சாண்டா கனவுகளுடன் வலம்வரும் வயதில் என்னென்ன பரிசுப்பொருட்கள் கிடைக்குமோ என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் குழந்தைகளுக்கு இருக்கும். சாண்டாவிற்காக ரொட்டி, பாலுடன் வழிமேல் விழிவைத்து காத்திருப்பதெல்லாம் குழந்தைத்தனத்தின் அழகு. சில வருடங்களில் யார் சாண்டா என்று தெரிய வருகையில் பரிசுப்பொருட்களின் பட்டியல் நீள்கிறது. ஆனாலும் ஆர்வமும் எதிர்பார்ப்புகளும் குறைவதில்லை.
அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழைவதற்குள் வேகமாக ஓடி வண்டிக்குள் எதையாவது நான் மறைத்து வைத்திருக்கேனா என்று துழாவுவார்கள் என் குழந்தைகள். எதுவும் கிடைக்கவில்லையென்றால்
"எங்கம்மா ஒளிச்சு வச்சிருக்க? ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சுவார்கள்.
நானும் எப்படியோ அவர்களிடமிருந்து பொருட்களைக் காத்து கிறிஸ்துமஸ் முன் தினம் மரத்தின் கீழே வைத்து விட்டுத் தூங்கிவிடுவேன். அமெரிக்காவில் இருப்பதினால் இந்த கொண்டாட்டம் குழந்தைகளுக்காக செய்வது வழக்கமாகி விட்டது.
கிறிஸ்துமஸ் நாளன்று அதிகாலையில் அக்காவும் தம்பியும் விரைந்து எழுந்து விடுவார்கள். அவர்கள் எதிர்பார்த்தது கிடைத்து விட்ட மகிழ்ச்சி, கூச்சலில் தெரிந்து விடும். மீண்டும் தூங்கி விடுவேன். அந்நிய தேசத்தில் வளரும் குழந்தைகள் அந்நியப்பட்டு போய்விடக்கூடாது என்பதால் இந்தக் கொண்டாட்டங்கள் அவசியமாகிறது.
முன்பு வேலை பார்த்த அலுவலக கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு விடுமுறையில் வீட்டில் இருந்த சுப்பிரமணியையும் அழைத்துச் சென்றேன். பள்ளி விடுமுறை நாட்களில் அடிக்கடி என்னுடன் அலுவலகம் வந்ததால் நண்பர்கள் அனைவருக்கும் நல்ல பரிச்சயம். அவர்களும் அன்போடு பேச, இவனும் அவர்களிடம் ஆர்வமாய் கேள்விகளை கேட்டு எல்லோருக்கும் செல்ல பையனும் ஆனான்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தினம் அதுவும் அலுவலகத்தில் நண்பர்களுடன் குதூகலமாய்...கேட்கவா வேண்டும்? அலுவலகம் முழுவதும் அலங்காரங்களுடன், சாக்ஸ் முதல் டை வரை அனைவரும் சிவப்பு, பச்சை வண்ண ஆடைகளுடனும், முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் உலா வரும் நாளல்லவோ? ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் காலை உணவு முதல் அரட்டைக் கச்சேரியும் சேர்ந்து ரெசிபி பரிமாற்றங்கள் நடக்க... சுப்பிரமணிக்கு அங்கிருந்த பலவகையான உணவுகளைப் பார்த்தவுடன் ஒரே ஆச்சரியம்! இது என்ன அது என்ன என்று கேட்டானே தவிர எதையும் முயற்சி செய்து பார்க்கவில்லை. வழக்கம் போல டோனட்ஸ், பேகல் பக்கம் ஒதுங்கிக் கொண்டான். சாப்பிட்டு முடித்ததும் சரி, நீ போய் விளையாடு இல்லைன்னா மேத் பண்ணு என்றவுடன் நான் கொஞ்ச நேரம் சுத்திட்டு வர்றேன் என்று மற்றவர்களிடம் பேச ஓடிப் போய் விட்டான்.
பதினோரு மணிவாக்கில், "எங்கம்மா போன நீ? ஆளையே காணோம்?"
"என்னடா வேணும் உனக்கு?"
"அந்த ரூம்ல Wii கேம்ஸ் செட்டப் பண்ணிக்கிட்டு இருக்காங்கம்மா."
"லஞ்ச் முடிச்சிட்டு அங்க போகலாம்டா."
எப்படா மதிய நேரம் வருமென காத்திருந்து அரைகுறையாக சாப்பிட்டு விட்டு விளையாட ஓடினவன் தான். எத்தனை வகையான பல நாட்டுச் சிறப்பு உணவுகள்! வீட்டில் சமைத்தது, கடைகளில் வாங்கியதை வரிசைப்படுத்தி அழகாக வைத்திருந்தார்கள். கலையுணர்வுடன் உணவுகளைப் படைப்பதிலும் என்னவொரு நளினம்! அழகு!
நாங்களும் சாப்பிட்டு முடித்து விட்டு கேம்ஸ் விளையாட சுப்பிரமணியை மறந்தே போனேன். அதற்குள் டெஸெர்ட்ஸ் என்றவுடன் கூட்டம் கலைந்து அதையும் உண்டு களித்து மீண்டும் விளையாட்டில்...
நடுவில் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடும் கூட்டம் இன்னிசை இசைக்க...அதையும் அனுபவித்துக் கொண்டே...
வீடு செல்லும் நேரம் நெருங்குகையில் சுப்பிரமணியை தேடினால் அவனுடன் ஷிஃப்ட் போட்டு வீ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிறுவனோடு விளையாடுகிறோமேதோற்றுப் போகிறோமே என்று நினைக்காமல் ஜாலியாக அவர்களும், தன்னை விட பல வயது மூத்தவர்களுடன் விளையாடுகிறோமே என்று துளி கூட பயமில்லாமல் அனைவரையும் சமாளித்துக் கொண்டு சுப்பிரமணியும்... என்னைப் பார்த்தவுடன்
"ப்ளீஸ்ம்மா இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம்" என்று கெஞ்சி
"கிளம்புடா போதும்."
அவர்களும் உன் பையன் நன்றாக விளையாடுகிறான். அவனிடம் நாங்கள் எல்லோருமே தோற்றுப் போனோம். அடுத்த வருடம் பார்க்கலாம் என்று அச்சாரம் போட்டு அவர்களும் கிளம்ப...
எனக்கு உன் ஆஃபிஸ் எப்பவுமே பிடிக்கும்மா. அப்பா ஆஃபிஸ் சரியான போர். இங்க எல்லாரும் நல்லா ஜாலியா பழகுறாங்க. யார் யார் எப்படி விளையாடினார்கள் என்று பேசிக் கொண்டே... நீ ஹேப்பியா இருந்தியாம்மா? எனக்குத் தெரியும் நீயும் சந்தோஷமா இருந்திருப்ப. உங்க டீம் எப்பவுமே ஜாலியா இருக்காங்க. இப்ப தான புரியுது நீ ஏன் சந்தோஷமா வேலைக்குப் போறேன்ன்னு... நானும் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் படிச்சு உன்னைய மாதிரியே ஜாலியாஆஆஆ இருக்கப் போறேன்!
டேய் வருஷத்துல ஒருநாள் தான்டா இந்த மாதிரி ஜாலியா இருக்கும்ங்கறத நம்ப மாட்டேங்கறானே😩😩😩
என்னடா லதாவுக்கு வந்த பெரும் சோதனை! நம்ம ரகசியத்த தெரிஞ்சுச்சுக்கிட்டானே... ஹ்ம்ம்ம்.
இப்பொழுதெல்லாம் தம்பிக்கு அக்காவும், அக்காவுக்குத் தம்பியும் பரிசுப்பொருட்களை வீட்டுக்கு அனுப்பி, "எடுத்து என் ரூமுக்குள்ள வச்சிடும்மா" என்று இருவரும் சொல்கிறார்கள். எங்களுக்கு என்னடா வாங்கியிருக்க என்று கேட்டால் வழக்கம் போல்
"Lots of Love" தான் பதிலாக வருகிறது😍
No comments:
Post a Comment