Friday, February 28, 2020

தேர்தல் சடுகுடு…இது அமெரிக்க ஸ்டைல்


பிப்.24, 2020 சொல்வனம் இதழ் 217ல் வெளிவந்துள்ள கட்டுரை.

தேர்தல் சடுகுடு…இது அமெரிக்க ஸ்டைல்

இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கையில், அதிபர் ட்ரம்ப்பின் இந்தியப் பயணம் பற்றியும், இதனால் இந்தியாவுக்கு என்ன சாதகம், அமெரிக்காவுக்கு என்ன பாதகம் போன்ற விவாதங்கள்தான் பரபரப்பான பேசுபொருளாக இருந்தாலும், இந்தக் கட்டுரையில் நாம் அதைப் பற்றியெல்லாம் பேசப் போவதில்லை.


எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் ட்ரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவரைக் களத்தில் எதிர்கொள்ளப் போகிற ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தலின் கள நிலவரங்களையும், அதன் எதிர்பார்ப்புகளைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். துவக்கத்தில் இருபத்தி ஐந்து பேர் தங்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தி இருந்தாலும், தற்போது ஏழு பேர்தான் களத்தில் இருக்கின்றனர்.

மொத்தம் இருக்கும் ஐம்பது மாநிலங்களில் நடைபெறும் காக்கஸ் கூட்டங்கள், ப்ரைமரி தேர்தல்களில் இவர்களுக்கு கிடைக்கும் ஆதரவையொட்டித்தான் அதிபர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். தற்போது இந்த மாகாணத் தேர்தல்கள் ஒவ்வொரு மாநிலமாய் நடைபெற்று வருகின்றன. ஒரு மாநிலத்தில் முன்னிலை பெறும் வேட்பாளர் அந்த மாநிலத்தின் மொத்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெறுவார் என்பதால் தேர்தல் களம் சூடேறிக் கிடக்கிறது.

அயோவா மாகாணத்தில் துவங்கிய ஜனநாயக் கட்சியின் அதிபர் வேட்பாளர் காக்கஸின் முடிவுகள் களத்தில் யாரெல்லாம் முக்கியமானவர்கள் என்பதை அடையாளங் காட்டுவதாக இருந்தது. அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு மாகாணத்தின் ப்ரைமரி தேர்தல்களில் கிடைக்கும் ஆதரவு, எதிர்ப்புகளைப் பொறுத்து ஒவ்வொருவராகக் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்வார்கள். இதுதான் காலங்காலமாய் இருந்துவரும் நடைமுறை.

தற்போது ஏழு பேர் வாய்ப்புள்ள அதிபர் வேட்பாளர்களாகக் களத்தில் இருப்பவர்கள் முறையே; முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன். இண்டியானா மாகாணத்தின் சவுத்பெண்ட் நகரின் முன்னாள் மேயர் பீட் புடஜஜ். வெர்மான்ட் மாநில செனட்டர் பெர்னி சாண்டர்ஸ். மாசாசுசெட்ஸ் செனட்டரான எலிஸபெத் வாரன். மின்னசோட்டா செனட்டரான ஏமி க்ளோபுக்கர். தொழிலதிபர்களான ஆண்ட்ரூ யாங், டாம் ஸடையர்.

அயோவா மாகாண காக்கஸில் எந்தவொரு வேட்பாளருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அடுத்து வந்த நியூ ஹாம்ப்ஷயர் காக்கஸ் முடிவுகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் அயோவாவில், மிக இள வயது வேட்பாளரான சவுத்பெண்டின் முன்னாள் மேயல் பீட் புடஜஜ் முதலிடம் பெற்றிருக்கிறார். இந்த தேர்தலின் மிகப் பெரிய அதிர்ச்சி, பழுத்த அரசியல்வாதியும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டதுதான்.

இதையடுத்து நியூ ஹாம்ஷயர் ப்ரைமரி மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் இணையத்தில் முன் பதிவு செய்த ஜனநாயக கட்சியினர் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களின் தெரிவான வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். நியூ ஹாம்ப்ஷயர் ப்ரைமரி க்ளோஸ்ட் வகையில் நடைபெறும். மாற்றுக் கட்சியினரும், ஜனநாயக கட்சியின் மாநிலக் கிளையின் ஒப்புதலோடு இந்த தேர்தலில் கலந்து கொள்ள முடியும் என்பதால் இந்தத் தேர்தல் முடிவுகளை நாடே ஆவலுடன் எதிர் நோக்குகிறது.

நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் 24 மக்கள் பிரதிநிதிகளும், 9 கட்சிப் பிரதிநிதிகளும் இருக்கின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை முழுமையாகப் பெறுவார்கள். அதிபர் தேர்தலுக்கு ஒன்பது மாதங்கள் இருக்கும் நிலையில் இந்த ஆரம்ப கட்டப் ப்ரைமரியில் நம்பிக்கையான வேட்பாளர்கள் அடையாளம் காட்டப்படுவார்கள் என்பதாலும், அடுத்தடுத்து நடைபெறும் ப்ரைமரிகளில் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இறுதி நிலவரம் தெரியவரும். எனவே, இந்த ஆரம்ப நிலையில் பின்னடைந்தாலும் எதிர்வரும் தேர்தல்களில் தங்களை பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் எல்லா வேட்பாளர்களுக்குமே இருப்பதால் இன்னார்தான் என இப்போதே எவரையும் குறிப்பிட்டுச் சொல்வது அபத்தமாயிருக்கும்.

மாநில ப்ரைமரி தேர்தல்களுக்கு முன்னால், வேட்பாளர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் வாத விவாதங்கள் வாக்காளர்களால் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. இதுவரை நடந்த விவாதங்களில் அனைவருமே தங்களுக்கான வாய்ப்புகளைச் சரியான அளவில் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். போட்டியில் இருக்கும் மிக இளையவரான 38 வயது பீட் புடஜஜீயை அரசியல் அனுபவம் இல்லாதவர் என ஜோ பைடன் குறை சொன்னபோதும், பீட் புடஜஜ், ஜோ பைடனுக்கு ஆதரவான தன் கருத்தின் மூலமாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்த்தை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

பெர்னியின் சோசலிஷ கோட்பாடுகளினால், முதலாளித்துவ அமெரிக்காவுக்குக் கூடுதல் செலவுகளும், மக்களுக்குள் பிரிவினையும் உருவாக்கும் என்கிற ஜோ பைடன் வைத்த குற்றச்சாட்டினை , ஏமி க்ளோபுச்சர் தனக்குச் சாதகமாகத் திருப்பிக் கொண்ட்து இன்னொரு சுவாரசியம். எலிஸபெத் வாரன் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசிவந்தாலும் அவர் நான்காவது இடத்திலேயே தேங்கியிருக்கிறார். தற்போது ஏமி க்ளோபுச்சருக்கு மூன்றாம் இடம்.

ஆண்ட்ரு யாங்கின் “அனைவருக்கும் சம்மான வருமான” கொள்கை பெரிய அளவில் கவனிப்போ, வரவேற்போ பெறவில்லை. நடைமுறைக்கு சாத்தியமற்றது என அரசியல் விமர்சகர்களும் ஒதுக்கித் தள்ளிவிட்டனர். தற்போதைய சூழலில் அவர் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்.

மிக எளிதாக முதல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் துனை அதிபரான ஜோ பைடன் தற்போது மிகப் பரிதாபகரமாக ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். தற்போது நடைபெற்ற காக்கஸ், ப்ரைமரி தேர்தல்கள் வெள்ளையின மக்கள் அதிகமாய் வசிக்கும் பகுதியென்பதால், வரும் நாட்களில் கருப்பின மக்கள் நிறைந்திருக்கும் மாநிலங்களில் தன்னால் எளிதில் ஆதரவை பெறமுடியுமென நம்புவதாக தன் ஆதரவாளர்களிடம் பேசி வருகிறார். லத்தீன் அமெரிக்க மக்களும் ஜோ பைடனை ஆதரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஜோ பைடனைப் போலவே டாம் ஸ்டேயரும் கருப்பின அமெரிக்கர்களை நம்பியிருக்கிறார்.

தற்போதைய நிலையில் முதல் இரண்டு இடங்களில் இருந்துவரும் பீட் புடஜஜும், பெர்னி சாண்டர்ஸும் தங்கள் நிலையை தக்க வைக்கக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். பெர்னி இளைஞர்கள் மற்றும் இடதுசாரி வாக்காளர்களைத் தன் வசம் இழுக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

இந்த எழுவரைத் தவிர ஒருவர் தற்போது அனைவரின் கவனத்திலும் வந்திருக்கிறார். அவர் தொழில் அதிபரான மைக்கேல் ப்ளூம்பெர்க். ஏறத்தாழ ட்ரம்பின் அத்தனை கல்யாண குணங்களையும் கொண்டவரான அவர், தான் மட்டுமே ட்ரம்ப்பிற்குச் சரியான போட்டியாக இருக்கமுடியும் என நம்புகிறார். அதற்காகக் கோடிக் கோடியாகப் பணத்தைக் கொட்டி விளம்பரங்களைச் செய்து வருகிறார். இவர் நியூயார்க் நகரின் முன்னாள் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ப்ளூம்பெர்க்கின் அரசியல் வரவை மற்ற வேட்பாளர்கள் வரவேற்கவில்லை. அவரின் குணாதிசயங்களை மக்களுக்கு உணர்த்த விவாத மேடையை அனைவரும் பயன்படுத்திக்கொண்டார்கள். ஜோ பைடன் பெர்னி சாண்டர்ஸை எதிர்த்தாலும் கருத்துக் கணிப்பில் முதலிடத்தில் சாண்டர்ஸும் அடுத்த நிலையில் ப்ளூம்பெர்க்கும் இருப்பது கலவரமே! நெவாடா மாநில விவாதத்தில் அனைவரிடமும் இருந்த பதட்டம் சனிக்கிழமை தேர்தல் முடிவு வரை தொடரும்.

இப்படியாக அமெரிக்கத் தேர்தல் களம், ஜனநாயகக் கட்சியினரால் அமர்களமாகி இருக்கிறது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் புதிய புதிய பரபரப்புகள், செய்திகள், வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் அந்தரங்கங்கள், அவர்கள் பெற்ற நன்கொடைகள், முரண்பாடுகள், உட்பூசல்கள் அது பற்றிய விவாதங்கள் என ஊடகங்களுக்குக் கொண்டாட்டம்தான்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு நல்ல அதிபரின் தேவையை ட்ரம்ப் தொடர்ந்து உணர்த்தி வருகிறார். அமெரிக்காவையும், சர்வதேசங்களையும் முன்னெடுத்துச் செல்லக் கூடிய நிதானமான, முதிர்ச்சியான ஒரு தலைவர்தான் இப்போதைய உடனடித் தேவை. அந்த தேவையை அமெரிக்கர்கள் நிறைவேற்றுவார்களா என்பதைக் காண உங்களோடு சேர்ந்து நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...