Tuesday, November 2, 2021

Maid



இந்தியர்கள் பலருக்கும் அறிமுகமான அமெரிக்க வாழ்க்கை என்பது பெரிய வீடு, வாகன வசதி, நல்ல கல்வி, பெரு நிறுவனங்களில் வேலை, கைநிறைய வருமானம், வார இறுதியில் நண்பர்களுடன் கேளிக்கை, கொண்டாட்டங்கள் என்பதாகவே இருக்கும். அதனால் அமெரிக்க கீழ் தட்டு மக்களின் வாழ்க்கையை அமெரிக்கர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தவர்கள் மட்டுமே அறிவர். இங்கு வாழும் பெரும்பாலான இந்தியர்கள் தங்களை கலாச்சாரம், பண்பாடு மிக்கவர்களாக நினைத்துக் கொண்டு அமெரிக்கர்களை கலாச்சாரம் இல்லாத காட்டுமிராண்டிகளாக, யாரும் யாருடனும் எப்பொழுதும் ஊர் சுற்றும் மனிதர்களாக அவர்களாகவே ஒரு பிம்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களும் இருக்கிறார்கள் என்றாலும் அமெரிக்கர்கள் என்றாலே இப்படித்தான் என்று நம்மவர்கள் பலரும் நினைக்கிறார்கள் என்பதே உண்மை. அதனாலேயே அவர்களோடு நெருங்கிப் பழகுவதைப் பலரும் தவிர்ப்பார்கள். அவர்களுடைய கலாச்சாரம் வேறு. நம்முடைய வளர்ப்பும் சூழலும் கலாச்சாரமும் வேறு. அவர்களிலும் பலர் பெற்றோர், உடன்பிறந்தோர், குடும்பம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று நம்மைப் போலவே தத்தம் கடமைகளைச் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். சேர்ந்து பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். நல்லது கெட்டதுகளில் ஆதரவாக இருக்கிறார்கள். நான் பார்க்கும்/பார்த்த மனிதர்கள் நற்பண்புகளுடன் இருக்கிறார்கள். ஓரளவு பொருளாதார வசதியுடன் பெற்றோரின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளின் குடும்பத்திற்கும் குடி, போதை மருந்து, உடைந்த குடும்பங்களில் வளரும் குழந்தைகளுக்கும் இருக்கும் வேறுபாடுகளைக் கண்கூடாகவே காண முடியும். உலகங்கெங்கும் இது பொருந்தும் என்றாலும் அமெரிக்காவில் கொஞ்சம் கூடுதலாக வெளிப்படையாகவே தெரியும்.

"Hillbilly Elegy" ஆங்கில திரைப்படத்தில் அதனை அழகாக காண்பித்திருப்பார்கள். கொஞ்சம் ஓவர்டோஸாக இருந்தாலும் உடைந்த கீழ்த்தட்டு வெள்ளை அமெரிக்க குடும்பங்களின் வாழ்க்கையில் நடப்பதைப் பிரதிபலிப்பதாக இருந்தது அத்திரைப்படம்.

அதைப் போலவே "Maid" என்ற நெட்ஃப்ளிக்ஸ் ஆங்கிலத் தொடர், "Maid: Hard Work, Low Pay, and a Mother's Will to Survive" என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டெஃபானி லேண்ட் தன் சொந்தக் கதையைப் புதினமாக வெளியிட்டிருந்தார். குழந்தையுடன் தனியொருத்தியாக இந்த உலகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ விழையும் ஒரு பெண்ணின் கதை.

அமெரிக்காவில் குடும்ப வன்முறையால் நிமிடத்திற்கு 20 பேர் பாதிக்கப்படுவதாகவும் வருடத்திற்கு 10மில்லியன் ஆண்களும் பெண்களுக்கும் பாதிக்கப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. அதிலும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதன் உளவியல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அரசும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் செல்கிறது. இதைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். அத்தனை விஷயங்கள் இருக்கிறது.

இத்தொடரில் குடும்ப வன்முறை, குடிப்பழக்கம், ஏழ்மை, உறவுகள் என்று பல விஷயங்களைத் தொட்டிருக்கிறார்கள் அல்லது கதாசிரியர் கடந்து வந்திருக்கிறார். அப்பாவின் துணை இல்லாமல் சிறுவயது முதல் அன்னையுடன் தனித்து வளர்ந்த பெண். தன் பெண்ணிற்கும் தன்னுடைய வாழ்க்கை அமைந்து விடக்கூடாது. தானும் தன் குடிகார அம்மாவைப் போல் மாறி விடாமல் இருக்க வாழ்க்கையுடன் போராடி வெற்றி பெறுகிறாள். அவள் கடந்து வந்த பாதை தான் இத்தொடர். உருக்கமான காட்சிகள் பல இருந்தாலும் எல்லை மீறாமல் பார்ப்பவர்களின் மனதை தொட்டு விட்டுச் செல்கிறது.

கணவனின் வன்முறையால் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண் எங்கு செல்வது என்று அனாதையாக பல நேரங்களில் நிற்கும் பொழுது பரிதாபமாக இருக்கிறது. சிறு குழந்தையைத் தனியாக எங்கும் விட்டுச் செல்ல முடியாது என்று அம்மாவை நாடுகிறாள். அம்மாவோ நிலையற்றவள். மகள், பேத்தி மீது பாசமாக இருந்தாலும் அவளுடைய குடிப்பழக்கம், தவறான நட்பினால் வீட்டை இழந்து அவளும் பரிதாபமான நிலையில் அலைகிறாள். எத்தனை இன்னல்கள் இருந்தாலும் அம்மாவுக்குப் பரிவாக நடந்து கொள்கிறாள் நாயகி.

குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான். அந்தச் சிறுபெண் அப்பாவுடன் சில நாட்கள், அம்மாவுடன் சில நாட்கள் என்று விவரம் தெரியாமல் அலைக்கழிக்கப்படுவது, அப்படி வாழ்ந்த குழந்தைகள் பெரியவர்களானதும் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பதும் கேள்விக்குரியதே! ஆண் கதாபாத்திரங்கள் குடிகாரர்களாக, பெண்களை கட்டுக்குள் வைத்திருக்க வன்முறையை கையாளுபவர்களாக, வயதான காலத்தில் திருந்தியவர்களாக வருகிறார்கள். பெண்கள் தங்களை மீறிப் போய்விடுவார்களோ என்ற பயத்தின் காரணமாகவே இந்தக் கோழைகள் பெண்களை, குழந்தைகளைப் பயமுறுத்துவார்கள். எவ்வளவு படித்திருந்தாலும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் அதிலிருந்து மீள்வது அத்தனை எளிதல்ல. போராடித்தான் வெளிவரவேண்டும். அதைத்தான் எடுத்த்துரைக்கிறது இந்த தொடர்.

வீட்டை விட்டு வெளியேறும் நாயகிக்கு முதலில் தேவைப்படுவது வேலை ஒன்று. கையில் பணம் இல்லாமல் யோசித்து யோசித்து செலவு செய்வது அதுவும் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு எத்தனை கடினம்? வீட்டைச் சுத்தம் செய்யும் வேலையைத் திறம்பட செய்வது, மகளுக்கு ஒரு நல்ல தாயாக இருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மகளை முடிந்தவரையில் மகிழ்ச்சியாக வைத்திருக்க பாடுபடுவது என்று அதே நிலையில் இருக்கும் பெண்களின் உணர்வுகளோடு ஒன்றியதாலோ என்னவோ இத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நாயகி வேலை செய்யும் பணக்கார வீட்டுப் பெண்ணிற்கு வேறு வித பிரச்னைகள். பணம் இருந்தால் எல்லாவற்றையும் சமாளித்து விடலாம் என்று எண்ணியிருந்த நாயகிக்கு அது பொய் என்று உணர்த்தும் கதாபாத்திரம். வேலை, வேலை என்று செல்பவர்களும், தேவைக்கு மீறிய பணத்தைச் சம்பாதிக்க முனைபவர்களும் இழப்பது நிம்மதியை மட்டுமல்ல. குடும்பங்களையும் தான். வீட்டில் வேலை செய்யும் பெண் தன் குழந்தைக்காக போராட, பணக்கார பெண்ணோ குழந்தைக்குத் தாயாக முடியாமல் இத்தனை பெரிய வீடு, சொத்துக்கள் இருந்தென்ன என்று புலம்பும் இடத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது ஆறுதல்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசாங்கத்தில் இருந்து ஓரளவு உதவி கிடைத்தாலும் அது சில நாட்களுக்கு மட்டுமே. அப்பெண் குழந்தையுடன் இருக்கும் பொழுதுகளில் அவள் கூடவே நேரத்தைச் செலவிடுவதும், தன்னுடைய கல்வியைத் தொடர முயன்று வெற்றி பெறுவதும், ஏழ்மையிலும் போராட்டத்திலும் தன்னம்பிக்கையுடன் நேர்மையுடன் வாழ்வது( வாழ்ந்தது), புத்தகம் எழுதிய கதாசிரியர் கடந்து வந்த அதே பாதையில் பயணிக்கும் பல பெண்களுக்கும் பாடமாக இருக்கும். முடிவில் தைரியமும் நேர்மையும் கல்வியும் தான் எந்த இக்கட்டான நிலையில் இருந்தும் பெண்களைக் காக்கும். வாக்தேவியின் வலிமை அப்படி! அவள் நம்மோடு இருந்தால் செல்வமும் வீரமும் ஒரு பெண்ணிற்குத் தானாகவே கிடைத்து விடும்.

என்னுடைய அமெரிக்கத் தோழியின் அக்கா பெண்ணிற்கும் இதே நிலைமை ஏற்பட்டு அவள் அலைந்தது கண்முன்னே வந்து நின்றது. அந்தக் குடும்பமும் குடி, போதைப்பொருட்கள், வன்முறை என்றிருந்ததால் குழந்தையுடன் அவளும் பல அவலங்களைச் சந்திக்க நேரிட்டது. நல்ல வேளை! பாட்டி, சித்தி என்ற குடும்ப அமைப்பு அவளை மீட்டு அவளும் தற்போது படித்து முடித்து வேலையில் இருக்கிறாள். அபலைப்பெண்களின் பாதுகாப்பு என்பது அமெரிக்கா மட்டுமல்ல உலகெங்கும் கேள்விக்குறியே! முறையான நெருங்கிய உறவுகளும் நல்ல நட்பும் குடும்ப அமைப்பு மட்டுமே பாதுகாப்பைத் தரும் என்பதை உணர்ந்த குடும்பங்கள் ஏழ்மையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நாயகியாக நடித்த பெண் அனாயசமாக நடித்திருக்கிறாள். அவளுடைய குரலும், பெரிய கண்களும் அக்கதாபாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறது. வலி, ஏமாற்றம், நிராசை, கோபம் என்று கண்ணீரை அடக்கிக் கொண்டு நடிக்கையில் கலங்க வைக்கிறார் அம்மணி. அவரைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டுகையில் பார்வையாளர்களுக்கும் அந்த கதாபாத்திரத்தின் மேல் மரியாதை வருகிறது.

நாயகிக்கு எழுதுவதில் ஆர்வம். தன்னுடைய அனுபவங்களை, சந்தித்த மனிதர்களைப் பற்றின குறிப்புகள் அடங்கிய அவளுடைய எழுத்தினால் கல்லூரியில் மீண்டும் சேர்ந்து படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. தொடரின் இறுதியில் 338 கழிப்பறைகளைச் சுத்தம் செய்து, ஏழு விதமான அரசாங்க சலுகைகளைப் பெற்று ஒரு வருடத்தில் ஒன்பது இடங்களில் தங்கி தன்னுடைய கனவை நனவாக்கியதாக வரும் வாசகங்களுடன் முடிவடைகிறது இத்தொடர்.

அமெரிக்காவின் மறுபக்கம் மிகவும் கொடூரமானது. உடைந்த குடும்பங்களின் வலியை, துயரத்தை, குடும்ப வன்முறையின் பாதிப்பை வாழ்க்கைப் பயணத்தின் வழியே பல தடைகளைகே கடந்து, தனக்கும் தன் குழந்தைக்குமான புதிய உலகை தன்னுடைய கனவை எவ்வாறு ஒரு பெண் நனவாக்குகிறாள் என்பதை மிக அழகாக தொடராக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

"Maid " நேர்மையுடன் செய்யும் எந்த வேலையும் இழிவல்ல. முயன்றால் எதுவும் சாத்தியம் எனும் நம்பிக்கையை அளிக்கும் தொடர். 




No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...