Thursday, December 6, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 2

காலையில் வெயில் 'சுள்'ளென்று அடிக்கும் முன்னே கல்லூரிக்கு வந்து விடுவோம். பஸ்ஸை தவற விட்டவர்கள் கூட்டம் சாரை சாரையாக மெயின் ரோட்டிலிருந்து 'லொங்குலொங்கு'வென்று கையில் T-Square, நோட்டுப் புத்தகங்களை சுமந்து கொண்டு வந்து கொண்டிருப்பார்கள்.

பைக்கில் 'சர்சர்'ரென்று பெண்கள் கூட்டத்தை பார்த்தவுடன் அப்டி ஒரு வளைவு வளைந்து செல்லும் மாணவர்கள். சமயங்களில் மூன்று பேரை இருத்தி நெருக்கி அடித்துக் கொண்டு போகும் கூட! ஒரு சில கார்களும், ஹாஸ்டலில் இருந்து மாணவிகளுக்கான பஸ்களில் மாணவிகளும், மாணவர்கள் ஹாஸ்டலில் இருந்து குழுக்களாகவும் கல்லூரியை நோக்கி போய்க் கொண்டிருப்பார்கள்.

கல்லூரி போகும் வழியில் கால்நடை மருத்துவமனை இருந்ததால் சமயங்களில் கால்நடைகளும் கால்நடையாக போய்க் கொண்டிருக்கும்! வயலில் வேலை செய்பவர்கள், ஸ்கூட்டரில் போகும் ஆசிரியர்கள் என்று அந்த காலை நேரம் கல்லூரி முன்பு பரபரப்பாகவே இருக்கும்.

படத்தில் உள்ள இந்த இடத்தில் தான் கல்லூரி பஸ் நிற்கும்.செட்டியாரின் மணி மண்டபம், நீரூற்று, தோட்டங்கள் எல்லாம் நன்கு பராமரிக்கப்பட்டு இருக்கும். பஸ்ஸிலிருந்து இறங்கி மெயின் பில்டிங் மூன்றாவது மாடியில் முதல் ஆண்டு மாணவர்களின் வகுப்புகள். நுழைந்தவுடன் கணிதத்துறை ஆசிரியர்களுக்கான அறை. அதை தாண்டி போனால், D, C, B, A வகுப்புகள். மறுபுறம் Applied Science, Applied Maths வகுப்புகள். Engg Drawing வகுப்பிற்காக ஒரு நீண்ட பெரிய ஹால், பெரிய பெரிய மேஜைகளுடன். வகுப்புகள் எல்லாம் விசாலமாக பெரிய ஜன்னல்களுடன் காற்றோட்டமாக இருபுறமும் கதவுகள் வைத்து நன்றாக இருக்கும்.

முதல் வருடம் வேதியியல் எடுத்த பேராசிரியர் மிகவும் கண்டிப்பானவர். ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக வகுப்புகள் எடுப்பார். அவருக்கு மாணவர் ஒழுக்கம் மிகவும் முக்கியம். அவர் வகுப்பு எடுக்கும் நேரத்தில் பேசவோ, சிரிக்கவோ முடியாது. அவர் மகளும் எங்களுடன் தான் படித்தாள். லேபிலும் அவர் தான் வாத்தியார்.  எனக்கு பிடித்த பாடமும் வேதியியல் என்பதால் படிப்பதில் பிரச்சினை இல்லை. ஒரே வருடத்தில் Organic , Inorganic , Physical chemistry என்று படித்தோம். புத்தகமே அவ்வளவு கனமாக இருக்கும்!

இயற்பியல் எடுத்தவர் பேராசிரியர் சுப்ரமணியன். அவரும் நிதானமாக வகுப்புகள் எடுப்பார். அவ்வளவு கண்டிப்பில்லை. கணித Prof . மோகன்-அவருடைய வகுப்பு எனக்கு பிடித்தது. மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்தார்.இங்கிலீஷ், ஒரு வயதான ஆசிரியர். பார்த்தால் வெள்ளைக்காரர் போல் இருப்பார். பொதுவாக கடைசி வகுப்பாக இருக்கும். எப்படா வீட்டுக்குப் போகலாம் என்றிருக்கும் போது புத்தகத்திலிருந்து வாசித்து அர்த்தம் சொல்லி... இந்த வகுப்பில் பாதி மாணவர்கள் ஓடிப் போய் விடுவார்கள்.
Engg Drawing எடுத்தவர் அருமையாக பாடுவார். அதுவும், பாடல்களின் நடுவிலிருந்து பாடி, முதல் அடியை சொல்ல வேண்டும். வகுப்பில் முரளிதரன்,ஸ்ரீநிவாசன்  இந்த பாடல்களை எல்லாம் ஈசியாக கண்டுபிடித்ததாக ஞாபகம். சில வகுப்புகள் அவர் எடுத்தது பிடிக்கும். அடிக்கடி imagine the cylinder/cone/triangle from top view, front view என்று சொல்லி அப்பப்பா..   Drawing  வரைந்து முடித்து பேப்பரை கொடுத்து விட்டு அடுத்த வகுப்பில் திருத்தத்துடன் வரும் வரை கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கும்.

Mech Engg - Prof.முரளிதரன் என்று நினைவு. அவர் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்த புதிது என்று நினைக்கிறேன். சீனியர் Mech Engg மாணவர்களோடு நெருக்கமாக இருந்தார். அவர்கள் எங்களை கலாய்த்த போதும் ஒரு சிரிப்புடன் நகர்ந்து விடுவார்:( கோல்ட் ப்ரேம் போட்ட கண்ணாடி போட்டுக் கொண்டு கரகர குரலில் அவர் வகுப்புகள் புதிதாக நன்றாக இருந்தது.  அடிக்கடி ஒற்றை விரலால் நெற்றியை சொறிந்து கொண்டே, ப்ரேம் அட்ஜஸ்ட் செய்து கொண்டே வகுப்புகள் எடுப்பார்.

மெக்கானிக்கல் லேப் தான் கொஞ்சம் உதறலாக இருந்தது. அதுவும் அதே சீனியர் மாணவர்களை கடந்து போக வேண்டும் என்ற பயமும், அந்த வகுப்புகளும்... ஒரு சிறிய சதுர இரும்பு துண்டை கொடுத்து,  நடுவில் அரை வட்ட வடிவத்தில் வெட்டி கொடுப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது. file பண்ணுவதற்குள் யாரிடம் போய் உதவி கேட்பது என்ற நினைப்பு தான் இருக்கும். வீணாவைப் பார்த்து நானே லேபில் ஒழுங்காக செய்ய வேண்டும் என்று நினைப்பேனே தவிர, யாரிடமாவது எனக்காக செய்யச் சொல்லி கேட்டு விடுவேன். வெட்கமாகத் தான் இருக்கும்.

ஆனால், file செய்து குறிப்பிட்ட வடிவத்தை கொண்டு வருவது பெரிய கண்கட்டு வித்தையாகவே பட்டது எனக்கு. கொஞ்சம் குறைத்தும் file பண்ண முடியாது, கூடவும் பண்ண முடியாது. என்னடா ரோதனை என்று தான் இருக்கும்? ஆனால் ஒன்று, முடித்தவுடன் ஓடிப் போய் விடலாம்.அதே போல் தான் கட்டைகளை வைத்து ஷேப் வராமல், சமயங்களில் சுத்தியால் அடித்தவுடன் இரண்டாக பிளந்து விடும். மொத்தத்தில் Mech லேப் பிடிக்கும் ஆனா பிடிக்காது என்ற மாதிரி தான் இருந்தது.

Elec Engg வகுப்பும் எனக்கு மிகவும் பிடித்தது. அதை எடுத்த வாத்தியாரும் கொஞ்சம் கிஷ்மு சாயலில் சிரித்த முகத்துடன் ரொம்பவே ரிலாக்ஸாக வகுப்பில் இருப்பார். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் யார் பக்கத்திலேயும் உட்காரலாம் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று அதிரடியாக சொன்னவரும் அவர் ஒருவர் மட்டுமே. எங்கள் இன்டெர்னல் பேப்பர்களை சீனியர் மாணவர்களிடம் கொடுத்து கரெக்ட் பண்ணச் சொல்ல, அவர்களும் கடமையாக, ஒன் பேப்பரை நான் தான் கரெக்ட் பண்ணேன், நிறைய மார்க் போட்டிருக்கிறேன் என்று சொல்லும் பொழுது அடச்சே இதுக்கா இப்படி அடிச்சுக்கிட்டுப் படிச்சோம் என்றிருக்கும்.
Civil Engg - Prof.மெய்யப்பன் எடுத்தார்.  வார்த்தைகளை அழுத்தி, அழுத்தி பேசுவார். வகுப்பு எடுக்கும் பொழுது வேர்த்து ஒழுகும் அவருக்கு. அடிக்கடி கர்சீப்பால் முகத்தை துடைத்தபடி வகுப்பு எடுப்பார். பெரும்பாலும் மதிய நேரத்தில் அவருடைய வகுப்புகள் இருக்கும். சுகமாக காற்றும் வீச, உண்ட மயக்கமும் சேர, தூக்கம் சொக்கும். பல நாட்களில் மாணவர்கள் அவர் எந்த பக்கம் வருகிறார் என்று பார்த்து விட்டு மறுபுறம் ஜன்னல்/கதவு வழியாக தப்பித்து ஓடுவார்கள் :) கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

சீனியர் மாணவர்களின் தயவால் நிறைய புத்தகங்களும், நோட்ஸ்களும் கிடைத்தது :) அவர்களுடைய லைப்ரரி டோக்கன்களையும் தங்களுக்காக வைத்துக் கொள்ளாமல் கொடுத்து உதவியதால்(!) நிறைய புத்தகங்கள் எடுக்க முடிந்தது. காலையிலேயே இடைவேளையின் போது லைப்ரரியில் என்ன புத்தகம் வேண்டுமோ அதை எழுதி கொடுத்து விட வேண்டும். பிறகு மதியம் போய் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். அப்போதெல்லாம் லைப்ரரி main building கீழேயே இருந்தது.

முதல் வருடம் ஆடிட்டோரியத்தில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு செல்ல, ராக்கெட் பல 'விர்விர்' என்று பல பறந்து மாணவிகள் பக்கம் வந்து, ஏண்டா வந்தோம் என்று நினைக்க வைத்து விட்டார்கள். ஒரே விசில், ராக்கெட். ஜூனியர் மாணவ, மாணவிகள் பாடினால் காசு தூக்கிப் போடுவதும், கூச்சல் போடுவதும், கலாட்டா பண்ணுவதுமாய் இருந்தார்கள். தாமோதரன் மற்றும் மூன் வாக்கர் என்று ஒரு நன்கு பிரேக் டான்ஸ் ஆடும் சீனியர் ப்ரோக்ராம்கள் மட்டும் எந்தவித தங்கு தடையில்லாமல் நடந்தது. நேரமாகி கொண்டிருந்ததால் பாதியிலேயே பஸ்ஸை பிடிக்க ஓடி வந்து விட்டோம். அருமையான ஆடிடோரியம் அது.

ஒரு நாள் சீனியர் மாணவர்கள் தட்டில் ரோஜாப்பூக்களையும், சந்தனம், பன்னீர், கல்கண்டு என்று ஆரவாரத்துடன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே ஆசிரியர்களின் அனுமதியுடன் அவர்கள் போகவிருக்கும் டூருக்கு வந்து வழியனுப்புமாறு அழைத்து விட்டு போனார்கள். வேடிக்கையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

முதல் வருடத்தில் ஒரு வழியாக 3 இன்டெர்னல் டெஸ்டுகளையும் முடித்து விட்டோம். மூன்றாவது டெஸ்டின் போது என் அக்காவிற்கு உடல்நலம் சரியில்லாததால் அவளால் எழுத முடியாமால் போய் விட்டது. முழுஆண்டு தேர்வுகளுக்காக ஒரு மாதம் விடுமுறை. படித்ததெல்லாம் மறந்து போனது போலவே இருக்கும். ஒரே பயத்துடன் சரியான தூக்கமும் இல்லாமல் அடுத்தடுத்து தேர்வுகள், லேப்ஸ் என்று முதல் வருடம் பயமும், ஆர்வமுமாக முடிந்து விட்டது. முதல் வருட இறுதியில் யார் யார் கூட படிக்கிறார்கள், எந்த எந்த வகுப்புகள், யார் சீனியர் மாணவர்கள் என்று தெரிந்து விட்டது. அடுத்து எந்த துறை கிடைக்குமோ என்ற கவலையும் வந்து விட்டது :(


நினைவலைகள் தொடரும்...




8 comments:

  1. இப்படி ஒரு சுவாரசியமான தலைப்பை இத்தனை நாளும் எப்படி மிஸ் செய்தேனென தோணுகிறது.உங்க அனுமதியோட என் பங்குக்கு நானும் இங்கே கொஞ்சம் மொய் எழுதிக்கறேனே... :)

    அந்த வேதியியல் பேராசிரியரின் பெயர் சுப்பையா. அவர் நடத்தியதில் இன்றளவும் என் நினைவில் நிற்பவை இரண்டே வார்த்தைகள்தான். "As for as the last class is concerned", "Then what" ....அதைத் தாண்டி வேறெதும் நினைவிலில்லை.

    இயற்பியல் வகுப்புகளை விடவும் லேப் சுவாரசியமாய் இருந்தது. அங்கே நாங்கள்தான் முதல் பேட்ச். (5802 - ராஜம் பாலகிருஷ்ணன், 5803 பாலாஜி, 5804 -ஶ்ரீநிவாசன், 5805 - ராஜசேகரன், 5806 -சரவணக்குமார்). ராஜமும், சீனியும் மாங்கு மாங்கென ரீடிங் எடுத்து கால்க்குலேஷன் எல்லாம் போட, நாங்க மூவரும் சமர்த்தா அவர்களின் நோட்டை காப்பியடித்து விடுவோம்.

    Engg Drawing எடுத்தவர் பேராசிரியர் பழனி. உனக்கெல்லாம் ட்ராயிங்கே வராது என என்னையொத்த சிலருக்கு அருள்வாக்கு சொன்னவர், யாரோ சொன்னதின் பேரில் எஸ்.ஆர்.பி சாரிடம் போய் ட்யூஷனுக்கு கேட்டோம். முதலில் முடியாதென கண்டிப்பாய் சொன்னவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை,எங்களை சேர்த்துக் கொண்டார். அவரைப் பற்றி நிறைய சொலலாம். எஸ்.ஆர்.பி சார் மகத்தான மனிதர்.

    Elec Engg எடுத்தவர் பெயர் பேராசிரியர் ராஜாராம். மேலமாசி வீதியில் டி.எம் கோர்ட் அருகே இவரது வீடு இருந்தது.இவரை நினைத்தாலே B.L.Theraja வும் நினைவுக்கு வந்துவிடுவார்.

    வகுப்புகளுக்கு கட் அடிக்கவும், அந்த நேரத்தில் ஹாஸ்டலில் கிரிக்கெட் பார்க்கவும், சினிமாவுக்கு போகவும் என்னைத் தூண்டிய பெருமையை ஆங்கில பேராசிரியருக்கும், கணக்கு பேராசிரியருக்கும் தருவேன். :)

    முதலாம் ஆண்டு வகுப்புத் தோழர்களில் இராஜனுடன் மட்டுமே இன்றுவரை பேசிக் கொண்டிருக்கிறேன்.மற்றவர்கள் தொடர்பிலில்லை. பெண்களில் நாலைந்து பேரைத் தவிர மற்றவர்கள் பெயரும், முகமும் மறந்தே போய்விட்டது.

    பார்த்தசாரதியும், இராஜசேகரனும் இன்று உயிரோடில்லை. :(

    ReplyDelete
    Replies
    1. பெயர்களை ஞாபகப் படுத்தியதற்கு மிகவும் நன்றி, சரவணன். "As for as the last class is concerned", எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. முதல் வருடம் தான் எனக்குப் பிடித்த வருடம். மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்து மகிழவும் என் மகளிடம் பேசவும் பிடித்த அந்த வாழ்க்கை....ம்ம்ம்.

      Delete
  2. Elec Engg,முதல் வருடம் ராஜாராம் சார் எடுத்தாக ஞாபகம் இல்லை. வகுப்பு எடுத்தவர் திருநகர் பக்கம் இருந்து வந்தவர். பெயர் தான் நினைவில் வர மறுக்கிறது.

    ReplyDelete
  3. முதல் வருஷத்தில இவர்கிட்டதான் எலெக்ட்ரிக்கல் படிச்சதா நியாபகம். ஒரு வேளை என் கணிப்பு தப்பாயிருந்தா, எனக்கு லாங்டேர்ம் மெமரி லாஸ் வர ஆரம்பிச்சிருச்சின்னு வச்சிக்கலாம்....:))

    http://www.tce.edu/MandatoryDisclosure/newman/IT.pdf iva

    ReplyDelete
  4. Is our Alumini active? I remember Rajan tried to organize sometime back. Now, I see Aravind is doing.

    ReplyDelete
  5. கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள்,இசை,இயக்கம் இராஜன். அந்த படத்தை இங்கே வெளியிடுபவர் அரவிந்தன். :)

    ReplyDelete
  6. ஒ! கதை அப்படி போகுதா?

    ReplyDelete

அங்கிள் சாமின் உண்மையான முகம்

சில வாரங்களுக்கு முன் அமேசான் பிரைமில் படங்களைப் பார்க்கத் தேடிக்கொண்டிருந்த பொழுது அகப்பட்டது தான் 'Rainmaker'. கதாநாயகன் யார் என்...