Thursday, December 16, 2021

மாதங்களில் அவள் மார்கழி 1


மார்கழி என்றதும் நினைவிற்கு வருவது ஆண்டாளும், திருப்பாவையும், குளிர்காலைப் பொழுதில் வாசலில்  பெண்கள் இடும் அழகிய கோலங்களும், பரந்தாமனின் கீர்த்தியைப் பஜனைப் பாடிச் செல்லும் பக்தர்களும் தான். திருமால் வீற்றிருக்கும் அனைத்து தலங்களிலும் ஆழ்வார்களின் பாசுரங்கள் எதிரொலிக்கும் இனிய மாதம். வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு பகல் பத்து உற்சவம் நடைபெறும் நாட்களில் கிடைக்காத மூலவர் தரிசனம் வைகுண்ட ஏகாதசியன்று முதல் திரும்ப கிடைக்கும். இராப்பத்து உற்சவமும் தொடங்கி பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. திவ்யதேசங்களில் பெருமாளுக்கு அலங்காரங்களும் பூஜைகளும் ஏகாந்தமாக நடைபெறும். தூர தேசத்தில் இருந்தாலும் நான் சென்று தரிசித்து வந்த திவ்ய தேசம்,  மதுரையில் அமைந்துள்ள பெருமாள் கோவில்களை நினைத்துக் கொள்கிறேன். 

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான கோதை  என்றழைக்கப்படும் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே 'திருப்பாவை' என்றழைக்கப்படுகிறது. இந்த ஆண்டாள் பாசுரங்கள் மார்கழி மாதத்தில் தினமும் கோவில்களில் பாடப்படும் முக்கிய பாடல்களாகும்.

திருப்பாவைப் பாடல்கள் ஒவ்வொவன்றின் எளிய தமிழும் ஆண்டாளின் அன்பும் பெருமாளின் பராக்கிரமங்களும் படிப்போரை வசப்படுத்தும். பல வருடங்களாக தமிழில் எழுதாமல் இருந்த பழக்கத்தை மாற்றும் விதமாக மார்கழி மாதம் முழுவதும் தினம் ஒரு திருப்பாவைப் பாடலை என் கைப்பட அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதிப் பார்க்க ஆசை. கோணல்மாணலாகத் தான் வருகிறது. மாதம் முடிவதற்குள் பள்ளிக்காலத்தில் எழுதிய எழுத்துக்கள் போல வந்து விடும் என்ற நப்பாசை தான்😊 ஆசை நூறு வகை. அதில் இதுவும் ஒரு வகை😉

திருப்பாவைப்பாடல்கள் மற்றும் அதன் பொருளை இந்த சுட்டியின் மூலம் அறிந்து கொண்டேன். அதையே என் கைப்பட எழுதிப்பார்க்கிறேன்.

திருப்பாவைப் பாடல்களின் அழகே அதன் எளிமையான இனிமையான கொஞ்சிப் பேசும் தமிழ் தான்! வாசித்தாலே இன்பம். தோழியர்களை விடியலில் எழுப்பும் அற்புதமான விவரணை. ஒவ்வொரு பாடலிலும் கண்ணனைப் போற்றும் விதம் என தென்றலாக பாடல்கள் படிப்போரின் மனம் கவர்கிறது. இப்பாடலில் கார்மேனியான், கதிர்மதியம் முகத்தான், நந்தகோபன் குமரன், யசோதையின் இளஞ்சிங்கம் என்று கண்ணனைக் குறிப்பிடும் விதம் அத்தனை அழகு. கவித்துவமான பாடல் என்றால் இதுவன்றோ! 




No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...