Thursday, November 11, 2021

மாறும் பருவங்கள், மாறாத மனம்

ஆகஸ்ட் மாதம் வரை அனலாய் கொதித்தவனும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தான் செப்டம்பரில்! பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் போல காலையில் உதயமாவதை தள்ளிப் போட்டுக் கொண்டே சாவகாசமாக உலா வர, துணைக்கு மூடுபனியும், 'சில்ல்ல்ல்ல்ல்'லென்ற குளிர் காற்றும். தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு மூடுபனி அழகாய் இருக்கிறது வெளியில் வந்தாலோ ஈரக்குளிர் பயமாய் இருக்கிறது. அழுதுவடிந்து கொண்டே செல்லும் பள்ளிக்குழந்தைகளைப் போலவே வேலைக்குச் செல்லும் பெரியவர்களும். அதுவும் ஒரு வருடம் வீட்டிலிருந்து வேலை செய்து பழகிவிட்டதில் கூடியிருக்கிறது சோம்பேறித்தனம். பார்க்கிற எவரும் விரும்பி பணிக்குத் திரும்பியதாக தெரியவில்லை! கொரோனாவின் கைங்கரியம் அனைவரையும் வேறுவித மனப்பாங்கிற்குத் தள்ளி விட்டிருப்பது மட்டும் உண்மை.

இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் காலம் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறது. அக்டோபர் முதல் வாரம் தொடங்கியதில் மரங்களும் நிறம் மாற தொடங்கிற்று. ஆல்பனியில் இலையுதிர்கால அழகு கடந்த வருடத்தைப் போல் அத்தனை சிறப்பாக இல்லாவிட்டாலும் பக்கத்து மாநிலங்களில் இயற்கை அன்னை தீட்டிய ஓவியங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக, மனதிற்கு உற்சாகமாக வளைய வந்ததைக் கண்டதில் பரம திருப்தி எங்களுக்கு.

செப்டம்பரில் பிள்ளையார் சுழி போட்ட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், புரட்டாசி மாத சனிக்கிழமை பூஜைகள், அம்மனைக் கொண்டாடும் கொலு நாட்கள் தீபாவளி வரை தொடர்ந்தது.

அக்டோபர் மாத இறுதிநாளில் குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடும் 'ஹாலோவீன்', இனி வரும் அமெரிக்க விடுமுறை நாட்களைத் துவக்கி வைத்திருக்கிறது. விடிய மறுக்கும் காலைப்பொழுதுகள். மாலையில் சீக்கிரமே வீடு திரும்பும் பகலவன் என்று பகல் பொழுதுகள் சுருங்க, நேரத்தையும் 'டே லைட் சேவிங்ஸ்' என்று மாற்றியதில் இருக்கிற குழப்பங்களுடன் இதுவும் ஒன்றாக சேர்ந்து விட்டது 😒 வரலாறு கொடுமையாக இருந்தாலும் அதை எளிதில் மறந்து விட்ட மனித இனம், நவம்பரில் நீண்ட விடுமுறையாக கொண்டாடும் 'தேங்க்ஸ்கிவ்விங் டே'க்காக காத்திருக்க, உறைந்த வான்கோழிகள் கறிக்கடைகளில் நிரம்பி வழிகிறது. வருடாவருடம் அதன் உருவமும் பெரிதாக, கூடியிருக்கிறது எடையும் விலையும்! கவர்ச்சிகரமான விளம்பரங்களுக்கும் குறைவில்லை. இனி வரும் நாட்களில் அலங்கார விளக்குகள் கடைகளையும் வீடுகளையும் அலங்கரிக்க, விடுமுறைக்காக காத்திருக்கும் மக்களின் முகத்திலும் திருவிழா களை கூடும். குடும்பங்களுடன் இணைய, அமெரிக்காவில் பலரும் பிரயாணம் மேற்கொள்ளும் நாளாகும். வான்வழி, தரைவழிப் பயணங்களால் கூட்டம் ததும்பும் விமான நிலையங்களும், போக்குவரத்தில் விழிபிதுங்கி நிற்கும் சாலைகளுமாய் இருக்கப்போவதாக செய்திகள் வர ஆரம்பித்து விட்டது. இந்த விடுமுறையில் கடைகளில் விற்கப்போகும் தள்ளுபடி பொருட்களுக்காக காத்திருக்கும் கூட்டத்தை நம்பி இருக்கிறது பல நிறுவனங்களும் பங்குச்சந்தை நிலவரங்களும். அமெரிக்காவில் எல்லாமே ஒன்றுக்கொன்று சங்கிலித்தொடராய் தொடர்புடையது. மக்களின் கையில் இருக்கும் பணத்தைச் செலவு செய்ய வைக்கத் தான் இந்த விடுமுறைக் கொண்டாட்டங்கள் எல்லாமே! இந்த சங்கிலித்தொடர் அறுந்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

இதனிடையே பூஸ்டர் ஊசிகள், வேலையிழந்தவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு கூட்டமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. பெட்ரோல் விலையும் ஏறிக் கொண்டிருக்க, விலைவாசியும் விண்ணைத் தொட எத்தனிக்கிறது. நடுநடுவே சப்ளை செயின் அறுந்துவிட்டதில் ஒரு பரபரப்பு. எப்படியோ சமாளிக்கிறார்கள்! பங்குச்சந்தை உச்சத்தில் இருந்தாலும் எப்பொழுது கீழே விழும் என்ற அச்சமும் தொடர்கிறது. இதில் 'கிரிப்டோ கரன்சி' அக்கப்போருகள் வேறு மனிதர்களைப் பைத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது.

இலையுதிர்காலமும் முடிவுறும் நிலையில் மரங்களும் நிராயுதபாணியாக நிற்கிறது. உடலை ஊடுருவும் குளிருடன் சுடாத சூரியன் உலாவரும் காலைப்பொழுதுகள், முகத்திலறையும் பனிக்காற்று, மாலை நான்கு மணிக்கெல்லாம் இருட்ட, பகல் குறைந்து நீண்ட இரவாய் காலம் தன்னை மாற்றிக்கொள்ள, மழை, வெயில், வறட்சி என்று சொல்லிக்கொண்டிருந்த எங்கூர் ரமணன்கள் குளிர், பனி, மழையுடன் கூடிய பனி என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டிருக்கிறார்கள். மலைகளில் பனிமலை பெய்து பனிச்சறுக்கு செய்பவர்களை மகிழ்வித்திருக்கிறது. அப்படியே பனிப்பொழிவு அதிகமாக இல்லாவிட்டாலும் பனிச்சறுக்கு மையங்கள் செயற்கையாக பனிப்பொழிவை நிகழ்த்தி விடுமுறைக்குத் தயாராகி விடும்.

ஆர்த்ரைட்டிஸ் உள்ளவர்களுக்குப் போறாத காலம். பனிக்காலத்துடன் விடுமுறைக் கொண்டாட்ட செலவுகளும் கூடுவதால் பலரையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் பருவம் இது. கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை பன்மடங்காக பெருகி உளவியல் ஆலோசகர்களுக்குப் பெரும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி, சஷ்டி கொண்டாடியவர்களுக்கு இனிமையாக நாட்கள் கடந்து விட்டது. இனி கார்த்திகைத்திங்கள், பெரிய கார்த்திகைத் திருநாட்களுக்கான காத்திருப்புகள் தொடரும். திருப்பாவை கேட்கும் நாட்களும் அதிக தூரமில்லை. மனதிற்கு அமைதியைத் தரும் நம்முடைய திருநாட்களின் வரவிற்காக நானும் தயாராகி விட்டேன். டிசம்பர் மாதம் முதல் பனிக்காலம் துவங்கி சாண்டாவின் வரவிற்காக காத்திருக்கும் குழந்தைகளுடன் நானும் காத்திருப்பேன் என் குழந்தைகளின் வரவிற்காக.

காத்திருப்புகளில் தான் இனி எந்தன் வாழ்க்கையோ?





 


No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...