Friday, November 26, 2021

மீனாட்சி சுந்தரேஸ்வர்


நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக பார்த்த படம் "மீனாட்சி சுந்தரேஸ்வர்." அவர் என்ன நினைத்து இந்தப் படத்தைப் பாருங்கள் என்று சொன்னாரோ தெரியாது. முதல் காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம், காரைக்குடி வீடுகள், தெருக்கள், கதை மாந்தர்களின் உடையலங்காரளைப் பார்த்தவுடன் தமிழ்ப்படமோ என்று எண்ணி துவக்கத்திலேயே கொஞ்சம் ஏமாற்றம்.

செட்டியார் வீடுகள், பிராமண பாஷை என்று சொல்ல முடியாத ஒரு பேச்சு வழக்கு, சேலை கட்டிய அச்சு அசல் தமிழ்க்குடும்பமாக காண்பித்து ஹிந்தியில் பேசுவது சற்றும் பொருத்தமில்லாத கதை அமைப்பு. போனால் போகிறதென்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் தமிழ் வார்த்தைகள். ஒரு படத்தை அதன் வட்டாரத்தில் எடுத்தால் அங்கு பேசும் மொழியில் எடுத்தால் என்ன? தமிழ்க்குடும்பங்களாக காண்பித்தால் தமிழில் பேசித் தொலையுங்களேன். படம் முழுவதும் தொடர்ந்தது இந்த எரிச்சல்.

நகைச்சுவையிலும் சேராது. எதார்த்தம் என்று வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் எரிச்சலைக் கூட்டுகிறது. பெண் பார்க்க வரும் காட்சியிலிருந்தே எதார்த்தத்திலிருந்து வெகு தொலைவிற்குச் சென்று விடுகிறது படம். எப்படித்தான் இப்படியெல்லாம் காட்சிகளை வைப்பார்களோ என்ற கோபம் தான் மிஞ்சுகிறது. ஒருவரை ஒருவர் விரும்பி செய்து கொள்ளும் திருமணத்தில் வேலை காரணமாக கணவன் வேறு ஊருக்குச் சென்று விட, மனைவிக்கும் கணவனுக்கும் இடையே நடக்கும் ஊடல். தொலைதூர திருமணங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றின கதை. பொதுவாகவே தொலைதூர காதல்/திருமணங்கள் நிலைப்பதில்லை என்ற அபிப்பிராயம் உண்டு. அதையும் மீறி சில "அபூர்வ"உறவுகள் வெற்றி பெறுவதுமுண்டு. இக்கதையில் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பெண்ணிற்கும் தன்னுடைய கனவை நோக்கி நகரும் ஆணுக்கும் இடையே நடைபெறும் உடல், மன போரட்டம் பற்றி பேசுவதாக நினைத்து அபத்தமாக எடுத்திருக்கிறார்கள். படுத்தியிருக்கிறார்கள் பார்வையாளர்களை😡

நெட்ஃபிளிக்ஸ்ல் வந்திருக்கும் இப்படத்தை மொழி, கலாச்சாரம் அறியாத ஒரு அமெரிக்கன் பார்த்தால் என்ன நினைத்திருப்பான்? பெரியவர்கள் ஏற்பாடு செய்யும் திருமணம் என்பது இது தானா? கூட்டுக்குடும்பம் என்றால் இப்படித்தானா? திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வேலை இல்லை என்று சொல்லும் பெரும் நிறுவனங்கள் கூட இந்தியாவில் இருக்குமா என்ற பிற்போக்குத்தனங்கள் நிறைந்த அறுவை இந்தப் படம்.

மணிரத்னம் பட ஸ்டைலில் வசனங்கள். கறி தோசை சாப்பிடும் உணவகம் பார்க்க காலேஜ் ஹவுஸ் போல பொருத்தமே இல்லாத காட்சி அமைப்பு.
"என்ஜினியர்கள் நல்ல கணவர்களாக இருப்பார்கள்" என்று வேறு ஒரு வசனம்! மற்றவர்கள் என்ன தொக்கா😄 நல்லா வைக்கிறாய்ங்கப்பா வசனத்த😞 

தமிழ் கலாச்சாரம் என்று இவர்களாகவே ஒன்றை உருவகப்படுத்தி இருப்பது தான் மகாகேவலம். ரஜினி ரசிகையாக வரும் நாயகி பல ஹிந்தி படங்களில் நன்றாக நடித்திருப்பார். இந்த படத்தில் கொடுத்த காசிற்கு மேலாகவே செயற்கை நடிப்பு. உணர்ச்சியற்ற நாயகன்.  

சுறா வரிசையில் சேரும் இந்த மொக்கைப்படம்.

மதுரையை மையமாக வைத்து ஒட்டாமல் செல்லும் கதையோட்டம். படத்தில் மதுரையைத் தேடினேன். கதையுடன் என் ஊரையும் காணவில்லை. 







No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...