Wednesday, October 31, 2018

இனிப்பு எடு கொண்டாடு

முதன் முதலில் 'ஹாலோவீன் டே' பற்றி கேள்விப்பட்டதெல்லாம் வீடு வீடாகச் சென்று ட்ரிக் ஆர் ட்ரீட் என்று கேட்க வேண்டும். ட்ரீட் கொடுப்பவர்கள் இனிப்பை கொடுப்பார்கள். ட்ரிக் என்றால் ஏதாவது செய்ய வேண்டுமாம். இதுவரை யாரும் ட்ரிக் செய்து பார்த்ததில்லை. கேட்டதுமில்லை. 

முதல் ஹாலோவீன் டே கனடாவில். மகளுடன் ஒரு பையை எடுத்துக் கொண்டு தெருக்களைச் சுற்றி வலம் வந்ததில் சாக்லேட், மிட்டாய்களுடன் பையும் நிரம்பி வழிய அவளுக்கோ ஒரே குஷி. அதுவும் எல்லாம் தனக்கே எனும் பொழுது கேட்கவா வேண்டும்? இன்னும் கொஞ்ச தூரம், இன்னும் கொஞ்ச வீடுகள், இன்னொரு பை வேண்டுமானால் எடுத்துக் கொண்டு வருவோமோ? ப்ளீஸ்ம்மா. இதுவே போதும். வீட்டுக்குப் போகலாம். நேரமாகிறது. வேண்டா வெறுப்பாக வீட்டுக்குள் வந்தவள் பையைக் கொட்டி அதிலிருந்த இனிப்புகளை பல நாட்களுக்கு ஆனந்தமாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்! அந்த வயதில் அதுவே பேரானந்தமாக இருந்திருக்க வேண்டும்!

ஆரம்பப்பள்ளி வயது வரை மகளுடன் நானும் கூடவே சென்று வருவது நடுநிலைப்பள்ளி வந்தவுடன் நின்று விட்டது. பின் தோழிகளுடன் கூட்டாக ஏதாவது ஒரு டிஸ்னி கதாபாத்திரம் இல்லையென்றால் பிடித்த கார்ட்டூன் பாத்திரமாக உடையணிந்து சென்று அந்த நாளை குஷியாக இரவு வரை கொண்டாடி வீட்டுப்பாடத்தையும் முடித்து விட்டு களைத்துப் போய் திரும்புவாள். பல அமெரிக்க நண்பர்கள் வீட்டில் ஸ்பெஷல் பார்ட்டி எல்லாம் வைத்து குழந்தைகளுடன் பெரியவர்களும் வீடுகளை அலங்கரித்து கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

இப்பொழுது மகனும் அவன் நண்பர்களுடன் இரவு வரை சுற்றித் திரிந்து ஒரு பெரிய பை நிறைய மிட்டாய்களுடன் வந்து தனக்குப் பிடித்த இனிப்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை பல மாதங்களுக்கு வைத்துக் வேடிக்கை பார்த்து ஒரு நாள் அலுத்துப் போய் அதை யாருக்காவது கொடுத்து விடுகிறேன். பெண் குழந்தைகளைப் போல இந்த நாளுக்காக பிரத்தியேகமாக ஆடைகளைத் தேடி அலைவதில்லை சுப்பிரமணியும் அவன் நண்பர்களும். சோம்பேறிகள்! அவர்களுடைய குறிக்கோள் அதிகப்படியான மிட்டாய்கள் மட்டுமே! ஜாலி பார்ட்டிகள்!

ஹாலோவீன் டேக்கு அடுத்த நாள் ஸ்கூல் லீவு விடணும்மா. டேய் நீ மொதல்ல ஹோம்ஒர்க்க முடி. அப்புறம் ட்ரிக் ஆர் ட்ரீட் போகலாம் மொமெண்ட்களும் உண்டு.அவன் வகுப்பு பெண்கள் வேண்டுமென்றே லேட்டாக வந்து இவனை வம்புக்கிழுக்கவும், சிறு குழந்தைகள் அழகழகு உடைகளில் மனதை கொள்ளை கொள்ளவும் தவறுவதில்லை.

வழக்கம் போல் மிட்டாய் நிறுவனங்களுக்கு குஷியான நாள். பார்களிலும் நல்ல கூட்டமிருக்கும்.

மொத்தத்தில் ஒரு இனிமையான மாலை.

அமெரிக்க கொண்டாட்டங்களின் பின்னணியில் எப்பொழுதுமே பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு இருக்கும். இந்த நாளும் அத்தகையது தான். குழந்தைகளின் மகிழ்ச்சியில் யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்நாளை கொண்டாடுவதில் அர்த்தமில்லை என்று ஒதுங்கிக்கொள்பவர்களும் உண்டு.

கொண்டாட்ட மனநிலையைத் தரும் எந்நாளும் எனக்கு உவப்பானதே!

தட் இனிப்பு எடு கொண்டாடு மொமெண்ட் 🙂


Happy Halloween!

🎃👻👹

Saturday, October 27, 2018

வரும் முன் காப்போம்...

அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தை “மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு” மாதமாக அனுசரிக்கின்றனர்.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், நோயிலிருந்து மீளும் வழிவகைகள் அது பற்றிய கலந்துரையாடல்கள், கருத்தரங்கங்கள் என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனக்கள் நாடு முழுவதும் இந்த மாதத்தில் நடத்ததுகின்றனர். 

மார்பக திசுக்கள் பால் சுரப்பிகள், பால் குழாய்கள் கொழுப்பு மற்றும் அடர் திசுக்களால் ஆனது. அடர்ந்த மார்பக திசுக்களை கொண்ட பெண்களுக்கு கொழுப்பு திசுக்களை விட அடர் திசுக்கள் அதிகமாக இருப்பதும் அதனை மேமோகிராமில் கண்டறிந்தவுடன் அல்ட்ராசவுண்ட், MRI பரிசோதனைகளில் புற்று நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் நோயின் தீவிரத்திலிருந்து காப்பாற்ற உதவும். வயதான பெண்களுக்கு அதுவும் மாதவிடாயின் இறுதிக்காலத்தை நெருங்கும் 66 சதவிகித பெண்களுக்கும் மாதவிடாய் முற்றிலும் நின்ற 25 சதவிகித பெண்களுக்கும் இப்பிரச்னை அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள். 

சமீபத்திய மாத இதழ் ஒன்றில் படித்தறிந்த தகவல் இது -எட்டுப் பெண்களில் ஒருவருக்கு அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய். அமெரிக்காவில் வருடாந்திர உடற்பரிசோதனையின் போது பெண்களுக்கு அதுவும் நாற்பது வயது மேற்பட்டோருக்கு மேமோகிராம் பரிசோதனை கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது. 

ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், தினமும் உடற்பயிற்சி, மாதாந்திர மார்பக பரிசோதனை, வருடாந்திர மேமோகிராம் பரிசோதனை, புற்று நோய் வரலாறு ஏதும் இல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நான்சி என்ற பெண்மணியின் சமீபத்திய மேமோகிராம் பரிசோதனையில் மார்பக புற்று நோயின் கடைசி கட்டத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளார். தனக்கு எப்படி வந்தது என்று திகைத்தவருக்கு கிடைத்த தகவல் மேமோகிராம் பரிசோதனையில் இனம் கண்டு கொள்ள முடியாத கான்சர் திசுக்களுக்கு அவருடைய அடர் மார்பக திசுக்களே புற்று நோய்க்கான காரணம் என்றும் கூறியுள்ளார்கள். 

இந்தியச் சூழலில் மார்பகப்புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியவில்லை. அதிக பொருட்செலவுகள் கொண்ட இம்மருத்துவ பரிசோதனைகள் எல்லோருக்கும் சாத்தியமில்லை. இதுபோல பெருகி வரும் புது நோய்களுக்காகவாது மருத்துவ காப்பீடுகள் என்பது அவசியமாகிறது. 

என்னுடைய நண்பர்கள் பலரும் மார்பக புற்று நோயிலிருந்து மீண்டு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். நோய் வருவதற்குப் பல காரணங்கள் இருப்பினும் சிலருக்கு நோயின் தீவிரம் மற்றும் பாதிப்பு அதிகமாகமாய் இருந்தால் உயிரிழப்பு தவிர்க்க முடியாதது என்பதால் பெண்கள் ஆரம்பநிலை பரிசோதனைகளின் மூலம் தங்கள் உடல்நிலையை கண்காணித்துக் கொள்வதே, நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது. 

வரும் முன் காப்போம்!

சோஷியல் மீடியா குழப்பங்கள்

படிக்கிறேன்னு சொல்லிட்டு கதவ மூடிட்டு கேம் விளையாடிட்டு இருந்தவன் திடீர்னு வேகமா வெளிய வந்தான். அடுப்ப எட்டி பார்க்கறான். Oven திறந்து பார்க்கறான். நாலா பக்கமும் ஒடறான். டபடபன்னு அலமாரிகள திறந்து பார்க்கறான். மூடியிருந்த சம்படங்கள்ல தேடறான்.

என்னடா தேடற?

சொல்லிடும்மா. எங்க ஒளிச்சு வச்சிருக்கே? எனக்குத் தெரியும்.

என்னத்த ஒளிச்சு வச்சிருக்கேன்?

நீ எங்கேயோ மறைச்சு வச்சிருக்க. ப்ளீஸ்ம்மா...

டேய். நான் எங்கடா பண்ணினேன்.

நான் பார்த்தேன்.

என்னத்த பார்த்த?

நீ இன்ஸ்டகிராம்ல போட்ட படத்தை பார்த்துட்டேன். ப்ளீஸ் கொடும்மா.

டேய் அது இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படம்டா.

வாட்??? திஸ் இஸ் நாட் ஃபேர்னு ஏமாற்றத்தோட போனவன் அங்க போய் இப்படி கமெண்ட் பண்ணி வச்சிருக்கு

Don’t be fooled, there were no scones made as of September 9th, 2018.

இந்த மார்க்கு தம்பி தான் நாம போட்ட போஸ்டுகளையும், படங்களையும் நமக்கே போட்டு ஞாகப்படுத்தறானே! அப்படி வந்ததுல ஒரு படத்த போட்டு யம் யம் யம் யம்மின்னு இன்ஸ்டால போட்டுட்டு என் வேலைய பார்த்தது குத்தமாயா?

நிம்மதியா ஒரு போஸ்ட் போட முடியுதா?

World Mental Health Day

இன்று பலருக்கும் மன அழுத்தம் பல்வேறு காரணங்களால் அதிகரித்து இருக்கிறது. கணவரால் 46% பெண்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் , 75% குடும்ப பொறுப்புகளைப் பெண்கள் கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் இதைத்தவிர பணிச்சுமை , நண்பர்களின் போர்வையில் வருபவர்கள் தரும் துன்பங்கள் தங்களைத் துயரப்படுத்துகிறதென ஆய்வில் கூறியிருப்பதாக வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். முடிவில், மனச்சோர்வுடன் இருப்பது குற்றமல்ல. அக்குறையை போக்கிக் கொள்ள தகுந்த மருத்துவ ஆலோசனையும்,மருந்துகளும், உடனிருப்பவர்களின் அன்பும், கரிசனமும் இருந்தால் போதும். தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அது உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளோரையும் மிகவும் பாதிக்கும். மனவருத்தத்துடன் இருப்பவர்களுக்காக பல ஹெல்ப்லைன்களை அணுகி ஆலோசிக்கவும் என்று கூறி பேச்சை முடித்தார்கள்.

நேற்று வேலை முடிந்து செல்லும் ஒரு பெண் புலம்பிக் கொண்டே இருந்தாள். பெண்களின் கையில் அதிகாரம் கிடைத்தால் எப்படியெல்லாம் ஆடுகிறார்கள். இதற்கு ஆண்களே பரவாயில்லை. பெண் பாஸ் கிடைத்தவர்கள் நரகத்தைத் தான் அனுபவிக்க வேண்டும் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே, சாரி! இன்றைய நாள் எனக்கு நன்றாக இல்லை. அலுவலகத்தில் ஒரே பிரச்சனை. வேலை செய்யவே பிடிக்கவில்லை. நாளை மீண்டும் அவளைப் பார்க்க வேண்டுமே என்று நினைத்தாலே படபடப்பாக இருக்கிறது என்றார். பாவமே! என்றிருந்தது எனக்கு. சில பதவி அதிகாரம் பிடித்த பெண்களை அறிவேன். இப்படியாகத் தான் பலருக்கும் மன உளைச்சல் தொடங்குகிறது. சிறு சிறு மனக்குறைகள் பேசித் தீர்க்க முடியாவிடில் பெரும் துயரத்திற்குத் தள்ளி விடும்.

வீட்டில் போதிய ஆதரவும் புரிந்து கொள்ளலும் கிடைக்காத பள்ளிகளில் தடுமாறும் குழந்தைகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பள்ளிகளும் பெற்றோர்களும் அதிக கவனம் எடுத்து வழிநடத்திச் செல்ல வேண்டிய பருவம் இது. இங்கு பள்ளிகளில் கூட தகுந்த மன ஆலோசகர்கள் மாணவர்களை கண்காணித்து வழிநடத்துகிறார்கள். இருந்தும் பல வேதனை மிகுந்த சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது. பள்ளியிலிருந்து ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் குழந்தைகளுக்குத் தியானம், யோகா போன்றவற்றை அறிமுகப்படுத்தி மனதை ஒருமைப்படுத்தும் வழிகளைப் பள்ளிகளில் ஆரம்பிக்க வேண்டும். சில பள்ளிகளில் வெற்றிகரமாக செய்தும் விட்டார்கள் என்று கூறினார்.

இன்றைய அவசர உலகில் நமக்கான நேரத்தை ஒதுக்கி நம்மை பல வழிகளில் மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. நமக்குள் இருக்கும் மனநோயை கண்டறிவோம். துன்புறும் நம் நண்பர்களுக்குத் தோள் கொடுத்து
உதவுவோம்.

பாடறியேன் படிப்பறியேன்...

அப்பாவின் நெருங்கிய நண்பர் கனிந்த முகமும், நெற்றியில் நாமமும் உயரத்திலும் குணத்திலும் வளர்ந்த மனிதர். என்னடா கொழந்தே எப்படியிருக்க ? இந்தா என்று கை நிறைய இனிப்பு பைகளுடன் வீட்டிற்கு வருவார். பாட்டியுடனும் அன்பாக பேசி விட்டுச் செல்வார். எங்களுடைய திருப்பதி பயணங்கள் பெரும்பாலும் அவர் குடும்பத்துடன் தான். முதன் முதலாக அவர் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது பாடும்மா என்று மாமி சொல்ல... கணீரென்று அந்த அக்கா பாடிய பாடல்...

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்துப் பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம் அம்மா... பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ...

இனிமையாகப் பாடியதில் லயித்துப் போய் திறந்த வாயை மூட மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அந்த வயதில் தமிழ் பேசுபவர்களிடம் அதிகம் பழகியதில்லை. அவசியமும் இருந்ததில்லை. வேற்று மொழியில் பேசும் தயக்கம் , அவர்களைப் போல் சரளமாகப் பேச முடியவில்லையே என்று பேசாமல் சிரித்தே சமாளித்த காலம்! அந்தக் குரலும் பாட்டும்... அசை போட்டுக் கொண்டே வீட்டிற்குத் திரும்பும் வழியில் அம்மாவிடம் எப்படிம்மா இவ்வளவு நல்லா பாடுறாங்க? அவர்கள் சிறுவயதிலிருந்தே இசையைக் கற்றுக் கொள்கிறார்கள் என்றார். அப்ப நீ ஏன் என்னைய மியூசிக் கிளாஸ்ல போடல? நம்ம பழக்கம் கிடையாது 😞அத்தனைக்கும் அம்மாவும் கேள்வியறிவில் கொஞ்சம் பாடுவார். முறையான பயிற்சி கிடைத்திருந்தால் நன்றாக பாடியிருப்பார்! ஆனாலும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி நானும் பாட்டுப் புத்தகங்களை வாங்கி வரிகளை மனனம் செய்து பாடுவதாக நினைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டு தானிருந்தேன்!

மேல்நிலைப்பள்ளியில் ம்யூசிக் கிளாஸ் என்று ஒன்று இருந்தது. பரவாயில்லையே நமக்கும் ஒரு சான்ஸ் கிடைச்சிடுச்சு என்று ஆர்வத்துடன் வகுப்புக்குச் சென்றேன். சுருட்டை முடி, வைரத்தோடு, முத்து மூக்குத்தி, அன்றலர்ந்த பூவைச் சூடி பளிச்சென்று மங்களகரமான ஆசிரியை. பேசுவதே பாடுவது போல் இருந்தது. மரத்தடியின் கீழ் வகுப்பு. சிலுசிலு காற்று.

ம்ம்ம். எழுதிக்கோங்க.

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

என்று தேவாரப் பாடல் ஒன்றை அவர் சொல்லச் சொல்ல நாங்களும் எழுதிக் கொண்டோம். அதற்குப் பிறகு அவர் பாடினாரே பார்க்கலாம்! அய்யோடா! டீச்சர் மாதிரி பாட முடியுமா என்ற ஐயத்துடன் ... எங்க பாடுங்கன்னு சொல்லவும் கோரஸாக பொன்ன்ன்ன்ன்ன்ன்ஆஆஆஆர் மேஏஏஏஏஏஏஏஏனியனே என்று நாங்கள் கத்தி கூப்பாடு போட்டு இழுக்கவும் பாவம் பயந்தே போய் விட்டார். நாங்களும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்தோம்? பாடுவது போல் நினைத்துக் கொண்டு தான் பாடினோம். அவருக்குத் தான் அது கர்ண கொடூரமாக கேட்டிருக்கிறது 😞

அவரும் எங்களை எப்படியாவது பாட வைத்து விட வேண்டும் என்று அடுத்தடுத்த வகுப்புகளில் கடும் முயற்சி செய்து பார்த்தார். சிந்து பைரவி படத்தில் சிவகுமாரிடம் பேட்டியெடுப்பவர் 'உங்கள் மனைவியின் சங்கீத ஞானம்' என்று கேட்க... வெளியில் தள்ளு வண்டியில் காய்கறி விற்பவரிடம் சுலக்ஷ்னா 'கிலோ என்ன விலைப்பா?' என்று கேட்பதைப் போல் தான் இருந்தது எங்கள் சங்கீத ஞானமும்.

ஒரு வழியாக இந்த ஞான சூன்யங்களுக்கு ஒன்றும் கற்றுத்தர முடியாது என்று வெறுத்துப் போய் தேசிய கீதமாவது ஒழுங்காக பாடித் தொலைக்கட்டும் என்று பாட சொல்லிக் கொடுத்தார். 'ஜன கண மன அதி...' என்று பாடத் துவங்கினாலே அவர் கஷ்டப்படுவதை நாங்களும் உணர்ந்தோம். விதி வலியது!

எனக்கு பாட்டு வந்ததோ இல்லையோ ஆனால் அந்த ஆசிரியைப் போல் பாடிக் காண்பித்து மிமிக்ரி செய்ய மட்டும் வந்தது. இந்த நக்கல் பண்ற வேலையை விட்டு விட்டு ஒழுங்காக கற்றுக் கொண்டிருந்துக்கலாம். ஹ்ம்ம்...

இன்று வரை விடாமுயற்சி தான். நான் சத்தம் போட்டுத் தான் பாடுவேன்ன்னு பாடினாலும் பாடுற மாதிரி வாசித்தாலும் சுப்பிரமணி இருந்தால் மட்டும் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது. உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும். என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்னு பாடுவதை கேட்க சகிக்காமல் பாட்டு கிளாஸ் வேணா போயேன் என்று இவரும் ஏதோ திட்டம் போடறார். ஐயோ பாவம் அந்த பாட்டு டீச்சர். பொழைச்சுட்டுப் போகட்டும். நம்மளால அநியாயத்துக்கு ஒரு உயிர் பலியாகக் கூடாது.

ஆதலால் கொலுவுக்கு என்னை அழைத்த நண்பர்கள் என்னைய பாடச் சொல்லி வற்புறுத்தாதீங்க. அப்புறம் நான்....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.பாடீஈஈஈஈருவேன். படியில இருக்கிற பொம்மைகள் எல்லாம் எழுந்து நின்னுடும்.

என் பெயரில் ஒரு பாடகி இருந்தார்ங்கிற பெருமையுடன்....

போவோமா ஊர்கோலம்
நகரெங்கும் கொலு வலம்ம்ம்ம்ம்ம்ம்

Back to school night

சமீபத்தில் சுப்பிரமணியின் பள்ளியில் பெற்றோர்களுக்கான 'Back to school night' நாளன்று நானும் கணவரும் சென்றிருந்தோம். அப்பா நீங்களும் அம்மா கூட போயிட்டு வரணும் என்று சுப்பிரமணி மிரட்டியதில் வேண்டா வெறுப்பாக வந்தார். ஒவ்வொரு வருடமும் பள்ளி திறந்த ஒரு மாதத்திற்குள் இந்த நிகழ்ச்சியன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களைச் சந்திக்கவும் ஆசிரியர்களும் மாணவர்களிடம் தாங்கள் எதிர்பார்ப்பது என்ன, எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் போடுவார்கள், மாணவர்களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் படிக்கப் போகும் பாடத்திட்டங்களை 10 நிமிடங்களில் விளக்கிக் கூற முயல்வார்கள். பல ஆசிரியர்களும் மகளுக்கும் வகுப்பெடுத்தவர்கள். சுப்பிரமணியைப் பற்றிக் கேட்டவுடன் நன்றாக படிக்கிறானே! என்று ஆச்சரியமூட்டினார்கள்😧 அதிலும் ஒரு ஆசிரியர் அவனுக்கு நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் இருக்கு. வகுப்பில் ஒரே கலகலப்பு தான் என்றார். என்னத்த பண்றானோ ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

ஆங்கில வகுப்பில் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் கட்டுரையை எப்படி எழுதுவது என்று மாணவர்களுக்கு நடைமுறைப் பயிற்சி அளிக்கிறார்கள். என் கல்லூரி படிவத்தை மாமா தான் நிரப்பியதாக ஞாபகம்! மகள் அவளுடைய கல்லூரி விண்ணப்ப படிவத்தை அவளே நிரப்பினாள். இப்பொழுது சுப்பிரமணியும் அவனே தான் செய்ய வேண்டும்.

கணிதத்தில் நான் கல்லூரியில் படித்ததைப் படித்துக் கொண்டிருக்கிறான்! எனக்கும் தெரியும்டா என்றேன். ஆச்சரியப்படுகிறான்! அம்மாவுக்கு தோசை தான் சுட தெரியும்னு நினைச்சிருப்பான் போல 😛 எனக்குப் பிடிக்காத இயற்பியல் பாடம் அவ்வளவு கடினமாக இருக்கிறது. எப்படித்தான் படிக்கிறானோ? சோஷியல் சயின்ஸ் வகுப்பில் அன்றாட அரசியல் நிகழ்வுகளை விவாதிக்கிறார்கள். நமக்குத் தான் தினம் ஒரு பிரச்னையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறாரே இந்த ட்ரம்ப்.

மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நடப்பை, உலக அரசியலைப் பற்றி விவாதிப்பது எவ்வளவு பெரிய விஷயம்! அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறை அரசியல். விவாதங்கள் விவரங்களைத் தெளிவுப்படுத்தலாம். மகளும் சரி, மகனும் சரி அரசியல் செய்திகளை வாசிக்கவும், தொலைக்காட்சியில் பார்க்கவும் தவறுவதில்லை. விவாதிக்கவும் செய்வார்கள்! என் பள்ளிக்காலங்களில் காலை நேரக் கூட்டத்தில் தலைப்புச் செய்திகள் வாசிப்பதோடு சரி. நமக்கு கல்வியறிவு என்று புத்தகத்தில் இருப்பதை மனனம் செய்வது என்றே இருந்த நிலை இன்று மாறியிருக்கிறதா?

விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் புதிதாக கட்டப்பட்டிருக்கும் உடற்பயிற்சி கூடம் மற்றும் புதிய உபகாரணங்களைக் காட்டி உங்கள் வரிப்பணம் நல்ல முறையில் உங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுகிறது என்று சொன்னார்கள்! படிப்பு என்பது உடல் நலம் பேணுதலையும் சேர்த்தே கற்றுத் தருகிறார்கள். எனக்கு இந்த ஊரில் பிடித்ததே இது உங்கள் வரிப்பணம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க உதவும் திட்டங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று தான் உள்ளூர் தேர்தலில் வேண்டுகோள் வைப்பார்கள் பள்ளிகளில். நாமோ எது இலவசமாக கிடைத்தாலும் ஊரான் வீட்டுப்பணம் போலவும் எந்த திட்டமும் அரசியல்வாதிகள் அவர்கள் கைப்பையிலிருந்து உழைத்து சம்பாத்தித்த பணத்தில் நமக்கு சகாயம் செய்வது போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஹ்ம்ம்...

சுப்பிரமணிக்கு மிகவும் பிடித்த மியூசிக் கிளாஸ். எந்த மொட்டைத்தலை ஆசிரியரைப் பார்த்து ஒன்பதாம் வகுப்பில் பயந்தானோ அவர் தான் இன்று வரை அவனுடைய மியூசிக் டீச்சர். ஒன்பதாம் வகுப்பிலேயே அவரிடம் உங்களைக் கண்டால் என் பையன் அநியாயத்திற்குப் பயப்படுகிறான் என்று சொல்லி, நான் அப்படியா இருக்கிறேன் பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள் என்றதை சுப்பிரமணியிடம் சொல்லி நீ ஒழுங்கா இருந்தா உனக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்று சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது.

நானெல்லாம் ஆணி அடித்த மாதிரி ஒரே வகுப்பில் ஒரே இடத்தில் தான் வருடம் முழுவதும் படித்திருக்கிறேன். ஆசிரியர்கள் தான் மாறுவார்கள். சுப்பிரமணியின் ஒவ்வொரு வகுப்பும் பள்ளியின் ஒவ்வொரு மூலையில் இருக்கிறது. ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு ஓடி வர வேண்டியிருக்கிறது! பாவம்! ஆனால் வேண்டியது தான். சுறுசுறுப்பாக இருக்க உதவும். படிகளில் ஏறி இறங்கி கிடுகிடுவென மணியடிப்பதற்குள் வகுப்பறையைத் தேடி ஓட்டம் தான்! ஜாலியாக இருந்தது.

இந்தப் பள்ளிகளில் எனக்கு மிகவும் பிடித்த அம்சமே அந்தந்த வகுப்புகளில் பாட சம்பந்தப்பட்ட புத்தகங்களும், படங்களும் என்று அழகாக வைத்திருப்பார்கள். கணினி மற்றும் புத்தகங்களுடன் விசாலமான நூலகம். மகள் அங்கு தான் மாலை நேரங்களில் இருப்பாள். சுப்பிரமணி மறந்தும் கூட அந்தப் பக்கம் போவதில்லை 😞 இந்த வருடம் சுப்பிரமணிக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பெண்கள். பார்த்தாலே மிடுக்காக பல வருட அனுபவங்களுடன். மிகவும் பிடித்திருந்தது. மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருப்பதாக கூறினார்கள். நடுநிலைப்பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை கற்றுத்தரும் ஆசிரியர்கள் தான் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். பள்ளி இறுதி ஆண்டை நெருங்கும் பொழுது மாணவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பிரச்னைகள் செய்வதும் குறைகிறது.அனைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் வலியுறுத்திய ஒரு விஷயம் - உங்கள் மகனுக்கோ மகளுக்கோ பாடத்தில் கேள்விகள் இருந்தால் பள்ளி முடிந்தவுடன் நாங்கள் இருக்கும் நேரத்தில் வந்து கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம் என்றார்கள். தனியார் டியூஷன் என்ற கான்செப்ட் அறவே இல்லை! இப்பொழுது மெதுவாக இந்தியர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல வேளை! என் குழந்தைகள் தப்பித்தார்கள்.

இப்படியாக இரண்டு மணிநேரம் அவனுடைய வகுப்புகளுக்குச் சென்று இறுதியில் அவனுடன் கிண்டர்கார்டனில் இருந்து படிக்கும் நெருங்கிய நண்பர்களின் அம்மாக்களுடன் சிறிது நேரம் அரட்டை. இது தான் நாம் பள்ளிக்கு வரும் கடைசி Back to school night என்றேன். இனி அவர்கள் கல்லூரிக்குச் சென்று விடுவார்கள். எப்படா போவான் என்றிருக்கிறது என்று ஒருவர் சொல்ல, நான் இன்னும் தயராகவில்லை என்று சொல்லும் பொழுதே கண்ணீர் துளிர்த்தது இன்னொரு அம்மாவிற்கு. பலருக்கும் இந்த வகுப்பில் படிப்பவர்கள் இரண்டாவது செல்லக் குழந்தைகள். 12 வருடம் ஓடியே போய்விட்டது. இரட்டை வால் ரெங்குடுகளாக பார்த்த நாள் முதல் பதின் பருவ சேட்டை நாயகர்கள் இன்று கல்லூரி செல்ல தங்களைத் தயார் செய்து கொள்ளும் கட்டிளங்காளைகளாக! அவர்களின் குழந்தைப்பருவங்களை அசை போட்டு அவர்கள் செய்த குறும்புகளைப் பேசி...ம்ம்ம்ம்ம்...

பட்டமளிப்பு விழாவில் மீண்டும் சந்திப்போம் என்று கூறி விடைப்பெற்றோம்.

எப்படிம்மா இருந்தது? எந்த டீச்சர உனக்கு ரொம்ப பிடிச்சது?

முழுக்கதையையும் சொல்லி நீ ஒழுங்கா படிடா! படிச்சிருவேல்ல?

ஆள் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்பப் ....

அதுக்கெல்லாம் எங்க பதில் வர்றது?

வண்டியில் போகும் பொழுதும் சாப்பிடும் நேரத்தையும் தவிர மற்ற நேரங்களில் அதிகம் பேசிக்கொள்வதுமில்லை 😞எப்பொழுது தூங்குகிறான் என்றே தெரியவில்லை 😞

உனக்கென்ன மனக்கவலை...உன் தாய்க்கன்றோ தினம் தினம் உன் கவலை...

Wednesday, October 24, 2018

The Last Drop - India's water crisis

'The Last Drop - India's water crisis' என்றொரு நேஷனல் ஜியோக்ராபிக் ஆவணப்படமொன்றில் இந்தியாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை, நீர்நிலைகளின் இன்றைய நிலை, இனி வரப்போகும் அபாயங்களையும் விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள்

2030ல் 40 சதவிகித மக்கள் நீரின்றி அவதியுறுவார்கள் என்ற அதிர்ச்சிகரமான ஆராய்ச்சித் தகவலுடன் ஆரம்பமாகும் இந்த ஆவணப்படம் வறண்ட ராஜஸ்தானிலிருந்து தொடங்குகிறது. பல மைல்களுக்கு ஒட்டகம் மூலமாக எங்கோ இருக்கும் கிணற்றிலிருந்து குடம் குடமாக தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். தண்ணீர் இல்லாததால் பலரும் நகரை நோக்கி இடம் பெயர அங்கும் இதே நிலைமை தான். பல மாடி அடுக்குக்குடியிருப்புகள் ஆற்றுப்படுகையின் மேல் கட்டப்பட்டு நீராதாரத்தை அழித்து வருகிறது. மழைநீர் சேகரிக்கும் வகையில் ராஜஸ்தான் அரண்மனைகளில் கட்டியுள்ள சிறு குளங்கள் இன்று கழிவுகளைச் சுமந்து நிற்கும் அவலங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

குர்கிராம் நகரின் விஸ்தரிப்பும் பல மாடிக்கட்டிடங்களும் நீரில்லாத நகரமாக உருவாகி வருவதையும் , தலைநகர் டெல்லியில் வசதியுள்ளவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வழங்கப்படுவதும் அதனால் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காமல் போவதும் குறைந்த நீர் அதிக மக்களுக்குப் போக வேண்டிய சூழ்நிலையில் வெகு தொலைவிலிருந்து எடுத்து வர ஆகும் நேரமும், செலவும் அனைத்து மக்களுக்கும் நீர் சேர முடியாததற்கு காரணங்களாகிறது. டெல்லியில் சங்கம் விஹார் காலனியில் பத்து வீடுகளுக்கு ஒரு குழாய் இருக்கிறது. மக்களும் தண்ணீர் லாரியை நம்பித்தான் இருக்கிறார்கள். குறுகிய தெருக்களும் போக்குவரத்து நெரிசலில் மாட்டியிருக்கும் லாரித்தண்ணீருக்காக காத்திருக்கும் மக்களிடையே எழும் பதட்டமும் சண்டையும் தினமும் நாம் கடந்து வரும் நிகழ்ச்சிகள் தான். இன்று தெருவுக்குள் நடப்பது நாளை நகரங்களுள் பின் மாநிலங்களுக்குள் நடக்கும். இன்றே காவிரி, முல்லைப்பெரியாறு விஷயத்தில் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

காடுகளை அழித்து வீடுகள் கட்டி மழையும் பொய்த்ததில் வறட்சி தான் நிலவுகிறது. மலைப்பிரதேசமான சோரா நகரில் மழை பெய்தாலும் சேருமிடம் என்னவோ பங்களாதேஷில். இந்தியாவில் பல்வேறு இடங்களில் நிலவும் உண்மை நிலவரத்தை கவலையுடன் படம் முழுவதும் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.

மும்பையிலிருந்து இரு மணிநேர தொலைவில் இருக்கும் கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு வறண்ட கிணறு பார்க்கவே பரிதாமாக இருக்கிறது. வீட்டுப்பெண்கள் தான் தினமும் பல முறை பல மைல்களுக்கு நடந்து சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். தண்ணீர் பிடித்துக் கொண்டு வரவே பலதார மணங்களும் நடக்கிறது. எத்தனை கொடுமை? வழி முழுவதும் வறண்ட நிலம் தான்.

பசுமையான பஞ்சாப் மாநிலம் தந்த விளைச்சலில் இந்தியாவில் உணவுப்பொருட்கள் மிகுந்த காலங்கள் தொலைந்து நீரற்ற வறண்ட நிலங்களால் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையும் கூடியுள்ளது. 60 சதவிகித விவாசாயிகள் நிலத்தடி நீரை நம்பியே உள்ளனர். ஆழ்துளை கிணறுகளின் மூலம் உலகளவில் அதிகமாக நீரை உறிஞ்சுவதும் இந்தியா தானாம்!

பஞ்சாபில் படிட்ண்டா நகரில் இருந்து 'கான்சர்' ட்ரைனில் ஏறி ராஜஸ்தானுக்கு செல்கிறார்கள்! பயிர்களுக்குத் தெளிக்கப்படும் மருந்துகள் நிலத்திற்குச் சென்று நிலத்தடி நீரை மாசுபடுத்துவது மட்டுமில்லாமல் கான்சரையும் இலவசமாக அளிக்கிறது. படிப்பறிவில்லாத ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் இனி எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

தெலுங்கானா மாநிலத்தில் ஃப்ளோரைடு ஆர்சன் கலந்த தண்ணீரினால் உடற்குறைபாடுகள் ஏற்பட்ட குழந்தைகளை காண்பித்தார்கள். என்று எப்பொழுது இவ்விஷயத்தில் விழிப்புணர்வு வரப்போகிறதோ?

தொழிற்சாலை, மனித கழிவுகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆற்று நீரில் கலக்கப்படுகிறது. யமுனை ஆற்றின் கரையோரம் விளைவிக்கும் காய்கறிகளில்  நச்சு கலந்த நீரால் அப்பகுதிகளில் விளையும் காய்கறிகளும் அதனை உண்ணும் நமக்கும் பல நோய்களும் வருகிறது என்பதை ஆய்வு செய்து நிரூபித்துள்ளார்கள்.

தொழிற்சாலைகளின் கழிவுகளையும் இறந்த உடல்களையும் சுமந்து கொண்டு புனித நதியாம் வற்றாத கங்கை நதியை இன்று நச்சுக்கிடங்காக்கி வைத்திருக்கிறோம். சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை மற்றும் வீட்டு கழிவுநீர் கங்கை ஆற்றில் கலந்து மாசுபடுத்திய நீரில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமல் நுண்ணுயிர்களை இழந்து உயிரற்றுக் கிடக்கிறது பெரும்பாலான நீர் நிலைகள் என்று வருத்ததுடன் பகிர்கிறார்கள் இயற்கை மற்றும் மாசு கட்டுப்பட்டு ஆர்வலர்கள்.

பல நதிகளின் ஆதாரத்தை தொலைத்து  வீடுகளை கட்டி வீட்டுக்கழிவுகளை அதன் மேல் கொட்டி பிளாஸ்டிக் பைகளும், பொருட்களும் என்று குப்பைகூளங்களாக்கி வைத்திருக்கிறோம். மழை குறைந்து நீரின் தேவை அதிகரித்து நிலத்தடி நீரும் சுத்தமாக உறிஞ்சப்பட்டு தூய்மையான நீர் என்பதே கானலாகிப் போயிருக்கிறது. மனிதர்கள் விலங்குகள் மட்டுமல்ல நம் சுற்றுப்புறச்சூழலையும் இயற்கை வளங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறோம். சென்னை வெள்ளத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டோமா? இல்லை.

மஹாராஷ்ட்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் பருவமழைக்குப் பிறகு வறண்டு விடும் நிலைமையில் இருந்த கிராமத்தில் மக்கள் அனைவரும் 'பானி
ஃபவுண்டேஷன்'  NGO துணையுடன் சேர்ந்து பல நாட்களுக்கு நீரைத் தேக்கி வைக்க ஆழ்குழிகள் வெட்டியதில் வறண்ட நிலம் பசுமையாக மாறி இன்று விளைச்சல் பூமியாக மாறி இருக்கிறது. மக்கள் தங்கள் தேவைகளை உணர்ந்து சேர்ந்து உழைத்தால் எல்லா மாநிலங்களிலும் இது சாத்தியமே! அடுத்தவரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லாத நிலையும் சாத்தியம் என்று உணர்த்தியது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

மலை நகரமான ஐஸ்வால் மிசோராமில் வீட்டுக் கூரைகளைச் சரிவாக கட்டியும் , வீணாகப் போகும் நீரை முறையாகச் சேகரித்தும் தத்தம் தேவைக்கு வீடுகளில் மழை நீரைச் சேகரிப்பதைப் போல் நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றலாம் என்ற நல்வழியை காட்டியுள்ளார்கள்.


அரசாங்கமே செய்யும் என்று காத்திருக்காமல் தங்களின் நீர்த்தேவைகளை குறைத்துக் கொள்ளவும், மழை நீரைச் சேகரிக்கவும் , மறு சுழற்சி முறையில் நீரை மீண்டும் பயன்படுத்தவும் வழிகள் கண்டறிந்து முறைப்படுத்த வேண்டும். அரசாங்கமும் மக்கள் பெருக்கத்தை குறைக்க கடுமையான விதிகளைக் கொண்டு வர வேண்டும். தனி மனிதரும் தத்தம் சமூக பொறுப்புகளை உணர்ந்து நடந்தாலொழிய இதற்குத் தீர்வு இல்லை.

தண்ணீரை நாம் அசுத்தமாக்குகிறோம். அசுத்தமாக்குவதையும் அசுத்தமாக்குபவர்களையும் கண்டு கொள்ளாமல் செல்கிறோம். நஞ்சுத்தண்ணீர் மீண்டும் பழங்கள், காய்கறிகளின் உருவில் நமக்கே நஞ்சாக நம் வீடுகளில் நுழைகிறது.

இதனால் அதிகம் பாதிக்கப்படவிருப்பது அடித்தட்டு மக்களே. நீரின்றி விவசாயம் பெருமளவில் பாதிக்கும். விவசாயிகளும் சிக்கனமாக நீரைப் பயன்படுத்துவதை பாலைவன நாடுகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கானல் நீராகிப் போகும் காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் இத்தகைய ஆவணப்படங்களைப் பள்ளி மாணவர்களுக்கும் எடுத்துச் சென்று அடுத்த தலைமுறையினருக்கு நீரின் அவசியத்தை , மேலாண்மையை, நிலத்தடி நீரை மேம்படுத்தும் வழிமுறைகளை எடுத்துச் சொல்லவும் செயல்படுத்த வேண்டிய அவசர நிலையிலும் இருக்கிறோம். வங்கிகளில் பணத்தைச் சேர்த்து வைப்பதாலோ சொத்துக்களைச் சேர்த்து வைப்பதாலோ எந்தப் பயனுமில்லை என்பதை மக்கள் உணருவார்களா ? உயிர் வாழ ஆதாரமான நீரின்றி இவ்வுலகு அமையாது என்பதனை என்று நாம் உணரப்போகிறோம்!


Watch it here












Thursday, October 11, 2018

உலக பெண் குழந்தைகள் தினம்


இன்று உலக பெண் குழந்தைகள் தினம். 

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை களைந்தெறிவதும், பாதுகாப்பான சமத்துவ சூழலை உருவாக்குவதும், அதற்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும் தீர்வுகளைப்  பேசும் நாளாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

முன் எப்போதையும் விட பெண்கள் பற்றியும், பெண் குழந்தைகள் பற்றியும் இப்போது பேச வேண்டியது அவசியமாகிறது. இன்றளவும் பெண்களை போகப் பொருளாக , உடமையாகப்  பார்ப்பதும், அவர்களுக்கான உரிமைகளை முடக்குவது என எல்லா வகையிலும் பெண்களுக்கான சவால்கள் குறைவதாக இல்லை. கல்வி, வேலை மற்றும் பொருளாதார ரீதியாக சமத்துவம் பெற்று தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஒவ்வொரும் பெண்ணும்  இங்கே கடும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. 

பெண்களால் போராட முடிகிறது. அதற்கான வாய்ப்புகள், தளங்கள் இருக்கிறது. போராடுகிறார்கள். ஆனால் குழந்தைகள்?

இந்தியச் சூழலை மட்டும் எடுத்துக் கொண்டால், சமீப நாட்களில் பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. ஒவ்வொரு சம்பவமும் பதைபதைக்க வைக்கிறது. தீர்வுகள் வெளியில் இருந்து வருவது இல்லை. நாம் நம்மிடையே உருவாக்க வேண்டியது. எனவே இதையெல்லாம் வெளிப்படையாக பேசுவது அவசியமாகிறது.  அதற்கான சூழலை உருவாக்கிட நாம் ஒவ்வொருவரும் முன் வருவது அவசியம்.

சமீப நாட்களில் ட்விட்டரில் ”#metoo” என்கிற தளத்தில் தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைப் பற்றி இந்தியப் பெண்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது நல்லதொரு துவக்கம். யார் குற்றவாளி என்பதைப் பற்றி பேசுவதை விட இனி எவரும் பெண்கள் மீது இது போல அத்துமீறல்களைச் செய்துவிட்டு தப்பிக்க முடியாது என்கிற செய்தியை அனைவரும் உள்வாங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த திசையில் நாம் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.

ஆணோ, பெண்ணோ குழந்தைகளைப்  போற்றுவோம், பாதுகாப்போம். கொண்டாடுவோம். 


'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...