Wednesday, December 1, 2021

நியூ இங்கிலாந்து - நியூஹாம்ப்ஷயர் 1


வெர்மாண்ட்டிலிருந்து நியூஹாம்ப்ஷயர் வரும் வழியெங்கும் இலையுதிர்கால மலையழகு கொட்டிக்கிடந்தது. எத்தனைப் படங்கள் 'க்ளிக்'கினாலும் ஆசை தீரவில்லை. இன்னும் ஊருக்குள் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் வேறு படங்களை எடுக்க வேண்டுமே என்று காமெராவிற்கு சிறிது ஒய்வு கொடுத்தோம்.
"அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்..." பாடல் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

வெர்மாண்ட் எல்லையிலிருந்து ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு நியூஹாம்ப்ஷயரில் கடை ஒன்றை கண்டடைந்தோம். அப்பாடா என்றிருந்தது! அங்கிருந்த காசாளரிடம் எத்தனை அருமையாக இருக்கிறது உங்கள் ஊர் என்றவுடன், ஆமாம். இங்குள்ள பல மக்களுக்குத் தான் அருமை தெரியவில்லை. "வீ டேக் இட் ஃபார் கி3ராண்ட்டட்" என்றார். எத்தனை சத்தியமான வாக்கு! ஒன்றின் அருமையத் தெரிந்து கொள்ள அதை இழந்தால்தான் புரியுமோ நமக்கெல்லாம்? காபி சாப்பிட்ட பிறகே ஈஷ்வருக்கு உயிர் வந்தது போல இருந்தது. இருக்காதா பின்ன? வீட்டிலிருந்து கிளம்பி ஐந்து மணிநேரமாகி விட்டிருந்தது. இயற்கையோடு பயணித்து வந்ததில் களைப்பே தெரியவில்லை. கடைக்கு எதிரே சிறிய தேவாலயம் வண்ண மரங்கள் சூழ அழகாக இருந்தது. வெர்மாண்ட்டிலும் இதுபோன்ற தேவாலயங்களே அதிகமாக இருக்கிறது. இதுவும் நியூஇங்கிலாந்து மாநிலங்களுக்கே உரியது போல என்று நினைத்துக் கொண்டோம். இங்கிருந்து மவுண்ட் வாஷிங்டன் எவ்வளவு தொலைவு என்று கேட்டதற்கு, இன்னும் அரை மணிநேரத்தில் வந்து விடும் என்று சொன்ன பெண்ணிற்கு நன்றி சொல்லிவிட்டு ஆவலோடு நியூஹாம்ப்ஷயரின் புகழ் பெற்ற ரயில் பயணத்தை நோக்கி கிளம்பினோம்.

சரியாக அரைமணி நேரத்தில் பெரிய விளம்பர பலகையில் "Cog train" படமும் நுழைவாயிலில் கா1க்3 ரயில் மாடலும் வைத்திருந்தார்கள். கா1க்3 ரயில்னா என்ன? என்று ஈஷ்வரிடம் கேட்டால் ஆச்சரியத்துடன் "கா1க்3 ட்ரெயின் தெரியாதா? ஊட்டியில இருக்கே. பார்த்ததில்லையா?"

"எனக்கென்ன தெரியும்? ஆத்த கண்டேன். அழகரைக் கண்டேன். ஊட்டிக்குப் போயிருக்கேன் ஆனா அந்த ட்ரைன்ல போனதில்ல."

"கா1க்3 ட்ரெயின்ல ஒரு பல் சக்கரம் இருக்கும். இது உயரமான மலைப்பகுதிகளில் செல்லும் ரயில்களில் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். நீ நல்லா கவனிச்சுப் பாரு."

ஆஹா! இதுவரை நான் அப்படியொன்றையும் பார்த்ததில்லையே. ஆவலாகி விட்டது எனக்கு.

வண்டியை நிறுத்தி விட்டு வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவைச் சாப்பிட்டு முடித்தோம். மணி 11.30. 12 மணிக்குத்தான் எங்களுடைய ரயில் பயணம். அங்கிருந்த அலுவலகத்தில் முன்பதிவு செய்திருந்த விவரங்களைக் காண்பித்து பயணச்சீட்டுகளை வாங்கிக்கொண்டுமலையடிவாரத்திற்குச் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கே 5 வட இந்தியர்கள் கணவன்-மனைவி சகிதம் வந்திருந்தார்கள். சத்தமாக பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் அவர்களில் ஒருவர் ஐபேடில் படங்களைப் பிடித்துக் கொண்டும் என குஷியாக இருந்தனர். அவர்களில் ஒருவர் வந்து அறிமுகம் செய்து கொண்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நியூஜெர்சியிலிருந்து வந்திருந்தார்கள். நாங்கள் மட்டுமே அங்கிருந்த இந்திய-அமெரிக்கர்கள். மற்றவர்கள் அனைவரும் வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமே. அதுவும் வயதானவர்கள் அதிகமிருந்தனர்!

மலை உச்சியிலிருந்து மெ...து...வாக இரண்டு பயணப்பெட்டிகள் இறங்கிக் கொண்டிருந்தது. சமவெளிகளில் ரயில் பயணம் செய்திருக்கிறேன். மலையில் ரயிலில் பயணம் செய்யப் போவது இதுதான் முதல் தடவை என்பதால் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தது😊 மலை அடிவாரத்தை விட உச்சியில் குளிர் அதிகமிருக்கும் என்பதால் பனிக்கால உடைகளுடன் தயாராக சென்றிருந்தோம்.

வடகிழக்கில் உள்ள மிக உயரமான மலையான மவுண்ட் வாஷிங்டன் நியூஹாம்ப்ஷயரில் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும். இந்த மலையில் Cog trainல் பயணிக்கும் அனுபவத்தைப் பெறவே பயணிகள் பலரும் இம்மாநிலத்திற்கு வருவதுண்டு. இங்கு கால்நடையாகவும், தத்தம் வண்டிகளிலும், ரயிலிலும் மலையேறலாம். நாங்கள் சென்றது இலையுதிர்காலம் வேறு. அக்டோபர் கடைசி வாரம் என்பதால் நல்ல கூட்டம். நவம்பரில் குளிர் வந்து விடும். மரங்களும் இலைகளைத் துறந்து விடும்.

கீழிறங்கிய இரண்டு ரயில் பெட்டிகளும் நின்றவுடன் பயணிகள் இறங்க, நாங்கள் பயணச்சீட்டைக் காண்பித்து எங்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ஈஷ்வருக்கு முதல் வரிசையில் ஜன்னல் பக்கம். எனக்குப் பின் வரிசையில் ஜன்னல் பக்கம் கூட கிடைக்கவில்லை. ஏமாற்றமாக இருந்தது😖 ரயில் புறப்பட துவங்கியவுடன், ஈஷ்வர் அருகில் இருந்த காலி சீட்டில் உட்காரலாம் என்று எங்கள் குழுவின் வழிகாட்டி கூறியவுடன் மகிழ்ச்சியுடன் இடம் மாறினேன். மலைப்பாதைத்தெளிவாக தெரிந்தது. ஒரு பெட்டியில் 70 பேர் பயணிக்கிறார்கள். மொத்தம் நான்கு பெட்டிகள் நாள் முழுவதும் ஏறுவதும் இறங்குவதுமாய் இருக்கிறது.

பயணிகளை வரவேற்றுத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கா1க்3 ரயில் வரலாற்றைப்பற்றி சிறிது பேசிக்கொண்டு வந்தார் எங்கள் பெட்டியின் brake man, (பெயர் மறந்து விட்டது😐)பயணத்தின் போது நடுநடுவே பாதையின் வழித்தடங்களை மாற்றும் பொறுப்பில் இருப்பவர். உலகிலேயே முதன்முதலில் மலையேறும் ரயில் இங்கு தான் துவங்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் பிளட்டஸ் ரயிலுக்குப் பிறகு உலகின் இரண்டாவது செங்குத்தான ரயில் என்ற பெருமையும் இந்த கா1க்3 ரயிலுக்கு இருக்கிறது. ஸ்விட்சர்லாந்திலிருந்து பொறியாளர்கள் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு அங்கு செயல்படுத்தியதாக கூறியதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது! அங்கு நீளமான ரயிலில் நீண்ட பாதையில் பனிசூழ்ந்த மலையில் பயணம் செய்ததும் உடனே நினைவுக்கு வந்தது.

750,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட 'வொயிட் மௌண்டைன்' நியூ ஹாம்ப்ஷயரின் இயற்கை எழில் கொஞ்சும் வனப்பரப்பு. அதில் அமைந்திருக்கும் வாஷிங்டன் மலையில் 6288 அடி மலைஉச்சி வரை ரயில் பாதை போடப்பட்டிருக்கிறது. மொத்தம் 45 நிமிட பயணம். மலையில் ஏறத் துவங்கும் பொழுதே பயணிகள் அனைவரும் தத்தம் இருக்கையை விட்டு எழுந்து நடமாடக் கூடாது. மற்ற பயணிகளுக்கு எவ்விதத்திலும் இடைஞ்சலாக இருக்க கூடாது என்று சொன்ன சில நிமிடங்களில் ஐபாடில் படம் எடுத்துக் கொண்டிருந்த வட இந்தியர் ஒருவர் முன்வரிசையில் வந்து அமர்ந்து கொண்டது மட்டுமிலலாமல் வீடியோ எடுக்கிறேன் பேர்வழி என்று பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு இடைஞ்சலாகவும் நின்று கொண்டார். brake man கடிந்து கொண்ட பிறகு அமர்ந்தார். சிறிது நேரத்தில் ஒரு சீனப் பெண் 'கிடுகிடு'வென்று ரயில் பெட்டியின் முன்புறத்தில் காலைத் தொங்கப்போட்டுக் கொண்டு அமர்ந்தே விட்டார். வந்ததே கோபம் brake manக்கு. அவர் சொல்லியதை எப்படி காதில் வாங்கி கொள்ளாமல் இப்படியெல்லாம் இருக்கிறார்களோ என்று மற்ற எல்லோருக்கும் கோபம். வெள்ளையர்கள் அனைவரும் அவர்கள் இருக்கையில் இருக்க, இந்த இருவரின் செயல் முகஞ்சுளிக்க வைத்தது😏😖

ஜன்னல் வழியே விரிந்த உலகில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மலைகள் மலைகள் மட்டுமே. அதுவும் இலையுதிர்கால அழகுடன் வண்ணங்களைச் சுமந்து நின்றதில் நாங்கள் மலைத்துப் போயிருந்தோம்! "பனிக்காலத்தில் பனிப்புயலால் பல உயிர்கள் பலியாயிருக்கின்றன. மலையுச்சியில் பனிமூட்டம், மலை, குளிர் என வானிலை நிலவரம் மாறிக்கொண்டே இருக்கும். அருகில் உயர்ந்த மலைகள் இல்லாததால் பலமான காற்றும் வீசி வெட்பநிலை உறைபனிக்குக் கீழ் சென்று விடும் அபாயமும் இங்கு சகஜம். மலையேறுபவர்கள் அதற்கான உடைகளை அணிந்து கொண்டு வர வேண்டும்" என்று பிரேக் மேன் சொல்வதைக் கேட்கவே அச்சமாக இருந்தது. ஆனால் ஹாயாக ஒரு இளம்பெண் தன்னந்தனியாக குட்டை ஷார்ட்ஸ் அணிந்து இறங்கிக்கொண்டிருந்தார்! எப்படித்தான் இப்படி தனியாக இவர்களால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மலை ஏறி இறங்க முடிகிறதோ! ஆச்சரியமாக இருந்தது.

மாறும் வானிலை, பனிமூட்டம் இம்மலைப்பகுதியில் சாதாரணமான ஒன்று. நாங்கள் சென்றிருந்த நாளில் அப்படி ஏதும் இல்லாமல் காட்சிகள் தெளிவாக தெரிந்தது எங்கள் பாக்கியம் என்று நினைத்துக் கொண்டோம். மலையில் மெதுவாக ரயில் ஏறுவதால் மலைக்காட்சிகளை வேடிக்கைப் பார்க்கவும் படங்கள் எடுக்கவும் வசதியாக இருந்தது. கரடுமுரடான மலை. சில அடிகள் வரை தான் மரங்கள் தென்பட்டது. உயரே செல்ல செல்ல பாறைகளில் ஒட்டிக்கொண்டிருந்த பாசிகளைத்தவிர மரங்கள் எதுவும் இல்லை. ரயில் பாதையைத் தாங்கும் ஒவ்வொரு மரக்கட்டைகளுக்கும் இரும்பினாலான தூண்களுக்கும் வரிசைக்கிரமமாக எண்கள் உள்ளதால் பராமரிக்க எளிதாகிறது என்று பிரேக் மேன் கூறினார். நடு மலையில் 25 டிகிரி கோணத்தில் ரயில் பெட்டி நின்று விட்டது. எதிரே மெ...து...வாக இரண்டு பெட்டிகள் ஊர்ந்து இறங்கிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு வழி விட, எங்கள் பிரேக் மேன் ஸ்விட்ச் போட்டுத் தண்டவாளங்களைத் தடம் மாற்ற, உள்ளிருந்தவர்கள் கையசைத்தும் விசிலடித்தும் அந்தப் பெட்டிகள் இறங்கிச்செல்வதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

கடல் மட்டத்திலிருந்து 6,288 அடி உயர மலையுச்சியை நெருங்கும் வேளையில் பனிமூட்டம் சூழ, நிழலாக காட்சிகள் தெரிந்தது. 'க்ரீச்ச்ச்ச்' ஒலியுடன் சக்கரங்கள் தண்டவாளத்தை உரசி நிற்கையில் பலமான காற்றுடன் குளிரும் சேர்ந்து கொள்ள, நல்ல வேளை! பனிக்கால உடைகள் சகிதம் வந்திறங்கினோம் என்று இருந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிக்கொள்ள, 45 மணிநேரத்தில் திரும்பிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு,காத்துக் கொண்டிருந்தவர்களை ஏற்றிக் கொண்டு இறங்க ரயில் ஆயத்தமாக, பிரேக் மேனுக்கு டிப்ஸ் கொடுத்து விட்டு பல வருடங்கள் காத்திருந்த மலையுச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். 

(தொடரும்)


No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...