Tuesday, December 4, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 1

முகநூல் வந்த பிறகு பல கல்லூரி நண்பர்களை பார்க்கவும், அவர்களுடன் உரையாடவும் முடிகிறது. இன்று வந்த கெட்-டுகதர் அழைப்பிதழை பார்த்தவுடன், கல்லூரி விட்டு வந்து இவ்வளவு வருடம் ஓடிப் போய் விட்டது என்று மனம் பின்னோக்கி நகர்ந்து அந்த இனிமையான நினைவில்..

+2 படிக்கும் போதே Engg அல்லது மெடிக்கல் தான் என்று முடிவாயிற்று. நானும் அம்மாவும் சென்று கல்லூரியில் சேர விண்ணப்ப படிவங்களை வாங்க பஸ் ஸ்டாப்பில் இறங்கி வெகுதூரம் அந்த வெயிலில் நடந்து போகும் பொழுதே, இங்கே சேர்ந்தால் தினமும் இப்படி நடக்கணுமே என்று மலைப்பாக இருந்தது!

கல்லூரி அருகில் வழியெங்கிலும் மரங்களும், சுற்றி பச்சை பசேல் என்று விளை நிலங்களும், திருப்பரங்குன்றம் மலையும், பிரமாண்டமான ஆலமரங்களும், ஓங்கி உயர்ந்த நெட்டிலிங்கம் மரங்களும், அழகாக பராமரித்த தோட்டங்களும், குரோட்டன்ஸ் செடிகளும், பெரிய விளையாட்டு மைதானமும், நிமிர்ந்து பார்க்க வைக்கும் கட்டிடமும் என்று பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது.

அப்போது சீனியர் மாணவர்கள் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு மாணவிகளிடம் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார்கள். என்னிடமும் எவ்வளவு மார்க், எந்த ஸ்கூல் என்று அதிகாரமாக கேட்டார்கள் என் அம்மாவிற்கு தான் கொஞ்சம் பயம். அப்பொழுதே அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். பெண்கள் பள்ளியில் படித்து விட்டு இந்தச்  சூழ்நிலைக்கு எப்படி நானும் என் அக்காவும் இருப்போமா என்று அவர்களுக்கு கவலை!

நுழைவுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் எந்த கல்லூரி என்ற குழப்பம் சிறிது காலம். எனக்கு எங்காவது வெளியில் ஹாஸ்டலில் தங்கி படிக்க ஆசை. அது நடக்கவில்லை TCE தான் என்று முடிவாகி விட்டது எனக்கும் என் அக்காவிற்கும், என் மாமா மகளுக்கும். அதைத் தவிர என்னுடன் படித்த மேகலாவும், லதாமணியும் அங்கு வருவதால் கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. ஒரு பக்கம் சந்தோஷம், ஒரு பக்கம் பயம்.

அந்த நாளும் வந்தது. கல்லூரி வந்து சேர அழைப்பிதழும், என்ன டாக்குமென்ட்ஸ் எடுத்து வர வேண்டுமென்றும். நான், அக்கா, அம்மா, அப்பா என்று குடும்ப சகிதமாக அங்கே போக, முதல்வர் Dr.மரியலூயிஸ் அறைக்கு முதலில் வரிசைப்படி நான் போக, Prof .SRB டாக்குமென்ட்ஸ் சரிபார்த்து முதல்வர ிடம் கொடுக்க, அவர் கையொப்பமிட்டு, வெல்கம் என்று சொல்ல, வேர்க்க விறுவிறுக்க அப்பாடா என்று அந்த குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்து, அக்காவின் அட்மிஷனும் முடிய, பேங்க் போய் பணத்தைக் கட்டி விட்டு வர, அன்று கோலாகலமான நாள். எங்கள் குடும்பத்தில் பெண்கள் முதலில் பொறியியல் கல்லூரிக்குப் போவதால் எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சி. என் அம்மாவுக்குத் தான் மிகவும் பயம். இருபாலாரும் படிக்கும் கல்லூரி வேறு. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரே அட்வைஸ் மழை தான். ஒழுங்காக படித்து எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக் கொள்ளாமல் கல்லூரிக்குப் போய் வர வேண்டும் என்று.

முதல் நாள், கல்லூரிக்குப் போகும் பொழுது பாலரெங்கபுரத்திலிருந்து பல சந்துகளின் வழியாக மிஷன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப் வந்து சேர குறைந்தது அரை மணி நேரமாவது ஆகியது. வாழ்க்கையே மாறி விட்டது. காலையில் எழுந்திருந்து அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு கல்லூரி பஸ் பிடிக்க ஓட என்று பழக்கமாக சில நாட்கள் ஆயிற்று. என் அம்மாவும் காலையில் ஐந்து மணியிலிருந்து எழுந்திருந்து எங்களுக்கு காலை உணவு, மதிய உணவு செய்து கொடுத்து ஒரு வீட்டு வேலையையும் செய்ய விடாமல் படிப்பில் ஒன்றிலே கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லி எல்லா வேலைகளையும் அவரே மாங்கு மாங்கு என்று செய்த காலம்.

எங்கள் தெருவிலிருந்து பல சீனியர் மாணவர்களும் மாணவிகளும் சக மாணவர்களும் என்று ஒரு பெரிய கூட்டமே போவோம். முதல் வருடம் ராக்கிங்கிற்கு பயந்து கல்லூரி பஸ்ஸில் தான் பயணம். அந்த கட்ட வண்டியிலே எல்லாம் வரக் கூடாது என்ற சீனியர் மாணவர்களின் மிரட்டலுக்கு பயந்து அதில் தான் முதல் ஆண்டு முழுவதும். முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரையும் ஆடிட்டோரியத்தில் வரச் சொல்லி அங்கிருந்து வகுப்புகளுக்குச் சென்றோம்.

நான், மேகலா, அக்கா, லதாமணி என்று தெரிந்தவர்கள் எல்லாம் A செக்க்ஷன். நேராகப் போய் கடைசி பெஞ்சிற்கு முந்தின பெஞ்சில் தஞ்சம். உடம்பெல்லாம் சில்லிட பயந்து கொண்டே உட்கார்ந்திருந்தோம். யார் முதல் ஆண்டு மாணவர்கள், யார் சீனியர் மாணவர்கள் என்று தெரியாமல் ஒரே குழப்பம். ஒரே கூட்டமாக லேடீஸ் ரூமிற்கு குடுகுடுவென்று ஓடுவோம். B ,C, D வகுப்புகளை கடந்து படிகளில் இறங்கி ஓடிப்போய் லேடீஸ் ரூம் போவதற்குள் சீனியர் மாணவர்களின் கண்களில் படாமல் தப்பிக்க வேண்டுமே என்ற ஒரே நினைப்புடன் போனது எல்லாம்...

மதிய இடை வேளையில் வாத்தியார் வருவதற்குள் Mech Engg சீனியர் குழாம் ஒன்று வந்து ஒரு பெயரை சொல்லி தெரியுமா என்று கேட்க, நானும் அப்படி எல்லாம் யாரையும் தெரியாது என்று சொல்ல போக, டேய் மாப்ள, மாமாவை தெரியாதாண்டா என்று இவர்கள் கத்த , யார் மாப்பிள்ளை, யார் மாமா என்று நான் குழம்ப... ஒரு நாள், சீக்கிரம் வகுப்பிலிருந்து தப்பித்துப் போவதற்குள், சீனியர் மாணவர்களிடம் மாட்டிக்கொண்டு எங்கே போறீங்க? என்று அவர்கள் பீட்டர் இங்கிலிஷில் கேட்ட கேள்விகளுக்கு பயந்து பயந்து அந்தக் கூட்டத்தை பார்த்தாலே... உதறல் தான்.

கடமையாக பஸ் உள்ளே வரும் மரத்தடியில் உட்கார்ந்திருப்பார்கள் இந்த மரத்தடி மாமாக்கள். வகுப்புகள் நடக்கும் நேரத்தில் கேன்ட்டீன் முன்புறம் ஸ்டைலாக பைக்கின் மேலும் சிலர் மரக்கிளைகளின் மேலும் உட்கார்ந்திருப்பார்கள்!! கல்லூரி முடிந்த பிறகு ஹாஸ்டலுக்கு அடுத்து இருக்கும் காப்பி கடையில் உட்கார்ந்திருப்பர்கள். ஏதாவது ஒரு கும்பலுக்குப் பின் நடந்து வந்து பஸ் ஸ்டாப் வரை வருவார்கள் இந்த ரோமியோக்கள். சில சமயங்களில், பஸ்ஸில் ஏறி இறங்கும் வரை பாதுகாவலர்களாகவே வருவார்கள் :)

T -squre வைத்து பல கலாட்டாக்கள். அதைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது. ஏசு சிலுவையை சுமந்த மாதிரி அதை ஒன்று சுமந்த காலம். இன்று யாரிடம் மாட்டிக் கொள்ளப் போகிறமோ என்று பயந்து பயந்து போன காலம். அதை வைத்து அவ்வளவு ராகிங் கொடுமைகள். சீனியர்களிடம் மாட்டிகொண்டு மாணவர்கள் தான் பாவம், மாணவிகளிடம் போய் ஐ லவ் யூ சொல்லச் சொல்லி அவர்களும் அழாத குறையாக வந்து சொல்லி விட்டுப் போவார்கள். சிலரை வெறுந்தரையில் நீச்சல் அடிக்கச் சொன்ன கொடுமையும் நடந்தது.

இதைத் தவிர, நிஜ குரங்குகளின் அட்டகாசம் வேறு! பெண்கள் என்றாலே இளக்காரம் தான். லேடீஸ் ரூமில் புகுந்து சாப்பாட்டை எடுத்துப் பண்ணும் கலாட்டா என்ன, ஸ்டோர்ஸ் போகும் வழியில் முறைத்துப் பார்ப்பதென்ன, ஏற்கெனவே, பசங்களுக்குப் பயந்து போய்க் கொண்டிருப்போம். இது வேறு, கையில் கிடைத்ததை பிடுங்கிக் கொண்டு மரத்தில் ஓடி விடும். இப்படி பல குரங்குகளுக்கும் பயந்த காலம். காக்கி யூனிபார்ம் வேறு! எனக்கு பிடிக்காத இன்னொன்று.

முதன் முதலில் சூப்பர் மார்க்கெட் சென்று வாங்கிய கால்குலேட்டர், பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒன்றும், அக்காவுக்கு ஒன்றுமாக வாங்கிய பொழுது சிறு குழந்தைக்கு பொம்மை கொடுத்தால் எவ்வளவு சந்தோஷப்படுமோ அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
கல்லூரியில் அவரவர் சாதிகளுக்கேற்ப பல குழுமங்கள் இருந்தன. நாடார், செட்டியார், சௌராஷ்டிரா... என்று. சௌராஷ்டிரா குரூப் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருமலை நாயக்கர் மகாலுக்கு எதிர்த்தாற்போல் மாடியில் இருந்த லைப்ரரியில் கூடுவார்கள். எங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். சீனியர் மாணவர்கள் நன்கு உதவினார்கள். வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது பங்க்ஷன் வைத்து நன்றாக படித்த மாணவ, மாணவிகளை கௌரவிப்பார்கள். பல திரைப்படங்களுக்கும் குழுவாக சென்றிருக்கிறோம். அந்த அமைப்பு பலருக்கும் மிகவும் உதவியாக இருந்தது.


நினைவலைகள் தொடரும்...

7 comments:

  1. உங்கள் ஞாபகசக்திக்கு அளவேயில்லை, லதா:)complan, boost போல் ஞாபகசக்திக்கு என்ன சாப்பிட்டீர்கள்? இப்படி வெளுத்துக்கட்டுகிறீர்கள். Super!!!

    ReplyDelete
  2. complan, boost போல் ஞாபகசக்திக்கு என்ன சாப்பிட்டீர்கள்,லதா:) இப்படி வெளுத்துக்கட்டுகிறீர்கள், Super!!!

    ReplyDelete
  3. அம்மா,அப்பா புடை சூழ, திருப்பரங்குன்றம் முருகனிடம் போய் ஆசி வாங்கிக் கொண்டு அட்மிஷனுக்குப் போய் எக்ஸாம் ஹாலில் உட்கார்ந்திருந்தது .சப்ஜெக்டில் இருந்து ஏதும் கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்கிற பயத்தில் திருதிருவென ப்ரின்சிபால் முன் அவர் அறையில் உட்கார்ந்திருந்தது. முதல் நாள் எல்லோரையும் ஆடிட்டோரியத்தில் வைத்து அறிவுரை சொன்ன போது தூரும் புரியாமல், தலையும் புரியாமல் திருவிழா கூட்டத்தில் தொலைந்தவனைப் போல முழித்துக் கொண்டிருந்தது

    எல்லோரும் வகுப்புக்கு போகலாமென சொன்னவுடன் அவனவன் அடித்துப் பிடித்துக் கொண்டு வகுப்புக்கு ஓடிப்போய் முதல் பெஞ்ச்சில் உட்கார இடம்பிடித்த போது சமத்தாய் கடைசி பெஞ்சில் போய் உட்கார்ந்து விட்டு பார்த்தால் எனக்கு முன்னால் இருந்த இரண்டு பெஞ்ச்சில் ஆளே இல்லை. கொஞ்சத்தில் இராஜன், கிருஷ்ணகுமார் என ஆகிருதியான இருவர் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்த போது....ஆஹா இரண்டு சீனியர்கிட்ட மாட்டிகிட்டோமோ என மிரண்டது..இப்படி நிறைய சொல்லலாம்....அத்தனையும் பசுமையாய் நினைவில் :)

    ReplyDelete
  4. கொஞ்சத்தில் இராஜன், கிருஷ்ணகுமார் என ஆகிருதியான இருவர் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்த போது....ஆஹா இரண்டு சீனியர்கிட்ட மாட்டிகிட்டோமோ என மிரண்டது. :)

    ReplyDelete

அங்கிள் சாமின் உண்மையான முகம்

சில வாரங்களுக்கு முன் அமேசான் பிரைமில் படங்களைப் பார்க்கத் தேடிக்கொண்டிருந்த பொழுது அகப்பட்டது தான் 'Rainmaker'. கதாநாயகன் யார் என்...