Sunday, December 23, 2012

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

என் பள்ளிபடிப்பு முழுவதும் கிறிஸ்துவ பள்ளிகளில் படித்ததால், கிறிஸ்துமஸ் பற்றிய ஞானம் கொஞ்சம் உண்டு. அப்போது கிறிஸ்துவ பள்ளிகளில் நுழைவாயிலின் மேல் ஒரு கொட்டகை போல் செய்து, வால் நட்சத்திரம் மாட்டி, கொட்டகையின் உள்ளே குழந்தை இயேசு புல்கட்டில் படுத்தபடியே இருக்க சுற்றிலும் மேரி, ஜோசப், வானதூதர், மூன்று அரசர்கள் பரிசுகளுடன் இருப்பது போன்ற பொம்மைகள் இருக்கும். மாலையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த கொட்டகை சாலையில் போகும் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

அரையாண்டு தேர்வுகள் முடிந்து வரும் லீவு நாளில் இந்த கொண்டாட்டம் வரும். வீட்டிற்கு அருகிலேயே St.Joesphs , St.Marys பள்ளிகளும், தேவாலயமும் இருந்ததால் இந்த கொண்டாட்டங்களை பார்க்க தவறியதில்லை. அங்கிருந்த கிறிஸ்துவ வீடுகளிலும் நட்சத்திரம் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். கிறிஸ்துவ தினத்தன்று இரவிலேயே, அதாவது அதிகாலை பூசைக்கே கூட்டம் கூட்டமாக புதுத்துணி உடுத்திக் கொண்டு, பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு எங்கிருந்தோவெல்லாம் சர்ச்சுக்கு வருவார்கள். பல பூசைகள் அன்று நடக்கும். மதுரை முழுவதும் gingerbread house என்று ரொட்டி, சக்கரையில் பண்ணிய வீடும், அழகான கேக்குகளுடன் கேக் கடைகள் சீரியல் லைட் மாட்டிக் கொண்டு பிஸியாக வியாபாரம் செய்வதும் நடக்கும். மிஷன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப் அருகில் இருந்த பெங்களூர் ஐயங்கார்ஸ் பேக்கரியில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். சிறு வயதில் கேசவன் பிரியாணி கடை அருகில் இருந்த அருணா பேக்கரியில் ஒரு சிறிய gingerbread house ஒன்றை வாங்கி சுவைத்த அனுபவமும் இருக்கிறது.

நாங்கள் இருந்த தெருவில் ஒரு கிறிஸ்தவ  குடும்பம் இருந்தது. அவருடைய மகள்கள் என் வயதிலும், என் தங்கை வயதிலும் இருந்ததால் எங்கள் குடும்பங்களுக்குள் நல்ல பழக்கம் இருந்தது. அவர்கள் வீட்டிலிருந்து சுவையான தின்பண்டங்களும் சாப்பாடும் எங்களுக்கு வரும். பசுமலை பக்கம் குடியிருந்த பொழுது அங்கிருந்த ஒரு கிறிஸ்துவ குடும்பத்துடன் ஆடு, கோழி, மீன் என்று ஒரு வெட்டு வெட்டியதும் நல்ல ஞாபகத்தில் இருக்கிறது. அந்த ஆன்ட்டி அருமையாக சமைப்பார். வீடும் அவ்வளவு சுத்தமாக இருக்கும்.

இப்படி எல்லாம் நான் பார்த்த கிறிஸ்துமஸ், அமெரிக்காவில் ஏமாற்றத்தையே தருகிறது. முதலில், அன்று சர்ச்சுக்கு போகிற வெள்ளைக்காரர்கள் மிகவும் குறைவு. அமெரிக்க கறுப்பின மக்கள் நம்மூர் மாதிரியே சர்ச்சுக்குப் போய் பிரார்த்தனை செய்கிறார்கள். எங்கள் வீட்டுக்கு பின்னும் ஒரு சர்ச் இருக்கிறது. வயதானவர்கள் மட்டும் அதிகம் வருவார்கள் அன்று. மற்றைய ஞாயிற்றுக்கிழமைகளில் பெயருக்கு சிலர் வருகிறார்கள். இங்கும், இந்தியாவில் இருந்து வந்த கிறிஸ்தவர்கள் மட்டும் நம்மூர் மாதிரியே சர்ச்சுக்கு ரெகுலராக போகிறார்கள்.

முதல் வருடம் கிறிஸ்துமஸ் அன்று Michigan-ல், என் கணவரின் அக்கா வீட்டில் இருந்தோம். அவர் எங்களை ஒரு பெரிய மாலுக்கு அழைத்துக் கொண்டு போய் கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்ஸ் காண்பித்தார். மால் முழுவதும் பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. நடுநடுவே பிளாஸ்டிக் மலர்களும், இலைகளும் பூந்தொட்டிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தது. கிறிஸ்துமஸ் சமயம் மட்டும் விற்கும் செடிகளும், மலர்களும் என்று அந்த இடமே சொர்க்கபுரியாக இருந்தது. மக்களும் 'சர்சர்'ரென்று கிரெடிட் கார்ட் தேய்த்து மகிழ்ச்சியுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்கள். அந்த கூட்டத்தையும், சிரித்த முகங்களையும் பார்க்கவே நன்றாக இருந்தது. மாலின் நடுவே ஓரிடத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா(Santa ) வேடமணிந்து ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள நீண்ட வரிசையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பெற்றோர்கள். ஏதோ நிஜ Santaவை பார்ப்பது போல் குழந்தைகளும், பெரியவர்களும் குதூகலமாய், பார்ப்பதற்கே வியப்பாக இருந்தது! சில குழந்தைகள் Santaவை பார்த்தவுடன் பயந்து அழுதன. சில குழந்தைகள் சமர்த்தாக அவர் மடியில் உட்கார்ந்து கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுப்பதும், தன்க்கு இன்ன இன்ன பரிசுகள் வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்டை சொல்ல, அவரும் ஒரு candy ஒன்று கொடுத்து விட்டு அவர்கள் சொன்ன லிஸ்டை அவர்களுடைய பெற்றோர்களிடம் சொல்ல, அவர்களும் அதை வாங்கி அவர்கள் வீட்டில் வைத்திருக்கும் கிறிஸ்துமஸ் மரத்தின் கீழே வைத்து விடுவார்களாம். அதனால், குழந்தைகளும் Santa தான் வாங்கி கொடுத்தார் என்று நம்பி விடுவார்களாம்! நாங்களும் மகளை வைத்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம். இப்படியாகத்தான் எங்கள் கிறிஸ்துமஸ் பயணம் ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் ஏதோ ஒன்றிரண்டு பொம்மைகளை வாங்கி கொடுத்தோம். என் மகளும் திருப்தியாக இருந்தாள், பள்ளி செல்லும் வரை. அதற்குப் பிறகு தான் எங்களுக்கு பிரச்னை ஆரம்பித்தது. அவளுடன் படித்தவர்கள் எனக்கு இது கிடைத்தது, அது கிடைத்தது உனக்கு என்ன கிடைத்தது என்று கேட்க போக, தனக்குத் தான் எதுவுமே கிடைக்க வில்லை போலிருக்கிறது என்று வீட்டில் வந்து அழ ஆரம்பிக்க, இந்த peer pressure காரணமாக நாங்களும் இந்த மாயைக்குள் வந்து விழுந்து விட்டோம். இந்த கிறிஸ்துமஸ் ஷாப்பிங் பீவர் நவம்பர் மாதம் முதலே ஆரம்பித்து விடும். குழந்தைகளும் ஒரு பெரிய லிஸ்டை போட்டு விடுவார்கள். பெற்றோர்களும் தகுதிக்கு மீறி செலவு செய்து வாங்கி கொடுக்கிறார்கள். வேலை செய்யும் இடங்களில், கோவில்களில், சர்ச்சுகளில், வசதி இல்லாத குழந்தைகளுக்கு என்று மற்றவர்களிடம் புது பொம்மைகளை வாங்கி தருமாறு கேட்டு கொடுக்கிறார்கள்.

நவம்பரில் வரும் Thanksgiving Day முதலே வீடுகளில் வண்ண விளக்குகளை போட்டு, வீட்டினுள் fireplace அருகே கிறிஸ்துமஸ் மரம் ஒரிஜினலோ, பிளாஸ்டிக்கோ வைத்து அதையும் அலங்கரித்து வைத்து விடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் இருப்பது போல் எங்கும் வீட்டு வாசலில் வால்நட்சத்திரம் மாட்டி பார்க்கவில்லை. சம்பிரதாயப்படி, fireplace வழியாக Santa வந்து பரிசுப் பொருட்களை மரத்தின் கீழ் வைத்து விட்டு செல்வார் என்று குழந்தைகள் நம்புகிறார்கள். நாங்கள் அபார்ட்மெண்டில் குடியிருந்த போது, என் மகளும் கடமையாக ஒரு தட்டில் cookies, டம்ளரில் பால் வைத்து விட்டு தூங்கி விடுவாள். ஜன்னல் திரைகளை மூடாமல் Santa எப்போது வருவார் என்று வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டே தூங்கி இருப்பாள். நானும் அதிகாலையில் எழுந்து அவளுக்காக ஏற்கெனவே வாங்கி அழகிய பேப்பரை கொண்டு wrap செய்த பொருட்களை முன்னறையில் வைத்து விட்டு மறக்காமல் பாலையும் குடித்து பாதி cookieயும் சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவேன்! காலையில் அவளுடைய 'ஆஆஆஆஆஆஆஆஆஆ' அம்பாஆஆஆஆஆஆஆ என்ற ஆனந்த அதிர்ச்சி குரலில் எழுந்திருக்கும் பொழுது, கை நிறைய பரிசுப் பொருட்களுடன் அவள் கண்கள் மின்ன நிற்கும் கோலம்- priceless :) அவள் பல வருடங்கள் Santa நிஜம் என்றே நம்பினாள். நாங்களும் ஒன்றும் சொல்லவில்லை.

வீட்டிற்கு வந்த பிறகு, பல வருடங்கள் தொடர்ந்து அனர்த்திய பிறகு போன வருடம் தான் செயற்கை கிறிஸ்துமஸ் மரம் ஒன்று வாங்கினோம். என் மகனும் பல வருடங்கள் இந்த கிறிஸ்துமஸ் கதைகளை நம்பிக் கொண்டிருந்தான். இவ்வளவு சின்ன fireplace வழியாக எப்படி பெரிய சாண்டா வரமுடியும்? நான் fireplace ஆன் செய்து விட்டால் எப்படி இறங்க முடியும் என்று குறுக்குமறுக்காக கேள்விகள் கேட்பான்:( போன வருடத்திலிருந்து அவனுக்கு இதெல்லாம் கட்டுக்கதை என்று தெரிந்து என்னிடமே, கிறிஸ்துமஸ் பட்ஜெட் எவ்வளவு என்று கேட்கிற வரை முன்னேறி விட்டான்:( அவனுடைய நண்பர்கள் வீட்டில் ஒவ்வொருத்தனுக்கும் $500 பட்ஜெட் என்று சொன்ன போது மிகவும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது!

இந்த மாதத்தில் குளிர், பனி, செலவுகள் காரணமாக பலரும் மனஅழுத்தத்தில் பாதிக்கபடுவார்கள் என்றும் சொல்கிறார்கள். மொத்தத்தில் வியாபார நோக்கில் நடைபெறும் இந்த விழா பல குடும்பங்களில் குழந்தைகளை அலைக்கழிக்க வைக்கிறது. ஒரு நல்ல இனிய நாளை பரிசுகள் கொடுக்கும் நாளாக மாற்றிய பெருமையும், மக்களுக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக இல்லாத இந்த நாட்டில் இதைப் போன்ற வியாபாரங்கள் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தினமாகவே மாறி விட்ட பெருமையும் இந்த கார்ப்பரேட் கம்பனிகளை சாரும். Merry Christmas என்று சொன்னால் பிற மதத்தினரை புண்படுத்துவதால்(??) Happy Holidays என்று சொல்கிறார்கள்! டீவியிலும் Santa இப்பொழுது இந்த ஊரில் இருக்கிறார் இன்னும் சிறிது நேரத்தில் இங்கிருப்பார் என்று குழந்தைகளை கவரும் விதத்தில் படம் போட்டு சொல்கிறார்கள். குழந்தைகள் Santaவிற்கு தபால் அனுப்பினால் கடமையாக பதிலும் கிடைக்கிறது! எப்படியோ பல குழந்தைகள் உலகம் இனிமையாக இருக்கிறது :)


உங்கள் அனைவருக்கும் Happy Holidays மற்றும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம்.

Thursday, December 20, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 5

நான்காம் வருடம் ப்ராஜெக்ட், vice-versa , unix லேப், C-language, கணினியல் துறை யின் சார்பாக நடத்தப்பட்ட விழாக்கள், ஆட்டோகிராப் நேரங்கள்  என்று ஓடியே போய் விட்டது. என் தம்பியும் முதல் வருடம் கல்லூரியில் வந்து சேர்ந்தான்.

எங்களுடைய சூப்பர் சீனியர்கள் இரண்டு பேர்-புது பெண் விரிவுரையாளர்கள், வகுப்புகள் எடுத்தார்கள்.(ஷ்யாமளா & உமா) என்று நினைக்கிறேன். Dr.நித்யானந்தம், Maths HOD, Dr.ராஜதுரை(?) என்று பல பெரிய ஆசிரியர்கள் வகுப்புகளை எடுத்தார்கள். ஏஞ்ஜலோவின்  voice recognition ப்ராஜெக்ட் மிகவும் சுவாரசியமாக இருந்தது. நானும் அருணாகுமாரியும் சேர்ந்து இறுதி வருட ப்ராஜெக்ட் செய்தோம்:) அது ஒரு தனிக்கதை. கடைசியில் MCA பிரபாகர் உதவியுடன் செய்து முடித்தோம்!

ஐந்தாவது செமஸ்டரின் போது கணித வகுப்பில் ஸ்ரீநிவாசன் சாக்பீஸ் எரிய அது என் தலையில் விழ என்று என்னை எரிச்சலடைய செய்ததும், மாணவர்கள் சிலர்(?) மாணவிகளின் லஞ்ச் பாக்ஸை காலி செய்து விட்டு காண்டீனில் கிடைக்கும் கேக் வைத்து விட்டு போவது என்று நடந்ததும், கடைசி வருடம் நெருங்க,நெருங்க பல மாணவ மாணவிகள் GRE , TOEFL தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருந்ததும், கல்லூரியில் நடைபெற்ற வேலைக்கான நேர்முகத்தேர்விலும் பலர் பங்கெடுத்துக் கொண்டதும்,.'பலவிதமான மன நிலையில்' மாணவ, மாணவியர்கள் உலா வந்ததும் அந்த காலத்தில் தான்.  நான்காம் வருட மாணவ, மாணவியர்கள்  எல்லாம் All India டூர் போனார்கள். சில பிரச்னைகளின் காரணமாக என்னால் போக முடியவில்லை:( போய் விட்டு வந்து பல கதைகள்! மேகலா எனக்கு ஒரு அழகிய கைப்பை ஒன்றை வாங்கி வந்து பரிசாக கொடுத்தாள் :)  என் வகுப்பு மாணவிகள் எல்லாம் ஒரே மாதிரியாக சேலை வாங்கினோம். அனைவரும் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். செந்தில் அனைவருக்கும் நியூஆர்யபவனில் வைத்து ட்ரீட் கொடுத்தான். அருமையாக இருந்தது. ஒருநாள், வகுப்பு முழுவதும் சேர்ந்து கேண்டீனில் உட்கார்ந்து கொண்டு சில மணிநேரங்களை  பொழுது போக்கினோம். துர்காராணி- பொங்கலு பொங்கலு வைக்க, மஞ்சளை மஞ்சளை எடு தங்கச்சி தங்கச்சி என்ற அப்போதைய பிரபலமான பாடலை பாடினாள். ஸ்ரீநிவாசன், முரளிதரன்  & கோ  சேர்ந்து மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் என்ற பக்தி பாடலை மண்ணானாலும் மலர்விழி வீட்டில் மண்ணாவேன், ஒரு மரமென்றாலும்... என்று மாணவிகளின் பெயரை போட்டு பாடினார்கள். நன்றாகத் தான் இருந்தது. ஒருநாள் எல்லோரும் சேர்ந்து அழகர் கோவிலுக்கு பிக்னிக் சென்றோம்.


ஜெயபாரதி அவள் ஊருக்கு எங்களை அழைத்து சென்று அங்கு பனை வெல்லம் பண்ணுவதையும், அவர்களுடைய தென்னந்தோப்பில் இளநீர் குடித்ததையும்,  கிணற்று மேட்டில் உட்கார்ந்து அரட்டை அடித்ததையும்,அவர்கள் ஊரே எங்களை பார்க்க ஊர்வலம் வந்து அவர்கள் வீட்டில் வாழை இலையில் 'சுடச்சுட' சுவையான கிராமத்து உணவு உண்டு மகிழ்ந்ததையும் என்று அன்றைய விருந்தோம்பலிலல்.. நினைத்தாலே சுகம் தானடி ....

நாங்கள் கல்லூரி முடிக்கும் பொழுது மூன்று முதல்வர்களை பார்த்து விட்டோம் --Dr.மரியலூயிஸ்,  Dr.மெய்யப்பன் & Dr.நித்யானந்தம் என்று நினைத்திருந்தேன். சரவணன் நான் மறந்து போன முதல்வர் Dr.வள்ளியப்பனை நினைவுறுத்தி நான்கு முதல்வர்களை பார்த்த பெருமை கொண்ட குரூப் என்று நினைவு கூர்ந்ததற்கு நன்றி.  இரண்டு பெரிய ஸ்ட்ரைக்குகளால் கால வரையின்றி கல்லூரி மூடப்பட்டு நேராக தேர்வெழுத வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்  உதயம் பட ஸ்டைலில் சைக்கிள் செயின், கட்டை என்று படிக்கிற வேஷத்தில் திரியும் ரௌடிகளை பார்க்க நேரிட்டதுகொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பசங்க ஹாஸ்டலில் வார்டனை மாணவர்கள் மொத்தியது கேட்டு அதிர்ச்சியாக இருந்தது...நிஜமாகவே நடந்ததா தெரியவில்லை!ஸ்ட்ரைக் என்று சொன்னவுடன் என்ன காரணம் என்று கூட தெரிந்து கொள்ளாமல் எப்படி பஸ்ஸைப் பிடிப்பது என்ற நினைப்புடன் சில சமயங்களில் திருப்பரங்குன்றம் வரை நடந்து போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும்...ஹ்ம்ம்.

இந்த காலங்களில் வந்த புன்னகை மன்னன் கமல் ஸ்டைலில் நீண்ட  முடி, தாடியுடனும், சத்யா கமல் ஸ்டைலில் பலரும் தாடியும், அரை குறை மொட்டையுடனும், நாயகன் ஸ்டைலில் மீசையை மழித்துக் கொண்டும், கல்லூரி இறுதி நாட்களில் மாணவர்கள் பலரும் வேட்டி, சட்டை என்று  வலம் வந்து கொண்டிருந்ததும்... கணினியல் துறைக்கு ஆரோலேக் நிறுவனத்தின் சார்பில் வரும் உயரமான, பிரெஞ்ச் பியர்ட், நுனி நாக்கு ஆங்கிலம், நேர்த்தியான உடை, டை என்று டிப்டாப்பாக வந்தவர்களைப் பார்த்து அசந்ததும்... என்று பல வேடிக்கையான தருணங்கள்!

எனக்கு கல்லூரியில் பிடிக்காத இரண்டு இடங்கள் என்றால் லேடீஸ் ரூமும், கல்லூரி வங்கியும் தான். இவ்வளவு பெண்கள் படித்த கல்லூரியில் கழிவறைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சுத்தமோ கிலோ என்ன விலை என்ற நிலை தான். மொத்தமே நான்கு கழிவறைகள்.அதில் ஒன்று எப்போதும் பயன்படுத்த முடியாத நிலையில்! எப்பொழுதும் நீண்ட வரிசை. அங்கிருக்கும் கைகழுவும் இடமும் தண்ணீர் கீழே கொட்டி சொதசொத வென்று.. நம் கல்வி நிறுவனங்கள் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆனால் கண்டு கொள்ளாத விஷயமும் கூட கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட் கட்டிடத்திற்கு போன பிறகு தான் இந்த தொல்லைகள் எல்லாம் குறைந்தது.

அதே போல் தான், ஒரு சின்னஞ்சிறிய வங்கியும். இரண்டு பேர் மட்டுமே இருப்பார்கள். பீஸ் கட்டவேண்டிய நேரம் வந்து விட்டால் அங்கே ஈ போல் மாணவ,மாணவிகள் கூட்டம். ஒழுங்காக வரிசையில் நின்று அமைதியாக நடக்க வேண்டிய வேலை ஒரு சில கீழ்த்தரமான மாணவர்களால் வரிசையில் நிற்பவர்கள் மேல் விழுவது, கத்துவது போன்ற வேதனை தரும் விஷயங்களும் நடந்தது. அந்த சின்ன கூண்டில் ஒரே நேரத்தில் 10 சலான் பார்த்தால் எந்த வங்கி கணக்கரும் என்ன பண்ணுவார்? நம் கல்வி நமக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கவில்லை என்று வருந்த வைத்த தருணங்கள்

முதல் வருடம் முதலே என்னை பிரமிக்க வைத்த வீணா சுந்தரம்! மெக்கானிக்கல் லேபில் அவளுடைய வேலைகளை யாருடைய உதவியுமின்றி தனக்கு இருக்கும் குறையை கண்டு கொள்ளாமல்
ஒரு செயற்கை கையுடன் முடித்த பாங்கு என்னை வெட்கமடைய செய்தது. நன்றாக பல மொழிகளில் பாடும் திறமை, படிப்பதில் இருந்த ஆர்வம், யார் பேசுவதையும் பொறுமையாக கேட்கும் குணம், அதிர்ந்து பேசாத குணம், ரயில்வே காலனி யிலிருந்து S.S. காலனிக்கு சைக்கிளில் வந்து குடும்பத்தையே அசர வைத்ததும்.. நான் வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது என்று என்னை உணர்த்திய தருணங்கள்.

எனக்கு பிடித்தவைகள்- கவலையின்றி திரிந்த முதல் மூன்று வருடங்கள், விசாலமான, வெளிச்சமான முதலாண்டு கல்லூரி வகுப்புகள்,  லேப்கள், நீண்ட கல்லூரி சாலை, பல தலைமுறைகளை கண்ட ஆலமரங்கள், கான்டீன் சூடான வடை, பிடித்த வகுப்புகள், நண்பர்களுடன் அரட்டை, கம்ப்யூட்டர் லேப், பெண்கள் ஹாஸ்டலில் இருந்து வரும் கலவைச் சாப்பாடு- அதை தோழிகளுடன் உண்டது என்று காலம் ஓடியேயேயேயேப் போச்சு! பெண்கள் ஹாஸ்டலில் நடந்த ஹாஸ்டல் டே இரவன்று ஜூனியர்களுடன் விடிய விடிய அடித்த கூத்து மறக்க முடியாத ஒன்றாகியது. அதற்குப் பிறகு, எப்படா கல்லூரி முடியும், அடுத்த நாள் எப்படி விடியும் என்று எதிர்காலம் பற்றிய மிகப் பெரிய கேள்விகளுடன், சொந்தப் பிரச்சினையின் காரணமாக வருத்தத்துடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது. ஹ்ம்ம். வாழ்க்கையின் கொடுமையை உணர்ந்த காலங்கள். அதிலிருந்து கற்ற பாடங்கள் பல.கடவுளின் ஆசியாலும், பெரியவர்கள் செய்த புண்ணியத்தாலும், நல்லவர்களின் அன்பாலும், வழிநடத்தலாலும், நல்ல நண்பர்களின் துணையாலும் படிப்பை முடித்து, பட்டம் பெற்று இன்று இந்த நிலைமைக்கு வர முடிந்தது.

Hostel Day
இன்று நினைத்துப் பார்க்கையில் ஒரே வகுப்பில் மூன்று வருடங்கள் படித்திருந்தாலும் எல்லோருடனும் அவ்வளவாக பேசி பழகவில்லை. தனிக் குழுக்களாகவே இருந்து விட்டோம். ஒரு நல்ல புரிதலுடன் பழகியிருந்தால் பல நல்ல நண்பர்கள் அன்றே கிடைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு பெண் ஆணுடன் பேசினாலே அதற்கு ஏதாவது அர்த்தத்தை பார்க்கின்ற மனப்பான்மை இருந்ததாலே எதற்கு வம்பு என்று ஒதுங்கியே இருக்க வேண்டியதாயிற்று.

படித்து முடித்து இவ்வளவு வருடங்கள் ஆனாலும் கல்லூரி வாழ்க்கையை நினைத்தாலே இன்றும் இனிமையாக, இளமையாக, பசுமையாக  இருக்கிறது! கல்லூரி வாழ்க்கை, ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு மறக்க முடியாத காலம்.

ம்ம்ம்ம். அது ஒரு கனாக்காலம்!

Tuesday, December 18, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 4

ஐந்தாவது செமஸ்டர் ஒரு புதிய கட்டிடத்தில் Mech Engg வகுப்புகளுக்கு பக்கத்தில் போட்டுவிட்டனர். மாணவிகள் மிகவும் குறைவு அந்த வகுப்புகளில். மாணவர்களின் கொட்டம் தெரிந்த கதை தான்:( அதனால், வகுப்புகளுக்கு போய் வர கொஞ்சம் சிரமப்பட்டோம். வகுப்பில், பேராசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, வெளியில் உட்கார்ந்து கொண்டு, ஏதாவது சொல்லி கமெண்ட் அடித்துக் கொண்டு சீனியர் மாணவர்கள் கொட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் வகுப்புகள் மட்டும் முன்னதாகவே முடிந்து விடும்! அவர்கள் சொல்வதை கேட்டு சிரித்து விட்டால் ஆள் அம்பேல். ஆனால், ரசிக்கிற மாதிரியான கூத்துக்கள் தான்! சார், கடைசி பெஞ்சில இருக்குறவங்க பாடத்தை கவனிக்கல, நோட்ஸ் எடுக்கல என்பதிலிருந்து....மதிய உணவு இடைவேளையில் வந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற கலாட்டாக்களும் நடந்தது.

புதிதாக சேர்ந்த ஆசிரியர்கள் சிவா மற்றும் ஸ்ரீதரன் அவர்களுடைய வகுப்புகள் ஓகே ஓகே. மூன்றாம் வருட வகுப்புகள் கணினியை சார்ந்து இருந்ததால் interesting ஆக இருந்தது. microprocessor லேபில் assembly language எழுதி பதில் பளிச்சென்று தெரியும் பொழுது நன்றாக இருந்தது. இவ்வளவு சின்ன processorஇல் இவ்வளவு விஷயமா என்று வியக்க வைத்தது. டெஸ்டில் ஒரே மாதிரி கேள்விகளை கேட்டார்கள். அதற்கும் பயந்து கொண்டு கைகள் சில்லிட கேள்வித்தாளை எடுத்து ஒரு பதட்டத்துடனே தேர்வுகள் எழுதியதெல்லாம்... அங்கு இரண்டு அட்டெண்டர்கள் இருந்தார்கள். பெயர் ஞாபகமில்லை. ஒருவர் நல்ல சிரித்த முகத்துடன் உதவிகள் செய்வார். இன்னொருவர் ஏனோ, எப்போதுமே 'உர்ர்'ரென்று இருப்பார். அவரிடம் எந்த உதவிகளும் எதிர்பார்க்க முடியாது.


ஆறாவது செமஸ்டரிலிருந்து என்று நினைக்கிறேன், வகுப்புகள் கணினியியல் துறை இருந்த MCA வகுப்புகள் நடக்கும் இடத்தில்  மாற, அங்கிருக்கும் ஆலமரமே போதி மரமானது பலருக்கும். MCA படிக்க கேரளா, ஆந்திராவிலிருந்து மாணவ, மாணவியர்கள் வந்திருந்தார்கள். சிலர் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தனர் :) மம்மூட்டி, மோகன்லால் என்று அவர்களுக்கு பெயர் வைத்து நக்கல் பண்ணிக் கொண்டிருந்தோம். லேபில் கம்ப்யூட்டர்-க்காக அவர்களிடம் சின்ன,சின்ன செல்ல சண்டைகள் போட, அதனால் சிலர் நண்பர்கள் ஆக என்று - ம்ம்ம் அது ஒரு கனாக் காலம்!
2011 visit to college

அந்த வகுப்பும் ஆடிடோரியம் ஸ்டைலில் கட்டப்பட்டிருந்தது. பச்சை வண்ண போர்டும், கொஞ்சம் இருட்டிய அறையுமாய் இருந்தது. அருகில் MCA வகுப்புகளும், மாடியில் கம்ப்யூட்டர்/மைக்ரோ ப்ராசசர்/ துறை ஆசிரியர்களுக்கான அறையும் இருந்தது. மாடியிலிருந்து பார்த்தால் பச்சை  நிறமே, பச்சை  நிறமே... என்று வயல்வெளிகளும் தூரத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்களும் என்று நல்ல view. துறைத்தலைவர் அய்யாதுரை நல்ல மனிதர். ஸ்கூட்டரில் கல்லூரிக்கு வருவார். அவருடைய வண்டியில் மாணவர்கள் காற்றை பிடுங்கி விட்டதாக கேள்வி. உண்மையா- தெரியாது?

அந்த வருடத்தில், துறை சார்பாக நடை பெற்ற symposium கோலாகலமாக நடைபெற்றது. அதற்காக மாணவ,மாணவிகள் ரங்கோலி மற்றும்  விழாவிற்கான பல வேலைகளையும் முடித்து விட்டு இரவு வீடு திரும்ப வெகு நேரம் ஆகி வீட்டில் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டேன்:( பல கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டு விவாதங்கள் நடந்தது. 'ஆ'வென்று வாயை  பிளந்து கொண்டு கேட்டோம். பல நக்கீரர்களும் கேள்விக்கணைகளை தொடுத்தார்கள்!

ஒரு மதிய நேரத்தில் அப்போது ரிலீஸ் ஆகியிருந்த 'இதயத்தை திருடாதே' படத்தை வகுப்பு முழுவதுமாக சேர்ந்து பார்த்து விட்டு வந்தோம். அதில் வந்த கதாநாயகியை என் வகுப்பில் படித்த மாணவர்கள் பலருக்கும் பிடித்திருந்தது. கதாநாயகன்- of course, அப்போதைய -இளம் நாயகன் - நாகர்ஜுனா தான் :) மூன்றாம் வருடம் கேரளா டூர் போனார்கள். போய் விட்டு வந்து பல கதைகள்!
லேப் வகுப்புகள் ஜாலியாக இருக்கும். உட்கார நாற்காலிகள் எல்லாம் இருக்காது. இரண்டு மணி நேரம் நின்று கொண்டே கால் கடுக்க சிவகுமார் சந்திரசேகர், அருணாகுமாரி, அனிதா, டெல்லா, சரவணன், நான் என்று.. சரவணன் மிகவும் சீரியஸாக டிஸ்கஸ் செய்து கொண்டு பொழுதுகள் போனதெல்லாம்.. ஒருமுறை லேபில் சரியாக சாப்பிடாததால் நான் மயக்கம் வந்து விழ ஒரு சின்ன களேபரம்!

வகுப்பு எடுத்த பேராசிரியர் ஒருவர் அட்டெண்டன்ஸ் குறைவாக இருந்தால் அவர் லேபில் அவ்வளவு மணி நேரங்களை அங்கு உட்கார்ந்து ஏதாவது செய்ய சொல்லி அட்டெண்டன்ஸ் போடுவார். அங்கு போனால், சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இல்லாமல் பலரும் அட்டெண்டன்ஸ்க்காக 'தேமே' என்று உட்கார்ந்து பொழுது போக்கி விட்டு போவார்கள்! ஒருமுறை இவர் வகுப்பில் ஒரு கேள்வி கேட்டு பதிலை பலரும் அடுத்தவரிடம் கேட்டுக் கொண்டு வெறும் கால்குலேட்டரில் அந்த பதிலை அடித்து காண்பித்து விட்டு வெளியில் தப்பி வந்தது என்று...
இன்னொரு பேராசிரியர் ஒருவர் வகுப்பில் டெஸ்ட் கொடுக்கும் பொழுது அருகிலிருந்து யாரும் காப்பி அடிக்க முடியாவண்ணம் கேள்வித்தாள்களை கொடுப்பார்! இப்படி கில்லாடி பேராசிரியர்களும் இருந்தார்கள்.

நானும் துர்காவும் சேர்ந்து ஆவினில் ஒரு ப்ராஜெக்ட் செய்யப் போனோம். பழைய கம்ப்யூட்டர் ஒன்று-ஒவ்வொரு வரியாக கோபாலில் ப்ரோக்ராம் எழுதி என்று..

Linear Integrated Circuits, Boolean Algebra & Switching Theory, Algorithm Anlaysis & Design, Numerical Methods, Digital Integrated Circuits, Microprocessor என்று பிடித்த மற்றும் பிடிக்காத சில பாடங்களும், ஆசிரியர்களும் என்று மூன்றாம் வருடம் ஓடியே போய் விட்டது. வகுப்பில் என்னுடன் படித்தமாணவி ஆவணி அவிட்டத்தன்று அவள் வீட்டில் விருந்து வைத்து அவளுடைய வருங்கால கணவரை அறிமுகப்படுத்தினாள். அவளுடைய திருமணமும் அந்த வருடம் மிக விமரிசையாக நடந்தது. நிறைய MCA மாணவ, மாணவியர்களும், எங்களுடைய ஜுனியர்களும் என்று நண்பர்கள் பட்டாளம் விரிவடைந்ததும் இந்த காலத்தில் தான். எங்கள் சீனியர் மாணவர்கள் இருவர் தங்கள் ப்ராஜெக்ட் வேலைக்காக திருச்சி செல்லும் வழியில் காரில் செல்லும் பொழுது டிரைவர் தூங்கிய காரணத்தினால் விபத்து ஏற்பட்டு இறந்த செய்தி கேட்டு கதிகலங்கியதும் அந்த வருடம் தான்:(

நினைவலைகள் தொடரும்..

Saturday, December 15, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 3

இரண்டாம் வருடம், கணிப்பொறியியல்  துறை என்று முடிவான பிறகு, மீண்டும் புது மாணவர் கூட்டம். நான், மேகலா, லதாமணி மற்றும் பிற வகுப்புகளிலிருந்து வந்த மாணவ, மாணவியர்கள். இந்த வகுப்பில் துர்கா, வீணா, விஷாலாக்ஷி, சுகந்தி, அருணா, அருணாகுமாரி, அருணாதேவி, ஜெயபாரதி, சாந்தி(திருநகர்), சுகந்தி, ராஜம், மலர்விழி, மகேஸ்வரி, துர்காராணி, ஆன்சி, ஜாய்ஸ், ப்ரிசில்லா, டெல்லா, அனிதா, உமாதேவி, சாந்தி, லலிதா,மீரா காந்தி, ப்ரீத்தி என்று மாணவிகளும்,

மாணவர்களில் ஏஞ்சலோ, பால்கி, சந்திரசேகர், பாலக்ருஷ்ணன், ஸ்ரீதரன், கிஷோர், சதீஷ், கண்ணன், ஸ்ரீனிவாசன், செந்தில், பாஸ்கரன், கடற்கரையாண்டி, பெரியசாமி, ரமேஷ், ராதாகிருஷ்ணன், குகராஜன், பிரபாகரன், முரளிதரன், ராஜசேகர், கனக சுந்தர் ராஜன், 'கணிதப்புலி' லக்ஷ்மணராஜ், சாலமன் ஹென்றி, சங்கரலிங்கம், நாராயணன், முருகவேல், மகேஷ், சரவணன், யாகூப், சிவகுமார், ஈஸ்வரன்  என்று இன்னும் பலர். இவர்களுடன் தான் மூன்று வருட கல்லூரி வாழ்க்கையும்.


Electronics வகுப்பிலிருந்து ராஜி, Electrical வகுப்பிலிருந்து அமர்தீபா இன்னும் பலர் நட்பும் கிடைத்தது.
இரண்டாம் வருடம் மெயின் பில்டிங்கில் வகுப்புகள் இருந்தன. Material Science-Prof. மீனாக்ஷி சுந்தரம் வகுப்பு ஒரு இனம் புரியாத பீதியை ஏற்படுத்தியது. ஒன்றும் புரியவில்லை. அத்தனைக்கும் மிக குறைந்த அளவு பக்கங்கள் கொண்ட புத்தகம். எப்படி புரட்டினாலும் ஒன்றுமே விளங்கவில்லை:( செமி கண்டக்டர் அது இது என்று..இன்று வரை அந்த பாடம் மனதளவில் ஒரு பயத்தையே எழுப்பியுள்ளது. இங்கு பலரும், Material Science-ல் டாக்டரேட் வாங்கியிருப்பதை பார்த்தால் தெய்வமே என்று தோணும்! என் மகளுக்கும் அந்த பாடம் உள்ளது. அவளுடைய புத்தகத்தை வாங்கி படித்து இப்பதாவது புரிகிறதா என்று பார்க்க வேண்டும்!

அதே போல் தான் Circuit Theory பாடமும். resistor , capacitor, கரண்ட் இப்படி போனால் பிளஸ், அப்படி போனால் மைனஸ் என்று தலையை பிய்த்துக் கொள்ள வைத்தது. ஒரு வழியாக BASIC, FORTRAN என்று படிக்க ஆரம்பித்தோம். எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் லேபுகளும் நன்றாக புது விதமாக இருந்தது.

எலெக்ட்ரிக்கல் லேபில் பெரிய பெரிய என்ஜின்களை சுற்றி நின்று கொண்டு, அன்று பண்ணவிருக்கும் experiment- க்குத் தேவையானவைகளை எழுதி மேடத்திடம் காண்பித்து விட்டு, லேப் அட்டெண்டரிடம் கொடுத்தால் அவரும் அந்த சாமான்களை கொடுப்பார். பிறகு படம் வரைந்து, ரீடிங் பார்த்து observation நோட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் சீக்கிரம் லேப் முடிந்து விடும் :)

Computer Organisation என்று ஒரு வகுப்பு. வெறும் தியரி தான். படிக்க interesting ஆக இருந்தது. COBOL & Pascal Prof.ராம்ராஜ் எடுத்தார். அந்த வகுப்புகளும் நன்றாக இருந்தது. syntax மறக்காமல் COBOL ப்ரோக்ராம் எழுதுவதற்குள் ஒரு வழியாகி விட்டது. அநியாயத்திற்கு ஒரு சிறிய தப்பிற்கு நூறு errors காண்பித்து.. அங்கு வேலை பார்த்தவர்களின் துணையோடு ப்ரோக்ராம்கள் எழுதி...பச்சை வண்ணத்தில் no errors என்று ஸ்க்ரீனில் வந்தவுடன் வரும் பரவசம் இருக்கே....

இரண்டாம் வருடத்திலிருந்து முனிச்சாலை பஸ்-ஸ்டாப்பில் 31 ஆம் நம்பர் பஸ்சிற்காக காத்திருந்து போனோம். அவ்வளவு கூட்டம் இருக்காது. கார்த்திகை மாதம் வந்து விட்டால், தளும்பும் பால் தூக்குகளுடன் கூட்டம் அலைமோதும். சமயத்தில் பஸ் சீக்கிரம் போய் விட்டால் 'லொங்கு லொங்குவெ'ன்று கீழவாசல் வரை நடக்க வேண்டும்.  LDC , Fatima கல்லூரி மாணவிகளும் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் நேரமது. எப்பொழுதும் நல்ல கூட்டம் இருக்கும் அந்த பஸ் ஸ்டாப்பில். இந்த பஸ்களில் ஏறினால் ஒரு பிரச்சினை. மாணவர்கள் அவர்களுடைய புத்தகங்களை கேட்காமலே வச்சுக்கோ என்று தூக்கிப் போடுவார்கள். இருக்கிற பிரச்சினை போதாதென்று இதை வேற கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எரிச்சலாக இருக்கும். திங்கள், கார்த்திகை மாதம், முருகன் ஸ்பெஷல் தினங்களன்று கல்லூரியிலிருந்து வீடு போய் சேர்வதற்குள் போதும்,போதும் என்றாகி விடும்.

என் அக்கா சிவில் பிரிவும், என் மாமா மகள் electronics ம் எடுத்து தனித்தனியாக பிரிந்தோம். என் அக்காவின் தோழிகள் ராதா, சாருலதா, பாலா எப்பவுமே ஒன்றாக இருப்பார்கள், ஒன்றாகவே வகுப்புக்கு போவார்கள். அவர்கள் வகுப்பு லேடீஸ் ரூம் பக்கத்தில் இருந்ததால் அவர்களுக்கு வசதியாக போய் விட்டது. எங்களுடைய சீனியர் electrical வகுப்பு, காதலர் சோலைகள் மாதிரி இருக்கும். ஒரு ஆசிரியரின் வகுப்பில், யார் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம். பலரும் ஜோடி, ஜோடியாக உட்கார்ந்திருப்பார்கள். எவ்வளவு ஜோடி உண்மையிலே வாழ்க்கையில் சேர்ந்ததோ! எனக்கு தெரிந்து, ஒரு ஜோடி, நான்கு வருடங்கள் காதலித்து, கல்யாணமும் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்குப் பிறகு பிரிந்து விட்டனர். வருத்தமாக இருந்தது அதை கேள்விப்பட்டவுடன்.

இரண்டாம் வருடம் நன்றாக போனது. இரண்டாம் வருட டூரும் நன்றாக இருந்தது. ஊட்டி போனோம். எங்களுடன் சாந்தி மற்றும் மின்பொறியியல் துறையிலிருந்து இன்னொரு பேராசிரியையும்(சுகுனேஷ் மேடம் ) வந்தார்கள். எங்களை வழியனுப்ப வந்த கூட்டம் மாணவர்களை உயரத்தில் தூக்கிப் போட்டு பிடிப்பதுமாய் கலாட்டா செய்து வழியனுப்பினார்கள். கடைசி சீட்டில் பாட்டில்கள் உருண்டதாக சொன்னார்கள். யாமறியேன் பராபரமே!
நன்றாக ஆட்டம் பாட்டமாகவே ஆரம்பித்தது அந்த பயணம். ஓசூர் அருகே ஏதோ ஒரு காரணத்திற்காக சாலை முழுவதும் மறிக்கப்பட்டு ஒரே போக்குவரத்து நெரிசல். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் லாரிகளும், பஸ்களுமாய். நல்ல வெயில். அந்த இடத்தை சாதகமாக்கி கொண்டு இளநீர் விற்பவரிடமிருந்து இளநீர் குடித்து எப்படா ஊட்டி போய் சேருவோம் என்றாகி விட்டது. ரோடு கிளியராகி ஊட்டி மலைப்பாதையில் ஏறும் பொழுது ஒரே தலை சுற்றல். நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி சோடா, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து குடித்தோம் பலரும். மீண்டும் மலை ஏற்றம். ஒரு வழியாக ஊர் வந்து சேந்தோம்.

நல்ல குளிர். அடுக்கடுக்காக இருந்த அந்த நிலப்பரப்பு பார்க்க ரம்மியமாக இருந்தது. மாணவிகளுக்கு சில அறைகளும், மாணவர்களுக்கு சில அறைகளும் என்று ஒதுக்கப்பட்டிருந்தன. அடுத்தநாள் Botanical Garden, Boat ride போக கிளம்பினோம். எங்களை மாதிரியே சிவகாசியிலிருந்து மாணவர்கள் பட்டாளம் ஒன்றும் வந்திருந்தது. அவர்களிடம் சிலர் பேசினார்கள். இன்னும் சில இடங்களுக்கும் சென்றோம். மழையில் மாட்டிக் கொண்டு அப்படியே மார்க்கெட்டும் போனால் எல்லாம் பிரெஷ் காய்கறிகள். வேண்டிய மட்டும் வாங்கி கொண்டு பஸ்ஸை நோக்கி ஓடினோம் மழையில் நனைந்தபடி! இந்த டூர் மட்டும் தான் நான் போன கல்லூரி டூர் :(

இந்த வருடத்தில் ரிலீஸ் ஆன அக்னி நட்சத்திரம் படத்தை சௌராஷ்டிரா இஞ்சினியரிங் ஸ்டுடண்ட்ஸ் அசோசியேஷனுடன் சேர்ந்து பார்த்தது நன்றாக இருந்தது.



நினைவலைகள் தொடரும்...

Thursday, December 6, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 2

காலையில் வெயில் 'சுள்'ளென்று அடிக்கும் முன்னே கல்லூரிக்கு வந்து விடுவோம். பஸ்ஸை தவற விட்டவர்கள் கூட்டம் சாரை சாரையாக மெயின் ரோட்டிலிருந்து 'லொங்குலொங்கு'வென்று கையில் T-Square, நோட்டுப் புத்தகங்களை சுமந்து கொண்டு வந்து கொண்டிருப்பார்கள்.

பைக்கில் 'சர்சர்'ரென்று பெண்கள் கூட்டத்தை பார்த்தவுடன் அப்டி ஒரு வளைவு வளைந்து செல்லும் மாணவர்கள். சமயங்களில் மூன்று பேரை இருத்தி நெருக்கி அடித்துக் கொண்டு போகும் கூட! ஒரு சில கார்களும், ஹாஸ்டலில் இருந்து மாணவிகளுக்கான பஸ்களில் மாணவிகளும், மாணவர்கள் ஹாஸ்டலில் இருந்து குழுக்களாகவும் கல்லூரியை நோக்கி போய்க் கொண்டிருப்பார்கள்.

கல்லூரி போகும் வழியில் கால்நடை மருத்துவமனை இருந்ததால் சமயங்களில் கால்நடைகளும் கால்நடையாக போய்க் கொண்டிருக்கும்! வயலில் வேலை செய்பவர்கள், ஸ்கூட்டரில் போகும் ஆசிரியர்கள் என்று அந்த காலை நேரம் கல்லூரி முன்பு பரபரப்பாகவே இருக்கும்.

படத்தில் உள்ள இந்த இடத்தில் தான் கல்லூரி பஸ் நிற்கும்.செட்டியாரின் மணி மண்டபம், நீரூற்று, தோட்டங்கள் எல்லாம் நன்கு பராமரிக்கப்பட்டு இருக்கும். பஸ்ஸிலிருந்து இறங்கி மெயின் பில்டிங் மூன்றாவது மாடியில் முதல் ஆண்டு மாணவர்களின் வகுப்புகள். நுழைந்தவுடன் கணிதத்துறை ஆசிரியர்களுக்கான அறை. அதை தாண்டி போனால், D, C, B, A வகுப்புகள். மறுபுறம் Applied Science, Applied Maths வகுப்புகள். Engg Drawing வகுப்பிற்காக ஒரு நீண்ட பெரிய ஹால், பெரிய பெரிய மேஜைகளுடன். வகுப்புகள் எல்லாம் விசாலமாக பெரிய ஜன்னல்களுடன் காற்றோட்டமாக இருபுறமும் கதவுகள் வைத்து நன்றாக இருக்கும்.

முதல் வருடம் வேதியியல் எடுத்த பேராசிரியர் மிகவும் கண்டிப்பானவர். ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக வகுப்புகள் எடுப்பார். அவருக்கு மாணவர் ஒழுக்கம் மிகவும் முக்கியம். அவர் வகுப்பு எடுக்கும் நேரத்தில் பேசவோ, சிரிக்கவோ முடியாது. அவர் மகளும் எங்களுடன் தான் படித்தாள். லேபிலும் அவர் தான் வாத்தியார்.  எனக்கு பிடித்த பாடமும் வேதியியல் என்பதால் படிப்பதில் பிரச்சினை இல்லை. ஒரே வருடத்தில் Organic , Inorganic , Physical chemistry என்று படித்தோம். புத்தகமே அவ்வளவு கனமாக இருக்கும்!

இயற்பியல் எடுத்தவர் பேராசிரியர் சுப்ரமணியன். அவரும் நிதானமாக வகுப்புகள் எடுப்பார். அவ்வளவு கண்டிப்பில்லை. கணித Prof . மோகன்-அவருடைய வகுப்பு எனக்கு பிடித்தது. மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்தார்.இங்கிலீஷ், ஒரு வயதான ஆசிரியர். பார்த்தால் வெள்ளைக்காரர் போல் இருப்பார். பொதுவாக கடைசி வகுப்பாக இருக்கும். எப்படா வீட்டுக்குப் போகலாம் என்றிருக்கும் போது புத்தகத்திலிருந்து வாசித்து அர்த்தம் சொல்லி... இந்த வகுப்பில் பாதி மாணவர்கள் ஓடிப் போய் விடுவார்கள்.
Engg Drawing எடுத்தவர் அருமையாக பாடுவார். அதுவும், பாடல்களின் நடுவிலிருந்து பாடி, முதல் அடியை சொல்ல வேண்டும். வகுப்பில் முரளிதரன்,ஸ்ரீநிவாசன்  இந்த பாடல்களை எல்லாம் ஈசியாக கண்டுபிடித்ததாக ஞாபகம். சில வகுப்புகள் அவர் எடுத்தது பிடிக்கும். அடிக்கடி imagine the cylinder/cone/triangle from top view, front view என்று சொல்லி அப்பப்பா..   Drawing  வரைந்து முடித்து பேப்பரை கொடுத்து விட்டு அடுத்த வகுப்பில் திருத்தத்துடன் வரும் வரை கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கும்.

Mech Engg - Prof.முரளிதரன் என்று நினைவு. அவர் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்த புதிது என்று நினைக்கிறேன். சீனியர் Mech Engg மாணவர்களோடு நெருக்கமாக இருந்தார். அவர்கள் எங்களை கலாய்த்த போதும் ஒரு சிரிப்புடன் நகர்ந்து விடுவார்:( கோல்ட் ப்ரேம் போட்ட கண்ணாடி போட்டுக் கொண்டு கரகர குரலில் அவர் வகுப்புகள் புதிதாக நன்றாக இருந்தது.  அடிக்கடி ஒற்றை விரலால் நெற்றியை சொறிந்து கொண்டே, ப்ரேம் அட்ஜஸ்ட் செய்து கொண்டே வகுப்புகள் எடுப்பார்.

மெக்கானிக்கல் லேப் தான் கொஞ்சம் உதறலாக இருந்தது. அதுவும் அதே சீனியர் மாணவர்களை கடந்து போக வேண்டும் என்ற பயமும், அந்த வகுப்புகளும்... ஒரு சிறிய சதுர இரும்பு துண்டை கொடுத்து,  நடுவில் அரை வட்ட வடிவத்தில் வெட்டி கொடுப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது. file பண்ணுவதற்குள் யாரிடம் போய் உதவி கேட்பது என்ற நினைப்பு தான் இருக்கும். வீணாவைப் பார்த்து நானே லேபில் ஒழுங்காக செய்ய வேண்டும் என்று நினைப்பேனே தவிர, யாரிடமாவது எனக்காக செய்யச் சொல்லி கேட்டு விடுவேன். வெட்கமாகத் தான் இருக்கும்.

ஆனால், file செய்து குறிப்பிட்ட வடிவத்தை கொண்டு வருவது பெரிய கண்கட்டு வித்தையாகவே பட்டது எனக்கு. கொஞ்சம் குறைத்தும் file பண்ண முடியாது, கூடவும் பண்ண முடியாது. என்னடா ரோதனை என்று தான் இருக்கும்? ஆனால் ஒன்று, முடித்தவுடன் ஓடிப் போய் விடலாம்.அதே போல் தான் கட்டைகளை வைத்து ஷேப் வராமல், சமயங்களில் சுத்தியால் அடித்தவுடன் இரண்டாக பிளந்து விடும். மொத்தத்தில் Mech லேப் பிடிக்கும் ஆனா பிடிக்காது என்ற மாதிரி தான் இருந்தது.

Elec Engg வகுப்பும் எனக்கு மிகவும் பிடித்தது. அதை எடுத்த வாத்தியாரும் கொஞ்சம் கிஷ்மு சாயலில் சிரித்த முகத்துடன் ரொம்பவே ரிலாக்ஸாக வகுப்பில் இருப்பார். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் யார் பக்கத்திலேயும் உட்காரலாம் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று அதிரடியாக சொன்னவரும் அவர் ஒருவர் மட்டுமே. எங்கள் இன்டெர்னல் பேப்பர்களை சீனியர் மாணவர்களிடம் கொடுத்து கரெக்ட் பண்ணச் சொல்ல, அவர்களும் கடமையாக, ஒன் பேப்பரை நான் தான் கரெக்ட் பண்ணேன், நிறைய மார்க் போட்டிருக்கிறேன் என்று சொல்லும் பொழுது அடச்சே இதுக்கா இப்படி அடிச்சுக்கிட்டுப் படிச்சோம் என்றிருக்கும்.
Civil Engg - Prof.மெய்யப்பன் எடுத்தார்.  வார்த்தைகளை அழுத்தி, அழுத்தி பேசுவார். வகுப்பு எடுக்கும் பொழுது வேர்த்து ஒழுகும் அவருக்கு. அடிக்கடி கர்சீப்பால் முகத்தை துடைத்தபடி வகுப்பு எடுப்பார். பெரும்பாலும் மதிய நேரத்தில் அவருடைய வகுப்புகள் இருக்கும். சுகமாக காற்றும் வீச, உண்ட மயக்கமும் சேர, தூக்கம் சொக்கும். பல நாட்களில் மாணவர்கள் அவர் எந்த பக்கம் வருகிறார் என்று பார்த்து விட்டு மறுபுறம் ஜன்னல்/கதவு வழியாக தப்பித்து ஓடுவார்கள் :) கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

சீனியர் மாணவர்களின் தயவால் நிறைய புத்தகங்களும், நோட்ஸ்களும் கிடைத்தது :) அவர்களுடைய லைப்ரரி டோக்கன்களையும் தங்களுக்காக வைத்துக் கொள்ளாமல் கொடுத்து உதவியதால்(!) நிறைய புத்தகங்கள் எடுக்க முடிந்தது. காலையிலேயே இடைவேளையின் போது லைப்ரரியில் என்ன புத்தகம் வேண்டுமோ அதை எழுதி கொடுத்து விட வேண்டும். பிறகு மதியம் போய் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். அப்போதெல்லாம் லைப்ரரி main building கீழேயே இருந்தது.

முதல் வருடம் ஆடிட்டோரியத்தில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு செல்ல, ராக்கெட் பல 'விர்விர்' என்று பல பறந்து மாணவிகள் பக்கம் வந்து, ஏண்டா வந்தோம் என்று நினைக்க வைத்து விட்டார்கள். ஒரே விசில், ராக்கெட். ஜூனியர் மாணவ, மாணவிகள் பாடினால் காசு தூக்கிப் போடுவதும், கூச்சல் போடுவதும், கலாட்டா பண்ணுவதுமாய் இருந்தார்கள். தாமோதரன் மற்றும் மூன் வாக்கர் என்று ஒரு நன்கு பிரேக் டான்ஸ் ஆடும் சீனியர் ப்ரோக்ராம்கள் மட்டும் எந்தவித தங்கு தடையில்லாமல் நடந்தது. நேரமாகி கொண்டிருந்ததால் பாதியிலேயே பஸ்ஸை பிடிக்க ஓடி வந்து விட்டோம். அருமையான ஆடிடோரியம் அது.

ஒரு நாள் சீனியர் மாணவர்கள் தட்டில் ரோஜாப்பூக்களையும், சந்தனம், பன்னீர், கல்கண்டு என்று ஆரவாரத்துடன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே ஆசிரியர்களின் அனுமதியுடன் அவர்கள் போகவிருக்கும் டூருக்கு வந்து வழியனுப்புமாறு அழைத்து விட்டு போனார்கள். வேடிக்கையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

முதல் வருடத்தில் ஒரு வழியாக 3 இன்டெர்னல் டெஸ்டுகளையும் முடித்து விட்டோம். மூன்றாவது டெஸ்டின் போது என் அக்காவிற்கு உடல்நலம் சரியில்லாததால் அவளால் எழுத முடியாமால் போய் விட்டது. முழுஆண்டு தேர்வுகளுக்காக ஒரு மாதம் விடுமுறை. படித்ததெல்லாம் மறந்து போனது போலவே இருக்கும். ஒரே பயத்துடன் சரியான தூக்கமும் இல்லாமல் அடுத்தடுத்து தேர்வுகள், லேப்ஸ் என்று முதல் வருடம் பயமும், ஆர்வமுமாக முடிந்து விட்டது. முதல் வருட இறுதியில் யார் யார் கூட படிக்கிறார்கள், எந்த எந்த வகுப்புகள், யார் சீனியர் மாணவர்கள் என்று தெரிந்து விட்டது. அடுத்து எந்த துறை கிடைக்குமோ என்ற கவலையும் வந்து விட்டது :(


நினைவலைகள் தொடரும்...




Tuesday, December 4, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 1

முகநூல் வந்த பிறகு பல கல்லூரி நண்பர்களை பார்க்கவும், அவர்களுடன் உரையாடவும் முடிகிறது. இன்று வந்த கெட்-டுகதர் அழைப்பிதழை பார்த்தவுடன், கல்லூரி விட்டு வந்து இவ்வளவு வருடம் ஓடிப் போய் விட்டது என்று மனம் பின்னோக்கி நகர்ந்து அந்த இனிமையான நினைவில்..

+2 படிக்கும் போதே Engg அல்லது மெடிக்கல் தான் என்று முடிவாயிற்று. நானும் அம்மாவும் சென்று கல்லூரியில் சேர விண்ணப்ப படிவங்களை வாங்க பஸ் ஸ்டாப்பில் இறங்கி வெகுதூரம் அந்த வெயிலில் நடந்து போகும் பொழுதே, இங்கே சேர்ந்தால் தினமும் இப்படி நடக்கணுமே என்று மலைப்பாக இருந்தது!

கல்லூரி அருகில் வழியெங்கிலும் மரங்களும், சுற்றி பச்சை பசேல் என்று விளை நிலங்களும், திருப்பரங்குன்றம் மலையும், பிரமாண்டமான ஆலமரங்களும், ஓங்கி உயர்ந்த நெட்டிலிங்கம் மரங்களும், அழகாக பராமரித்த தோட்டங்களும், குரோட்டன்ஸ் செடிகளும், பெரிய விளையாட்டு மைதானமும், நிமிர்ந்து பார்க்க வைக்கும் கட்டிடமும் என்று பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது.

அப்போது சீனியர் மாணவர்கள் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு மாணவிகளிடம் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார்கள். என்னிடமும் எவ்வளவு மார்க், எந்த ஸ்கூல் என்று அதிகாரமாக கேட்டார்கள் என் அம்மாவிற்கு தான் கொஞ்சம் பயம். அப்பொழுதே அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். பெண்கள் பள்ளியில் படித்து விட்டு இந்தச்  சூழ்நிலைக்கு எப்படி நானும் என் அக்காவும் இருப்போமா என்று அவர்களுக்கு கவலை!

நுழைவுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் எந்த கல்லூரி என்ற குழப்பம் சிறிது காலம். எனக்கு எங்காவது வெளியில் ஹாஸ்டலில் தங்கி படிக்க ஆசை. அது நடக்கவில்லை TCE தான் என்று முடிவாகி விட்டது எனக்கும் என் அக்காவிற்கும், என் மாமா மகளுக்கும். அதைத் தவிர என்னுடன் படித்த மேகலாவும், லதாமணியும் அங்கு வருவதால் கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. ஒரு பக்கம் சந்தோஷம், ஒரு பக்கம் பயம்.

அந்த நாளும் வந்தது. கல்லூரி வந்து சேர அழைப்பிதழும், என்ன டாக்குமென்ட்ஸ் எடுத்து வர வேண்டுமென்றும். நான், அக்கா, அம்மா, அப்பா என்று குடும்ப சகிதமாக அங்கே போக, முதல்வர் Dr.மரியலூயிஸ் அறைக்கு முதலில் வரிசைப்படி நான் போக, Prof .SRB டாக்குமென்ட்ஸ் சரிபார்த்து முதல்வர ிடம் கொடுக்க, அவர் கையொப்பமிட்டு, வெல்கம் என்று சொல்ல, வேர்க்க விறுவிறுக்க அப்பாடா என்று அந்த குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்து, அக்காவின் அட்மிஷனும் முடிய, பேங்க் போய் பணத்தைக் கட்டி விட்டு வர, அன்று கோலாகலமான நாள். எங்கள் குடும்பத்தில் பெண்கள் முதலில் பொறியியல் கல்லூரிக்குப் போவதால் எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சி. என் அம்மாவுக்குத் தான் மிகவும் பயம். இருபாலாரும் படிக்கும் கல்லூரி வேறு. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரே அட்வைஸ் மழை தான். ஒழுங்காக படித்து எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக் கொள்ளாமல் கல்லூரிக்குப் போய் வர வேண்டும் என்று.

முதல் நாள், கல்லூரிக்குப் போகும் பொழுது பாலரெங்கபுரத்திலிருந்து பல சந்துகளின் வழியாக மிஷன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப் வந்து சேர குறைந்தது அரை மணி நேரமாவது ஆகியது. வாழ்க்கையே மாறி விட்டது. காலையில் எழுந்திருந்து அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு கல்லூரி பஸ் பிடிக்க ஓட என்று பழக்கமாக சில நாட்கள் ஆயிற்று. என் அம்மாவும் காலையில் ஐந்து மணியிலிருந்து எழுந்திருந்து எங்களுக்கு காலை உணவு, மதிய உணவு செய்து கொடுத்து ஒரு வீட்டு வேலையையும் செய்ய விடாமல் படிப்பில் ஒன்றிலே கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லி எல்லா வேலைகளையும் அவரே மாங்கு மாங்கு என்று செய்த காலம்.

எங்கள் தெருவிலிருந்து பல சீனியர் மாணவர்களும் மாணவிகளும் சக மாணவர்களும் என்று ஒரு பெரிய கூட்டமே போவோம். முதல் வருடம் ராக்கிங்கிற்கு பயந்து கல்லூரி பஸ்ஸில் தான் பயணம். அந்த கட்ட வண்டியிலே எல்லாம் வரக் கூடாது என்ற சீனியர் மாணவர்களின் மிரட்டலுக்கு பயந்து அதில் தான் முதல் ஆண்டு முழுவதும். முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரையும் ஆடிட்டோரியத்தில் வரச் சொல்லி அங்கிருந்து வகுப்புகளுக்குச் சென்றோம்.

நான், மேகலா, அக்கா, லதாமணி என்று தெரிந்தவர்கள் எல்லாம் A செக்க்ஷன். நேராகப் போய் கடைசி பெஞ்சிற்கு முந்தின பெஞ்சில் தஞ்சம். உடம்பெல்லாம் சில்லிட பயந்து கொண்டே உட்கார்ந்திருந்தோம். யார் முதல் ஆண்டு மாணவர்கள், யார் சீனியர் மாணவர்கள் என்று தெரியாமல் ஒரே குழப்பம். ஒரே கூட்டமாக லேடீஸ் ரூமிற்கு குடுகுடுவென்று ஓடுவோம். B ,C, D வகுப்புகளை கடந்து படிகளில் இறங்கி ஓடிப்போய் லேடீஸ் ரூம் போவதற்குள் சீனியர் மாணவர்களின் கண்களில் படாமல் தப்பிக்க வேண்டுமே என்ற ஒரே நினைப்புடன் போனது எல்லாம்...

மதிய இடை வேளையில் வாத்தியார் வருவதற்குள் Mech Engg சீனியர் குழாம் ஒன்று வந்து ஒரு பெயரை சொல்லி தெரியுமா என்று கேட்க, நானும் அப்படி எல்லாம் யாரையும் தெரியாது என்று சொல்ல போக, டேய் மாப்ள, மாமாவை தெரியாதாண்டா என்று இவர்கள் கத்த , யார் மாப்பிள்ளை, யார் மாமா என்று நான் குழம்ப... ஒரு நாள், சீக்கிரம் வகுப்பிலிருந்து தப்பித்துப் போவதற்குள், சீனியர் மாணவர்களிடம் மாட்டிக்கொண்டு எங்கே போறீங்க? என்று அவர்கள் பீட்டர் இங்கிலிஷில் கேட்ட கேள்விகளுக்கு பயந்து பயந்து அந்தக் கூட்டத்தை பார்த்தாலே... உதறல் தான்.

கடமையாக பஸ் உள்ளே வரும் மரத்தடியில் உட்கார்ந்திருப்பார்கள் இந்த மரத்தடி மாமாக்கள். வகுப்புகள் நடக்கும் நேரத்தில் கேன்ட்டீன் முன்புறம் ஸ்டைலாக பைக்கின் மேலும் சிலர் மரக்கிளைகளின் மேலும் உட்கார்ந்திருப்பார்கள்!! கல்லூரி முடிந்த பிறகு ஹாஸ்டலுக்கு அடுத்து இருக்கும் காப்பி கடையில் உட்கார்ந்திருப்பர்கள். ஏதாவது ஒரு கும்பலுக்குப் பின் நடந்து வந்து பஸ் ஸ்டாப் வரை வருவார்கள் இந்த ரோமியோக்கள். சில சமயங்களில், பஸ்ஸில் ஏறி இறங்கும் வரை பாதுகாவலர்களாகவே வருவார்கள் :)

T -squre வைத்து பல கலாட்டாக்கள். அதைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது. ஏசு சிலுவையை சுமந்த மாதிரி அதை ஒன்று சுமந்த காலம். இன்று யாரிடம் மாட்டிக் கொள்ளப் போகிறமோ என்று பயந்து பயந்து போன காலம். அதை வைத்து அவ்வளவு ராகிங் கொடுமைகள். சீனியர்களிடம் மாட்டிகொண்டு மாணவர்கள் தான் பாவம், மாணவிகளிடம் போய் ஐ லவ் யூ சொல்லச் சொல்லி அவர்களும் அழாத குறையாக வந்து சொல்லி விட்டுப் போவார்கள். சிலரை வெறுந்தரையில் நீச்சல் அடிக்கச் சொன்ன கொடுமையும் நடந்தது.

இதைத் தவிர, நிஜ குரங்குகளின் அட்டகாசம் வேறு! பெண்கள் என்றாலே இளக்காரம் தான். லேடீஸ் ரூமில் புகுந்து சாப்பாட்டை எடுத்துப் பண்ணும் கலாட்டா என்ன, ஸ்டோர்ஸ் போகும் வழியில் முறைத்துப் பார்ப்பதென்ன, ஏற்கெனவே, பசங்களுக்குப் பயந்து போய்க் கொண்டிருப்போம். இது வேறு, கையில் கிடைத்ததை பிடுங்கிக் கொண்டு மரத்தில் ஓடி விடும். இப்படி பல குரங்குகளுக்கும் பயந்த காலம். காக்கி யூனிபார்ம் வேறு! எனக்கு பிடிக்காத இன்னொன்று.

முதன் முதலில் சூப்பர் மார்க்கெட் சென்று வாங்கிய கால்குலேட்டர், பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒன்றும், அக்காவுக்கு ஒன்றுமாக வாங்கிய பொழுது சிறு குழந்தைக்கு பொம்மை கொடுத்தால் எவ்வளவு சந்தோஷப்படுமோ அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
கல்லூரியில் அவரவர் சாதிகளுக்கேற்ப பல குழுமங்கள் இருந்தன. நாடார், செட்டியார், சௌராஷ்டிரா... என்று. சௌராஷ்டிரா குரூப் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருமலை நாயக்கர் மகாலுக்கு எதிர்த்தாற்போல் மாடியில் இருந்த லைப்ரரியில் கூடுவார்கள். எங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். சீனியர் மாணவர்கள் நன்கு உதவினார்கள். வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது பங்க்ஷன் வைத்து நன்றாக படித்த மாணவ, மாணவிகளை கௌரவிப்பார்கள். பல திரைப்படங்களுக்கும் குழுவாக சென்றிருக்கிறோம். அந்த அமைப்பு பலருக்கும் மிகவும் உதவியாக இருந்தது.


நினைவலைகள் தொடரும்...

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...