Thursday, December 9, 2021

அஞ்சலி

இந்தியாவில் இருக்கும் வரை ராணுவத்துக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றிருக்கும் சாமானிய தமிழனின் மனப்போக்கில் தான் நானும் இருந்தேன். பயணங்களில் ராணுவீரர்கள் சிலரைப் பார்த்திருக்கிறேன். திரைப்படங்கள் மூலமாக அறிந்து கொண்ட ராணுவத்தில் கூட வட நாட்டு முகங்கள் அதுவும் சீக்கியர்கள் தான் அதிகமிருந்தனர். ஒட்டு மொத்த இந்தியாவில் பஞ்சாப் மாநில மக்கள் தான் அதிகமாக ராணுவத்தில் பணிபுரிவார்களோ? அவர்களுக்குத் தான் நாட்டுப்பற்று அதிகமோ என்று அதிசயித்து இருக்கிறேன். படிக்கும் வயதில் இலங்கையில் நடந்த கலவரங்கள், உண்மை எது பொய் எது என்று தெரியாமல் இந்திய ராணுவத்தின் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். ராணுவத்தினருக்கு ஏகப்பட்ட சலுகைகள் என்று சொல்ல தெரிந்த தமிழனுக்கு அவர்களின் வாழ்க்கை எத்தனை கடினமானது என்று புரிய வைக்க மறந்த தில்லாலங்கடிகள் நமக்கு வாய்த்த தலைவர்கள்.

மூலக்கரை குடியிருப்பில் வாழ்ந்த பொழுது பக்கத்து வீட்டுப் பெண்ணின் அண்ணன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவுடன் ஊருக்குத் திரும்பியிருந்தார். மரியாதையான மனிதர். அவருடைய நண்பர் ஒருவர் பட்டாளத்தில் இறந்து விட்டதாகவும் அவர் மகளுக்கு டியூஷன் எடுக்க முடியுமா என்று கேட்டார். அந்தப் பெண் மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அதுவும் சென்ட்ரல் போர்ட். அய்யோயோ என்னால முடியாது என்று தவிர்க்கப் பார்த்தேன். ஆனாலும் அவள் அப்பா நாட்டுக்காக உயிரையே துறந்திருக்கிறார். இந்தப்பெண்ணுக்கு இச்சிறு உதவி கூட செய்யவில்லையென்றால் படித்து என்ன பயன் இருக்கிறது என்று ஒத்துக் கொண்டேன். 

முதலில் கணிதத்தில் தடுமாறுவதாக சொன்னவள் மெதுவாக கெமிஸ்ட்ரியும் என்று ஆரம்பித்தாள். அவளுக்காக நான் முன்கூட்டியே பாடங்களைப் படித்துச் சொல்லிக் கொடுக்க, அவளும் தேறி விட்டாள். வகுப்புகள் முடிந்த பிறகு பணத்தைக் கொடுக்கையில் வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் நன்றி கூறி கொடுத்து விட்டே சென்றாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒருவித மன நெருடல் இருக்கும். இவளைப் போல எத்தனை குழந்தைகள் அப்பா இல்லாமல் இந்த நாட்டில் இருப்பார்களோ? அவளுடைய அம்மாவும் பாவம் தான். டெல்லியில் வளர்ந்ததால் சரளமாக ஹிந்தியில் பேசுவாள். நிச்சயமாக விடுமுறையில் மட்டுமே அவளுடைய அப்பாவுடன் நேரத்தைக் கழித்திருப்பாள். இப்படி பல தியாகங்கள் செய்த குடும்பங்கள் போட்ட பிச்சையில் தான் நம் வீடுகளில் நாம் நிம்மதியாக உறங்குகிறோம் என்ற உண்மை உறைத்திருந்தால் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த நம் நாட்டின் முப்படை தளபதியையும் ராணுவ வீரர்களையும் கிண்டலும் கேலியுமாக பேசுவதற்குத் தகுதியற்றவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மனவக்கிரங்களைக் கொட்டுவதைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. அற்ப பதர்கள்! இந்த மனவியாதியஸ்தர்களுக்கும் சேர்த்து தான் இறந்தவர்கள் பணிபுரிந்தார்கள். ராணுவத்தினர் இன்றும் பணிபுரிகிறார்கள். என்றும் பணிபுரிவார்கள்.

சமயங்களில் சிங்கப்பூர், தென்கொரியா நாடுகளில் இருப்பதைப் போன்று இந்தியாவிலும் இளைஞர்கள் அனைவரும் இரண்டு வருடத்துக்கு ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தால் தான் வாழவே தகுதியில்லாத அதுவும் மேற்கு வங்காளம், கேரளா, தமிழகத்தில் அதிகம் பீடித்திருக்கும் இந்த மாதிரி ஜந்துகளுக்குப் புத்தி வருமோ?

ஹெலிகாப்டர் விபத்தில் மரணித்த முப்படை தளபதி, அவர் மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் ஆத்மா சாந்தி பெறட்டும். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ஹரி ஓம்!  

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...