Monday, December 20, 2021

Little Things

'Little Things' நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளியான நீண்ட ஹிந்தி தொடர். நாயகி 'மிதிலா பல்கர்' பல தொடர்களிலும் படங்களிலும் நடித்திருக்கிறார். இன்றைய நவநாகரீக இளைய தலைமுறை 'டேட்டிங்', 'லிவிங் டுகெதர்' கலாச்சாரத்தில் இறங்கியுள்ளது. ஒரே வீட்டில் சில வருடங்களாக சேர்ந்து வாழும் திருமணமாகாத ஜோடி அவரவர் வாழ்வில் கடந்து செல்லும் சிறுசிறு விஷயங்களைக் கொண்டு பயணிக்கிறது இந்த தொடர்.

நினைத்த நேரத்தில், நினைத்த உணவை விரும்பிச் சாப்பிடும் உணவுப்பிரியனாகவும் தன்னுடைய கல்வித்தகுதிக்கேற்ற வேலையைத் தேடும் நாயகன். வேலையில் முன்னேறிச் செல்லத் துடிக்கும் அதே வேளையில் நண்பனின் விருப்பங்களுக்கும் பெற்றோருக்காகவும் துடிக்கும் பெண்ணாக நாயகி. இருவருக்கும் அவரவர் தனிப்பட்ட பிரச்னைகள் உண்டு. சேர்ந்து வாழ்வதில் உள்ள சிக்கல்களும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் உயர்மட்டத்தில் வாழும் இளைஞர்களின் வாழ்க்கையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 'தொணதொண'வென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள் இருவரும். நடுநடுவே தத்துவம் வேறு.

மகன்/மகளுடைய வருவாயை எதிர்பார்க்காத பெற்றோர்கள் அவர்களுடைய நவீன வாழ்க்கை முறைக்கும் ஒத்துழைக்கிறார்கள். கைகளில் பணம் புரள, நல்ல உடை, தங்களுக்குப் பிடித்த பயணங்கள், உணவு, வார விடுமுறையில் நண்பர்களுடன் கொண்டாட்டங்கள் என்று செலவிடும் ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. அங்கு பணம் ஒரு பொருட்டே அல்ல. இத்தொடரில் மிக கவனமாக தவறுகளின் எல்லைகளை கணித்திருந்தார்கள். நிஜ வாழ்வில் சாத்தியமா என்று தெரியவில்லை.

ஏதோ மேலை நாடுகளில் கேள்விப்பட்ட 'லிவிங் டுகெதர்' நல்லதா கெட்டதா? இந்திய மண்ணிற்கு இது தேவையா என்பதையெல்லாம் தாண்டி சிந்திக்க நிறைய விஷயங்கள் உள்ளன. அதையெல்லாம் இத்தொடர் முழுவதுமாக கையாளவில்லை.

தன்னுடைய படிப்பிற்குத் தகுந்த வேலையைத் தேடும் கதாநாயகன் மேற்படிப்பிற்காக பெங்களூரு செல்ல, அவர்களுக்கிடையே சிறு இடைவெளி ஏற்பட, ஒருவரை ஒருவர் அதிகம் நேசிப்பதை உணர்கிறார்கள். என்ன தான் ஈருடல் ஓருயிராக சேர்ந்தே இருந்தாலும் உறவுகளில் அவ்வப்போது இடைவெளிகள் அவசியம். அது ஒருவரை ஒருவர் மேலும் புரிந்து கொண்டு நீட்டித்த அன்பை உருவாக்கும். உருவாக்கியதா? எப்படி? என்று போகிறது கதை.

29 பாகங்கள் நிறைந்த குறுந்தொடர். நண்பர்கள் காதலர்களாக உருமாறும் நேரத்தில் ஏற்படும் தடுமாற்றங்களை எப்படி கையாளுகிறார்கள்? நடுநடுவே போரடிக்கும். அதையெல்லாம் ஓட விட்டு நேரம் அதிகமிருந்தால் பார்க்கலாம். 
தங்கள் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க துடிக்கும் யுவன், யுவதிகளுக்குப் பிடிக்கலாம். 


No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...