Wednesday, December 29, 2021

Sardar Udham



வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் சமீபத்தில் வெளிவந்துள்ள பல ஹிந்தி திரைப்படங்களில் "சர்தார் உதம்" சிறந்த படம். வரலாற்றுப் புத்தகங்களில் நாம் படித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்பான சம்பவங்களை மீண்டும் கண்முன் நிகழ்த்தியிருந்தார்கள்.

பள்ளிகளில் நமக்கு கற்பிக்கப்பட்ட இந்தியாவைப் பற்றின உண்மையான வரலாறு என்பது மிகவும் குறைவு. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் அடிமைப்படுத்தப்பட்ட இந்தியா அதற்கு முன் எத்தகைய செல்வச்செழிப்புடன் இருந்தது, நமது செல்வங்களை எப்படி எல்லாம் ஆங்கிலேயர்கள், போர்ச்சுக்கீசியர்கள், அவர்களை அடுத்து வந்த முகலாயர்கள் சூறையாடினார்கள் என்பதை சாதுரியமாக நம்மிடம் மறைத்து விட்டதில் இருக்கிறது காங்கிரசின் அரசியல். அது மட்டுமில்லாமல் இந்துக்களின் அடையாளங்களை அழிக்கும் விதமாக இஸ்லாயமியர்கள் சிதைத்த கோவில்களும், பெண்களும், குழந்தைகளும், குடும்பங்களும் எண்ணில் அடங்காதவை. ஆனால் ராபர்ட் கிளைவ், லார்ட் மௌண்ட்பேட்டன், கோரி முகம்மது, கஜினி முகம்மது, திப்பு சுல்தான் என்று அவர்களைப் போற்றிப் படிக்கிறோம். இவையெல்லாம் நம் மேல் திணிக்கப்பட்ட பொய் வரலாறு என்பதை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டும். அந்த விதத்தில் மிகவும் நன்றாக எடுக்கப்பட்ட படம் இது. அனைத்துப் பள்ளிகளிலும் இப்படத்தைத் திரையிட்டு நம் நாட்டின் விடுதலைக்காக காந்தி தலைமையிலான காங்கிரஸ் தவிர்த்து எத்தனை இயக்கங்கள் போராடி உயிரிழந்திருக்கின்றனர் என்ற உண்மையையும் புரிய வைக்க வேண்டும்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவன் படுகொலையைத் திட்டமிட்டு செய்த ஜெனரல் டயர், அவருடைய உயர் அதிகாரி மைக்கேல் டுவெயர் என்பவரைப் பழிவாங்க இங்கிலாந்து செல்வதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. இந்தியாவிலிருந்து எப்படித் தப்பித்து, லண்டன் வந்து சேர்ந்தார், அங்கு ஆறு ஆண்டுகள் வரை டுவெயரைத் தொடர்ந்து கண்காணித்து நேரம் வரும் பொழுது கொன்றது, அவரை விசாரிக்கும் அதிகாரியிடம் ஏன் இந்தப் படுகொலையை செய்ய நேரிட்டது என்று அவர்கள் தரப்பு அநியாங்களைச் சொல்கிறது இப்படம். மெதுவாக நகர்ந்தாலும் சில வசனங்களும், காட்சிகளும் நாம் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை மட்டும் சொல்லாமல் சொல்கிறது. நடிகர் விக்கி கௌஷல் இந்த கதாபாத்திரத்தில் பொருந்திப் போயிருக்கிறார். பகத்சிங் மற்றும் இந்திய புரட்சிகர அமைப்பு இளைஞர்களின் தியாகத்தையும் இன்றைய தலைமுறை அறிந்து கொள்வது அவசியம்.

நாகரீகத்தில் பின்தங்கியவர்களாக, படிப்பறிவில்லாத சமூகமாக இருந்த இந்தியாவைக் காக்க வந்தவர்கள் கிழக்கிந்திய கம்பெனி போல இங்கிலாந்து மக்களை நம்ப வைத்து அவர்களின் கொலைகளையும், கொள்ளைகளையும் நியாப்படுத்தியிருக்கிறார்கள். இன்றைய காலம் போல அன்று தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாதது தான் அவர்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டது. அவர்களின் பொய்யை மெய்யென நம்பியவர்கள் மத்தியில் இந்தியாவைப் பற்றின பிம்பம் மிகவும் தாழ்வாக, கேலிக்குரியாதகாவே இருந்திருக்கிறது. இருந்து வந்தது சில வருடங்களுக்கு முன்பு வரையில் கூட!

உலகப்போரில் இங்கிலாந்திற்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் பங்கு கொண்டு உயிர் இழந்திருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் அவற்றைப் பற்றி எங்கும் மூச்சு விடாமல் இன்று வரையிலும் நமக்கும் உலகப்போர்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருக்கிறோம். பிரிட்டிஷார் வந்து தான் நம் நாட்டை முன்னேற்றினார்கள் அவர்களே ஆண்டு இருக்கலாம் என்ற நச்சு விதையை இன்று வரையில் பரப்பிக் கொண்டுத் திரியும் மூடர்கள் நிறைந்த நாட்டில் "இந்தியாவிற்கு இந்தியர்களே எதிரி" என்ற நிலை தற்போது மிகவும் தீவிரமாக உள்ளது. அபாயகரமானதும் கூட.

இத்தனைப் படுகொலைகளை, இந்தியாவின் கனிம வளங்களை, செல்வங்களைச் சூறையாடிய கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம் இன்று வரை மன்னிப்புக் கோரவில்லை.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம், கட்டபொம்மன் போன்ற படங்களைப் பள்ளியில் இருந்து அன்று அழைத்துச் சென்றார்கள். இன்று வரலாறு என்பது என்னவென்றே அறியாத சமூகம் பொய், புரட்டு அரசியலால் வெறுப்பைச் சுமந்து கொண்டு அலைகிறது. இந்தியர்கள் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் இருந்து அகற்றும் இத்தகைய விஷ சக்திகள் நாட்டில் பெருகிவிட்ட நிலையில் உண்மையான வரலாறை அறிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அதன் முதல் முயற்சியாக "சர்தார் உதம்" போன்ற படங்களை வரவேற்று மாணவர்களுக்குத் திரையிட்டு காண்பிப்பது அவசியம்.

ஒரு நாட்டின் உண்மையான வரலாறு என்னவென்று அறியாதவர்களால் தாய் நாட்டைப் போற்றிப் பாதுகாக்க முடியாது.

என்னுடைய வரலாற்று ஆசிரியர் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு, எத்தனை பேர் இறந்தார்கள், யாரால் இறந்தார்கள் என்று சொல்லிக் கொடுத்தாரே ஒழிய, ஏன், எவ்வாறு ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டோம், எப்படி 100 ஆண்டுகள் வரை நம் செல்வங்களைச் சூறையாடி நம்மை வறுமையில் தள்ளினார்கள் என்று அவரும் உணர்ச்சியுடன் பாடம் நடத்தி தன் உன்னத கடமையைச் செய்யவில்லை. நாங்களும் கேட்கும் வயதில் இல்லை. இன்று நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.

"S I X G L O R I O U S E P O C H S" by V. D. Savarkar, "India A Wounded Civilization" by V.S.Naipal,"An Era of Darkness The British Empire in India" by Shashi Tharoor புத்தகங்கள் நம் உண்மையான வரலாற்றை நம் சந்ததியினரும் அறிந்து கொள்ள உதவும். எத்தனை உயிர்களை இழந்துப் பெற்ற சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதை அறியாதவரை நாம் அடிமைப்பட்டுக் கொண்டே தான் இருப்போம்.










No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...