Friday, June 5, 2020

சுற்றுப்புறச்சூழல் தினம்

சுற்றுப்புறச்சூலைப் பாதுகாக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஜூன் 5ம் நாள் சுற்றுப்புறச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தை முன்னிட்டு பல நாடுகளிலும் கருத்தரங்குகளும் விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் வாழும் பூமியை வாழ தகாத அளவிற்கு மாசடைய நாமும் காரணமாகிக் கொண்டிருக்கிறோம். மேலைநாடுகள் அதிக சிரத்தையுடன் மாசுக்கட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர முயலும் வேளையில், நம் நாட்டில் அப்படியொரு துறை இருக்கிறதா என்ற கேள்வியும் அதன் அபாயங்களை அறிந்தும் மக்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என்ற வருத்தமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

நாம் உண்ணும் உணவில், குடிக்கும் நீரிலிருந்து சுவாசிக்கும் காற்றில் கூட மாசு கலந்திருக்கிறது. சுவாசக்கோளாறுகள், நுரையீரல் தொற்றுநோய்கள், மூச்சு விட சிரமப்படுபவர்கள், தோல் வியாதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிச்சென்று மருந்து, மாத்திரை உதவிகளுடன் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறோம். காரணம் தெரிந்தாலும் கையறு நிலை தான். தொழிற்சாலைகள், கால்நடைகள், பெருகி வரும் வாகனங்கள், கழிவுப்பொருட்களால் வெளியேறும் புகைக்காற்றில் நச்சுத்தன்மை கூடி காற்று மணடலத்தை அசுத்தப்படுத்தி வருகிறதென்னவோ உண்மை. எப்படி கட்டுப்படுத்துவது என்பதைத் தான் மனிதர்களின் அறியாமையாலும் பேராசையாலும் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.

கழிவுகளைக் கொட்டி நீர்நிலைகளை மாசுப்படுத்தி அந்த நீரில் விளையும் காய்கறிகளை உண்டு அதனால் ஏற்படும் உடற்சீர்கேடுகள் பல. ஒரு பிளாஸ்டிக் தடையைக் கூட நம்மால் முறையாக செயல்படுத்த முடியவில்லை. ஆதரிக்க இயலவில்லை. அதன் ஆக்கிரமிப்புகள் நீர் நிலைகளில் ஆரம்பித்து விலங்குகளின் வயிற்றில் சென்று அவர்களின் உயிரைக் கொல்லும் வரை நீண்டிருக்கிறது.

அரசை மட்டுமே குறை கூறுவதால் பயனொன்றும் இல்லை. வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தினை முறையாக செய்கிறோமோ? அதுவும் இல்லை. இருக்கின்ற மரங்களையும் வெட்டிப் போட்டுக் கொண்டு பொட்டல் காட்டில் மழைக்காக ஏங்கி நின்று என்ன பயன்? நிலத்தடி நீரை உயர்த்த வேண்டிய அனைத்து வழிகளையும் அதிகரித்து வரும் வறட்சியும், நீளும் கோடையும், உஷ்ணக்காற்றும், பருவம் தவறிப் பொழியும் மாரியுமாக இயற்கை நம்மை எச்சரித்தாலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியமாக சுயலாப சிந்தனையுடன் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.

வட அமெரிக்கா வந்த புதிதில் பிளாஸ்டிக் கப்புகளில் தயிர், வெண்ணெய், ஜூஸ், பால் என்று கடைகளில் வரிசையாக அலங்காரமாக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன். மதுரையில் இருந்த வரையில் தயிர் வாங்குவதெல்லாம் பாத்திரத்தில் தான் அதுவும் அன்றன்று. இப்பொழுது தயிரை வீட்டிலேயே தோய்க்கிறார்கள். பால் கூட கண்ணாடி போத்தல்களில் வந்து கொண்டிருந்தது பிறகு பாக்கெட் பால் என்று பிளாஸ்டிக் பைகளில் வர ஆரம்பித்து விட்டிருந்தது. அம்மா காய்கறி வாங்கி வர மஞ்சள் பையும், வயர் கூடையும் தான் வைத்திருந்தார். நானும் கூட ஊரில் இருந்த வரை அப்படித்தான் இருந்தேன் . இங்கோ பெரிய பெரிய பிளாஸ்டிக் டப்பாக்களில் பால், தயிர்... என்று பிளாஸ்டிக் சகலத்திலும் வியாபித்திருக்கிறது. காய்கறிகளை, பழங்களை வாங்கி பிளாஸ்டிக் பையில் போட குறைந்தது ஐந்தாறு பைகள் தேறும். பால், தயிர், வெண்ணை, சீஸ், பிரட், முட்டை எல்லாமே பிளாஸ்டிக் உறைகளில். இவை எல்லாவற்றையும் போட்டு எடுத்துச் செல்ல மேலும் சில பிளாஸ்டிக் பைகள். ஒரு குடும்பம் மட்டுமே அத்தனை பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு வாரத்தில் குப்பையில் சேர்க்கிறதென்றால்...ஒரு தெரு, ஒரு நகரம், ஒரு மாநிலம், ஒரு நாடு??? தலையைச் சுற்றுகிறது.

ரத்தப் பரிசோதனைக்கூடங்களில், மருத்துவமனைகளில், விமான நிலையங்களில், உணவகங்களில் ... கேட்கவே வேண்டாம். அளவே இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்கள். இன்று கோவிட்19ஆல் முக கவசங்களும், கையுறைகளும் உலகம் முழுவதும் புழங்க, எங்கு தான் இல்லை? பார்க்கும் இடங்களில் எல்லாம் இந்த மக்காத குப்பைகள் தான்! எப்படி ஒழிப்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நம் பங்கிற்கு மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் முனைப்போடு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தாலன்றி எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நம்மால் முயன்ற வரை சிறு சிறு விஷயங்களில் கவனம் கொண்டால் பிளாஸ்டிக் குப்பைகளை முடிந்தவரை தவிர்க்கலாம். முறையாக மறுசுழற்சி செய்யலாம்.

கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்டங்களில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு ஆறுதலாக இருந்தது. கண்டிப்பாக அனைத்து மாவட்டங்களும் முறைப்படுத்த வேண்டிய ஒன்று. இங்கும் கலிஃபோர்னியாவில் சிறிது முயற்சி செய்கிறார்கள். நியூயார்க்கிலும் தடை கொண்டு வந்த பிறகு நிம்மதியாக இருக்கிறது.

நாம் தான் சுற்றுப்புறச்சூழலை மாசுப்படுத்தி இயற்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையும் நம் வருங்கால சந்ததியினரைப் பற்றின கவலையும் ஏதுமின்றி பொறுப்பற்றுத் திரிகிறோம். தமிழ்நாட்டு அரசின் பிளாஸ்டிக் தடை உத்தரவு நடைமுறைக்கு வந்து செயல்படுத்துவதும் மக்கள் நம் கையில் தான் உள்ளது.

சமீபத்திய விமான பயணத்தின் பொழுது தான் எத்தனை நெகிழிப்பொருட்களை நம்மை அறியாமல் பயன்படுத்தி மக்காத குப்பைகளை உருவாக்க நாமும் காரணியாக இருக்கிறோம் என்பதை நினைக்கும் பொழுது குற்றவுணர்ச்சியாக இருந்தது. தண்ணீர் கேட்டால் ஒரு ப்ளாஸ்டிக் கப்பில் கொடுத்தார்கள். ஒவ்வொரு முறையும் புதுப்புது கப்பில். இல்லையென்றால் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில். விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனைகள் முடிந்த பிறகு தண்ணீர் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொள்வதால் என்னால் இப்போதைக்கு இந்த ஓரிரு ப்ளாஸ்டிக் கப்களை மட்டுமே தவிர்க்க முடிகிறது.

அமெரிக்காவிற்குள் பயணிக்கும் பொழுது கடலை, ரொட்டி என்று பிளாஸ்டிக் உறைக்குள் இருக்கும் சிற்றுண்டி கொடுப்பார்கள். தண்ணீர் குடிக்க ஆளுக்கொரு ஒரு கப். வாய் துடைத்துக் கொள்ள சிறு பேப்பர் டவல். இந்த மூன்று குப்பைகளையும் அள்ள பெரிய பிளாஸ்டிக் குப்பை பை. இதைத்தவிர, பயணியர் வாங்கி குடித்த கோக், பெப்சி, மேற்படி ஐட்டங்களுக்கான அலுமினிய கேன்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள். கழிவறையில் பயன்படுத்தும் பேப்பர் பொருட்கள். பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக், பேப்பர் குப்பைகள். சில மணி நேர பயணங்களில் நம்மை அறியாமலே அத்தனை குப்பைகளைச் சேர்த்து விடுகிறோம்.

நீண்ட நெடுந்தூர பயணங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. விமானம் ஏறிய சில மணிநேரங்களில் குடிப்பதில் இருந்து உணவிற்காக வரும் ப்ளாஸ்டிக் டிரேயில் சிறிது சிறிதாக ஏகப்பட்ட நெகிழிப் பொருட்கள். உணவைச் சாப்பிடும் முள் கரண்டி, கத்தி, கரண்டி எல்லாம் மறு சுழற்சி செய்ய முடியாத பொருட்களே! உணவிற்குப் பின் சிற்றுண்டி, மீண்டும் காஃபி, டீ, மதுபானங்கள் என்று ஒரு விமானப் பயணத்தில் மட்டுமே எத்தனை குப்பைகளை நாமே உருவாக்குகிறோம்? ஒரு நாள் மட்டுமே எத்தனை விமானங்கள் பறக்கிறது? எத்தனை மனிதர்கள் பயணிக்கிறாரகள் உலகமெங்கும்? நினைத்தாலே குப்பை உலகம் கண்ணில் மிதக்கிறது :(

ஒவ்வொரு விமானப் பயணியும் சராசரியாக 1.4கிலோகிராம் குப்பைகளை தங்கள் பங்கிற்கு சேர்ப்பதாகவும், உள்ளூர் விமானக் குப்பைகள் சில மட்டுமே மறுசுழற்சிக்குச் செல்வதாகவும், வெளிநாட்டு விமானக் குப்பைகளை பாதுகாப்பு மட்டும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் அடிப்படையில் எரித்து விடுவதாகவும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. எரிப்பதால் விளையும் தீமைகளையும் நாம் புறக்கணித்து விடுகிறோம் :( பல நாடுகளும் விமானத்தில் கொண்டு செல்லும் மீத உணவுகளையும் அதன் கொள்கலனைகளையும் கூட எரித்து விடுகிறதாம்.

குறைவான விலை, பயன்படுத்த எளிது, சுகாதாரம் போன்ற காரணங்களுக்காக நெகிழிப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் அதன் பின்விளைவுகளை நாம் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக எவர்சில்வர் கரண்டி, முள்கரண்டி, கத்தியை பயன்படுத்த முடியாது. கனமான பொருட்களால் எடை அதிகமாக எரிச்செலவும் கூடி விடுவதால் விமான நிறுவனங்களுக்கு ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடே எளிதாக இருக்கிறது.

உலக வெப்பமயமாதல் பற்றின விழிப்புணர்வு காரணமாக மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தலாமே என சிலர் விமான நிறுவனங்களைக் கேட்க ஆரம்பித்துள்ளார்கள். பயன்படுத்திய கழிவுகளை அகற்றுவதும் அவ்வளவு எளிதல்ல. அதற்கும் விமான நிறுவனங்கள் அதிக விலையைக் கொடுக்கிறது.

இதற்கு என்ன தான் தீர்வு?

விமான நிறுவனங்களும் உலக வெப்பமயமாதலைக் கருத்தில் கொண்டு
சில நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டினைக் குறைக்கவோ, மறுசுழற்சி செய்யவோ முனையலாம். பயணிகளும் நிறுவனங்களிடம் முறையிடலாம். மாற்றம் எங்காவது ஓரிடத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். இயற்கையை அழிக்கும் நாம் தான் அதற்கான தீர்வையும் வருங்கால சந்ததியினருக்காக கண்டடைய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்.

மக்காத குப்பைகளுடன் வாழ்ந்து வரும் நமக்கு அதன் அழிவுகள் ஏற்படுத்தும் அபாயங்கள் உணரும் காலமும் நெருங்கி விட்டதை அறிவோமா?

விழிப்புணர்வும் அடுத்த தலைமுறையின் மீது அக்கறையும் இருந்தால் மட்டுமே நம்மால் முடிந்தவரை இயற்கையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளையும் வாழ வைக்க முடியும்.

நம்மை அழிவிலிருந்து காத்து வந்தவைகளை அழித்துக்கொண்டே வருகிறோம் எந்தவொரு பிரக்ஞையில்லாமல்! கடமையை உணர்ந்து பொறுப்பாக செயல்பட வேண்டிய நேரமும் நெருங்கி விட்டது. கடக்க வேண்டிய தூரம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதுவரையிலும் காத்திருக்குமா இயற்கை?

மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளென பிரித்து மறுசுழற்சிக்கு உதவி இத்தினத்தை முன்னிட்டு பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதைக் குறைக்க முயலுவோம்.

நம் பங்கிற்கு நாமும் இப்பிரபஞ்சத்திற்கு உபகாரமாக இருக்க முயற்சிப்போம்.

2 comments:

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...