Wednesday, January 25, 2023

5. உத்தரகாசி

 

எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயண அனுபவம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது.

உத்தரகாசி

யமுனோத்ரி சென்று “மா யமுனா”வைத் தரிசித்த மறுநாள் காலையில் அடுத்த ஆறு-ஏழு மணிநேர பயணத்திற்குத் தயாரானோம். நாங்கள் தங்கியிருந்த குடிலின் முன் பாய்ந்தோடிக் கொண்டிருந்த யமுனை ஆற்றின் கரையோரம் கடைசியாக மீண்டும் ஒருமுறை நடந்து செல்கையில் “சாலை கூட சரியாக இல்லாத, வசதிகள் குறைந்த இந்த இடத்தில் போய் எங்களை ஏன் தங்க வைத்தீர்கள்?” என்று இருநாட்களுக்கு முன்பு பயண முகவருடன் ஏகத்திற்குச் சண்டை போட்டது ஞாபகத்திற்கு வந்தது. அவரும், “நீங்கள் கேட்ட மாதிரி இயற்கைச் சூழலுடன் அமைதியான இடத்தில் தான் இருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கும். முதலில் சொன்ன இடம் எத்தனை முயன்றும் கிடைக்கவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். இனி இருக்கப் போகும் இடங்கள் எல்லாம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்,” என்று சொன்னாலும், “நீங்கள் கொடுத்த பணத்திற்குச் சரியான இடத்தில் உங்களைத் தங்க வைக்கவில்லை” என்று டிரைவர் வேறு ஏற்றி விட்டதால் எங்கே ஏமாந்து விட்டோமோ என்று கூட தோன்றிற்று. அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதனால் தானே தனியாரிடம் சென்று பயணத்திட்டத்தைப் போட்டோம் என்று கோபப்பட்டோம். ஆனால் இத்தனை அருகில் ஓடும் ஆறு. 12 குடில்களில் பயணிகள் யாருமற்று நாங்கள் மட்டுமே தனியாக இருந்த நாட்களும் மிக நன்றாக மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. தாராளமாக மக்கள் இங்கே பயமின்றி தங்கலாம்.

டெல்லி வந்து இறங்கிய நாள் முதல் மழையும் கருமேகங்களும் மட்டுமே பார்த்த கண்களுக்கு அன்றைய காலையில் மழை மேகங்கள் இன்றி நீலவானில் சூரிய பகவானின் வரவு புத்துணர்ச்சியை அளித்தது. தாத்தா தேநீர் கொடுத்து விட்டு காலை உணவு விரைவில் தயாராகி விடும் என்று சொல்லி விட்டுச் சென்றார். நாங்களும் தயாராகி எங்களுடைய இரண்டு பெட்டிகளையும் இரண்டு சிறிய பெட்டிகளையும் வெளியில் எடுத்து வைத்தோம். சுடச்சுடப் பூரி, சன்னா மசாலா, அங்கு விளையும் காய்கறிகளைக் கொண்டு செய்த ‘ஆச்சார்’ என்று தாத்தா அமர்க்களப்படுத்தியிருந்தார். பெரிய உணவகம் போலன்றி வீட்டுச் சாப்பாடு போல எளிமையாக இருந்தாலும் உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவே பிரயாணங்களில் மிக முக்கியம். தங்குமிடத்தில் சில அசௌகரியங்கள் இருந்த போதிலும் இந்த இடம் எங்களுக்குப் பிடித்து விட்டது. தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற இடம். தாத்தா பெட்டிகளை வண்டியில் ஏற்ற அவருக்கு நன்றியைக் கூறி சிறிது அன்பளிப்பையும் வழங்கி விடைபெற்றோம். இந்த முறை மரியாதையாக நாங்கள் நடந்தே அந்த சாய்வு சாலையில் மேலேற, பெட்டிகளுடன் வண்டியை எடுத்துக் கொண்டு அசோக்குமார்ஜியும் வந்து விட்டார்.

முன் தினம் நதிக்கரையோரம் சந்தித்த மனிதர்கள் வாழும் கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்றவுடன் அதற்குத் தனி கட்டணம் என்று டிரைவர்ஜி சொல்ல, நாங்களும் ஒத்துக்கொண்டோம். எங்கள் பயணத்திட்டத்திலிருந்து சிறிது விலகி வேறு ஊர்களுக்குச் செல்ல விரும்பினால் அதற்குத் தனிக் கட்டணம் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தார்கள். ஒரு வண்டி செல்லும் அளவே இருந்த மலைப்பாதையில் வழியெங்கும் வண்ண வண்ண பூக்கள் பூத்திருந்தது கொள்ளை அழகு. வளைந்து வளைந்து செல்லும் பாதையில் மேலேறிச் சென்று கொண்டிருந்தோம். கிராமம் மட்டும் கண்ணில் படவேயில்லை. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் நல்ல உயரத்தில் அந்த ஊர் இருந்தது! நேற்று இத்தனை தொலைவிலிருந்து வந்திருந்தார்களா அந்த மக்கள்! அவர்களில் சிலர் நடந்து வேறு சென்றார்களே! அடேயப்பா!

வழியில் ஒரு பள்ளி/கல்லூரி வளாகம் ஒன்றைக் கடந்து வந்தோம். மாணவ, மாணவியர்கள் சிலர் வாசலில் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். பல கிலோமீட்டர்கள் நடந்தே பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்களைப் பார்க்கும் பொழுது தான் நகரத்தில் வாழும் நாம் அனுபவிக்கும் பல சலுகைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது! இந்தப் பகுதிகளில் இரு சக்கர மோட்டார் வாகனங்கள், பலரையும் ஏற்றிச் செல்லும் வேன்களைப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள். புல்கட்டைச் சுமந்து செல்லும் பெண்கள், மேய்ச்சலுக்கு கால்நடைகளை அழைத்துச் செல்பவர்கள் என்று ஓரிருவர் வழியில் தென்பட அவர்களிடம் கோவில் எங்கிருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வண்டியிலிருந்து இறங்கி குறுக்கு வழியில் நடந்து ஊருக்குள் சென்றோம். நிற்காமல் குழாயில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க, ஒருவர் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். நிமிர்ந்து பார்த்து சினேகப்புன்னகை உதிர்த்து மேலேறிச் செல்லுமாறு வழி கூறினார்.

சாணி, சகதி சூழ்ந்த இடத்தில் மொய்க்கும் ஈக்களையும் முதுகு மேல் அமர்ந்திருந்த பறவையையும் கண்டுகொள்ளாமல் அசை போட்டுக் கொண்டிருந்த கால்நடைகளைக் கடந்து சென்றால் பச்சை, மஞ்சள் வண்ணம் பூசிய எளிமையான மலைப்புற வீடுகள். வீட்டு வாசலில் வேலை செய்து கொண்டிருந்த பாட்டியிடம் சிறிது நேரம் “பேசினேன்”!!! அவரும் பொக்கைவாய்ச் சிரிப்பில் பதில் சொன்னார். எனக்குத் தான் புரியவில்லை. ‘சும்மா இருப்பது எப்படி?’ என்று அவர் எதிர் வீட்டுத் தாத்தாவிடம் கேட்டால் நிறைய பதில்கள் தருவார் போல! எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டார்கள். தெருக்கள் என்று இல்லை. ஒற்றையடிப்பாதையில் மேலேறிச் சென்றால் சிறிதும் பெரிதுமாக நெருக்கமாக வீடுகள். பல அறைகள் கொண்ட வீடுகளில் இரண்டு மூன்று குடும்பங்கள் தங்கியிருப்பது போல இருந்தது.

கோவிலைத் தேடி வந்திருக்கிறோம் என்றவுடன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த பெரியவர்கள், சிறுவர்கள் என்று சிறு பட்டாளம் அங்கே ஒன்று கூடியது. பெண்கள் அவரவர் வீட்டு மாடியிலிருந்து எங்களை ‘ஏலியன்கள்’ போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். கூட்டத்திலிருந்த ஒருவர் “நேற்று உங்களை ஆற்றோரம் பார்த்தோம்” என்று கொஞ்சும் ஆங்கிலத்தில் பேசி அதிசயிக்க வைத்தார்! “எங்கள் ஊருக்கு வந்ததற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறி சில படங்களையும் எடுத்து கொடுத்தார். அந்த ஊரின் பெயர் ‘டக்ஹ்யத் காவுன்'(Dakhyatgaun). படிப்பறிவு குறைந்த பெரியவர்களும் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களும் என மிகச் சிறிய கிராமம். விவசாயமும் கால்நடைகளைப் பராமரிப்பதுமே முக்கியமான தொழிலாக இருக்கிறது. தெருவோரத்தில் சுவர்கள் சூழ இரு குழாய்களில் தண்ணீர் அமோகமாக கிடைக்கிறது. அழகர்மலை தீர்த்தம் போல அத்தனை சுவையாக! கொடுத்து வைத்தவர்கள்! அங்கேயே குளிக்கிறார்கள். வீட்டுப் பயன்பாட்டுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்கிறார்கள். மலையில் ஏறி இறங்கி கடினமான வேலைகளை செய்து திடமான உடற்கட்டுடன் அவர்களைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாகத் தான் இருந்தது! பெண்கள் கடின உழைப்பாளிகளாகத் தெரிந்தார்கள். தலையை முழுவதும் மூடி அந்த சீதோஷணத்திற்கு ஏற்ற உடைகளில் எந்தவித ஒப்பனைகளும் இல்லாமலே இயற்கை அழகுடன் கவர்ந்தார்கள். ‘சும்மா இருத்தல்’ என்ன என்று அங்குச் சோம்பி உட்கார்ந்து இருந்த வயதான ஆண்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அதே வயதுப் பெண்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்! ம்ம்ம்…

இந்தச் சிறிய ஊரில் இருக்கும் இரண்டு சிவன் கோவில்களை முன்தினம் நாங்கள் சந்தித்த சென்னை எம்ஐடியில் படித்தவரும் அவருடைய மனைவியும் நிர்வகித்து வருகிறார்கள். நவராத்திரி முதல் நாள் என்பதால் ‘ஜெய் தத்தேஷ்வர் மஹாதேவ்’ கோவிலில் பூஜையை முடித்து விட்டு அவர் மற்றொரு கோவிலில் இருந்தார். நேரமின்மை காரணமாக அந்தக் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. நாங்கள் சென்றிருந்த அழகான சிறிய சிவன் கோவிலில் இருந்து சுற்றுப்புற மலையின் அழகும், விளைநிலங்களும், துள்ளியோடும் யமுனா ஆறும், விவசாய நிலங்களும், சிலேட்டுக்கூரைகள் கொண்ட வீடுகளும் என்று வித்தியாசமான சூழல் கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தெரிந்தது. பார்க்க கொண்டைப்பூ போல இருந்த மலர்கள் மலையில் ஆங்காங்கே பூத்து மேலும் அழகைச் சேர்த்துக் கொண்டிருந்தது.

அவர்களிடமிருந்து விடைபெறும் பொழுது தேநீர் அருந்தி விட்டுச் செல்லலாமே என்று பாட்டி சிரித்துக் கொண்டே கேட்க, நன்றியுரைத்து விடைபெற்றோம். அவர்களிடம் இருந்த வெள்ளந்தித்தனமும் அமைதியும் இயற்கையோடு ஒன்றிய வாழ்வும் முகத்தில் தவழ்ந்த புன்னகையும் அங்கிருந்த சில மணிநேரங்களில் அவர்களைப் பற்றின என்னுடைய கணிப்பு, ‘இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ்’ என்பதாக இருந்தது. நாம் கடந்து வரும் மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எத்தனை எத்தனை விஷயங்கள் இருக்கிறது! ‘மினிமலிசம்’ பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளும் நகர மாந்தர்களுக்கிடையில் படிக்காமலே அப்படி வாழ்கிறார்கள் இந்த மலைப்புற மக்கள்! இல்லாத போது தான் இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்வோமோ என்னவோ! நகர வாழ்க்கையில் நித்தம் ஒரு பிரச்சினையுடன் போராடும் மக்களால் இப்படி சில நிமிடங்களாவது அமைதியாக இருக்க முடியுமா? அதையும் காசு கொடுத்துத்தான் கற்றுக்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம் என்பது தான் முகத்திலறையும் உண்மை! இங்கே இவர்கள் குழுவாக வாழ்கிறார்கள். ஒருவருக்கு ஒன்று என்றால் ஊரே கூடி விடும் போல அத்தனை நெருக்கமாக இருக்கிறது வீடுகள்! “இகிகை” புத்தகத்தில் கூறியது போல இப்படி வாழ்வது தான் நீண்ட ஆயுளையும் மகிழ்ச்சியையும் நிறைவான வாழ்க்கையையும் தரவல்லதோ? இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது இதுதானோ? என்று பலவற்றை யோசித்துப் பேசிக்கொண்டே எங்கள் பயணம் உத்தரகாசியை நோக்கித் தொடர்ந்தது.

புண்ணியத்தலங்களுக்குச் சென்று வரத் திட்டமிடுகையில் எங்களுடைய பயணம் மலைப்பாதை வழியாகச் செல்லும் என்று தெரிந்திருந்தாலும் இப்படி வளைந்து நெளிந்து பல மலைகள் ஏறி இறங்கிச் செல்லும் கடினமான ஒன்று என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதுவும் ஓரிடத்திலிருந்து இன்னொரு கோவிலுக்குச் செல்ல குறைந்தது ஐந்தாறு மணிநேர பயணங்கள். தொடர் மழையால் மலைச்சரிவுகளும் உருண்டு வரும் சிறு பாறைகளும் குறுகிய சாலைகள் உடைபட்டுக் கிடந்ததும் எங்கள் பயணத்தை நினைத்தபடி முடித்துவிடுவோமா என்று ஒவ்வொரு நாளும் யோசிக்க வைத்தது.

பர்கோட்டிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் உத்தரகாசி, உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புராதன நகரம். கங்கோத்ரி செல்ல இதன் வழியே தான் செல்ல வேண்டும் என்பதால் யாத்திரிகர்கள் பலரும் தங்கிச் செல்லும் இடமும்கூட . சில பல மலைகள் கீழிறங்கி மீண்டும் சில மலைகள் மீதேறி வளைந்து சென்று கொண்டிருந்த பயணத்தில் இரண்டு மணி நேரத்தில் ‘மேகர்கவ்’ என்ற ஊரிலிருந்த ‘ஷிவ் குஃப்’ என்னும் சிவன் குகைக்கு வந்து சேர்ந்தோம்.

150மீட்டர் உயரத்தில் உள்ள கோவிலுக்குச் செல்ல படிகள் அமைத்திருந்தாலும் செங்குத்தான பாதையில் செல்வதால் கொஞ்சம் கடினமானதாகத்தான் இருக்கிறது. அதுவும் மழை பொழிந்து வழுக்கலான படிகளில் ஏறுவதால் நிறைய கவனம் வேண்டியிருந்தது. என்னைப் போலவே பலர் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருந்தார்கள். வழியில் அங்கு வாழும் சிறுவர்கள் மிட்டாய், சாக்லேட் கேட்டுப் பின்வருகிறார்கள். என் கையிலிருந்த மிட்டாயை அவர்களுக்கும் கொடுத்தேன். மலை ஏறுகையில் எப்பொழுதும் ஆரஞ்சுப்பழங்களோ மிட்டாய்களோ எடுத்துச் செல்வது என் வழக்கம். வழியில் சிறு சிறு அருவிகள் இரைச்சலுடன் பாய்ந்து செல்வதைப் பார்க்க அழகாக இருந்தது. நடுநடுவே மக்கள் சிறிது இளைப்பாறி ஏறிச்சென்று கொண்டிருந்தார்கள். இறங்குபவர்கள் சிலர், ” மிக அற்புதமான கோவில். கஷ்டப்பட்டாவது ஏறிச்சென்று விடுங்கள்” என்று ஆவலைக் கூட்டினார்கள்.

அங்கே சென்றால் நீண்ட வரிசை. தமிழில் சிலர் பேசுவதைக் கேட்க, ‘ஆகா! நம் மக்கள் வந்திருக்கிறார்களே’ என்று ஆனந்தமாக இருந்தது. ஒரு வயதான மாமாவும் மாமியும் அருவி தீர்த்தத்தின் அருகில் படம் எடுத்துக் கொள்ள திணறிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவ, “நீங்களும் தமிழ் பேசுவேளா? ரொம்ப நன்றி!” என்று கூறி விட்டுச் சென்றார்கள். நன்றாக மேக்கப் போட்டுக் கொண்டிருந்த வட இந்தியக் குடும்பம் ஒன்று எங்களுக்குப் பின் நிற்க, முன்னால் சென்னை மாம்பலத்திலிருந்து வந்த குழுவினர் நின்று கொண்டிருந்தார்கள். தனியே ஒரு பேருந்தில் பயணித்து கூடவே சமையலுக்கு ஆட்களையும் அழைத்து வந்திருந்தார்கள். அவர்கள் தனி வேனில் ஓரிடத்தில் சமைக்கச் சென்று விட்டார்களாம். இங்கே தரிசனம் முடிந்த பிறகு சுடச்சுடச் சாப்பாடு கிடைக்கும் என்று பசியுடன் இருக்கும் எங்களை நன்றாக ஏற்றி விட்டார்கள். ஒரு சில நடுத்தர வயதினரைத் தவிர எல்லோருமே ஓய்வு பெற்றவர்களாகத் தெரிந்தனர். அவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்களாக ஒரே தெருவில் பழகியவர்களாக இருந்ததைக் கண்டு அதிர்ஷ்டசாலிகள் என்று தோன்றியது. ஓய்வு பெற்ற பின்னர் நண்பர்களுடன் உறவினர்களுடன் புண்ணியதலங்களுக்குச் சென்று வருவது பெரும்வரம் தான். அனைவருக்கும் சாத்தியமில்லை என்றாலும் அப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள் தானே? அவர்களும் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குள் வரிசையும் சிறிது நகர, கோவிலின் முன்மண்டபத்தில் நின்றுகொண்டிருந்தோம்.

சுவரில் சிவன், சக்தி உருவங்களை வரைந்திருந்தார்கள். கோவில் என்றால் இப்படித்தான். சிவன், சக்தி என்றால் இப்படித்தான் என்று பார்த்துப் பழகிய கண்களுக்கும் மனதிற்கும் அந்தச் சித்திரங்கள் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந்ததில் வியப்பேதுமில்லை. ஈஷ்வரும் “நாம் அப்படியொரு பிம்பத்தை மனதில் உருவாக்கி வைத்திருக்கிறோம். இவர்களுக்கு அப்படி அல்ல. மனிதர்களைப் போலவே கடவுளையும் பார்க்கிறார்கள். அதனால் தான் இப்படி வந்திருக்கிறார்கள்.” என்றார். இருக்கலாம்.

இந்த “பிரகதீஷ்வர் பஞ்சனன் மஹாதேவ்” குகைக் கோவிலை 1998 வருடம் தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று பலரும் வந்து செல்லும் பிரபலமான கோவில் ஆக இருக்கிறது. கரடுமுரடான கற்கள் நிறைந்த குகைக்குள் உள்ளே இறங்கிச்செல்லவும் வெளியில் வரவும் கொஞ்சம் சிரமம் தான். கீழே உட்கார்ந்து மெதுவாக இறங்கினால் குகையில் நீர் வழிய சுண்ணாம்புப்பாறைகள். அது சிவலிங்கம் போலவும், விநாயகர், ஹனுமான், திரிசூலம் போல காட்சி தருவதால் இதிலும் ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனின் திருவுருவைக் கண்டு மக்கள் பரவசத்துடன் வணங்குகிறார்கள். அங்கிருந்த அர்ச்சகர் விளக்கேற்றிப் பூஜைகள் செய்தார். மேலேற தவழ்ந்து வர வேண்டியிருக்கிறது. “முட்டி பத்திரம்” என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். சிராய்ப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிக எடை உள்ளவர்கள் உள்ளே சென்று வருவது பெருஞ்சிரமம் தான். வெளியில் வந்தவுடன் சிலுசிலு மலைக்காற்றும் காலை வருடிச்செல்லும் நீரோடையும் இதமாக இருந்தது. ‘சிவசிவ’ என்று அவனை நினைத்துக் கொண்டே படிகளில் இறங்கினோம். கோவிலின் கீழே வரிசையாக காய்கறி, பழக்கடைகள் இருந்தன. பெரும்பாலும் அங்கே மலைகளில் இயற்கை விவசாயத்தில் விளையும் ஒரு சில காய்கறிகள். ஆப்பிள் பழங்கள் மட்டுமே இருந்தது. லெமன் சோடா பிரபலம் என்று நினைக்கிறேன். நன்றாக வியாபாரம் லாஜிக் கொண்டிருந்தது. குடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவர்கள் பயன்படுத்திய தண்ணீரைப் பார்த்து கலக்கமாகி விட்டது. சூடாக ஆலு பரோட்டா, சமோசா இத்யாதிகளையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து கிளம்பும் பொழுது மணி பகல் இரண்டாகியிருந்தது.

அதுவரையில் ஒழுங்காக இருந்த சாலைப்பயணம் இப்பொழுது மலைச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பாதையில் செல்ல வேண்டிய அவஸ்தையான பயணமாகிப் போனது. ஜேசிபி எந்திரங்கள் மூலமாக பாறைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்படுத்திக் கொண்டிருக்க, பல வளைவுகள் பயணித்து கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். வழியில் புதிதாக அழகான பாலமும் சுரங்கப்பாதையையும் கட்டியிருக்கிறார்கள். கண்ணுக்குக் குளிர்ச்சியாக விவசாய நிலங்களும், கூடவே சாம்பல் நிறத்தில் பவனி வரும் ‘பாகீரதி’ ஆறும் மனதிற்கு அமைதியைத் தந்தது. சிறிய அழகிய வண்ணமயமான மலைக்கிராமம் தெரிந்தது. ஒரு மணிநேரத்தொலைவில் வரிசையாக வண்டிகளை நிறுத்திப் பலரும் அங்கிருந்த கடைகளில் மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தரசு (Dharasu) என்ற ஊரில் செலவிற்குப் பணத்தை எடுக்க ஏடிஎம் இயந்திரத்தைத் தேடிக் கொண்டுச் சென்றோம். குட்டி ஊர். பலவிதமான கடைகள் இருந்த தெருவில் நல்ல கூட்டம். உதட்டுச்சாயம் அணிந்த மெல்லிடைப் பெண்கள் நேர்த்தியாக உடையணிந்து சென்று கொண்டிருந்தார்கள். திருமணமான பெண்கள் வகிடு நிறைய குங்குமம் வைத்துக் கொண்டு ‘பளிச்’ என தெரிந்தார்கள். வழியில் பஞ்சாப் தேசிய வங்கி ஒன்றும் அதன் அருகே ஏடிஎம் மெஷினும் இருக்க, பணத்தை எடுத்துக் கொண்டோம். சந்தையில் சில பழங்களையும் வாங்கிக் கொண்டு தொடர்ந்தது எங்கள் பயணம். நான்கு மணியளவில் பாகீரதி நதிக்கரையில் அமைந்துள்ள உத்தரகாசி நகரில் இருக்கும் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.

சுற்றிலும் பச்சைப்பசேல் மலைகளை கருமேகங்கள் நெருங்குவதும் விலகுவதுமாய் ரம்மியமாகக் காட்சி தர, சமீபத்திய பெரு மழையினால் வண்டிகள் நிறுத்துமிடம் சகதிகளுடன் சொதசொதவென்று இருக்க, தினம்தினம் ஆயிரக்கணக்கில் கோவிலுக்கு வந்து செல்பவர்கள் கடந்து செல்ல வேண்டிய பாதையைச் செப்பனிட்டுப் பராமரிக்க வேண்டாமா? மழை ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அரசின் அலட்சியமும் மெத்தனப்போக்கும் தான் பெரும் காரணம். இல்லையென்றால் கோவில் இருக்கும் இடத்தை இப்படிப் போட்டு வைத்திருப்பார்களா? வண்டியைச் சகதி இல்லாத ஓரத்தில் நிறுத்த நாங்கள் இறங்கிக் கொண்டோம். இப்படியா? நடந்து செல்லவே பயமாக இருக்கிற நிலையில் வைத்திருப்பார்கள் என்று கோபமாக வந்தது.

வண்டி நிறுத்தத்திலிருந்து ஐந்து நிமிட நடையில் ஒரு சிறிய சந்தில் கோவில் இருக்கிறது. தெருவுக்குள் நுழையும் பொழுதே அங்கிருந்த கல்லூரியிலிருந்து “வந்தே மாதரம்” என்று ஒருமித்த குரலில் மாணவர்கள் முழங்கும் கோஷம் காதுகளை இனிமையாக்கியது. ஏன் ? நம் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் தினமும் ‘வந்தே மாதரம்’ சொல்லி நாளை ஆரம்பிக்கக்கூடாது என்று எண்ணிக் கொண்டே வழியிலிருந்த கடைகளைத் தாண்டி கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்தோம். நாங்கள் சென்றிருந்த நேரத்தில் கூட்டம் இல்லாததால் அமைதியாக இருந்ததது கோவில்.

வாரணாசியின் வடக்கே அமைந்துள்ள இந்தச் சிவ தலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. தன் பாவங்கள் தீர, பரசுராமர் இங்கு தவம் புரிந்ததாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. மார்க்கண்டேய முனிவர் எம தர்மனிடமிருந்து தன் உயிரைக் காத்துக் கொள்ள, சிவனை நோக்கி இங்கே தவம் புரிந்ததாகவும் ஐதீகம். சிறிது சாய்ந்த நிலையில் இருக்கும் பெரிய சிவலிங்கத்திற்கு நாமே அபிஷேகம் செய்து வழிபட முடிகிறது. அர்ச்சனைப் பொருட்களுடன் சென்றால் பூஜைகள் செய்து தருகிறார்கள். நந்தி சன்னிதியில் அமர்ந்து சிலர் தியானம் செய்து கொண்டிருந்தார்கள். சிறிய இடம் தான். கூட்டம் இல்லாததால் அது சாத்தியமாயிற்று. வரிசையாக நின்று நிம்மதியாக இறைவனை வழிபட முடிவது எத்தனை பெரிய வரம்? எங்கும் ‘சிறப்பு தரிசன’ கட்டண வசூலிப்புகள் இல்லை. இவையெல்லாம் என்று தமிழகத்தில் சாத்தியப்படுமோ? சுற்றுச் சுவர்களில் ஜோதிர்லிங்க கோவில்களை வரைந்திருந்தார்கள். இங்கும் பழமையான கோவில் கோபுரம் மனதைக் கவர்ந்தது.

சிவனின் சன்னிதிக்கு எதிரே சக்தி பீடம். அங்கே 1500 வருடங்களுக்கும் பழமையான, ஆறு மீட்டர் உயரமும் 90 சென்டிமீட்டர் அகலமும் கூரை அளவிற்கு உயர்ந்த திரிசூலம் உள்ளது. மகிஷாசுரனை வதைத்த திரிசூலம் என்பது ஐதீகம். திரிசூலம் முழுவதும் சிகப்பு வண்ணத் துணிகளால் பக்தர்களால் சுற்றப்பட்டு இருந்தது. குங்குமம் அர்ச்சித்த அழகான தேவியின் திருவுருவம். விசாலமான கோவில். அரசமரத்தின் கீழ் விநாயகர், ஆஞ்சநேயர், மார்க்கண்டேயர் சன்னிதிகள் இருக்கிறது. யாக குண்டமும் இருந்தது. பக்தர்கள் இளைப்பாறிச் செல்ல வசதிகள் செய்திருக்கிறார்கள். காவல்துறையினர் சிலர் அங்கே பணியில் இருந்தார்கள். வயதான பெண்கள் வரிசையாக அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தது தான் மனதை வருத்தியது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் ‘பைரவர்கள்’ ஹாயாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். கோவிலுக்குச் சென்று வந்தால் கிடைக்கும் மனநிம்மதியுடன் வெளியேறினோம்.

வண்டியில் ஏறி, நகர்ப்புற நெரிசலைத் தாண்டிச் சென்று கொண்டே இருந்தோம். வழியில் பல தங்கும் விடுதிகள் இருந்தாலும் இந்த பயண முகவர் சொன்ன இடம் மட்டும் கண்ணில் தென்படவே இல்லை. இப்படியே சென்று கொண்டிருந்தால் ஆற்றில் தான் இறங்க வேண்டும் என்று நினைக்கையில் ஊரை விட்டுச் சிறிது தொலைவில் இருந்தது நாங்கள் தங்கியிருந்த ‘சிவலிங்க ரிசார்ட்’ . வண்டியை நிறுத்தியவுடன் விடுதி சிப்பந்திகள் பெட்டிகளை எடுத்துக் கொண்டுச் சென்று விட்டனர். நல்ல பெரிய தங்கும் விடுதி. அறையும் பெரிதாக ஓகே ரகம் தான். பிரீமியம் என்று சொன்னாலும் ஓரளவுக்குத் தான் நன்றாக இருக்கிறது! தேநீர் சாப்பிடலாம் என்று விடுதி உணவகத்திற்குச் சென்றோம்.

அங்கே நான்கு பெண்களைப் பார்க்க தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் போல இருந்தார்கள். மலேசியாவிலிருந்து வந்திருந்தார்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டோம். ஹரித்வாரில் இப்படித்தான் ஒரு குழுவைச் சந்தித்தோம். இவர்கள் இரண்டாவது. ஒவ்வொரு வருடமும் மலேசியாவிலிருந்து பல குழுக்களாக இந்தியாவிற்கு வருகிறார்கள். தாய்நாட்டை விட்டுப் பிரிந்து பல தலைமுறைகளாக மலேஷியாவில் வாழ்ந்தாலும் இந்தியாவில் உள்ள புண்ணியத்தலங்களுக்குத் தவறாமல் செல்கிற அவர்களைப் பார்த்து பொறாமையாகவும் பெருமையாகவும் இருந்தது. தீவிர சைவர்கள். அவர்களில் ஒருவர் மதுரைக்குச் சென்று வந்த இனிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவருடைய மகளுக்கும் மிகவும் பிடித்த கோவில் என்றார். ‘மதுரை அழகி’ என்றால் சும்மாவா? அவர்களில் ஒரு 70 வயதுப் பாட்டி பார்க்க துறுதுறுவென்று இருந்தவர் யமுனோத்ரி கோவிலுக்கு நடந்தே சென்றிருக்கிறார். படா பாட்டி! என்று பாராட்டினேன். கேரளா பூர்விகம் என்றாலும் தற்போது யாரையும் அங்கு தெரியாது என்றவர் தமிழில் நன்றாகப் பேசினார். கேதார்நாத் கோவிலுக்கும் எட்டு மணிநேரம் நடந்தே மலையேறிச் செல்ல இருப்பதாகக் கூறி அசத்தினார்! இப்படியும் மக்கள் இருக்கிறார்கள்! “சுற்றுலாப் பேருந்தில் யமுனோத்ரி சென்று வந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. பாதி நேரம் கண்களை மூடித்தான் பயணித்தோம். திருப்பங்களில் ஒரு பக்கம் ‘கிடுகிடு’ பள்ளம். கீழே ஓடிக்கொண்டிருக்கும் யமுனா ஆறு. மறுபக்கம் மலைகள். அப்பப்பா!” என்று கூற நாங்களும் ஆமோதித்தோம்.

பெரு மழையினால் கங்கோத்ரி செல்லும் பாதையில் மலைச்சரிவுகள் ஏற்பட்டு சாலைப் போக்குவரத்தைத் தடை செய்திருப்பதால் மூன்று நாட்களாக கங்கோத்ரிக்குச் செல்ல முடியாமல் இந்த விடுதியில் மாட்டிக் கொண்டிருப்பதாகவும் மறுநாள் காலை கேதார்நாத் செல்வதால் அவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுமாறும் கூறினார்கள். மழை இல்லாத பொழுதில் உத்தரகாசியில் இருக்கும் சிறு கோவில்களுக்கும் காசிவிஸ்வநாதரை தினம் இருமுறையும் பார்த்து வந்திருந்தார்கள். “நாளைக்கும் கோவிலுக்குச் செல்ல முடியுமா என்பது சந்தேகம் தான்” என்று வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். “என்னது? மூணு நாளா இங்கேயே இருக்கிறீங்களா? கடவுளே அப்படி ஏதும் நடந்திடாம காப்பாத்துப்பா. இவ்வளவு தூரம் இனியொருமுறை வர முடியுமா என்று தெரியவில்லை.” மானசீகமாக மனதிற்குள் வேண்டிக்கொண்டேன்.

எத்தனை வசதிகள் இப்போதெல்லாம்? டெல்லி வந்து இறங்கியவுடன் ‘மூவிங் கிச்சன்’ என்று சமையல்காரர்களும் பண்டங்களும் பயணிகள் கூடவே வரும் வசதிகள் உள்ளது. அதற்கென நிறுவனங்கள் இருக்கிறது. எங்கு தங்குகிறார்களோ அந்த விடுதியின் சமையலறையை வாடகைக்கு எடுத்துச் சமைத்துக் கொடுக்கிறார்கள். ஆரோக்கியமான சைவ உணவுகள். வட இந்தியாவில் இருந்தாலும் நமக்குப் பிடித்த வீட்டுச் சமையல் கிடைப்பது வயதானவர்களுக்கு நல்லது. இதுவரை நாங்கள் இந்த வசதியைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. ‘ஷிவ் குஃப்’ல் சந்தித்த மாம்பலத்து ஆட்கள் ஊரிலிருந்த அவர்களோடு சமையற்காரரையும் அழைத்து வந்திருந்தார்கள். பேருந்தை நிறுத்திச் சமைத்துக் கொள்வதாகக் கூறியது நினைவிற்கு வந்தது. எங்களுக்கு எப்பொழுதும் போகும் ஊரில் என்ன சாப்பாடு கிடைக்குமோ அதை உண்பது பிடிக்கும். சில இடங்களில் தேடித்தேடி பிரபல உணவு வகைகளை உண்போம். ஆனால் சிலர் வெளிநாடுகளில் கூட இந்திய உணவு விடுதிகளைத் தேடிச் செல்வதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்! வீட்டில் அதைத்தானே காலம்காலமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இங்கு வந்தும் இதே தானா? நம்மவர்களுக்குச் சப்பாத்தி மேல் ஏதோ கோவம்😉

‘கலகல’வென்று பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. சிறிது நேரப் பேச்சில் நெடுங்காலம் பழகிய உணர்வு. வேற்று மொழி பேசும் இடத்தில் நம் மொழி பேசுபவர்கள் மீது வரும் பாசம்! இதுவே இப்படி என்றால் என் தாய்பாஷை பேசுபவர்களைப் பார்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அவர்களிடமிருந்து விடைபெற்று அறைக்குத் திரும்பினோம்.

பால்கனி கதவைத் திறந்தால் ‘சிலுசிலு’ காற்றில் சாம்பல் நிற ‘பாகீரதி’ பாறைகளின் மேல் பாய்ந்தோடிக் கொண்டிருந்தாள். சுற்றிலும் இமயமலை! பல வண்ணங்களில் உத்தரகாசி நகர கட்டடங்கள் என்று கண்ணுக்கு விருந்தாகக் காட்சிகள். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு விடுதியின் பின்வாசல் வழியே நடந்து சென்று ‘ஜில்’லென்றிருந்த நதியைத் தொட்டு அவளை வழிபடும் பாக்கியத்தைத் தந்ததற்கு நன்றி கூறி வணங்கினோம். கோவிலில் ஜோதிர்லிங்க, சக்தி பீட திவ்ய தரிசனம். மனதில் இருந்த கவலைகளும் தெளிவான நதியின் ஓட்டத்தில் மெல்ல கரைந்து விடாதா என்று ஏக்கமாக இருந்தது. செங்குத்தான படித்துறைகளில் நிறைய படிகள். கவனமாக இறங்க வேண்டியுள்ளது.

பசியெடுக்கவே விடுதிக்குத் திரும்பினோம். இங்குள்ள விடுதிகள் அனைத்திலும் காலை, இரவு உணவிற்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கிறார்கள். எங்களுடைய பயணத்தில் நாங்கள் தங்கும் மூன்றாவது விடுதி இது. எட்டு மணிக்குத் தான் இரவுணவு. இந்தியாவிற்கு வந்து வழக்கமாகச் சாப்பிடும் நேரங்கள் எல்லாம் எக்குத்தப்பாக மாறிவிட்டிருந்தது!

வரவேற்பறையில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்த பொழுது தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த அம்மா, அப்பா, மகன் குடும்பத்தைச் சந்தித்தோம். பார்க்க வட இந்தியர்கள் போல இருந்தாலும் பல தலைமுறைகளாகத் தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார்கள். இங்கு உறவினர்கள் யாரும் இல்லாவிட்டாலும் வருடம் ஒரு முறை இந்திய விஜயம் செய்வோம் என்று சிரித்த முகத்துடன் அந்தப் பெண்மணியும் அவருடைய கணவரும் கூறினார்கள். இரு மகன்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள். சமீபமாக இந்தியர்கள் சிலரின் அரசியலால் அவர்கள் இருக்கும் நாட்டுக்கு கேடு. அவர்களால் மற்ற இந்தியர்களுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்று வருத்தத்துடன் அவர்கள் நாட்டு அரசியலைப் பற்றிப் பேசினார்கள். கோடிகோடியாக இத்தனை பணத்தை வைத்துக் கொண்டு என்ன தான் செய்வார்களோ இந்த மலைமுழுங்கிகள் என்று தோன்றியது! அவர்கள் இரண்டாவது முறையாக ‘சார்தாம்’ பயணம் மேற்கொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. “எனக்கு இந்தியா என்றால் அவ்வளவு பிடிக்கும்.” என்றார் அந்தப் பெண்மணி. அவர்களும் இரண்டு நாட்களாக கங்கோத்ரிக்குச் செல்ல காத்திருந்தார்கள். மீண்டும் வேண்டிக் கொண்டேன்.

எட்டு மணிக்கு உணவு தயாரானதும் உணவகத்திற்குச் சென்று அங்கிருந்த மேஜைகளில் அமர்ந்து கொண்டோம். வழக்கம் போல ரொட்டி, தால் மக்கனி, சோறு, சாம்பார், பப்பட், தயிர், சூப், காய்கறிகள், ஆச்சார், பழங்கள் என்று நன்றாக இருந்தது. கல்லூரி முடித்து பெங்களூரில் வேலை செய்து கொண்டிருக்கும்(தற்போது வீட்டிலிருந்து) மகனுடன் ராஜஸ்தானிலிருந்து வந்திருந்த அகர்வால் குடும்பம் ஒன்றைச் சந்தித்தோம். பார்த்தவுடன் அந்தப் பெண்மணி “உங்களை ஷிவ் குஃப் கோவிலில் பார்த்தோம்.” என்றார். ஏனோ ஹிந்தியில் ‘சளசள’ வென்று பேசியது புரிந்தாலும் சப்டைட்டில் இல்லையே என்று வருத்தமாக இருந்தது. நானும் என்னுடைய ‘தத்தக்காபித்தக்கா’ ஹிந்தியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பா பெருமையாக மகன்களை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். மூத்த மகன் மேல் அளவில்லாத பாசம் போல அம்மாவுக்கு. மகன் தலையை கோதி முதுகைத் தடவி விட்டுப் பெருமையாக அவன் ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். சுப்பிரமணியன் நினைவு வந்து போனது. இந்த அம்மாக்களே இப்படித்தான்😍 நாளை கோவிலுக்குச் சென்று விடலாம் என்று நம்பிக்கையுடன் பேசினார்.

அதைக் கேட்டு பக்கத்தில் இருந்த கணவன், மனைவி இருவர் எங்களுடன் பேச்சில் கலந்து கொண்டனர். அவர்கள் அட்லாண்டாவிலிருந்து வந்திருந்தார்கள். கணவர் அங்கிருக்கும் பல்கலையில் ஒரு துறையின் தலைவராகப் பணிபுரிவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். ஈஷ்வரும் அவரும் தத்தம் அமெரிக்க தொடர்பு எண்களைப் பரிமாறிக் கொண்டார்கள். அந்தப் பெண்மணி கோவாவில் புரோகிதர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராம். “கவலைப்பட வேண்டாம். நாளை கண்டிப்பாக கோவிலுக்குச் செல்வோம். நம்பிக்கையோடு தூங்கப்போகலாம்” என்று சொல்லி விட்டு “நாளை மீண்டும் சந்திப்போம்” என்று கூறி விடைபெற்றோம். “மறுநாள் காலையில் அனைவரும் ஆறு மணிக்கு கிளம்புவதால் காலை உணவை எடுத்துச் செல்ல தயாராக வைத்திருப்போம். வேண்டுமென்றால் அறைக்கே அனுப்பி விடுவோம்” என்று விடுதி உணவகத் தலைமை சமையல்காரர் சொல்ல, நாங்களும் நன்றி கூறி வெளியேறினோம்.

அறைக்குத் திரும்பி டிரைவர் ஜியிடம் “நாளை ஆறு மணிக்கு கிளம்புவோம்” என்றவுடன் அவர், “இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. நாளை காலை 8.30 மணி வரை அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரியாமல் எதற்குப் போக வேண்டும்?” என்று கூற, “இங்கே இருப்பதற்குப் பதிலாக சாலையில் போய் காத்திருக்கலாம். அனுமதி கிடைத்தால் நல்லது. இல்லையென்றால் திரும்பி விடலாம்” என்று சொல்லி விட்டோம். உறங்கும் மலைகளையும் வண்ண விளக்குகளின் நிழல்களைச் சுமந்துச் செல்லும் ஆற்றையும் ‘மினுக்மினுக்’ என்று மின்னிக்கொண்டிருந்த நகரின் அழகையும் ரசித்துக் கொண்டே அடுத்த நாள் “மா கங்கா”வின் தரிசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தூங்கிப் போனோம்.

உத்தரகாசி-குப்தகாசி படங்கள்

Barkot - Uttarakasi

Uttarakasi Vishwanath Temple



Monday, January 23, 2023

திருடர்கள் ஜாக்கிரதை


கடந்த வாரம் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் ஈமெயில் முகவரியிலிருந்து என்னுடைய யாஹூ முகவரிக்கு ஒரு ஈமெயில் வந்திருந்தது. 

Good morning, touching base to see if you're available via email.
I need a little favor. Thanks

XXXXXX
நானும் என்னவோ ஏதோ என்று உடனே இதற்குப் பதிலளித்தேன். உடனே மற்றுமொரு ஈமெயில் அவரிடம் இருந்து வந்தது.

I need to get Amazon gift card for my niece, it's her birthday but I can't do this now because I'm currently traveling. Can you get it from any store around you? Or help order on Amazon. I'll pay back as soon as I am back. Kindly let me know if you can handle this.

XXXXXX

இங்கே தான் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அவருக்குத் தெரிந்த மனிதர்கள் நூற்றுக்கணக்கில் இருக்க ஏன் என்னிடம் கேட்கிறார் என்று. நிமிடத்தில் அவருக்குத் தொலைபேசி இருந்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் "அப்படியா? எப்படி அனுப்புறது?"ன்னு அவரிடம் நான் திருப்பிக் கேட்டு ஈமெயில் அனுப்ப,

Thanks. What I need is $300 Amazon gift card ($100 denomination. Three $100 cards total $300). You can buy from Walmart, Walgreens, Target or any grocery stores. Also, I need you to scratch the back of the cards to reveal the pins, then take a snapshot of the back showing the pins and have them sent to me here so I can forward it to her. I'll get the actual cards later.

XXXXXX
என்று அனுப்பவும் "நானும் கடைக்குப் போக முடியாது. சாரி" என்று சொல்லி முடித்தேன். சந்தேகம் வலுத்தது இங்கு தான். அதற்குப் பிறகு எங்களுடைய சிறுகுழுவில் இதைப் பற்றிக் கேட்ட பொழுது ஒருவர் கடைக்குச் சென்று கார்டு வாங்கி அந்த எண்களையும் கொடுத்திருக்கிறார். இது 'ஆன்லைன் திருட்டுத்தனம்' என்று தெரிந்தவுடன் அவருடைய கிரெடிட் கார்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த திருட்டுத் தகவலைத் தெரிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இப்படி ஒரு நண்பரின் ஈமெயில் முகவரியிலிருந்து அவருடைய தொடர்புகள் அனைவருக்கும் சென்றுள்ளது பின்பு தெரியவந்தது. இது நடந்த சில மணிநேரங்களில் வேறொருவர் முகவரியிலிருந்து கிஃப்ட் கார்டு வேண்டி அதே ஈமெயில். ஒன்று தெரிந்தது. யாரோ தெரிந்தவர்கள் தான் செய்திருக்க வேண்டும். இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல. இந்திய மக்கள் குழுவின் ஈமெயில் முகவரிகளை குழுவில் இருக்கும் திருடன் எவனோ யாருக்கோ விற்றுக் கொண்டிருக்கிறான். விஷயம் இதுவல்ல.

இணையத்தில் இன்று நாம் அனைவரும் புழங்கிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய தகவல்கள் அனைத்தும் பொதுவெளியில் கிடைக்கிறது. நம்முடைய இணைய நடவடிக்கைகள் அனைத்தையும் பலர் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிஜம். நாம் இணையத்தில் தேடுவது, பேசுவது என்று ஓட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறது நம்முடைய செல்போன்களும், கணினியும், தொலைக்காட்சிப்பெட்டியும், அலெக்ஸாக்களும். ஏதோ நம்முடைய தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதெல்லாம் ஓரளவிற்குத் தான். திருடர்கள் நினைத்தால் நொடியில் நம் தனிப்பட்ட தகவல்களைத் திருடி நம் பணத்தையும் அடையாளத்தையும் அபகரிக்க முடியும். தற்போதைய நூதன இணைய திருடர்களிடமிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியுள்ளது. அது நம் கடமையும் கூட. வீட்டிற்கு கதவு என்பது போல சில தடுப்புமுறைகளால் ஓரளவிற்கு நாம் இணைய உலகில் பாதுகாப்பாக இருக்க முடியும்.

நமக்குத் தெரியாத ஈமெயில் முகவரி அல்லது சந்தேகப்படும்படியான பெயர்களைக் கொண்டிருக்கும் முகவரியிலிருந்தோ, இதை 'க்ளிக்' செய்யுங்கள் என்று இருந்தாலோ, தனிப்பட்ட தகவல்களைக் கேட்டிருந்தாலோ 'scam' என்று குறித்து வைத்துக் கொள்ளும் வசதிகள் ஈமெயிலில் கிடைக்கிறது. அதைச் செய்து விட வேண்டும். செல்போன்களில் தெரியாத என்னிடம் இருந்து அழைப்புகள் வந்தால் பதில் அளிக்காமல் இருப்பது நல்லது. அப்படியே வேண்டுமென்றால் குறுஞ்செய்தியோ அனுப்புவார்கள். தொடர்ந்து அத்தகைய எண்களில் இருந்து அழைப்பு வந்தால் 'block' செய்து விடவேண்டும்.

You can register your numbers on the national Do Not Call list at no cost by calling 1-888-382-1222 (voice) or 1-866-290-4236 (TTY). You must call from the phone number you wish to register. You can also register at add your personal wireless phone number to the national Do-Not-Call list donotcall.gov.
இது அமெரிக்காவில் சாத்தியம். பதிவு செய்வது நல்லது.

நம்முடைய கணினி, செல்போன் இவற்றை மேம்படுத்தும் மென்பொருள்களை (சாஃப்ட்வேர் அப்டேட்ஸ்) உடனுக்குடன் செய்ய வேண்டும். எண்கள், சின்னங்களுடன் நீண்ட கடவுச்சொற்களை( குறைந்தது 12 எழுத்துகள்) வைத்துக் கொள்வது நல்லது. ஒரே கடவுச்சொல்லை அனைத்துக்கும் பயன்படுத்தாமல் ஒவ்வொரு தளத்திற்கும் வெவ்வேறு கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது நல்லது. மறக்க நேர்ந்தால் கடவுச்சொற்களைப் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வசதிகள் கைப்பேசிகளில் அல்லது நம்பகத்தகுந்த இணையதளங்களில் கிடைக்கிறது. இல்லையென்றால் எங்காவது எழுதி வைத்துக்கொள்ளலாம். எளிதில் யாருக்கும் கிடைக்காதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் ஒன்றுக்கு இரண்டு முறை தகவல்களைச் சரிபார்ப்பதற்கும் வசதிகள் வந்துவிட்டது. '2-factor authenticatio' என்று அழைக்கப்படும் முறையைப் பயன்படுத்துவதால் திருடர்களிடமிருந்து நம் தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொது இடங்களில் WiFi பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இங்கு தான் இணைய திருடர்கள் எளிதில் நம் தகவல்களைச் சுருட்டுகிறார்கள். அவ்வப்பொழுது நம் தகவல்களை backup செய்து கொள்வதும் நல்லது.

இவையெல்லாம் சிறு முயற்சிகள் தான். கண்டிப்பாக செய்ய வேண்டியது. இந்த வாரம் இது தொடர்பான விழிப்புணர்வு வாரம். ஏதோ என்னாலானது😎 


Wednesday, January 18, 2023

4. யமுனோத்ரி

எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது.

யமுனோத்ரி

டேராடூன், மசூரியிலிருந்து எங்களை விரட்டி வந்த கருமேகக் கூட்டம் பர்கோட்-யமுனோத்ரி சாலையில் நாங்கள் தங்கியிருந்த குடில் வரை தொடர்ந்தது. வரும் வழியில் நடுநடுவே மழைத்தூறல்கள் இருந்தாலும் இரவில் ‘சலசல’ வென ஆரம்பித்து தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்ட மழை கேம்ப்-ன் கூரைகளில் ‘பொத்பொத்’ என்று கொட்டுவதும் மழைநீர் சுவர்களில் தெறித்து விழுவதும் நன்கு கேட்டது. வானத்தைக் கிழித்துக் கொண்டு ‘ஜோ’வென்று பேரிரைச்சலுடனும் பெருங்காற்றுடனும் கொட்டிக் கொண்டிருந்த இரவு நேர பேய்மழை ஒருவித அச்சத்தைக் கொடுத்தது. மணி அதிகாலை இரண்டை நெருங்கிக் கொண்டிருக்க, நாய் வேறு விடாமல் குரைத்துத் தூக்கத்தைக் கலைக்க, அத்துவானக் காட்டில் இருக்கிறோம் என்ற நினைவே கொஞ்சம் திகிலாகத் தான் இருந்தது! கண்ணை மூடித் திறப்பதற்குள் மணி நான்காகி விட, அமெரிக்க நேரத்திற்கு மாறி விட்டிருந்தேன். ‘கமகம’வென சமையலறையிலிருந்து வந்த மசாலா வாசத்தில் தூக்கமும் போயே போச்சு. ஈஷ்வர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மெதுவாக நடந்து சென்று மேலங்கியைப் போட்டுக் கொண்டு கதவைத் திறந்தால் முகத்திலறைந்த குளிர்காற்று ‘ஹலோ’ சொல்லிற்று!

இப்பொழுது மழையும் களைத்துப் போய் தூறலாக பெய்து கொண்டிருக்க, முற்றத்தில் இருந்த விளக்குகளின் ஒளியைத் தவிர சுற்றிலும் கும்மிருட்டு. எதிரே யமுனா நதி ஆரவாரத்துடன் பொங்கி ஓடிக் கொண்டிருந்த ஓசையும் பூச்சிகளின் ரீங்காரமும் தவிர, அவ்வபோது நாய் குரைக்கும் சத்தம் மட்டுமே அங்கு கேட்டது. நல்ல குளிர். சூடாக டீ குடித்தால் நன்றாக இருக்கும். எப்படா விடியும் என்று வெளியில் போடப்பட்டிருந்த இருக்கையில் தனியாக உட்கார்ந்து காத்திருந்தேன். “அக்கம்பக்கம் யாருமில்லா பூலோகம்” என்பது அது தான் போல! தனிமையும் இனிமையான தருணம் அது. எதையும் யோசிக்காமல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த நொடியில் அங்கிருப்பது தொலைந்து போனதற்குச் சமம். பூரணமாக அனுபவித்தேன்.

சமவெளியில் புண்ணிய நதி. எதிரே இமயமலை. அதையொட்டிய நெடுஞ்சாலை வழியே தான் யமுனோத்ரிக்குச் செல்ல வேண்டும். மெல்ல மெல்ல இருள் விலக, மூடுபனி மேகங்கள் மரங்களையும் மலையையும் மூடி ரம்மியமாகக் காட்சியளிக்க, மணி ஐந்தாகி விட்டிருந்தது. ‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ! ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ’ மொமெண்ட் அது.

நாங்கள் தங்கியிருந்த இடத்தின் பெயர் ‘ஜெயர ரிசார்ட்ஸ்’. அங்கிருந்த தாத்தா பிரகலாத சிங், வயது 70க்கு மேலே கூட இருக்கலாம். ஆள் ‘துறுதுறு’வென்று சமையல் முதல் அங்கு வரும் விருந்தினர்களைப் பொக்கைவாய்ச் சிரிப்புடன் கவனித்துக் கொள்பவர். சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு வரவா என்று கேட்டு வந்தார். தேநீரும் எடுத்து வரச் சொல்லிவிட்டு அமைதியான காலையில் மீண்டும் மீண்டும் தொலைந்து கொண்டிருந்தேன். பயணிகளை ஏற்றிக் கொண்டு யமுனோத்ரிக்குச் செல்லும் வண்டிகள் அந்த அதிகாலை நேரத்திலேயே ஒன்றிரண்டு சென்று கொண்டிருந்தது.

சூடான மசாலா ‘சாய்’ இதமாக இருக்க, ஈஷ்வரும் எழுந்து வந்து விட்டார். இருவரும் விரைவில் தயாராகி விட, பிரகலாத சிங்கிடம் துணிகளைத் துவைத்துத் தரும் வசதிகள் இருக்கிறதா என்று கேட்டு அவரும் துவைத்துத் தருகிறேன் என்றவுடன் அழுக்குத் துணிகளைக் கொடுத்து விட்டு வெளியில் சிறிது தூரம் ஆற்றங்கரையோரம் நடந்து சென்று வந்தோம். முன்தினத்தை விடத் தண்ணீரின் அளவும் இரைச்சலும் கூடியிருந்தது. ஆற்றின் பாதை முழுவதும் சிறிதும் பெரிதுமாக ‘மொழுமொழு’ பாறைகள் நிரம்பியிருந்தது! கரையின் விளிம்பில் நின்று மலையிலிருந்து ஆக்ரோஷமாக இறங்கி ஓடோடி வரும் சீற்றமிகு யமுனாவின் அழகை ரசித்து விதவிதமாக படங்களை எடுத்துக் கொண்டோம்.

காலையில் ஆறு மணிக்கு அசோக்குமார்ஜி-யும் தயாராகக் காத்திருக்க, பிரகலாத சிங்கும் காலை உணவை அழகாக மடித்துப் பைகளில் வைத்துக் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு வண்டியில் ஏறினோம். ரிசார்ட்டில் இருந்து பிரதான மண் சாலைக்குச் செல்ல 45 டிகிரி கோணத்தில் இருக்கும் சிறிய சாலையில் மேலேற வண்டி சண்டித்தனம் செய்தது. தார் போடாத கற்சாலையில் அழுத்தி டயர் உராய்ந்ததில் ரப்பர் வாசம் வரவே, எங்களை இறங்கச் சொல்லி விட்டு வண்டியைக் கஷ்டப்பட்டு மேலேற்றினார் டிரைவர்-ஜி. மோசமான அந்தச் சாலையில் வண்டி ஏற சிரமப்பட்டதைப் பார்த்து அவருக்கு ரிசார்ட்டின் மீதும் எங்கள் பயண முகவரின் மீதும் கோபம் வந்தது. அங்கிருந்து யமுனை ஆற்றின் மேல் போடப்பட்டிருந்த பச்சை வண்ண பாலத்தைக் கடந்து குண்டும் குழியுமாக இருந்த சாலைகளில் குலுங்கியபடி பயணித்து தேசிய நெடுஞ்சாலை 507ஐத் தொட்டதும் ‘அப்பாடா’ என்றிருந்தது! சிறிது தூரம் நிம்மதியாகச் சென்று கொண்டிருந்தோம். அதற்குப்பிறகு தொடர் மழையினால் உருத்தெரியாமல் சிதறிப் போயிருந்த சாலைகளில் தான் பயணம். சிறிதும் பெரிதுமாய் மலையிலிருந்து உருண்ட கற்கள் சில இடங்களில் சாலைகளோரம் குவித்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த பொழுது தான் முன்தினம் சந்தித்த ஆங்கிலத்தில் பேசிய டிரைவர் கூறியது நினைவிற்கு வந்தது. இரண்டு நாட்களுக்கு அந்தப் பகுதியில் ஏற்பட்ட மலைச்சரிவினால் வாகனங்கள் செல்ல தடை விதித்திருந்தார்கள். மழை நின்ற பிறகே சாலைகளிலிருந்த பாறைகளையும் கற்களையும் அகற்ற முடியும். அதுவரை மலைப்பாதையை முழுவதும் மூடி விடுகிறார்கள். பாதுகாப்பை உறுதி செய்த பிறகு தான் போக்குவரத்து மீண்டும் தொடர்கிறது. தொடர்ந்து வேலைகள் செய்தாலும் மழைக்கால சிரமங்கள் நிறையவே இருக்கிறது.

மலைச்சரிவு எல்லாம் இந்தப் பகுதிகளில் சாதாரணம் என்பது இங்கு வந்த பிறகு தான் எங்களுக்குத் தெரிந்தது. சாலையோர இரும்பு வேலிகள் கூட உடைந்து சின்னாபின்னமாக இருந்ததில் புரிந்தது மழையின் தீவிரம்! நாங்கள் பயணம் செய்யும் நாட்களில் பருவ மழைக்காலம் முடிந்திருக்கும் என்று நம்பியிருந்தோம். அதற்காகத்தான் செப்டெம்பர் இறுதியில் இந்த யாத்திரைக்குச் செல்வது சரியாக இருக்கும் என்று எண்ணி இங்கு வந்தால் ‘குளோபல் வார்மிங்’ தன் கைவரிசையைக் காட்டும் என்று யார் தான் எதிர்பார்த்தார்கள்?

வழி முழுவதும் ஒரு பக்கம் இமயமலைத்தொடர். மறுபக்கம் வண்டல் மண்ணை அள்ளிக் கொண்டு எங்களுடன் கூடவே வந்த யமுனா நதி. சரளைக்கற்கள் நிறைந்த சாலைகளில் எப்படித்தான் வயதானவர்கள் வண்டிகளில் பயணிக்கிறார்களோ என்று அச்சப்பட வைத்தது. வெயில் காலத்தில் இந்த சாலைப் பிரச்சினைகள் இருக்காது. போக்குவரத்து நெரிசல் தான் அதிகமாக இருக்கும் என்று தெரிந்து கொண்டோம். மலைகளைப் பிளந்து சாலைகளை அகலப்படுத்தும் வேலைகள் வேறு நடந்து கொண்டிருந்தது. சில இடங்களில் வண்டி எதிர்பாராமல் கற்களில் வழுக்கினால் நதிக்குள் தான் விழ வேண்டும். ஒரே “திக் திக் திக்” என்றிருந்தது. “சிவ சிவ” என்று அவனை வேண்டிக் கொண்டே அந்த கரடுமுரடான சாலையில் கருமேகங்களுடன் தொடர்ந்தது எங்களது பயணம்.

மூடு பனியில் மலைக்கிராமங்கள் மிக அழகாகத் தெரிந்தது. அதிக மனித உழைப்பைக் கோரும் படிகளில் செய்யும் வேளாண்மைமுறை தான் அங்கு சாத்தியம் என்பதும் கண்கூடாகத் தெரிந்தது. சில இடங்களில் அறுவடை செய்த நிலங்கள் காலியாக இருக்க சில அறுவடைக்காகக் காத்திருந்தது. பெரும்பாலும் அரிசி தான் விளைவிப்பார்கள் என்று தெரிந்து கொண்டோம். வழியெங்கும் மலையிலிருந்த கிராமங்களை இணைக்கும் சிறுசிறு பாலங்கள் கொள்ளை அழகு. மலையுச்சிகளிலிருந்த கோவில்கள் அங்கிருந்த எல்லா வீடுகளையும் விட உயரத்தில் சிறு படிகளுடன் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்படி அடர் சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணக் கொடி பறக்கும் கோபுரங்களுடன் அந்த சூழலையே ரம்மியமாக்கிக் கொண்டிருக்கிறது.

வண்டிகள், மனிதர்களுடன் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளும் மலைப்பாதைகளில் வலம் வருகிறது. அவர்களுக்கு வழியை விட்டுப் பொறுமையாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். தூறலும் தொடர, இயற்கையை ரசித்துக் கொண்டே வந்தால் நடுவே வண்டியை நிறுத்தி விட்டார்கள். கிளம்பிய ஒன்றரை மணிநேரத்தில் வழியில் மலைச்சரிவால் பாதையைச் சரி செய்யும் வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. தாத்தா கொடுத்த ஆலு புரோட்டாவை பச்சைமிளகாயில் செய்த காரசாரமான ஆச்சாறுடன்(நம்மூர் ஊறுகாய் தான்) சேர்ந்து சாப்பிட, சுவையோ சுவை. ஒரு ஆலு புரோட்டாவே போதுமானதாக இருக்கிறது. கூடவே தயிரும் கொடுத்திருந்தார். காலை உணவு முடிய, வண்டிகள் நகர ஆரம்பித்து விட்டது. வண்டி எங்கு நின்றாலும் ஆண்கள் மட்டும் இறங்கி வெளியில் சென்று உரமூட்ட முடிகிறது. வழியில் எங்குமே கழிப்பிட வசதிகள் இல்லை. பெண்களுக்கு கொஞ்சம் சிரமம் தான்.

மலைகளிலிருந்து உருண்டு வந்த பெரும்பாறைகள் சாலைகளில் பார்க்கும் பொழுது ஆபத்துகள் சூழ்ந்த அந்த இடத்தில் நெருக்கமாக இருந்த குடியிருப்புகளில் எப்படித்தான் வாழ்கிறார்களோ என்று அதிசயித்துப் போனோம்! தொடர் மழையால் அருவிகளுக்கும் பஞ்சமில்லை. வெயில் காலத்தில் இந்த அழகெல்லாம் இருக்குமா என்பது சந்தேகமே! ஆனாலும் வழியெங்கும் ‘கண்ல மரணபயத்த காட்டிட்டியே பரமா’ மொமெண்ட்கள் ஏராளம். அனுபவமிக்க ஓட்டுனர்களால் மட்டுமே இந்தப்பகுதிகளில் ஓட்ட முடியும். இல்லையென்றால் இந்நேரத்திற்கு ஏகப்பட்ட விபத்துகளைப் பார்த்திருப்போம். வண்டியோட்டுபவர்கள் ஒருவருக்கொருவர் கொஞ்சம் அனுசரணையாக ஒட்டிக் கொண்டுச் செல்வது பாராட்டப்பட வேண்டிய விஷயம். என்ன! வேற்று மாநில வண்டி ஓட்டுநர்கள் மெதுவாக ஒட்டிச் செல்வதால் அவர்களைக் கண்டால் மட்டும் உள்ளூர்க்காரர்கள் கோபப்படுகிறார்கள்.

ஆறு மணிக்குக் கிளம்பி ஒருவழியாக 9 மணிக்கு யமுனோத்ரியின் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த நேரத்தில் கூட வண்டிகள், பயணிகளுடன் வரிசையாக கோவேறு கழுதைகள், குதிரைகள் கூட்டமும் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த சிறிய உணவகத்தில் தலை முதல் கால் வரை மூடும் பிளாஸ்டிக் உறைகளை வாங்கிக் கொண்டோம். பட்டர் பன்னும் மசாலா டீயும் அருமையாக இருந்தது. சுடச்சுட’ காலை உணவுடன் வியாபாரமும் சூடுபிடித்துக் கொண்டிருந்த கடையில் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு நின்றிருந்ததைப் பார்த்தால் கொரோனா பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. அதெல்லாம் முடிந்து போன கதையாகி விட்டிருந்ததது. அமெரிக்காவில் தான் இன்னும் பயத்துடன் உலாவிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் நாங்கள் சென்ற அனைத்து இடங்களிலும் அப்படித்தான். கொரோனாவா? கிலோ என்ன விலை? என்ற ரேஞ்சில் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாகவும் கொஞ்ஞ்ஞ்சம் பயமாகவும் இருந்தது.

‘சார்தாம் யாத்திரை’ என்பது யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதர்நாத், பத்ரிநாத் என்ற நான்கு இடங்களில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வரும் புண்ணிய யாத்திரை ஆகும். இந்த நான்கு புண்ணிய தலங்களும் உத்தர்காண்ட் மாநிலத்தில் கர்ஹ்வால் பகுதியில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இமயமலைச்சாரலில் பனிச்சிகரங்களையும் புண்ணிய நதிகளையும் வழிநெடுக காணும் பாக்கியமும் பெற முடிகிறது. யமுனோத்ரியில் தொடங்கி கங்கோத்ரி, கேதார்நாத் தரிசனம் முடித்து பத்ரிநாத் கோவிலில் யாத்திரை நிறைவடைகிறது. உத்தர்காண்டில் யமுனோத்ரி மலையில் உற்பத்தியாகி டெல்லி- ஆக்ரா வரை பயணித்துப் பின் உத்தர பிரதேசத்தில் திரிவேணி சங்கமத்தில் கங்கா நதியுடன் கலக்கிறது யமுனா நதி. இந்தியாவில் கங்கா நதிக்கு அடுத்த புண்ணிய நதி என்பதால் “மா யமுனா” குடியிருக்கும் யமுனோத்ரி கோவில் முக்கியத்துவம் பெறுகிறது.

மலை அடிவாரத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் மலையேற மூன்று-நான்கு மணி நேரம் ஆகும். போய் விட்டு வாருங்கள்” என்று எங்களை அனுப்பி விட்டார் அசோக்குமார் ஜி. மழையில் “சொதசொத” வென்றிருந்த இடத்தில் குதிரை, கோவேறு கழுதைகளின் சாணிக்குவியல்களும் சகதியுடன் சேர்ந்து ஒரே நாற்றம். செங்குத்தான பாதையைக் கடந்து மேலே ஏற ஏற எனக்கோ மூச்சு முட்டிக் கொண்டு தலைச்சுற்றி வாந்தி வருவது போல இருந்தது. “என்னடா லதாவுக்கு வந்த சோதனை? ” தினமும் நடைப்பயிற்சி செய்து ஏதோ ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று கனவு கண்டதெல்லாம் பொய்யா கோப்பால்? என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன். நான் சிரமப்படுவதைக் கண்டு பயந்து போன ஈஷ்வர் “ஆர் யூ ஓகே? நடக்க முடியுமா? ரொம்ப கஷ்டப்படற மாதிரி இருக்க?” என்று கேட்டு “குதிரையில ஏறி வர்றியா?” என்றவுடன் குதிகால் வலியை நினைத்து ரொம்பவும் யோசிக்காமல் உடனே சரியென்று சொல்லிவிட்டேன். நடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை நிராசையாகி விட்டதே என்ற கவலை இருந்தாலும் வழியில் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்பது தான் பெருங்கவலையாகிவிட்டது.

யோசித்துக் கொண்டே வந்த எங்களைப் பார்த்தவுடன் ஒருவர் அவருடைய கோவேறு கழுதையை அழைத்து வந்து விட்டார். புதிதாக சைக்கிள் கற்றுக் கொள்ளும் பொழுது உயர்ந்த திண்ணை அல்லது படிகள் இருக்கும் வீடு வரை சைக்கிளை உருட்டிக் கொண்டு பிறகு அதன் மேல் ஏறுவது போல் அங்கும் உயரமான படிகளைத் தேடி கடிவாளத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு குதிரைக்காரர் கூறியது போல் சேணத்தின் மீது உட்கார்ந்து கொண்டேன். இரண்டு பாதங்களையும் வளையத்திற்குள் நுழைத்தவுடன் நன்றாக இறுக்கி பாதம் வெளியே வராதவாறு கட்டி விட்டார். ஈஷ்வர் நடந்து வருவேன் என்று சொல்ல, “அய்யோயோ தனியா நான் போக மாட்டேன். நீங்களும் ஒரு குதிரையில ஏறி வாங்க.” என்று நான் சொன்னது பிடிக்காவிட்டாலும் வேறு வழியின்றி ஒரு பெரிய குதிரையில் அவரையும் ஏற்றியாயிற்று.

நான் ஏறிய கோவேறு கழுதையின் பெயர் வாசந்தி. ஈஷ்வர் ஏறிய குதிரையின் பெயர் ராஜா என்று சொன்னார்கள். “என்னைச் சுமக்க வைத்த கொடிய நிலைக்கு ஆளாக்கினதற்கு மன்னித்துக் கொள் என்று மானசீகமாக அவளிடம் வேண்டிக் கொண்டேன். கோவத்துல எங்கேயும் தள்ளி விடாம பத்திரமா என்னைய கோவிலுக்குக் கூட்டிட்டுப் போடியம்மா வாசந்தி.” என்று அவளை அன்பாக முதுகு தடவி விட்டு ஈஷ்வரைப் பார்த்தால் ‘உர்ர்ர்ர்ர்’ரென்று மூஞ்சியை வைத்துக் கொண்டு “நான் நடந்து வரணும்னு நினைச்சிருந்தேன். இப்படி பண்ணிட்ட” என்றார் உக்கிரமமாய்! “பெத்தவங்க நல்லா தான் பொருத்தமா வச்சிருக்காங்கைய்யா பேரை” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே தேன் நிலவு படத்தில் வரும் ‘பாட்டுப் பாட வா’ பாடல் ஞாபகம் வர, நான் ஜெமினியாய், ஈஷ்வர் வைஜயந்திமாலா கதாபாத்திரங்களாய் மாறியிருப்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டே குறுகலான பாதையில் எங்களுடைய மலையேற்றம் தொடங்கியது. 

நுழைவாயிலில் தங்களுடைய அடையாள அட்டையைக் காண்பித்துப் பதிவு செய்து கொண்டு வர எங்களிடம் 500ரூபாயை வாங்கிக் கொண்டுச் சென்றார்கள் குதிரைக்காரர்கள். இரு வரிசையில் மட்டுமே செல்ல முடிகிற குறுகிய பாதையில் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் நல்ல கூட்டம். கோடைக்காலத்தில் பாதையை அடைத்துப் பெருங்கூட்டமாக இருக்கும் என்று கேள்விப்பட்டோம்! ஈஷ்வரா! இதுவே கூட்டமாகத் தெரிகிறது எனக்கு. நல்லவேளையாக கோடையில் இங்கு வரவில்லை. பலரும் நடந்து மலையேற, முடியாதவர்கள் குதிரை, கோவேறு கழுதைகளில் ஏறியோ நான்கு பேர் தூக்கிக் கொண்டுச் செல்லும் டோலிகளிலோ அல்லது காலை வெளியே தொங்கவிட்டபடி கூடைக்குள் உட்கார்ந்து கொண்டோ செல்லும் வசதிகள் இருக்கிறது. அதற்கேற்ற கூலியும் கேட்கிறார்கள். படிகளும் ஏற்றங்களும் கொண்ட பாதையில் குதிரையில் செல்வது கொஞ்சம் கடினம் தான். இளவயதினரும் டோலியிலும் குதிரையிலும் சென்று கொண்டிருந்தார்கள். அப்ப நான் பரவாயில்லை என்று தோன்றியது. மிக வயதான வட இந்தியப் பாட்டிகள் பலரும் முழங்கால் வரை சேலையைத் தூக்கிக் கொண்டு ‘கடகட’வென்று ஏறுவதைப் பார்க்கையில் நிறையவே பொறாமையாக இருந்தது. வயல்வெளிகளில் வேலை பார்த்த உடம்பு ‘கிண்’னென்று படு திடமாக இருக்கிறது. ஹ்ம்ம்… வாசந்தி படியேறுகையில் ஓரத்தில் போய் ஆற்றில் தள்ளி விட்டுவிடுவாளோ என்று பயம் காட்டியபடி சென்று கொண்டிருந்தாள். நடுவில் தண்ணீர்த்தொட்டியைப் பார்த்தவுடன் வழியை விட்டு விலகிச் செல்ல பயந்து விட்டேன். ஒரு கிலோ மீட்டர் சென்றிருப்போம். பக்கவாட்டில் பாறைகளின் வழியே ‘மா யமுனா’ ஓடிக் கொண்டிருந்தாள். “யமுனா மையா கீ ஜே” என யாத்திரிகர்களும் அவர்களைச் சுமந்து செல்பவர்களும் கோஷம் எழுப்பிக் கொண்டே செல்ல, சுற்றிலும் இமயமலையின் அழகும் கருமேகங்களுமாய் கண்ணில் விரியும் காட்சிகள் ஏகாந்தமாய் இருந்தது. நடந்து வந்திருந்தால் பல காணொளிகளும் படங்களும் கிடைத்திருக்கும். ம்ம்ம்!

வழியில் ஓரிடத்தில் நிறுத்தி டீ குடித்து சிறிது நேர இளைப்பாறல். அந்த நேரத்தில் குதிரைகளுக்கும் தீவனம் கொடுக்கிறார்கள். மீண்டும் குதிரை மீதேறி மலையேற ஆரம்பித்தோம். நடந்து வருபவர்கள் மலையேறச் சிரமப்பட்டால் நடு வழியிலும் குதிரை மீதேறி பயணம் செய்யும் வசதிகள் இருக்கிறது. சில இடங்களில் பாறைகள் தலையை இடித்து விடும் போல் அருகில் வருகிறது. பல இடங்களில் ஓரத்தில் செல்லும் பொழுது முட்டியை உரசிக் கொண்டே செல்லும் அபாயங்களும் டோலிகளைச் சுமந்து செல்பவர்கள் வேகமாக இடித்துக் கொண்டே செல்வதும் நடக்க வாய்ப்பிருப்பதால் கவனமாகச் செல்ல வேண்டியிருந்தது. என்னுடைய குதிரைக்காரரை அங்குமிங்கும் போகாமல் என்னுடனே இருக்க உடைந்த ஹிந்தியில் சொல்ல, “நான் பத்திரமாக அழைத்துச் செல்கிறேன். கவலை வேண்டாம்” என்று கூடவே வந்தார். கடல் மட்டத்திலிருந்து 3293 மீட்டர் உயரத்தில் இருக்கும் யமுனோத்ரிக்கு இரண்டு மணிநேரத்தில் வந்து சேர்ந்து விட்டோம். கோடைக்காலத்தில் குதிரையில் ஏறி வர மூன்று, நான்கு மணிநேரம் கூட ஆகலாம். அவ்வளவு கூட்டம் இருக்கும் என்று சொன்னார்கள்!

யமுனா நதிப் பாலத்தைக் கடந்து யமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் வழியில் ‘கருட கங்கா’ என்று கிளை நதி ஒன்று வருகிறது. கோடைக்காலத்தில் பனி படர்ந்து அழகாக இருக்கும் பகுதி நாங்கள் சென்றிருந்த பொழுது நதியாக ஓடிக் கொண்டிருந்தது. தூரத்திலிருந்தே தெரியும் ஆசிரமங்களில் தங்கும் வசதிகளும் இருக்கிறது. கோவிலை அடைத்தாற்போல தெரியும் நீல வண்ண கட்டடங்களும் அழுக்குத் தார்ப்பாய்கள் போர்த்திய குடில்களும் குப்பை மூட்டைகளும் திருஷ்டிப்பொட்டாக கண்களை உறுத்தியதில் வருத்தமாக இருந்தது. எத்தனை ரம்மியமான இடத்தில் இருக்கிறது இந்த புண்ணியத்தலம்! ஏனோ நமக்குக் கோவிலைப் பற்றின அக்கறையோ அந்தச் சூழலைக் காக்க வேண்டிய பொறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை. யாரிடம் சென்று முறையிடுவது? திருந்த வேண்டியது நாம் தானே?

இமயமலையிலிருந்து அருவியாய் அழகாகப் பயணித்து வரும் யமுனா நதிப் பாலத்தைக் கடந்து சென்றால் சிகப்பும் ஆரஞ்சும் வண்ணமும் கொண்ட ‘மா யமுனா’வின் கோவில் கோபுரம் ‘பளிச்’ என்று தெரிகிறது. பார்த்த நொடியில் ஏற்படும் பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்கத் தெரியவில்லை. மயிர்க்கூச்செறியும் தருணங்கள்! எத்தனை வருடக் கனவு, ஆசை!

இதிகாசத்தில் சூரிய பகவானின் மகளாக, எம் தர்மராஜனின் தமக்கையாக அறியப்படுகிறாள் ‘மா யமுனா’. கலியுகத்தில் மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு நதியாகப் பூமிக்கு வருகிறாள். அவள் சூரிய பகவானை நினைத்துத் தவம் செய்த இடமே யமுனோத்ரி கோவில்.

கோவிலில் நுழைவதற்கு முன் அல்லது யமுனா நதியில் குளிப்பதற்கு முன் அங்கிருக்கும் வெந்நீர் சுனையில் குளிக்க வேண்டும் என்பது ஐதீகமாம். பனிபடர்ந்த மலைகள் இருக்கும் பகுதியில் இதமான வெந்நீர் சுனை! நடந்த களைப்பை நீக்கி விடும் குளியல். ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி சுனைகள் இருந்தது. நல்ல கூட்டம். அருகிலிருந்த ‘திரௌபதி குண்ட’த்தில் பித்ருக்களை நினைத்துப் பூஜைகள் செய்கிறார்கள். அதற்கென தனியாகப் புரோகிதர்கள் இருக்கிறார்கள். அங்கே ‘திவ்ய ஷிலா’ என்றொரு பாறை இருக்கிறது. அதை வணங்கி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. யாத்திரிகர்கள் பலரும் அங்கே பித்ரு பூஜைகள் செய்து கொண்டிருந்தார்கள். அருகிலேயே கொதிக்கும் ‘சூரிய குண்டம்’ ஒன்று உள்ளது. அரிசியைக் கொண்டு வந்து துணியில் முடிந்து கொதிக்கும் நீர் உள்ள குண்டத்தில் வைத்தால் சில நிமிடங்களில் வெந்து சோறாகி விடுகிறது. அதைப் பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள். இக்கோவிலில் பயபக்தியுடன் வேண்டிச் செல்பவர்களுக்கு எம தர்மராஜனின் ஆசியும் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியமும் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

நாங்கள் அன்னையை வணங்கக் கோவிலுக்குள் சென்றோம். கூட்டமில்லை. நேராக சந்நிதிக்குச் சென்று திவ்ய தரிசனம் கண்டு வணங்கி நின்றோம். கட்டண வசூலிப்புகள் ஏதுமில்லை. நாங்கள் சென்ற வட இந்தியக் கோவில்களில் எங்கும் சுவாமியைப் பார்க்கக் கட்டணம் வசூலிக்கவில்லை. அவரவர் கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்களை வைத்துப் பூஜைகள் செய்து கொள்ள முடிகிறது. ‘மா கங்கா’, ‘மா யமுனா’ மற்றும் பனிக்காலத்தில் ‘குஷிமத்’ கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும் உற்சவ நாயகி என மூன்று திருவுருவ அன்னைகள் சன்னிதியில் ஒரு சேர இருக்கிறார்கள். அட்சயதிருதியை அன்று இந்தக் கோவிலின் நடை திறக்கப்படுகிறது. அப்பொழுது ‘குஷிமத்’ கோவிலிலிருந்து சோமேஸ்வருடன் வரும் உற்சவ நாயகி, தீபாவளி முடிந்த சில நாட்களில் சோமேஸ்வருடன் மீண்டும் ‘குஷிமத்’ கோவிலுக்குச் சென்று விடுகிறாள். யமுனாவின் சகோதரன் சனி பகவானின் குஷிமத் கோவிலில் தான் அன்னை ஆறு மாதம் தங்கியிருக்கிறாள்.

இயற்கையோடு கூடிய சூழலில் அங்கிருந்த ஒவ்வொரு கணமும் அற்புதமாக இருந்தது. மக்கள் பலரும் விதவிதமாக புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் ஜோதியில் ஐக்கியமாகிப் பல படங்களை ‘க்ளிக்’க்கிக் கொண்டோம். மீண்டும் வந்த வழியே பாலத்தைக் கடந்து குதிரைகள் காத்திருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். வாசந்தி எனக்காகக் காத்திருந்தாள். மலையிலிருந்து கீழே இறங்குவது தான் பெரும்சவாலாக இருக்கும் போலிருக்கிறது. படிகளில் இறங்க குதிரை மீதிருப்பவர்கள் உடலைப் பின்னுக்குத் தள்ளினால் தான் குதிரைக்கு எளிதாக இருக்கிறது. இல்லையென்றால் நாம் குப்புற விழ வேண்டியது தான். எதற்கு வம்பு என்று நாங்கள் ஏறிய சில நிமிடங்களில் இறங்கிக் கொண்டோம். தூரத்தில் மழை கொட்டும் காட்சி தெரிய, நடந்து செல்ல முடிவெடுத்தோம். பனிபடர்ந்த சிகரங்கள், அருவிகள், அடுக்கடுக்காய் மலைகள், கூடவே வரும் யமுனா நதி, சிறிதும் பெரிதுமாகப் பாறைகள், மூடுபனி என வழியெங்கும் மனதைக் கொள்ளைக் கொள்ளும் அழகுக்காட்சிகள்! வழியில் ஓரிடத்தில் சுடச்சுட ஜிலேபி, சந்திரகலா, சமோசா, பூரி, கச்சோரி தயாராகிக் கொண்டிருந்தது. ஆஹா! குதிரையில் வந்திருந்தால் இதையெல்லாம் சாப்பிடும் வாய்ப்பைத் தவற விட்டிருப்போமே. நல்ல வேளை! அப்படி நடக்கவில்லை. அத்தனை சுவையாக இருந்தது. மற்றோர் இடத்தில் மசாலா ‘சாய்’ சாப்பிட அமர்ந்தோம். கொதிக்கும் பாலில் வெறும் இஞ்சியைத் தட்டிப் போட்டு சிறிது மிளகுப் பொடியையும் சர்க்கரையும் டீத்தூளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்த டீ அத்தனை சுவையாக இருந்தது. அதற்குள் உத்தரகாசியில் பல இடங்களில் 24 மணிநேர தொடர்மழை எச்சரிக்கையை ‘ஜியோ’ குறுஞ்செய்தி அனுப்ப, விரைவில் திரும்ப வேண்டும் என்று வேகமாக இறங்கத் தொடங்கினோம். கருமேகங்கள் வருவதும் விலகுவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட, மலைகளும் அருவிகளும் அழகாகத் தெரிய படங்கள் நிறைய எடுத்துக் கொண்டோம்.

பேசிக்கொண்டும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் மழைத்தூறலில் கீழே இறங்க, மணி 2.30 ஆகி விட்டிருந்தது. அடிவாரத்தை நெருங்குகையில் இடிந்து விழுவது போல நிறைய வீடுகள்.  அங்கு தான் மக்கள் வாழ்கிறார்கள். ஏழ்மையான கோலம்! பார்க்க வருத்தமாக இருந்தது. ம்ம்ம்…

பேண்ட் நுனி ஈரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த சாணத்தின் வாசனை இப்பொழுது வண்டிக்குள்ளும்! வண்டியில் ஏறி 13 கிலோமீட்டர் தொலைவில் ‘ஹனுமன் சட்டி’ கோவிலுக்கு வந்தோம். ‘ஹனுமன் கங்கா’வும் யமுனா ஆறும் சந்திக்கும் இடத்தில் கடினமான ஏற்றத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. “அவசியம் போக வேண்டுமா? நிறைய படிகள் இருக்கும்” என்று டிரைவர் கேட்க, “அதெல்லாம் இருக்கட்டும். கோவில்களுக்குப் போகத் தானே வந்திருக்கிறோம்” என்று சாலையோரத்தில் இருக்கும் இந்தக் கோவிலுக்குச் சென்றால் நிமிர்ந்து பார்த்த தூரம் வரை வெறும் படிகள் தான் தெரிந்தது. “அடடா! தப்பு பண்ணிட்டோமா?” என்று என்னை ஒருகணம் யோசிக்க வைத்து விட்டது. அதுவும் சில இடங்களில் ‘நடுவுல ரெண்டு படிகளைக் காணோம்’ என்பது போல ஒரு படிக்கும் அடுத்த படிக்கும் இடையில் அத்தனை இடைவெளி! சிறிதும் பெரிதுமாகப் படிகளின் மேலே ஏறுவதற்குள் எனக்கு நாக்குத் தள்ளி விட்டது. தூரத்திலிருந்து நான் கஷ்டப்பட்டு ஏறுவதைச் சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்த அசோக்குமார் ஜி நாங்கள் மேலேறிச் சென்றவுடன் கையசைத்துக் காட்டினார். 

ஆரஞ்சு வண்ண நிறக்கொடிகளுடன் ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோவில். அழகான ஆரஞ்சு ஆஞ்சநேயர். அங்கிருந்த அர்ச்சகர் பூஜை செய்து குங்குமம் பூசி விட்டார். சிவலிங்கம் ஒன்றும் இருந்தது. பூத்துக் குலுங்கும் மலர்ச்செடிகளுடன் சிறிய தோட்டம். அங்கேயே குடியிருக்கும் கோவில் அர்ச்சகர் குடும்பம். மேலிருந்து நதிகளையும் ஆற்றையும் பார்க்கக் கொள்ளை அழகு. சுற்றியுள்ள மலைகளின் மேல் ஏறிச்செல்வது(ட்ரெக்கிங்) இங்கு பிரபலமாம். நாங்கள் செல்லவில்லை. ஆனால் அழகாக இருந்தது. சிறிய கிராமம் போல் இருந்த ஊரில் ஒரு பலசரக்கு/தேநீர்க்கடை. ஊர்ப் பெரியவர்கள் கூடி பொழுதைக் கழிக்கும் இடம் போலத் தெரிந்தது. சிறிது நேரம் அங்கிருந்தவர்களுடன் பேசிவிட்டு பர்கோட்டில் இருக்கும் எங்கள் குடிலுக்கு ஐந்து மணிக்கு வந்து சேர, சூடான தேநீரும் காத்திருந்தது.

ஆற்றின் அருகே நாங்கள் தங்கியிருந்த இடத்தில் ஒரே ஆண்கள் கூட்டம். ஏதோ பூஜை செய்கிறார்கள் என்று மட்டும் புரிந்தது. சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு ஆற்றின் கரையோரம் நடந்து கொண்டிருந்தோம். சிநேகமாக எங்களை அணுகியவர்கள் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்க, ஒருவர் தட்டு நிறைய பூரி, கேசரி, சுண்டல், பாயசம், கிச்சடி வைத்துக் கொடுத்தார். அவர்கள் மலை மேல் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்களாம். பித்ரு பூஜை செய்து முடித்திருந்தார்கள். அவர்களுடைய குருஜி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் நல்ல ஆங்கிலத்தில் பேசினார். சென்னை எம்ஐடியில் பிடெக் படித்து விட்டு இரு கோவில்களைக் கட்டி நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்றவுடன் மகிழ்ச்சியாகப் பேசி மறுநாள் நவராத்திரி ஆரம்பமாவதால் மிகவும் விசேஷமாக இருக்கும் என்று அவருடைய கோவிலுக்கு வருமாறு அழைத்தார்.  நாங்களும் வருவதாகக் கூறி விடைபெற்றோம். ரிசார்ட்டில் ஆற்றின் கரையோரம் இருந்த ஆரஞ்சு ஆஞ்சநேயருக்குப் பயபக்தியுடன் ஒருவர் பூஜை செய்து கொண்டிருந்ததைப் பார்க்க திவ்யமாக இருந்தது. இரவு எட்டு மணி வரை ஆற்றோரமாய் அமர்ந்திருந்தோம்.

தாத்தா இரவு உணவு தயாராகி விட்டதைக் கூற, அங்கே சென்றால் சுடச்சுடச் சப்பாத்தி, சப்ஜி, சாலட் தயாராக இருந்தது. எளிமையான வீட்டுச் சாப்பாடு தான். சாப்பிட்டு விட்டு அன்றைய நாளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம். யமுனை ஆற்றங்கரையில் பல முனிவர்கள் தங்கி கடுந்தவம் புரிந்து வாழ்ந்திருக்கிறார்கள். பாண்டவர்களின் வனவாச காலத்தில் அவர்கள் தங்கி இருந்த பல இடங்களும் இந்த ஆற்றங்கரையோரம் தான் என மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் பல இடங்களில் ‘வெல்கம் டு தேவ் பூமி’ வாசக வளைவுகள் அரசியல் பிரமுகர்களின் முகங்களுடன் வரவேற்கிறது.

உண்மையாகவே இது தேவ பூமி தான்!

“போலோ யமுனா மய்யா கீ ஜெய்!” காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

படங்களுக்கு இங்கே சொடுக்கவும்

வீடியோ காண இங்கே சொடுக்கவும்

Yamunotri





'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...