மவுண்ட் வாஷிங்டன் மலையுச்சியில் ரயிலிலிருந்து இறங்கினால் மூடுபனி முத்தமிட, மலைக்காற்றில் பனிக்கால உடைகளையும் மீறி ஈரமும் குளிரும் உடலைத் தழுவிக் கொண்டது. விரைந்து கையுறைகளையும் மாட்டிக் கொண்டோம். உலகத்திலேயே அதிகமாக மாறும் தட்பவெப்பம், ஆபத்தான வானிலையைக் கொண்ட இந்த மலையுச்சியில் படமெடுத்துக் கொள்ள அங்கே வரிசையில் காத்திருந்த மக்களுடன் நாங்களும் ஐக்கியமானோம். எங்களுக்குப் பின்னால் நின்றிந்த குடும்பத்தலைவர், "எங்க நல்லா சிரிங்க" என்று எங்கள் இருவரையும் படமெடுத்தார். பிறகு தனித்தனியாக நாங்களும் படங்களை எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம்.
பனிமூட்டம் இல்லாத நாட்களில் நியூ ஹாம்ப்ஷயர், மெயின், வெர்மாண்ட் , மாஸசூசெட்ட்ஸ் , நியூயார்க், கனடா, அட்லாண்டிக் கடல் கூட தெரியும் என்று அறிவிப்பு பலகையில் போட்டிருந்தார்கள். எங்கள் கண்களுக்கு மூடுபனி தவழ்ந்து செல்லும் நியூஹாம்ப்ஷயரின் மலைகள் மட்டுமே மங்கலாக தெரிந்தது. அதாவது தெரிந்ததே என்று ஆறுதல். எந்தப் பருவத்தில் வந்தாலும் மலையுச்சியில் பருவநிலை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினமே. அன்று மழை பொழியும் வாய்ப்பிருப்பதாக அந்த ஊர் 'அருணன்' கூறியிருந்தாலும் போக்கு காட்டிக் கொண்டிருந்தது கருமேகங்கள்.
நியூ ஹாம்ப்ஷயர் மாநிலம் மலையால் சூழப்பட்டுள்ளது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைகள் மட்டுமே! குளிர் அதிகமாக, அங்கிருக்கும் உணவக கட்டடத்திற்குள் ஆசையுடன் நுழைந்தால் கொரோனாவிற்குப் பயந்து உணவகத்தை மூடிவிட்டிருந்தார்கள். நல்ல வேளை! கழிப்பறை வசதிகள் இருந்தது. குளிருக்குப் பயந்து அனைவரும் அந்த கல் கட்டடத்தில் ஒதுங்கி இருந்தனர்.
வெளியே ஒரு பெண் விதவிதமாக போஸ் கொடுத்து கணவனைப் படம் எடுக்கச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்களுடைய சிறு குழந்தை அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. இன்ஸ்டாகிராம்ல் போடுவதற்கென்றே சில போஸ்கள் இருக்கிறது. ஒன்றையும் விடாமல் எடுத்துக் கொண்டாலும் சில பல செல்ஃபிகளை எடுக்கவும் மறக்கவில்லை அப்பெண்😃 ஆனால் படங்கள் எடுத்துக் கொள்வதில் சைனீஸ் அம்மணிகளை மிஞ்ச முடியாது! ஸ்மார்ட்ஃபோன் உலகம் நம்மை பைத்தியங்களாகவே மாற்றியிருக்கிறது என்பதை ஒதுங்கி இருந்து பார்த்தால் தெரிகிறது😄 நேரம் போனதே தெரியவில்லை. அங்கிருந்த பரிசுப்பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்று நுனிப்புல் மேய்வது போல் வேடிக்கைப் பார்த்தோம். வெள்ளையர்கள் பலரும் வரிசையில் நின்று அங்கு வந்து சென்றதற்கான நினைவுப் பரிசுகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களால் தான் இப்படிப்பட்ட கடைகள் நஷ்டமில்லாமல் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டேன்.
கோடை, இலையுதிர்கால பருவங்களில் அதிகமான மக்கள் கார், ரயில்,நடைப்பயணம் மூலம் மவுண்ட் வாஷிங்டன் மலையேறுகிறார்கள். குளிர்காலத்தில் கடுமையான காற்று, பனி இருந்தாலும் மவுண்ட் வாஷிங்டனின் மிகவும் அழகான பருவம் என்பதால் மலையேறுபவர்களின் வருகையும் கணிசமாகவே இருக்கும் என்பதையும் தெரிந்து கொண்டோம். இரவு நேரப்பயணங்கள் அதற்கென முறையாக பயிற்சி பெற்ற நிறுவனங்களுடன் சென்று வர முடியும். பனியில் சென்று வர உதவும் வண்டிகள் , வழிகாட்டிகள் என்று அனைத்து வசதிகளும் உள்ளது. குழந்தைகளுடன் வரும் பொழுது நிச்சயமாக சாகச பயணத்தை முயற்சி செய்ய வேண்டும். அவர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டோம்.
சூறாவளிக்காற்று,பனிப்புயல், உறைபனிக்கும் கீழான தீவிரமான வெப்பநிலை நாட்களைத்தவிர மற்ற எல்லா நாட்களிலும் மலையேற அனுமதிக்கிறார்கள். மவுண்ட் வாஷிங்டனின் அல்பைன் மண்டலம், பாறை, பனி மற்றும் பனியின் மற்றொரு உலக நிலப்பரப்பைப் பற்றித் தீவிரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் இடமாகவும் உள்ளது.
தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட்டு தொடர்ந்து 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த கா1க்3 ரயில் நியூஹாம்ப்ஷயரின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இருந்தாலும் வருடத்தில் 250,000 பயணியர்கள் வந்து செல்வதால் அரசுக்கும் வருமானம் ஈட்ட வகை செய்கிறது. அப்பகுதியில் அவரவர் வசதிக்கேற்ப விடுதிகளுக்கும், உணவகங்களுக்கும் குறைவில்லை. நன்கு பராமரிக்கப்பட்ட சாலைகள் என்று அரசும் தன் பங்கிற்கு குறைவில்லாமல் பயணிகளுக்கான வசதிகளை அளிக்கிறது.
இந்தியர்கள், ஆசியர்கள் அதிகமிருந்த அந்த இடத்தில் மருந்துக்கு கூட கறுப்பர்களோ, தென்னமெரிக்க குடிகளோ கண்களில் தென்படவில்லை. வெளிமாநிலங்களுக்குச் சென்று செலவழித்து விடுமுறையைக் கொண்டாடுபவர்களாக பெரும்பாலும் வெள்ளை அமெரிக்கர்களே உள்ளனர். அவர்களை அடுத்து ஆசியர்களும் இந்தியர்களும். பள்ளி திறந்து விட்டதால் கைக்குழந்தைகள் தவிர மற்ற குழந்தைகள் இப்பயணத்தில் இல்லை. பெரும்பாலும் ஒய்வு பெற்ற, வயதான வெள்ளையர்கள். எங்களைப்போன்ற ஆசியர்கள், இந்தியர்கள்!
நாங்கள் கீழிறங்கிச் செல்லும் நேரம் நெருங்க, மீண்டும் ஒரு முறை மலையுச்சியைச் சுற்றி வந்தோம். அங்கிருக்கும் கட்டடங்களை இறுக்கமாக இரும்புச் சங்கிலிகளால் கட்டியிருந்தார்கள். வண்டியில் பயணித்தவர்கள் அங்கிருந்த படிகளில் ஏறிவருவதைப் பார்த்தவுடன் "நாமும் காரில் மலையேறுவோம். நன்றாக இருக்கும்" என்று ஈஷ்வர் திகிலூட்டினார்😟
வரிசையில் வட இந்திய குடும்பங்கள் நிற்க, இந்த வண்டியில் தான் நாமும் திரும்ப வேண்டும் என நாங்களும் நின்று கொண்டோம். அவரவர் இருக்கையில் அமர்ந்து கொள்ள,என் இருக்கைக்கு அருகில் கணவன், மனைவி வெள்ளை அமெரிக்கர்கள். இருவரும் கொடுத்த காசிற்கு மேல் இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள். நான் வந்தவுடன் சிரமப்பட்டு எனக்கான இருக்கையைக் கொடுத்து விட்டு அமர்ந்தார்கள். பெட்டியில் பயணித்த அனைவரும் முக கவசம் அணிந்திருந்தது நிம்மதியாக இருந்தது. அதுவும் தாடைக்கு அணியாமல் முறையாக மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டிருந்ததுஅப்பாடா என்றிருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் அமர்ந்திருந்தோம்.
வண்டி மிகவும் மெதுவாக கவனமாக இறங்க, அப்பொழுது தான் பல் சக்கரத்தின் அவசியத்தைத் தெரிந்து கொண்டேன். இந்த வண்டியில் 'brake woman' பேசிக்கொண்டே வந்தார். மூடுபனி விலகியதும் வண்ண வண்ண மலைகள் கண்களுக்கு விருந்தாக, அனைவரும் படங்களை 'க்ளிக்'கிக் கொண்டோம். என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணியின் கணவர் வேண்டாவெறுப்பாக வந்தவர் போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தாலும் அந்தப் பெண்மணி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்😆
வழியில் 'மௌண்டைன் கிரான்பெரிஸ்' மரங்கள் இம்மலையின் ஸ்பெஷல் என்று 'brake woman' கைகாட்டினார். உடனே அனைவரும் படங்கள் எடுத்துக் கொண்டோம். மரங்களற்ற கடும் பாறைகள் மறைந்து, மரங்களுடன் இருந்த ஆல்பைன் மண்டலத்தைக் கடக்க, தூரத்தில் சமவெளியில் பச்சைப்பசேல் புல்வெளியும், வண்ண வண்ண மரங்களும், ரயில் நிலைய கட்டடங்களும், வண்டி நிறுத்தத்தில் கார்களும் மினியேச்சர்களாக தெரிந்து அருகில் செல்ல செல்ல முழு உருவங்களும் தெரிய ஆரம்பித்தது. பசியும் எடுக்க, அங்கிருந்த உணவகத்திற்குப் படையெடுத்தோம். எல்லாமே சுவையாக இருந்தது. மணி மூன்று தான் ஆகியிருக்கிறது. அடுத்து எங்கு செல்லலாம் என்று கூகிள் ஆண்டவரைத் தேடினால் அழகான அருவி ஒன்றிற்கு செல்லுமாறு கட்டளையிட்டார். பிறகென்ன, விடு ஜூட்!
படங்கள்: நியூ இங்கிலாந்து - நியூஹாம்ப்ஷயர் 2
(தொடரும்😉)
No comments:
Post a Comment