கறுப்பின மக்கள் தங்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றிருந்தாலும் சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகள் அத்தனை எளிதாக கிடைத்து விடவில்லை. ஒவ்வொரு உரிமைகளையும் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வகையில் ஓட்டுப் போடும் உரிமையை எவ்வாறு பெற்றார்கள் என்பதைத் தான் இப்படம் சொல்கிறது.
கறுப்பின மக்களின் சமூக உரிமைகளுக்காக குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங் காந்தியின் அறவழிப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவருடைய தலைமையில் பல போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. அதில் ஒன்று அலபாமா மாநிலத்தில் செல்மா நகரில் இருந்து மாண்ட்காமெரியை நோக்கி நடைபெற்ற ஊர்வலம். இந்த ஊர்வலத்தின் மக்கள் சக்தியே ஆட்சி செய்பவர்களிடமிருந்து அவர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. வெள்ளை அமெரிக்கர்களின் அதிகார துஷ்பிரயோகங்களையும் அடக்குமுறைகளையும் மீறி நடந்த மாபெரும் போராட்டத்திற்குப் பிறகே அன்றைய அதிபர் ஜான்சன் கறுப்பின மக்களின் ஓட்டுப்போடும் உரிமைக்கான சட்டத்தை இயற்றியுள்ளார்.
உரிமைக்கான போராட்டங்கள் வலி மிகுந்தது. பலரின் தியாகமும் தகுதியான தலைவனின் வழிநடத்தலும் போராட்டங்களின் வெற்றிகளுக்கு காரணியாக அமைகிறது. செல்மா ஊர்வலமும் அந்த வகையில் வரலாறு படைத்திருக்கிறது.
இன்று வரையில் தங்கள் சமூக நீதிக்காக போராடும் மக்களைப் புரிந்து கொள்ளவும் அமெரிக்காவின் குடிமக்களாக அதன் வரலாறைத் தெரிந்து கொள்ளவும் இத்தகைய படங்களின் அறிமுகம் நல்லது. புலம்பெயர்ந்தவர்கள் கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படமும் கூட.
நெட்ஃப்ளிக்ஸ்ல் காணலாம்.
No comments:
Post a Comment