2010).
  • Marvin G Weinbaum, Pakistan and Afghanistan: Resistance and Reconstruction (Westview Press 1994).
  • Mohammad Yousaf and Mark Adkin, The Bear Trap: Afghanistan’s Untold Story (Pen & Sword 2001).

‘கண்ணுக்குத் தெரியாத’ நெருக்கடிகளுக்குள் சூடான்

சொல்வனம் இதழ் 354ல் வெளிவந்த கட்டுரை ‘கண்ணுக்குத் தெரியாத’ நெருக்கடிகளுக்குள் சூடான் – சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026

ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடும் நைல் நதிக்கரையில் பண்டைய நாகரிகங்களின் அடையாளமானதுமான சூடான், இன்று கொடுமையான உள்நாட்டுப் போரால் கடும் சரிவை எதிர்கொண்டு வருகிறது. ஏற்கெனவே பல தசாப்தங்களாக நடந்து வரும் உள்நாட்டு கலவரங்களால் பலவீனப்பட்டு இருக்கும் நாட்டின் தற்போதைய போர்ச்சூழல் அரிதாகவே உலகச் செய்திகளில் இடம்பிடித்திருப்பது வருத்தத்திற்குரியது.

ஏப்ரல் 2023 முதல், தேசிய இராணுவத்திற்கும் ஒரு சக்திவாய்ந்த துணை இராணுவப் படைக்கும் இடையிலான மிருகத்தனமான அதிகாரப் போராட்டம் அதன் நகரங்களை போர்க்களங்களாக மாற்றி லட்சக்கணக்கான மக்களை புலம்பெயர வைத்துள்ளது. இது ஒரு நீண்ட துயர வரலாற்றின் சமீபத்திய அத்தியாயம் மட்டுமே. காலனித்துவ ஆட்சி, ஆழமான இனப்பிளவுகள், சீரற்ற வளர்ச்சி, பல ஆண்டுகளாக இராணுவ சர்வாதிகாரத்தால் உருவான போர்களின் நீட்சி தான் சூடானின் இன்றைய துர்பாக்கிய நிலைக்கு காரணமாகியிருக்கிறது. நுபியா, குஷ் ராஜ்ஜியங்கள் முதல் நவீன தலைநகர் ஹார்ட்டூம் நகரம் வரை கலாச்சாரங்களை இணைத்த அதே நிலம் தான் இப்போது அதிகாரத்திற்கும் உயிர்வாழ்வதற்குமான போராட்ட களமாக மாறியுள்ளது. 2023ல் தொடங்கிய போரைப் புரிந்து கொள்ள சூடானின் வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியா, பாகிஸ்தான் முதற்கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் விடுதலை என்ற பெயரில் உலகளவில் பிரிவினையைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது. அப்படித்தான் வடக்கு, தெற்கு என்ற பிளவுகளுடன் 1956ஆம் ஆண்டு பிரிட்டிஷ் எகிப்திய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது சூடான். பெரும்பாலும் அரேபியர்களும், இஸ்லாமியர்களும் நாட்டின் வடக்குப் பகுதியிலும் ஆப்பிரிக்கர்களும், கிறிஸ்தவர்களும், பாரம்பரிய நம்பிக்கையாளர்களும் தெற்குப் பகுதியிலும் வசித்து வந்த நிலையில், புதிய அரசாங்கம் உயரடுக்கினரை ஆதரித்து தெற்குப் பகுதிகளைப் புறக்கணித்தது. அதுவே முதல் சூடான் உள்நாட்டுப் போர் (1955–1972) தொடங்க காரணமாகி தெற்கு சூடானுக்கு சுயாட்சியை வழங்கும் அமைதி ஒப்பந்தத்துடன் முடிவிற்கு வந்தது. அந்த அமைதியும் குறுகியகாலமே நீடித்தது.

1983ல் ஜனாதிபதி ஜாஃபர் நிமெய்ரி நாடு முழுவதும் இஸ்லாமிய சட்டத்தை (ஷரியா) அறிமுகப்படுத்தினார். இது வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான போரை மீண்டும் தூண்டியது. இரண்டாவது சூடான் உள்நாட்டுப் போரில் 20 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர, அது ஆப்பிரிக்காவின் மிக நீண்ட, கொடிய போராக மாறியது.

1989ல் ‘உமர் அல்-பஷீர்’ என்ற இராணுவ அதிகாரி ஒரு சதித்திட்டத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவரது சர்வாதிகார ஆட்சியில் சர்வதேச அளவில் சூடான் தனிமைப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் டார்ஃபரின் மேற்குப் பகுதியில், அரபு போராளிகளும் ஆப்பிரிக்க விவசாயிகளும் நிலம் மற்றும் வளங்களுக்காக மோதிக்கொண்டதால் பதட்டங்கள் அதிகரித்து 2003ல் ‘டார்ஃபர் கிளர்ச்சி’யாக அது வெடித்தது. ‘ஜன்ஜாவீட்’ எனப்படும் கொடூரமான போராளிக் குழுக்களைப் பயன்படுத்தி வெகுஜனக் கொலைகள், கிராம எரிப்புகள் போன்ற திட்டமிட்ட வன்முறையை அரசே நடத்தியது. கிட்டத்தட்ட 300,000 பேர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் முகாம்களுக்கும் வேறு நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். அந்த ஜன்ஜாவீட் போராளிக் குழுக்களே பின்னர் பாரா மிலிட்டரி, விரைவு ஆதரவுப் படைகள் (RSF) என்று அறியப்படும் குழுக்களாக பரிணமித்தன.

ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் பஷீரையும் மூத்த அதிகாரிகளையும் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டின. பல தசாப்த கால போருக்குப் பிறகு, ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு ஜூலை 2011இல் தெற்கு சூடான் உலகின் புதிய நாடாக உருவெடுத்தது. சூடானின் எண்ணெய் வயல்களில் முக்கால் பங்கையும் தன்னுடன் எடுத்துக்கொண்டது.

உலகம் இதைக் கொண்டாடிய அதே வேளையில், சிதைந்த பொருளாதாரம், குறைந்த வளங்கள், அதிகரித்து வரும் உள்நாட்டுப் பதட்டங்களுடனே வடக்கு சூடான் இருந்து வந்தது. டார்ஃபூர் பகுதியும் நிலையற்றதாகவே இருந்தது. மேலும், பிற பிராந்தியங்கள் தெற்கு பெற்ற அதே உரிமைகளையும் சுயாட்சியையும் கோரி இளம் சூடானியர்கள், பெண்கள், தொழில் வல்லுநர்கள் தலைமையில் பல மாதங்களாக நடத்திய போராட்டங்களால் ஏப்ரல் 2019இல் தேசிய இராணுவம் பஷீரை பதவியில் இருந்து நீக்கியது. அவருடைய 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சியும் முடிவுக்கு வந்தது. பின்னர் குடிமக்களின் தலைவர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே ஒரு இடைக்கால அரசாங்கமும் அமைக்கப்பட்டது. இந்த ஜனநாயக சீர்திருத்தத்தை ஒரு புதிய சூடானுக்கான நம்பிக்கையாக உலகம் பார்த்தது.

அந்த நம்பிக்கையும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அக்டோபர் 2021இல், இராணுவத்தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபட்டா அல்-புர்ஹான் மற்றும் RSF தலைவர் முகமது ஹம்தான் டகலோ (“ஹெமெட்டி”) ஆகியோர் கூட்டாக ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி சிவில் அரசாங்கத்தைக் கலைத்தனர். இருவரும் சேர்ந்து ஆட்சி செய்தார்களா? அதுவும் இல்லை. எதிர்கால இராணுவத்திலும் நாட்டின் தங்கம் நிறைந்த பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்த விரும்பியதால் அவர்களின் கூட்டணியும் விரைவில் முறிந்தது.

ஏப்ரல் 15, 2023 அன்று, தலைநகர் ஹார்ட்டூம்-ல் சூடானிய ஆயுதப் படைகளுக்கும் (SAF) விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே வெடித்த அதிகாரப் போராட்டம் விரைவில் முழு அளவிலான உள்நாட்டுப் போராக மாறி, முக்கிய நகரங்கள் வரை பரவியது. இதுவரையில் ஒரு கோடிக்கும் மேலானோர் இடம்பெயர்ந்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாட, தற்பொழுது 30 கோடிக்கும் அதிகமான சூடானியர்களுக்கு மனிதாபிமான அடிப்படை உதவிகள் தேவைப்படுகின்றன. தலைநகர் ஹார்ட்டூம் இடிந்து விட்ட நிலையில் டார்ஃபரில் ஒரு காலத்தில் அரசாங்கத்தின் முக்கிய கோட்டையாக இருந்த எல் ஃபாஷிர் நகரமும் தற்பொழுது வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது. நெருக்கடிகள் அதிக அளவில் இருந்தபோதிலும், சர்வதேச கவனமும் உதவியும் மிகக் குறைவாகவே உள்ளன. சாட், தெற்கு சூடான், எத்தியோப்பியா, எகிப்துடனான சூடானின் எல்லைகள் அகதிகளால் நிரம்பி வழிகின்றன. இதன் தாக்கம் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு முழுவதும் தொடர் அலை விளைவுகளை உருவாக்கியுள்ளது.

பல தசாப்த கால சர்வாதிகாரம், கிட்டத்தட்ட சம பலம் கொண்ட இரண்டு இராணுவக் குழுக்கள் ஒன்றிணைய மறுத்து சிவில் நிறுவனங்களை அழித்து உருவாக்கிய அதிகார வெற்றிடமும், இன, பிராந்திய சமத்துவமின்மையும், புறக்கணிக்கப்பட்ட பகுதிகளும், பொருளாதாரச் சரிவும் சூடானின் இன்றைய இழிநிலைக்குக் காரணமாகியுள்ளன. ஐ.நா. மற்றும் மனிதாபிமான அமைப்புகள் இரு தரப்பினரையும் போர்க்குற்றங்கள், பட்டினி, இனப்படுகொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளன.

முதல் பார்வையில் சூடான் தொலைதூரத்தில் எங்கோ இருப்பதாகத் தோன்றினாலும் அது அமைந்திருக்கும் இடம் உலக அரசியலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரிய நாடான சூடான், நிலையற்ற தன்மையால் போராடும் ஏழு நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டம் அரபு நாடுகளைச் சந்திக்கும் இடத்திலும், நைல்நதி செங்கடலைச் சந்திக்கும் இடத்திலும், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்காவை வர்த்தக வழிகள் இணைக்கும் இடத்திலும் இருப்பதால் புவிசார் அரசியல் ரீதியாக முக்கியமான நிலப்பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. வடகிழக்கில் உள்ள செங்கடல் உலகின் மிகவும் பரபரப்பான வர்த்தக பாதைகளில் ஒன்றாகும். சூயஸ் கால்வாய் நோக்கி டேங்கர்களும் சரக்குக் கப்பல்களும் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே எண்ணெய், பொருட்களை எடுத்துச் செல்கின்றன. இதனால் சூடானில் செல்வாக்கு செலுத்துபவரால் கப்பல் பாதைகள், இடம்பெயர்வு ஓட்டங்கள், முக்கிய இயற்கை வளங்களுக்கான அணுகல்களை கட்டுப்படுத்த முடியும் என்பதால் வெளிநாடுகளின் தொடர் ஆதரவும் தற்போதைய துயர நிலைக்கு காரணமாகியிருக்கிறது.

அது மட்டுமன்றி, தங்கம், எண்ணெய், விவசாய நிலங்களால் நிறைந்துள்ள சூடான் ஆப்பிரிக்காவின் முன்னணி தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். தற்போதைய போரின் இரு தரப்பினருக்கும் இந்த வர்த்தகமே நிதியுதவி அளிக்கிறது. 2011க்குப் பிறகு பெரும்பாலான எண்ணெய் வயல்கள் தெற்கு சூடானுக்குச் சென்றாலும் குழாய்வழிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் இன்னும் சூடான் பிரதேசத்தைக் கடந்து செல்கின்றன. பிராந்தியம் முழுவதும் உணவு, எரிசக்தி பாதுகாப்பிற்கு நைல்நதி பகுதியில் நடக்கும் பெரிய அளவிலான விவசாயமும் நீர்மின் திட்டங்களும் அவசியமானது.

சூடானை யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்கள் அதன் தங்கம், வளமான நைல் பள்ளத்தாக்கை மட்டுமல்ல, உலகங்களுக்கிடையேயான ஒரு மூலோபாய நுழைவாயிலையும் கட்டுப்படுத்துகிறார்கள். இதனாலேயே வெளிநாட்டு அரசாங்கங்களும் நிறுவனங்களும் சூடானை யார் ஆளுகிறார்கள், அதன் பொருளாதாரம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. சூடான் போரில் சூடானியர்கள் மட்டும் ஈடுபடவில்லை. பல உலக சக்திகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளன.

செங்கடல் வர்த்தகம், தங்கச் சுரங்கத்தில் செல்வாக்கு செலுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) RSF க்கு ஆயுதங்கள், ட்ரோன்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எகிப்து, சூடானிய ஆயுதப் படைகளை (SAF) ஆதரிக்கிறது. ஏனெனில் அது நைல் நதிநீர் பேச்சுவார்த்தைகளில் தனது நிலைப்பாட்டை ஆதரிக்கும் ஒரு நட்பு அரசாங்கத்தை விரும்புகிறது. ரஷ்யா இரு தரப்பினரையும் அரவணைத்துள்ளது. போருக்கு முன்பு, மாஸ்கோ சூடானின் செங்கடல் கடற்கரையில் ஒரு கடற்படை தளத்தை உருவாக்க முயன்றது. ஆகவே, சூடானின் மோதல் வெறும் உள்நாட்டுப் போர் அல்ல – இது செல்வாக்கு மற்றும் வளங்களுக்கான ஒரு பினாமி போட்டி என்பதைக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் உலகளாவிய வர்த்தகம், இடம்பெயர்வு, பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிக்கும் ஒரு மனிதாபிமான புவிசார் அரசியல் நெருக்கடியும் ஆகும்.

“இது தொடர்ந்தால், மில்லியன் கணக்கான உயிர்களை இழக்க நேரிடும். சூடானை மட்டுமல்லாமல், அதன் அண்டை நாடுகளையும் செங்கடல் பாதையையும் சீர்குலைக்கும். உலகின் அமைதியும் கெடும்” என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் சாட், தெற்கு சூடான் ஆகிய இரண்டும் போர் தங்கள் எல்லைகளில் பரவி முழுப் பிராந்தியத்தையும் சீர்குலைக்கும் என்று அஞ்சுகின்றன. சூடான் முற்றிலுமாக சரிந்தால், அதன் விளைவுகள் சிரியா, லிபியாவைப் போலவே இருக்கலாம். “பஞ்சத்தின் விளிம்பில் உள்ள நாடு” சூடான். அங்கு குழந்தைகள் தோட்டாக்களால் மட்டுமல்லாமல் உணவு, மருந்துப் பற்றாக்குறையாலும் இறக்கின்றனர்.

பேரழிவுகள் இருந்தபோதிலும், எந்த தரப்பினரும் வெற்றி பெறவில்லை. சூடான் ஆயுதப் படைகள் (SAF) சூடானின் வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்துகின்றன. அதே நேரத்தில் விரைவு ஆதரவுப் படைகள் (RSF) டார்ஃபூர், மேற்குப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒரு காலத்தில் ஒற்றை நாடாக இருந்த நாடு இன்று ராணுவ குழுக்களால் ஆளப்படும் பிரதேசங்களாகப் பிரிந்து வருகிறது.

சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் சமாதானத்தை மத்தியஸ்தம் செய்ய முயன்றன. இரு தளபதிகளும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மறுப்பதால் ஜெட்டாவில் நடைபெற்ற பல பேச்சுவார்த்தை சுற்றுகளும் தோல்வியில் முடிந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை, ஆப்பிரிக்க ஒன்றியம், பிராந்திய அமைப்புகள் அமைதியை நிலைநாட்டுவது ஒருபுறம் இருக்க, உதவிகளை வழங்கக்கூட போராடி வருகின்றன. ஆயுதங்கள், பணத்தை வழங்கும் பெரிய சக்திகளின் அழுத்தம் இல்லாமல் எந்த போர்நிறுத்தமும் நீடிக்க வாய்ப்பில்லை.

ஆனால் சாதாரண மக்களின் உயிர்வாழ்வு அவர்களின் தலைவர்களின் லட்சியங்களை விட அதிகமாக இருக்கும்போது மிக நீண்ட போர்கள் கூட முடிவுக்கு வரக்கூடும் என்பதை வரலாறு உணர்த்துகிறது. பெண்கள், இளைஞர்களால் வழிநடத்தப்படும் சூடானின் சிவில் இயக்கங்கள் தலைமறைவாக இயங்கி அட்டூழியங்களை ஆவணப்படுத்தி ஜனநாயக எதிர்காலத்திற்கான திட்டமிடலை மேற்கொண்டு வருகின்றன. அவர்களின் நம்பிக்கை முற்றிலும் மறைந்துவிடவில்லை என்பதையே இது நினைவூட்டுகிறது.

இன்று சூடானின் பிரச்சினை அந்நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரம், பேராசை, புறக்கணிப்புகளால் உள்நாட்டு எதிரிகள் மோதும்போது வலிமையான நாடுகள் கூட உடைந்து போகக்கூடும். உலகம் மற்ற போர்களில் கவனம் செலுத்தி வரும் வேளையில் சூடானின் மக்கள் மறக்கப்பட்டு விட்டார்கள். பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுத்த ‘குபீர் கபீர்’ போராளிகள் கூட கண்ணெதிரே நடக்கும் இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது அவர்களின் சார்புநிலையையே காட்டுகிறது.

மனித உயிர்கள் நாட்டிற்கு நாடு வேறுபடுமா? ஏன் இந்தப் புறக்கணிப்பு?

சூடான் ஒரு நாட்டின் போராட்டத்தை மட்டுமல்ல, உலகின் மனிதநேயப் பொறுப்பையும் நினைவூட்டுகிறது. வரலாற்றின் தவறுகளைப் புரிந்து கொள்ளும் உலகமே, எதிர்காலத்தில் நீதியும் அமைதியும் நிறைந்த பூமியை உருவாக்க முடியும். விரைவில் அமைதி உருவாகும் என்று நம்புவோம்.

Tuesday, February 24, 2026

அமைதி நடந்த அகண்ட நிலம்

சொல்வனம் இதழ் 361ல் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை அமைதி நடந்த அகண்ட நிலம் – சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026

உலகின் மிகச் சக்திவாய்ந்த ஜனநாயக நாடு கடந்த சில ஆண்டுகளாக கடுமையான அரசியல் பிளவுகள், குடியேற்ற அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் குறித்த விவாதங்கள், வேலைவாய்ப்பு, பொருளாதார அச்சங்கள், சந்தை ஏற்றத் தாழ்வுகள், ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கின் ஆவணங்கள் தொடர்பான கேள்விகள், முன்னாள், இந்நாள் அரசியல் தலைவர்களின் நடத்தைகள் குறித்த சர்ச்சைகள் போன்ற பல கலக்கங்களின் மையமாக இருந்து வருகிறது.

செய்தித் தலைப்புகள் பெரும்பாலும் மோதல், குற்றச்சாட்டு, விசாரணை, எதிர்ப்பு, எதிர்வினைகளால் நிரம்ப, மக்கள் சமூக ஊடகங்களில் கோபத்தையும் கவலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்ததாகக் கூறினர். சிலர் மாற்றத்திற்கான ஆவலை வெளிப்படுத்தினர். அத்தகைய சூழலில் கோஷங்களும் கடும் விவாதங்களும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்த தருணத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிக்காமல், எந்த எதிர்ப்புக் கோஷமும் எழுப்பாமல், சில புத்த பிக்குகள் மெதுவாக, மௌனமாக நடக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் நடை வேகமானது அல்ல. அவர்களின் செய்தி கூச்சலானது அல்ல. ஆனால் அவர்கள் எடுத்த ஒவ்வொரு அடியும் ஒரு கேள்வியை எழுப்பியது.

“கலக்கத்தின் மத்தியில் அமைதி எங்கு தொடங்க வேண்டும்?”

அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் முயற்சிதான் “Walk for Peace” எனும் 108 நாள் ஆன்மீகப் பயணம்.

2025 அக்டோபர் மாத இறுதியில் டெக்சாஸ் மாநிலம் ஃபோர்ட் வர்த் அருகிலுள்ள ‘Hương Đạo Vipassana Bhavana Center’ தியான மையத்திலிருந்து இந்தப் பயணம் தொடங்கியது. பயணத்தை வழிநடத்தியவர் மதிப்பிற்குரிய பிக்கு ‘பன்னகரா’. அவருடன் பிற நாடுகளில் இருந்தும் சுமார் 18 புத்த பிக்குகள் இணைந்தனர். புத்த மதத்தின் இரண்டு முக்கிய கிளைகளில் ஒன்றான “தேரவத பௌத்த”ப் பிரிவைச் சார்ந்தவர்கள். இலங்கை, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் இன்றும் நடைமுறையில் உள்ளது. “தேரவத” என்ற சொல்லுக்கு “மூத்தவர்களின் போதனை” என்று பொருள். சித்தார்த்த கௌதம புத்தரின் ஆரம்பக்கால போதனைகளைப் பாதுகாத்து வழிநடத்திச் செல்கிறது இந்தப் பிரிவு. ‘மகாயானம்’ மற்றொரு பிரிவாகும்.

பயணத்தை வழிநடத்திய மதிப்பிற்குரிய பிக்கு ‘பன்னகரா’அவர்கள் கூறியபடி, “உலகளவில் அதிகரித்து வரும் கோபம், பதட்டம், பிரிவு உணர்வு, அமைதியின்மை போன்ற சூழலில் மனிதர்கள் தங்கள் உள்ளார்ந்த அமைதியை மறந்து வருகிறார்கள் என்ற கவலை புரிந்தது. அமைதியை வெளியிலிருந்து திணிக்க முடியாது. அது உள்ளத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும்” என்ற புத்த மதக் கருத்தைச் செயலால் காட்ட வேண்டும் என்ற எண்ணமே அடிப்படை ஊக்கமாக, ஒரு மௌனப்பயணம் மேற்கொண்டதாக கூறினார். 108 நாட்கள். 2,300 மைல்கள். பல மாநிலங்கள் வழியாக (டெக்சாஸ் → லூசியானா → மிசிசிப்பி → அலபாமா → ஜார்ஜியா → கரோலினாக்கள் → விர்ஜினியா → வாஷிங்டன் டி.சி) 2026 பிப்ரவரி 10ஆம்தேதி தலைநகரை அடைந்தனர்.

தினமும் 15 முதல் 20 மைல்கள் வரை நடந்து ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே உணவருந்தினர். பலர் காலணியின்றி நடந்தனர்!

நவம்பர் 19, 2025ல் ஹூஸ்டன் அருகே நடந்த விபத்தில், ஒரு வாகனம் மோதியதில் சில பிக்குகள் காயமடைந்தனர். குறிப்பாக Maha Dam Phommasan அவர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டதால் கீழ்கால் பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பழிவாங்கும் பேச்சோ குற்றச்சாட்டோ இல்லாமல், “கருணை, மன்னிப்பு” என்ற தங்கள் ஆன்மிகக் கோட்பாட்டை பிக்குகள் தொடர்ந்து வெளிப்படுத்தினர். இந்தச் சம்பவம் பலருக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், பின்னர் அவர் மீண்டும் நடைக்குழுவில் இணைந்தது மக்கள் மத்தியில் புத்த பிக்குகளுக்கு ஆழமான மரியாதையையும் ஆதரவையும் உருவாக்கியது. பல நகரங்களில் வரவேற்புக்கூட்டமும் அதிகரிக்கத் துவங்கியது.

இந்தப் பயணம் ‘விபஷ்யனா’ தியானத்தின் ஒரு நீண்ட வடிவமாகக் கருதப்பட்டு ஒவ்வொரு அடியும் விழிப்புணர்வுடன் வைக்கப்பட்டது. கருணையையும் பொறுமையையும் வெளிப்படுத்தி உடல் கஷ்டத்தை ஏற்றுக்கொள்வது மன பயிற்சியின் ஒரு பகுதியே என்று தங்களின் நடைப்பயணத்தின் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். விபஷ்யனா தியானத்தின் அடிப்படை கொள்கைகளான விழிப்புணர்வு, கருணை, அன்பு இவை சமூகத்தில் பரவ வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நடந்தார்கள். தங்கள் நடைப்பயணம் அரசியல் எதிர்ப்பல்ல என்று அவர்கள் வழியெங்கும் தெளிவுபடுத்திக் கொண்டே இருந்தனர்.

சமூக ஊடகங்களில் இந்தப் பயணம் பரவலாகப் பகிரப்பட்டு பல இடங்களில் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பைப் பெற்றது. சிறிய நகரங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையோரங்களில் காத்திருந்தனர். பூங்கொத்துகள், பழங்கள், தண்ணீர், கம்பளிகள், வாழ்த்து அட்டைகளைக் கொடுத்து வணங்கி நின்றனர். தினமும் பல படங்களை சமூக வலைதளங்களில் போட்டு கண்ணீர் உருகினர். மிசிசிப்பி, அலபாமா, கரோலினா பகுதிகளில் குளிர்கால மழை, காற்று, பனி என்றிருந்தாலும் வழக்கமான தியான ஒழுங்கைத் தளர்த்தாமல் அவர்கள் நடையை மேற்கொண்ட மனஉறுதியைக் கண்டு விக்கித்து நின்றது அமெரிக்கா! லூசியானா, ஜார்ஜியா, தென் கரோலினா கிராமப்புறங்களில் குழந்தைகள் கேள்விகள் கேட்டபோது தியானத்தைப் பற்றிய எளிதான விளக்கத்தைச் சிரித்தபடி கூறியதும் கனிவுடன் தியான அமர்வில் பங்கேற்றவர்களுடன் உரையாடியதையும் பார்த்தவர்கள் உருகி உருகி பதிவுகளைப் போட, அவர்களைப் பின்தொடரும் கூட்டமும் பெருமளவில் அதிகரிக்க ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் “இவர்கள் யார்? எந்த இயக்கம்? அரசியல் தொடர்பா” என்று கேள்விகளை எழுப்பிய மக்களும் பிக்குகளின் அமைதி நடைப்பயண உரையைக் கேட்ட பின்பு மனம் மாறினர். எந்த அரசியல் கட்சியையும் எதிர்க்காமல், எந்த நிர்வாகத்தையும் குறிவைக்காமல், எந்த சட்டத்தையும் மாற்றக்கோரி கோஷமிடாமல், எந்த மதத்தையும் இழிவுபடுத்தாமல் மக்களின் அமைதியைத் தேடும் வழியை போதிப்பதை ஒன்றே நோக்கமாகக் கொண்டு தொடர்ந்தாலும் ஜியார்ஜியா மாநிலத்தில் ஓரிரு இடங்களில் தீவிர கிறிஸ்தவ கும்பல் எங்கள் இறைவன் ஏசப்பா பதாகைகளை ஏந்திக் கொண்டு கூச்சலிட்டதும் ஒருவர் தொடர்ந்து வந்து அவர்களை இடைமறிக்க, “உங்கள் பாதையில் நீங்கள் செல்லுங்கள். எங்கள் பாதையில் நாங்கள் அமைதியாகச் செல்கிறோம்” என்று தொடர்ந்து பன்னகரா கூறிக்கொண்டே சென்றதைப் பார்த்த ஊடகவாசிகள் பலரும் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுவதாகப் பதிவிட்டனர். கண்டனங்களையும் தெரிவித்தனர். இது தான் அமெரிக்கா.

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவைத்தொடர்ந்து மாநில காவல்துறையினரின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருந்தது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதுவும் குடியேற்ற அமலாக்கத்துறையின் அராஜகத்தைக் கண்டு மனம் கொந்தளித்துப் போயிருந்தவர்களுக்கு இது மிகவும் ஆறுதலைத் தந்தது என்று கூட சொல்லலாம்.

இப்படியாக இந்த நடைப்பயணம் பெரும் ஆதரவுடனும் ஆச்சரியத்துடனும் கடும் பனியிலும் தொடர, பிப்ரவரி 10,2026ஆம் தேதி தலைநகர் வாஷிங்டன் டி.சி.யை புத்த பிக்குகள் அடைந்தனர். அவர்கள் நகருக்குள் நுழைந்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து வரவேற்றனர். பலரும் அமைதியாகப் பின்தொடர்ந்து சென்றனர். அந்தக் காட்சியே அத்தனை அழகாக இருந்தது.

Washington National Cathedral-ல் நடைபெற்ற இடைமத நிகழ்வில் பல மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர். பிற மதத் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டுவந்த Interfaith நிகழ்வுகள் குறித்து உள்ளூர் அமைப்புகள் அதிக ஆர்வம் காட்டியதாகச் செய்திக் குறிப்புகள் தெரிவித்தன. அமைதி, கருணை, பொறுமை குறித்து கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இது மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையின் அடையாளமாகப் பலராலும் பார்க்கப்பட்டது.

American University-ல் பெரிய அளவிலான தியான உரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். “அமைதி உள்ளத்தில் இருந்து தொடங்க வேண்டும்” என்ற மையச் செய்தி மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அரசியல் கேள்விகளுக்கு நேரடி கருத்து வழங்காமல் ஆன்மீக விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டது. இங்கு நடந்த Mindfulness, தியான நிகழ்வு மாணவர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

பிக்குகள் சில காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்து ‘Vesak’ தினத்தை கூட்டாட்சி விடுமுறை நாளாக அங்கீகரிக்க வேண்டுகோளையும் வைத்தனர்.

பெரும்பாலான தேசிய ஊடகங்கள் அவர்கள் வாஷிங்டனை அடைந்தபின் தான் செய்திகளை வெளியிட்டன. ஆனால் ஆரம்ப கட்டத்தில் பரவலான நேரடி ஒளிபரப்பு குறைவாக இருந்தது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். பயணம் தொடங்கிய டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளூர் செய்திச் சேனல் ‘WFAA-TV’ (டாலஸ்-இல் உள்ள ABC இணைப்பு சேனல்) பயணம் தொடங்கிய செய்தியை ஆரம்பத்தில் “local human-interest story” வகையில் வெளியிட்டுள்ளது.

இது மோதலோ, அரசியல் போராட்டமோ அல்ல. ஊடகங்கள் பெரும்பாலும் மோதல் மையப்படுத்தப்பட்ட செய்திகளுக்குத் தான் முன்னுரிமை அளிக்கும். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக ஒரு பிரபலமானவரின் அம்மா தொலைந்து போனதைப் பற்றி பேசிய ‘ப்ரைம் டைம் abcnews உலகச் செய்திகள்’ மறந்தும் கூட அமைதிப்பயணத்தைப் பற்றியோ புத்த பிக்குகளைப் பற்றியோ வாய் திறக்கவில்லையே?! மக்களும் தங்கள் அதிருப்தியை ஊடகங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

பயணம் வாஷிங்டன் டி.சி.யை அணுகியபோது தேசிய, பிராந்திய தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. ‘FOX 5 DC’ வாஷிங்டன் பகுதியில் அவர்கள் வருகையை நேரடியாக ஒளிபரப்பியது. அதே சமயம், ‘AP News’ அவர்கள் வாஷிங்டனை அடைந்தபின் விரிவான செய்தி வெளியிட்டது. AP செய்தி வெளியானதும், பல தேசிய, சர்வதேச ஊடகங்கள் அதனை மேற்கோள் காட்டின. ஆனால் சமூக ஊடகங்களில் முதலில் ‘Huong Dao Vipassana Bhavana Center’ன் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மூலமாக மட்டுமே செய்திகள் வெளியானது.

இந்த நீண்ட நடைப்பயணத்தின் மத்தியில், மனிதர்களின் மனங்களை வென்ற இன்னொரு “சின்னப் பாத்திரம்” கூடவே பயணித்தது. அது தான் ‘அலோகா’ என்ற பைரவர். இந்தியாவில் பிக்குகள் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தபொழுது அவர்களுடன் கூடவே பயணித்திருக்கிறது. இப்பொழுது அமெரிக்கப்பிரஜையாகி இங்கும் இவர்களுடன் கம்பீரமாக நடந்தது. அது ஒரு சாதாரண செல்லப்பிராணி மட்டும் அல்ல. அமைதியின் சின்னம் போல மாறியது. அதற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது. சும்மாவே செல்லப்பிராணிகள் என்றால் இங்கே உயிரை விடுவார்கள். இப்பொழுது கேட்கவா வேண்டும்? சில நேரங்களில் அது முன்னால் ஓடி வழிகாட்டுவது போல இருந்தது. சில நேரங்களில் சந்நியாசிகளின் அருகில் நடந்து அவர்களின் வேகத்தைப் பின்பற்றியது. வெயில், மழை,  குளிர், கூட்டம் என எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருந்ததைப் பார்த்து பேசாமல் இதற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசை வழங்கலாம் என்று ஊடகங்களில் கொண்டாடினார்கள். குழந்தைகள் அதனைத் தொட்டு மகிழ, “Peace Dog”, “Dharma Dog”, “Walking Monk’s Companion” போன்ற பெயர்களில் அது வைரலானது. வாஷிங்டன் டிசி சென்றபோது, பல புகைப்படங்களில் அந்த நாய் முன்புறம் அல்லது பக்கத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தது பலராலும் கவனிக்கப்பட்டது. அலோகா இந்த இயக்கத்திற்கு ஓர் உயிர்த்தன்மையை சேர்த்தது என்றே கூறலாம். அரசியல், கருத்தியல் வாதங்களை விட, இந்தச் சிறிய, எளியகாட்சியால் பெரும்பாலான மக்கள் ஈர்க்கப்பட்டனர்.

அது எந்த அரசியல் வாசகமும் பேசவில்லை. எந்த பேனரும் தூக்கவில்லை. ஆனால் ஒரு செய்தியை மட்டும் சொல்லாமல் சொன்னது. “அமைதி பேச வேண்டியதில்லை. அதன் இருப்பே போதுமானது.” 

அதுவே இந்த நடைப்பயணத்தின் ஆழமான தத்துவம்.

இதனால் அரசியல் மாற்றங்கள் நிகழுமா?

அரசியல் விவாதங்கள் பெரும்பாலும் சட்டம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்தும். ஆன்மீக இயக்கங்கள் நெறி,மனச்சாட்சி, கருணை போன்ற சொற்களை உரையாடலுக்குள் கொண்டு வரும். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் மனநிலையை உணர வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த 108 நாள் நடைப்பயணம் நமக்கு உணர்த்தியதெல்லாம் அமைதி எப்பொழுதும் வெளிப்படாது. அது ஒரு செயல். ஒரு நிலை. ஒரு நடையைப் போல மெதுவாகப் பரவி மனங்களைக் கனிவாகச் சேர்க்கிறது. கருணை என்பது செயலில் தெரியும். காயமடைந்த பிக்குகளை வழியனுப்புதல், நாயைப் பாதுகாப்பு வாகனத்தில் கொண்டு செல்லுதல், மக்களுக்கு நேரில் அன்பு காட்டுதல் போன்றவற்றின் மூலமாக பிக்குகள் அதை உணர்த்திக் கொண்டே இருந்தனர். பொறுமை வெறும் வார்த்தை அல்ல. அது 2,300 மைல்கள் நடந்து உரைத்த ஒரு நிகழ்வு.
“உள்ளார்ந்த அமைதி இல்லாத இடத்தில் எந்த சட்டமும், அதிகாரமும் உலகத்தை மாற்ற முடியாது. மாற்றம் ஆரம்பமாகும் இடம் உங்கள் மனம்.”

அதுவே இந்த நடைப்பயணத்தின் மெய்நிகர் செய்தி.

கோபம், குழப்பம், வெறுப்பு, பிரிவுகளால் நிரம்பிய உலகில் ஒரு மென்மையான நடையோடு, ஒரு மௌனமான பார்வையோடு, ஒரு சின்ன அன்புத் துளியோடு மனங்களை மாற்ற முடியுமென்று அவர்கள் நமக்கு நினைவூட்டியிருக்கிறார்கள். 

நாம் அனைவரும் உணர வேண்டியதும் அதுவே. உள்ளார்ந்த அமைதியை முதலில் வளர்த்தால் உலகெங்கும் அது பரவும். 

Shāntiḥ paramo dharmaḥ.
அமைதியே மிகச் சிறந்த தர்மம்.








அரசியலின் விலை: அழியும் விளைச்சலும் விவசாயியும்




சொல்வனம் இதழ் 360ல் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை : அரசியலின் விலை: அழியும் விளைச்சலும் விவசாயியும் – சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026


அமெரிக்காவின் விவசாயப் பண்ணைகள் அதன் சொந்த மக்களுக்கு உணவளிப்பது மட்டுமல்லாமல், தானியங்கள், இறைச்சி, பால் மற்றும் பிற உணவுப்பொருட்களை உலக சந்தைகளுக்கும் வழங்கி வருகின்றன. அதுவும், சோளம், சோயாபீன்ஸ், கோதுமை ஆகியவற்றின் பரந்த வயல்கள் நீண்ட காலமாக மிகுதியையும் நிலைத்தன்மையையும் அடையாளப்படுத்தினாலும் இந்த பிம்பத்திற்குப் பின்னால், அமெரிக்க விவசாயம் மெதுவாக உருவாகிக்கொண்டிருக்கும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதைச் சமீபத்தில் ஊடகச் செய்திகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள், நிலையற்ற உலகளாவிய வர்த்தகம், காலநிலை உச்சநிலைகள், தொழிலாளர் பற்றாக்குறை, மாறிவரும் அரசாங்கக் கொள்கைகள் ஒரு காலத்தில் நம்பகமானதாகக் கருதப்பட்ட ஒரு அமைப்பைச் சீர்குலைத்துள்ளன.

பல தலைமுறைகளாக உலகை உணவூட்டிய அமெரிக்க விவசாயிகள், உழைப்பு நிச்சயம் மதிக்கப்படும் என்ற நம்பிக்கையில் விதை விதைத்தவர்கள். இன்று அந்த நம்பிக்கை சிதறிக் கொண்டிருக்கிறது. விளைந்த பயிர்களை வாங்குபவர் இன்றி களஞ்சியங்கள் நிரம்பியிருக்க, விலையோ படுபாதாளத்தில்! மாற்றம் வேண்டும் என்று வாக்களித்தவர்கள் இப்போது தங்களின் உழைப்பின் மதிப்பு வாஷிங்டனில் எடுக்கப்படும் அரசியல் முடிவுகளால் நிர்ணயிக்கப்படுவதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மழையும் வெயிலும் மட்டுமே விவசாயத்தின் எதிர்காலத்தைத் தீர்மானித்த காலம் முடிந்து, இன்று வர்த்தக வரிகள், அரசியல் மோதல்கள், உலகளாவிய போட்டிகள் ஒரு விவசாயியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதில் இருப்பது அரசியல் அன்றி வேறு எதுவும் இல்லை.

சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ்-ல் வெளியான கட்டுரை ஒன்றின் சாராம்சத்திலிருந்து அறிந்து கொண்ட வருத்தமான செய்தி தான் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.

அதிகளவில் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. முக்கிய பயிர்களில் சோளம், சோயாபீன்ஸ், கோதுமை, அரிசி, பருத்தி ஆகியவை அடங்கும். கால்நடை வளர்ப்பில் மாட்டிறைச்சி, கோழி, பன்றி இறைச்சி, பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்தியில் பெரும்பகுதி ஏற்றுமதி சார்ந்தது. அதாவது விவசாயிகள் நிலையான சர்வதேச சந்தைகளைப் பெரிதும் நம்பியுள்ளனர்.

‘மிசிசிப்பி டெல்டா’ அமெரிக்காவின் மிகவும் வளமான விவசாயப் பகுதிகளில் ஒன்றாகும். இங்குள்ள விவசாயிகள் பயிர் விலைகளில், குறிப்பாக அரிசியில் கடுமையான சரிவை எதிர்கொண்டு வருகின்றனர். பல விவசாயிகள் தங்கள் பயிர்களை வளர்ப்பதற்கான செலவை மீட்டெடுக்க முடியாத அளவிற்கு விலைகள் மிகவும் குறைவாக இருப்பதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

‘ஜாக் வெஸ்டர்ஃபீல்ட்’ என்ற நெல் விவசாயி, 2.2 மில்லியன் பவுண்டுகள்(கிட்டத்தட்ட 997903.214 கிலோ) அரிசியுடன் சிக்கித் தவிப்பதாகவும் அவரால் லாபகரமாக விற்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். அதிக உள்ளீட்டு செலவுகள், பலவீனமான சந்தைகள் விவசாயிகளுக்கு எந்த சாத்தியமான வழிகளையும் இல்லாமல் செய்துள்ளன.

அமெரிக்கா விதிக்கும் வர்த்தக வரிகள் (tariffs) பல நேரங்களில் பிற நாடுகளின் பதிலடி வரிகளைத் தூண்டி அதன் முதல் பாதிப்பு விவசாயத்தில்தான் தெரிகிறது. அமெரிக்க அரிசி, சோயா பீன் போன்ற பயிர்களுக்கு வெளிநாடுகளில் விலை உயர்வதால், வாங்குபவர்கள் பிரேசில், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாறுகிறார்கள். இதனால் அமெரிக்காவின் வேளாண் ஏற்றுமதி குறைந்து விற்கப்படாத பயிர்கள் நாட்டுக்குள் குவிந்து, சந்தையில் oversupply உருவாகியுள்ளது. அதன் விளைவாக விலைகள் உற்பத்திச் செலவிற்கும் கீழே சரிந்து நிதி இழப்பாக மாறியுள்ளது.

அதே நேரத்தில், கட்டண வரிகள், வர்த்தக மோதல்கள் காரணமாக உரம், இயந்திரப் பாகங்கள், எரிபொருள் போன்ற விவசாய உள்ளீடுகளின் விலைகளும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஒரே நேரத்தில் குறைந்த விற்பனை விலை, உயர்ந்த உற்பத்திச் செலவு என்ற இரட்டை சிக்கலில் சிக்கியுள்ளார்கள்.

அரசியல் ரீதியாக, இறக்குமதி வரிகள் “தேசிய பாதுகாப்பிற்காக”, “உள்நாட்டுத் தொழில்கள் பாதுகாப்பிற்காக” என ட்ரம்ப் முழங்கினாலும், அதன் உடனடி பலி ஏற்றுமதி சார்ந்த விவசாயிகள் தான். இதன் காரணமாக பயிர்களை விற்கவே முடியாத நிலையில் சில விவசாயிகள் நஷ்டத்தில் விற்பதற்குப் பதிலாக பயிர்களை அழிக்கவோ, அழுக விடவோ பரிசீலித்து வருகின்றனர். “பயிர்களை அழிக்க அரசு இழப்பீடு வழங்க வேண்டும். விலைகளை நிலைப்படுத்த உற்பத்தியைக் குறைக்க வேண்டும்” என்ற யோசனைகளையும் பரிசீலிக்கின்றனர். இது 1980களின் விவசாய நெருக்கடியில் பயன்படுத்தப்பட்ட ஒரு நடைமுறை தான். மிசிசிப்பியின் வரிசை பயிர்களின் மதிப்பு 2024 முதல் 2025 வரை 9% சரிந்தது. அதே நேரத்தில் 2025ம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த விவசாய உற்பத்தி $9.5 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உணவு பற்றாக்குறையால் அல்ல, வர்த்தக அரசியலால் உருவான சந்தை சிதைவு.

இந்த நெருக்கடி ஒரே இரவில் உருவாகவில்லை. வானிலை, சந்தை சுழற்சிகளால் மட்டுமே என்றும் இதைக் குறுக்கி விட முடியாது. அரசாங்க கொள்கைகள் – குறிப்பாக வர்த்தகம், தொழிலாளர், எரிசக்தி, சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை என அனைத்தும் தீர்க்கமான பங்கைக் கொண்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் கீழ், விவசாயம் பரந்த அரசியல் மற்றும் பொருளாதார உத்திகளில் ஒரு மைய அரங்கமாகவும் மாறியுள்ளது. உள்நாட்டுத் தொழில்களையும் தேசிய நலன்களையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளாக விளம்பரப்படுத்தப்பட்ட கட்டண வரிகள், குடியேற்ற அமலாக்கம், ஒழுங்குமுறை மாற்றக்கொள்கைகளால் விவசாயத்தில் அவற்றின் விளைவுகள் சிக்கலாக, சீரற்றவையாக, ஆழமாக உணரப்பட்டு வருவதை தினமும் வெளிவரும் செய்திகள் நிரூபித்து வருகின்றன.

இங்கு இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயம் மூலதனம் மிகுந்ததும் கூட. உலகின் பல பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் பாரம்பரிய சிறுதொழில் விவசாயத்தைப் போலல்லாமல், அமெரிக்க விவசாயம் மேம்பட்ட இயந்திரங்கள், வணிக உள்ளீடுகள், கடன் அமைப்புகள், காப்பீட்டுத் திட்டங்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை நம்பியுள்ளது. இதன் விளைவாக, விலைகள், வட்டி விகிதங்கள், வர்த்தகக் கொள்கை, எரிசக்தி செலவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நவீன விவசாயத்திற்குத் தேவையான நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டதாகவோ உள்ளது. தற்பொழுது அதிகரித்து வரும் நிலத்தின் விலைகளால் சிறு/புதிய விவசாயிகள் இந்தத் துறையில் நுழைவதும் கடினமாகியுள்ளது. பாசனத்திற்குத் தேவையான நீர் மழைப்பொழிவு, ஆறுகள், நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர்நிலைகளைச் சார்ந்திருப்பதால் வறட்சி, அதிகப்படியான பயன்பாடு, காலநிலை மாற்றம் ஆகியவை நீர் கிடைக்கும் தன்மையைக் குறைக்கின்றன. அதுவும் குறிப்பாக மேற்கத்திய மாநிலங்களில் நீர் உரிமைகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலான விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் வணிக கலப்பின அல்லது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட விலை உயர்ந்த விதைகளையே வாங்குகிறார்கள். இந்த விதைகள் அதிக மகசூல் பெறவும் பூச்சிகள், வறட்சியை எதிர்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு பெரும்பாலும் சட்டப்பூர்வமாக மீண்டும் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரிய விதை நிறுவனங்களைச் சார்ந்திருப்பதை அதிகரிக்கின்றன.

நவீன விளைச்சலுக்கு அவசியமான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் உரங்களும் பயிர்களைக் காக்கும் களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகளும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் வெளிநாட்டுச் சந்தைகள், சுரங்கம், சர்வதேச வர்த்தகத்தைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் மட்டுமில்லாமல் புவிசார் அரசியல் இடையூறுகளால் இயக்கப்படும் விலை உயர்வுகள் நேரடியாக விவசாயச் செலவுகளை உயர்த்துகின்றன.

தற்பொழுதைய நவீன விவசாய உலகம் டிராக்டர்கள், அறுவடை, நடவு இயந்திரங்கள், நீர்ப்பாசன அமைப்புகள், டிஜிட்டல் கருவிகள் என விலை உயர்ந்த இயந்திரங்களைச் சார்ந்துள்ளது. பொதுவாக கடன்கள் மூலம் அதற்கான நிதியளிக்கப்பட்டாலும் அதன் வட்டி விகிதங்கள், கட்டணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பல அமெரிக்க பண்ணைகள் புலம்பெயர்ந்த, பருவகால தொழிலாளர்களை, குறிப்பாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்களுக்கு நம்பியுள்ளன. ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கையால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடு.

இதைத்தவிர, பெரும்பாலான விவசாயிகள் வானிலை, விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அபாயங்களை நிர்வகிக்க, வங்கிக் கடன்கள், அரசாங்க ஆதரவு கடன், பயிர் காப்பீட்டுத் திட்டங்களைச் சார்ந்துள்ளனர்.

மேலும் நீர்ப்பாசனம், இயந்திரங்களை இயக்க தேவையான டீசல் எரிபொருள், விவசாய சேமிப்புக் கிடங்கு, போக்குவரத்துக்கான எரிசக்தி விலை ஏற்ற இறக்கம், உள்கட்டமைப்பு சிக்கல்கள், தொழிலாளர் இடையூறுகள் என அனைத்தும் நேரடியாக பண்ணை லாபத்தை பாதிக்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் பலவித சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொண்டு வருவதால் மூலதனமும் தொழில்நுட்பத்தை அணுகக்கூடிய பெரிய விவசாய வணிகங்களும் மட்டுமே விரிவடைந்து வருகின்றன. அதே நேரத்தில் சிறிய, நடுத்தர குடும்ப பண்ணைகள் உயிர்வாழவே போராடுகின்றன. பண்ணைகளை ஒருங்கிணைப்பதால் கிராமப்புற சமூகங்களும் குறைந்து வருகின்றன.

நீண்ட காலமாக நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும் அமெரிக்காவின் விவசாயப் பண்ணைகள் முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தை தற்பொழுது எதிர்கொண்டுள்ளன. வாக்காளர்கள் தொடர்ந்து குடியரசுக் கட்சியின் தலைமையை ஆதரித்து வரும் மையப்பகுதிகளில் கூட விரக்தி தெளிவாகத் தெரிகிறது. பயிர் விலைகளை நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்ட எத்தனால் கொள்கைகள், கட்டுப்பாடு நீக்கம், மானியங்களுக்கு ஆதரவளிப்பதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். போராடும் விவசாயிகளுக்கு குறுகிய கால நிவாரணமாக 12 பில்லியன் டாலர் உதவி போன்ற திட்டங்களை அவருக்கு வாக்களித்த அயோவா, மத்திய மேற்கு விவசாயிகள் பெரிதும் பாராட்டுகிறார்கள். கிராமப்புற பிரச்சினைகளில் ட்ரம்ப்பின் கவனத்தையும், உதவிக்கும் பலர் நன்றி தெரிவித்தாலும் தீர்க்கப்படாத வர்த்தகம், சந்தை சவால்கள் குறித்து விரக்திகள் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

“அவர் எங்களைப் பற்றி பேசுகிறார் என்பது முக்கியம் என்றாலும் பயிர்களுக்கான தேவையைக் கொண்டுவரும் ஒப்பந்தங்கள் தான் எங்களுக்கு அவசியம்” – மத்திய மேற்கு தானிய விவசாயி.

“அவருடைய நிவாரண நிதி உதவியது. ஆனால் செலவுகள் இன்னும் அதிகமாக உள்ளன. சந்தைகள் நிலையானவை அல்ல.” – அயோவா சோள விவசாயி.

“இங்கு அரசியல் பிரச்சினை அல்ல. தொழிலாளர்களுக்கான அணுகலும் நியாயமான வர்த்தகமும் தான்.” – அரிசோனா விவசாயி

பண்ணை மாநிலங்களில் ட்ரம்ப்பிற்கு விசுவாசம் வலுவாக இருந்தாலும் பொருளாதார அழுத்தங்கள் பொறுமையைச் சோதிக்கின்றன. கணிக்கக்கூடிய சந்தைகள், உயிரி எரிபொருள் தெளிவு, தொழிலாளர் நிலைத்தன்மையைத் தான் விவசாயிகள் விரும்புகிறார்கள்.

அமெரிக்க விவசாயத்தின் எதிர்காலம் இன்று குறுக்குவெட்டு பாதைகளின் சந்திப்பில் நின்றுள்ளது. குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக உலக சந்தைகளுடன் மோதும் ஒரு பாதை; விவசாயியை மையமாக வைத்து நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் கட்டியெழுப்பும் மற்றொரு பாதை. விவசாயி உதவித் தொகைகளால் மட்டுமே வாழ வேண்டியவன் அல்ல. அவன் உழைப்புக்கான நியாயமான விலையை எதிர்பார்க்கும் மனிதன். உலகை உணவூட்டும் மண், அரசியல் போர்க்களமாக மாறும்போது, அதன் விளைவுகளைச் சுமப்பது வயல்களில் நிற்கும் மனிதர்களே.

உணவு நிறைந்த நாட்டில் பயிர்களை அழிக்க வேண்டிய நிலை உருவாகிறதென்றால், சிக்கல் உழைப்பில் இல்லை. அதை வழிநடத்தும் வர்த்தக அரசியலில் தான் என்பது நிரூபணமாகிறது. விவசாயியின் வாழ்வையும் சந்தையின் கணக்கையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து விவசாயிகளின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு.

விவசாயம் நசுங்கும் போது நாடுகள் செழிப்பதில்லை என்ற வரலாற்று உண்மையை அமெரிக்கா மீண்டும் உணருமா அல்லது தன் உணவுப் பாதுகாப்பையும் விவசாயியின் வாழ்க்கையையும் உலக அரசியலின் விலையாகச் செலுத்துமா என்பதே தற்போதைய கேள்வி.

இராணுவ உடையில் ஒரு கூலிப்படை

சொல்வனம் இதழ் 353ல் வெளிவந்த கட்டுரை  இராணுவ உடையில் ஒரு கூலிப்படை – சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026 ஜனநாயக நாடாக இருந்தபோதிலும் பாகிஸ்தா...