பனிக்காலம் வேறு ஆரம்பித்தாகி விட்டது. நல்ல நாளிலேயே நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம், ஹுலு என்று பொழுது போகும். இப்பொழுது கேட்கவா வேண்டும்? சமீபத்தில் பார்த்த திரைப்படம் 'The Unforgiveable'. அப்படி ஒன்றும் ஆகா, ஓகோ என்ற படம் அல்ல. சாதாரண திரைக்கதை தான். ஆனால் அதைப் படமாக்கிய விதம் தான் இந்த படத்தைப் பார்க்க வைக்கிறது என்று நினைக்கிறேன்.
சிறைக்குச் சென்று திரும்புபவர்கள் சமுதாயத்தில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதையும் இழந்த உறவுகளை மீட்க போரிடும் மனப்போராட்டத்தையும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள். சிறையில் இருந்து திரும்புபவர்கள் மீண்டும் எந்தப் பிரச்னையிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக போலீஸ் அவர்களை கண்காணிப்பதும் வேறு குற்றவாளிகளின் சகவாசம் அவர்களுக்கு இருக்க கூடாது என்பதும் நல்ல திட்டங்கள் தான். அத்தனை கஷ்டங்களிலும் நாயகிக்கு உறுதுணையாக ஒரு குடும்பம் உதவுகிறது. நாயகியால் நிம்மதியை இழந்த குடும்பம் அவரைப் பழிவாங்க துடிக்கிறது. தன் ஐந்து வயது தங்கையை விட்டு விட்டு இருபது வருடங்கள் சிறையில் இருந்த பெண் விடுதலையானதும் அவளைத் தேடி கண்டடைந்தாளா? மீண்டும் சேர்ந்தாளா? என்பது தான் கதை.
அமெரிக்காவில் தத்து எடுத்து வளர்ப்பது என்பது நடைமுறையில் உள்ள பழக்கம் தான். அதற்குப் பரந்த மனப்பான்மை வேண்டும். வெள்ளையர்கள் வெள்ளையர்களைத் தத்தெடுத்தாலும் அந்தக் குழந்தைகளின் மனப்போராட்டத்தில் தத்தெடுத்த பெற்றோர்களும் குடும்பங்களும் கூட பாதிப்புக்குள்ளாகும். கலாச்சாரம், நிறம், நாடு என்பதையும் தாண்டி சில வெள்ளை அமெரிக்கர்கள், கறுப்பின, தென் அமெரிக்க, ஆசிய குழந்தைகளைத் தத்தெடுத்திருப்பார்கள். எத்தனை பெரிய மனதிருந்தால் இப்படி எல்லாம் செய்ய முடியும் என்று நினைத்துக் கொள்வேன். என்ன தான் அவர்கள் அன்பாக அந்தக் குழந்தைகளை வளர்த்தாலும் தத்துக் குழந்தைகள் சில மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள் என்பதே உண்மை. இந்தப் படத்திலும் அப்படித்தான் நிகழ்கிறது.
நாயகியாக சாண்ட்ரா புல்லக் நன்றாக நடித்திருக்கிறார்.
No comments:
Post a Comment