Tuesday, February 11, 2020

இஸ்லாமியத் தீவிரவாதமும் அமெரிக்கப் பிடிவாதமும்


ஜனவரி 12, 2020 சொல்வனம் இதழ் 214ல் வெளிவந்துள்ள என் கட்டுரை.
இஸ்லாமியத் தீவிரவாதமும் அமெரிக்கப் பிடிவாதமும்

காசிமெ சுலைமானி, ஈரானில் கொண்டாடப்பட்ட மூத்த ராணுவத் தளபதி.
அந்நாட்டின் பெருந்தலைவர் அயதுல்லா அலி ஹோமேய்னிக்கு அடுத்த நிலையில் மக்களால் அதிகம் மதிக்கப்பட்டு மத்திய கிழக்கிலும் தனிப்பெரும் சக்திவாய்ந்த நபராக கருதப்பட்டவர். அமெரிக்காவிற்கு எதிராக நடக்கும் போரில் ஈடுபட்டு வந்த ஈரானின் ராணுவப் பிரிவின் அங்கமாக விளங்கும் குத்ஸ் படையை ஏப்ரல் 2019ல் ட்ரம்ப் அரசு தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அவ்வியக்கத்தின் மீதும் அதன் தொடர்பில் இருக்கும் நிறுவனங்களின் மீதும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்க அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை, தாக்குதல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் திட்டமிட்டுத் தன் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாய் விளங்கியதால் ட்ரம்ப் அரசு சுலைமானியைக் கொல்லத் திட்டமிட்டது.

ஜனவரி 3, 2020ந் தேதி ஈராக் விமான நிலையத்தில் தனது சகாக்களுடன் காரில் கிளம்பியபோது அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்த அமெரிக்க ட்ரோன், ஏவுகணைகளை வீசிக் கொன்றது. அவருடன் ஈராக்கைச் சேர்ந்த அல் ஹஷ்த் அல் ஷாபி கிளர்ச்சியாளர் படையின் துணைத் தளபதி அபு மஹ்தி அல் மஹந்திஸ் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாக அமெரிக்க அரசு அறிவித்தது.

ஈரானின் அரசு நிர்வாகத்தில் பலம் வாய்ந்த நபரான சுலைமானியின் கொலை, ஈரானிலும் மத்திய கிழக்கிலும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது. மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி இதுதான் என அரசியல் விமர்சகர்களும், ஊடகங்களும் கவலை தெரிவித்தன. தன் நாட்டுப் படைத் தலைவரின் மரணத்திற்கு ட்ரம்ப்தான் காரணம் என்றதுடன், அமெரிக்காவுக்குக் கடும் பதிலடி அளிக்கப்படும் என ஈரான் நிர்வாகத் தலைவர் அயதுல்லா அலி ஹோமெய்னி கூறியுள்ளதைத் தொடர்ந்து, மசூதிகளில் சிவப்புக் கொடிகளை ஏற்றிப் போருக்குத் தயாரானதாக அறிவித்தது.

ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்நாட்டின் 52 நிலைகளைத் தாக்கப் போவதாக ட்ரம்ப் ட்விட்டரில் கொக்கரித்தார். உலகின் பலமான ராணுவம், மில்லியன் டாலர் நவீன போர்க்கருவிகள் ஈரானுக்காக காத்திருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவுக்கு ஆதரவான அணி, எதிரான அணி என இரு பிரிவுகளாக மத்திய கிழக்கு நாடுகள் பிரியும் வாய்ப்புகள் உருவானது. இதனால் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படையினர், அமெரிக்க நிறுவனங்கள், கட்டுமானங்கள், முதலீடுகளுக்கு பெரும் நெருக்கடி உண்டாகும். அமெரிக்க மக்களவையிடம் (காங்கிரஸ்) ஆலோசிக்காமல் அவசரப்பட்டு இது போன்ற முடிவை ட்ரம்ப் எடுத்து விட்டதாக ஜனநாயக கட்சியினர் தங்கள் அதிருப்தியை வெளிக்காட்ட, அதை மறுத்து குடியரசுக் கட்சி சார்பில் சமாதானங்கள் சொல்லப்பட்டன.

அமெரிக்கத் தூதரகங்களைத் தாக்குவது தொடங்கி தூதர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் அமெரிக்க மக்களின் உயிர் பாதுகாப்பிற்கும் , அமெரிக்க மூலதனங்களின் அழிவு அச்சுறுத்தலுக்கும் காரணமாக இருந்ததால் இஸ்லாமியப் புரட்சி பாதுகாப்புப் படையினரை வழிநடத்தும் காசிமெ சுலைமானியை கொல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்ன் முடிவைப் பாதுகாப்புத் துறை நிறைவேற்றியதாக அத்துறையும் விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில் ஈராக்கில் அமெரிக்க படைத்தளத்தில் கொல்லப்பட்ட அமெரிக்கர் ஒருவரின் பின்னணியில் ஈரான் ஆதரவு ஈராக்கிய படைகள் இருந்ததும், பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதும் இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் தலைவன் அபு அல் பாக்தாதியைப் போல பயங்கரமானவர், பல அமெரிக்கர்களின் இறப்பிற்கும் காரணமானவர் என்று அமெரிக்க உள்துறைச் செயலர் மைக் பாம்பேயோவும் தெரிவித்துள்ளார். ஈரான், ஈராக், சிரியா மற்றும் லெபனான் நாட்டு ஷியா முஸ்லீம்களை ஒருங்கிணைத்து அமெரிக்காவிற்கு எதிரான படையைத் திரட்டி போருக்குத் தேவையான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், பயிற்சிகளையும் வழங்கியதில் இதுவரை ஆயிரக்கணக்கில் அமெரிக்கர்களும் கூட்டணி நாட்டுப் படையினரும் மத்திய கிழக்கு நாடுகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று முன்னாள் சிஐஏ டைரக்டர் மற்றும் அமெரிக்கப் படைத்தளபதியுமான ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக பயங்கரவாத தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாலும் அமெரிக்கப் படைகள் மீது மேலும் பல கொடூர தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாலும் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது போருக்கான ஆரம்பம் அல்ல அமெரிக்கா மீதான போரை நிறுத்தவே காசிமெ சுலைமானி கொல்லப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் ஈரானின் வளர்ச்சியைத் தடுக்கவே திட்டமிட்ட இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. தங்கள் படைத்தலைவரைக் கொன்ற இந்த அதிரடி முடிவால் மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் நடவடிக்கைகளை ஈரான் மேற்கொள்ளுமென ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹமத் ஜாவத் ஜரிஃப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று கச்சா எண்ணெய் விலை உயர்வும் பங்குச்சந்தை நிலவரத்திலும் மாற்றங்கள் வந்து விட்டது.

ஈரான் நாட்டு அதிபர் ஹசான் ரொஹானி தங்களுடைய படைத் தலைவரைக் கொன்று அமெரிக்கா பெருந்தவறை செய்து விட்டது. இதற்கான பதிலடியைத் தந்தே தீருவோம். அண்மை நாடுகள் ஒற்றுமையாகச் செயல்பட்டு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிலிருந்து வெளிவர வேண்டும் என்ற அறிக்கைக்கு, ஈரானால் அமெரிக்கச் சொத்துக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் தன்னுடைய நாடும் ஈரான் மீது அதிவிரைவில் மிகப்பெரும் தாக்குதல்களைத் தொடரும். பொருளாதாரத் தடைகளும் நீட்டிக்கப்படும் என்ற ட்ரம்பின் ட்விட்டர் பதிலால் மூன்றாம் உலகப்போர் சூழும் அபாயங்கள் இருப்பதாக வாஷிங்டனும் போர்ச் சூழலை விரும்பாத மக்களும் அச்சத்துடன் நிலவரங்களைக் கண்காணித்து வருகிறார்கள். ஐம்பத்தைந்து சதவிகித அமெரிக்கர்கள் போரை விரும்பவில்லை. இரு நாடுகளும் தங்களுக்குள்ள பிரச்சினைகளைப் பேசித்தீர்த்துக் கொள்வது அவசியம் என்கிற குரல்கள் அமெரிக்காவில் துவங்கி உலகமெங்கும் எதிரொலித்தது.

உயர்பதவியிலிருக்கும் வெளிநாட்டு அதிகாரியை கொன்றதன் மூலம் மறைமுகமாக ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுவதாகவும் மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற நிலைமையும் அமெரிக்கர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். அன்றைய தாக்குதலில் இறந்த ஈரான் ஆதரவு ஈராக்கிய படைத்தலைவரின் ஆதரவாளர்கள் “Death to America” கோஷங்களுடன் அமெரிக்காவிற்கு எதிராக ஈராக்கில் போர்க்கொடி உயர்த்தியுள்ளதும் அமெரிக்கப் படைகளுடன் நட்பு நாட்டுப் படைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதால் உலக நாடுகளும் கவலையுடனே இவ்விரு நாடுகளையும் கவனித்து வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு உலக நாடுகளுடன் செய்துகொண்ட அணு சக்தி தொடர்பான ஒப்பந்தங்களிலிருந்து விலகுவதாகவும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. இதற்கிடையே, ஈராக் ராணுவத்துக்கான பயிற்சியை நிறுத்தி வைப்பதாக வட அமெரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்புக்கான ‘நேட்டோ’ அமைப்பு அறிவித்துள்ளது.

ஈரானின் வலுவான இணையத் தொழில்நுட்பத்தால் அமெரிக்காவில் இணைய தளங்களை முடக்கும் தீவிரவாத செயல்களில் ஈடுபடலாமென தற்போதைய உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் சாட் ஓல்ஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீவிரவாதிகள் ஒசாமா பின்லாடன் மற்றும் அபு அல் பாக்தாதி இறப்பின் பின் விளைவுகளை விட தங்கள் படைத்தலைவருக்காக ஒரு தேசமே அதிரடி தாக்குதலில் இறங்கக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் உலகமே கவலையுடன் உற்று நோக்கும் நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது.

குத்ஸ் ராணுவத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஹெஸ்புல்லா மற்றும் கிளர்ச்சியாளர் படைகளால் அமெரிக்க இணைய தளங்கள் முதல் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தளவாடங்கள், தூதரகங்கள், நட்பு நாடுகளான இஸ்ரேல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் தனி நபர் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் ஜனவரி 7, 2020 அன்று ஈராக்கிலிருந்த இரு அமெரிக்கப் படைத்தளங்களின் மீது ஈரானின் ஏவுகணைகள் பாய்ந்தன.

எண்பது அமெரிக்கத் தீவிரவாதிகளைக் கொன்று விட்டதாக ஈரானும், ‘ஆல் இஸ் வெல்’ என ட்ரம்ப்பும் சொல்லிக் கொண்டனர். இந்த கட்டத்தில் அமெரிக்கா பதிலுக்கு என்ன செய்யப் போகிறது என உலகமே பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக்கையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘ஈராக்கில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளத்தில் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானின் அத்துமீறல்களை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பயங்கரவாதத்தை முன்னெடுப்பதில் முன்னிலையில் உள்ள ஈரான் மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க விரும்புகிறது’ என்றார்.

மத்திய கிழக்கில் ஷியா ராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஸுன்னி முஸ்லீம்களும் வளர்ந்து வரும் ஈரானின் ஆதிக்கத்தை ஈராக்கிலும் மற்ற நாடுகளிலும் விரும்பாதவர்களும், பெரும்பான்மையான குடியரசுக் கட்சியினரும் இவ்விஷயத்தில் ட்ரம்ப் அரசிற்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

இஸ்ரேலின் ஆதரவு அமெரிக்காவிற்குச் சாதகமாக இருந்தாலும் ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேற்றப்பட்டால் சிரியாவை தக்க வைத்துக் கொள்வதிலும் மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்காவின் மூலதனங்களுக்கும் பாதிப்புகள் அதிகம். தற்போதைய ட்ரம்ப் அரசின் வெளியுறவுக் கொள்கையால் சிரியாவில் குர்திஷ் படையினரின் உறவை முறித்துக் கொண்டதில் உருவாகியிருக்கும் வெற்றிடமும், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் அரசு விலகியதும் ரஷ்யாவுக்கு அங்கு தம் அதிகாரத்தைப் பரப்ப வாய்ப்பளித்திருக்கின்றன. ஈரானுடன் கைகோர்த்து மத்திய கிழக்கில் தங்களுடைய அதிகாரத்தை விரிவுபடுத்த ரஷ்யா இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் வல்லரசு அமெரிக்காவை நிலையற்ற பலவீனமான நாடாக உலக அரங்கில் முன்னிறுத்தி தங்களுடைய அதிகாரத்தை முன்னெடுத்துச் செல்லவும் அமெரிக்கா மீதான நேட்டோ நாடுகளின் அதிருப்தியும் ரஷ்யாவிற்குச் சாதகமே. வெளிநாடுகளின் தலையீடுகள், படுகொலைகள், பிரிவினைவாத முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக துருக்கியும் அறிக்கை விட்டிருப்பது அமெரிக்காவிற்குப் பின்னடைவு தான்.

அமெரிக்க காங்கிரஸ் அவையின் ஒப்புதல் இல்லாமல் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் ட்ரம்ப் ஈடுபடுவது தொடர்பாக பிரதிநிதிகள் சபையில் ட்ரம்பின் அதிகாரத்தைக் குறுக்கும் தீர்மானத்தை ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினர் சிலரின் ஆதரவோடு கொண்டு வந்தனர். இது இப்போது மேலவையான செனட்டின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு என்று அவரது ஆதரவாளர்கள் புகழ்ந்தாலும், பின்விளைவுகளைச் சிந்திக்காமல், தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் நடந்த தேவையற்ற தாக்குதல் என்று எதிர் தரப்பினர் விமர்சித்தாலும், இனி வரும் நாள்கள் எப்படியிருக்குமோ என்ற கேள்விதான் பலருக்கும். மத்தியக் கிழக்கில் அமெரிக்க தளவாடங்கள் மற்றும் படை வீரர்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போருக்கு ஆயத்தமாகப் பல்லாயிரக்கணக்கான படை வீரர்கள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் எடுக்கப் போகும் ஆயுதம் என்னவென்றுதான் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஈரானின் தற்போதைய நிலையில் போர் எழ வாய்ப்பில்லை. ஆனால், நட்பு நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகள் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் தீவிரவாதம் ஏற்புடையதன்று. மனித குலத்தின் நசிவிற்கும் அழிவிற்கும் மதவாதமும், அது முன்வைக்கும் தீவிரவாதமும்தான் காரணம். அதை உணர்வது அனைவருக்குமே நன்மை பயக்கும்.

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...