Tuesday, November 9, 2021

Squid Games

கோவிட் காலகட்டத்தில் அமெரிக்கர்கள் பலரும் கொரிய தொடர்களுக்கு அடிமைகளாகி விட்டிருப்பது உண்மை. அதனால் பிரபல தென் கொரிய தொடர்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரசியல், காதல், குடும்பம், அலுவலகம், ராணுவம் என கொரியன் தொடர்கள் பல கதைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருந்தாலும் கொரியாவில் குழந்தைகள் விளையாடும் ஒரு விளையாட்டினை அடிப்படையாக கொண்டு தற்போது வெளிவந்துள்ள நெட்ஃப்ளிக்ஸ் தொடர் முற்றிலும் வேறு தளத்தில் இருக்கிறது. அமெரிக்கர்களையும் கவர்ந்து சக்கைப் போடுபோடுகிறது 'Squid Games' தொடர். 

மென்மையான காதல் தொடர்களைப் பார்த்தவர்களுக்கு இது ஒரு 'அதி பயங்கரமான வன்முறையான' தொடராக இருப்பதில் ஆச்சரியமில்லை! தான் உயிரோடு வாழ்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றால் மனிதன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை மிக குரூரமாக சொல்லி இருக்கிறார்கள். செல்வந்தர்களின் பொழுதுபோக்காக, வறுமையில் வாடுபவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அவர்களுக்குள் நடக்கும் போட்டிகளும் அதில் வெற்றி பெற நடக்கும் திட்டமிடுதல்களும் , இழப்புகளும் என்று சுவாரசியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். குடி, சூதாட்டம் ஒருவனின் வாழ்க்கையைச் சிதைத்து அவனைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையையும் பாழாக்குகிறது. தாய் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அவநம்பிக்கையாக்கும் கதாபாத்திரம், பிரிந்திருக்கும் பெற்றோரையும் சகோதரனையும் காக்க வேண்டிய பொறுப்பில் இளம்பெண் ஒருத்தி, அவர்களுக்குள் ஒரு வில்லன் கோஷ்டி என சிறு சிறு கதாபாத்திரங்களை வைத்து விளையாடும் விளையாட்டில் தோற்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். முடிவில் ஜெயிப்பவர் மொத்த பணத்தையும் அள்ளிக் கொள்ளலாம் . இதற்கிடையில் காவல் அதிகாரி ஒருவர் இங்கு நடக்கும் அக்கிரமங்களைக் கண்டுபிடிக்கிறார். அவருடைய நிலை என்ன? அடுத்த தொடரில் விடை இருக்குமா?

பணம் படைத்த வர்க்கம் பொழுதுபோக்கிற்காக ஏழைகளின் உயிரோடு விளையாடுவதும் அவர்களின் உயிரை துச்சமாக எண்ணுவதும் என நிகழ்காலத்தினை நினைவுப்படுத்துவதாலோ என்னவோ இத்தொடர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தொடரில் ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வின்றி ஒவ்வொரு பாகத்தையும் கவனமாக கையாண்டிருக்கிறார்கள். 

"அம்மா, என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் கொரியன் டிராமா பார்க்கிறாங்க."

ஆமாடா. நல்லா இருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு.

 "ஐயோ அம்மா! அவங்கள்லாம் கொரியன்ஸ், ஏசியன்ஸ்."

இருந்துட்டுப் போறாங்க. எனக்குப் பிடிக்குது. நான் பார்க்குறேன். 

இனி எண்ட நாடு சௌத் கொரியா! 
எண்ட கொரியன்  மாதவன் தான் யாருன்னு தெரியல 😉😉😉

No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...