Tuesday, February 11, 2020

அன்று க்ளிண்ட்ன்! இன்று ட்ரம்ப் – அமெரிக்க நாடகங்கள்


டிசம்பர் 15, 2019 சொல்வனம் இதழ் 212ல் வெளிவந்த என் கட்டுரை.
அன்று க்ளிண்ட்ன்! இன்று ட்ரம்ப் – அமெரிக்க நாடகங்கள்

2016 நவம்பர் மாதம் எட்டாம் தேதி நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்க மக்களை மட்டுமல்ல உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வாகிப் போனாலும், வாஷிங்டன் தங்களை கைவிட்டதென நினைத்திருந்த மக்களிடம் இனி அமெரிக்கர்களுக்கே முன்னிடம். அரசு மறந்து போன மக்களை இனியும் மறக்க விட மாட்டேன். வெளிநாடுகளுக்குச் சென்ற நம் வேலைகளை மீட்பதும் சட்ட விரோத குடியேற்றத்தை தடுத்து மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சுவர் எழுப்பி குற்றங்களை குறைக்கவும் , ஒபாமாகேரை ஒழித்து மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தையும், வெளிநாடுகளிலிருந்து வேலைவாய்ப்பை பெற வழங்கும் ஹெச்1பி விசா முறைகேடுகளை சீர்திருத்தவும் ஆவன செய்வேன். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே போன்ற வசீகர வாக்குறுதிகளில் வெள்ளை அமெரிக்கர்களின் வாக்குகளை அதிக அளவில் பெற்று சரித்திர சாதனை படைத்த வெற்றியில் பெரும்பான்மை செனட் மற்றும் பிரநிதிநிதிகள் சபை உறுப்பினர்களுடன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் 45வது அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப்.

தீவிரவாத நாடுகளுக்கும் உள்நாட்டில் புதிதாக குடியேறும் அகதிகளுக்காகவும் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டு உள்நாட்டு மக்களின் தேவைகளையும் கட்டமைப்பையும் அரசாங்கம் நிராகரித்த உணர்வும், அயல்நாடுகளுக்குச் சென்ற வேலைவாய்ப்புகள் மற்றும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் வேலையிழப்பும் அரசாங்க அமைப்பைச் சாராத ஒருவரான ரீகன் ஆட்சிக்காலம் மீண்டும் மலராதாவென கனவு கொண்டவர்களையும் குறி வைத்தே டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளும் மேடைப்பேச்சுகளும் நகர, அவருடைய கணிப்பும் தவறவில்லை. முதலிய அடிப்படை நாடான அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் படித்தவர்களுக்கும், கல்லூரிக் கல்வி என்பது வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே என்றிருக்கும் மாறாத சூழலில் அரசாங்கத்தின் மேல் கோபமும் ஆத்திரமும் கொண்டிருந்த மக்களின் வாக்குகளே டிரம்ப்பை அதிகார பீடத்தில் அமர்த்தியது. அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற ஹிலரி கிளிண்டன் மேல் நம்பிக்கையிழந்த வாக்காளர்களும், டிரம்ப்பை நன்கு அறிந்திருந்தும் அதிபரான பிறகு அவர் நடத்தையிலும் பேச்சிலும் மாற்றங்கள் இருக்கும் என்று தீவிரமாக நம்பியவர்களும், அவருடைய தேர்தல் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்ட வெள்ளை அமெரிக்கர்களும், வாக்களிக்காத பொது மக்களும் டிரம்ப்பின் பிரமாண்ட வெற்றிக்கு காரணமாயினர்

பொதுத்தேர்தலில் ட்ரம்ப்பை விட ஹிலாரி கிளிண்டன் 2.87 மில்லியன் அதிக ஓட்டுகள் பெற்றிருந்தாலும்

எலெக்டோரல் காலேஜ் சிஸ்டம் முறையில் அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவதால் அதில் வெற்றி பெற்று அதிபரானவர் தான் டிரம்ப்.

பதவியேற்றவுடன் அகதிகள் குடியேற்றத்திற்கு அவர் விதித்த தடை இஸ்லாம் மதத்தினவரை வேற்றுமைப்படுத்துகிறதோ என்று நீதித்துறையும் அத்தடையை நிராகரித்துக் கொண்டே இருந்தது. அரசியல் ஆதாயங்களுக்காக இது வரை கட்சிகள் செய்ய தயங்கிய, சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் சட்டத்தில், கடுமையான மாற்றங்கள் கொண்டு வர இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டாலும், ஒபாமாகேரை அழித்து புதிய திட்டங்களைக் கொண்டு வர அவர் கட்சியினரின் ஆதரவின்றி ஏதும் செயல்படுத்த முடியாத குழப்ப நிலைக்கு அவரே காரணமாகியுள்ளார். தன்னுடைய அமைச்சகத்தில் பொறுப்பேற்றவர்களுடன் ஏற்படும் கருத்து மோதல்களினால் நிலையற்ற அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையும் , உலக அரங்கில் மற்ற நாடுகளுடன் கொள்கைரீதியாகவும், உடன்படிக்கைகளில் செய்த மாற்றங்களினாலும், நண்பர்களை எதிரிகளாக்கிக் கொண்டு அமெரிக்கா தனித்து செயல்பட வேண்டிய நிலைமையில் இனி வரும் காலங்களில் உலக நாடுகளுடன் உறவுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நியமனத்தில் அவருடைய வேட்பாளர் நீல் கோர்ஸச் தேர்ந்தெடுக்கப்பட்டது டிரம்ப்பிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி.

நிலக்கரி உற்பத்தித் துறையில் 80,000 பேர் வேலையிழப்பதற்குக் காரணமென கூறி 200 நாடுகள் பங்கேற்கும் பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது உலக அரங்கில் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி நிலக்கரிச் சுரங்கங்களை மீண்டும் செயல்படுத்துவதும் ட்ரம்ப்பின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்று.

சிரியா, லிபியா, சூடான்,சோமாலியா, ஏமன், ஈராக், ஈரான் நாடுகளிலிருந்து முஸ்லீம் மக்களை நாட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் தடை உத்தரவை ஹவாய் மற்றும் கலிஃபோர்னியா நீதிமன்றங்கள் சட்டபூர்வமாக நாட்டிற்குள் நுழைபவர்களை மதத்தின் பெயரால் தடை செய்ய முடியாது என்று ட்ரம்ப்பின் கோரிக்கையை நிராகரித்தது. பலத்த எதிர்ப்பிற்குப் பிறகு ஈராக் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக நார்த் கொரியா, வெனிஸுலா பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தாலும் முறையான திட்டவரைவுகள் இல்லாத குழப்ப நிலையில் நீதிமன்ற நிலுவையில் இந்த தடை உத்தரவுகள் உள்ளன.

2000 மைல் சுவருக்கான 25 பில்லியன் டாலர் செலவுகளை மெக்ஸிகோ அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மெக்ஸிகோ நிராகரிக்க, அமெரிக்க சட்டசபையிலும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ட்ரம்ப்பின் தேர்தல் அறிக்கையை தோல்வியடைய செய்திருக்கிறது.

தேர்தல் அறிக்கைகளுள் ஒன்றான, ஈரான் மேல் விதிக்கப்பட்ட அணு ஒப்பந்த தடைகளை விலக்கிக் கொள்ள மறுத்திருக்கிறது டிரம்ப் அரசாங்கம். ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறது. டெல் அவிவ்விலிருந்து அமெரிக்க தூதரகம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் கூறியுள்ளது, அரபு நாடுகள் மற்றும் பாலஸ்தீனியர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் யூதர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.



அவருடைய விநோதமான ட்வீட்களாலும் , ஊடகத்துறை மற்றும் நீதித்துறையை தாக்கி அமெரிக்க ஜனநாயகத்தையும் தன் கருத்துகளுடன் ஒத்துவராதவர்களை அவமானப்படுத்தியும் டிரம்ப் சர்வாதிகாரியாகச் செயல்பட நினைத்தாலும் அரசியலமைப்பு அவரின் செயல்களைத் தடுத்து முறியடித்து நீதியை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. ஒபாமாகேர் நீக்கப்பட வேண்டுமென்ற கருத்திலும் , மெக்ஸிகோ- அமெரிக்க எல்லையில் சுவர் கட்டுவதற்கு அவருடைய கட்சியினரே ஆதரிக்காததும், ஊடகத்துறையின் தொடர் விமரிசனங்கள், அகதிகள் குடியேற்றத்தில் நீதித்துறை அவரின் உத்தரவுகளை மூன்று முறை மறுத்து, அதிபராக இருந்தாலும் நீதித்துறைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை உணர்த்திக் கொண்டிருப்பதும் சிறிது ஆறுதல் தருவன.

இத்தனை குழப்பங்களுக்கிடையில் அதிபராக பொதுமக்களின் மதிப்பீடுகளில் அதலபாளத்திற்குச் சென்றாலும், அவருடைய ஆதரவாளர்களிடையே அவருடைய செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதே அவரின் பலம். பெருகிவரும் வேலைவாய்ப்புகளும், மேலேறிச் செல்லும் பங்குச்சந்தையும் இன்று வரை அவரின் பலமாக இருந்தாலும் என்று சரியுமோ என்ற அச்சமும் மக்களிடையே இருந்து வருகிறது.

பதவியேற்ற நாளிலிருந்து அவரின் மேல் சுமத்தப்பட்ட பல்வேறு குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அதிபர் பொறுப்பிலிருந்து விலக நேரிடும் நாளையும் ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது வாஷிங்டன். ரஷ்யாவுடனான தொடர்பால் நாட்டின் ‘கட்டுப்படுத்தப்பட்ட தகவல்கள்’ எதிரிகளிடம் சிக்கிவிடுமோ என்ற பயமும், அதைத் தொடர்ந்து டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் ரஷ்ய தொடர்புகளை விசாரிக்கும் குழுவினரின் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அரசியலமமைப்புச் சட்டத்தின்படி டிரம்ப் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் பொய்யாகிப் போனது.

அதிபர் பதவியிலிருக்கும் ஒருவர் தன்னுடைய பதவிக்கோ நாட்டு மக்களுக்கோ குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, லஞ்சம், ஊழல், பெருங்குற்றங்கள் அல்லது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலோ அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் குற்றச்சாட்டுக்களையும் அதன் தொடர்பான விசாரணைகளையும் மேற்கொள்ளும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவைப் பிரதிநிதிகளுக்கு உண்டு. செனட் விசாரணையும் முடிந்து குற்றங்கள் நிரூபணம் ஆகும் வரை அதிபர் பதவியிலிருப்பவர் ஆட்சியில் தொடர முடியும். இதற்கு முன் இரு அமெரிக்க அதிபர்கள் மீது கண்டனத்தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருந்தாலும் அதிபர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படவில்லை. செனட் விசாரணை முடிந்ததும் அவர்கள் கட்சியினரின் ஆதரவுடன் பதவியில் நீடித்திருக்கிறார்கள்.

ஆபிரகாம் லிங்கனின் மறைவிற்குப் பிறகு துணைத்தலைவராக இருந்த ஆண்ட்ரூ ஜான்சன் அதிபர் பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலத்தில் கறுப்பின அமெரிக்கர்களுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானங்களும், ஆபிரகாம் லிங்கனால் நியமிக்கப்பட்டிருந்த செக்ரேட்டரி ஆஃப் வார் பதவியில் இருந்து எட்வின் ஸ்டாண்டன் என்பாரை நீக்கி செனட் ஒப்புதல் பெறாமல் லொரென்ஸோ தாமஸ் என்பவரை நியமித்து அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்த குற்றத்திற்காகவும் மேலும் சில பல குற்றச்சாட்டுகளுக்காகவும் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானித்திருந்தது. செனட் விசாரணையில் அவருடைய கட்சியினரின் ஒத்துழைப்பால் பதவியில் தொடர்ந்துள்ளார்.

மோனிகா லெவின்ஸ்கியுடன் முறைகேடான உறவில் இருக்கவில்லை என்று மக்கள் மற்றும் சட்டத்தின் முன் பொய் சொன்னதற்கும் வெள்ளை மாளிகை அலுவலர்கள் சிலரை உண்மைக்குப் புறம்பாக விசாரணையில் தனக்குச் சாதகமாக ஒத்துக்கொள்ள பணித்ததற்கும் பில் கிளிண்டன் மேல் குற்றஞ்சாற்றப்பட்டு இருந்தாலும் அதிபரை பதவியில் இருந்து நீக்கும் அளவிற்கு மாபெரும் குற்றங்கள் கிடையாது என்று பதவியில் தொடர அவர் சார்ந்த கட்சியினரின் செனட் ஆதரவும் மக்களின் பேராதரவும் சாதகமாக இருக்க, தன்னுடைய பதவிக்காலம் முடியும் வரை பில் கிளிண்டன் அதிபராக தொடர்ந்தார்.

வாட்டர்கேட் ஊழலில் நடந்த குற்றங்களுக்காகவும் தவறான நடவடிக்கைகளுக்காகவும் ரிச்சர்ட் நிக்சன் குற்றஞ்சாட்டப்பட இருந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்ததால் அவர் தப்பித்தார்.

அடுத்த வருட அதிபர் தேர்தலுக்குத் தயாரான நிலையில் ஜோ பைடன் மகனின் மேல் ஊழல் தொடர்பான விசாரணை நடந்தால் எதிர்கட்சிக்குப் பாதகமாக, அதே வேளையில் தனக்குச் சாதகமாக இருக்கும் என்று தன்னுடைய அரசுக்கு ஒத்துழைக்க உக்ரைன் நாட்டு அதிபரை ட்ரம்ப் நிர்பந்தித்த உரையாடலும் அதைத் தொடர்ந்த அவரது பிரதிநிதிகளின் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளும் கண்டனத் தீர்மானத்திற்கு வழிவகுத்திருக்கின்றன. காங்கிரஸிற்கு ஒத்துழைக்க மறுத்தும், சாட்சிகளை விசாரணைக்குச் செல்வதை தடுக்க முயன்றும், அதிபர் பதவிக்குக் குந்தகம் விளைவித்ததாக, நாட்டின் நலன் கருதி டிரம்ப் மேல் காங்கிரசால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு நீதித்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதற்குப் பிறகு செனட் விசாரணை நடக்க வேண்டும். அதில் நிரூபணம் செய்யப்பட்டால் மட்டுமே அதிபர் பதவியிலிருந்து அவரை விலக்க முடியும். இல்லையென்றால் அதையும் தன் மேல் வீணாக பழி சுமத்தியதாக கூறி வாக்குகளைச் சேகரிக்க தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள விழைவார் டிரம்ப்.

இன்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அதிபர் செனட் விசாரணையில் தப்பிப்பாரா? அவருடைய கட்சியினரின் ஆதரவு இருக்குமா? அப்படியே நீடித்தாலும் 2020 தேர்தல் அவருக்குச் சாதகமாகஅமையுமா? எதிர்க்கட்சி வேட்பாளர்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற ட்ரம்ப்பின் கனவு பலிக்குமா? தன்னுடைய ஆட்சியில் குறைந்திருக்கும் வேலையில்லா எண்ணிக்கையும், இதுவரை சரிவை நோக்கிச் செல்லாத பொருளாதாரமும், ஹெச்1பி விசாவில் கொண்டு வந்த மாற்றங்களும், வெளிநாட்டிற்குச் சென்ற நிறுவனங்களின் மேல் விதித்த அதிக வரியும், உலக அரங்கில் அமெரிக்காவின் செலவுகளை கட்டுப்படுத்தியதும் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற வழிவகுக்குமா என்பதை இனிவரும் காலங்களில் அரங்கேறப் போகும் செனட் விசாரணையும் அடுத்த வருட தேர்தல் களேபரங்களும் நிர்ணயிக்கும்.

உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்கள் மக்களின் எண்ணங்களையும் அதிபரின் ஆட்சியில் அதிருப்தி கொண்டதையும் பிரதிபலிப்பதால் மக்களை எதிர்கொள்ள குடியரசுக்கட்சியினர் அச்சத்துடனும் ஜனநாயக கட்சியினர் செனட் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை மீட்டெடுத்து பெரும்பான்மை கட்சியினராக வலம் வரும் நாளுக்காகவும் காத்திருக்கிறார்கள். ஜனநாயக கட்சியினரின் மேல் இருந்த அதிருப்தியில் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? அக்கட்சி அதிபர் வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறதா என்பதை 2020 தேர்தல் களமே தீர்மானிக்கும். எக்காரணங்களுக்காகவும் கட்சியை விட்டுக் கொடுக்க வேட்பாளர்களோ கட்சித்தலைமையோ விரும்புவதில்லை. நாட்டு மக்களின் நலன் இரண்டாம் பட்சம் தான் என்பதே நிதர்சனம்!

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...