Sunday, December 23, 2012

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

என் பள்ளிபடிப்பு முழுவதும் கிறிஸ்துவ பள்ளிகளில் படித்ததால், கிறிஸ்துமஸ் பற்றிய ஞானம் கொஞ்சம் உண்டு. அப்போது கிறிஸ்துவ பள்ளிகளில் நுழைவாயிலின் மேல் ஒரு கொட்டகை போல் செய்து, வால் நட்சத்திரம் மாட்டி, கொட்டகையின் உள்ளே குழந்தை இயேசு புல்கட்டில் படுத்தபடியே இருக்க சுற்றிலும் மேரி, ஜோசப், வானதூதர், மூன்று அரசர்கள் பரிசுகளுடன் இருப்பது போன்ற பொம்மைகள் இருக்கும். மாலையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த கொட்டகை சாலையில் போகும் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

அரையாண்டு தேர்வுகள் முடிந்து வரும் லீவு நாளில் இந்த கொண்டாட்டம் வரும். வீட்டிற்கு அருகிலேயே St.Joesphs , St.Marys பள்ளிகளும், தேவாலயமும் இருந்ததால் இந்த கொண்டாட்டங்களை பார்க்க தவறியதில்லை. அங்கிருந்த கிறிஸ்துவ வீடுகளிலும் நட்சத்திரம் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். கிறிஸ்துவ தினத்தன்று இரவிலேயே, அதாவது அதிகாலை பூசைக்கே கூட்டம் கூட்டமாக புதுத்துணி உடுத்திக் கொண்டு, பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு எங்கிருந்தோவெல்லாம் சர்ச்சுக்கு வருவார்கள். பல பூசைகள் அன்று நடக்கும். மதுரை முழுவதும் gingerbread house என்று ரொட்டி, சக்கரையில் பண்ணிய வீடும், அழகான கேக்குகளுடன் கேக் கடைகள் சீரியல் லைட் மாட்டிக் கொண்டு பிஸியாக வியாபாரம் செய்வதும் நடக்கும். மிஷன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப் அருகில் இருந்த பெங்களூர் ஐயங்கார்ஸ் பேக்கரியில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். சிறு வயதில் கேசவன் பிரியாணி கடை அருகில் இருந்த அருணா பேக்கரியில் ஒரு சிறிய gingerbread house ஒன்றை வாங்கி சுவைத்த அனுபவமும் இருக்கிறது.

நாங்கள் இருந்த தெருவில் ஒரு கிறிஸ்தவ  குடும்பம் இருந்தது. அவருடைய மகள்கள் என் வயதிலும், என் தங்கை வயதிலும் இருந்ததால் எங்கள் குடும்பங்களுக்குள் நல்ல பழக்கம் இருந்தது. அவர்கள் வீட்டிலிருந்து சுவையான தின்பண்டங்களும் சாப்பாடும் எங்களுக்கு வரும். பசுமலை பக்கம் குடியிருந்த பொழுது அங்கிருந்த ஒரு கிறிஸ்துவ குடும்பத்துடன் ஆடு, கோழி, மீன் என்று ஒரு வெட்டு வெட்டியதும் நல்ல ஞாபகத்தில் இருக்கிறது. அந்த ஆன்ட்டி அருமையாக சமைப்பார். வீடும் அவ்வளவு சுத்தமாக இருக்கும்.

இப்படி எல்லாம் நான் பார்த்த கிறிஸ்துமஸ், அமெரிக்காவில் ஏமாற்றத்தையே தருகிறது. முதலில், அன்று சர்ச்சுக்கு போகிற வெள்ளைக்காரர்கள் மிகவும் குறைவு. அமெரிக்க கறுப்பின மக்கள் நம்மூர் மாதிரியே சர்ச்சுக்குப் போய் பிரார்த்தனை செய்கிறார்கள். எங்கள் வீட்டுக்கு பின்னும் ஒரு சர்ச் இருக்கிறது. வயதானவர்கள் மட்டும் அதிகம் வருவார்கள் அன்று. மற்றைய ஞாயிற்றுக்கிழமைகளில் பெயருக்கு சிலர் வருகிறார்கள். இங்கும், இந்தியாவில் இருந்து வந்த கிறிஸ்தவர்கள் மட்டும் நம்மூர் மாதிரியே சர்ச்சுக்கு ரெகுலராக போகிறார்கள்.

முதல் வருடம் கிறிஸ்துமஸ் அன்று Michigan-ல், என் கணவரின் அக்கா வீட்டில் இருந்தோம். அவர் எங்களை ஒரு பெரிய மாலுக்கு அழைத்துக் கொண்டு போய் கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்ஸ் காண்பித்தார். மால் முழுவதும் பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. நடுநடுவே பிளாஸ்டிக் மலர்களும், இலைகளும் பூந்தொட்டிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தது. கிறிஸ்துமஸ் சமயம் மட்டும் விற்கும் செடிகளும், மலர்களும் என்று அந்த இடமே சொர்க்கபுரியாக இருந்தது. மக்களும் 'சர்சர்'ரென்று கிரெடிட் கார்ட் தேய்த்து மகிழ்ச்சியுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்கள். அந்த கூட்டத்தையும், சிரித்த முகங்களையும் பார்க்கவே நன்றாக இருந்தது. மாலின் நடுவே ஓரிடத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா(Santa ) வேடமணிந்து ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள நீண்ட வரிசையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பெற்றோர்கள். ஏதோ நிஜ Santaவை பார்ப்பது போல் குழந்தைகளும், பெரியவர்களும் குதூகலமாய், பார்ப்பதற்கே வியப்பாக இருந்தது! சில குழந்தைகள் Santaவை பார்த்தவுடன் பயந்து அழுதன. சில குழந்தைகள் சமர்த்தாக அவர் மடியில் உட்கார்ந்து கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுப்பதும், தன்க்கு இன்ன இன்ன பரிசுகள் வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்டை சொல்ல, அவரும் ஒரு candy ஒன்று கொடுத்து விட்டு அவர்கள் சொன்ன லிஸ்டை அவர்களுடைய பெற்றோர்களிடம் சொல்ல, அவர்களும் அதை வாங்கி அவர்கள் வீட்டில் வைத்திருக்கும் கிறிஸ்துமஸ் மரத்தின் கீழே வைத்து விடுவார்களாம். அதனால், குழந்தைகளும் Santa தான் வாங்கி கொடுத்தார் என்று நம்பி விடுவார்களாம்! நாங்களும் மகளை வைத்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம். இப்படியாகத்தான் எங்கள் கிறிஸ்துமஸ் பயணம் ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் ஏதோ ஒன்றிரண்டு பொம்மைகளை வாங்கி கொடுத்தோம். என் மகளும் திருப்தியாக இருந்தாள், பள்ளி செல்லும் வரை. அதற்குப் பிறகு தான் எங்களுக்கு பிரச்னை ஆரம்பித்தது. அவளுடன் படித்தவர்கள் எனக்கு இது கிடைத்தது, அது கிடைத்தது உனக்கு என்ன கிடைத்தது என்று கேட்க போக, தனக்குத் தான் எதுவுமே கிடைக்க வில்லை போலிருக்கிறது என்று வீட்டில் வந்து அழ ஆரம்பிக்க, இந்த peer pressure காரணமாக நாங்களும் இந்த மாயைக்குள் வந்து விழுந்து விட்டோம். இந்த கிறிஸ்துமஸ் ஷாப்பிங் பீவர் நவம்பர் மாதம் முதலே ஆரம்பித்து விடும். குழந்தைகளும் ஒரு பெரிய லிஸ்டை போட்டு விடுவார்கள். பெற்றோர்களும் தகுதிக்கு மீறி செலவு செய்து வாங்கி கொடுக்கிறார்கள். வேலை செய்யும் இடங்களில், கோவில்களில், சர்ச்சுகளில், வசதி இல்லாத குழந்தைகளுக்கு என்று மற்றவர்களிடம் புது பொம்மைகளை வாங்கி தருமாறு கேட்டு கொடுக்கிறார்கள்.

நவம்பரில் வரும் Thanksgiving Day முதலே வீடுகளில் வண்ண விளக்குகளை போட்டு, வீட்டினுள் fireplace அருகே கிறிஸ்துமஸ் மரம் ஒரிஜினலோ, பிளாஸ்டிக்கோ வைத்து அதையும் அலங்கரித்து வைத்து விடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் இருப்பது போல் எங்கும் வீட்டு வாசலில் வால்நட்சத்திரம் மாட்டி பார்க்கவில்லை. சம்பிரதாயப்படி, fireplace வழியாக Santa வந்து பரிசுப் பொருட்களை மரத்தின் கீழ் வைத்து விட்டு செல்வார் என்று குழந்தைகள் நம்புகிறார்கள். நாங்கள் அபார்ட்மெண்டில் குடியிருந்த போது, என் மகளும் கடமையாக ஒரு தட்டில் cookies, டம்ளரில் பால் வைத்து விட்டு தூங்கி விடுவாள். ஜன்னல் திரைகளை மூடாமல் Santa எப்போது வருவார் என்று வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டே தூங்கி இருப்பாள். நானும் அதிகாலையில் எழுந்து அவளுக்காக ஏற்கெனவே வாங்கி அழகிய பேப்பரை கொண்டு wrap செய்த பொருட்களை முன்னறையில் வைத்து விட்டு மறக்காமல் பாலையும் குடித்து பாதி cookieயும் சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவேன்! காலையில் அவளுடைய 'ஆஆஆஆஆஆஆஆஆஆ' அம்பாஆஆஆஆஆஆஆ என்ற ஆனந்த அதிர்ச்சி குரலில் எழுந்திருக்கும் பொழுது, கை நிறைய பரிசுப் பொருட்களுடன் அவள் கண்கள் மின்ன நிற்கும் கோலம்- priceless :) அவள் பல வருடங்கள் Santa நிஜம் என்றே நம்பினாள். நாங்களும் ஒன்றும் சொல்லவில்லை.

வீட்டிற்கு வந்த பிறகு, பல வருடங்கள் தொடர்ந்து அனர்த்திய பிறகு போன வருடம் தான் செயற்கை கிறிஸ்துமஸ் மரம் ஒன்று வாங்கினோம். என் மகனும் பல வருடங்கள் இந்த கிறிஸ்துமஸ் கதைகளை நம்பிக் கொண்டிருந்தான். இவ்வளவு சின்ன fireplace வழியாக எப்படி பெரிய சாண்டா வரமுடியும்? நான் fireplace ஆன் செய்து விட்டால் எப்படி இறங்க முடியும் என்று குறுக்குமறுக்காக கேள்விகள் கேட்பான்:( போன வருடத்திலிருந்து அவனுக்கு இதெல்லாம் கட்டுக்கதை என்று தெரிந்து என்னிடமே, கிறிஸ்துமஸ் பட்ஜெட் எவ்வளவு என்று கேட்கிற வரை முன்னேறி விட்டான்:( அவனுடைய நண்பர்கள் வீட்டில் ஒவ்வொருத்தனுக்கும் $500 பட்ஜெட் என்று சொன்ன போது மிகவும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது!

இந்த மாதத்தில் குளிர், பனி, செலவுகள் காரணமாக பலரும் மனஅழுத்தத்தில் பாதிக்கபடுவார்கள் என்றும் சொல்கிறார்கள். மொத்தத்தில் வியாபார நோக்கில் நடைபெறும் இந்த விழா பல குடும்பங்களில் குழந்தைகளை அலைக்கழிக்க வைக்கிறது. ஒரு நல்ல இனிய நாளை பரிசுகள் கொடுக்கும் நாளாக மாற்றிய பெருமையும், மக்களுக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக இல்லாத இந்த நாட்டில் இதைப் போன்ற வியாபாரங்கள் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தினமாகவே மாறி விட்ட பெருமையும் இந்த கார்ப்பரேட் கம்பனிகளை சாரும். Merry Christmas என்று சொன்னால் பிற மதத்தினரை புண்படுத்துவதால்(??) Happy Holidays என்று சொல்கிறார்கள்! டீவியிலும் Santa இப்பொழுது இந்த ஊரில் இருக்கிறார் இன்னும் சிறிது நேரத்தில் இங்கிருப்பார் என்று குழந்தைகளை கவரும் விதத்தில் படம் போட்டு சொல்கிறார்கள். குழந்தைகள் Santaவிற்கு தபால் அனுப்பினால் கடமையாக பதிலும் கிடைக்கிறது! எப்படியோ பல குழந்தைகள் உலகம் இனிமையாக இருக்கிறது :)


உங்கள் அனைவருக்கும் Happy Holidays மற்றும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம்.

7 comments:

  1. :).....'Globalization' is all about marketing strategy, building peer pressure, changing mind set of people and finally even making them to spend the future money (Loans / Credit card... etc). Even in conservative society like India these are happening in the last few years...

    ReplyDelete
    Replies
    1. That's true, Guha Rajan. For majority of people, X-mas is just exchanging gifts and having a good time with family.

      Delete
  2. பணத்தை மட்டுமே முன் வைத்து செயற்கையாய் உருவாக்கப் படும் போலிக் கொண்டாட்டங்களை விட, நமக்கே நமக்காய் உருவாக்கிக் கொள்ளும் இயல்பான கொண்டாட்டங்களே நமது வாழ்வை மேலும் சுவாரசியமாக்குகின்றன. அத்தகைய கொண்டாட்டங்களை தயக்கமில்லாது கொண்டாடித் தீர்க்கலாம். :)

    ReplyDelete
  3. நான் பார்த்த வரையில் பணத்தை செலவழித்து பரிசுப் பொருட்கள் வாங்கினாலும், இதை ஒரு குடும்ப நாளாக சேர்ந்து உட்கார்ந்து பொழுதை போக்குவதால் இந்நாளும் நன்னாளே

    ReplyDelete

அங்கிள் சாமின் உண்மையான முகம்

சில வாரங்களுக்கு முன் அமேசான் பிரைமில் படங்களைப் பார்க்கத் தேடிக்கொண்டிருந்த பொழுது அகப்பட்டது தான் 'Rainmaker'. கதாநாயகன் யார் என்...