Sunday, March 17, 2024

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.

 இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்




ஒவ்வொரு நாட்டின் தனித்துவமே பயணிகளை அதன் பால் ஈர்க்கிறது. இந்தியாவிற்கு விரும்பி வரும் வெளிநாட்டினர் பலரும், பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழும் நாட்டில் அவர்களின் விருந்தோம்பல், கோவில்கள், திருவிழாக்கள், சுற்றுலாத்தலங்கள், வாழ்வியல் முறை, உணவுகளை விரும்புவதாகக் கூறுகின்றனர். அந்த ஈர்ப்பில் மயங்கியவர்கள் மீண்டும் மீண்டும் வந்து செல்கின்றனர். என்னதான் குப்பையும் இரைச்சலும் ஏமாற்றுக்காரர்கள் சிலர் இருந்தாலும் மேற்கூறிய சில முக்கிய அம்சங்களால் கவரப்படுவதை வெளிநாட்டுநண்பர்களும் கூறகேட்டிருக்கிறேன்.

ஸ்காட்லாண்டிற்கு வருகை தரும் மக்களின் அனுபவமும் அவ்வாறே இருக்கிறது. இயற்கை வளம் , வரலாறு, மனிதர்கள், மொழி, இசை, கலாச்சாரம் என்று ஸ்காட்லாண்டில் ஒவ்வொன்றும் பார்வையாளர்களைக் கவர தவறவில்லை. அந்த நாட்டிற்குச் செல்லும் அனைவரும் அதன் பரந்த நிலப்பரப்பு, ஆறுகள், ஏரிகள், வளைந்து செல்லும் சாலைகள், இயற்கைக் காட்சிகள், அழகான கோட்டைகளில் மனம் மயங்குவது உறுதி.

பார்க்கும் இடங்கள் அனைத்துமே அழகான புகைப்படக்காட்சிகளாகக் கண்களை நிறைக்கிறது. அங்குச் சந்தித்த வெளிநாட்டுப் பிரயாணிகளிடம் பேசிய பொழுது கண்கள் விரிய இதனை ஆமோதித்தார்கள்.

‘செயின்ட் ஆண்ட்ரூஸ் – இன்வெர்னஸ்’ செல்லும் சாலைப் பயணம் முழுவதும் இயற்கைக் காட்சிகளுடன் உலா வருகிறது. வழியெங்கும் மூடு பனி மேகங்கள் மலைகளின் பைன் மரங்களைத் தழுவியபடி காட்சிதர, சுகமானபயணம். அவ்வப்பொழுது மழைத்தூறல்.


நாங்கள் சென்ற வழித்தடத்தில் பல அழகிய இடங்கள் இருக்கிறது என்பதை முன்பே அறிந்து வைத்திருந்தோம். ஆவலுடன் முதலில் நாங்கள் சென்ற இடம் ‘Queen’s View’. நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே செல்லும் வழியெங்கும் வரிசையாக ஓங்கி உயர்ந்து அணிவகுத்து நின்றிருந்த மரங்களின் காட்சியே அத்தனை அழகாக இருந்தது. கலிஃபோர்னியாவில் மவுண்ட்சாஸ்தாவிற்குச் செல்லும் வழியைநினைவூட்டியது. ‘குயின்ஸ்வியூ’ இடத்தைப் பற்றின அறிமுகம் இல்லையென்பதால் எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே சென்றது. ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயர்மலைகளில்அமைந்துள்ள ‘குயின்ஸ்வியூ’, வருகை தரும் அனைவரின் இதயத்தையும் கவரும் ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம்.

ஸ்காட்லாந்தின் நிலப்பரப்புகளை ‘பானோராமிக்’ காட்சியாக, விவரிக்க இயலாத அழகுடன் அனைவரின் மனங்களையும் கவரும் இந்த இடத்தைப் பயணிகள் தவறவிடக்கூடாது.

‘Loch Tummel’ என்னும் நன்னீர் ஏரி , சுற்றியுள்ள மலைகள் என்று கண்கொள்ளாக் காட்சியாகப் பிரமிப்பை ஏற்படுத்தும் இயற்கை அழகு அங்கு குடிகொண்டிருக்கிறது. அங்கு வருபவர்கள் இயற்கைக் காட்சிகள் தந்த பிரமிப்புடன் அங்கிருந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்களும் சிறிது நேரம் அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தோம். மாலைச் சூரியன் கருமேகங்களின் பிடியிலிருந்து வெளியே வர எத்தனித்துக் கொண்டிருந்தான். Loch Tummelன் மின்னும் நீர் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும். வானத்தைப் பிரதிபலிக்க, பசுமையும் அமைதியும் எழிலும் சூழ்ந்த அந்த இடத்திலேயே தங்கிவிட வேண்டும் போல் இருந்தது.

ஸ்காட்லாந்து அரசி அங்கு வந்து அற்புதக் காட்சியை ரசித்துவிட்டுச் சென்றதால் “குயின்ஸ்வியூ” என்று பெயர் பெற்றிருக்கிறது. பெயர்க்காரணத்திற்கு வேறு பல கதைகளும் இருக்கிறது😃.

பல நூற்றாண்டுகளாக அரசகுடும்பத்தாரையும் சாமானியர்களையும் கவர்ந்த இடம். சிறிது நேரத்தில் அங்கே சிறு குழந்தைகளுடன் இரு குடும்பங்கள் சேர்ந்துகொண்டது. சரியான ‘ரெட்டை வால் ரெங்குடுகள்’. பாறையில் சறுக்கி விளையாடுவதும் கீழே விழுந்து புரள்வதும் என்று கலகலப்பாகஇருந்த குழந்தைகள் கொள்ளைஅழகு💖பெற்றோர்கள் கட்டியணைத்தபடி கைப்பேசியில் புகைப்படங்களை எடுப்பதில் மூழ்கியிருந்தார்கள். அந்தக் குழந்தைகளோ பாறைகளில் தாவுவதும் ஓடுவதுமாய் எனக்குத்தான் பயமாக இருந்தது. “இளங்கன்று பயமறியாது” என்பதை அவர்களிடத்தில் கண்டேன்.

மிடுக்கான பாரம்பரிய உடையில் வனக் காவலர் ஒருவருடன் இரு பயணியர் வர, பேச்சு களைகட்டியது. மலைகளில் மரங்களை வளர்த்து வெட்டி இங்கிலாந்திற்கு அனுப்புவதால் நல்ல வருமானம் கிடைக்கிறது என்று கூறினார். அங்கிருந்து தெரியும் தீவுகளைப் பற்றியும் விரிவாகப் பேசினார். நிறைய தகவல்கள். வனக்காவலருக்கு நன்றி கூறி விட்டு மீண்டும் தொடர்ந்தது எங்கள் பயணம்.

“மலைகளில் எங்கு சென்றாலும், நாம் தேடுவதை விட நமக்கு அதிகமாகவே கிடைக்கும்.” இயற்கை ஆர்வலர் ஜான் முய்ர்-ன் கூற்று. மெய்ப்பித்துக் கொண்டே இருந்தது ஸ்காட்லாந்து.

தொடர்ந்த பயணத்தில் இப்பொழுது இருபுறமும் பரந்து விரிந்த மலைகள். நடுவே நீண்டசாலை. கலிஃபோர்னியாவின் ‘Death Valley National Park’ ஐ நினைத்துக் கொண்டோம். நிலப்பரப்பு மாறிக்கொண்டே வர, “Welcome to the Highlands” பலகை வரவேற்க, மூடுபனி தழுவிச் செல்லும் மலைமுகடுகள், மழையில் நனைந்த சாலைகள், மலையடிவாரத்தில் சீறிச் செல்லும் ரயில் என்று அழகுக்காட்சிகளுக்குக் குறைவில்லை.

ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹைலேண்ட்ஸ்ன் கரடுமுரடான அழகு, காலத்தால் அழியாத வசீகரம். பரந்து விரிந்த நிலப்பரப்பில் விரவியிருந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க, ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தும் வசதிகள் வழியெங்கும் இருக்கிறது. கோடைகாலத்தில்அழகு மேலும் மெருகேறியிருக்கலாம். நாங்கள் சென்ற மழைக்காலத்தில் அப்பொழுதுதான் மரங்கள் துளிர் விட ஆரம்பித்திருந்தது. இங்கிலாந்து அரச குடும்பம் விடுமுறையில் வேட்டையாட, இயற்கையை ரசிக்க வந்து செல்லுமிடம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தொடர்ந்த அழகுப் பயணத்தில் வண்டியைப் பல இடங்களில் நிறுத்தி இயற்கையை, மலைகளை ரசித்துப் படமெடுத்துக் கொண்டோம்.
இயற்கையுடனே பயணிப்பதாலோ என்னவோ களைப்பே ஏற்படுவதில்லை. கூட்டம், போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணம். இருட்டுவதற்குள் ஊருக்குச் சென்று விட வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஒருவழியாக ‘இன்வெர்னஸ்’ நகரை வந்தடையும் பொழுது மணிஏழரை ஆகிவிட்டிருந்தது. நல்லவேளை இன்னும் இருட்டவில்லை.

நாங்கள் முன்பதிவு செய்திருந்த விடுதியில் சிறிது நேரம் ஓய்வுஎடுத்துக் கொண்டோம். நல்ல பெரிய விடுதி. அழகான ஆங்கிலத்தில் மிகவும் பணிவாக வரவேற்ற அலுவலர்கள் இனிமையாகப் பேசினார்கள். அங்கிருந்த வரவேற்பாளரிடம் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றித் தெரிந்துகொண்டோம். அரைமணி நேர தூரத்தில் உணவு விடுதிகளும் நகரின் மையப்பகுதியில் அழகான ஆறும் பழமையான கட்டடங்களும் இருப்பதைக் காண வாடகை வண்டியில் சென்றோம். ஈஷ்வருக்கும் கொஞ்சம் ஓய்வு வேண்டுமே. அதுவுமில்லாமல் அவர் மட்டுமே வண்டியை ஓட்டுவதால்
‘ஸ்காட்டிஷ் விஸ்கி’யைச் சுவைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்று வருத்தம்.

வாடகை வண்டியை ஓட்டி வந்தவர் ஒரு பஞ்சாபி. அட! இங்குமா? பதிமூன்றரை வருடங்களாக இங்கிலாந்திலும் கடந்த மூன்று வருடங்களாக ஸ்காட்லாந்தின் இயற்கையும் அமைதியும் தன்மையான மனிதர்களும் பிடித்துப்போய் ஸ்காட்லாந்தில் தங்கிவிட்டதாகக் கூறினார். அந்தப் பகுதியில் இருக்கும் சில இந்திய உணவகங்களையும் பரிந்துரைத்தார். தேவை என்றால் மறுநாளும் வருவதாகக் கூறி விடைபெற்றார்.

எங்கள் பயணத் திட்டத்தில் ‘இன்வெர்னஸ்’ என்ற இந்த ஊருக்கு முதலில் வருவதாக இல்லை. வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று கூகிள் செய்து பார்த்தால் பழமையும்,புதுமையும் கலந்த இயற்கை எழில் சூழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் என்றுஅறிந்துகொண்டோம். அப்புறம் எப்படி விடமுடியும்? எங்கள் பாதையிலிருந்து சற்று விலகி வடக்கே கொஞ்சம் பயணிக்க வேண்டியிருந்தாலும் பார்த்து விடுவது என்று முடிவெடுத்துதான்அங்குச் சென்றோம். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை😇

ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸின் மையத்தில் அமைந்திருக்கும் இன்வெர்னஸ், செழுமையான வரலாறு, பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் மற்றும் துடிப்பான கலாச்சாரத்தைக் கொண்ட ஒருஅழகிய நகரமாக இருக்கிறது. “ஹைலேண்ட்ஸின் தலைநகரம்” என்று அழைக்கப்படும் இன்வெர்னஸ், ஹைலேண்ட் கவுன்சிலின் நிர்வாக மையமாகவும் சுற்றியுள்ள கிராமப்புறங்களின் அழகுக்கான நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.

ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்கரையில் இயற்கைக் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இந்நகரத்தின் பெயர் கேலிக்மொழியில் “இன்பீர்நிஸ்”(அதாவது, ‘நெஸ் நதி’யின் முகத்துவாரம்) என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது. நெஸ் மற்றும் மோரேஃபிர்த் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் வர்த்தகம் மற்றும் பாதுகாப்புக்கான மையமாகவும் விளங்கி வருகிறது. அயர்லாந்தைப் போலவே ஸ்காட்லாந்திலும் இங்கிலாந்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடும் போர்களும் எழுச்சியும் நிகழ்ந்துள்ளன. 'ஜாகோபைட்' எழுச்சிகளின் போர்கள் முதல் சுதந்திரப் போர்கள் வரை பல்வேறு வரலாற்று நிகழ்வுகளில் இன்வெர்னஸ் முக்கிய பங்குவகித்துள்ளது.

இன்வெர்னெஸ்ஸில் உள்ள மிகவும் பிரபலமான வரலாற்றுத் தளங்களில் ஒன்று ‘இன்வெர்னஸ் கோட்டை’ ஆகும். ‘நெஸ்’ நதியை நோக்கி அமைந்துள்ள இந்தக் கோட்டை 19ஆம் நூற்றாண்டின் கட்டுமானமாக இருந்தாலும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இன்று, ‘இன்வெர்னஸ் ஷெரிஃப் நீதிமன்றமாக’ செயல்பட்டு வருகிறது. இந்தக் கோட்டையில் ‘மேக்பெத்’ கதாபாத்திரம் அரசரைக் கொல்வதாக ஷேக்ஸ்பியர் தன்னுடைய நாடகத்தில் இன்வெர்னெஸ்ஸைக் குறிப்பிட்டுள்ளார்.

நகரின் மையப் பகுதியில் ‘நெஸ்’ நதி செல்கிறது. கரையின் இருபுறமும் அழகான வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்கள் ,பார்வையாளர்களை ஈர்க்கும் விக்டோரியன் கட்டிடக் கலை, சிறு மலையின்மீது ‘இன்வெர்னஸ் கோட்டை’ என கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒன்றாக இணைத்து பார்வையாளர்களின் இதயங்களைக் கவரும் எழில் மிகு நகரம். ஆற்றங்கரைகளில் அழகான கடைகள், கஃபேக்கள் மற்றும் பப்கள். நாங்கள் சென்ற வேளை மாலை நேரம் என்பதால் கற்கள் பதித்த தெருக்கள் அமைதியாக இருக்க, உணவு விடுதிகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் இசையை ரசித்துக் கொண்டே மதுபானங்களை அருந்தியபடி அமர்ந்திருந்த கூட்டத்தைக் கண்டதும் நாங்களும் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தோம்.



துள்ளலான இசையை தன்னுடைய வயலினில் அசாத்தியமாக இசைத்துக் கொண்டிருந்த கலைஞன் அங்கிருந்த ஆண்களையும் தன்னுடைய இசையால் வசீகரித்துக் கொண்டிருந்தார்😍.பாரம்பரிய உடையில் இருந்தவரின் வயலின் இசையுடன் கிட்டாரும் சேர்ந்து கொள்ள, கொண்டாட்டமாக இருந்தது. ரசனையுடன் இருக்கிறார்கள் மனிதர்கள்! ஐரிஷ் இசையைப் போலவே துள்ளலான இசை. கேட்பதற்கு இனிமை.

ஆசை யாரை விட்டது? ஈஷ்வருக்கும் ஸ்காட்டிஷ் விஸ்கியை சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. விடுவாரா மனிதர்? இரவு உணவை முடித்து விட்டு அங்கிருந்த கடையில் சில பழங்களை வாங்கிக்கொண்டு விடுதிக்குத் திரும்ப வாடகை வண்டிக்காகக் காத்திருந்தோம்.

அந்தக் கடை வாசலில் போதைக்கு அடிமையான பெண்ணை வயதான இன்னொரு போதை ஆசாமி ஆசை வார்த்தைகள் கூறி அழைக்க, அந்தப் பெண்ணும் அவருடன் சேர்ந்து செல்ல கிளம்புகையில் அவளுடைய நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ வேகமாக வந்து அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். போதை மருந்து ஸ்காட்லாந்தையும் விட்டு வைக்கவில்லை! அந்தப் பெண்ணை நினைத்து வருந்தியபடி விடுதி வந்து சேர்ந்தோம்.

விடுதியில் சந்தித்த நபர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் மேலும் சில விஷயங்களை அறிந்து கொண்டோம். உள்ளூர் நிகழ்வுகள் அனைத்தும் ஹைலேண்ட் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ‘கேலிக்’ மரபுகளை கொண்டாடுகின்றன. நட்புக்குப் பெயர் பெற்ற இன்வெர்னெஸ் மக்கள், பார்வையாளர்களை இருகரங்களுடன் வரவேற்கிறார்கள். மெல்லிசையும், இயற்கை அழகும், நெஸ்நதியும், பொலிவுடன் நிமிர்ந்து நிற்கும் கட்டடங்களும் மனதை நிறைக்க, நகரின் பெயரைப் போலவே அன்றைய அனுபவமும் புதுமையாகஇருந்தது.

நகரின் தெற்கே இருக்கும் ‘Loch Ness’ நதியில் ‘மான்ஸ்டர்’ ஒன்று மறைந்துள்ளதாக மர்மகதை ஒன்று அங்கே நிலவுகிறது. சரியான ‘புரூடா பார்ட்டிகள்’ போலிருக்கே என்று நினைத்துக் கொண்டேன். படங்களில் குட்டி டைனோசர் போன்ற உருவத்தை வரைந்திருக்கிறார்கள். செல்லமாக ‘நெஸ்ஸி’ என்றும் அழைப்பார்களாம். என்னவோ போடா மாதவா😐இந்தக் கதை உனக்குத் தெரியாதா? ஸ்காட்டிஷ் மக்கள் அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று இவர் வேறு கூற, காலையில் எழுந்தவுடன் முதலில் அங்குதான் செல்கிறோம். நெஸ்ஸியைப் பார்க்கிறோம் என்று அடுத்த நாள் பயணத்திற்கான திட்டத்தைக் குறித்துக் கொண்டோம்.

மேற்கிலும் ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’ தொடரும் என்று அப்பொழுது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

மஞ்சும்மல் பாய்ஸ்

உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆரம்பத்தில் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் படத்தைப் பார்க்க வைத்துவிட்டார் இயக்குனர். சபாஷ். ஒரு நல்ல படத்திற்குக் குத்தாட்டமும் பெரிய நடிகர் பட்டாளங்களும் தேவையில்லை. அதுவும் மலையாளப் படங்களில் அதெல்லாம் ஒரு பெரிய விஷயமும் இல்லை. ஏனென்றால் அவர்களிடம் நல்ல கதை இருக்கிறது.தமிழ் திரைத்துறை உலகமோ கோடிகளில் பெரிய நடிகர்களுக்குக் கொட்டிக் கொடுத்து கதையில்லாமல் தலையில்லாத கோழிகள் போலத் திசை அறியாது ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த விதத்தில் இது நல்ல படம். போகிற போக்கில் இளைஞர்களின் அதீத ஆர்வம், குடியால் ஏற்படும் இன்னல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

ஊரில் சிறு வேலைகளைச் செய்யும் சாமானிய நண்பர்கள் குழாம் ஓணம் பண்டிகை விடுமுறையின் போது எங்குச் செல்வது என்று தீர்மானித்து கொடைக்கானல் செல்கிறார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்பே 'குணா' படப்பாடலான 'கண்மணி அன்போடு ,...நான் ... நான் எழுதும் கடிதம்...' என்று கேட்டவுடன் மதுரையில் 'வெற்றி' திரையரங்கத்தில் ஒரே ஆராவாரம்! எத்தனை நாட்கள் ஆயிற்று இப்படிப்பட்ட ரசிகர் பட்டாளங்களுடன் படத்தைப் பார்த்து! இதே திரையரங்கில் தான் 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்தோம். ஒவ்வொரு காட்சிக்கும் படத்தை விட குழந்தைகள், பெரியவர்களின் எதிர்வினைகள் தான் ரசிக்கும் படி இருந்தது. இந்தப்படத்திற்கு அதிகம் இளம்பெண்களும், ஆண்களும் வந்திருந்தார்கள்.

எங்கள் அருகில் தாயுடன் வந்திருந்த சிறுவன் ஒருவன் என்ன நடக்கிறது என்று சதா அவன் அம்மாவைப் போட்டு நச்சரித்துக் கொண்டிருந்தான். அவரும் பொறுமையாகக் காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தார். மலையாளப் படம். 'சப் டைட்டில்' ஆங்கிலத்தில் வருகிறது. தமிழில் வந்திருந்தால் சிறுவர்களும் ரசித்துப் பார்த்திருப்பார்கள். திரையரங்கில் முக்கால் சதவிகிதம் நிறைந்து விட்டிருந்தது. மக்களின் மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. நல்ல படம் எந்த மொழியில் இருந்தாலும் வெளிமாநிலங்களில் கூட வெற்றி பெறுகிறது.

இப்பொழுது இந்தப் படம் இன்னும் அதிக கவனம் பெறும். திரு.ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய பாணியில் இந்தப் படத்தை விமரிசித்திருக்கிறார். மலையாளிகளை "குடிகார பொறுக்கிகள்" என்று காறி உமிழ்ந்திருக்கிறார். என்னவோ தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் குடிப்பக்கம் தலையே வைக்காதவர்கள் போல. தமிழர்களையும் இதே போல வசைபாடுவாரா? பொது இடங்களில் இந்த குடிகாரர்கள் செய்து கொண்டிருக்கும் அநாகரீக செயல்களைக் கண்டிப்பாரா? அழகான மலைப்பிரதேசங்களில் பாட்டில் குப்பைகள். அதுவும் உடைந்த நிலையில். அங்குச் செல்லும் மனிதர்கள், விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில்.

இன்றைய நாளில் கொண்டாட்டம் என்றால் குடி, ஆட்டம், பிரியாணி என்றாகிவிட்டிருக்கிறது. பாவம்! வாழ்க்கை என்றால் இதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது பகுத்தறிவில்லாத சமூகம். இப்பொழுது போதை மருந்துகளும் சேர்ந்து விட்டிருக்கிறது.

'குணா' குகைக்குச் சென்ற பலரும் இந்தப்படத்தைப் பார்த்தவுடன் தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்திருப்பார்கள். உணராதவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. அடிபட்டுத் தான் திருந்துவார்கள்.

 

Tuesday, March 5, 2024

சௌராஷ்ட்ரா சமூகத்தின் மும்மூர்த்திகள்

கர்னாடக சங்கீத உலகில் மும்மூர்த்திகள் யார் என்பதைப் பலரும் அறிந்திருக்கக்கூடும். அவர்கள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆவர். இவர்களில் முதன்மையானவர் ஸ்ரீ தியாகராஜர். அவர் பாடிய கீர்த்தனைகள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவருடைய பிரதம சீடரும் குருவிற்கு நெருக்கமானவருமான ஸ்ரீ வேங்கட ரமண பாகவதர் ஆவார்.

சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த இவர், பாடிக் கொண்டே செல்லும் தன் குருவைத் தொடர்ந்து சென்று பாடல்களைக் கேட்டு ஓலைச்சுவடியில் குறித்து வைத்துச் சென்றதைத் தான் இன்று மக்கள் கற்றறிந்து பாடி மகிழ்கின்றனர். மகிழ்விக்கின்றனர். இவர் மட்டும் இல்லையென்றால் நமக்குச் சுவாமிகளின் கீர்த்தனைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்திருக்காது. எத்தகைய பேரிழப்பிலிருந்து அவர் நம்மைக் காப்பாற்றி உள்ளார்!

அவருடைய ஜன்ம நட்சத்திரம் மூல நன்னாளான இன்று (மார்ச் 3)ல் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவிலில் அவருடைய சன்னிதியின் முன்பு வீணை இசைக்கலைஞர்கள் ஸ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி வாசித்ததைக் கேட்க அருமை. சௌராஷ்டிரா சமூகத்தின் மும்மூர்த்திகளான ஸ்ரீ வேங்கட ரமண பாகவதர், ஸ்ரீ வெங்கடசூரி, ஸ்ரீநடனகோபால சுவாமிகள் மூவருக்கும் சிறப்புப் பூஜைகளும் அலங்காரங்கரங்களும் நடைபெற்றது.

 வீணை இசைக்குழு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறது.

கோவிலில் வீணை வாசிப்பைக் கேட்க அத்தனை அருமை. தெய்வீக வாத்தியம். ராகம். இசை என்று இந்த நாள் இனிய நாளாக அமைந்து விட்டது.



Sunday, March 3, 2024

சமூகம் என்று தெளியுமோ?

சமீபத்தில் ஆசையுடன் இந்தியாவிற்குச் சுற்றுலா வந்திருந்த தம்பதியர் இருவர் வடமாநிலத்தில் துன்பகரமான நிகழ்வை எதிர்கொண்டுள்ளனர். கணவரை அடித்துப் போட்டு மனைவியை ஏழு பேர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளனர். நேபாளுக்குச் செல்லும் வழியில் ஜார்கண்ட் மாநிலத்தில் 'டும்கா' என்னும் ஊரில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் டெண்ட் போட்டு இரவு தங்கியிருக்கிறார்கள். ஏழு இளைஞர்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அங்கு தான் அந்தப் பெண்ணுக்கு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்தியா வெட்கி தலைகுனிந்து நிற்கிறது.

செய்தியைப் படித்ததும் அந்த வெளிநாட்டுப் பயணிகளுக்காக மனம் வருந்தியது. அதுவும் அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூரம் வேறு யாருக்கும் வரக்கூடாது. வெளிநாட்டினர் அதுவும் பெண்கள் தனியாகப் பயணிப்பது அவர்களின் கலாச்சாரமாக இருக்கிறது. அங்கு தனியாகச் சுற்றுவது போல் இங்கும் சுற்ற ஆசைப்பட்டு வருகிறார்கள். பலருக்கும் நம் நாட்டை மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த மாதிரி தாக்குதல்களுக்கு அஞ்சுகிறார்கள். உள்ளூரில் பிறந்து வளர்ந்த நாமே பெண் குழந்தைகளைத் தனியாக அனுப்ப இன்று வரை பயந்து கொண்டு இருக்கிறோம். அப்படியிருக்க, இவர்கள் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். கொஞ்சம் அசட்டையாக இருந்திருக்கிறார்கள். எத்தனை ஆசையுடன் கனவுகளுடன் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வந்திருப்பார்கள். இனி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத வடுக்களுடன் வாழ வேண்டும். பெண்கள் இந்தியாவிற்கு வரவே அச்சப்படுவார்கள்.

இந்தக் கொடிய குற்றங்களைச் செய்த கழிசடைகளை ஈவு இரக்கமின்றி தண்டிக்க வேண்டும். கொடுக்கும் தண்டனை இனி எவரும் இத்தகைய கொடிய செயலை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது. ஆனால், நமக்கு வாய்த்த கனிமொழிகள் கொடுங்கோலர்களுக்குத் துணையாக மரணதண்டனை விதிக்கக் கூடாது என்று தையல் மெஷின் கொடுத்து வெளியில் உலவ விடுகிறார்கள். முதலில் இந்த அரசியல்வியாதிகளைத் தான் நாம் புறந்தள்ள வேண்டும். இவர்கள் தான் நாட்டுக்குப் பிடித்த கேடு.

நம்முடைய 200ரூபாய் கொத்தடிமைகள் வழக்கம் போல பாரதப் பிரதமரை தீராவிட பாணியில் இகழ்ந்து பதிவுகளைப் போட்டிருந்தார்கள். அந்த மாநிலத்தின் ஆளும்கட்சி இண்டி காங்கிரஸ் என்றவுடன் வாலைச் சுருட்டிக் கொண்டு மாற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

தவறு எவர் செய்தாலும் தவறு தான். இந்த விஷயத்தில் அரசியலைப் புகுத்த நினைத்து வழக்கம் போல் சூடு போட்டுக் கொண்டது திராவிட பைத்தியங்கள். ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது வெட்கப்படவேண்டியது ஆணினமே.

என்று பெண்கள் தனியாகப் பயமின்றி இரவில் வெளியே செல்ல முடிகிறதோ அன்று தான் உண்மையான விடுதலை. அதுவரையில் கழிசடைகளை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் பெண்கள்.

குடிக்கும் போதைக்கும் அடிமையான சமூகம் அச்சத்தைத் தருகிறது. அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் போதைமருந்து கலாச்சாரம். கண்டுகொள்ளாத திராவிடக்கட்சிகள். விழித்துக் கொள்ள வேண்டியது மக்களே!

மேற்கு வங்காளத்தில் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு நடந்த அநீதியை இன்னும் ஜீரணக்கவே முடியவில்லை. மணிப்பூருக்குப் பறந்து சென்ற கனிமொழி வகையறாக்கள், ராஹுல், பிரியங்கா காந்திகள் இன்று வரையில் மௌனம் காக்கிறார்கள். இது தான் இவர்களின் உண்மையான முகம்.

இலவசத்திற்கும் டாஸ்மாக்கிற்கும் போதைக்கும் அடிமையான சமூகம் என்று தெளியுமோ?


Monday, February 26, 2024

அமேசிங் பிரிட்டன் -4 - எடின்புரஃஹ் - செயின்ட் ஆண்ட்ரூஸ் பயணக்குறிப்புகள்


எடின்புரஃஹ் - செயின்ட் ஆண்ட்ரூஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.

எடின்புரஃஹ் - செயின்ட் ஆண்ட்ரூஸ் பயணக்குறிப்புகள்

“யுனைடெட் கிங்டம்” என்றழைக்கப்படும் பிரிட்டனின் அழகே அதன் மாறுபட்ட நிலப்பரப்பு தான். அயர்லாந்தில் கடலும் பாறைகள் நிறைந்த மலைகளும் சிறிய வீடுகளும் மனதையும் கண்களையும் நிறைத்தால் ஸ்காட்லாந்தில் பசுமை போர்த்திய மலைகளும் வெண்நுரையுடன் கடற்கரைகளும் ஏகாந்தமாக இருக்கிறது. எடின்புரஃஹ் நகரிலிருந்து ஒரு மணிநேரத் தொலைவில் ‘St.Abb’s Head’ என்னும் கடற்கரையோர கிராமத்திற்குச் சென்று வருமாறு நாங்கள் தங்கியிருந்த விடுதியின் காப்பாளர் ஏற்கெனவே கூறியிருந்தார். பெரும்பாலும் பயண நிறுவனங்கள் நாட்டின்/நகரின் முக்கிய இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்வார்கள். நமக்குப் பிடித்த இடங்களுக்கு அல்லது நாட்டின் அரிய அழகுப்பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் நாமே வண்டியை ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. ஒட்டிக்கொண்டுச்செல்வது அதைவிட நல்லது.அதனால் இந்த இடத்தைத் தவறவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

கருமேகங்கள் வான் உலா வர, சிறிது தூறலும் சேர்ந்து கொண்டது. சாலையோரங்களில் இதுவரையில் கண்டிராத அடர்ந்த மஞ்சள் நிறப்பூக்கள் ஆவாரம் பூக்களை நினைவுறுத்தியது. மழைக்காலத்தின் அழகைச் சுமந்து நின்ற மலைகளும் தொடர, காலையிலிருந்து மதியம் வரை பிரின்சஸ் தெருவில் நடந்த களைப்பே தெரியாத அளவிற்குப் போக்குவரத்து நெரிசல் இல்லாத ‘குளுகுளு’ சாலைப் பயணம். கடற்கரையோரத்தை நெருங்கும் பொழுது ‘டண்பர்’ நகரம் தென்பட்டது. காசா? பணமா? உள்ளே சென்று பார்க்கலாம் என்று வண்டியை ஒட்டிக் கொண்டு அமைதியான தெருக்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தோம். புதிதாக கட்டப்பட்ட அழகான பெரிய வீடுகள். பழமையைப் பறைசாற்றும் பழைய கல் வீடுகள் என்று ரம்மியமாக இருந்தது. அங்கிருந்தவர்களிடம் கடற்கரைக்குச் செல்லும் வழியைக் கேட்டுக் கொண்டு வந்தால் ஒரு தெருவில் நுழைந்தவுடன் சில அடிகளில் கடல் தெரிந்தது!

ஓரிருவர் நடைப்பயணம் சென்று கொண்டிருந்தார்கள். ஸ்காட்டிஷ் எல்லையில் இருக்கும் அழகிய நகரம் இது. கடற்கரையோர வீடுகள் எல்லாம் அமெரிக்க கடற்கரையோர வீடுகளைப் போல பிரம்மாண்டமாக இல்லாமல் எளிமையாக அதே நேரத்தில் ஒருவித அழகுடன் இருந்தது. ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கண்டால் யாருக்குத் தான் பிடிக்காது? ஓடிச்சென்று காலை நனைத்து நுரை பொங்க ஓடிவரும் அலைகளோடு விளையாட ஆசை இருந்தாலும் ‘சில்ல்ல்’லென்றிருந்த தண்ணீர் தொலைவிலேயே நிறுத்தி விட்டது😒 கடற்கரைக்கென்றே ஒரு வாசம் உண்டு. முகர்ந்தும் முகராமலும் கொண்டே கரையோரம் ஒதுங்கியிருந்த கடற்பாசி, ஓடுகளைத் தாண்டி சிறிது தூரம் மணலில் நடந்தோம். இளம்பெண்கள் இருவர் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தவர்களைச் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் மட்டுமே அப்பொழுது அங்கு இருந்தோம். பொங்கி எழும் அலைகளின் ஓசையைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. கடல் மேல் அலையாடிக் கொண்டிருந்த பறவைகள் அழகு😍

கரையின் மீதிருந்த வழிகாட்டியில் ‘ஜான் முய்ர் லிங்க்’ என்று எழுதப்பட்டிருந்தது. ஸ்காட்டிஷ் அமெரிக்கரான ‘ஜான் முய்ர்’ டண்பர் நகரில் பிறந்தவர். இயற்கை ஆர்வலர். காடுகளை, மலைகளைக் காத்திட போராடியவர். பல புத்தகங்களை எழுதியவர். பிரபலமானவர். அவருடைய பெயரில் கலிஃபோர்னியாவில் பெரிய பூங்காவே இருக்கிறது. அவருடைய பிறந்த நாடான இங்கும் அவரைக் கொண்டாடும் விதமாக நாட்டின் இயற்கைப்பகுதிகளைக் கண்டுகளிக்கும் விதத்தில் ‘ஜான் முய்ர் லிங்க்’ ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அதன் வழியே பயணித்தால் நாட்டின் அனைத்துச் சிறப்புமிக்க இயற்கைவளங்களையும் பூங்காக்களையும் கண்டுகளிக்கலாம். அதற்குப் பல மாதங்கள் தங்கி இருக்க வேண்டும் அல்லது உள்ளூர் ஆட்களாக இருக்க வேண்டும். இப்போதைக்கு இது போதும் என்று அங்கிருந்து நகர மனமில்லாமல்

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
கடல் மட்டுமா அழகு நுரைபொங்கும் அலை கூட அழகு
கரை மட்டுமா அழகு கரையோரவீடுகளும் அழகு…. பாடிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தோம்.

திட்டமிடாத பாதைகளில் செல்லும் பொழுது நாம் காணும் மனதிற்கினிய காட்சிகள் தான் பயணங்களைச் சுவாரசியமாக்குகிறது. நல்லவேளை! இந்த ‘Dunbar’ நகரைத் தவற விடவில்லை என்று நினைத்துக் கொண்டோம்.இன்னும் எத்தனை இடங்களில் நிறுத்தப்போகிறோம் என்று தெரியவில்லை. வழியெங்கும் அழகான காட்சிகள் கவர்ந்து கொண்டே இருந்தது. ஒரு வண்டி மட்டுமே செல்லக்கூடிய மலைப்பாதையில் நடந்து செல்லும் மனிதரைக் கண்டு அதிசயித்தோம்😀 மரங்களற்ற பகுதியில் கற்சுவர்கள் சூழ வீடுகள் கொள்ளை அழகு! தூரத்திலிருந்தே கடல் தெரிய, மலையின் உச்சிக்குச் சென்று கொண்டிருந்தோம்.

இப்பொழுது மக்கள் நடமாட்டம் சிறிது அதிகமானது போல் இருந்தது. கையில் surfing boardஐச் சுமந்து கொண்டு நீச்சல் உடையில் மக்களைப் பார்த்தவுடன் தெரிந்து விட்டது. எங்களுடைய அடுத்த மண்டகப்படி இங்கே தான் என்று. பலரும் வண்டியை நிறுத்தி அங்கேயே உடைமாற்றிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ‘Pease Bay Leisure Park’ அறிவிப்புப்பலகையைக் கடந்து கார் நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தினோம். நாங்கள் இருவர் மட்டும் தான் வெளிநாட்டினர். அங்கிருந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ளூர் ஆட்கள் தான். கடல் அலையில் சறுக்கி விளையாடுவது இவர்களின் பொழுதுபோக்கு போல😲 கடலில் கால் வைக்கவே எனக்கு நடுக்கமாக இருந்தது. காட்டான்கள்! வாளியில் தண்ணீர் பிடித்து வெயிலானாலும் சுடு தண்ணீரில் குளித்த பரம்பரை😄😇 இந்த விளையாட்டெல்லாம் எனக்கில்லை எனக்கில்லை😂 ஆனால் வேடிக்கைப் பார்க்கப் பிடிக்கும். நகரத்திலிருந்து ஒதுக்குப்புறமான இடத்தில் இருப்பதும் வார இறுதி என்பதாலும் நல்ல கூட்டம். பிரபலமான இடம் போலிருக்கிறது!

அங்கே விடுமுறையில் தங்கிச் செல்ல ‘மொபைல் ஹோம்ஸ்’ என்றழைக்கப்படும் அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக வீடுகளை விற்றுக்கொண்டிருந்தது நிறுவனம் ஒன்று. அந்த வீடு ஒன்றை வாங்கி கரையோரம் அதற்கென இருக்கும் இடத்தில் வைத்துவிட்டால் விடுமுறையை இன்பமாக கழி(ளி)க்கலாம் . கிட்டத்தட்ட நகரத்தில் வாழ்வதைப் போல தங்குபவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் கூட இருந்தது! விலை அதிகம் தான்! இதற்குப் பதிலாக அவ்வப்பொழுது அங்கிருக்கும் வாடகை வீடுகளில் தங்கிக்கொள்ளலாம். விவரமானவர்கள், வசதியானவர்கள் இந்த வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டுச் சம்பாதித்துக் கொள்ளலாம். காசிருந்தால் சொகுசு வாழ்க்கை வாழ முடியும். எங்கும்ம்ம்ம்ம்ம்….

யோசித்துக் கொண்டே கடந்து வந்தால் கடற்கரையில் நின்று கொண்டிருந்தோம். கருமேகங்கள் எங்கே மறைந்தனவோ? நீல நிற வானம். அதன் பிரதிபலிப்பில் கடல் கொள்ளை அழகு. டண்பரை விட இங்கே அலைகள் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. இதை விட என்ன வேண்டும் அலையில் சறுக்கி விளையாடுபவர்களுக்கு? ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அலையின் போக்கில் வளைந்து வளைந்து லாவகமாக விளையாடுவதைப் பார்த்தால் பயமும் வருகிறது! ஆனால் பயமின்றி சிறு குழந்தைகளும் டால்ஃபின்களைப் போல அலையாடிக் கொண்டிருந்தார்கள். கடலை ஒட்டியிருந்த மலைமுகடுகள் அயர்லாந்தின் ‘Cliffs of Moher’ஐப் போல இருந்தது. ஐம்பூதங்களும் ஆட்சி செய்து கொண்டிருந்த அழகு நேரம் அது! அலையாடுபவர்களையும் மலைகளையும் அலைகளையும் பார்த்துக்கொண்டு சிறிது தூரம் நடந்தோம். மலை மேலே நடந்து செல்லும் பாதை ஒன்றும் இருந்தது. எங்கே ‘ஹைக்கிங்’ போகலாமா என்று கேட்டு விடுவாரோ என்று பயம். நல்ல வேளை! ஈஷ்வர் அப்படியேதும் கேட்கவில்லை. அங்கிருந்து செல்ல மனமில்லாமலே நகர வேண்டியிருந்தது.

எங்களின் மலைப்பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் மூடுபனி பவனி வர, காட்சிகள் மறைந்து காற்றாடிகள் மங்கலாகத் தெரிய, ஒருவழிப்பாதை நீண்டு வளைந்து வளைந்து சென்று கொண்டே இருந்தது. வழியில் பெரிய காய்கறித் தோட்டங்கள். பண்ணைகளில் மாடுகளும் ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்ததை நின்று வேடிக்கைப் பார்த்தால், “யாரடா இந்த மனிதர்கள்?” என்று எங்களை வேடிக்கைப் பார்க்க ‘செண்பகமே செண்பகமே’ கூட்டம் சாலையை நோக்கி நகர்ந்து வந்தது. அத்தனையும் ‘கொழுகொழு’ மாடுகள்! இயற்கையாக விளைந்த புற்களை உண்டு வாழும் கால்நடைகளின் திரட்சியில் தெரிந்தது ஆரோக்கியம் !

ஒருவழியாக நாங்கள் பார்க்க வந்திருந்த ஊரை வந்தடைந்தோம். அமைதியான மீனவ கிராமம் அது! வீடுகள் எல்லாம் கொள்ளை அழகு! மீனவர்கள் என்றாலே ஏழ்மையும் குடிசை வீடுகளும் தான் நமக்குத் தெரியும். நகரத்தில் இருக்கும் சகல வசதிகளுடன் இங்கும் வீடுகள் இருக்கிறது!

குப்பைகள் எதுவுமில்லாத தெருக்களில் வரிசையாக வீடுகள். விடுமுறை நாள். மாலை நேரம் வேறு என்பதால் கடைகள் மூடியிருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு சிறிது தூரம் நடந்து கீழே இறங்கினால் மீன்பிடி படகுகளுடன் கடல். நண்டு, லாப்ஸ்டர் நிறைய கிடைக்கும் போல. அதைப்பிடிக்கும் கூடைகளைச் சங்கிலிகளில் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். நடுநடுவே கரடுமுரடான பாறைகள். சீரும் அலைகளுடன் ‘St.Abb’s Head’ மனதைக் கொள்ளை கொண்டது. கடற்பறவைகள் ஆனந்தமாக உலாத்திக்கொண்டிருந்தது. ‘க்ளிக்’. ‘க்ளிக்’. உள்ளூர்க்காரர் ஒருவர் அவருடைய வேனில் தங்கி அங்கேயே கேம்ப் போட்டு தனிமையை அனுபவித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார் ஒருவர்😊

பனியில் கடற்பாறைகள் மங்கலாகத் தெரிய, அக்கம் பக்கம் யாருமில்லாத பூலோகம் ஏகமாக இருந்தது😍 கரையைத் தொட்டுத்தொட்டுச் செல்லும் அலைகள் பாடும் ராகம் மட்டுமே ஆக்கிரமித்திருந்த அந்த இடத்தை வளைத்து வளைத்துப் படங்களையும் வீடியோக்களையும் எடுத்துக் கொண்டோம். ‘அவென்ஜர்ஸ் எண்ட்கேம்’ படத்தில் இந்த இடம் வருகிறது. (https://www.youtube.com/watch?v=Pl9lW_oxQHo)

கோடைக்காலத்தில் பூக்களும் பறவைகளும் வண்ணத்துப்பூச்சிகளும் நிறைந்து இருக்கும் என்று அறிந்து கொண்டோம். மலையேற்றம், கடல் விளையாட்டு, இயற்கை ஆர்வலர்களுக்கு நல்ல இடம். அமைதியான நேரத்தில் அங்குச் சென்றதும் கூட நல்லது தான்.

அங்கிருந்து திரும்பிச்செல்லும் பாதை வேறு வழியில் செல்கிறது. இரு வண்டிகள் எங்களைக் கடந்து சென்ற பிறகு நாங்கள் இருவர் மட்டுமே அந்தச் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தோம். வண்டியை நிறுத்தி விட்டு சிறிது தூரம் நடந்து செல்ல, மழைக்காற்று செல்லமாக வருடியது. ‘பச்சைப்பசேல்’ மலை மீதிருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கடல் தான். மாலைச்சூரியன் மேகச்சீலைக்குள் ஒளிந்து கொண்டிருந்தான். வெகு தூரத்தில் தனியே இருந்த வீடு அந்தச் சூழலுக்கு மேலும் அழகைச் சேர்த்துக் கொண்டிருந்தது. வார்த்தைகளால் விவரிக்க இயலாத இயற்கை அழகு அங்கே குடி கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. அங்கு வாழ்பவர்கள் பாக்கியசாலிகள்!

மழைத்தூறல் ஆரம்பிக்க, மலையை விட்டு கீழிறங்கி எடின்புரஃஹ் திரும்பினோம். குட்டையான சுற்றுச்சுவர்களுடன் வழியில் தெரிந்த வீடுகள் டப்ளின் நகரை நினைவூட்டியது. வரும் பொழுதே இரவு உணவை கடையில் வாங்கிக்கொண்டோம்.அருகில் குட்டியாக ஒரு காஸ் ஸ்டேஷன். வண்டி உபயோகிப்பவர்கள் குறைவோ? பேருந்துகளில் பயணிப்பவர்கள் அதிகம் இருக்கலாம். அமெரிக்கா வந்தால் இந்நாட்டு மக்களுக்கு மயக்கமே வந்து விடும்😂

விடுதிக்குத் திரும்பி அடுத்த நாள் செல்லவிருக்கும் ஊரைப் பற்றின தகவல்களையும் பார்க்க வேண்டிய இடங்களையும் குறித்துக் கொண்டோம். மழையில்லாத நாட்கள் அபூர்வம் தான் போலிருக்கு! எப்படி இருந்தாலும் திட்டமிட்டபடி செல்வது என்று தீர்மானித்து ஆனந்தமாக உறங்கி விட்டோம். மறுநாள் காலையில் சுவையான காலை உணவை விடுதியில் உண்டு ‘St.Andrews’ நோக்கிய பயணத்தைத் துவங்கினோம். பை, பை எடின்புரஃஹ்💖

பெட்ரோல் போடலாம் என்று வண்டியை நிறுத்தி விலையைப் பார்த்தால்…அய்யோடா! எப்படித்தான் இங்கே வாழ்கிறார்களோ😟அமெரிக்காவில் தான் விலை குறைவு போலிருக்கு! நான் யோசித்துக் கொண்டிருக்க, ஈஷ்வர் என்ன செய்தும் பெட்ரோல் போட முடியாமல் அருகிலிருப்பவர் மட்டும் எப்படிப் போட முடிந்தது என்று பார்த்துக் கொண்டிருந்தார். அவர் திண்டாடுவதைப் பார்த்து அருகில் இருந்தவர் வண்டியைக் கடையை நோக்கி நிறுத்தினால் மட்டுமே பெட்ரோல் போட முடியும் என்று விளக்கிய பின்னர் தான் எங்களுக்குப் புரிந்தது. என்னவோ போடா மாதவா! இப்படியெல்லாம் கூட இருப்பார்களா? என்ன மாதிரியான லாஜிக் என்று தெரியவில்லை. ஆனால், அந்த மனிதர் பேசியதைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும் நன்றாக இருந்தது. ஸ்காட்டிஷ் மக்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்💕ஒருவித ராகத்துடன் பேசுகிறார்கள்.

மழைத்தூறல் ஆரம்பித்து விட்டது. குறுகிய சாலையில் மழையும் துணைக்கு வர இனிதே தொடர்ந்தது எங்கள் பயணம். எங்கும் நிறுத்தாமல் சென்றால் ஒண்ணேகால் மணிநேரத்தில் St.Andrewsஐச் சென்றடைந்து விடலாம். நொறுக்குத்தீனிகள் நிறைய வாங்கிக்கொண்டோம்😋😋😋

வழியெங்கும் இயற்கை தாலாட்டுகிறது. கடலோரத்தில் அமைந்துள்ள மிக அழகான ஊர் இது. மழை நிற்பதும் தொடருவதுமாய் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் என்று தான் அங்கு சென்றோம். பிறகு தான் தெரிந்தது அது கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நிறைந்த ஊர் என்று. முதலில் நாங்கள் சென்ற இடம் St.Andrews Cathedral. திங்கட்கிழமை ஆதலால் வண்டியை நிறுத்த இடத்தைத் தேடி அலைய வேண்டியிருந்தது. சுற்றிச்சுற்றி வந்து எப்படியோ தேவாலயத்திற்கு அருகிலேயே இடம் கிடைத்து விட்டது. தெருக்களில் வண்டியை நிறுத்த கப்பம் கட்ட வேண்டும்! அமெரிக்காவிலும் இதே கதை தான்.

மழையும் நின்று விட்டிருந்தது. St.Andrews Cathedral, ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய மிடீவல் காலத்து தேவாலயம். உள்ளே சென்று பார்க்க 7.50பவுண்ட்ஸ் என்று தகவல் பலகையில் போட்டிருந்தார்கள்😧 உள்ளே சென்றால் கல்லறை இருந்தது. என்ன கொடுமைடா மாதவா! ஏமாற்றமாகி விட்டது எனக்கு😞 அயர்லாந்திலும் ஊருக்கு வெளியே அநேக தேவாலயங்கள் சிதைந்த நிலையில் கல்லறைகளாக மாறிவிட்டிருந்தது நினைவிற்கு வந்தது.

1158ல் கட்டப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் அங்கே இருந்ததற்கான அறிகுறியாக உயர்ந்த கோபுரங்கள், நுழைவாயில், சுற்றுச்சுவர்கள் உடைந்த நிலையில் பார்க்கவே பரிதாபமாக. முடிந்தவரையில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். யார் கீழே படுத்திருக்கிறார்களோ என்று உள்ளே நடந்து செல்லவே பயமாகத் தான் இருந்தது. மயான அமைதி தான்! அங்கிருந்து ‘St.Andrews Castle’க்கு நடந்தே சென்று விடலாம். ஃபய்ஃப் (Fife) என்ற ஊரில் அமைந்திருக்கும் 450 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட கோட்டை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. பிஷப்பின் தங்குமிடமாக, அரண்மனையாக, சிறைச்சாலையாக ஒவ்வொரு காலகட்டத்தில் இருந்துள்ளது. கடற்கரையோரம் அமைந்துள்ள அழகிய கோட்டையின் உள்ளே கோட்டை முற்றுகையிடப்பட்டதை, மிடீவல் போர்க்காலங்களில் நடந்த கொலை, சூழ்ச்சிகளை மிக அழகாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இதன் கீழே ஒரு சுரங்கமும் இருக்கிறது.

உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் முறையான தகவல்களை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறையினருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதில் மேற்கத்தியர்களை அடித்துக் கொள்ளவே முடியாது. இந்தியர்கள் நாம் மறந்துவிட்ட மிக முக்கியமான வரலாற்றுப்பிழை. அதனால் தான் பொய்களைச் சொல்லி நம்மை எளிதில் ஏமாற்றி வரலாறு என்று உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் படிக்க வைக்கிறார்கள். இனியாவது நாம் விழித்துக் கொள்வோமோ? இப்படித்தான் எதையாவது ஒன்றைப் பார்த்தால் நம் நாட்டில் கூடச் செய்திருக்கலாமே என்று தோன்றும்.

பேசிக்கொண்டே வண்டியை எடுத்துக் கொண்டு நகரின் மையத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களைக் காணச் சென்றோம். மீண்டும் வண்டியை நிறுத்த இடம் தேடி அலைந்து தொலைவில் நிறுத்தி விட்டு நடந்து வருகையில் குறுகிய தெருக்களையும் பிரமிக்க வைக்கும் வகையில் பழமையைச் சுமந்து நிற்கும் கட்டடங்களையும் காண அதிசயமாக இருந்தது. புராதன நகரம். இங்குள்ள பல்கலையில் தான் இங்கிலாந்தின் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட் மிடில்டனும் சந்தித்துக் கொண்டார்களாம். ‘தி கிரௌன்’ நெட்ஃப்ளிக்ஸ் தொடரில் காண்பித்தார்கள். அட! நாம் சென்று வந்த ஊராச்சே என்று மகிழ்ச்சியாக இருந்தது.

மாணவர்கள் இருக்கும் இடம் என்றால் இளமை ஊஞ்சலாடத்தானே செய்யும்😄 கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பட்டாளம் எங்கும். அதுவும் நம்மவர்கள் நிறைய கண்களில் பட்டார்கள்! 2022ல் ‘ஸ்காட்டிஷ் கறி அவார்ட்’ வாங்கிய ‘மரிஷா’ இந்திய உணவகம்! சப்வேயில் சிக்கன் டிக்கா கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இங்கும் இதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் ஏராளமான கோட்டைகளும் தேவாலயங்களும் இருக்கிறது. அங்கே ‘அவுட்லாண்டெர்’ தொலைக்காட்சித் தொடரை எடுத்திருக்கிறார்கள். நாங்கள் பார்த்து ரசித்த இடங்களைத் திரையில் நிச்சயமாக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதற்காகவே பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்துள்ளேன். ‘கால்ஃப்’ விளையாட்டு இங்கு தான் துவங்கியிருக்கிறது. அதன் தொடர்பான அருங்காட்சியகங்களும் இருக்கிறது. இந்த விளையாட்டை விளையாடுபவர்களுக்குப் பிடிக்கலாம். எங்கு பார்த்தாலும் மனத்தைக் கவரும் காட்சிகள் ஏராளம் இங்கு கொட்டிக்கிடக்கிறது. பயணிகள் பலரும் வந்து செல்லும் பிரபலமான ஊராக இருப்பதில் வியப்பேதுமில்லை.

இங்கிருந்து மூன்றரை மணி நேரத்தில் ‘இன்வெர்னஸ்'(Inverness) என்ற ஊருக்குப் பயணம். வழியில் பல இடங்களில் நிறுத்திச் சென்றாலும் கூட இரவு 9 மணிக்குள் சேர்ந்து விடலாம். இருட்டுவதற்குள் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவுடன் கிளம்ப , மழையும் சேர்ந்து கொண்டது.

இந்தப் பயணத்தில் ஒன்று மட்டும் நன்கு புரிந்தது. ஸ்காட்லாந்தைச் சுற்றிப் பார்க்க நாமே வண்டியை ஒட்டிச் செல்வதே நல்லது. சிறிய நாடாக இருந்தாலும், ஸ்காட்லாந்தின் ஒவ்வொரு மூலைக்குப் பின்னாலும் ஆச்சரியங்களும் வசீகரங்களும் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு இடமும் தந்த இனிய அனுபவத்துடன் ‘இன்வெர்னஸ்’ நோக்கிய பயணம் தொடர்ந்தது.

Wednesday, February 21, 2024

நல்ல மனம் வாழ்க!

சுவாரசியங்களுக்குக் குறைவில்லாதது மதுரை. காலையில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி வலம் வருகையில் மேலச்சித்திரை வீதியில் 'துறுதுறு'வென்று ஒருவர் காலை உணவை விற்றுக் கொண்டிருந்தார். அவரைப் பற்றி ஏற்கெனவே யூடியூபில் பார்த்திருக்கிறேன். நான்கைந்து எவர்சில்வர் தூக்குவாளிச் சட்டிகளில் இட்லி, வெண்பொங்கல், வடை, சட்னி, சாம்பாரை சைக்கிளில் எடுத்துக் கொண்டு வருகிறார். சமயங்களில் தக்காளி சாதம், புளியோதரையும் கிடைக்கிறது. விலையும் மிகக்குறைவு. மூடியிருக்கும் கடை வாசலில் அவற்றை இறக்கி வைத்து விட்டு நிமிருவதற்குள் வாடிக்கையாளர்கள் வந்து விடுகிறார்கள்.

தட்டின் மேல் இலையை வைத்து மக்கள் கேட்பதைப் பரிமாறுகிறார். அவரே அதிகாலையில் எழுந்து அனைத்தையும் சமைப்பதாகக் கூறினார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தன்னைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இந்தத் தொழிலை லாபநோக்கில் செய்யாமல் மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறியதைக் கேட்டதும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மிகவும் எளிமையாகவும் தன்னடக்கத்துடனும் இருந்தார். அவரைப் பற்றின காணொளிகளைப் பலரும் பகிர்ந்து வருவதைக் கூறியதும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டார். தான் கொண்டு வந்ததை ஒரு மணிநேரத்தில் விற்றுவிட்டு வீடு திரும்புகிறார்.

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார் அனைத்தும் சுவையாக இருந்ததாக என் கணவரும் கூறினார்.

காசுக்காக அலைபவர்களின் மத்தியில் இத்தகைய மனிதர்கள் தான் சிறுதுளி நம்பிக்கையை விதைக்கிறார்கள். மனிதம் பிழைத்துக் கிடப்பதும் இவர்களைப் போன்றவர்களால் தான். 

என் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதும் மனம் நிறைந்த சேவையைச் செய்பவரைக் கண்ட திருப்தியில் 'ஜனார்தனன் dhaa' வுடன் ஈஷ்வரையும் சேர்த்து ஒரு 'க்ளிக்'. கிடைப்பதில் திருப்தி கொண்டு வாழும் மனம் படைத்தவர்கள் வெகு சிலரே. அதோடு அடுத்தவர் நலன் கருதி இந்த வயதிலும் உழைத்துச் சாப்பிடும் இவர் போன்ற மனிதர்கள் வெகு அரிது!


வாழ்க வளமுடன்!







Monday, February 19, 2024

உணவு நகரம் - நீயா நானா?


முடிவு எப்படியும் நம்ம "மதுரை" தான் என்றாலும் பங்கெடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை. அதற்காகவே "உணவு நகரம்" பற்றின நீயா நானா நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்தேன். மதுரை சார்பில் பேசியவர் நன்றாகப் பேசினார். சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, விருதுநகர் என்று பலரும் தங்கள் நகரங்களின் உணவுகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசினர்.

ஆனால், உணவு நகரம் என்பதற்கு உணவுகள் மட்டுமே பிரதான தகுதி அல்ல என்பது என்னுடைய கருத்து. உணவுடன் கூடிய கலாச்சாரம் தான் உணவு நகரத்திற்கான சிறப்பைப் பெறுகிறது. அந்த வகையில் மதுரையை விட்டால் வேறு எந்த நகரம் அதற்கான தகுதியைக் கொண்டுள்ளது?

காலையில் விடிந்ததும் கடையில் விற்கும் காபியைக் குடித்து வழியில் அரிசி, கோதுமை, கேப்பை பிட்டு வாங்கிச் சாப்பிட ஒரு கூட்டம் என்றுமே இருக்கிறது. நடந்து உடலை ட்ரிம்மாக வைத்திருக்க நினைப்பவர்களுக்கு முளை விட்ட தானியங்கள், சூப்புகள். நடந்து முடிந்ததும் காபி, வடையை லபக்குபவர்கள் என்றுமே மதுரையில் அதிகம். உணவகங்களில் தோசை, பூரி, வடை என்று காலை உணவை நண்பர்களுடன் உண்டு களித்து மகிழும் கூட்டம் என்று மதுரையில் இன்று வரை வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள் இருந்து கொண்டிருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இதைத்தவிர, திகர்தண்டா, குருத்து, பருத்திப்பால் கடைகளும் உள்ளது. காலை இடைவேளை உணவாக வகைவகையான வடைகள் தள்ளுவண்டிகளில் குறைந்த விலையில் கிடைக்கிறது. சுவையாகவும் இருக்கிறது. சிலர், மாவையும் விற்கிறார்கள். வீட்டில் நாமே சுத்தமான எண்ணையில் பொறித்துக் கொள்ளலாம். ஆமவடை, உளுந்துவடை, தவளவடை, சீயம், வாழைப்பூ வடை, கார வடை என்று தினுசுதினுசாக கிடைக்கிறது.

மதிய உணவிற்கு கவலையே வேண்டாம். வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும் வசதிகள் இருக்கிறது. கொரோனா காலத்தில் துவங்கிய பழக்கம் இன்று வயதானவர்கள் மிகுந்துள்ள மதுரையில் பலருக்கும் அத்தியாவசியமானதாக மாறியுள்ளது. வீட்டில் சமைக்கும் அளவிற்கு இல்லாவிட்டாலும் சுவையும் நன்றாக இருக்கிறது. மகாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த வசதிகள் நிறைய இருக்கிறது. மகால் 6வது தெருவில் மதிய உணவை விற்கும் ராம்குமார் என்பவரிடம் நாங்கள் வாங்கிச் சாப்பிடுகிறோம். நன்றாக இருக்கிறது. ஒரு கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், மோர், சோறு என்று ஒருவர் நன்றாகச் சாப்பிட 110 ரூபாயில் வேலை முடிந்து விடுகிறது. உணவைக் கொண்டு வந்து கொடுப்பவருக்கு 20ரூபாய் கொடுத்தால் சமைக்காமலே மதிய உணவு கிடைக்கிறது. தேவைப்படும் பொழுது ஒரு அவசரத்திற்கு இத்தகைய உதவிகள் வேண்டியிருக்கிறது. தினமும் சாப்பிடுபவர்களும் உண்டு.

மதிய நேரத்தில் இளநீர் விற்பவர்களும் வாசலுக்கே வந்து விற்றுச் செல்கிறார்கள். அவர் வரும் நேரம் வாசலில் காத்திருந்து வாங்கிக் கொள்கிறார்கள் சுகவாசிகள்!

மாலை நேரம் சுடச்சுடக் கீரை வடை, தேங்காய் அடை, சொஜ்ஜியப்பம் தள்ளுவண்டிகளில் கிடைக்கிறது. வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடும் கூட்டம் எப்பொழுதும். இதைத்தவிர பஜ்ஜி, வடை என்று காபி கடைகளில் கிடைக்கிறது. மாலை மங்கும் நேரத்தில் இரவு நேரக்கடைகள் உயிர் பெறுகின்றன. புளியோதரை, எலுமிச்சை சாதம், இட்லி, தோசை என்று சிற்றுண்டிகளில் இரவு 10 மணி வரை வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

உணவகங்களில் எப்பொழுதும் கூட்டம். சிறு கடைகளில் நிரந்தர வாடிக்கையாளர்கள். எப்பொழுதும் சுவையுடன் தரத்துடன் இருந்த 'மாடர்ன் ரெஸ்டாரெண்ட்' இப்பொழுது மாறியிருக்கிறது😔 ஆ னால் சபரீஷ், கௌரிகங்கா, டெம்பிள் சிட்டி உணவகங்கள் மக்களுக்கு விருப்பமான உணவகங்களாக மாறியிருக்கிறது.

இதைத்தவிர ஏராளமான பிரியாணி, பரோட்டா கடைகள் முளைத்திருக்கிறது! என்ன! குண்டு குண்டு பரோட்டாவின் சுவையும் அளவும் வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. அல்லது எங்களுக்கு மட்டும் பிடிக்கவில்லையோ? சில கடைகளில் அதிக மசாலா இல்லாத பிரியாணியின் சுவை நன்கு உள்ளது.

இரவிற்கென்றே பட்டர் பன்னும் திரட்டுப்பாலும். இப்படி நேரத்திற்குத் தகுந்தாற் போல கிடைக்கும் உணவுகள் ஏராளம்.

இதைத்தவிர சந்தைகளில் அந்தந்தப் பருவங்களில் கிடைக்கும் பனங்கிழங்கு, நுங்கு, மாம்பழம், நெல்லிக்காய், சீத்தாப்பழம், அல்வா, மிக்சர், பட்டர் சேவு, முறுக்கு வகையறாக்கள் என்று நீளும் பட்டியல். வருடம் முழுவதும் சாப்பாட்டிற்குக் குறைவில்லாத நகரம் என்றால் அது மதுரை தான். இங்கிருக்கும் ஒவ்வொரு கடைக்கும் சென்று சாப்பிட வேண்டுமென்றால் இந்த ஜென்மம் போதாது. மதுரையைச் சுற்றின கழுதை எப்பொழுதும் இங்கேயே தான் சுற்றுமாம். அது போல, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்களின் மனமும் சுவையும் மதுரையை மட்டுமே சுவாசித்துக் கொண்டிருக்கும்.

கோவில் நகரம், திருவிழா நகரம் போல உணவு நகரம் என்பதும் மதுரைக்கே உரித்தானது.

சரி தானே ?
 













Tuesday, February 6, 2024

விவாகரத்தான பெண்கள் Vs பொதுமக்கள்


'நீயா நானா'வில் நடந்த "விவாகரத்தான பெண்கள் Vs பொதுமக்கள்" அத்தியாயத்தில் கூமுட்டைத்தனமாக ஒருவர் "இந்த மாதிரி பெண்கள் சமூகத்திற்கு நல்லதல்ல" என்று கூறினார். மணமுறிவால் பாதிக்கப்பட்ட பெண்களால் இளைய சமுதாயமும் கெட்டு விடும் என்று எப்படித்தான் பேச முடிகிறதோ? உண்மையிலேயே பாதிக்கப்பட்ட பெண்களின் துயரத்தை அறியாத மூடன். குற்றம் சொல்வதாக இருந்தால் அந்தப் பெண்களின் நிலைமைக்குக் காரணமான ஆண்களைத் தானே குற்றம் சொல்ல வேண்டும்? எடுத்தவுடன், "மணமுறிவால் பாதிக்கப்பட்ட பெண்கள் தனியாக வாழக் கற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. தவறான முன்மாதிரியாக இருக்கிறார்கள்" என்று பொதுவில் வந்து பேசுகிறார். அவரும் அவர் மனைவியும் 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டு செல்வது போல் ஏன் இந்தப் பெண்கள் அவர்கள் கணவர்களுடன் சமாதானம் செய்து கொண்டு செல்லவில்லை என்று கேட்கிறார்.

இப்படித்தான் பல ஆண்களும் பெண்களின் மீது குறைகளைக்கூறி ஆண் சமுதாயத்தைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள்.

கணவன், மனைவி உறவுக்குள் நடக்கும் சண்டைகள், மனவருத்தங்கள், கோபதாபங்கள் வெளியுலகத்திற்குத் தெரிய வரும்பொழுது மேற்சொன்ன நபர்களைப் போன்றவர்கள் உண்மையை உணராமல் கூறும் தவறான அறிவுரைகள் முடிவில் இருவரையும் வெகுவாகப் பாதிக்கிறது. திருமணம் செய்து கொண்ட பலரும் சேர்ந்து மகிழ்ச்சியாக குடும்பமாக வாழ் வேண்டும் என்று தான் வாழ்க்கையைத் துவங்குகிறார்கள். சில குடும்பங்களில் ஆணின் அதிகாரப்போக்கோ பெண்ணின் அலட்சியப்போக்கோ அல்லது அவர்களது குடும்பத்தார்களின் இடையீடோ அல்லது வேறு பல எதிர்பார்ப்புகளோ நிர்ப்பந்தங்களோ மணமுறிவிற்குக் காரணமாகி விடுகிறது.

எளிதில் பெண்களைக் குற்றம் சொல்பவர்கள் ஆண்களைச் சொல்வதில்லை. பிரச்சினை எங்கிருந்து துவங்கியது? எதனால் ஏற்பட்டது? சரி செய்யக்கூடிய விவகாரங்களா? இல்லையென்றால் பிரிவில் தான் பாதிக்கப்பட்டவருக்கு நிம்மதியா? என்று யோசித்துப் பார்ப்பதற்குள் பணம், உறவுகள், அந்தஸ்து என்று பிரிவினையை ஏற்படுத்துவதும் நடக்கிறது.

இந்த விவாதத்தில் பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் தங்களின் சுயசார்பில் குழந்தைகளை வளர்த்தாலும்பெற்றோர்களின் பிரிவால் பல மனவலிகளைச் சுமந்ததைக் கூறினார்கள். ஆம், மணமுறிவில் பாதிக்கப்படுவது ஒருவர் மட்டுமல்ல. அவர்களின் குழந்தைகளும் தான். அவர்கள் அனுபவிக்கும் துயரங்களும் ஏராளம். அன்புடன் அரவணைத்துச் செல்லும் குடும்பங்கள் அமைந்து விட்டால் நல்லது. இல்லையென்றால் நித்தம் நித்தம் துயரம். மனக்கசப்பு. கோபம். என்று எல்லா நிலைகளிலும் அவர்கள் வெளிப்படுத்துவார்கள். அமெரிக்காவில் பள்ளிகளில் இத்தகைய குழந்தைகளைக் கையாள, அறிவுரை கூற குழந்தை உளவியல் நிபுணர்கள் இருக்கிறார்கள். பெற்றோர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறார்கள்.

இந்தியாவில் இன்னும் அந்த அளவிற்குப் பள்ளிகளோ,அரசுகளோ குழந்தைகளின் மனநலன் மீது அக்கறை கொள்வதில்லை.

இந்த விவாதத்தில் பொதுமக்கள் சார்பில் பேசிய பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் வலியை உணராதவர்களாக பேசியது போல் தோன்றியது. நம் சமூகம்எப்படிப்பட்டது என்று புரிந்தும் தெரிந்தும் தெரியாதது போல் பேசினார்கள்.

மணமுறிவில் பாதிக்கப்படுவது பெண்கள் அதிகம் என்றாலும் ஒரு சில நல்ல ஆண்களும் அவர்களின் மனைவிகளால் அதிகம் மனஉளைச்சலுக்கு ஆள்கிறார்கள் என்பதையும் பாதிக்கப்பட்ட பெண்களைப் போலவே விவாகரத்தான ஆண்களின் தர்மசங்கடங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். வலி பொதுவானது. அதில்ஆண், பெண் பேதமில்லை.

சில பெண்கள் கூறியது போல, பிரச்சினையின்பொழுது உடனிருந்த குடும்பம் அந்தப் பெண்கள் தனியே வந்தவுடன் ஒரு கட்டத்தில் விலகிச் செல்ல, ஏன்டா திருமண பந்தத்தை விட்டு வெளியே வந்தோம் என்று தோன்றுவதும் நடந்து கொண்டு தானிருக்கிறது. மீண்டும் சேர வாய்ப்பு கிடைத்தால் சேர்ந்து விடுவேன் என்று கூறிய பெண்களுக்கு அன்றைய தேவை எல்லாம் சில காலம் பிரிந்திருந்து வாழ்ந்திருத்தல் மட்டுமே. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் மேலும் புரிந்து கொள்ள சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கும். தவறு யார் மீது என்று சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க வசதியாக இருந்திருக்கும். ஆனால், சுற்றியிருப்பவர்களின் தலையீட்டால் அநாவசியப் பிரச்சினைகள் வளர்ந்து ஒருவரை ஒருவர் வெறுக்கும் அளவிற்குச் சென்று பின் வருந்திக் கொண்டிருக்கும் நிலைமைக்கு ஆளாகிறார்கள்.

எதையும் ஆராயாமல் அறிவுரைகளை அள்ளித் தெளிப்பதை முதலில் மக்கள் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான கவுன்சிலிங் அளிக்க வேண்டும். அதுவும் பலனளிக்கவில்லையென்றால் தான் பிரிவைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பலருக்கும் பிரிவு ஒன்று தான் நிரந்தர தீர்வாக இருக்கும். குறிப்பாக, மனநோயாளிகளைத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு. இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் நரகம் தான்.


இன்று பெண்களும் படித்து பணியில் சேர்ந்து சுயமாகச் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் அளவிற்கு முன்னேறி விட்டதால் சைக்கோக்களின் சித்திரவதைகளுக்குப் பலியாகாமல் தப்பிக்க முடிகிறது.

என்ன ஒன்று? சமூகம் என்று சொல்லிக்கொண்டு திரியும் சில மக்கள் தான் இன்னும் வளராமல் கூமுட்டைத்தனமாகப் பேசிக்கொண்டு காயமுற்றவர்களை (ஆண்/பெண்) மேன்மேலும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல விவாதம்.

இனியாவது ஆணோ, பெண்ணோ விவாகரத்தாகியிருந்தால் அவர்களின் வலிகளை உணர்ந்து நடந்து கொள்ளும் மனிதர்களாக சமூகம் மாறட்டும். அவர்களுக்கு ஆதரவாக மனிதத்துடன் நடந்து கொள்ள முயற்சிப்போம்.



Monday, February 5, 2024

அமேசிங் பிரிட்டன் - 3 - எடின்புரஃஹ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 311ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் மூன்றாவது பாகம்.

அமேசிங் பிரிட்டன் - 3 - எடின்புரஃஹ் பயணக்குறிப்புகள்

மலையோடும் மழையோடும் நீண்டு கொண்டே சென்ற ‘ஹேட்ரியன்ஸ் வால்’ஐ நாங்களும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். அங்கிருந்து ஸ்காட்லாந்து செல்ல இரண்டரை மணிநேரம். நெடுஞ்சாலையை எதிர்பார்த்து இங்கிலிஷ் கிராமங்கள் வழியே செல்லும் வழியெங்கும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது! பரந்து விரிந்த பசும்புல் நிலப்பகுதிகளும், குறுகிய சாலைகளும், உயர்ந்த மரங்களும் கூடவே தொட்டுத்தொடரும் மழையும் இங்கிலாந்தின் புறநகர் பயணத்தை மேலும் மெருகூட்டுகிறது. இவையெல்லாம் அமெரிக்காவில் நாங்கள் வாழும் பகுதியில் கூட சாத்தியமென்றாலும் ஏதோ ஒரு தனித்துவமான அழகு அங்கு இருக்கிறது. புற்களின் இயற்கையான நிறமும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு வரும் கருமேகங்களும் அவ்வப்போது வந்து கொட்டி விட்டுச் செல்லும் மழையும் தூறலும் கூட காரணங்களாக இருக்கலாம்.

மலைப்பகுதியில் பயணித்துக் கொண்டு இருந்ததால் மூடுபனி வேறு சேர்ந்து கொண்டு அந்த இடத்தையே ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது. பனியில் தெரிந்தும் தெரியாமலும் இலைகளற்ற மரங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக ‘வாட்டர்கலர்’ ஓவியங்கள் போல இருக்க, மனதில் அழகாகத் தீட்டிக் கொண்டேன்😎 எல்லா இடங்களிலும் சிறிது நேரம் வண்டியை நிறுத்தி அமைதியான சூழலை அனுபவிக்கத் தோன்றும். நிறுத்துவதற்குத் தான் எங்கும் இடமில்லை. மனிதர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் இயற்கை தனித்து நின்று சொக்க வைக்கிறது. மனமும் மயங்குகிறது. நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றோம். எங்குச் செல்கிறோம்? செல்லும் வழி சரி தானா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூட அங்கு யாரும் இல்லை. ஜிபிஎஸ் தான் வழிகாட்டி. அதை மட்டுமே முழுமையாக நம்பி ஆளரவமற்ற சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தோம்.

மாலை நேரம். வானம் தெளிந்து அஸ்தமிக்கும் சூரியன் சிறிது நேரம் தலையை வெளியே நீட்டி விட்டு மறைந்து கொண்டிருந்தான். இப்பொழுது வீடுகள் நிறைந்த குடியிருப்புகள் வழியே சென்று கொண்டிருந்தோம். கலிஃபோர்னியாவின் ஃபால்சம் நகரின் புதிய குடியிருப்புப்பகுதிகளை நினைவூட்டியது. ஒவ்வொரு வீடும் கொள்ளை அழகு! மனித நடமாட்டமற்ற அமைதியான தெருக்கள். வீட்டு வாசலில் குட்டி டிரைவ் வே. அதில் சிறிய கார்கள் தான் நின்று கொண்டிருந்தது. அமெரிக்காவைப் போல டிரக்குகளும் ஜீப்களும் வேன்களும் பெரிய டிரைவ்வேக்களும் தென்படவில்லை!

சரியான பாதையில் தான் செல்கிறோமோ என்று ஈஷ்வருக்கு அடிக்கடி சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. ஆனாலும் ஜிபிஎஸ் சொல்வதை மட்டுமே நம்ப வேண்டிய நிலை. வேறு என்ன செய்வது? கடைகள் எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

சிறிது நேரத்தில் காற்றாலைகளுடன் மலைகள் தெரிய ஆரம்பித்தது. சரியான பாதையில் தான் செல்கிறோம் என்ற நம்பிக்கையும் பிறந்தது. மலையில் புற்களை நன்றாக வெட்டி ‘சம்மர் கட்டிங்’ போட்ட தலையைப் போல இருந்ததைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது😉 நெடுஞ்சாலை வழியாகச் செல்லாமல் புறநகர்ப்பாதைகள் வழியே சென்றதால் பண்ணைகள் பல கடந்து சென்றோம். அமெரிக்காவில் பண்ணைகள் என்றாலே தூரத்திலிருந்து தெரிந்து விடும். சிகப்பு வண்ணம் அடித்த பண்ணை வீடுகள், உள்ளே பால் பதப்படுத்தும் நிலையங்கள், கால்நடைகளுக்குத் தேவையான தீனிகளை வைக்க பெரிய உயர்ந்த சேமிப்புக்கிடங்குகள், விதவிதமான இயந்திரங்கள் என்று பண்ணைகளுக்கென்றே சில அடையாளங்கள் இருக்கும். இங்கோ, செம்மறியாடுகள், ஆங்கிலப் புத்தகங்களில் இருக்கும் அழகான வீட்டுப் படங்களைப் போன்ற வீடுகள், பரந்த புல்வெளிகள் என்று குறுகிய சாலைகளில் அமைந்திருந்த நிலப்பரப்பும் மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறது. சாலைகளில் பெரிய மரங்கள் இங்கு குறைவு தான். மேற்கில் கதிரவன் நித்திரை கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். மரங்கள் அடர்ந்த மலைக்குன்றுகள் வலம் வர, ஸ்காட்லாந்து எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தோம். மேகங்களைத் தழுவும் பனிமூட்டத்தில் சிக்கிக் கொண்டிருந்தான் அஸ்தமனத்துச் சூரியன்.


அழகான சாலைகளின் ஓரம் மஞ்சள் Daffodil பூக்கள் வசீகரிக்க, இலைகளுடன் மரங்கள் இருந்திருந்தால் அந்த இடமே சொர்க்கபுரி தான்! கதிரவன் மறைய, போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது வானம். அதிசயமாக ஓரிரு வண்டிகள் கடந்து சென்றது. மலைகளில் பனி இறங்கி மரங்களை அணைத்து நின்றது அழகு! குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து விட்டோம். மணி இரவு 8.30. இதோ நெருங்கி விட்டோம் ‘எடின்பர்க்’ என்று நான் நினைத்திருந்த ‘எடின்புரஃஹ்’ நகரத்தை!

அமெரிக்காவில் இருக்கும் வீடுகளை ஒப்பிடுகையில் சிறிய வீடுகள் தான்! வீடுகளின் முன் இருக்கும் புல்தரைகளும் சிறிய அளவில் தான் இருந்தது. எளிதாகப் பராமரிக்க முடியும். ஒரு குடும்பம் தங்கி இருக்க இந்த வீடுகளே போதுமானது. ஆனால், அமெரிக்காவில் எல்லாமே மெகா சைஸில் தான்😐

பெரிய சாலையில் வரிசையாகப் பெரிய வீடுகள். அதில் ஒன்றை தங்கும் விடுதியாக மாற்றிப் பராமரித்து வருகிறார்கள் ஒரு சைனீஸ் தம்பதியினர். அங்கு தான் நாங்கள் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தோம். நான்கு வாகனங்கள் இடித்துப் பிடித்துக் கொண்டு நிற்க முடியும் அளவிற்கு கார் பார்க்கிங் ஏரியா. வீட்டின் உள்ளே சென்றால் சிறிய அலுவலக அறை. நாங்கள் வந்து சேர்ந்த விஷயத்தைக் கூற, அங்கிருந்த ஆப்பிரிக்க இளைஞன் பெட்டிகளை எடுத்துக் கொண்டு மாடியிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். நான்கு அறைகள். இரண்டு பாத்ரூம்கள். மற்ற அறைகளில் ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியவில்லை. அத்தனை அமைதி. சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த பொழுது நடுஇரவில் கூச்சலும் கும்மாளமும் போட்டுக் கொண்டு அங்குத் தூங்கிக்கொண்டிருப்பவர்களைப் பற்றின பிரக்ஞை எதுவுமில்லாமல் கடந்து சென்ற குடிகார தடியர்கள் கூட்டம் நினைவிற்கு வந்தது. நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. ம்ம்ம்ம்ம்….

பெட்டிகளை வைத்து விட்டு அங்குச் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டோம். அந்த ஆப்பிரிக்க இளைஞர் படிப்பதற்காக வந்து அங்கேயே தங்கி இருக்கிறார். வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு “தாய்நாட்டை விட பரவாயில்லை. உள்ளூர் மொழி தான் பிரச்சினையாக இருக்கிறது” என்றார். விவரங்கள் அறிந்தவராகவும் நட்புடனும் ஆங்கிலத்தில் நன்றாகவும் பேசினார். காலை உணவைக் கீழே இருந்த கூடத்தில் வந்து சாப்பிடலாம். ‘சுடச்சுட’ கேட்டது கிடைக்கும். அதாவது, அவர்கள் வைத்திருந்த உணவுப்பட்டியலில் இருந்து என்றார். இருக்கு நல்ல வேட்டை என்று நினைத்துக் கொண்டேன்😜

காலாற சிறிது நடந்து விட்டு வரலாம் என்று வெளியில் வந்தால் சில அடிகளுக்குள் பேருந்து நிறுத்தம். அதைக் கடந்து சிறிது தூரம் சென்றால் வரிசையாக வீடுகள். நல்ல மேடான பகுதி தான். ஏறுவதற்குள் மலையில் ஏறுவதைப் போல மூச்சுவாங்கியது. கண்களை உறுத்தாத வண்ணங்களில் ஸ்டக்கோ சுவர்களுடன் மலர்த்தொட்டிகளுடன் வீடுகள். ஒவ்வொரு வீட்டையும் பார்த்து இது எனக்குப் பிடித்திருக்கு அது பிடித்திருக்கு என்று விலையைப் பார்த்தால் அடி ஆத்தீ! நீ அமெரிக்காவுக்கே திரும்பிப் போயிடு சிவாஜி மொமெண்ட் தான். கஷ்டம்😞

நாங்கள் தங்கியிருந்த அறை சிறியதாக😒 அடிப்படை பொருட்களைத் தவிர வேறு எதுவுமில்லை.அமெரிக்க விடுதிகளில் இருக்கும் அறைகளை விட சிறியதாக இருந்ததது😟 கஸின் கொடுத்திருந்த புளியோதரை, பழங்களுடன் அன்றைய இரவு உணவை முடித்து விட்டோம். மறுநாள் காலை சீக்கிரமே கிளம்பி நகரைச் சுற்றிப்பார்க்க வேண்டும். விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமிருக்கும் என்று ஆப்பிரிக்க இளைஞர் ஏற்கெனவே கூறியிருந்தது ஞாபகத்துக்கு வர, முழுநாளும் சுற்றிய களைப்பும் சேர, சீக்கிரமே தூங்கி விட்டோம்.

மறுநாள் எழுந்து தயாராகி சுவையான காலை உணவை உண்டு முடித்து பேருந்தில் ஏறி ‘பிரின்சஸ் தெரு’விற்குச் சென்றோம். அங்கே பேருந்துகளில் நடத்துநர் எல்லாம் கிடையாது. ஓட்டுநர் மட்டும் தான். வண்டியில் ஏறுபவர்கள் அவர் முன் இருக்கும் இயந்திரத்தில் பணத்தைப் போட்டால் அல்லது கிரெடிட் கார்டை தட்டினால் சீட்டு வருகிறது. ஓட்டுநரிடம் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்ததும் சொல்லி விடுங்கள் என்று கூறி அமர்ந்து கொண்டோம். பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களிடமும் பேசிக்கொண்டே வர, அவர்களே நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் கூறிவிட்டார்கள். அவர்களுக்கு நன்றி கூறி இறங்கி தெருவைப் பார்த்தால் அப்ப்ப்பப்ப்ப்பா!

ஒரு மைல் நீளத்தில் இருக்கும் தெருவில் புதுமையும் பழமையும் கலந்த கட்டடங்கள் வியப்பைத் தருவதாக இருந்தது. சிறு குன்றின் மேல் தெரிந்த கோட்டையோ ஸ்காட்லாந்தின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கிறது. காலம்காலமாக மன்னர்கள் ஆண்ட பூமி என்பதைப் பறைசாற்றும் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க (ஓல்டு சிட்டி)பழைய நகர கட்டடங்கள் ஒரு தெரு முழுவதும் ஆக்கிரமித்துள்ளது என்றால் அதற்கு இணையான தெருவில் நவீன வர்த்தக கட்டடங்கள் மிகுந்த ரசனையுடன் இருந்தது அழகு. கிங் ஜார்ஜ் III மகன்களின் பெயரால் அழைக்கப்படும் ‘பிரின்சஸ் தெரு’வில் அத்தனை கடைகள் இருக்கிறது! ஸ்காட்லாந்தின் தலைநகர் ‘எடின்புரஃஹ்’ என்பதாலும் சுற்றுலாவினர் அதிகளவில் வருவதாலும் எதைத்தொட்டாலும் குதிரை விலை தான். சுற்றுலாவிற்கு வந்து அங்கும் கடைகளுக்குச் சென்று ஷாப்பிங் செய்பவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கென்றும் கைப்பைகள் முதல் உடைகள் வரை ஒரு பாணி உள்ளது. அது தான் கவருகிறது போல! இங்கே விஸ்கி பிரபலம். அதற்காகவே அநேக கடைகள்! குடிமகன்களுக்குக் கொண்டாட்டமான நகரம்.

பிரின்சஸ் தெருவில் தனியார் வண்டிகளை நிறுத்த எங்கும் வசதிகள் இல்லை. பேருந்தில் செல்வது தான் நல்லது. வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு எளிதான முறையில் வந்து செல்ல ரயில்வே நிலையமும் பிரின்சஸ் தெருவின் மையத்தில் இருக்கிறது. நடந்து செல்லும் வழியில் நன்கு பராமரிக்கப்பட்ட “பிரின்சஸ் ஸ்ட்ரீட் கார்டன்ஸ்”. கோடைகாலத்தில் வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பூங்காவில் அத்தனைப் பூச்செடிகள், நிழல் தரும் மரங்கள், நடுவே நீரோடை, குழந்தைகள் ஓடிவிளையாட, பெரியவர்கள் இளைப்பாற என்று அனைத்து வசதிகளுடன் திவ்யமாக இருக்கிறது. அதைச் சுற்றிப்பார்க்கவே நிறைய நேரம் வேண்டும்! அங்கே அமர்ந்த நிலையில் “FORGET-ME-NOT ELEPHANT” எனும் குட்டி யானை வெண்கலச்சிலை. பார்த்ததும் பிடித்துப் போன சிலைக்குப் பின்னால் அப்படி ஒரு சோகமான வரலாறு😔


தெருக்களில் ஸ்காட்லாந்தின் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு ‘bagpipes’ என்னும் மரத்தாலான வாத்தியத்தை இசைப்பவர்கள் அதிகம் தென்பட்டார்கள். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் இசைக்கருவியில் இருந்து வரும் இசையும் அந்த நிலப்பரப்போடு ஒத்துச் செல்லும் விதத்தில் இருப்பது அழகு. இதிலும் ஸ்காட்டிஷ், ஐரிஷ் பேக்பைப்ஸ் என்று இருவகை இசைகள் பிரபலமாம். என்னுடன் பணிபுரிந்த மேலதிகாரி ஒருவர் ஐரிஷ் வம்சாவளியில் பிறந்தவர். நியூயார்க் தலைநகரில் உள்ளூர் விடுமுறை பேரணிகளில் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு தீயணைப்பு வீரர்களின் இசைக்குழுவினருடன் bagpipe வாசிப்பார். அவரவர் கலாச்சாரத்தைப் பெருமையுடன் அறிந்து கொண்டு புலமை பெறுவதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் அவர்களும் அதனை ரசிப்பதும் இப்படித்தான் பன்முக கலாச்சாரம் ஆரோக்கியமாக வளர்கிறது. நினைவுகள் எங்கெங்கோ செல்ல, சிறிது நேரம் இசையைக் கேட்டு விட்டு பணத்தைக் கொடுப்பவர்களும், சேர்ந்து நின்று படத்தை எடுத்துக் கொள்ளும் சுற்றுலாவினர்களின் கூட்டத்தைக் கடந்து அங்கிருந்த இடங்களில் எதைப் பார்ப்பது எதை விடுப்பது என்று தெரியாமல் மேலே தெரிந்த கோட்டைக்குச் செல்ல வழி கேட்டு நடந்தோம் நடந்தோம் நடந்து கொண்டே இருந்தோம். மேட்டில் வேறு நடந்து செல்ல வேண்டியிருந்தது.

“வாடகை வண்டியில் வந்திருக்கலாம் போல. ‘ஜல்’லுன்னு கோட்டை வாசல்ல கொண்டு வந்து விட்டுட்டுப் போறான். ம்ம்ம்ம்ம்”.

“நீ தான நடந்து ஊரைப் பார்க்கணும்னு சொன்ன?”

என்னை நானே நொந்து கொண்டு மூச்சு வாங்க ஏறிக்கொண்டிருந்தேன். ஓரிடத்தில் குறுகிய பாதையில் குறைந்தது 50 படிகளாவது இருந்திருக்கும். புகைப்படங்கள் அதிகம் எடுக்கப்பட்ட அழகான இடங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்களும் ‘க்ளிக்’கிக் கொண்டோம். புராதன கட்டடங்கள் பலவும் தற்பொழுது கல்லூரிகளாகவும் அரசு அலுவலகங்களாகவும் மாறியுள்ளது. பல நூற்றாண்டு கட்டடங்கள் சுற்றுலாவினரைக் கவரும் விதமாக சீர்கெடாமல் பராமரிக்கப்பட்டு வருவது தான் அந்நகரின் சிறப்பு.


வேடிக்கைப் பார்த்துக் கொண்டே “Edinburgh Castle” முன் வந்து சேர்ந்தோம். அப்படியொரு கூட்டம்! சில வாரங்களுக்கு முன்பே அனுமதிச்சீட்டு வாங்கியிருக்க வேண்டும். கூட்டம் குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டும் அங்கே சீட்டு கிடைக்குமாம். மற்ற நேரங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி என்றார்கள். விடுமுறை வாரத்தைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் பல இடங்களில் அரண்மனைகளைப் பார்த்து விட்டதால் ஒன்றும் ஏமாற்றமாக இல்லை. வெளியிலிருந்து பார்க்க கொள்ளை அழகு. உள்ளே இன்னும் அழகாக இருந்திருக்கும். சிறிது தூரம் வரை சென்று பார்த்துவிட்டு வர அனுமதித்தார்கள். படங்களை எடுத்துக் கொண்டோம். பல திரைப்படங்களை இங்கு எடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அருகிலேயே தங்கும் வசதிகளும் இருக்கிறது. வாடகை விலையைக் கேட்டால்…😲

வெளியே வந்தால் ‘ஸ்காட்டிஷ் விஸ்கி’ யுடன் மதிய உணவு சரியாக 12 மணிக்கு கிடைக்கும் என்று கூறி அதுவரையில் அந்தக்கடையில் கிடைக்கும் விஸ்கியின் தரம், செய்யும் முறை என்று விளக்கிக் கொண்டிருந்தார் ஊழியர் ஒருவர். சரி, ஊரைச் சுற்றி விட்டு வரலாம் என்று ‘bagpipers’களையும் மேலும் பல புராதன கட்டடங்களையும் கடந்து கற்கள் பதித்த சாலைகளில் சென்று கொண்டிருந்தோம். குப்பைகளே இல்லாத அகலமான தெருக்கள். நடுநடுவே பிரபலமானவர்களின் மிகப்பெரிய சிலைகள். மக்கள் நடந்து செல்ல ஏதுவாக, வண்டிகள் எதற்கும் அனுமதி இல்லை. நெருக்கமான கற்கட்டடங்கள். எங்கும் சுற்றுலாவினர். கைப்பேசியில் விதவிதமாக படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். சாலையின் நடுவே அந்தக்கால ‘டெலிஃபோன் பூத்’. இன்றைய தலைமுறையினருக்கு அது என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் நிச்சயம் அதிசயித்துப் பார்ப்பார்கள்!

‘ஓல்ட் டவுன்’ மற்றும் உலக பாரம்பரிய தளத்திற்குள்ளேயே, ‘ராயல் மைல்’ என்று ஒரு மைல் தூரத்திற்கு நீளும் தெருவில் கலாச்சார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அதிகமாக உள்ளது. ஒரு ‘ஸ்காட்ஸ் மைல்’ நீளம் இரண்டு அரசு குடியிருப்புகளை (கோட்டை மற்றும் ஹோலிரூட் ஹவுஸின் அரண்மனை) இணைக்கிறது, பழைய மற்றும் புதிய பாராளுமன்றங்கள், நீதிமன்றங்கள், தேவாலயங்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் பரந்த அளவிலான பூங்காக்கள், கடைகள், உணவகங்கள், கஃபேக்கள், பப்கள் என்று ஏராளமாக இருக்கிறது. அத்தனை துடிப்பான அழகான நகரத்தில் தெருவில் பிச்சை எடுப்பவர்களும் அதிகமாக இருந்தது தான் வியப்பாக இருந்தது! புலம்பெயர்ந்தவர்களைப் போல தென்பட்டார்கள். வயதானவர்கள் அதிகமாக இருந்தார்கள். வறுமை கொடியது. ம்ம்ம்ம்…

அங்கிருந்து பழமையான ‘பார்லிமெண்ட் ஸ்கொயர்’ சென்றோம். அங்கிருந்த ‘Mercat Cross’ என்ற கட்டமைப்பு அரச பரம்பரையினரின் சரித்திரத்தை உணர்த்துவது போல பல முத்திரைகளைத் தாங்கி நிற்கிறது. நகரைச் சுற்றிப்பார்க்க வழிகாட்டிகள் பலரும் உள்ளனர். அவர்களுடன் சென்றால் அங்கிருக்கும் ஒவ்வொரு இடத்தைப் பற்றின வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இங்கிலாந்தைப் போலவே இங்கும் ‘ghost tours’ என்று அழைத்துச் செல்கிறார்கள். அதனால் தான் ‘ஹாரி பாட்டர்’ மாதிரி கதைகள் அத்தனை பிரபலமாகியிருக்கிறது போலும்! அதனை வைத்தே நன்கு காசு பார்க்கிறார்கள். அந்நாட்டின் பிரபல நூலாசிரியர் ‘Sir Walter Scott’ ஐப் போற்றும் விதமாக ‘Scott Monument’ ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். ஒரு நூலாசிரியருக்காக உலகில் எழுப்பப்பட்ட இரண்டாவது பெரிய நினைவுச்சின்னம் என்பதால் மிகவும் பிரபலமான இடமாக உள்ளது.

மதிய நேரம் நெருங்க, பசிக்கவே எங்கு செல்வது என்று குழப்பம். உணவகங்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் காத்திருக்க வேண்டியிருந்தது. மதுக்கோப்பைகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு இவர்கள் எப்பொழுது சாப்பிட்டு முடிக்க? அங்கிருந்த இந்திய உணவகத்தில் மட்டும் தான் கூட்டம் இல்லை. சுவை நன்றாக இருந்தாலும் விலை தான்😲 நாங்கள் சென்ற பிறகு சுற்றுலாவினர் பலரும் அங்கு வந்துச் சாப்பிட்டார்கள். இந்திய உணவு அங்கும் பிரபலம் போலிருக்கு! அந்தத் தெருவில் மட்டும் மூன்று இந்திய உணவகங்களைப் பார்த்தோம்!

சாப்பிட்டு விட்டு மீண்டும் நடை. நடந்து நடந்து தான் இந்த ஊரைப் பார்த்து அனுபவிக்க முடியும். அதனால் கால், முட்டி, கணுக்கால் நன்றாக இருக்கும் பொழுதே சென்று விட வேண்டும்😔 சுற்றுலாப் பேருந்துகளில் அமர்ந்து கொண்டே ஊரைச் சுற்றிப்பார்க்கும் வசதிகளும் இருக்கிறது. தெருவில் ஒரு சிறுவனும் சிறுமியும் வாசித்துக் கொண்டிருந்த இசையை சிறிது நேரம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தோம். திறமைசாலிகள்! பலரும் காசுகளைப் போட்டுவிட்டுச் சென்றார்கள்.

இப்படி ஒவ்வொரு இடத்தையும் பார்த்துக் கொண்டே ராயல் மைல் சாலையின் முடிவில் இருக்கும் ‘Holyrood Palace’ வந்து சேர்ந்தோம். ஸ்காட்லாண்ட் வந்தால் இங்கிலாந்து அரசி தங்கும் அரண்மனை. ‘Edinburgh Castle’ல் ஆரம்பித்த ராயல் சாலை Holyrood Palace’ல் வந்து முடிகிறது. அருகிலேயே ஸ்காட்டிஷ் பார்லிமெண்ட் கட்டடம் உள்ளது. எதிரில் இருக்கும் மலையில் ஏறினால் அந்த தெரு முழுவதையும் உச்சியிலிருந்து பார்க்க நன்றாகத் தான் இருக்கும். இளவட்டங்கள் ஏறிக்கொண்டிருந்தார்கள். எனக்கோ நடந்து நடந்து கால்கள் சலித்துப் போயிருந்தது. இப்பொழுது மீண்டும் வந்த வழியே நடந்து சென்று பேருந்து நிறுத்தத்திற்குச் செல்ல வேண்டும். நினைத்தாலே மலைப்பாக இருந்ததால் மலை ஏறும் நினைப்பை விட்டு விட்டு நடக்க ஆரம்பித்தோம்.

பேருந்தைப் பிடித்து விடுதிக்கு வந்து சிறிது நேரம் இளைப்பாறிய பிறகு எங்கு செல்வது என்று யோசித்தோம். அயர்லாந்தில் அட்லாண்டிக் கடற்கரையோரம் பயணித்தது போல ஸ்காட்லாந்தில் செய்ய முடியவில்லை. அதனால் ஒன்றைமணிநேரத் தொலைவில் கடற்கரையோரம் இருக்கும் ‘St.Abb’s Head’ என்னும் அழகிய கிராமத்திற்குச் சென்று வர தீர்மானித்தோம். அங்கு எங்களுக்கு இனிய அனுபவம் காத்திருக்கும் என்று அப்பொழுது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

Sunday, January 21, 2024

அமேசிங் பிரிட்டன் - 2- யார்க் , ஹேட்ரியன்ஸ் வால் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 310ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் இரண்டாவது பாகம்.  

யார்க் , ஹேட்ரியன்ஸ் வால் பயணக்குறிப்புகள்

பயணங்களின் சுவாரசியமே வழியில் காணும் காட்சிகள் தான். நாம் செல்லப்போகும் இடங்களைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருப்போம். ஆனால் வழியில் எதிர்பாராத காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்ளும். மழைமுகில்கள் தொடர, வழியெங்கும் பச்சைப்பசேல் புற்களும் மஞ்சள் நிற மஸ்டர்டு பூக்கள் பூத்துக் குலுங்கிய நிலங்களுமாய் மழைக்கால அழகு சாமரம் வீசிக்கொண்டிருந்தது. திகட்டத் திகட்ட ஷேக்ஸ்பியர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இடங்களைச் சுற்றிப்பார்த்து விட்டு பெரியப்பா மகள் வீட்டிற்குக் கிளம்பினோம். M69 சாலை வழியில் தென்பட்ட ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் நியூஇங்கிலாந்து மாநிலங்களிலும் உள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அமெரிக்கா வரை இருந்ததற்கான சாட்சி!

இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு குடியிருப்புப்பகுதிகள் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். அமெரிக்காவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலவமைப்பு. சிறியதாக, நேர்த்தியாக அணிவகுத்து நின்றிருந்த கற்கள் அல்லது செங்கற்கள் பதித்த வீடுகள். கஸின் வீட்டிற்கு நேரத்தோடு வந்து சேர்ந்து விட்டோம். அவர்களுடைய தனி வீடு கைக்கு அடக்கமாக இருந்தது. நிச்சயம் இந்திய அமெரிக்கர்கள் வசிக்கும் வீடுகள் இவர்களைப் பிரமிக்க வைத்திருக்கும்! பெரியப்பா மகளும் என் வயதினள். அவள் கணவர் அங்கு மருத்துவராகப் பணிபுரிகிறார். இவளும் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். விடுமுறை நாள் என்பதால் இருவரும் ஆற, அமர பேச முடிந்தது. மிக நன்றாகச் சமைப்பாள். சைவம், அசைவம் என்று அமர்க்களப்படுத்தியிருந்தாள். சாப்பிட்டு முடித்த பிறகு, பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம். பேசுவதற்கு விஷயங்களா இல்லை? அதுவும் பெண்கள் இருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது😛 எல்லார் மண்டையையும் உருட்டிய பிறகு தூங்கச் சென்றோம்😂

மறுநாள் காலையில் மிகச்சீக்கிரமாகவே தயாராகி இறங்கி வருவதற்குள் தட்டு இட்லி, தோசை, பூரி, மசாலா என்று மதுரைக்குச் சென்று வராமலே அனைத்தும் சுவையுடன் மேஜை மீது காத்திருந்தது. நன்றாகச் சாப்பிட்டோம். அங்கிருந்து நாங்கள் செல்லவிருக்கும் ‘யார்க்’ நகரத்தில் பார்க்க வேண்டிய இடங்களையும் அதற்குப் பிறகான பயணத்தைப் பற்றியும் பேசி முடித்தோம். ஸ்காட்லாந்து சென்று திரும்பும் வழியில் மீண்டும் வீட்டிற்கு வந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார்கள். பயணத்தின் போது நாங்கள் சாப்பிடுவதற்காக “புளியோதரை” கூடவே அவித்த தட்டைப்பயறு, சிப்ஸ், கடலை, ரொட்டி, பழங்கள் என ஒரு மூட்டை தயாராக இருந்தது. ஆகா! ‘குப்பா’ வீட்டுப்பெண் என நிரூபித்துவிட்டாளே என்று மனம் மகிழ்ந்தது. எங்கள் சமூகத்தினரின் புளியோதரையைச் சுவைத்தவர்கள் வேறு எந்த புளியோதரையையும் விரும்ப மாட்டார்கள். நாங்கள் விரும்ப மாட்டோம். அதனுடன் சைவ, அசைவ “சைட் டிஷ்கள்”, ஊறுகாய் வகைகள் என்று ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அதைப் பற்றி தனிக்கட்டுரையே எழுதலாம்!

பரிசுப்பொருட்கள், நொறுக்குத்தீனிகள் என்று மேலும் இரண்டு பெரிய பைகளுடன் அவர்களிடமிருந்து விடைபெற்று “யார்க்” நகரம் நோக்கிய பயணம் ஆரம்பமாயிற்று. குடியிருப்பு பகுதிகள் சிலவற்றில் ஒருபுறம் வண்டிகள் அணிவகுத்து நின்றிருக்க நெதர்லாந்து வீடுகளை நினைவுறுத்தியது. என்ன? அங்கு பார்க்கும் இடங்களில் எல்லாம் பசுமையும் கால்வாய்களும் இருக்கும். இங்கு கால்வாய்கள் இல்லை. அன்று தான் அந்நாட்டின் மன்னராக “சார்ல்ஸ்”ன் பதவியேற்பு விழா  நடைபெறுவதால் சாலைகள் ‘வெறிச்’சென்று இருந்தது. 

மழை மேகங்கள் தொடர, அழகான வானவில்லின் தரிசனமும் கிடைக்க, மனம் குழந்தையைப் போல குதூகலித்தது. மழைக்குப் பின்னே வானவில்லைத் தேடி படமெடுப்பது எங்களுக்குப் பிடித்த ஒன்று. அதுவும் இரட்டை வானவில் என்றால் அமெரிக்க நண்பர்கள் ‘பித்ருக்களின் ஆசீர்வாதம்’ என்று மகிழ்வார்கள். ரசித்தபடியே ஒன்றரை மணிநேரத்தில், புகழ்பெற்ற “York Castle”ஐச் சுற்றிப்பார்க்க வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

1068ல் கட்டப்பட்டுள்ள கோட்டை வளாகத்தில் நல்ல கூட்டம் இருந்தது. “யார்க் கோட்டை” அரச குடியிருப்பு, இராணுவம், சிறை உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோட்டையின் குறிப்பிடத்தக்க அம்சம் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட “Clifford’s Tower”. குன்றின் உச்சியில் இருக்கும் இந்த கோட்டை முதலில் மரத்தால் கட்டப்பட்டு பின் கல் கோட்டையாக உருமாறியுள்ளது. இங்கிலாந்தின் வடக்கில் நார்மன் இனத்தின் ஆதிக்கத்தின் அடையாளமாகச் செயல்பட்டு யார்க் நகரத்தையும் அதன் சுற்றியுள்ள பகுதிகளையும் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இன்று பார்வையாளர்களைக் கவரும் இடமாக வரலாற்றினை அறிந்து கொள்ள உதவுகிறது.

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயங்கள், கோட்டைகள், மிகப்பெரிய கட்டடங்கள், குறுகிய தெருக்கள் என்று நடந்து சென்று பார்க்கும் இடங்கள் இங்கு ஏராளம். பேருந்து வசதிகளும் இருக்கிறது. அங்கிருந்து பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கியமான “The Shambles” என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தெருவிற்குச் சென்றோம். 8வது நூற்றாண்டு கால வீடுகள், கடைகளைப் பராமரித்து வருகிறார்கள். அதைக் காண அத்தனை கூட்டம்! கற்கள் பதித்த குறுகிய, நீண்ட தெரு. கூட்டத்தோடு ஐக்கியமானோம். ஈஷ்வருக்கு அங்கே என்ன இருக்கிறது என்று மக்கள் இப்படி அடித்துப்பிடித்துக் கொண்டு வருகிறார்கள் என்று கேள்வி!

அங்கு இரு வீடுகளின் மேல் கட்டடங்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்வது போல நிற்கிறது. அத்தனை குறுகலான தெரு. நெருக்கமான வீடுகள். மெடிவல் காலத்தில் கசாப்புக்கடைகளாக இருந்திருக்கிறது. தற்பொழுது காலத்திற்கேற்ப துணிகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் விற்கும் கடைகளாக உருமாறியுள்ளது. ‘ஹாரி பாட்டர்’ தொடரில் வரும் ‘Diagon Alley’ இந்தத் தெருவை வைத்துப் புனையப்பட்டது என்பதால் அங்கு ஒரு கடையை வைத்திருக்கிறார்கள். ‘ஹாரி பாட்டர்’ ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். உள்ளே சென்று வர நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள்! எனக்குப் பிடித்தது முத்தமிட்டுக்கொள்வது போல நின்றிருந்த இரு கட்டடங்கள்! பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த தெருவின் சாராம்சத்தை மாற்றாமல் கட்டடங்களைப் பாதுகாத்து இன்றைய தலைமுறையினரும் கண்டுகளிக்க வசதிகள் செய்திருப்பது சிறப்பு. யார்க் என்றால் “The Shambles” என்றாகியிருக்கிறது.

அங்கிருந்து மிகவும் பிரபலமான ‘York Minister’ தேவாலயத்திற்குச் சென்றோம். தேவாலயங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வண்ண கண்ணாடிகள் காண்போரை வசீகரிக்கும். உள்ளே ஓரிடத்தில் தொலைக்காட்சியில் பட்டத்து இளவரசரை மன்னராக்கும் சடங்குகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. தேவாலய பங்குத்தந்தைகள் புடைசூழ மன்னருக்கு லண்டன் மாநகரில் ‘வெஸ்ட்மினிஸ்டர் ஆபி’யில் முடிசூட்டு விழா அரங்கேறிக்கொண்டிருந்ததைப் பலரும் புளங்காகிதமாக பார்த்துக் கொண்டிருக்க, மகுடம் சூட்டும் விழாவை நாங்களும் சிறிது நேரம் பார்த்தோம். 

‘யார்க் மினிஸ்டர்’ தேவாலயத்தின் பிரம்மாண்டம், விரிவான வேலைப்பாடுகள் அனைத்தும் கவரும் விதத்தில் இருந்தது. ஐரோப்பிய நகரங்களில் மிக அழகான தேவாலயங்கள், அதுவும் ‘gothic’ கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட அனைத்தும் அழகு. நாங்கள் இதற்கு முன் சென்று வந்த ஐரோப்பியா நாடுகளிலும் இப்படி ஏகப்பட்ட பெரிய தேவாலயங்கள். சில இடங்களில் வழிபாடு செய்யும் இடமாக இருந்தாலும் பல பெரிய தேவாலயங்கள் பயணிகள் வந்து செல்லும் இடங்களாக, காட்சிப்பொருட்களாக மாறிவிட்டிருக்கிறது. மேற்குலகில் கிறித்துவம் வீழ்ந்து விட்டதோ? அதனால் தான் கிறித்துவத்தை கிழக்கில் நிறுவ துடிக்கிறார்களோ? அமெரிக்காவில் என்னுடைய அமெரிக்க நண்பர்கள் பலரும் தேவாலயங்களில் நடந்த/நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு ஏதிஸ்ட்டாக மாறிவிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் நடக்கும் பேயாட்ட மதமாற்றக் காணொளிகளைக் கண்டு அதிர்ந்திருக்கிறார்கள்! இன்று வரையில் பங்குத்தந்தைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு அலைகிறார்கள். தொடர் சோகம்😌 இப்படி பல எண்ணங்களுடன் வெளியே வந்தால் தெருச்சந்திப்பில் நாட்டின் புதிய மன்னரை கௌரவிக்கும் பொருட்டு இசைவாத்தியங்கள் முழங்கிக்கொண்டிருந்தன. சிறிது நேரம் அதையும் கண்டுகளித்தோம். 

பிறகு அங்கிருந்த “ஷாம்பிள்ஸ் மார்க்கெட்” சதுக்கத்திற்குள் நுழைந்தோம். விதவிதமான உணவகங்கள், சாக்லேட் கடைகள்,பழங்கள், காய்கறிகள் சந்தை முழுவதும் நிறைந்திருந்தது. மதிய நேரம். உணவகங்களில் மக்கள் கூட்டம் ! பழங்களை வாங்கிச் சுவைத்துக் கொண்டே ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வெளியேறினோம். இங்கிலாந்து வரலாற்றில் ‘வைகிங்’ ஆட்சியாளர்களுக்கு இன்றியமையாத இடம் உள்ளது. அவர்களைப் பற்றின அருங்காட்சியகங்களும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல தீனி தான். காலையில் 11 மணியிலிருந்து மூன்று மணிவரை நடந்து நடந்து சுற்றிப்பார்த்தோம். சில பல படங்களை ‘கிளிக்’கிக் கொண்டோம். மொத்தத்தில் “யார்க் ‘ ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

அந்தக் குட்டி நகரத்திலிருந்து நெடுஞ்சாலைக்கு வருவதற்குள் பல குடியிருப்புப் பகுதிகளைக் கடக்க வேண்டியிருந்தது. சுத்தமான தெருக்கள், ஒரே மாதிரியான அடுக்கு வீடுகள் என்று எங்கும் எதிலும் இருந்த நேர்த்தி மேற்கத்திய நாடுகளுக்கே உரியது! அமெரிக்காவில் இல்லாத ஏதோ ஒரு அழகு இங்கிலாந்தில் இருக்கிறது. 

அடுத்து “Hadrian’sWall” என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்குப் பயணமானோம். இரண்டரை மணிநேரப் பயணம். வழியெங்கும் மஞ்சள் வண்ண ‘மஸ்டர்ட்’ மலர்கள் மலைகளில் வியாபித்திருந்தது அழகு. அதைப் பண்ணைகளில் வளர்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டோம்.

கருமேகங்களும் விடாப்பிடியாக எங்களைத் தொடர்ந்து கொண்டே வந்தது. நடுவில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி புளியோதரையைச் சுவைத்தோம். ஆகா! எங்கோ வனாந்தரத்தில் சுவையான வீட்டுச் சாப்பாடு! அம்மாவின் கைப்பக்குவதில் செய்தது போலவே அத்தனை சுவையாக! உப்பும், காரமும், புளிப்பும் சரிவிகிதத்தில்! தெய்வீகம்! கூடவே இன்ஸ்டன்ட் டீ மசாலா வேறு கஸின் கொடுத்திருந்தாள். சுடுதண்ணியைக் கலந்தால் டீ. அப்பவே சுடச்சுட! திவ்யம்! திவ்யம்! சுற்றிலும் பரந்த புல்வெளிகள்! செம்மறி ஆடுகள் இயற்கையாக விளைந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தது அழகு!

அங்கிருந்த பசும்புற்கள் கூட அத்தனை அழகாக இருக்கிறது! ஓரிடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தைக் கடந்து விட்டிருந்தாலும் மீண்டும் திரும்பி வந்து சிறிது நேரம் நின்று ஆட்டத்தை ரசித்து விட்டுத் தொடர்ந்தோம். வெள்ளைச்சீருடையும் மேலே ஸ்வெட்டரும் அணிந்த கிரிக்கெட் வீரர்கள். பால்ய நினைவுகள் நிழலாடியது😎 மழை தூற ஆரம்பித்து விட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எங்களைத்தவிர யாரையும் சாலையில் காணவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். சாலை குறுகிக் கொண்டே வளைந்து வளைந்து சென்றது. பெரிய வண்டிகள் எதிரில் வந்தால் காத்திருந்து வழிவிட வேண்டிய அளவிற்குச் சிறிய சாலை! உட்கார்ந்து ரசிக்கத்தக்க இடங்கள் ஏராளம். ஆனால் வண்டியை எங்கும் நிறுத்த முடியாது என்பதில் சிறிது ஏமாற்றம் தான். ‘வியூபாயிண்ட்ஸ்’ வைக்கும் அளவிற்கு இடமில்லை. அதனால் ஓடும் வண்டியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். ஈஷ்வர் தான் பாவம்😔.

ஆளரவமே இல்லாத இடத்தில் ஜிபிஎஸ் காட்டிய வழியில் சென்று கொண்டே இருந்தோம். மரங்களில் இலைகள் துளிர் விட்டுக் கொண்டிருந்த காலம். ஒருவேளை இலைகள் நிறைந்திருந்தால் அந்தப் பகுதியே மிக அழகாக இருந்திருக்கும். “தூறல் போடும் மேகங்கள் நானாக வேண்டும்” மனதிற்குள் ஒலிக்க, மேடும் பள்ளமுமாய் சென்று கொண்டிருந்தது சாலை. முடிவில் வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றது ஜிபிஎஸ். அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் பல மைல்கள் தொலைவிற்கு வளைந்து வளைந்து செல்கிறது சுற்றுச் சுவர். இதுதான் ஹேட்ரியன்ஸ் வாலா? அதற்குள் அதனைப் பற்றின தகவல்களை ஈஷ்வர் விவரித்திருந்தார். கைகாட்டி காட்டிய “ரோமன் ஃபோர்ட்”டின் உள்ளே செல்லும் பொழுது அலுவலகத்தை மூட தயாராகிக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்த இரு பெண்கள்!

“நாங்கள் அம்ரீக்காவிலிருந்து இதைப் பார்க்க ஓடோடி வந்திருக்கிறோம்” என்றவுடன் அங்கிருந்த ரேஞ்சர்களுள் ஒருவர் அந்த இடத்தைப் பற்றின வரலாற்றை விரிவாகக் கூறினார். இங்கிலாந்தின் வட பகுதியில் ரோமானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிரிட்டானியா மாகாணத்தை ஸ்காட்லாந்திடமிருந்து காத்துக் கொள்ள, கிழக்கு மேற்காக 73 மைல்களுக்கு (117 கிலோமீட்டர்) 15அடி உயரத்தில் கற்களால் சுவர் எழுப்பியிருக்கிறார் ஹேட்ரியன் என்ற ரோமானிய பேரரசர். பல இடங்களில் சுவற்றின் உயரம் குறைந்துவிட்டிருக்கிறது. ரோமானியர்கள் தாங்கள் எது செய்தாலும் அதை முறையாக ஆவணப்படுத்துவதில் கில்லாடிகள். தற்பெருமை மிக்கவர்கள். அதனால் வரலாற்றுப்பிழைகள் அவர்கள் வரலாற்றிலேயே இல்லை என்று அந்தப் பெண்மணி சிரித்தபடி கூறினார். அவர்கள் அப்படிச் செய்திருக்கா விட்டால் உண்மை நிலவரம் இத்தனை வருடங்களுக்குப் பிறகு நமக்கு எப்படி தெரியும்? வரலாறு முக்கியம்ல? அவர்களாவது உண்மையைப் பொறித்து வைத்திருக்கிறார்கள். நாம் பொய்களைத் தானே வரலாறு என்று படித்து இன்றைய தலைமுறையினருக்கும் கற்பித்துக் கொண்டிருக்கிறோம். பொய்களைக் கட்டமைத்து தமிழ்நாட்டில் ஆட்சி நடப்பதெல்லாம் … என்னவோ போடா மாதவா😡

‘ஹேட்ரியன்ஸ் வால்/ரோமன் ஃபோர்ட்’ யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இயங்குவதால் நன்கு பாதுகாக்கப்பட்டு பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறது. ரோமானியர்களின் கதைகளில் ஆர்வம் கொண்ட ஈஷ்வரும் கதைக்க ஆரம்பிக்க, நிஜமாகவே ஆர்வமுள்ளவர்கள் போல என்று நினைத்தாரோ என்னவோ ஒரு அரைமணி நேரமாவது எங்களுக்காகக் காத்திருந்து அந்த ரேஞ்சர் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கிருந்து ‘Northumberland National Park’ செல்லும் வழியைக் கூறி முடிந்தால் அதையும் பார்த்து விட்டுச் செல்லுங்கள் என்று கூறினார். கையில் கேமெரா இருப்பதைப் பார்த்து ஒரு பிரபலமான இடத்தைப் பற்றிக் கூறி அங்கே ஒற்றை மரம் இருக்கும். அழகான இடம். அதிகமான புகைப்படங்கள் எடுக்கப்பட்ட மரம். அங்கும் மறக்காமல் சென்று படமெடுத்துக் கொள்ளுங்கள் என்று அதனைப் பற்றின தகவல்களையும் வழியையும் கூறினார் .

அவருக்கு நன்றி கூறி விட்டு மழையில் நனைந்த படி சிறிது தூரம் சுவரோரம் நடந்து சென்றோம். வெளியே மழை ‘கொட்டோகொட்டெ’ன்று கொட்டிக் கொண்டிருந்தது. ஒரு இளம்பெண் கைகளை அசைத்துக் கொண்டே மழையில் துள்ளியபடி மனம் போன போக்கில் நடனமாடிச் சென்று கொண்டிருந்தது கொள்ளை அழகு! யாரைப் பற்றின கவலையேதும் இல்லாமல் கண்களை மூடியபடி நனைந்து சென்றவளின் ஆண் நண்பரும் குழாமும் முன்னே சென்று கொண்டிருந்தது. தன்னியல்பில் இருக்கும் பெண்கள் தான் எத்தனை அழகு! ம்ம்ம்ம்ம்….😍மழை தரும் பரவசம் நனைந்தவர்களுக்கு மட்டுமே புரியும் அதிசயம்💖

வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள். பரந்து விரிந்திருந்த பச்சைப்பசேல் புல்வெளி. மழை. அங்கிருந்து செல்லவே மனமில்லை. ஆனால் அந்தப் .பெண்மணி சொன்ன ஒற்றை மரத்தைப் பார்த்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து வண்டியை எடுத்துக் கொண்டு சாலைகளில் மீண்டும் பயணம். இருட்டிக் கொண்டு வேறு இருந்தது. நீண்ட சாலை. சென்று கொண்டே இருந்தது. சரியான பாதையில் தான் போகிறோமோ என்று சந்தேகம். யாரைக் கேட்பது? மனிதர்கள் யாரும் தான் கண்ணில் படவே இல்லையே😓 இப்பொழுது மழை முற்றிலுமாக நின்று விட்டிருந்தது.

விடுதி ஒன்று கண்ணில் பட்டதும் அங்கு இறங்கி நாங்கள் செல்ல வேண்டிய இடத்தைப் பற்றிக் கேட்டதும் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் வரைபடம் ஒன்றைக் கொடுத்து அந்த இடம் எங்கிருக்கிறது என்று காண்பித்தான். நன்றி கூறி அங்கிருந்து செல்ல, மீண்டும் மழை. சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் என்று சிலரைப் பார்த்தவுடன் தான் அப்பாடா என்றிருந்தது! அந்த மழையிலும் மலையில் சைக்கிள் ஒட்டிக் கொண்டு செல்பவர்கள் நிச்சயம் பணியிலிருந்து ஓய்வெடுத்தவர்கள் போலத் தெரிந்தார்கள்.

எங்களுடைய பெரும்பாலான பயணங்களில் குறிப்பாக, ஐரோப்பாவில் தம்பதியர் சமேதமாக ஊரைச்சுற்றிப் பார்க்க வருபவர்கள் பலரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார்கள். நாம் ஐம்பதிலும் ஆசை வரும் என்று பாடினால் அவர்கள் அறுபதிலும் ஆசை வரும் என்று பாடுகிறார்கள். பொறாமையாக இருக்கிறது! “வயசான அக்காடான்னு ஒரு இடத்தில உட்காரணும்”என்று சொல்லாத ஆட்கள் இருக்கும் வரையில் இவர்கள் உலகம் சுற்றும் வாலிபர்களாக இருக்கிறார்கள். நாங்கள் பார்த்த மனிதர்களும் படு ‘ஃபிட்’டாக இருந்தார்கள். அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டே மலையில் ஏறுவதும் இறங்குவதுமாய் தொடர்ந்தது எங்கள் பயணம்.

சாலையிலிருந்து சில மைல்களுக்கு நடந்து உள்ளே சென்றால் ஹேட்ரியன்ஸ் வால் அருகில் ‘சைகமோர் இடைவெளி’ மரத்தை அருகில் சென்று பார்க்கலாம். நேரமின்மை காரணமாக நாங்கள் சாலையில் நின்று படத்தை எடுத்துக் கொண்டோம். ஹாலிவுட் படங்களில் இடம்பெற்று பிரபலமாகியுள்ள இடத்தை நாங்கள் தவறவிடக்கூடாது என்று தகவல் மையத்தில் உள்ள ரேஞ்சர் உற்சாகமான குரலில் எங்களிடம் கூறியிருந்தார். இரண்டு மலைகளுக்கு இடையில் ஒரு அழகான இடத்தில் தனிமரமாக நின்றதைக் கண்டோம். அதிக புகைப்படம் எடுக்கப்பட்ட மரங்களில் ஒன்றாக இருந்ததில் ஆச்சரியமில்லை. தனித்து நிற்கும் மரங்கள் எல்லாம் ஒருவித அழகுடன் ஏதோ ஒன்றைக் கூறுவது போலவே இருக்கும். அல்லது எனக்கு அப்படித்தோன்றும். கலிஃபோர்னியாவில் பசிஃபிக் கடலோரத்தில் சைப்ரஸ் மரம் பாறையில் தனியே நின்று கொண்டிருக்கிறது. அதுவும் பிரபலமான இடம். ஆனால் மலை முகடுகளுக்கு நடுவில் இந்தத் தனிமையான மரம் அதீத அழகு! சில நேரங்களில் திரைப்படம் தயாரிப்பவர்கள் தேடிப்பிடித்து அழகழகான இடங்களைக் காண்பித்து விடுகிறார்கள். நல்ல வேளை! நாங்கள் தவற விடவில்லை. ரேஞ்சருக்கு நன்றி கூறிக்கொண்டோம். 

மீண்டும் மலைகள் சூழ்ந்த நீண்ட சாலைப் பயணம் . அங்கொன்றும் இங்கொன்றுமாக செம்மறியாடுகள் மலைகளில் ஹாயாக மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்க்க, பச்சை வண்ண சேலையில் வெள்ளைப் பூக்கள் போல அழகு💕

வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு சிறிது தூரம் அந்தச் சாலையில் நடந்து வந்தோம். அருகே தனியாக கற்கள் பதித்த பழைய வீடு ஒன்று இருந்தது. ஆங்கில புதினங்களில் பார்த்த படங்களை நினைவூட்டும். அதையொட்டிய சாலையில் நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லலாம். நாங்கள் வண்டியை எடுத்துச் சென்று பாதை குறுகியவுடன் படபடத்துத் திரும்பி வந்தோம். நாயுடன் வந்த பெண்மணி, “ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி விட்டேன். உங்கள் வண்டி பெரியதாக இருக்கிறது. எதிரில் வண்டி வந்திருந்தால் கஷ்டம். நல்ல வேளை! நீங்களே திரும்பி விட்டீர்கள்.” என்று கூறி சிறிது நேரம் அந்த இடத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். “நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்” என்று கூறி விடைபெற்றோம்.

இப்படியே நேராகச் சென்றால் இயற்கை எழில் கொஞ்சும் ‘Northumberland National Park’ வரும். அங்கு பலவிதமான மரங்கள், செடிகள், பறவைகள் இருக்கிறது என்று அவர் வேறு ஆசையைக் கிளப்பி விட்டார். நாங்களும் பாதி தூரம் வரை செல்லலாமா என்று கூட யோசித்தோம். ஆனால் திட்டமிடாமல் செல்வதில் அர்த்தமில்லை என்று ஆசைக்காக சாலையில் சிறிது தூரம் நடந்து விட்டு ஸ்காட்லாந்து நோக்கி வண்டியைத் திருப்பினோம்.

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...