Thursday, December 20, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 5

நான்காம் வருடம் ப்ராஜெக்ட், vice-versa , unix லேப், C-language, கணினியல் துறை யின் சார்பாக நடத்தப்பட்ட விழாக்கள், ஆட்டோகிராப் நேரங்கள்  என்று ஓடியே போய் விட்டது. என் தம்பியும் முதல் வருடம் கல்லூரியில் வந்து சேர்ந்தான்.

எங்களுடைய சூப்பர் சீனியர்கள் இரண்டு பேர்-புது பெண் விரிவுரையாளர்கள், வகுப்புகள் எடுத்தார்கள்.(ஷ்யாமளா & உமா) என்று நினைக்கிறேன். Dr.நித்யானந்தம், Maths HOD, Dr.ராஜதுரை(?) என்று பல பெரிய ஆசிரியர்கள் வகுப்புகளை எடுத்தார்கள். ஏஞ்ஜலோவின்  voice recognition ப்ராஜெக்ட் மிகவும் சுவாரசியமாக இருந்தது. நானும் அருணாகுமாரியும் சேர்ந்து இறுதி வருட ப்ராஜெக்ட் செய்தோம்:) அது ஒரு தனிக்கதை. கடைசியில் MCA பிரபாகர் உதவியுடன் செய்து முடித்தோம்!

ஐந்தாவது செமஸ்டரின் போது கணித வகுப்பில் ஸ்ரீநிவாசன் சாக்பீஸ் எரிய அது என் தலையில் விழ என்று என்னை எரிச்சலடைய செய்ததும், மாணவர்கள் சிலர்(?) மாணவிகளின் லஞ்ச் பாக்ஸை காலி செய்து விட்டு காண்டீனில் கிடைக்கும் கேக் வைத்து விட்டு போவது என்று நடந்ததும், கடைசி வருடம் நெருங்க,நெருங்க பல மாணவ மாணவிகள் GRE , TOEFL தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருந்ததும், கல்லூரியில் நடைபெற்ற வேலைக்கான நேர்முகத்தேர்விலும் பலர் பங்கெடுத்துக் கொண்டதும்,.'பலவிதமான மன நிலையில்' மாணவ, மாணவியர்கள் உலா வந்ததும் அந்த காலத்தில் தான்.  நான்காம் வருட மாணவ, மாணவியர்கள்  எல்லாம் All India டூர் போனார்கள். சில பிரச்னைகளின் காரணமாக என்னால் போக முடியவில்லை:( போய் விட்டு வந்து பல கதைகள்! மேகலா எனக்கு ஒரு அழகிய கைப்பை ஒன்றை வாங்கி வந்து பரிசாக கொடுத்தாள் :)  என் வகுப்பு மாணவிகள் எல்லாம் ஒரே மாதிரியாக சேலை வாங்கினோம். அனைவரும் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். செந்தில் அனைவருக்கும் நியூஆர்யபவனில் வைத்து ட்ரீட் கொடுத்தான். அருமையாக இருந்தது. ஒருநாள், வகுப்பு முழுவதும் சேர்ந்து கேண்டீனில் உட்கார்ந்து கொண்டு சில மணிநேரங்களை  பொழுது போக்கினோம். துர்காராணி- பொங்கலு பொங்கலு வைக்க, மஞ்சளை மஞ்சளை எடு தங்கச்சி தங்கச்சி என்ற அப்போதைய பிரபலமான பாடலை பாடினாள். ஸ்ரீநிவாசன், முரளிதரன்  & கோ  சேர்ந்து மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் என்ற பக்தி பாடலை மண்ணானாலும் மலர்விழி வீட்டில் மண்ணாவேன், ஒரு மரமென்றாலும்... என்று மாணவிகளின் பெயரை போட்டு பாடினார்கள். நன்றாகத் தான் இருந்தது. ஒருநாள் எல்லோரும் சேர்ந்து அழகர் கோவிலுக்கு பிக்னிக் சென்றோம்.


ஜெயபாரதி அவள் ஊருக்கு எங்களை அழைத்து சென்று அங்கு பனை வெல்லம் பண்ணுவதையும், அவர்களுடைய தென்னந்தோப்பில் இளநீர் குடித்ததையும்,  கிணற்று மேட்டில் உட்கார்ந்து அரட்டை அடித்ததையும்,அவர்கள் ஊரே எங்களை பார்க்க ஊர்வலம் வந்து அவர்கள் வீட்டில் வாழை இலையில் 'சுடச்சுட' சுவையான கிராமத்து உணவு உண்டு மகிழ்ந்ததையும் என்று அன்றைய விருந்தோம்பலிலல்.. நினைத்தாலே சுகம் தானடி ....

நாங்கள் கல்லூரி முடிக்கும் பொழுது மூன்று முதல்வர்களை பார்த்து விட்டோம் --Dr.மரியலூயிஸ்,  Dr.மெய்யப்பன் & Dr.நித்யானந்தம் என்று நினைத்திருந்தேன். சரவணன் நான் மறந்து போன முதல்வர் Dr.வள்ளியப்பனை நினைவுறுத்தி நான்கு முதல்வர்களை பார்த்த பெருமை கொண்ட குரூப் என்று நினைவு கூர்ந்ததற்கு நன்றி.  இரண்டு பெரிய ஸ்ட்ரைக்குகளால் கால வரையின்றி கல்லூரி மூடப்பட்டு நேராக தேர்வெழுத வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்  உதயம் பட ஸ்டைலில் சைக்கிள் செயின், கட்டை என்று படிக்கிற வேஷத்தில் திரியும் ரௌடிகளை பார்க்க நேரிட்டதுகொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பசங்க ஹாஸ்டலில் வார்டனை மாணவர்கள் மொத்தியது கேட்டு அதிர்ச்சியாக இருந்தது...நிஜமாகவே நடந்ததா தெரியவில்லை!ஸ்ட்ரைக் என்று சொன்னவுடன் என்ன காரணம் என்று கூட தெரிந்து கொள்ளாமல் எப்படி பஸ்ஸைப் பிடிப்பது என்ற நினைப்புடன் சில சமயங்களில் திருப்பரங்குன்றம் வரை நடந்து போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும்...ஹ்ம்ம்.

இந்த காலங்களில் வந்த புன்னகை மன்னன் கமல் ஸ்டைலில் நீண்ட  முடி, தாடியுடனும், சத்யா கமல் ஸ்டைலில் பலரும் தாடியும், அரை குறை மொட்டையுடனும், நாயகன் ஸ்டைலில் மீசையை மழித்துக் கொண்டும், கல்லூரி இறுதி நாட்களில் மாணவர்கள் பலரும் வேட்டி, சட்டை என்று  வலம் வந்து கொண்டிருந்ததும்... கணினியல் துறைக்கு ஆரோலேக் நிறுவனத்தின் சார்பில் வரும் உயரமான, பிரெஞ்ச் பியர்ட், நுனி நாக்கு ஆங்கிலம், நேர்த்தியான உடை, டை என்று டிப்டாப்பாக வந்தவர்களைப் பார்த்து அசந்ததும்... என்று பல வேடிக்கையான தருணங்கள்!

எனக்கு கல்லூரியில் பிடிக்காத இரண்டு இடங்கள் என்றால் லேடீஸ் ரூமும், கல்லூரி வங்கியும் தான். இவ்வளவு பெண்கள் படித்த கல்லூரியில் கழிவறைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சுத்தமோ கிலோ என்ன விலை என்ற நிலை தான். மொத்தமே நான்கு கழிவறைகள்.அதில் ஒன்று எப்போதும் பயன்படுத்த முடியாத நிலையில்! எப்பொழுதும் நீண்ட வரிசை. அங்கிருக்கும் கைகழுவும் இடமும் தண்ணீர் கீழே கொட்டி சொதசொத வென்று.. நம் கல்வி நிறுவனங்கள் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆனால் கண்டு கொள்ளாத விஷயமும் கூட கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட் கட்டிடத்திற்கு போன பிறகு தான் இந்த தொல்லைகள் எல்லாம் குறைந்தது.

அதே போல் தான், ஒரு சின்னஞ்சிறிய வங்கியும். இரண்டு பேர் மட்டுமே இருப்பார்கள். பீஸ் கட்டவேண்டிய நேரம் வந்து விட்டால் அங்கே ஈ போல் மாணவ,மாணவிகள் கூட்டம். ஒழுங்காக வரிசையில் நின்று அமைதியாக நடக்க வேண்டிய வேலை ஒரு சில கீழ்த்தரமான மாணவர்களால் வரிசையில் நிற்பவர்கள் மேல் விழுவது, கத்துவது போன்ற வேதனை தரும் விஷயங்களும் நடந்தது. அந்த சின்ன கூண்டில் ஒரே நேரத்தில் 10 சலான் பார்த்தால் எந்த வங்கி கணக்கரும் என்ன பண்ணுவார்? நம் கல்வி நமக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கவில்லை என்று வருந்த வைத்த தருணங்கள்

முதல் வருடம் முதலே என்னை பிரமிக்க வைத்த வீணா சுந்தரம்! மெக்கானிக்கல் லேபில் அவளுடைய வேலைகளை யாருடைய உதவியுமின்றி தனக்கு இருக்கும் குறையை கண்டு கொள்ளாமல்
ஒரு செயற்கை கையுடன் முடித்த பாங்கு என்னை வெட்கமடைய செய்தது. நன்றாக பல மொழிகளில் பாடும் திறமை, படிப்பதில் இருந்த ஆர்வம், யார் பேசுவதையும் பொறுமையாக கேட்கும் குணம், அதிர்ந்து பேசாத குணம், ரயில்வே காலனி யிலிருந்து S.S. காலனிக்கு சைக்கிளில் வந்து குடும்பத்தையே அசர வைத்ததும்.. நான் வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது என்று என்னை உணர்த்திய தருணங்கள்.

எனக்கு பிடித்தவைகள்- கவலையின்றி திரிந்த முதல் மூன்று வருடங்கள், விசாலமான, வெளிச்சமான முதலாண்டு கல்லூரி வகுப்புகள்,  லேப்கள், நீண்ட கல்லூரி சாலை, பல தலைமுறைகளை கண்ட ஆலமரங்கள், கான்டீன் சூடான வடை, பிடித்த வகுப்புகள், நண்பர்களுடன் அரட்டை, கம்ப்யூட்டர் லேப், பெண்கள் ஹாஸ்டலில் இருந்து வரும் கலவைச் சாப்பாடு- அதை தோழிகளுடன் உண்டது என்று காலம் ஓடியேயேயேயேப் போச்சு! பெண்கள் ஹாஸ்டலில் நடந்த ஹாஸ்டல் டே இரவன்று ஜூனியர்களுடன் விடிய விடிய அடித்த கூத்து மறக்க முடியாத ஒன்றாகியது. அதற்குப் பிறகு, எப்படா கல்லூரி முடியும், அடுத்த நாள் எப்படி விடியும் என்று எதிர்காலம் பற்றிய மிகப் பெரிய கேள்விகளுடன், சொந்தப் பிரச்சினையின் காரணமாக வருத்தத்துடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது. ஹ்ம்ம். வாழ்க்கையின் கொடுமையை உணர்ந்த காலங்கள். அதிலிருந்து கற்ற பாடங்கள் பல.கடவுளின் ஆசியாலும், பெரியவர்கள் செய்த புண்ணியத்தாலும், நல்லவர்களின் அன்பாலும், வழிநடத்தலாலும், நல்ல நண்பர்களின் துணையாலும் படிப்பை முடித்து, பட்டம் பெற்று இன்று இந்த நிலைமைக்கு வர முடிந்தது.

Hostel Day
இன்று நினைத்துப் பார்க்கையில் ஒரே வகுப்பில் மூன்று வருடங்கள் படித்திருந்தாலும் எல்லோருடனும் அவ்வளவாக பேசி பழகவில்லை. தனிக் குழுக்களாகவே இருந்து விட்டோம். ஒரு நல்ல புரிதலுடன் பழகியிருந்தால் பல நல்ல நண்பர்கள் அன்றே கிடைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு பெண் ஆணுடன் பேசினாலே அதற்கு ஏதாவது அர்த்தத்தை பார்க்கின்ற மனப்பான்மை இருந்ததாலே எதற்கு வம்பு என்று ஒதுங்கியே இருக்க வேண்டியதாயிற்று.

படித்து முடித்து இவ்வளவு வருடங்கள் ஆனாலும் கல்லூரி வாழ்க்கையை நினைத்தாலே இன்றும் இனிமையாக, இளமையாக, பசுமையாக  இருக்கிறது! கல்லூரி வாழ்க்கை, ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு மறக்க முடியாத காலம்.

ம்ம்ம்ம். அது ஒரு கனாக்காலம்!

6 comments:

  1. இடையில் கொஞ்ச காலம் Dr.வள்ளியப்பன் கல்லூரியின் முதல்வராக இருந்தார்.ஆக, நாலு வருடத்தில் நான்கு முதல்வர்களை கண்ட பேட்ச் என பெருமை பட்டுக்கலாம்.

    ReplyDelete
  2. அப்படியா? அப்படி ஒருவர் முதல்வராக இருந்த மாதிரி ஞாபகம் இல்லை எனக்கு.இதையும் சேர்த்து விடுகிறேன். நன்றி.

    ReplyDelete
  3. மேத்ஸ் ப்ரொபசர் பேர் ஆராவமுதன்.

    ஒரே தடவையில் இந்த blog படிச்சு முடித்து விட்டேன். ரொம்ப நன்றாக இருந்தது. இவ்வளவு விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

    நண்பர்களைப் பற்றி நீ எழுதியது சிந்திக்க வேண்டிய விஷயம். ஏராளமான நண்பர்கள் தற்போது இருந்தாலும் பலன் கருதாமல் இருந்திருக்ககூடிய பல நண்பர்களுடன் பழக விட்டுப்போனது ஒரு குறையாக மனதில் இன்னும் இருக்கிறது.

    வாழ்க்கையில் வேகமாக முன்னோக்கி நேரத்துடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் போது, உன்னுடைய blog சற்றே பின்னோக்கி 'against gravity' பறந்தது போல ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தியது.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இத்தனை நீளமான தொடரை படித்ததற்கு நன்றி, ஸ்ரீநிவாசன்.

      Delete
  4. Latha, After a long time, I have come across these five blogs, and read them one more time. Feeling nostalgic and awesome. You are remembering so many things from our school days. Amazing.. As you have mentioned, I guess, we could have made some more friends.. somehow, missed the chance :( -- Regards, Radhakrishnan (CSE classmate)

    ReplyDelete
  5. Thank you, Radha. I have enjoyed every bit of my school and college life in my own way. I am sure most of us did too! Glad you re-read and enjoyed it 😊

    ReplyDelete

அங்கிள் சாமின் உண்மையான முகம்

சில வாரங்களுக்கு முன் அமேசான் பிரைமில் படங்களைப் பார்க்கத் தேடிக்கொண்டிருந்த பொழுது அகப்பட்டது தான் 'Rainmaker'. கதாநாயகன் யார் என்...