பிப். 09 2020 சொல்வனம் இதழ் 216ல் வெளிவந்துள்ள கட்டுரை.
ஒருவழியாக அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 சூடு பிடிக்கத் துவங்கியிருக்கிறது. மற்ற நாடுகளைப் போலல்லாமல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கே தேர்தல் நடத்தும் விநோதர்களின் தேசம் இது. கொஞ்சம் சிக்கல், நிறையக் குழப்பங்கள், திடீர் திருப்பங்கள் என தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இனி சுவாரசியங்களுக்கு பஞ்சமிருக்காது.
யார் விரும்பினாலும், வெறுத்தாலும் அமெரிக்க அதிபராக வருகிறவர் தான் சர்வதேச அரசியல், பொருளாதாரங்களின் போக்கைத் தீர்மானிப்பவராகவும், திசை திருப்புகிறவராகவும் ஏன் பாதிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அதிபர் வேட்பாளர்களின் அத்தனை அம்சங்களும் தீவிரமான பரிசீலனைக்குள்ளாவதில் ஆச்சரியமில்லை. இந்த நடைமுறையில் எடுக்கப்படும் தவறான முடிவுகள் சர்வ தேசத்தில் எத்தனை பெரிய பாதிப்புக்குள்ளாக்கும் என்பதற்கும் தற்போதைய அதிபரின் தன்னிச்சையான, அடாவடியான செயல்பாடுகளே பெரிய உதாரணம். அந்த வகையில் இம்முறை இந்த காக்கஸ், பிரைமரி கூட்டங்களின் செயல்பாடுகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும். அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் பெருவாரியான ஆதரவைப் பெறுவது என்பது எந்த ஒரு வேட்பாளருக்கும் பெரியதொரு சவால். அதற்கு போதுமான தகுதியும், மிகுதியான பணபலமும், கூடுதலாக ஆதரவாளர்களின் பங்களிப்பும், தொழிற்சங்கங்கள் உட்பட சமூகத்தில் பல்வேறு பிரிவுகளின் உதவியும் மிக மிக அவசியம்.
நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகும் இரு பெரும் கட்சிகளின் அதிபர் வேட்பாளர்களை அவ்வந்த கட்சிகளின் மாநாட்டிற்கு முன்னர் தேர்வு செய்யும் நடைமுறை தான் தற்போது துவங்கியிருக்கிறது. ஒரு பக்கம் குடியரசுக்கட்சியின் சார்பில் ட்ரம்ப் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில், மறுபக்கம் ஜனநாயகக்கட்சியில் ஆளாளுக்கு தங்களைக் கட்சியின் வேட்பாளர்களாக முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர். யார் வேண்டுமானாலும் அதிபராக ஆசைப்படலாம், ஆனால் அதற்கான தகுதியும் திறமையும், தொலைநோக்கும் இருக்கிறதா என்பதை உரசிப் பார்க்கும் நிகழ்வுகள் தான் இந்த“காக்கஸ்” எனப்படும் கூட்டங்களும் பிரைமரி தேர்தல்களும்.
இந்தக் கூட்டங்களில் கட்சியின் சார்பில் களத்தில் குதிக்க ஆசைப்படுகிறவர்கள் தங்களுடைய கொள்கைகள், நிலைப்பாடுகள், திட்டங்கள், வியூகங்களை ஆதரவாளர்கள் மத்தியில் விரிவாக எடுத்துக்கூறி ஆதரவு கோருவார்கள். காக்கஸ் நடக்கும் நாளில் கட்சியின் ஆதரவாளர்கள் தங்களுக்குள் வாய்ப்புடைய வேட்பாளர்களின் தகுதி, திறமைகளை அலசும் வகையில் வாதவிவாதங்களின் மூலம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அதன்பிறகு வாக்குகளின் மூலமாக தங்களின் தெரிவுகளைப் பதிவு செய்வார்கள். இப்படியான ஒரு நடைமுறையைத் தான் இந்த “காக்கஸ்” கூட்டங்கள் செய்கின்றன.
வேட்பாளர்களைப் பரிந்துரைக்கும் இந்த தேர்தல்களை “ப்ரைமரி” என்கிறார்கள். இவை “ஓப்பன்”, “க்ளோஸ்ட்” என இரண்டு பகுதிகளாக நடைபெறுகின்றன. இந்த தேர்தல்களில் வாக்களிக்க விரும்புவோர் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும். அப்போது தங்கள் சார்ந்துள்ள கட்சியின் பெயரையும் குறிப்பிடலாம். இந்த ஓப்பன் தேர்தல்களில் வாக்காளர்கள் தங்களுடைய அபிமான அல்லது தங்களின் தெரிவான மாற்றுக்கட்சி வேட்பாளருக்குக் கூட வாக்களிக்கலாம். என்ன தலைசுற்றுகிறதா! சுற்றினாலும், இந்த ஓப்பன் தேர்தல் நடைமுறை இதுதான். க்ளோஸ்ட் தேர்தலில் அந்தந்த கட்சியின் வாக்காளர்கள் தங்கள் கட்சி நடத்தும் பிரைமரி வேட்பாளர்களில் ஒருவருக்கு தங்களின் வாக்குகளை அளிக்க வேண்டும். தற்போது பன்னிரண்டு மாநிலங்களில் க்ளோஸ்ட் பிரைமரி தேர்தல் நடை முறையில் இருக்கிறது. இருபத்தைந்து மாநிலங்களில் ஓப்பன் பிரைமரியும் மற்ற மாநிலங்களில் இரண்டு முறையிலும் என்று குழப்பமான தேர்தல் முறையில் அதிபர் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த பிரைமரி தேர்தல்களை (ஓப்பன் & க்ளோஸ்ட்) மாநில அரசே நடத்துகிறது. காக்கஸ் கூட்டங்களை கட்சிகளின் மாநில பிரிவுகள் நடத்துகின்றன.அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள், கட்சியினர் மற்றும் மக்களின் கவனத்தைப் பெறுவதோடு தங்களுக்கு ஆதரவான மக்களின் பிரதிநிதி வாக்குகளைப் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்களின் பிரதிநிதிகள் (Delegtes) என கட்சிகளால் வரையறுக்கப்பட்டுள்ளது. 48 மாநிலங்களில் அதிக வாக்குகள் பெறும் முன்னணி வேட்பாளரே அம்மாநிலத்தின் அனைத்துப் பிரதிநிதிகளையும் பெறுகிறார். மெய்ன் & நெப்ரஸ்கா மாநிலங்களில் மட்டும் இந்த நியதி வேறுபடுகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் மக்களின் பிரதிநிதிகளுடன் அக்கட்சியின் பிரதிநிதிகளும் (சூப்பர் டெலிகேட்ஸ்) அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்கிறார்கள். கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் 3,979 பிரதிநிதிகளையும் காக்கஸ், பிரைமரி தேர்வுகள் முடிவு செய்கிறது. குடியரசுக் கட்சி மாநாட்டில் அவர்களுடைய 2,552 பிரதிநிதிகள் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். போலவே, அவர்களுடைய காக்கஸ், பிரைமரி தேர்தல் முறைகளும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் மாநில கட்சியின் விதிகளுக்கு உட்பட்டவையாக இருக்கிறது. எத்தனை குழப்பமான வேட்பாளர் தேர்வு முறை? அதுவும் கட்சிக்கொரு நியதி. மாநிலத்துக்கொரு சட்டம்!
அயோவா , நெவாடா, நார்த் டக்கோட்டா, வயோமிங் மாநிலங்களில் இரு பெரும் கட்சிகளால் காக்கஸ் நடத்தப்பட்டாலும், 1972 முதல் அயோவாவில் தொடங்கும் அதிபர் வேட்பாளர் தேர்வுக்கான முதல் காக்கஸ் அதிக எதிர்பார்ப்பைத் தருகிறது. இந்த வருட தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜூலையில் நடக்கவிருக்கும் கட்சி மாநாட்டில் 1,991 பிரதிநிதிகளைப் பெற்றிருந்தால் மட்டுமே கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அயோவாவில் வெற்றி பெறும் சதவிகிதத்தைப் பொறுத்து 41 பிரதிநிதிகள் வேட்பாளர்களிடையே பங்கிடப்படுவார்கள். எண்ணிக்கையில் குறைந்து இருந்தாலும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முதல் தேர்தல் களம் அயோவாவில் தொடங்குவதாலும் பெரும்பான்மை வெள்ளை அமெரிக்கர்கள் இருக்கும் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்காவிட்டாலும் இங்கு முன்னணியில் வரும் வேட்பாளர்கள் மற்ற மாநிலங்களிலும் பெருங்கவனம் பெறுவதோடு அதிக நன்கொடைகளையும் பெறும் சாத்தியம் இருப்பதால் வேட்பாளர்களிடையே அயோவா காக்கஸ் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது. ஒபாமாவிற்கு அரசியல் உத்வேகத்தை அயோவா காக்கஸ் முடிவுகள் அளித்ததைப் போல தங்களுக்கும் சாதகமான முடிவுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வேட்பாளர்களும் இம்மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். இங்கு பிரைமரி தேர்தல் போல் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்காமல் பள்ளி வளாகங்கள், நூலகங்கள், பேராலயங்கள், உணவுக்கூடங்கள் என மக்கள் கூடும் பொது இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் மக்கள் ஒரு குழுவாக தங்களுடைய வேட்பாளருக்கு விவாதங்களின் மூலம் ஆதரவைத் திரட்டுகிறார்கள். அதிக அளவில் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்களுக்கு கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவும் நியூ ஹாம்ப்ஷயர் தொடங்கி அடுத்து வரும் பிரைமரியில் கட்சி, ஊடகங்கள் மற்றும் மக்களிடையே அதிக முக்கியத்துவமும் நம்பிக்கையும் கிடைக்கிறது.
2016 காக்கஸ் தேர்வு முறைகளில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு அறிமுகப்படுத்திய புதிய செயலி முறையாக வேலை செய்யாததால் ஏற்பட்ட குழப்பங்கள், கணினி, செல்போன் மூலம் பரிமாறப்பட்ட தகவல்களில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக பிப்ரவரி 3ந் தேதி 1,681 இடங்களில் நடைபெற்ற காக்கஸின் முடிவுகள் வெளிவர தாமதமானது. பெர்னி சாண்டர்ஸும் ஜோ பைடனும் முன்னணி வகிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் சிறு மாறுதல். பிப்ரவரி 7 வரை பீட் புடஜஜ் 13 மாநில பிரதிநிதிகளையும் பெர்னி சாண்டர்ஸ் 12 மாநில பிரதிநிதிகளையும் பெற்று முன்னணியில் இருக்கிறார்கள். 8 பிரதிநிதிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் எலிசெபத் வாரனும், நான்காம் இடத்தில் 6 பிரநிதிகளைப் பெற்று பின்தங்கிய நிலையில் ஜோ பைடனும் ஒரேயொரு பிரதிநிதியுடன் ஏமி குளோபுச்சர் என எதிர்பாராத முடிவுகளுடன் நியூஹாம்ப்ஷயர் பிரைமரியில் தங்கள் கவனத்தைச் செலுத்தி வருகிறார்கள்.
2016ல் ஹிலரி கிளிண்டன் அயோவாவில் 23 பிரதிநிதிகளைப் பெற்று அமெரிக்காவின் அயோவா காக்கஸில் வென்ற முதல் பெண் அதிபர் வேட்பாளரானார். 21 பிரதிநிதிகளைப் பெற்ற பெர்னி சாண்டர்ஸ் இறுதி வரை அவருக்குப் போட்டியாளார் ஆனார். பெர்னிக்கு கட்சியினரின் ஆதரவு செல்லாதவாறு ஹிலரி செய்த தகிடுதத்தங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு பெர்னி ஆதரவாளர்கள் பலரும் 2016 தேர்தலில் வாக்களிக்காமல் ட்ரம்ப் வெற்றி பெற அவர்களும் காரணமாயினர். ட்ரம்ப்பை எதிர்த்து நின்ற ஹிலரி இந்நாட்டின் முதல் பெண் அதிபராக பொறுப்பேற்க தேர்தலில் அதிக வாக்குகள் (பாப்புலர் வோட்) பெற்றிருந்தாலும் அமெரிக்க தேர்தல் முறையில் அதிக எலெக்டோரல் வாக்குகள் பெற்ற ட்ரம்ப் அதிபரானது போல், மக்களின் ஆதரவு அதிகம் இருந்தாலும் கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவு யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவரே தான் அதிபர் வேட்பாளராகவும் முடிகிறது. இனி ஒவ்வொரு மாநிலங்களிலும் நடக்கவிருக்கும் பிரைமரி மற்றும் காக்கஸ் முடிவுகள் வேட்பாளர்களையும் மக்களையும் கட்சி மாநாடு வரை எதிர்பார்ப்புடன் வைத்திருக்கும். இருபத்தியொன்பது அதிபர் வேட்பாளர்களுடன் தேர்தல் களத்தில் இறங்கிய ஜனநாயக கட்சியில் பல்வேறு காரணங்களுக்காக பதினெட்டு பேர் விலகிட, பதினோரு வேட்பாளர்களுடன் அயோவா காக்கஸில் பீட் புடஜஜ், பெர்னி சாண்டர்ஸ், எலிசெபத் வாரன், ஜோ பைடன் அதிக கவனம் பெற்றிருக்கிறார்கள்.
மக்களுக்கும் ஜனநாயக அதிபர் வேட்பாளர்களுக்கும் அதிருப்தியை தந்திருக்கும் அயோவா காக்கஸ் குழப்பமான முடிவுகளின் தீர்வுக்காக காத்திருக்காமல் வேட்பாளர்கள் நியூஹாம்ப்ஷயர் பிரைமரியில் முழு கவனம் செலுத்தி ஆதரவு கோரி வருகிறார்கள். இதுநாள் வரை வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவராக கருதப்பட்ட பீட் புடஜஜ் இன்று ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகவும் மாறி இருப்பது மக்களிடையே அவருக்கு இருக்கும் ஆதரவைப் பறைசாற்றுகிறது. அதே உத்வேகத்துடன் இனி வரும் பிரைமரியிலும் அவருடைய முக்கியத்துவம் தொடருமா என்பது தான் கேள்வி. மோன்மௌத் பல்கலை நடத்திய கருத்துக்கணிப்பில் நியூஹாம்ப்ஷயர் பிரைமரியில் பெர்னி சாண்டர்ஸ் முன்னணியில் அவரைத் தொடர்ந்து பீட் புடஜஜ் இருப்பதும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் துணை அதிபரின் செல்வாக்கு குறைகிறதோ என்ற கேள்வியுடன் ஆவலாக காத்திருக்கிறது தேர்தல் களம்.
பணபலமும், மக்களின் ஆதரவும், பிரநிதிகளின் பேராதரவும் உள்ளோரைத் தான் தங்கள் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலுக்குத் தேர்ந்தெடுக்கிறது இவ்விரு பெரும் கட்சிகளும். தேர்தலுக்கு முந்தைய வருடத்திலிருந்து வேட்பாளர்களும் நன்கொடைகள் பற்றின விவரங்களை வெளியிட, அரசியல் களம் சூடு கொள்ள ஆரம்பிக்கிறது. பிரதிநிதிகளைப் பெற மக்களின் ஆதரவு கோரி நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம், ஊடகங்களில் தங்கள் கொள்கைகளை விளம்பரப்படுத்தல் என செலவுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் பல நல்ல வேட்பாளர்கள் போதிய நன்கொடை இல்லாமல் களத்திலிருந்து வெளியேறும் துன்ப சம்பவங்களும் இதே நேரத்தில் தான் நடக்கிறது.
ஒப்பீட்டளவில் நமது இந்திய தேர்தல் களம் எவ்வளவு எளிமையானது என்பதை இந்நேரத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை!
அமெரிக்க அதிபர் தேர்தலை, அதன் கள நிலவரங்களை சர்வதேசங்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. எந்த அளவுக்கென்றால், கடந்த தேர்தலில் ரஷ்ய உளவுத்துறையினர் அதிபர் தேர்தலின் போக்கையே மாற்ற உழைத்தனர் என குற்றம் சாட்டும் அளவுக்கெல்லாம் சர்வதேச கவனங்கள் இந்த தேர்தலின் மீது குவிந்திருக்கின்றன. புதிய அதிபர் தங்களோடு எத்தனை ஒத்துப் போவார் என்பதில் துவங்கி அரசியல், பொருளாதார, சமூக, பாதுகாப்பு என அனைத்திலும் தங்களோடு இணக்கமாய் செல்லக் கூடிய ஒருவரைத்தான் எல்லா நாடுகளும் எதிர்பார்க்கின்றன.
காலங்காலமாய் அமெரிக்க தேர்தல் களம் பல்வேறு காரணங்களுக்காக பல நாடுகளுக்கும் இன்றியமையாத ஒன்றாகாவே இருந்து வருகிறது. அதிபராக பொறுப்பேற்பவர் பிற நாட்டுத் தலைவர்களுடன் ஒத்துச் செல்பவரா, அவருடைய உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள், அரசியல் சித்தாந்தங்கள் தங்களை எவ்விதம் பாதிக்கப் போகிறது, அடுத்த நான்கு வருடங்கள் பங்குச்சந்தை முதல் உள்நாட்டுப் பொருளாதாரம், வேலை வாய்ப்புகள், மருத்துவ காப்பீடு, குடியேற்ற சட்ட மாறுதல்கள் என நீளும் பட்டியல்களுடன் தற்போதைய அதிபரை எதிர்கொள்ள சரியான ஜனநாயக கட்சி வேட்பாளாரைத் தேர்ந்தெடுக்கும் மிகப்பெரிய கடமையும் ஜனநாயக கட்சிக்கு இருப்பதால் இத்தேர்தல் களம் முக்கிய நிகழ்வாக உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அயோவா காக்கஸ் முடிவுகளைத் தெரிவிப்பதில் இவ்வளவு குழப்பம் உள்ள கட்சி எப்படி நாட்டை வழிநடத்த முடியும்? தன் மீதிருந்த கண்டனத் தீர்மானத்தை கட்சி செனட்டர்கள் மூலமாக முறியடித்து விட்டு இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று கொக்கரிக்க ஆரம்பித்து விட்டாரே ட்ரம்ப். அவரை எதிர்கொண்டு வெற்றி கொள்ள தகுதியான வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் கட்சி ஆதரிக்குமா என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி!
தற்போதைய சூழலில் அமெரிக்காவை வழிநடத்த ஒரு மகத்தான ஆளுமை மிக்க தலைவர் அவசியம் என்பதை பெருவாரியான அமெரிக்கர்கள் உணரத் துவங்கியிருக்கின்றனர். நிதானமற்ற, எடுத்தேன் கவிழ்த்தேன் ரக முடிவுகள், வாய் புளிச்சதா மாங்காய் புளிச்சதா பேச்சுகள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளைக் கண்கூடாக கண்ட பின்னர் பலரும் வெளிப்படையாக தங்களுடைய எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை பேசத் துவங்கி இருக்கின்றனர். ஆனாலும் கூட, அந்த தகுதியான ஆளுமை யார் என்பதை தெரிவு செய்வதில் நிறைய குழப்பங்களும், கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன.
அந்த வகையில் மக்கள் சக்தி எத்தனை மகத்தானது என்பதை உணரவும், உணர்த்தவும் இந்த காக்கஸ் கூட்டங்களும் பிரைமரி தேர்தல்களும் உதவுமென நம்புகிறேன்.
No comments:
Post a Comment