Sunday, December 29, 2013

சென்னையில் ஒரு மழைக்காலம்

போன வருடம் இதே நாளில் ஊருக்குச் சென்று வந்த படங்களைப் பார்த்து விட்டு அதே நினைவுடன் தூங்கியதாலோ என்னவோ காலையில் எழும் பொழுது எங்கிருக்கிறோம் என்று ஓர் சிறு குழப்பம். இந்த மாதிரிச் சமயங்களில் எப்பொழுதும் ஊரில் இருப்பது போலவே இருக்கும். சிறு புன்முறுவலுடன் மனம் அசை போட,

போன வருட டிசம்பரில் புயல் காரணமாக மழை கொட்டிக் கொண்டிருக்க சென்னையில் விமானம் இறங்குவதில் தாமதம். தரையிறங்கியவுடன் பெட்டிகள் மழையில் நனைந்து எந்த கோலத்தில் வரப் போகின்றனவோ என்ற கவலை. அதிகாலை 1.30 மணி.

தம்பி வந்து நீண்ட நேரம் காத்திருப்பானே என்று யோசித்துக் கொண்டே  மக்கிப் போன வாசனை வரும் என்று எதிர்பார்க்க இப்பொழுது விமான நிலையத்தில் நடந்து கொண்டிருக்கும் புதுப்புது கட்டிட வேலைகளின் காரணமாக வளைந்து வளைந்து சிறு குப்பைகளை நடந்து பாஸ்போர்ட் , என்ன என்ன நாட்டுக்குள் எடுத்துக் கொண்டு வருகிறோம் என்ற அறிவிப்புப் பத்திரம் என கையில் வைத்துக் கொண்டு  நீண்ட வரிசையில் ஐக்கியமானோம் நானும் என் மகளும்.

பாதி தூக்கத்தில் எழுந்த மாதிரி அனைவரின் முகங்களும். குழந்தைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

வெளிநாட்டவர்களுக்கான வரிசை, இந்தியர்களுக்கான வரிசை என்று நான்கு வரிசைகள். கல்லூரி மாணவர்கள் போல் தெரிந்த அசட்டையாக ஏனோ தானோவென்று மேல் சட்டை மட்டும் போட்டுக் கொண்டு நின்ற வெளிநாட்டவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்க்கும் போது ம்ம்ம்...இந்த மாணவர்கள் நிறைய கற்றுக் கொண்டு ஊர் திரும்புவார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

எங்கள் முறை வந்த பொழுது ஒரு கடுவன் பூனை அதிகாரி அர்த்த சாமத்தில் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து உட்கார வைத்து வேலை வாங்குவது போல் முகத்தில் அப்படி ஒரு கோபம்.
போட்டோவையும், முகத்தையும் பார்க்கும் போது தெரிந்த ஒரு மத்திய அரசு அதிகாரித்தனம் ! ஸ்டாம்ப் பண்ணும் போது அவர் அடிக்கிறதைப் பார்த்தால் ஒரு அலட்சியம். ம்ம்ம்...அரசு அதிகாரிகள் என்றால் இப்படித் தான் என்ற தோரணையில். எப்படியோ இவர்களை எல்லாம் கடந்து பெட்டிகளை எடுக்க வந்த இடத்தில் மேடம் ஹெல்ப் வேண்டுமா என்று பவ்யமாக ஊழியர்கள். இல்ல, நானே எடுத்துக்கிறேன் என்றவுடன் ஒதுங்கிக் கொண்டார்கள்.

ஒரு வழியாக பெட்டிகளும் வந்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரையும் ஏதோ தங்கக்கட்டிகள், போதை மருந்து கடத்துபவர்களைப் போல் படப்படப்புடன் நோட்டமிட்டு கொண்டிருக்க, அவர்களையும் தாண்டி சிங்காரச் சென்னையின் 'குளுகுளு' மழைக்காற்றைச் சுவாசிக்க ம்ம்ம் அந்த சுகமே அலாதி தான்!
பழகிய மொழி பேசும் மனிதர்கள், கண்கலங்கி உறவினர்களை அனுப்ப வந்தவர்கள், ஆவலுடன் மகிழ்ச்சியாக வரவேற்க வந்த நண்பர்கள், குடும்பங்கள், பெயர் அட்டைகளைத் தூக்கி கொண்டு வரவேற்கும் வண்டி  ஓட்டுனர்கள், தரையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கூட்டம் என்று பலவிதப் பட்ட மனிதர்கள் பல வித உணர்ச்சிகள் பொங்க !!!

தம்பியும் எங்களைப் பார்த்தவுடன்  கையசைத்து விட்டுப் பெட்டிகளை  எண்ணி விட்டாயா, என் மகளைப் பார்த்து நல்லா வளர்ந்துட்டே, உங்கம்மா மாதிரியே இருக்கே  பேசிக் கொண்டே சாப்பிடலாமா என்று கேட்டு விமானநிலையத்தில் இருந்த உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வாடகைக்காருக்குத் தொலை பேசி அவனுடைய காரையும் எடுக்க மழைச் சாரலில் நடந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

விமானநிலையம் நிறைய மாறி விட்டது! எப்பொழுதும் கையேந்திபவன் ஸ்டைலில் ஒரு இட்லிக்கடை- இட்லி, சட்னி, சாம்பார் மிக நன்றாக இருக்கும் அது இப்பொழுது மிஸ்ஸிங் L அந்த நடு இரவிலும் கலகலவென்றிருந்தது அந்த இடம்!

பொதுவாக ஆகஸ்ட் மாதம் வரும் பொழுதெல்லாம் அதிகாலையில் வந்து இறங்குவோம். வெளியில் வந்தவுடன் விடிய ஆரம்பிக்கும் நிலையில் LR ஈஸ்வரியின் குரலில் ஏதாவதொரு மாரியாத்தா பாடல் ஒலிக்க சீரியல் விளக்குகளுடன் பெரிய பெரிய கருமாரியம்மன் அலங்காரங்களைக் கடந்து தெருவில் நடைபாதை ஓரமாக படுத்திருப்பவர்களையும், தள்ளுவண்டிகளையும், நாய்கள் கூட்டத்தையும் என்று பலரையும் கடந்து போயிருக்கிறோம்.

இப்பொழுது மழை வந்து தெருவோரக் காட்சிகள் எல்லாம் மிஸ்ஸிங். நேராக தி.நகரில் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த ஹோட்டலுக்கு வழிதேடிச் செல்ல, நடுவில் ரோந்து போகும் போலீஸ் காரும் எங்கே இந்தநேரத்தில் என்று டிரைவரைக் கேட்க, அதற்குள் தம்பியின் காரும் வர, ஹோட்டல் பெயரைச் சொன்னவுடன் அவர்களே வழியும் சொல்லி பத்திரமாக போங்க என்று சொல்லவும், பரவாயில்லையே ரோந்து எல்லாம் போறாங்களே என்று வியந்து கொண்டே வந்து சேர்ந்தோம். நாட்டு நடப்பைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார் டிரைவர். ஹ்ம்ம். பல விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்! கல்லூரிப் படிப்பு முடித்ததாக சொன்னார்!

ஹோட்டலில் ஒரு சிறு பையன் துறுதுறுவென பெட்டிகளை எடுத்துக் கொண்டு அறைக் கதவைத் திறந்து விட்டு என்ன வேண்டும் என்று கேட்டு விட்டு செட்டிலாகும் போதே மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. பாவம் தம்பிக்குத் தான் பெங்களூரிலிருந்து காரோட்டி வந்து எங்களுக்காக காத்திருந்ததில் பயங்கர அசதி. தம்பி சிறிது நேரத்தில் தூங்கி விட, நானும் மகளும் பேசிக் கொண்டே தூங்கி விட்டோம்.

'டான்' என்று காலை ஐந்து மணிக்கே தூக்கம் கலைந்து நாங்கள் இருவரும் எழுந்து விட்டோம். ஜன்னல் வழியே வெளியில் பார்த்தால் ஒரே அமைதி. கொஞ்ச நேரம் UNO கார்டு விளையாடி விட்டு குளித்து முடித்து ஆறு மணிக்கே ஊரைச் சுற்ற தயாராகி விட்டோம். புரண்டு படுத்த என் தம்பியும் என்ன இது இப்படி ரெடியாகி உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று சொல்ல, நீ தூங்கு என்று சொல்லி விட்டு, எப்போது காலை உணவு என்று வரவேற்பு அறைக்குப் போன் போட , அவரும் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் ரெடியாகி விடும் என்று சொல்ல, மகளும் வெளியில் போய் விட்டு வரலாமா என்று கேட்க , அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சரியான நேரத்திற்கு கீழிறங்கிச் சாப்பிடச் சென்றோம்.

அப்போது தான் சுடச்சுட வடை, இட்லி, பூரி, மசால் எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். ரொட்டி,வெண்ணெய் , கார்ன்ப்ளேக்ஸ் , பால் இருக்க, நல்ல சுவையான காலை உணவு. மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே இரு வெள்ளைக்காரர்களும் சாப்பிட வர சூடான காபியும் எடுத்துக் கொண்டு கிளம்ப, தம்பியும் வந்து சேர்ந்தான். அவனும் சாப்பிட்டு முடிக்க சிறிது நேரம் அறையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மழையில் எப்படி தி.நகர் போவது என்று யோசிக்க, தம்பியும் நான் உங்களை சென்னை சில்க்ஸ் அருகில் இறக்கி விட்டு விட்டு என் வேலைகளையும் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்லி அதிகாலையில் இறக்கி விடும் போது கடைகள் திறக்கக் கூட இல்லை. கூட்டமில்லாத தி.நகர் பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மப்பும் மந்தாரமுமாக எந்நேரத்திலும் மழை  வந்து கொட்டலாம் என்று ரமணன் சொன்ன வாக்கைக் காப்பாற்ற வானம் தயாராக!

கடை வாசலில் வேலை செய்யும் ஆட்களும் கடைத்திறப்பிற்காக காத்திருந்தார்கள். சிறிது நேரம் நடப்போமே என்று நடந்து விட்டு வரும் போது கடைகள் எல்லாம் திறந்து பொங்கலுக்குப் புதுத்துணி எடுக்க வாடிக்கையாளர்களும் இருந்தார்கள். கூட்டத்துடன் நாங்களும் ஐக்கியமானோம்.

வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும் போது வாங்க, இந்த பக்கம் போங்க அந்த பக்கம் போங்க என்று சொல்வதோடு சரி. புதிதாக தங்க, வைர ஷோரூம்கள் திறந்திருக்கோம். சும்மாவாச்சும் பாருங்க என்றவர்களிடம் எதுவும் வாங்கப் போவதில்லை என்றாலும் அனத்தியதால் நாங்களும் போய் ஒன்று விடாமல் போட்டுப் பார்த்து நிம்மதியாகி ரொம்ப நன்றி என்று சொல்லி விட்டு, துணிகளை எடுத்துக் கொண்டு போத்தீஸ், GRT முடித்து விட்டு வெளியில் வரும் போது தூறல் ஆரம்பித்து விட்டது. மதிய நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது!

மழைத் தூறலில் நடப்பது சுகமாக இருந்தாலும் உடம்புக்கு எதுவும் ஆகி விடக் கூடாதே என்ற பயத்தில் ஒதுங்கி ஒதுங்கிப் போக வேண்டியிருந்தது!

இந்தத் தெருவில் ஒரு கடையில் பெங்காலி இனிப்புகள், சமோசா சூப்பராக இருக்கும். கடை எந்தப் பக்கம் என்று தெரியாமல் சிறிது நேரம் அலைந்து விட்டு மழை அதிகமானவுடன் ஒரு காபிக் கடையில் ஒதுங்கினோம். ரத்னா கபே போக முடியவில்லையே என்ற நினைத்துக் கொண்டே பளிச்சென்று பூச்சூடி கடைகளுக்கு வந்தப் பெண்கள், குழந்தைகள், அவர்கள் துணைக்கு ஆண்கள், நடைபாதையோரக் கடைகளில் வெள்ளரி, மாங்காயைச் சீவி மிளகாய்ப் பொடியைத் தூவி விற்றுக் கொண்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தோம். வாங்கிச் சாப்பிடலாம் போல இருந்த ஆசையை அடக்கி விட்டு சிறிது தூரம் போனால் ஒரு பாலத்தின் கீழ் பலாப்பலச் சுளைகளை நேர்த்தியாக வெட்டி எடுப்பதையும், தேங்காயை அழகாக நறுக்குவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது தான் தெரிந்தது தூரத்தில் பெண் காவலர்கள் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று. நாங்க தான் ஒன்று விடாமல் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோமே!

காய்கறி, பழங்கள் விற்கும் கடைகளையும், திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி என்று அந்த தெருவில் மட்டும் இரண்டு மூன்று கடைகள். பிரியாணி கடைகளுக்கே உரிய அமைப்பு, முன் வரிசை முட்டை வரவேற்க, பரட்டோ மாஸ்டர் மாவை பிசைந்து அடுப்புடனும், மாவுடனும் மல்டி டாஸ்கிங் பண்ணிக் கொண்டிருக்க, அவர்களையும் கடந்து போனோம்.

மழை நீர் சாலைகளில் ஒதுங்கி அதனுள் நடந்து போகும் கூட்டம், பல விதமான சிறு கடைகள் என்று ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே கேள்விகளையும் கேட்டுக் கொண்டு வந்த மகளுடன் சாலையோரக் கடைகளில் பொருட்களையும் வாங்கிக் கொண்டே போனது நன்றாக இருந்தது.

மழை தீவிரமானவுடன் ஆட்டோவில் ஏறி பாண்டி பஜாருக்குப் போனோம். அங்கு இறங்க முடியாத அளவிற்குத் தண்ணீர் வெள்ளம்! சிறிது நேரம் அங்கும் சில கடைகளுக்குச் சென்று விட்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம். நடுநடுவில் தம்பியும் நாங்கள் எங்கிருக்கிறோம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டே இருந்தான்.

வந்தவுடன் மதிய உணவிற்குச் சொல்லி விட்டு காத்திருக்க, தம்பியும் வந்து சேர்ந்தான். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மாலை நேரம் நெருங்க மெதுவாகத் தூக்கம் வருவது போல் இருக்க, பக்கத்தில் பெருமாள் கோவிலுக்குப் போகலாம் என்று கிளம்பி விட்டோம். மழை இல்லையென்றால் நன்கு நடந்து சுற்றிப் பார்த்திருக்கலாம். கோவிலின் முன் கமகமக்கும் பூக்கடைகள். பூக்களை வாங்கி கொண்டு சுவாமி தரிசனம் முடிந்து பழங்கள் வாங்கலாம் என்று அருகிலிருந்த பழக்கடைக்குச் சென்றோம்.

சீதாப்பழம், சப்போட்டா, வாஷிங்டன் ஆப்பிள் , ரெட் ஆப்பிள் கூட இருக்கு மேடம் என்றவரைச் சிரித்துக் கொண்டே கடந்து விதவிதமான வாழைப் பழங்களை 'ஆ'வென்று பார்த்துக் கொண்டிருந்த மகளும் மலை வாழைப்பழம் கிடைக்குமா என்று கேட்க, மதுரையில் பாட்டியிடம் சொல்லி வாங்கலாம் என்று சொல்லி விட்டுப் பிடித்த பழங்களை வாங்கிக் கொண்டு நடையை கட்டினோம்.

அங்கிருந்த விதவிதமான வாழைப்பழங்கள், தெருவில் நாங்கள் கண்ட காட்சிகள், கடைகளில் வேலை செய்யும் சிறுவர்கள், இளம் பெண்களைப் பற்றியும் வாய் ஓயாமால் பேசிக் கொண்டே வந்தாள்.



நாங்கள் பழங்கள் சாப்பிட்டு விட்டுத் தூங்க ஆயத்தமாக தம்பியும் இரவு உணவை முடிக்க, தாய் நாட்டில் இருந்த திருப்தி, பயணம் செய்த களைப்பு, அடுத்த நாளிலிருந்து கோவில்களுக்குப் போகப் போகிறோம் என்ற எதிர்ப்பார்ப்பு, காணாத மழை, சொந்தங்களைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆனந்தம், 2013 வருடப்பிறப்பு  நெருங்கும் நாள் என்று எல்லாம் ஒரு இன்ப மயமாக அன்றைய தினம் மறக்க முடியாத நாளாகி விட்டது.



அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Wednesday, December 18, 2013

நினைத்தாலே இனிக்கும் - புட்டும், ஆப்பமும்

புட்டு பிடிக்காது என்று இந்தக் கால குழந்தைகள் வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் என் வயதையொத்தவர்கள் சொன்னால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த உணவைச் சாப்பிடத் தவறி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அரசமரம் சாந்தி ஸ்டோர்ஸ் வாசலில் அதிகாலை 6.30 மணிக்கு இரண்டு பெரிய அலுமினிய டபராக்களில் கோதுமை மற்றும் அரிசி மாவு புட்டு கொண்டு வருபவருக்காக அவருக்கு முன்னே காத்திருக்கும் கூட்டம், டபராக்களைப் பார்த்ததும் 'அபிராமி அபிராமி' என்று ஆனந்தப்படும் கமலைப் போல வரிசைக்கு முண்டியடிக்கும்.

அப்பொழுது காமராஜர் சாலையில் இருந்து ஆவினில் பால் வாங்கிக் கொண்டு அப்படியே காலைச் சிற்றுண்டிக்காக வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்க வருவார்கள்.

புட்டு விற்பவரும் இரண்டு டபராக்களையும் இறக்கி விட்டு பேப்பர், அளந்து போட காசுக்கேற்றவாறு காப்படி, அரைப்படி என்று சிறு ஆழாக்குகள், கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு வரிசையாக பேப்பரில் போட்டுக் கட்டிக் கொடுப்பார்.

அப்போதெல்லாம் அரிசி புட்டு தான் பிடிக்கும். அது கிடைக்கவில்லை யென்றால் தான் கோதுமை புட்டு வாங்குவது வழக்கம்.

'பொலபொல'வென்று உதிரியாகப் புட்டு, தேங்காய்ப்பூ இருக்கும் ஆனா இருக்காது மாதிரி கலந்து வெல்லமும் சேர்ந்த அதன் சுவை இன்றும் தித்திக்கிறது, நினைக்கையிலே :)

அதே போலத்தான் தெரு முக்கில் விற்கும் அப்பமும். காலையில் ஆறுமணிக்கே விறகு அடுப்பு, அப்பத்திற்க்கென்றே குழித்தட்டு, அதை மூட என்று மண்சட்டிகள் பார்க்கவே அழகாக இருக்கும்.

ஒரு சட்டியில் முன் தினம் ஆட்டிய ஆப்பமாவில் கருப்பட்டி கலந்து, வெண்ணெய் வேண்டும் என்பவர்களுக்குச் சிறிது சிறிதாக உருட்டிய வெண்ணெயை ஒரு தட்டில் வைத்து, பேப்பரோ , வாழை இலையையோ நீளவாக்கில் வெட்டி என்று அவருடைய கடையை ஆரம்பிக்கும் போதே எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சொல்லி விட்டுப்  போவோர்களும், என்னைப் போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அங்கிருந்தே இருந்து வாங்கிப் போவோர்களும் என்று ஒரு சிறு கூட்டம்.

ஆப்பம் விற்பவர் ஒரு பலகையில் அமர்ந்து கொண்டு ஆப்பம் ஊற்றி மூடி, சில நிமிடங்களுக்குப் பிறகு வெந்த ஆப்பம் மேல் வெண்ணை உருண்டையைப் போட்டு ஓரங்கள் மொறுமொறுவென்று ஆகி வாயில் வைத்தால் இனிப்பான, சுவையான ஆப்பம் வீடு வந்து சேர்வதற்குள் காலியாகி விடும்.

இன்றும் மதுரையில் சில தெருக்களில் இந்த வியாபாரம் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால், நடக்கப் பழகி பேச்சு வந்தவுடனே  பள்ளிக்குப் போக வேண்டிய  குழந்தைகளுக்குத் தான் பொறுமையாக இதையெல்லாம் சாப்பிட நேரம் இருப்பதில்லை.

Friday, December 6, 2013

லதா புராணம் 29 - 68

முகநூல் புராணங்கள் :)

நீயா நானா-வில் விவாதிப்பதற்கு நல்ல விஷயங்கள் இல்லை போலிருக்கு!

ஆண்களுக்கு மீசை தேவையா ரேஞ்சில் போய்க்கிட்டு இருக்கு!

சிங்கம் பார்ட் -3 - சிங்கங்கள் அதிரி புதிரி பண்ணிக்கிட்டு இருக்காங்க

மீசை அரசியல் பயங்கரமா இருக்கு!

வருங்காலத்தில் யாரும் நான் மீசை வச்ச ஆம்பளை-ன்னு மறந்தும் கூட டயலாக் சொல்ல முடியாது, எழுதவும் முடியாது

லதா புராணம் #30



நேரத்தை ஒரு மணி நேரம் பின்னோக்கி வைக்க நேற்றிலிருந்து ஒரே குழப்பம்!

பசிக்கிறது ஆனால் நேரத்தைப் பார்த்தால் மதிய நேரம் கூட இல்லை.

இப்படியே இரவும் வந்து சீக்கிரமே தூக்கமும் வந்து விட்டது.

விடிகாலையில் எப்பொழுதும் போல் எழுந்திருந்துப் பார்த்தால் இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது தூங்க ! ஹையா!!!!

வீட்டிலுள்ள கடிகாரங்களின் நேரத்தை சரி செய்து விட்டேன்.

ஆனால், உடல் கடிகாரம் தான் ஒத்துழைக்காமல் சதி செய்கிறது!

லதா புராணம் #31


பல நாட்கள் தீபாவளி விடுமுறையில் சென்றிருந்த சூரியனார் இனிப்புகள் உண்டு ஆனந்தத்தில் உள்ளேன் ஐயா என்று வசீகரிக்கவும் அவர் அழகில் மயங்கி வெளியில் வந்து பார்த்தவுடன் தான் அவருடைய விஷமம் புரிந்தது!!!

முகத்தில் அறைந்த குளிர்காற்று, அட லூசுப் பெண்ணே, பனிக்காலம் என்று மறந்தனையோ என்று சிரித்துக் கொண்டே சில்லிட கேட்கவும் தான் ...

நிஜத்திற்கு வந்தேன்

லதா புராணம் #32


இன்றும் வானத்தில் வசீகரா, Mr.Surya !

நேற்று வரை பச்சைப்பசேல் என்று இருந்த புல்வெளிகள் மாவு தெளித்தாற் போல் காலைப் பனியுடன்!

பூமாதேவி சொன்னாள் நம்பாதே, அந்தக் கள்ளனை

லதா புராணம் #33


என்ன தான் பளபள-ன்னு உடுத்தி,
தோள்ல பையை போட்டு
நகைக் கடைக்கு வந்தாலும்
அந்த இத்தூனுண்டு பர்ஸ்-க்கு
அடிச்சுக்குறவங்கள என்னன்னு சொல்றது ???

லதா புராணம் #34



உள்ளம் உருகுதைய்யா முருகா உன்னடி காண்கையிலே --TMS 'கணீர்' குரலில் உருகி,

கேட்பவரையும் உருக வைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று நாள் முழுவதும் முருகன் பாடல்கள் தான்

லதா புராணம் #35



பள்ளி நாட்களில் திருப்பள்ளியெழுச்சி என்பது எவ்வளவு கடினம் என்பதை

வார இறுதியிலும், விடுமுறை நாட்களிலும் குழந்தைகள் உணர முடியும் .

அலாரம் வைக்காமலே எழுந்திருக்கும் இவர்கள்

அம்மாவிடம் வந்து எழுந்திரு என்றால், அதே ஐந்து நிமிட பல்லவியை அம்மா சொல்லும் போது மட்டும்

கடுப்பாவது ஏனோ?

லதா புராணம் #36



கையால் பிசைந்து உருட்டி சாப்பிடும் சுகம்

முள்கரண்டியில் நாசூக்காக சாப்பிடுவதில் இல்லை

லதா புராணம் #37



குழந்தைகளுக்கு ஊட்டி விடுகிற

குழைந்த சாதத்தில் நெய் விட்டு பருப்பு போட்டு மேலாக்க ரசம் ஊத்தி கமகம-ன்னு இருக்கிற

அந்த சாப்பாட்டில இருக்கிற ருசி வேற எதுலயுமே கிடையாது. யம் யம் யம் ...

மைண்ட் வாய்ஸ் - இப்படி டேஸ்ட் பார்த்தே குழந்தை ஒல்லியாவும் ஊட்டி விடுறவங்க குண்டாவும் ஆயிடறாங்க

லதா புராணம் #38



இஞ்சிப் பால் குடிக்காமலே

இடை மெலிந்து

ஒய்யார நடைபோட்ட

ஒல்லிக்குச்சி தேவதைகள்

ஒரே நாளில்

குண்டு பூசணிக்காயாய் ....

.
.
.

குளிர்கால அங்கிகளின் உபயம்

லதா புராணம் #40


கண்ணுக்குக் குளிர்ச்சியாய்

வண்ண ஓவியங்களாய்

வீதிகளை அலங்கரித்து

ஜொலித்தவள் ...

இலைகள் உதிர்ந்து

கிளைகள் விறைத்து

பொலிவிழந்து

கருவாச்சிக் காவியமாய் ...

லதா புராணம் #41


என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு
வா வா என்று
சொல்ல மாட்டேன்
போக மாட்டேன் ...

என்று அடம் பிடித்து இலைகள் உதிர்ந்த மரங்களின் வழியே

என் முன்னே பவனி வருகிறார், Mr.Surya

லதா புராணம்#42


ஒரு ஹிந்திக்காரன் இன்னொரு ஹிந்திக்காரனைப் பார்த்தா ஹிந்தியில பேசிக்கிறான் .

ஒரு மல்லு இன்னொரு மல்லுவைப் பார்த்த மலையாளத்தில பறையறான்.

ஒரு தெலுகுக்காரான் இன்னொரு தெலுங்கனைப் பார்த்தா தெலுங்கில் மாட்லாடுறான்

சில கொம்பு மொளைச்ச தமிழர்கள் மட்டும்

தமிழ்-ல எப்படி இருக்கீங்க-னு கேட்டா , I am fine, How are you? -னு பீட்டர் விடறது.

ஏன் ஏன் ஏன் தமிழ் -ல பேசினா குறைஞ்சா போய்டுவீங்க ???

உங்களை எல்லாம் ...

லதா புராணம் #43
      


திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

'ஆல்பனி' மலை மீது எதிரொலிக்கும்

அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

லதா புராணம் #44



V வடிவில் குடும்பங்களாக பல வண்ணப் பறவைகள்

GPS இல்லாமலே

நகரம் விட்டு நகரம்

நாடு விட்டு நாடு

கண்டம் விட்டு கண்டம்

வானில் பறக்கும் காட்சி

சொல்லாமல் சொல்லும்

குளிர்காலம் வந்து விட்டது என்று ...

லதா புராணம் #45


நேற்றிரவு வாயு பகவானுக்கும்,

வருண பகவானுக்கும்

நடந்த யுத்த கலவரத்தைப் பார்த்து

இன்று காலை

அச்சத்தில் சூரிய பகவான்

லதா புராணம் #46


வருண பகவான், சூரிய பகவான், வாயு பகவான், அக்கினி பகவான் --சரி.

பனிக்கு எந்த பகவான்?

லதா புராணம் #47


அதிகாலையில் சூரியனைத் தேடினால்

அந்த நிலாவைத் தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக -னு

பாடலாம் அப்படி கருமேகங்களுக்கிடையில் பளிச்சென்று அழகு முகம் காட்டிச்

சந்திரன் காலை வணக்கம் சொல்ல

சூரிய விடியலுக்காக காத்திருக்கிறேன்

லதா புராணம் #48


நீல நிற வானில்

சிறகுகளை விரித்து

தனிக்காட்டு ராஜாவாய்

வலம் வரும்

உள்ளங்கவர் கள்வன்

ஆதித்யன் !

லதா புராணம் #49


அனைவரின் முகங்களிலும்
திருப்தியையும்,
மகிழ்ச்சியையும்
தரும் கிழமைகளில்
சிறப்புடையது

வெள்ளிக்கிழமை !!!

லதா புராணம் #50


சூடா டீ வேணும்-னு கேட்டு வாங்கி

ஊதி ஊதி ஆத்தி

குடிப்பதில் தான் சுகமே!!!

--இணையத்தில் படித்தது 


அம்மா எழுந்திரு

அம்மா பசிக்குது

லீவு நாட்களில் நான் கேட்கும்

சுப்ரபாதம் !







கரண்டியும் கையுமாகவே

காட்சி தருகிறேன் போல ...


லதா புராணம் #51


சில நாட்களுக்கு

கூட்டுக்குத் திரும்பி

தாய்ப் பறவையின்

சிறகுகளில் ...

லதா புராணம் #52


கண்ணைக் கூசவைக்கும்

சூரியன்

உப்பளமா என்று யோசிக்க வைக்கும்

பனிக்குவியல்

உடல் ஊடுருவ காத்திருக்கும்

கடுங்குளிர் ...


இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம் :)


லதா புராணம் #53


புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது ...

லதா புராணம் #54
நித்தின் : இன்னைக்கு என்ன சட்னி, அம்மா?

நான்: வெங்காய சட்னி!!

நித்தின்: எது, எனக்கு ரொம்ப பிடிக்குமே, அதுவா???

நான்: ஆமா, அதே தான். அந்த மிக்ஸி-ய எடு.

நித்தின்: எங்கே இருக்கு?

நான்: அங்கே தாண்டா ...

நித்தின்: எங்கே??(அவன் கண் முன்னால் தான் இருந்தது )

நான்: டேய், அது தாண்டா, கண்ணு முன்னாடியே இருக்கு. தெரியலையா???

நித்தின்: oh !! Mom this is called blender in அமெரிக்கா. Dont say 'mixie ', okay ???

நான்: சுட்டுப் போட்டாலும் blender-னு வாயில வராது. நான் mixie-ன்னு சொன்னா நீ தான் அது blender-னு புரிஞ்சுக்கணும், சரியா ?

ஹ்ம்ம்...

அம்மைக்குப் பாடம் சொல்லும் சுப்பையா

லதா புராணம் #55
நேற்றிரவிலிருந்து தன் மனக்குமுறலை
கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது
வானம் !!!

லதா புராணம் #56
காலையில் இருந்தே

வெறிச்சென்றிருக்கிறது

வீடும், மனமும் ...

தென்றல் 'அவள்'

சென்று விட்டதாலோ???



லதா புராணம் #58
பலருக்கும் நாளைய ராசி - செலவு

என்று இருக்க வேண்டும்

Enjoy ThanksGiving week sale

லதா புராணம் # 59
புத்தம் புது காலை

பொன்னிற வேளை ...

வானில்

செங்கதிர்களை பரப்பி

ஆதவன்

லதா புராணம் #60
காலை தவத்தை

கலைத்தால்

கடும் சாபத்துக்கு உள்ளாக நேரிடும்

காத்திருந்தார்கள் ...

கண்மணிகள்

லதா புராணம் #61
பேந்த பேந்த முழித்து,

காதலியிடம் காதலைச் சொல்ல முடியாமல்

வாய் வரை வந்து பின் மௌனியாகி ...

தவித்த தெத்துப்பல் மைக் மோகன், முரளி, இப்போ யார்?
.
.
மைண்ட் வாய்ஸ் - ஹிக்கும் ! ரொம்ப அவசியம்.

லதா புராணம் #62
 
மயக்கமாகவும்

கலக்கமாகவும்

குழப்பமாகவும்

இன்றைய கதிரவன் !

லதா புராணம் #63
அழகென்ற சொல்லுக்கு முருகா ...
.
.
.
.
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா ...
.
.
.
.
மனிதன் சக்திக்கு எட்டாத உருவமே முருகா ...




--TMS தானும் உருகி நம்மையும் உருக வைக்கிறார் !!!



லதா புராணம் #64
கதிரவனைப் பார்த்து

காலை விடும் தூது ...

இன்று மதியத்திற்குப் பிறகு

வானில் வலம் வருவார் போல

லதா புராணம் #65
உலகிலேயே அதிக முறை நடித்துக் காட்டப்பட்ட நாடகம் - வயித்து வலி

#பள்ளி குழந்தைகள்

படித்ததில் பிடித்தது

ஹி ஹி ஹி ஹி! நானும் அப்படித் தான் ஒரு காலத்தில் ...
மலையின் பின்னணியில்
'தக தக' தங்க
சூரிய உதயம் !

இனிய காலைக் காட்சி
இந்த பனிக் காலத்தில் !

அபிராமி, அபிராமி!!

லதா புராணம் #66
'சில்'லென்று

கன்னங்கள் சிவக்க

முத்தமிட்டுச் சென்றது

பனிக்கால குளிர் தென்றல்

லதா புராணம் #67
மழையா ?

பனியா ?

பனிமழையா ?

பட்டிமன்ற விவாதம்

'வான்' டிவி- யில்

லதா புராணம் #68
       
   
            

Sunday, December 1, 2013

திக்....திக்...திக் ...6

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது.

அம்மா, நான், என் மகள் என்று மூன்று தலைமுறையும் ஷாப்பிங் போய் விட்டு வரலாம் என்று மதியம் மூன்று மணியளவில் கிளம்பினோம். என் மகள் பின் சீட்டில் அமர, அம்மாவும் நானும் முன்னால் அமர்ந்து கொண்டோம். வெட்டிக் கதைகளைப் பேசி சிரித்துக் கொண்டே மால் இருக்கும் இடத்தின் அருகில் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்த போக்குவரத்தில் ஐக்கியமானோம்.

நல்ல இடைவெளி விட்டு என் முன்னால் ஒரு கார் போய்க் கொண்டிருக்க, 'டமால்' என்ற சத்தத்தில் எங்கள் கார் ஒரு தூக்கு தூக்கிப் போட்டது. எங்கிருந்தோ ஒரு கார் எங்களை இடித்து விட்டுச் 'சர்'ரென்று டயர் வெடித்து சிறிது தூரத்தில் போய் நிற்க, பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் ஸ்தம்பித்து முன்னாடியும் பின்னாடியும் பார்க்க...

சில நிமிடங்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் பதட்டத்துடன் என் மகளைப் பார்த்து உனக்கு ஒன்றும் இல்லையே என்று நான் அதிர்ச்சியுடன் கேட்க அவளும் அம்மா, உனக்கு ஒன்றும் இல்லையே என்று என்னைத் திருப்பிக் கேட்க, மிரண்டு போய் உட்கார்ந்திருந்த அம்மாவிடம், அம்மா உனக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று பயத்துடன் நான் கேட்க, அம்மாவும் மெதுவாக கழுத்து தான் வலிக்கிற மாதிரி இருக்கு என்று அதிர்ச்சியுடன் சொல்ல ...

அதற்குள் பெட்ரோல் வாசனை வேறு. சரி, இறங்கிப் போய் பார்க்கலாம் என்றால் நடுரோட்டில் இரண்டு பக்கமும் வண்டிகள் 'ஐயோ பாவம்' என்று எங்களைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்று கொண்டிருந்தது.

பின்னால் வந்த வண்டிகள் எல்லாம் மெதுவாக வேறு பாதையில் போக ஆரம்பிக்க, ஒரு வயதானப் பெண்மணி மெதுவாக என்னை நோக்கி வர, இந்த வயசில நீ வெளியே வரலைன்னு யாரு அழுதா, ராகுகாலம் என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே நானும் இறங்க, என் வண்டிச்சக்கரம் உடைந்து எனக்குப் பின்னால் இருந்த கதவு முழுவதும் சொட்டையாகி எனக்கு வந்த கோபத்திற்கு ஓங்கி அந்தப் பெண்மணியைப் போட்டு ...

I am sorry, I am sorry , I din't see you என்று சொல்லும் பொழுது கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நகத்தைக் கடித்துக் கொண்டே நடு வீதியில் நிற்க, கல்லூரியில் படிக்கும் இளைஞன் அவர் வண்டியை ஓரத்தில் நிறுத்தி தீயணைப்பு வண்டிக்கும்,  காவல்துறைக்கும் போன் செய்தபடியே நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

தான் பகுதி நேரத் தீயணைப்பு வீரர் என்றும் சிறிது நேரத்தில் அவர்கள் வந்து விடுவார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே(5 நிமிடத்திற்குள்) 'சொய்ங் சொய்ங்' என்று  இரண்டு மூன்று தீயணைப்புவண்டிகளும்,  போலீஸ் கார்களும், அவசர மருத்துவ சேவை வண்டிகளும் என்று ஹாலிவுட் பட ஸ்டைலில் போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார்கள்!

என்னிடம் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே என்று ஒருவர்கேட்கும் பொழுதே நான் என் அம்மாவை கவனியுங்கள் அவர் தான் கழுத்து வலிக்கிறது என்று சொன்னவுடன் அம்மாவிடம் கழுத்தை அசைக்காமல் அப்படியே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி விட்டு, ஒரு காலரையும் மாட்டி ஸ்ட்ரெட்சரில் அவசர சிகிச்சை வண்டிக்குள் அழைத்துச் சென்று விட்டார்கள். என் மகளிடமும் இன்னொரு மருத்துவர் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார் அவள் பற்களுக்கான dental braces போட்டிருந்ததால் அவளுக்கும் சில டெஸ்டுகள் செய்தார்கள்.

அதற்குள் போலீஸ் வந்து விசாரிக்க, நானும் தேமே -ன்னு இந்த லேன்ல போயிட்டு இருந்தேன். எங்கிருந்தோ இருந்து சடார்-னு வந்த அந்த வண்டி இடிச்சிருச்சு என்று சொல்ல, அந்தப்  பெண்மணியும் நான் இந்தக் காரை கவனிக்கவில்லை எப்படி இது நடந்தது என்று தெரியவில்லை என்று படபடப்புடன் சொல்லவும், அவர் ஒன்றும் பயப்படாதீர்கள். நீங்கள் இரண்டு லேன்-களை  கடந்து வந்திருக்கிறீர்கள் என்று அவர் செய்த தப்பைச் சொல்லி விட்டு, இருவரும் உங்கள் இன்சூரன்ஸ், லைசென்ஸ் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டுச் சென்று விட்டார்.

என் மகள் பாட்டியுடன் இருக்க, நான் என் கணவரை அழைக்க, அவரும் இப்பத் தான் போனீங்க அதுக்குள்ள என்ன என்று கேட்க, ம்ம் உங்க ஆசைக்கார் 'டமால்' ஆயிடுச்சு. வந்து எங்களை கூட்டிட்டுப் போங்க என்றவுடன் அவரும் பதட்டமாகி மகனுடன் வந்து சேர்ந்தார்.

 நானும் அதே சூட்டில் இன்சூரன்ஸ் கம்பெனியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்ல, அவர்களும் அந்த பெண்மணியின் தகவல்களையும் வாங்கிக் கொண்டார்கள். அவருடைய லைசென்சில் அவருடைய வயதும் என் அம்மாவின் வயது என்று தெரிந்தவுடன் அவர் மேல் எனக்குப் பரிதாபம் வந்து விட்டது. இந்த வயதிலும் உழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருப்பார் போலிருக்கு. பக்கத்து ஊரில் இருந்து வந்திருக்கிறார்.

தீயணைப்பு வீரர்கள் வந்து எங்கள் இரண்டு வண்டியையும் எடுத்துக் கொண்டுப் போக towing கம்பெனியிலிருந்து ஆட்கள் வருவார்கள், உள்ளே இருக்கும் சாமன்களை அப்புறப்படுத்தி விடுங்கள் என்று சொல்ல, ஒரு வழியாக இந்தக் காரிலிருந்து என் கணவர் வண்டிக்கு எல்லாம் போக...

உடைந்த கண்ணாடித் துண்டுகளை தீயணைப்பு வீரர்கள் பெருக்கிச் சுத்தம் செய்து விட்டார்கள். நானும் போலீசிடம் இருந்து ரிப்போர்ட் ஒன்றை வாங்கிக் கொண்டேன். அந்தப் பெண்மணி மீண்டும் வந்து 'I am really sorry , hope your mom feels better' என்று சொல்லி விட்டு என்னருகிலேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இருந்த கோபம் எனக்கு அப்போது இல்லை. அவரைப் பார்த்தாலும் பாவமாகத் தான் இருந்தது.

ஒரு வழியாக ஆம்புலன்சில் என் அம்மாவுடன் நான் செல்ல, வரிசையாகப் பல டெஸ்டுகள் செய்துகொண்டே 'உய்ங் உய்ங்' என்ற சத்தத்துடன் சுழல்விளக்கு சுழல ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தோம்.

எமெர்ஜென்சி என்றவுடன் ஒரு பதட்டம். பெயர் என்ன, என்ன நடந்தது லொட்டு லொசுக்கு என்று ஆயிரம் கேள்விகள். உடனே, எக்ஸ்-ரே, ஸ்கேன் என்று ரூம் மாறி மாறி ஒரு வழியாக முடிந்தாலும் வீட்டுக்குப் போக முடியவில்லை. இன்னும் சிறிது நேரம் வைத்திருந்து பார்த்து விட்டுத் தான் அனுப்புவோம் என்று சொல்ல என் அம்மாவிடம், என்ன அமெரிக்க ஆஸ்பத்திரி பிடிச்சிருக்கா , இதைத் தான் பார்க்காம இருந்த இப்ப இதையும் பார்த்துட்ட என்று சொல்லி சிரித்துக் கொண்டே அங்கிருக்கும் நர்சுகளும் வந்து எல்லாம் நார்மல் போகலாம் என்றவுடன் வீட்டுக்கு வந்து சேரும் பொழுது இரவாகி விட்டது.

என் கணவருக்கு அவருடைய விருப்பமான கார் இப்படியாகி விட்டதே என்று கவலை.  எனக்கு பிரச்னையில்லாமல் நாங்கள் உயிருடன் திரும்பி வந்தோமே  என்று திருப்தி. அன்று என் மகன் மட்டும் எங்களுடன் வந்திருந்தால் நினைக்கவே பயமாக இருக்கிறது.

இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து உங்கள் யாருக்கும் சேதம் இல்லாதது மிக்க மகிழ்ச்சி. ஆஸ்பத்திரி செலவு முழுவதும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், கவலை வேண்டாம் என்று சொல்லி இரண்டு நாள் வாடகைக் காருக்கும் ஏற்பாடு செய்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு சண்டை போட்டு முறையாகச் சேர வேண்டிய பணம் வாங்கி வண்டி வாங்குவதற்குள் ஒரு வழியாகி விட்டது.

இன்றும் அந்த இடத்தை கடந்து செல்கையில் 'திக் திக் திக்' தான்!


Sunday, November 17, 2013

சுவாமியே சரணம் ஐயப்பா !

கார்த்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதம் என்றால் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிந்து விரதம் ஆரம்பிக்கும் மாதமும் கூட.
துளசி மாலை, காவி, கருப்பு, மஞ்சள் என்று பக்தர்கள் ஆடையணிந்து பயபக்தியுடன் உலா வரும் நாட்களில் முருகன், ஐயப்ப பக்திப் பாடல்கள் முழங்கும் காலமும் கூட.
அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தும் ஐயப்பனின் பக்திப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
K.J.ஜேசுதாஸ்-ன் தாலாட்டும் காந்தக்குரல், செவிகளை வருடும் ஆர்ப்பாட்டமில்லாத இசை, அமைதியாக அமர்ந்து கேட்க,
பாடல் முடிவடையும் போது உடலும் ஷாவசனம் செய்தது போல் சில்லென்று, மனமும் அமைதியாகி இருக்கும்.
இந்தப் பாடலின் தமிழ் அர்த்தம் அறிய ...


Monday, November 11, 2013

திக்...திக்...திக்... 5

டிசம்பர் மாதம், 2005 வருடம்.

குடும்பத்துடன் ப்ளோரிடா போய் நண்பர்களையும், டிஸ்னி உலகத்தையும் பார்த்து விட்டு வருவது என்று தீர்மானித்து கிறிஸ்துமஸ் நாளன்று அதிகாலையில் விமான நிலையத்தில் காத்திருந்தோம். என் மகனுக்கு நினைவு தெரிந்து  முதல் விமானப் பயணம்.

குழந்தைகளும் இந்த விடுமுறையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் அவர்களுக்கும் ஒரே குஷி. அதிகாலை ஐந்தரை மணிக்கே விமான நிலையத்தில் ஆஜர். டிக்கெட் சரிபார்த்த பிறகு மொத்தமே 15-20 பேர் போகும் ஒரு சிறிய விமானத்தில் பயணம். அதுவே வேடிக்கையாகத் தான் இருந்தது. விமானியும் எடையைச் சமனாக்க  குழந்தைகளையும் பயணிகளையும் மாற்றி உட்கார வைத்தார்.

நானும் என் மகனும், என் மகளும் என் கணவரும் என்று உட்கார , ஒரு வழியாக விமானமும் மேலே பறக்க ஆரம்பித்தது. எழும்பிய விமானம் ஒரு சைடாக வளைந்து வட்டமிட, குழந்தைகளும் வீடு தெரிகிறதா என்று எட்டிப் பார்த்துக் கொண்டே வர, இன்னொரு சைடில் மீண்டும் ஒருமுறை வட்டமிட, இதே தொடர்ந்து கொண்டே இருந்தது. முதலில் பார்க்கும் பொழுது, ஹை! வீடு தெரிகிறது, கோவில் தெரிகிறது, மால் கூட தெரிகிறது என்று மகிழ்ந்த நாங்கள் திருப்பித் திருப்பி அதே காட்சி தெரிந்தவுடன் சரி, வேறு விமானத்திற்கு தான் வழி விடுகிறார்களோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே,

ஆகாயத்தில் இருபக்கமும் மாறி மாறி வளைந்து மீண்டும் மீண்டும் வட்டமிட, ஒரே தலை சுற்றல். பரிதாபத்துடன் குழந்தைகளும் எங்கே வாயை திறந்தால் வாந்தி வந்து விடுமோ என்று கணவரைப் பார்க்க, அவரும் ஒன்றும் புரியவில்லையே என்று சைகையினால் சொல்ல, அதற்குள் விமானப் பணிப்பெண்ணும் சிறிது பொறுத்திருங்கள் என்று எங்கோ தவறு நடக்கிறது என்று தெரிந்தும் எல்லோரையும் சமாதானப்படுத்த,

விமானத்தில் இருக்கும் அனைவருமே என்ன நடக்கிறது என்று புரியாமல் மலங்கமலங்க முழிக்க, எதிர்பாராத விதமாகச் சடுதியில் விமானம் 'தடக்'கென்று தரையை முட்ட, விமானத்தின் ஆட்டத்தால் நாங்களும் மேலும் கீழும் போய் தலையில் சிறிது அடிப்பட்டுப் பேசக்கூட முடியாத நிலையில் விட்டால் போதும் என்று கீழே பார்த்தால் தீயணைப்பு வண்டிகளும், போலீஸ்கார்களும் சூழ, எதையும் கண்டு கொள்ளும் மன நிலையில் இல்லாமல் அனைவரும் பதட்டத்துடன் இறங்க, அனைவரையும் கவனமாக இறக்கி ஆசுவாசப்படுத்த, நார்மல் நிலைக்கு வர சிறிது நேரம் ஆகிற்று.

என்னடா இருந்து இருந்து குழந்தைகளுடன் ஆசையாக ஆரம்பித்த பயணம் இப்படி ஆயிற்றே என்று என்ன தான் நடந்தது இனி எப்படி ப்ளோரிடா போவது என்று கேட்க கவுண்டருக்குப் போனால் அவனவன் கிறிஸ்துமஸ் நாளன்று குடும்பத்துடன் இருக்கணுமே என்ற கவலையில் ஒரே குழப்பம் அங்கு.

எங்கள் முறை வந்த பொழுது ஏன் இப்படி ஆயிற்று என்று கேட்க, அங்கிருந்த பெண்மணி, விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு, வண்டியை இறக்க விமானி கடும் முயற்சி செய்து உங்களை எல்லாம் காப்பாற்றியிருக்கிறார் நீங்கள் விரும்பினால் உங்களுக்கு அந்த வீடியோவை காண்பிக்கிறேன் என்று பார்த்தால் - நாங்கள் இருந்த விமானத்தின் முன் சக்கரங்கள் விமானம் டேக் ஆப் ஆன பிறகு உள்ளே செல்லாமல் பாதி மடங்கிய நிலையில் மாட்டியபடியே இருக்க, வேறு வழியில்லாமல் nose dive செய்து இறக்கியிருக்கிறார்கள்.

மனக்கண்ணில் மேலும் கீழும் ஆடிய விமானம், தலையில் அடிப்பட்டு 'அவுச் அவுச்' என்று வரிசையாக மக்கள் அலறியது-  அதைப் படமாக பார்க்கும் பொழுது தான் நடந்த நிகழ்ச்சியின் அபாயம் புரிந்தது.  நீங்கள் உயிருடன் திரும்ப வந்ததே பெரிய விஷயம் என்று சொல்லும் பொழுது முதுகுத்தண்டில் சில்லென்று ஒரு சிலிர்ப்பு! அட நாராயணா!

உயிருடன் அனைத்துப் பயணிகளையும் காப்பாற்றிய அந்த விமானி தான் அன்று கடவுளாகத் தெரிந்தார்.

பிறகு அடுத்த விமானத்தில் பறந்து ப்ளோரிடா போய் விட்டு வந்தாலும் இந்த திக்...திக்...திக் நிமிடங்கள் மட்டும் மறக்க முடியவில்லை.





Thursday, November 7, 2013

மண் வாசனை

இந்த வருட ஆரம்பத்தில் ஊருக்குப் போயிருந்த பொழுது அம்மாவிடம் அத்தைகளைப் பார்க்க வேண்டும் (அப்பாவின் பெரியம்மா, சித்தி மகள்கள்) என்று சொல்ல அவரும் நானும் பார்த்துப் பேசி ரொம்ப  நாளாச்சு போகலாம் என்று கிளம்பி விட்டோம்.

சில அத்தைகள் இன்று உயிருடன் இல்லை :( பாட்டியைப் பார்க்க அடிக்கடி  அவர்கள் வந்து போன நாட்கள் எல்லாம் இனிமையான நினைவுகள். பெரியவர்களுடன் மனந்திறந்து அவர்களுடைய நல்லது கெட்டதுகளைச் சொல்லி அறிவுரைகளை ஏற்றுக் கொண்ட காலமும் கூட.

முதலில் பார்க்கப் போன அத்தை என் சிறுவயதில் கம்பீரமாக இருப்பார். நல்ல செல்வாக்குடன் இருந்தவர். நூல் வியாபாரம் செய்தவர்கள். அவருடைய மகள் என் அக்காவின் வயது. அவர்கள் வீட்டில் இருக்கும் தராசு என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். கல், பேப்பர் என்று கையில் எதைக் கிடைத்தாலும் எடையைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். மாவுக்கு அரைக்க அரிசியும்,  உளுந்தும் ஊற வைத்திருப்பார்கள் அதை இரண்டையும் கலந்து என்று ரொம்பவும் படுத்தியதால் அவருக்கு என்னைக் கண்டால் கொஞ்சம் உதறலாகத் தான் இருந்திருக்க வேண்டும் அப்போது!  இப்படி அவரை மட்டுமல்ல எங்கள் வீட்டில் குடியிருந்த இன்னொரு அத்தையையும் நன்றாகவே படுத்தியிருக்கிறேன் :)

இன்று நடை தளர்ந்து, கண் பார்வை மங்கலாகி, பேச்சில், செயலில் இருந்த கம்பீரம் குறைந்து எனக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது அவரை அப்படிப் பார்க்க. அவருடைய மகள்களைப் பார்த்துப் பேசி விட்டு வந்தோம். என் மகளிடம் அந்த அத்தை எப்படி இல்லாம் இருப்பாள் என்று சொல்லிக் கொண்டே அடுத்த தெருவில் இருக்கும் அவருடைய அக்காவைப் பார்க்கக் கிளம்பினோம்.

இந்த அத்தை வீட்டு விருந்தில் தான் முதன் முதலில் இட்லியுடன் சமான் அவுன்டி என்று நாங்கள் சொல்லும் ஆட்டிறைச்சிக் குழம்பு சாப்பிட்டு என் நாக்கு அடிமையானது ! அதையும் சொல்லிக் கொண்டே அவர் வீடு வந்து சேர்ந்தோம். வயதாயிருந்தாலும் அவர் பேச்சு வழக்கு இன்னும் மாறவே இல்லை.

நாங்கள் போன பொழுது இரண்டும் மருமகள்களும், அவர்களுடைய குழந்தைகளும் என்று வீடு 'கலகல'வென்று இருந்தது.  மாமியார் தனியாக அடுப்பு வைத்துக் கொண்டு சமைத்துச் சாப்பிட, இரண்டு மருமகள்களும் தங்கள் அறையில் தனித்தனி அடுப்பு வைத்துக் கொண்டு. ஆனால், வீடு முழுவதும் வளைய வந்து கொண்டு இருந்தார்கள். ஒரு சின்ன அறையில் கட்டில், அடுப்பு, தண்ணீர் குண்டா, மின் விசிறி  என்று ஒரு வித ஆச்சரியத்துடனே என் மகள் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு பேத்தி கையில் மருதாணி வைத்துக் கொண்டு வந்து காண்பித்துப் போனாள் . சின்ன வாண்டுகள் எங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாட்டி, பாட்டி என்று வந்து போன பேரக்குழந்தைகளைப் பார்த்து எப்படி இந்தச் சின்ன வீட்டில் மூன்று அடுப்புகள் , ஒரு சிறிய அறையிலேயே ஒரு குடும்பம் , மூன்று குடும்பங்கள் இந்த வீட்டில் ஒன்றுமே புரியவில்லை . இப்படி எல்லாம் வாழ முடியும் , மக்கள் வாழ்கிறார்கள் என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே வந்தாள் என் மகள் . சரி, இப்போதைக்கு இந்த இரண்டு அத்தைகளைப் பார்த்தது போதும்  என்று சிறு வயது சேட்டைகளைப் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

அடுத்த சில தினங்களில், இன்னொரு அத்தையைப் பார்க்கப் போனோம். அவர் வீடு கூடலழகர் கோவிலின் சொர்க்கவாசலுக்கெதிரில் ஒரு ஆள் மட்டுமே போகக் கூடிய குடியிருப்பில். கிட்டத்தட்ட ஏழெட்டு குடியிருப்புகள். அவர்களை எல்லாம் கடந்து என் அப்பாவின் சித்தி வீட்டுக்குள் நுழைந்தோம். நான் பார்த்த வீடு இன்று இரு குடியிருப்புகளாக மாறி விட்டிருந்தது. ஒரு அத்தை மகளை மாமாவிற்குத் திருமணம் செய்து கொடுத்த வீட்டிற்குப் போனோம். முன்பு தறி போட்டிருந்த இடம். இப்போது தறி இல்லை. மாமாவிற்கும் உடம்பில் தெம்பு இல்லை. என் மகளோ மின்விசிறியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் . அக்காவும் ஒன் பொண்ணு ஒன்னை மாதிரியே இருக்கா .சின்ன வயசில ஒன்னைப் பார்த்தது மாதிரியே இருக்கு என்று என் மகளிடம் பேசிக் கொண்டே இட்லி ரெடி ஆகிறது இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்கள் என்று சொல்ல, நானும் அதெல்லாம் வேண்டாம் உங்களைப் பார்க்க வேண்டும் என்று வந்தேன் அதுவே போதும் உட்கார்ந்து பேசுங்கள் என்று சொல்ல அவரும் வந்ததற்கு கொஞ்சம் பாலாவது குடிங்கள் என்று டம்ளர்களில் குடுக்க, சிரித்துக் கொண்டே பேசி விட்டு,

அடுத்த குடியிருப்பில் இருந்த இன்னொரு அத்தையைப் பார்க்க கிளம்பினோம். அவருடைய பேரன், பேத்திகள் MCA படித்து நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். எப்படி இருந்த அத்தை , சர்க்கரை நோய் வந்து ஆள் மெலிந்து பாதியாகி, கண் பார்வை, கம்பீரமெல்லாம் குறைந்து பார்க்கவே வருத்தமாக இருந்தது.

அவருக்கு எதிர்பாராமல் நாங்கள் வந்ததில் மிக்க சந்தோஷம். எப்படிம்மா இருக்கே, பொண்ணு என்ன படிக்கிறா என்று கேட்டு விட்டு அவளுடனும் பேசினார்.

சிறிது நேரம் சுற்றம் பற்றி பேசி விட்டு வெளியில் வரும் போது அவர்களைப் பார்த்த திருப்தி இருந்தாலும் வயோதிகம் எப்படி இருந்த ஆட்களை எல்லாம் எப்படி புரட்டிப் போட்டு விடுகிறது நாளை எனக்கும் இந்த கதி தான் என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

சொந்த வீட்டில் வசதிகள் குறைவாக இருந்தாலும் வந்தவர்களை மனமாற வரவேற்று அன்புடன் உபசரிக்கிறார்கள், அவர்களிடம் இருந்த பாசாங்கில்லாத உண்மையான அன்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்படி எல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்று நம்பவே முடியவில்லை என்று ஊர் வந்து சேரும் வரை சொல்லிக் கொண்டே இருந்தாள் என் மகள்.

பணம், இருக்கும் இடம் மகிழ்ச்சியை நிர்மாணிப்பது இல்லை என்ற போதும் இவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று விமான நிலையத்தில் ஆறு மணி நேரம் காத்திருந்த பொழுது மகள் சொன்ன அந்த நிமிடம் என் மகனுக்கும் இதைப் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு,

சில வருடங்களாகவே பார்க்க வேண்டும் என்று நினைத்து ஒரு வழியாக அத்தைகளைப் பார்த்த திருப்தியுடன் ஊருக்குத் திரும்பினேன்.

Thursday, October 31, 2013

போவோமா ஊர்கோலம் - தீபாவளி நகர்வலம்

மதுரையில் கோலாகலமான கொலு ஆரம்பமாகும் போதே மீனாக்ஷி அம்மன் கோவிலைச் சுற்றி இருக்கும் வீதிகளில் தீபாவளி களை கட்ட ஆரம்பிக்கும். மக்களும் துணிகள், நகைகள் என்று ஆரம்பித்து தீபாவளி முதல் நாள் இரவு வரை எதையாவது வாங்க கடைகளுக்குப் போய்க் கொண்டு தான் இருப்பார்கள்!

மேலமாசி வீதி, டவுன்ஹால் ரோடு,  திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, அம்மன் சன்னதி, வெங்கலக்கடைத் தெருவில் ராஜ் மஹால், SRB சில்க்ஸ், கோ-ஆப்டெக்ஸ் துணிக்கடைகளின் வாசலில் பாவம் போல குழந்தைகளை வைத்துக் கொண்டு வெளியில் வரும் ஒவ்வொரு பெண்ணின் முகத்தைப் பார்த்து இன்னும் இவ மட்டும் என்ன பண்ணிக்கிட்டிருக்கா என்று ஒருவித சலிப்புடன் சில ஆண்களும், இதாண்டா சாக்கு என்று சிலரும்,  சேலை மட்டும் வாங்கினால் போதுமா தோடு, ஹேர் கிளிப், பொட்டு என்று அம்மன் கோவிலுக்கும், புது மண்டபத்துக்கும் முண்டியடிக்க கிளம்பும் பெண்களும்- அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் பரவசம் இருக்கே!!! அடடா!!
 
மனைவி மனம் நோகாமல் இருக்க, அவளுக்குப் பிடித்தச் சேலைகளை வாங்க தவமாய் தவம் கிடப்பார்கள் தலைதீபாவளி கொண்டாடும் கணவன்மார்கள். சிலர் மனைவிக்குப் பிடித்தாலும் பட்ஜெட் இடிக்குதே என்று கையைப் பிசைந்து கொண்டு வேறு ஏதாவது பார்றா என்று கெஞ்சிக் கொண்டிருப்பார்கள். இப்படி சிரிப்பும் முறைப்புமாய் ஒரு பக்கம்.

கூட்டங்கூட்டமாக கைகளில் லத்தியுடன் ஆண், பெண் போலீஸ்காரர்களும், கூட்டத்தைக் கண்காணிப்பவர்களும் ஏம்ப்பா 7234 ஆட்டோ அங்க நிக்காதே, முன்னாடி போப்பா, சார் இன்னோவா காரைக் கொண்டு போய் அந்த பக்கம் நிறுத்துங்க என்று வண்டிக்கேற்ப, ஆளுக்கேற்ப அசரீரி மாதிரி குரல் கொடுத்து கதிகலங்க வைத்துக் கொண்டிருப்பார்கள்.

தீபாவளி நெருங்க நெருங்க நடைபாதைக் கடைகள் கூட்டமும், பேசியபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தெருவை அடைத்தவாறு போவோர்களும் என்று பெரிய ஜனத்திரளையே பார்க்கலாம்.

நடுவில் தெரிந்தவர்களைப் பார்த்து விட்டால் போதும் நீ என்ன வாங்கினே என்று நடு ரோட்டிலேயே பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டு சிரித்துப் பேசியபடியே போகும் இவர்களைப் பார்த்தால் நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

புது நகைகள் வாங்கும் மக்கள் கூட்டம் தெற்காவணிமூல வீதிக்கும், நடுவில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள இளநீரும் குடித்து விட்டு நகர்ந்து ஒரு வழியாக அப்பாடா இன்றைக்கு இது போதும் என்று முடிவெடுத்து எந்த ஹோட்டலுக்குப் போகலாம் என்று மனோரமா, துர்காபவன், மேலமாசி வீதி ஆரியபவன், முருகன் இட்லிக் கடை, சுப்ரீம், சபரீஷ், காலேஜ் ஹவுஸ், மாடர்ன் ரெஸ்டாரன்ட் என்று எங்கு இருக்கிறார்களோ பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து இன்னும் வாங்காத பொருட்களுக்கு இன்னொரு நாள் என்று முடிவெடுத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்புவார்கள் ஒரு வழியாக!

ஹோட்டல்களிலும் சாப்பிடுபவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே எப்படா நகருவார்கள் என்று பதவி பறிபோன அமைச்சரிடமிருந்து சீட்டை பிடுங்கிக் கொள்ள காத்திருப்பார்கள் சிலர். நிம்மதியாக சாப்பிட முடியாமல் அவதி அவதியாக அள்ளிக் கொட்டிக் கொண்டு வெளியேறுபவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும். சர்வர்களும் கூட்டத்தைப் பார்த்தவுடன் எரிச்சலான முகபாவத்துடன் என்ன இருக்கு என்ற கேள்விக்கு எவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முடியுமோ சொல்லி விட்டுப் போவார்கள். சில இடங்களில் சட்னி இருக்கும் சாம்பார் வர காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று காத்திருக்க வேண்டும்.

இப்படி கோவில்களுக்கும் திருவிழாக்களுக்கும் ஹோட்டல்களுக்கும் கடைகளுக்கும், மக்களுக்கும் பஞ்சமில்லாத மதுரையில் தீபாவளி முன் தினம் இருக்கும் பரப்பரப்பு இன்னுமொரு மகுடம். அநேகமாக எல்லா ஊர்களிலும் அப்படித் தான் இருக்கணும். ஆனால், மதுரை தான் நமக்கு ஸ்பெஷல் ஆயிற்றே, அந்த நாளை நினைத்துப் பார்க்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

முன்பு விளக்குத்தூணிலிருந்து தெற்குமாசி வீதி  வரை நடுரோட்டில் கடை பரப்பியது இன்று கீழவாசல், அரசமரம் என்று விரிந்திருக்கிறது. மழையில் பூத்த காளான்களாய் பட்டாசுக் கடைகள், செருப்பு, பாய், பிளாஸ்டிக் குடங்கள், சோப்பு டப்பாக்கள், ஸ்டிக்கர் பொட்டுக்கள், இத்யாதிகள் என்று அக்காவ் மூணு பத்து நாலு பத்து என்று நேரத்திற்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வியாபாரம் செய்யும் வியாபாரிகள்,

விளக்குத்தூணைத் தாண்டி விட்டால் பிளாட்பார துணிக்கடைகள் வாயில் வந்த பெயரைச் சொல்லி அம்மா இங்க வாங்க, இங்க வாங்க இருநூறுபா சேலை நூறு நூறு, அய்யா பனியன், அண்ணே கைலி, அக்கா லேடீஸ் கர்ச்சீப் என்று மாறி மாறி குரல்கள் , மக்கள் கூட்டம் அலைஅலையாய் பேரம் பேசிக் கொண்டு கடைசி நிமிட ஷாப்பிங் முடித்துக் கொண்டிருக்கும்.

சிலர் வெறுமனே கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, சிலர் கையில் இளநீர், திகர்தண்டாவை குடிப்பது போல் பெண்களை நோட்டமிட்டுக் கொண்டு, கூட்டத்தில் இடித்துக் கொண்டே சிலர், பெண்கள் கழுத்தைச் சேலையால் மூடிக் கொண்டு நகைகளை திருடர்களிடமிருந்து காத்துக் கொண்டு நொடிக்கொருதரம் பணப்பை பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டும் போகும் கூட்டத்தை பெரியம்மா, பாட்டி வீட்டிலிருந்து பலமுறை கண்டதுண்டு.

கைகளில் துணிகள் வாங்கிய கட்டைப்பை, மஞ்சள் பை, பட்டாசுகள் என்று மனம் நிறைய மகிழ்ச்சியுடன் போகும் பலரையும் காண முடியும்.

விளக்குத்தூண், சின்னக்கடை ஏரியாக்களில் ணங்க ணங்க ணங்க ணங்கன்று நடுராத்திரியிலும் கொத்துப் பரோட்டோ சத்தமும், சால்னா வாசனையும், குஸ்கா, பிரியாணி என்று ராபியா மட்டன் ஸ்டால், அம்சவல்லி, சிம்மக்கல் கோனார் கடை என்று அனைத்து அசைவ ஹோட்டல்களிலும் கூட்டம் அலைமோதும். தூங்கா நகரம் !!!

நடுநடுவில் குருத்து, மாங்காய், பழங்கள் விற்கும் வண்டிகளும் அதை வாங்க அண்ணே எனக்கு ஒண்ணு , எனக்கு ரெண்டு என்று நீண்டிருக்கும் கைகளில் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு பிசியாக வியாபாரம் செய்யும் வியாபாரிகள்!

இந்தக் கூட்டத்திலும் பேரம் பேசி வாங்கி விட்டோம் என்று பிளாஸ்டிக் குடங்களையும், டபராக்களையும் அள்ளிக் கொண்டுப் போகும் பெண்கள் பட்டாளம்.

தெற்கு மாசி வீதிக் கடைகளில் ஜொலிக்க ஜொலிக்க விளக்குகள், இனம் மதம் பாராமல் சுறுசுறு பிசினெஸ்! அந்தக் கூட்டத்தில் போய் விட்டு வர தனித் திறமையே வேண்டும்!

ஆர்யபவானில் லட்டு, பால்கோவா, முந்திரி இனிப்புகள், சோன்பப்டி என்று அதை வாங்க தள்ளுமுள்ளு கூட்டம். இந்தக் கூட்டம் எல்லாம் இப்போது டெல்லிவாலாவிலும், வளையக்காரத்தெரு முக்கில் இருக்கும் கடையிலும்! (பால்கோவா, சமோசா...நன்றாக இருக்கிறது ) ஆர்யபவன் கடை மூடி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். இப்பொழுது கிருஷ்ணா, அடையார் ஆனந்த பவனிலும் கூட்டம்!

இப்படியே நடுநிசியைத் தாண்டி அதிகாலை வரை நடக்கும் இந்த வியாபாரம் மழையினால் அடிக்கடி பாதிப்படைந்தது உண்டு. ஆனாலும் குடை பிடித்துக் கொண்டும், மலையில் நனைந்து கொண்டும் ஜோரான வியாபாரம் அதுபாட்டுக்கு நடக்கும்.

பஸ், ரயில்வே நிலையங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தீபாவளிக்கு ஊருக்கு வருபவர்கள் கூட்டம் வேறு அலைக்களிக்கும். இப்போது எங்கு பார்த்தாலும் கார், பைக், ஆட்டோ என்று எங்கும் நெரிசல் நெரிசல் நெரிசல். சமயங்களில் மூச்சு விடக் கூட திணறுகிற மாதிரிக் கூட்டம்!

மேம்பாலத்தைத் தாண்டினால் அது ஒரு தனி உலகம். ஏகத்துக்கும் அண்ணாநகர், KK நகரிலும் கடைகள், ஹோட்டல்கள் , மால் என்று கலகலக்கிறது!

எப்படியோ விடிந்ததும் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளித்து, சாமி கும்பிட்டு, புதுத்துணி உடுத்தி, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி, பட்டாசு சத்தத்துடன் பலகாரங்கள் சாப்பிட்டு கோவில்களுக்கும், உறவு மற்றும் சொந்தகளைப் பார்க்கவும் என்று கிளம்பும் ஒரு கூட்டம்,


இல்லை இன்றும் தொல்லைக்காட்சி முன் தான் தவம் கிடப்பேன் என்று அடம் பிடிக்கும் ஒரு கூட்டம்,

இன்று என் தலைவர் படம் ரிலீசாகிறது , முதல் ஷோ பார்க்க வேண்டும் என்று அநியாயத்திற்கு காசு போட்டு, பாலாபிஷேகம், சூடம், மாலை என்று தெரியாத ஒருவருக்குப் படையல் செய்து தலைவர் காசு வாங்கி நடித்தப் படத்தை காசு கொடுத்துப் பார்த்து உணர்ச்சிவசப்படுவதில் மக்களை அடித்துக் கொள்ளவே முடியாது.

அடுத்தவர் வீட்டுச் சுவற்றில் வெங்காய வெடி, தெருவில் தௌசண்ட் வாலா வெடிப்பேன் என்று பொடிப்பையன்கள் கூட்டம் ஆனந்தமாக கொண்டாடும் தினம் தான் இந்த தீபாவளி தினம்!

வயதிற்கேற்ற மாதிரி சீனி வெடி, லட்சுமி வெடி, வெங்காய வெடி, சரம், ராக்கெட் என்று ஊதுவத்தியை எடுத்துக் கொண்டு பக்கத்தில் போய் பயந்து பயந்து வெடி வைக்க,

சிறு குழந்தைகள் பொட்டுப் பட்டாசு, சுத்தியல் சகிதம் வலம் வர, அம்மா மடியில் உட்கார்ந்து பாம்பு பட்டாசு பார்த்துக் கண்கள் விரிய, சங்குச்சக்கரம், புஸ்வாணம், கம்பி மத்தாப்பு என்று இரவு வரை நீடிக்கும் இந்த நாள் ஒரு இனிய நாள். 'டபடப' வென்று சுற்றும் சங்குச்சக்கரம்  'படார்' என்று எதிர்பாராமல் வெடிக்கும் போது பயத்துடன் ஒதுங்கியும், மேலே போ மேலே போ என்று தான் சொல்லியதால் தான் புஸ்வாணம் மேலே போயிற்று என்று  கைகொட்டிச் சிரித்தும் குழந்தைகளும் பெரியவர்களும் கொண்டாடும் ஒரு அழகிய தினம்!


காலங்கள் மாறினாலும் நினைவுகள் மாறாத இனிய நாள்!

அனைவருக்கும் என் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!






Thursday, October 17, 2013

வட அமெரிக்காவில் இலையுதிர் காலம்

பள்ளி நாட்களில் புத்தகத்தில் படித்த, கேள்விப்பட்ட இயற்கையின் பருவசுழற்சி மாற்றங்களை இங்கே வந்த பின்னர்தான் முழுமையாக அனுபவிக்க முடிந்தது.கனடா, அமெரிக்காவின் வட மாநிலங்களிலும்,மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் முழுமையான பருவசுழற்சியைக் கண்டு களிக்கலாம்.

அதிலும் குறிப்பாக செப்டம்பர் மாத இறுதியிலிருந்து அக்டோபர் மாதம் வரை திரும்பிய திசை எல்லாம் இயற்கை அன்னை வாரி இறைத்த வண்ணக் கலவைகள் தீட்டிய ஓவியங்கள் மரங்கள், செடிகள், கொடிகள் என்று வஞ்சனையில்லாமல் வியாபித்திருக்கும் அழகைக் காண கண்கோடி வேண்டும்.

இந்தக் காலத்தில் குளிருமில்லாமல் அதிக வெயிலும் இல்லாமல் பருவநிலை 'குளுகுளு'வென்றிருக்கும். பல்வேறு ஜீவராசிகளும் பனிக்காலம் வருவதற்கு முன் தங்களுக்கு வேண்டிய உணவுகளைத் தேடித்தேடிச் சேகரிக்கும் காலமிது என்பதால் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும். அதிலும் சுறுசுறுப்பாய் பறந்து திரியும் பறவைகளின் இன்னிசைக் கீதமும் ஒர் இனிய கச்சேரிக்கு நிகரானது.

வெயிலின் தாக்கம் குறைய ஆரம்பித்தவுடன், மரங்களும் தங்களைப் பனிக்காலத்திற்குத் தயார் செய்து கொள்ளும் முயற்சியாக இலைகளை உதிர்க்க ஆரம்பித்து விடும்.பச்சை நிற இலைகள் எல்லாம் மெல்ல மெல்ல இளம் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று மாறும் போது வண்ணக்கலவைகளாகப் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ள ஆரம்பிக்கும்.

வீடுகளைச் சுற்றியும், தெருக்களின் ஓரங்களிலும், சாலைகளின் அடர்ந்த மரங்களிலும், நீர் நிலைகளின் பின்புலத்திலும், மலைகளிலும் என்று ஓரிரு மாதங்கள் எங்குப் பார்த்தாலும் இயற்கை அன்னையின்  இத்தகைய வண்ண ஓவியங்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கும்.

இந்த வர்ண ஜாலங்களைக் கண்டுகளிக்க ஏதுவாகப் பலரும் பிரயாணம் செய்யும் வகையில் மலையோர ரயில்களும், மலைப்பிரதேசங்களும் ஆயத்தமாக இருக்கும். Vermont, NY மாநிலங்களைச் சுற்றி இருக்கும் மலைச் சூழந்த காடுகளின் அழகை ரசிக்க வேண்டிப் பலரும் படையெடுக்கும் நேரமிது.

ஒவ்வொரு மரத்திலும் பல வண்ண வண்ண இலைகள், அவை தரையெங்கும் உதிர்ந்துக் கிடப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதன் அழகே அழகு!

இந்தப்  பருவத்தில் வரும் மழையும், காற்றும் இலைகளை உதிர வைத்து இலையுதிர்காலம் முடிந்தது, பனிக்காலத்திற்குத் தயாராகுங்கள் என்று மொட்டையாய் நிற்கும் மரங்களையும், மனிதர்களையும்  பார்த்து சொல்வது போல் இருக்கும்.
காலையில் கண் விழித்துப் பார்த்தால் மூடுபனியினால் போர்த்தப்பட்ட புல்வெளிகள், நீர்த்தெளித்து விட்டதைப் போல் சாலைகள், 'சில்'லென்ற அதிகாலைத் தென்றல், புகைமூட்டம் போல் இருக்கும் அடர்ந்த மூடுபனியில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மஞ்சள் நிறத்தில் 'தகதக'வென்று ஜொலிக்கும் தங்கச் சூரியன், சமயங்களில் காய்ந்த இலைகளை வாரி அணைத்து 'உய்உய்' என்று விசிலடிக்கும் காற்று, நான் மட்டும் உங்களுக்கு இளைத்தவனா என்று கருமேகங்கள் புடை சூழ, இடி மின்னலுடன் மழை, அதன் பின்னே தோன்றும் அழகிய வானவில், அந்நேரத்து வானத்தின் வர்ண ஜாலங்கள், அதன் பின்னணியில் வண்ண மரங்கள் என்று இந்த அழகு இன்னும் கொஞ்ச நாட்கள் நீடிக்காதோ என்று ஏங்க வைக்கும்.

பல தோட்டங்களில் கொத்துகொத்தாகக் காய்த்துத் தொங்கும் ஆப்பிள் பழங்களை நாமே பறித்து ருசி பார்த்து விலைக்கு வாங்கலாம். பெரிது பெரிதாக உருண்டோடி காய்த்திருக்கும் பூசணியை குடும்பம் குடும்பமாய் குழந்தைகளோடு பறித்து மகிழும் நிறைவான தருணங்கள், சாப்பிடும் அனைவரையுமே அடிமை ஆக்கி விடும் ஆப்பிள் சைடர் டோனட்ஸின் சுவை என்று இனிமையான காலம் !

வீடுகளின் முன் சேர்ந்திருக்கும் இலைகளின் மேல் புரண்டு விளையாடியும், ஒருவர் மேல் ஒருவர் இலைகளைத் தூக்கிப் போட்டுக் கொண்டு ஆடும் குழந்தைகளுக்கு இந்தக் காலம் இன்னும் ஒரு பொற்காலம்!


'தளதள'வென்று பச்சை இலைகளுடன் இருந்த மரங்கள் வண்ணங்கள் மாறி இலைகள் உதிர்ந்து காட்சியளிக்கும் இலையுதிர்காலம் இயற்கையின் திருவிளையாடல்களில் ஒன்றே!

ஒவ்வொரு வருடமும் பருவங்கள் மாறி மாறி வந்தாலும் அதன் அழகு வெவ்வேறாக இருப்பது போல் பிரமிக்க வைக்கிறது!


இலையுதிர்காலம் என்பது ஒரு பருவ சுழற்சியின் முடிவு என்பதைக் காட்டிலும், அடுத்து வரப் போகும் புதிய துவக்கத்தின் அடி உரமாகவும், அதற்கான தியாகமாகவும் அமைகிறது....இயற்கை நமக்கு உணர்த்தும் இந்தச் சின்ன உண்மையைப் புரிந்து கொண்டால் மனிதம் தழைக்கும். புதிய தலைமுறைகள் புகழோடு வாழ முடியும்.

Sunday, October 13, 2013

கொலு தரிசனம்

விநாயகச் சதுர்த்தி முடிந்ததும் அடுத்து வரப்போகும் கொலுவிற்கான யோசனைகள் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். அதிலும் குறிப்பாக எத்தனை படிகள், எத்தனை பொம்மைகள், எந்த சுவாமி சிலையைச் சேர்ப்பது, கொலுவை பார்க்க வருகிறவர்களுக்கு என்ன கொடுப்பது என எல்லா திசையிலும் யோசனைகள் பறக்கும். வீடுகளிலேயே இந்த நிலமை என்றால் கோவிலைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

எப்போதும் ஒரே மாதிரி செய்யாமல் விதவிதமாக சிந்தித்துக் காலத்திற்க்கேற்ற மாதிரி கொலுப்பொம்மைகளை வைத்து அலங்கரிப்பதில் அவரவருடையத்  தனித்தன்மை புலப்படும் நேரமிது.

என் சிறுவயதில் தெருக்கொலுக்கள் மிகவும் பிரபலம். எத்தனை முறை தான் அடுத்தவர் வைத்த கொலுக்களைப் பார்த்துக் கொண்டிருப்பது? நாமும் செய்தால் என்ன என்று அம்மாவிடம் மன்றாடி, எங்கேயோ கட்டிக் கொண்டிருந்த வீட்டின் முன் கொட்டியிருந்த மணலை அள்ளிக் கொண்டு வந்து பார்டர் கட்டி, ஒ ஓ! பூக்கள் வேண்டுமே என்று நடையாய் நடந்து நடனா தியேட்டர் பக்கம் போய் (அவ்வளவு தூரம் போனால் தான் மரங்களைப் பார்க்க முடியும் அந்தக் காலத்தில்) பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து, பார்டரை அழகு பண்ணி முடிய,

ஒரு பக்கம் மணலை குவித்து மலை மாதிரி செய்து நடுவில் ஒரு குகை, அதன் வழியே போகும் ரயில், ஓகே, மலை மேல் முருகனை அமர வைத்தாயிற்று. ம்ம்ம். பூங்கா வைத்தால் நன்றாக இருக்குமே. ஒரு பெஞ்ச், இரண்டு பேர் நடக்கிற மாதிரி, குழந்தைகள் விளையாடுகிற மாதிரி பொம்மைகள் வீட்டிலிருந்து கொலுவிற்கு வந்தாயிற்று!

கால், சிறகு உடைந்த பறவைப்  பொம்மைகள் எல்லாம் அன்று கொலுவில்!
ஒரு செட்டியார் பொம்மையைச் சுற்றி அரிசி, பருப்பு இத்யாதிகளுடன் ஒரு கடை :)

'டபடப' வென்று ஒரு சிறிய மோட்டார் படகு ஒரு கிண்ணத்தில் :) இன்னொரு கிண்ணத்தில் மீன், வாத்துப் பொம்மைகள். மறக்காமல் உண்டியல். இது தான் எங்கள் கொலு.

இதைப் பார்த்து உண்டியலில் காசும் போட்டுச் செல்வார்கள்!அது ஒரு காலம்!

பிறகு கோவில்களில் நடக்கும்கொலுக்களுக்குச் செல்ல ஆரம்பித்து அம்மன் தரிசனம் செய்து, அலங்காரங்களில் மனதைப் பறிக் கொடுத்தது இன்னுமொரு காலம்!

அமெரிக்காவில் வந்த பிறகும் இந்தப்  பாரம்பரியத்தை விடாமல் செய்து வரும் தோழிகளின் அழைப்பின் பேரில் அவர்கள் வீட்டுக்கும் சென்று பார்த்து விட்டு வருவது இந்தக் காலம்!

வேலைக்கும்போய் விட்டு வந்து, வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு, தெரிந்த குடும்பங்களை அழைத்து மஞ்சள், குங்குமம், வெத்தலை, பாக்கு, பரிசுப் பொருட்கள், குழந்தைகளுக்குத் தனியாக என்று பார்த்துப் பார்த்து அவர்கள் செய்யும் வேலையில் இருக்கும் ஈடுபாடு ரொம்பவே நெகிழச் செய்யும்.

இது மட்டுமா? குழந்தைகளும், பெரியவர்களும் சுவாமிப் பாட்டுக்கள் பாடி, பொழுதை இன்னும் இனிமையாக்குவார்கள்.

வந்தவர்களுக்கு அருமையாக உணவும் வழங்கி காது, மனம், வயிறு என்று அனைத்தையும் குளிர வைக்கும் இந்நன்னாளில் குழந்தைகளும் ஆனந்தமாக கொலுக்களை கண்டுகளிக்க ஒரு வாய்ப்பு.

விதவிதமான பொம்மைகள், கிருஷணர் பிறப்பு, நர்த்தனம், கோபியர் லீலை, அறுபடை வீடு முருகன், தசாவதாரம், அஷ்ட லக்ஷ்மிகள், மும்மூர்த்திகள், விதவிதமான பிள்ளையார் சிலைகள், பனிக்காலம்,  குழந்தைகளை கவர டிஸ்னி பொம்மைகள், கிரிக்கெட், மறந்து போய்க் கொண்டிருக்கும் மாட்டு வண்டி, மரப்பாச்சி பொம்மைகள், இந்தியத் திருமணங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.


இதையெல்லாம் கண்டுகொள்ள வாய்ப்பைத் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!



Friday, October 11, 2013

தெற்கு கிருஷ்ணன் கோவில்

'வெட தௌரோ' என்று சௌராஷ்ட்ரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் மதுரையில் மிக பிரசித்தம். அதிலும் புரட்டாசி சனிக் கிழமைகளில் இன்னும் விஷேசமாய் இருக்கும். துளசி, பச்சைக் கற்பூரம், பூமாலைகள் மணக்க கோலாகலமாய் பூஜைகள் நடக்கும். என் சிறு வயதில் பாட்டி வீட்டிலிருந்து அடிக்கடி விஜயம் செய்த கோவில்களில் இதுவும் ஒன்று.

சென்ற முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கோவிலில் புதிதாக தங்கரதப் புறப்பாடு நிகழ்ச்சி வெகு சிறப்பாக இருப்பதாகவும், முடிந்தால் நீயும் செய்யலாம் என்று அக்கா சொல்லி இருந்ததால், என் மகளின் பிறந்த நாளை ஒட்டி கோவில் நிர்வாகத்திடம் நாள், நேரம் எல்லாம் கேட்டு விட்டு அப்படியே சிறிது எக்ஸ்ட்ரா பிரசாதத்திற்கும், ஹனுமாருக்கு வடைமாலைக்கும் சேர்த்துப் பணம் கட்டி விட்டு வந்தோம்.

ஒரு சனிக்கிழமை அன்று புறப்பாடு என்று முடிவாயிற்று. மாலையில் அர்ச்சனைக்கு வேண்டிய சாமான்கள் சகிதம் உறவினர்கள் சிலருடன் கோவிலுக்குப் போனோம். என் மகளுக்கு அந்தக் கோவில் புதிது! கும்பாபிஷேகம் முடிந்த கோபுரங்கள் 'பளிச்' என்று வண்ண மயமாக!

கோவில் வாசலில் பூ வியாபாரம், காலணிகளைப் பார்த்துக் கொள்பவர்கள், திருவோடு ஏந்தியவர்கள்!, கோவில் வாசலில் உடைக்கும் சிதறு தேங்காய்க்கு என்று எப்போதும் போல் ஒரு சிறு கூட்டம்!

கருப்பண்ணச்சாமியை கும்பிட்டு விட்டுக் கோவில் உள்ளே சென்றவுடன் இடப்பக்கத்தில் நவக்கிரகங்களுக்கு அருகில் சுடச்சுட நெய் வழிய வெண்பொங்கல் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள் என் கணவரின் நண்பர்கள் சிலர். எங்களை அந்த இடத்தில் எதிர்பார்க்காத அவர்களிடம் சென்று , என்ன எப்படி இருக்கிறீர்கள் என்றவுடன் நீங்களா, இங்கே எப்படி, எங்கே விஷ்வேஷ் என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டுத் தொன்னையில் பொடித்துப் போட்ட மிளகு, வறுத்துப் போட்ட முந்திரி, கருவேப்பிலை, குழைய விட்ட அரிசியில்...என்று வாயில் வைத்தாலே கரையும் வெண்பொங்கலை கொடுக்க நானும் என் மகளும் அனுபவித்துச் சாப்பிட்டு விட்டு, ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம் கூட கொடுத்திருக்கலாம் என்று எங்களுக்குள் சொல்லிக் கொண்டு அவர்களையும் சுவாமி புறப்பாட்டிற்கு அழைத்து விட்டு உள்ளே சென்றோம்.

கோவில் சுத்தமாகத் தூண்கள் எல்லாம் விபூதி, குங்குமம் என்று பக்தர்களால் அலங்கரிக்கப்படாமல் பார்க்க நன்றாக இருந்தது. வலப்பக்கத்தில் நாமம் போட்ட கணபதி !!!, நன்றாகத் தலையில் குட்டிக் கொண்டு, அப்படியே ஸ்ரீராமஜெயம், வெற்றிலை, வடை மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட என்னுடைய அபிமான ஹனுமார் இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்க, அவரை வணங்கிச் சுற்றி வந்தோம். ஹனுமாரைச் சுற்றி வர இருக்கும் மிகவும் குறுகலான இடத்தில் இன்றும் என்னால் சுற்றி வர முடிகிறது என்று சந்தோஷமாக இருந்தது! அதை விட அவரைச் சுற்றி இருக்கும் சுவர்களில் எண்ணைப் பிசுக்கு இல்லாமல் இருந்ததைப் பார்க்க டபுள் சந்தோஷம்! எங்கள் முறை வந்து அர்ச்சனை, வடை மாலை பூஜைகள் முடிந்தவுடன்,

தங்கரதப் புறப்பாட்டை முடித்து விடலாம் என்று சொல்ல, மேலேறிக் கோவிலுக்குள் சென்றோம். அதற்குள் தாயார், சக்கரத்தாழ்வார், ராமர், லக்ஷ்மணர், சீதா தேவி, பள்ளிகொண்ட பெருமாள், பளிங்கினால் செய்த ராதா கிருஷ்ணா, லட்டு கோபால், லக்ஷ்மி ஹயக்ரீவர், நரசிம்மர், கருடர் என்று சந்நிதிகளைச் சுற்றி வந்து விட்டோம்.


அழகிய புதிய ஜொலிக்கிற தங்கரதத்தில் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவிகளுடன் மலர் அலங்காரத்தில் இருக்க, அர்ச்சகர்களும் கோத்திரம், நட்சத்திரம், பெயர்களைக் கேட்டு அர்ச்சனை செய்ய, என் தம்பிகளும் மாலை, பரிவட்ட மரியாதைகளை ஏற்றுக் கொண்டு அர்ச்சனையும் முடிய,

நாதஸ்வரம், தவில் இன்னிசை முழங்க தேர் புறப்பாடு பெருமாள், தாயார் சந்நிதி வழியாக அருமையாக நடந்தது. அனைத்து பூஜைகளும் மனநிறைவுடன் நடக்க, சந்நிதிகளை வலம் வந்து பிறகு பூக்கள் , தீர்த்தம், பிரசாதங்கள் வாங்கிக் கொண்டு சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள உட்கார, அதற்குள் பிரசாதம் கேட்டு ஒரு கூட்டம் மொய்க்க ஆரம்பித்து விட்டது.

அம்மாவும் வடை, சக்கரைப் பொங்கல் பிரசாதங்களை கோவிலுக்கு வந்தவர்களுக்குக் கொடுக்க ஆரம்பிக்க கூட்டம் திடீரென்று அதிகமாகி விட்டது :(

ஒரு வழியாக அதை முடித்து விட்டு வந்திருந்த உறவினர்களுக்கும் கொடுத்து விட்டு, நிமிர்ந்தால் பூஜை செய்த அர்ச்சகர்களுக்கு, தவில், நாதஸ்வரம், தீவட்டி எடுத்து வந்தவர், அவர், இவர் என்று கோவில் வாசலில் இருப்பவர் வரை வரிசையாகப் பணம் கேட்டு நொச்சு. அன்பாக கொடுப்பதை வாங்கிக் கொள்ளாமல் அடாவடியாக கேட்டதால் கொஞ்சம் தாராளமாகவே கொடுக்கும் எனக்கு எரிச்சல் தான் வந்தது.



அதே போல், புறப்பாடு செய்பவர்கள் நிம்மதியாகத் தங்கரதம் இழுக்க முடியவில்லை. அன்று ஏகப்பட்ட பூஜைகள் என்று நல்ல கூட்டம். நான் நீ என்று அவர்களும் சேர்ந்து ஓராயிரம் கைகள் வந்து விழுந்து ரதம் இழுக்க, பாவம் ரதம்! ஒரே இழுபறியாகி கடைசியில் கூட்டத்திற்குப் பயந்து நாங்கள் ஒதுங்க வேண்டியதாகி விட்டது!

இதையெல்லாம் கோவில் நிர்வாகம் கவனித்தால் தேவலை. காசு வாங்குவதோடு கடமை முடிந்து விட்டது என்று அலவலகத்தில் ஒதுங்கி இராமல், கோவிலுக்குள் நடப்பதையும் கண்டு கொண்டால் நலம்.

ஹரி ஓம் !!!!



Tuesday, October 8, 2013

திக்...திக்...திக்...4

ஜனவரி மாதம், 2000 வருடம்.

அமெரிக்காவில் யூட்டா மாநிலத்திலிருந்து நியூயார்க்கிற்கு வேலை நிமித்தமாக குடும்பத்துடன் இடம் பெயரவேண்டிய சூழ்நிலை. கடும் பனிமழைக் காலம். விமான வசதி இருந்தும் பல மாநிலங்களை கடந்து போகும் ஒரு அனுபவம் நன்றாக இருக்குமே என்று காரிலேயே கிட்டத்தட்ட 2,200 மைல்கள் போவது என்று முடிவாயிற்று. ஒரே நெடுஞ்சாலை தான். அதனால் பிரச்சினை இருக்காது என்று பல சாமான்களையும் மூட்டைக்கட்டி அனுப்பி விட்டு, தேவையானது மட்டுமே காரில் ஏற்றிக் கொண்டு நண்பர்களிடமும் விடைபெற்று ஒரு நல்ல நாளில் புறப்பட்டோம்.

முதலில் யூட்டாவிலிருந்து வயோமிங் என்ற மாநிலம் வழியே ஆரம்பமானது பயணம். வயோமிங் ஒரு கிராமம் போலத்தான். நிறைய ஆடு, மாடு, குதிரைப்பண்ணைகளும், விளைநிலங்களும் தான் பார்க்க முடிந்தது. பனிக்காலத்தில் என்ன விளைச்சல் இருக்க முடியும்? தெருவில் ஊர்ந்து செல்லும் வாகனங்களைத் தவிர ஒரு ஜனமும் பார்க்க முடியாது!

அப்படியே ஒரு வழியாக அழகான கொலராடோ மாநிலத்தை வந்தடைந்தோம். ஜனவரி மாதம் வெள்ளைப்பனி போர்த்திய மலைகள் தான் எங்கு பார்த்தாலும். தேசிய நெடுஞ்சாலையில் எங்களுடன் பெரிய,பெரிய கனரக வாகனங்களும் சில கார்களும் மட்டும் தான் பயணித்துக் கொண்டிருந்தது. சில இடங்களில் பனிமழையும் கொட்டிக் கொண்டிருக்க, வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதற்கும் அன்று இரவு தங்குவதற்கும் நல்ல இடமாகப் பார்த்து இருந்து விட்டோம். நல்ல குளிர் வேறு.

அடுத்த நாள் காலையில் விரைவில் எழுந்து மீண்டும் பயணம் தொடர, நெப்ரஸ்கா மாநிலம் வந்து சேர்ந்தோம். சாலைகள் முழுவதும் பனிக்கொட்டி அது உறைந்து கார் வழுக்கிக் கொண்டு போனது. எங்களைத் தவிர கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எந்த உயிரினமும் இல்லை. நானும் என் மகளும் காரின் பின் சீட்டில். ஒழுங்காத்தானே போய்க்கிட்டிருந்துச்சு என்று நினைக்கும் பொழுதே 'சர்'ரென்று ஒரு வழுக்கல்! என்ன ஆகிறது என்று நினைப்பதற்குள் என் கணவரும் சீட்பெல்ட் போட்டுக்கோ என்றவுடன் ஒரு பதட்டம். black ice-ன் மேல் கார் போனால் அவ்வளவு தான்! ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று மட்டும் உணர முடிந்தது.

என் மகளோ நடக்கும் விபரீதம் எதுவும் தெரியாமல் படங்கள் வரைந்து கொண்டிருந்தாள். மெதுவாக என் கணவரிடம் பார்த்துப் போங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வண்டி 'விர்'ரென்று யூ-டர்ன் அடித்து எதிர் திசையில் போக ஆரம்பித்தது.

எங்கள் இருவருக்கும் திக்...திக்...திக்...என்ன செய்வது என்றே தெரியவில்லை. எதிர்த்தாற்போல் ஏதாவது வண்டி வந்தால் நாங்கள் அம்பேல். அந்த ஐஸாகிப் போன சாலையில் பிரேக் போட்டால் பெரிய விபத்து நடக்கும் கார் எங்காவது முட்டிப் போய் நிற்கட்டும் என்று என் கணவரும் கார் போன போக்கில் விட, அப்போது பார்த்து தான் ஒரு பெரிய ட்ரக்கும் வெகுதூரத்தில் தெரிய என்ன செய்வது என்று தெரியாமல் நான் கடவுளை வேண்ட, என் கணவரும் அவருக்கு இருக்கும் பதட்டத்தை வெளியில் காண்பிக்காமல் கடவுள் விட்ட வழி என்றிருக்க, ட்ரக்கும் அருகில் தெரிய,என்னென்னவோ நினைவுகள். அய்யோ யாரும் தெரியாத ஊரில் ஏதாவது ஆகி விட்டால் என்று என் மகளை பார்த்துக் கண்கலங்கி நான் உட்கார்ந்திருக்க,

ஷன நேரத்தில் எங்கள் கார் பழையபடி தானகவே சரியான பாதையில் போக ஆரம்பிக்க, என்ன நடக்கிறது, எப்படி நடந்தது என்று ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை - ஏதோ ஒன்று நடக்க இருந்து அதிலிருந்து நாங்கள் மீண்டதே பெரிய விஷயம். மனதிற்குள்ளே கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு, உடனே அடுத்து வந்த ஊரில் போய் இறங்கி, கார் மெக்கானிக் கடைக்குப் போக, பதட்டத்துடன் நாங்கள் வருவதையும், அந்நியர்களாக இருப்பதையும் பார்த்து என்ன ஏது என்று விவரம் கேட்டு, வண்டியில் அதிக சாமான்கள் இருப்பதையும் வண்டிச்சக்கரத்தில் காற்று குறைவாக இருந்ததால் தான் வண்டி இப்படி ஆடிப் போய் விட்டது, சாலைகளும் பனியினால் உறைந்து போயிருக்கிறது, பத்திரமாக போங்கள் என்று காசு வாங்காமல்  சரி பண்ணி கொடுத்த பிறகு தான் போன உயிர் திரும்ப வந்தது.

அப்புறம் போட்ட திட்டப்படி பல இடங்களிலும் நிறுத்தி சுற்றிப் பார்த்து விட்டு ஐந்து நாட்கள் ஓட்டிக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தோம் :)

அதை இன்றும் நினைத்தால் திக்...திக்...திக்...
































Wednesday, September 25, 2013

திக்....திக்...திக்...3

இது நடந்தது 1998 ஆம் வருடம்.

என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் அவளுக்குத் தெரியும். ரயில் நகர ஆரம்பித்தவுடன் ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தாள். கால்நடைகள், பஸ்கள், வேன்கள், மனிதர்கள் என்று எல்லாவற்றையும் கடந்து வைகை ஆற்‌றின் மேல் போகும் பொழுது 'தடதட' என்ற சத்தத்தைக் கேட்டவுடன் பயந்து வாயிலில் விரலை சூப்பிக்கொண்டே என் மடியில் படுத்துக் கொண்டாள். என் தம்பியின் நண்பனின் குடும்பமும் பேச்சுத்துணைக்கு இருக்க நன்றாகவே ஆரம்பமானது அந்த பயணம்.

வைகைஆறு, மதுரா கோட்ஸ், பாத்திமா கல்லூரி தாண்டிய சில நிமிடங்களில் 'கிரீச்' என்று ரயில் சக்கரங்கள் தடவாளங்களில் உரசிக் கொண்டு அதிரடியாய் நிற்க, என்ன காரணம் என்று தெரியாமல் பலரும் முணுமுணுக்க, பல ரயில்களும் அங்கே நிற்கும் போது தான் ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் என்ன என்று தெரியவில்லை. ரயில் நகரும் அறிகுறி தெரியாமல் போகவே, ஆண்கள் சிலர் இறங்கி விவரம் கேட்க போனார்கள். போனவர்களும் வந்தார்களா, அதுவும் இல்லை. உட்கார்ந்திருந்த பயணிகளுக்குப் பொறுமை போய்க் கொண்டிருக்கும் பொழுது தான், ரயில் போகும் பாதையில் குண்டு வைத்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தது :(

விஷயத்தை கேள்விப்பட்டவுடன் அனைவர் முகத்த்திலும் ஒரு பீதி. இனம் புரியாத மனக்கலக்கம்.

அன்று முகம் தெரியாத ஒரு மனிதர் ரயில்பாதையில் இருந்த பொருளைப் பார்த்து, சந்தேகத்தின் பேரில் போலீசை அழைத்து செய்தியை சொல்லி, அது வெடிகுண்டு தான் என்று தெரிந்ததும் போலீசும் அவர்கள் கடமையை செய்து பல இழப்புக்களும், சேதாராங்களும் நடக்காமல் பார்த்துக் கொண்டது நாங்கள் செய்த அதிர்ஷ்டம் தானே? அன்று அந்த மனிதர் தான் பலருக்கும் கடவுளாகத் தெரிந்தார், தெரிந்திருப்பார்.

அந்த நேரத்தில் வைகை, பாண்டியன் மற்றும் வேறு இரண்டு ரயில்கள் அந்த பாதையைக் கடக்கும், நிறைய உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தலாம் என்ற கொடியவர்களின் திட்டம் கடவுளின் அருளால் நடக்காமல் போனது எங்களின் பாக்கியமே!

அதற்கு முன்பு தான் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு நடந்திருந்தது. அப்படி மட்டும் வெடித்திருந்தால் என்றோ தலைப்புச் செய்தியாகிப் போயிருப்போம் :(

எப்படியோ கோயம்புத்தூர் போய் எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு அடுத்த சில வாரங்களில் நானும் என் கணவரும் பாண்டியனில் சென்னைக்குப் போய்க் கொண்டிருந்தோம்.

ஒரு வித பயத்துடன் தான் நான் இருந்தேன். பெட்டியில் அனைவரும் சிநேகமாக பேசிக் கொண்டே இருக்கும் பொழுது, என் கணவரும் எங்களின் 'சமீபத்திய ரயில் பயணம்' பற்றிச் சொல்ல, எங்களுடன் இருந்த இருவர்(அப்போது தான் அவர்கள் போலீஸ் என்று தெரிய வந்தது!) அவர்களுக்கருகில் இருந்த ஒரு பெட்டியை காட்டி இது என்ன தெரியுமா என்று கேட்க, என்ன என்று ஆவலுடன் நாங்களும் கேட்க அவர்கள் பிரித்துக் காட்டினால் செயலிழக்கப் பட்ட அதே வெடிகுண்டு! என்ன தான் அவர்கள் பயப்படத்தேவை இல்லை என்று சொன்னாலும் என் தூக்கம் போனது போனது தான் :(

என்ன செய்ய? இன்றும் கூட ரயில் பயணம் என் தூக்கத்தை தொலைக்கும் ஒரு பயணம் தான்! சிறு வயதில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்று ஒவ்வொரு நொடியையும் அனுபவித்த ரயில் பயணம் இன்று ஊர் போய் சேரும் வரை 'திக் திக் திக்' தான் !




Saturday, September 7, 2013

திக்... திக்... திக்...2

அது கார்த்திகை மாதம் 1996ஆம் வருடம்.

ராஜபாளையம் மகளிர் கல்லூரி- கணினியியல் துறை மாணவிகளுக்குத் தேர்வு கண்காணிப்பாளராக செல்ல வேண்டிய கட்டாயம். ஐந்து நாட்கள் மதுரையிலிருந்து போய் வந்து விடலாம் என்று நினைத்து அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

ராஜபாளையம் நாய், மாம்பழம் தவிர வேறு எதுவுமேஅந்த ஊரைப் பற்றித் தெரியாத நிலையில் பழங்காநத்தத்தில் இருந்து பேருந்தில் பயணம். ஜன்னல் பக்கத்து இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டே திருப்பரங்குன்றம், திருநகர், ஆள் அரவமில்லாத கப்பலூர் வழியாக திருமங்கலம் தாண்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வரும் பொழுது பால்கோவாவின் மணமும் சுவையும் திரும்பி வரும் பொழுது வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இறங்கும் கூட்டத்தையும் முண்டியடித்துக் கொண்டு ஏறும் கூட்டத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, தூரத்தில் தெரிந்த ஆண்டாள் கோவில் கோபுரத்தையும் மனதில் வணங்கிக்கொண்டு ஒரு வழியாக ராஜபாளையம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்து விட்டேன்.

ஒன்பது மணிக்குத் தேர்வுகள் ஆரம்பித்துவிடும் என்று மனம் பரபரக்க, ஒரு ரிக்க்ஷாவில் ஏறி மகளிர் கல்லூரிக்குப் போக வேண்டும் என்று சொல்ல, போகும் வழியில் பெண் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு செல்லும் பல ஆட்டோ, ரிக்க்ஷாக்கள் திரை போட்டுக் கொண்டு போவதை பார்க்க வேடிக்கையாக இருந்தது! ஒரு வழியாக கல்லூரி வந்து சேர்ந்து நான் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு மதுரை காமராஜர் பல்கலையில் இருந்து வந்திருந்த கேள்வித்தாள் அடங்கிய பேப்பர் மிகவும் ரகசியமாக(!) வைக்கப்பட்டிருக்கும். தேர்வு கண்காணிப்பாளர் முன் தான் அதை பிரித்து கேள்விகளை மாணவிகளுக்கு கொடுக்க அவர்களும் எழுதி முடித்து விட்டுப் போக மீண்டும் பஸ் ஏறி பயணம். முதல் நாள் நன்றாகவே போனது.

இரண்டாம் நாள் மாலை மதுரைக்குத் திரும்ப பஸ் ஏறிப் புறப்பட்டு புழுதி பறக்க போய்க் கொண்டிருந்தது. நல்ல கூட்டம் வேறு. பனைமரங்களும், வறண்ட நிலங்களும், அங்கொன்று இங்கொன்றுமாய் தென்னை மரங்களும் என்று வேடிக்கைப் பார்த்த்துக் கொண்டே பஸ்சின் முதல் இருக்கையில் (கூட்டத்திலிருந்து தப்பிக்க!!!) உட்கார்ந்தால் கூட்டம் ஏறினாலும் சமாளித்துக் கொள்ளலாம், வேடிக்கையும் பார்க்கலாம் என்ற நினைப்பில் முதல் ஆளாய் ஓடிப் போய் இடம் பிடித்து ஏறி உட்கார்ந்து கொண்டேன். பஸ்சும் சிறிது நேரத்தில் புறப்பட்டு விட்டது.

சிறிது தூரம் தான்சென்றிருக்கும். திடீரென்று டிரைவர் பிரேக் போட்டு கண்டக்டரை எச்சரிக்கை செய்ய, எதிரில் பார்த்தால் தொலைவில் தீப்பந்தம், கம்பு, அருவா என்று கொலைவெறியுடன் ஒரு கூட்டம் பஸ்ஸை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது. இதையெல்லாம் படத்தில் தான் பார்த்திருக்கிறேன். ஏன், எதற்கு ஓடி வருகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே,
டிரைவரும் பக்கத்தில் ஏதோ சாதிக் கலவரம் போல. பஸ்ஸைத் திருப்பி விடுகிறேன். அனைவரும் இறங்கி கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.

கண்டக்டரும், எல்லோரும் இறங்கி ஓடி விடுங்கள். பஸ்ஸை கொளுத்தி விடுவார்கள் என்று சொன்ன பொழுது தான் அவர்களின் தீவிரம் தெரிந்தது. கலவரக்காரர்களும் யாரை வெட்டி சாய்த்து தங்கள் கோபத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று வெறியோடு ஓடி வருவதைப் பார்க்க...😢😢😢

எனக்கா அந்த ஊரில் யாரையும் தெரியாது. அவ்வளவு ஏன்? எங்கே நிற்கிறோம் என்று கூட தெரியாது! என் கூட சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு பல தாய்மார்கள். அனைவர் கண்களிலும் ஏதும் தப்பாக நடந்து விடக் கூடாதே என்ற பயம். குழந்தைகளுக்கு எப்படி தெரியுமோ, 'ஓ'வென்று அழ ஆரம்பித்து விட்டார்கள். அம்மாக்களுக்குப் பதட்டம். சே! நிம்மதியாக வேலை கூட செய்ய முடியவில்லையே என்ற கோபம் எனக்கு. நடத்துனரும் பணத்தை திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கும் ஒரு சண்டை.

சில நிமிடங்கள் வரை நிம்மதியாக இருக்கிறது என்று நினைத்த என் வாழ்க்கை ஒரு சில விஷக்கிருமிகளால் நொடியில்...

ஓடி வந்து கொண்டிருந்தவர்களின் கண்களில் கொலைவெறி! அவர்களுக்கும் மற்றொரு சாதியினருக்கும் கைகலப்பு நடந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதையாவது செய்து கலகம் செய்ய அனல் பறக்க ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அன்று உயிருடன் திரும்பினால் அதுவே பெரிய விஷயமாக பட்டது எனக்கு.

எங்கிருக்கிறோம் என்று எதுவுமே தெரியாமல் உயிருடன் திரும்ப முடியுமா என்ற அச்சத்துடன் இறங்கி பணத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டு அழும் குழந்தைகளை இழுத்துக் கொண்டு தாய்மார்களும், வயதான தாத்தா பாட்டிகளும் கூட்டத்தோடு கூட்டமாக வந்த வழியில் ஓட ஆரம்பிக்க, பேருந்தும் திரும்பி வேகமெடுக்க, ஆத்திரத்துடன் அறிவில்லாமல் பொதுச் சொத்துக்களை நாசம் பண்ணக் கிளம்பிய கூட்டம் வெறித்தனத்துடன் தொடர அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்ற ஒன்றை மட்டுமே நினைத்துக் கொண்டு ஓடி ரோட்டிற்கு வந்து நின்றால், ஒரு பேருந்தும் நிற்கவில்லை. குடிகார வெறி பிடித்த கூட்டமோ மிக அருகில். பார்க்கவே அருவருப்பாக இருந்தது.

போனால் போகிறதென்று ஒரு பேருந்து நிற்க, கண்டக்டரும் விரைந்து ஏறுங்கள் என்று சொல்லிக் கொண்டே பின்னால் வரும் பேருந்துகளுக்கு சைகையால் நிறுத்தாமல் போங்கள் என்று சொல்லி எங்கள் வண்டியும் அந்த இடத்திலிருந்து கிளம்பி விட அப்பாடா என்றிருந்தது.

டிக்கெட் எடுக்கும் பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் வரை தான் பஸ் போகும். அதற்குப் பிறகு ஒரே கலவரம். மதுரைக்கு இப்போதைக்கு பஸ் எதுவும் கிடையாது என்று சொல்ல படபடக்கிற இதயத்துடன் என் அடுத்த பிரச்னை ஆரம்பமாகியது 😓😓😓

அதற்கு பின்பு தான் யோசித்தேன் எங்கே போய் தங்குவது என்று. நல்ல வேளை! நாங்கள் பசுமலையில் குடியிருந்த பொழுது வீட்டு உரிமையாளரின் அம்மா, தங்கை என்று அவர் குடும்பம் முழுவதும் அங்கிருப்பது நினைவில் வந்தது. நானும் ஒரு முறை அவர்களுடன் அங்கு சென்றிருக்கிறேன். குத்துமதிப்பாக நடந்து எப்படியோ அவர்கள் வீட்டுக்குப் போய் சேர்ந்து விட்டேன். பீதியில் இருந்த என்னைப் பார்த்து அவர்களும் பதறிப் போய், என்ன ஏதென்று விசாரித்து விட்டு, கைப்பேசி இல்லாத அந்த காலத்தில், அவர்கள் தயவில் தொலைபேசி மூலம் வீட்டுக்குத் தகவல் சொல்லி அவர்களையும் கலவரமூட்டினேன். இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் அங்கேயே இரவில் தங்கி அடுத்த நாளும் பயத்துடனே, ராஜபாளையம் போய் மீண்டும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தங்கி, ஒரு வழியாக தேர்வுகளை முடித்து விட்டு மதுரை வந்து சேர்ந்தேன்.

மதுரை வரும் பொழுது கார்த்திகைப் பெருநாள். திருப்பரங்குன்றம் ஜொலித்துக் கொண்டிருந்தது. தொலைவிலிருந்து கோபுரத்தை பார்த்தவுடன் அப்பாடா, பத்திரமாக மதுரை கொண்டு வந்து சேர்த்து விட்டாய் முருகா என்று வேலைப் பார்த்து கும்பிட்டபடியே அம்மா வீட்டுக்கு வந்து சேர, மகளும், கணவரும் அங்கே இருந்தார்கள். என் அக்காவும், பாவாவும் கூட பெரிய கார்த்திகை விருந்துக்கு வந்திருந்தார்கள். எல்லோரிடமும் நடந்த நிகழ்சிகளை சொல்லி முடித்து, அம்மா கையால் சமைத்த சூப்பர் சாப்பாட்டை சாப்பிட்டவுடன் தான் திருப்தியாக இருந்தது. பின் அனைவரும், ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் போன் பண்ணி, எங்கள் நன்றியையும் தெரிவித்துக் கொண்டோம். அந்த கார்த்திகைத் திருநாள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத திருநாளாகி விட்டது எனக்கு :(

இன்றும் பஸ் எரிப்பு, கலவரம் என்று படித்தாலே திக்... திக்... திக்...தான்.

யாரும் இந்த சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் வீடு திரும்பனுமே என்று மனம் அடித்துக் கொள்ளும்.

பொதுச் சொத்துக்களை நாசம் செய்யும் இந்த விஷக்கிருமிகளை இன்னும் சில வியாதிகள் தங்கள் சுயநலத்திற்காக வளர்த்துக் கொண்டிருப்பதும் அதை நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிவதும் தான் வருத்தும் விஷயம்.

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...