Tuesday, December 7, 2021

நனவானதா கனவு - 1?

ஊரிலிருந்து வந்த செய்தியை ஜீரணிப்பதற்குள் மண்டைக்குள் ஓராயிரம் கேள்விகள். மாலையில் அவசர அவசரமாக பயணத்துக்கான திட்டமிடல் ஆரம்பிக்கும் பொழுது தான் கடவுச்சீட்டு எங்கிருக்கிறது என்று தேடியதில் நல்ல வேளை! வீட்டில் தான் இருந்ததது. இல்லையென்றால் பயணம் ஒரு நாள் தள்ளிப் போயிருக்கும். உடனே அடுத்த கேள்வி. விசா வாங்க வேண்டுமே! இப்ப எப்படி வாங்குறது?

"அதெல்லாம் பிரச்னையில்லை. காலையில் நியூயார்க் நகரத்தில் உள்ள தூதரகத்திற்குச் சென்று வாங்கி விடலாம்." எளிதாக சொல்லி விட்டார் ஈஷ்வர்.

வேற வழி?

உடனே நான்கு நாட்களுக்குத் தேவையானவற்றைச் சமைத்து முடித்து மகளிடம் தம்பிக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி அவளும் நான் இவர்களைப் பார்த்துக் கொள்கிறேன். நீ போயிட்டு வாம்மா என்று பொறுப்பாக பேசியது அத்தனை ஆறுதலாக இருந்தது.

சுப்பிரமணி மட்டும் பாவம் போல் இருந்தான். "அக்கா, அப்பா சொல்றத கேட்டுக்கணும். நேரத்துக்கு ஸ்கூலுக்குப் போயிடணும். ஹோம்ஒர்க் ஒழுங்கா பண்ணிடனும். சரியா?" எஸ் மாம். நீ எப்ப திரும்ப வருவ என்றவனை சமாதானப்படுத்தி விட்டு,

ஈஷ்வரிடமும் குழந்தைகளைக் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டு பயணத்துக்கான பெட்டிகளில் துணிகளை வைத்துக் கொண்டேன்.

"நாளைக்கு காலையில 6 மணிக்கு ரயில் இருக்கு. 8.30க்கு நியூயார்க் சிட்டி போய் சேர்ந்துடலாம். அங்க இருந்து டாக்ஸியில தூதரகத்துக்குப் போய் வேலைகளை முடிச்சிட்டு மதியம் ஏர்போர்ட் போயிடலாம்."

ஹ்ம்ம்ம். வேலைகளை முடித்து விட்டு தூங்கச்செல்லும் பொழுது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.

காலையில் ஐந்தரை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி ரயில் நிலையத்தில் என்னை இறக்கி விட்டு, "பயப்படாம போயிட்டு வா. இங்க நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். இந்த நேரத்தில் உங்க குடும்பத்தோட நீ இருக்கணும். ஃபோன் பண்ணிக்கிட்டே இரு." ஆறுதலாக வழியனுப்பி ஈஷ்வர் சென்று விட,

முதன்முதலாக தனியாக ரயில், விமானப் பயணங்கள்! கைப்பை, பெட்டிகளை வைத்துக்கொண்டு ட்ரைன், டாக்ஸி, ஏர்போர்ட் செல்ல மீண்டும் இரு தடங்கள் மாறி ரயில் பயணம், ஏர் ட்ரெயின் என்று நினைக்கவே மலைப்பாக இருந்தது!

"அதெல்லாம் நீ சமாளிச்சிடுவ. பயப்படாத!"

இப்படி சொல்லிச் சொல்லியே ... 😔😔😔

அதிகாலை ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் ஹட்ஸன் ஆறு வழியெங்கும் துணையாக வந்தாலும் ரயிலின் ஆட்டத்தில் தூங்கிவிட்டிருந்தேன். கண்விழித்துப் பார்க்கையில்  நான் ரசிக்கும் நியூயார்க் நகரம் காலை நேரத்து  உற்சாக முகங்களுடன் 'பளிச்'சென்றிருந்தது. பூத்தூவலாய் பனி விழும் அழகும், குளிருக்குப் பயந்து முகம் மட்டும் தெரிய பவனி வரும் 'மெல்லத் திறந்தது கதவு அமலா'க்களும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்த கூட்டத்தில் நானும் ஐக்கியமானேன். அங்கிருந்து வாடகைக்காரில் தூதரகம் சென்றால் அங்கு ஒரு பஞ்சாயத்து. இத்தாலி அடிமை அரசில் மக்களுக்கு எது தான் சுமுகமாக முடிந்திருக்கிறது ? (அந்த அனுபவத்தை ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறேன். )

உடனே ஆல்பனி இந்திய சங்கத்தின் தலைவரை அழைத்து பிரச்னைகளைச் சொல்லி அவர் தூதரக அதிகாரியுடன் தொடர்பு கொண்ட சில நிமிடங்களில் விசா எந்தவித பிரச்னையுமில்லாமல் வந்து சேர்ந்தது. நன்றி கூறி விமான நிலையம் செல்ல டாக்ஸி பிடித்து முதலில் ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த காவலர்களிடம் எப்படி போவது, எங்கு அடுத்த ரயிலைப் பிடிப்பது விவரங்களைத் தெரிந்து கொண்டு அப்பாடா என்றும் உட்காரும் பொழுது தான் தெரிந்தது காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்று. பசி, களைப்பு, தூக்கமின்மை என்று எல்லாம் சேர்ந்து தலையில் சம்மட்டியால் அடிப்பது போல் வலி.மதிய நேரம் வேறு. விமான நிலையத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். பெரியதும் சிறியதுமாக இரண்டு பெட்டிகளுடன் எப்படியோ  விமானநிலையம் வந்து சேர்ந்தேன்.

முதன் முதலாக கணவர், குழந்தைகள் இல்லாத தனிமைப்பயணம். என்னவோ போலிருந்தது. இதற்கு முன்பு ஊருக்குச் செல்ல இதே விமானநிலையத்தில் நுழையும் பொழுதே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். ஹ்ம்ம்😓

சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் நேற்று நடந்த நிகழ்வுகளை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தேன். இழப்பில் தான் தூர தேசத்தின் வலி புரிகிறது. அப்பாவின் மேல் கோபம் தான் வந்தது. அவரவர் விதிப்படி தான் எல்லாம் நடக்கிறது. அதிகம் யோசித்தால் தலைவலி தான் மிஞ்சும் என்று புரிந்தது. எமிரேட்ஸ் டிக்கெட் கவுண்டரில் ஆள் நடமாட்டம் தெரிந்தவுடன் வரிசையில் சேருவதற்குள் எனக்கு முன்பாக இருவர் வந்து நின்று கொண்டார்கள். எனக்குப் பின்னால் இளைஞன் ஒருவன் பார்க்க கல்லூரி மாணவன் போல தெரிந்தான். தமிழன் போல இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன். அவனுக்குப் பின்னால் 'மளமள'வென்று பெட்டிகளுடன் கூட்டமும் சேர்ந்து விட்டது. இன்னும் கவுண்டர் திறக்கவில்லை. அதற்குள் 20 பேராவது வரிசையில் நின்றிருப்போம். பசிக்க வேறு ஆரம்பித்து விட்டது. எப்படா டிக்கெட் கைக்கு வரும்? பெட்டிகளை கொடுத்து விட்டு சாப்பிட போவோம் என்றிருந்தது. அதற்குள் ஈஷ்வரிடமிருந்து ஃபோன்.

எனக்குப் பின்னால் நின்றிருந்த இளைஞன் எப்பொழுது கவுண்டரைத் திறப்பார்கள் என்று கேட்க, தெரியவில்லை என்றேன். அவன் வேறு மாநிலத்தில் இருந்து இரண்டு விமானங்கள் மாறி நியூயார்க் வந்து சேர்ந்திருந்தான். கல்லூரிப் படிப்பு முடித்து திருமணத்திற்காக சென்னை செல்வதாக கூறினான்.

தமிழா நீங்க? என கேட்டு தமிழில் உரையாட ஆரம்பித்தோம். தாய்மொழியெனில் எத்தனை எளிதாக பேச முடிகிறது! சொந்த ஊர் தஞ்சாவூர். தன்னுடன் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயித்து அவள் இரு வாரங்களுக்கு முன்பே ஊருக்குப் போய்விட்டதாகவும் தனக்கு விடுமுறை இல்லாததால் ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்வதாகவும் கூறினான். திருமணத்தைக் கூட வேறு வழியில்லாமல் தான் இப்படி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆற அமர குடும்பங்களுடன் உட்கார்ந்து திருமணச் சடங்குகள் செய்ய முடியாத அளவிற்கு வேறு பல நிர்பந்தங்கள் நம்மை ஆட்கொண்டு விட்டிருக்கிறது. ஆனந்த நிகழ்வுகள் கூட ஏதோ ஒரு கடமையாக  நினைக்க வைக்கிறது! ம்ம்ம்ம்... வாழ்த்துக்களைச் சொல்லி விட்டு மீண்டும் கவுண்டரில் ஆள் எப்படா வருவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தோம். 

அவனுக்குப் பின்னால்  'seinfield' ஆங்கிலத்தொடரில் வரும் 'ஜார்ஜ்' கதாபாத்திரம் போலவே 'குறுகுறு'வென சிநேகப்பார்வையுடன் ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். முகத்தில் புன்னகையுடன் அவர் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டே கையை நீட்ட, பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவருடன் 'தகடு தகடு' சத்யராஜ் மாதிரி உயர்ந்த ஒடிசலான குதிரை வால் போட்டுக் கொண்டவரும் குள்ளமாய் ஒருவரும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். இந்த 'ஜார்ஜ்' பிறந்தது வளர்ந்தது புரூக்ளின் நியூயார்க்கில் என்றாலும் தற்போது 'புர்ட்டோ ரிக்கோ'வில் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறினார். புர்ட்டோ ரிக்கோ கரிபியனில் இருக்கும் அமெரிக்கப் பிரதேசம். அழகான இயற்கை எழில் வாய்ந்த தீவு. சிறிது நேரம் அந்த தீவினைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். இன்னும் கவுண்டரில் ஆட்கள் வருவதும் போவதுமாய் தான் இருந்தார்கள்.

'ஜார்ஜ்' தன் நிறுவனத்திற்காக ட்ரான்ஸ்ஃபார்மர்கள் ஆர்டர் கொடுக்க சென்னையில் உள்ள தொழிற்சாலைக்குச் செல்வதாகவும் அப்படியே இந்தியாவில் சில இடங்களுக்குச் சுற்றுலா செல்லவிருப்பதாகவும் கூறினார். நானும் தஞ்சாவூர் பையனும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றதும் அவருக்கு ஒரே மகிழ்ச்சி! தமிழ்நாட்டைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டார். தெரிந்ததைக் கூறினோம். இந்தியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைக் கேட்ட பொழுது தென்னிந்தியக் கோவில்கள், கன்னியாகுமரி, கர்நாடகா, கேரளா, என்று நான் சொல்லும் பொழுது, அடடா! இதெல்லாம் தெரியாமல் நாங்கள் தாஜ்மஹால், ஜெய்பூர் போகிறோம் என்றார்.

மேலை நாட்டினருக்கு இந்தியா என்றாலே ராஜஸ்தானும் தாஜ் மகாலும் தான் நினைவிற்கு வருகிறது. அது தான் இந்தியா என்று நினைக்கிறார்கள். ஒரே ஒரு முறை வந்து சுற்றிப் பார்த்துச் செல்லும் நாடு அல்ல இந்தியா. அதன் ஒவ்வொரு மாநிலங்களும் பல சிறப்புகளுடன் இருக்கிறது என்று எனக்குத் தெரிந்ததைக் கூறினேன்.அடுத்த முறை கண்டிப்பாக இந்த இடங்களுக்குச் சென்று வருவேன் என்றார்.

அடிக்கடி நான் கூறிய இடங்கள், பெயர்களை எழுதி வைத்துக் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது! இந்தியாவில் தற்காப்பாக இருப்பது, என்ன மாதிரி உணவுகளை உண்பது, எப்படி பேசுவது என்று ஓரளவு கூகுள் செய்து விட்டு வந்திருந்தார். நாங்கள் பேசும் போது உன்னிப்பாக கவனித்து நிதானமாக பேசினார். அவருடன் வந்திருந்த இருவரும் அமைதியாக இருந்தார்கள். 'ஜார்ஜ்' மட்டும் பேசிக்கொண்டே இருந்தார். பேச்சு அப்படியே ஏன், எதற்காக அமெரிக்கா வந்தீர்கள் என்பதில் வந்து நின்றது. நான் மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டு கனடா வருவதாக தான் இருந்தது. மாணவியாக வந்து குழந்தை, கணவருடன் வாழ்வது அத்தனை எளிதல்ல. இருவரையும் விட்டு விட்டு படிக்க வரும் அளவுக்கு எனக்குத் துணிச்சலும் இருக்கவில்லை. அதற்குள் வேலை ஒன்று கனடாவில் கிடைத்தது. அதே வருடத்தில் அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் இங்கே குடிபெயர்ந்தோம். இங்கேயே குழந்தைகள், குடும்பம் என்று இப்போது குடியுரிமையையும் பெற்று செட்டிலாகி விட்டோம் என்றேன்.

"அப்ப உங்க படிப்பு கனவு என்னாச்சு ?" ஏகப்பட்ட கவலையுடன் கேட்டார் 'ஜார்ஜ்'.

நான் வேலை பார்த்த நிறுவனத்தில் மேற்படிப்பு படித்தவர்களும், PhD பட்டம் வாங்கியவர்களும் நான் செய்யும் அதே வேலையைத் தான் செய்கிறார்கள். இதற்கு எதற்குப் படிக்க வேண்டும். வீண் செலவு என்று விட்டு விட்டேன் என்றவுடன்,

"No, No, You should pursue your dreams." என்றார். இந்த அமெரிக்கர்களே இப்படித்தான். தங்களுடைய கனவு, லட்சியம் என்று அதற்காக குடும்பத்தையும் துறக்க அஞ்ச மாட்டார்கள். நமக்கு அப்படியா?

என்னடா லதாவுக்கு வந்த புது சோதனை? நான் எப்பவோ அந்த படிப்பு சம்பந்தப்பட்ட கனவுகளை மூட்டை போட்டு பரணில் ஏற்றி வைத்து விட்டேன். இவர் என்னடான்னா,

"latha, you should follow your passion. You seem to be a smart person."
ன்னு நம்மள வேற ஸ்மார்ட் பெர்சன்னு சொல்லி குழப்பி விட்டாரேன்னு யோசித்துக் கொண்டிருந்தேன்😇 அமெரிக்கர்கள் இப்படித்தான் அறிமுகப்படுத்திய சில நிமிடங்களில் பெயரைச் சொல்லி அழைக்க ஆரம்பித்து விடுவார்கள். நமக்கு தான் அது மாதிரி பேச தெரியவில்லை.

என் முன்னால் நின்றிருந்த பெண் கவுண்டரை நோக்கி நகர, "நாம் ஒரு படம் எடுத்துக் கொள்ளலாமா? என்னுடைய blogல் உங்க அனுமதியோட இந்த படத்தைப் போடலாமா?" என்று அவருடைய blog முகவரியைக் கூட தந்தார். நானும் என்னுடைய பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு அவர்களிடம் விடைபெற்று சாப்பிட சென்று விட்டேன். ஆனால் மனதில் அவர் கேட்ட கேள்வி தான் துரத்திக் கொண்டே இருந்ததது.

"latha, you should follow your passion."

நெஜம்மாவே நான் குறிக்கோள் இல்லாத வெஜிடபிள் வாழ்க்கை தான் வாழ்கிறேனோ? ஏதோ பிழைப்பு ஓடுகிறது என்று இருக்கிறதா என்னுடைய வாழ்க்கை? ஐயோ இப்படி என்னை குழப்பி விட்டுப் போய் விட்டாரே இந்த மனுஷன் என்று யோசித்துக் கொண்டே சாப்பிட்டதில் கவலைகளை மறந்திருந்தேன். சாப்பாடும் காலியாகி விட்டிருந்தது. செக்யூரிட்டி இத்யாதிகளைக் கடந்து விமானத்திற்காக காத்திருக்கையிலும் அதே கேள்வி தொடர்ந்தது. விமானத்தில் மீண்டும் ஜார்ஜ் & கோ வைப் பார்த்தவுடன் "சென்னையில் சந்திப்போம். சுகமான பயணத்திற்கு வாழ்த்துகள்" சொல்லிக் கொண்டு அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். நானும் விமானத்தில் ஏறி விட்ட தகவலை ஈஷ்வருக்குச் சொல்லி பத்திரமாக குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள். கவனமாக இருங்கள் என்று பேசி முடித்தேன்.

என் அருகில் அமர்ந்திருந்தவர் ஃபோனில் மனைவியுடன் தமிழில் பேசிக்கொண்டிருந்தார். அட! தமிழா! அவரும் சம்பிரதாயத்துக்கு சிரிக்க, நானும் சிரித்து வைத்தேன். நல்ல வேளை ஜன்னலோர இருக்கை கேட்டது வசதியாகி விட்டது.

"ஆர் யூ கோயிங் டு சென்னை?"

"ஆமாங்க. நீங்க?"

"ஓ! நீங்க தமிழ் பேசுவீங்களா? "

"ஓ! நல்லா பேசுவேனே."

"இல்ல, ஃபோன்ல வேற மொழியில பேசுன மாதிரி இருந்தது அதான் கேட்டேன்."

"ஆமாம். அது என் தாய்மொழி. உங்க ஊரு?"

"ராஜபாளையம். அம்மா தவறிட்டாங்க. அதான் அவசரமா கிளம்பினேன்."

"ஓ! சாரி!"

"வெறிச்"சென்றிருந்தது பனிக்கால வானம். விமானம் அழகிய நியூயார்க் நகரைச் சுற்றியபடி வானுயர்ந்த கட்டட குவியல்களைக் கடந்து நீலநிற அட்லாண்டிக் மேல் பறக்க துவங்கியது. மனம் மீண்டும் மதுரைக்குச் செல்ல, கண்களில் என்னையுமறியாமல் கண்ணீர்!

(தொடரும்)





No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...