Wednesday, January 18, 2023

2. தினந்தோறும் சித்திரைத் திருவிழா: ஹரித்வார்

எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது.

தினந்தோறும் சித்திரைத் திருவிழா: ஹரித்வார்

நியூயார்க்கிலிருந்து 14 மணி நேர விமானப்பயணமும் டெல்லியிலிருந்து காரில் ஆறு மணிநேர சாலைப்பயணமும் தந்த களைப்பில் தூங்கியதே தெரியவில்லை. நாங்கள் ஹரித்வாரில் தங்கியிருந்த விடுதி நன்றாகவே இருந்தது. அங்கு வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் முப்பது வயதிற்கு குறைவான இளைஞர்களாகவே இருந்தார்கள். விடுதிக்கு வரும் வண்டிகளுக்காக கதவைத் திறந்து விட வாசலில் மட்டுமே ஒரு முதியவர் ‘தொளதொள’ காக்கிச் சட்டையில் பொக்கைவாய்ச் சிரிப்புடன் வலம்வந்து கொண்டிருந்தார். ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளில் பேசுபவர்களை வேற்று கிரக மனிதர்களாக பார்க்கும் அப்பாவித்தனம் அவர்கள் முகத்தில் தெரிந்தது. இத்தனை வேலையாட்களை வைத்துக் கொண்டு விடுதியின் தரையை நன்கு துடைத்து வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தோம்.

அறையைக் குளிரூட்ட ரிமோட் கண்ட்ரோல் செட்டிங்ஸ் தான் புரியவில்லை. அமெரிக்க வாழ்க்கை கொஞ்சம் கெடுத்துத் தான் வைத்திருக்கிறது. நடு இரவில் திடீரென ஏசி வேலை செய்யாமல் வியர்க்க, ரிமோட்டில் விளையாடும் சிறுகுழந்தையைப் போல எல்லா பட்டன்களையும் தட்டியதால் ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்ததது. அப்படியும் நான் தூங்கிவிட்டேன். ஈஷ்வருக்குத் தான் தூக்கம் போய் விட்டது. அதுவும் தவிர, அமெரிக்க நேரப்படி அது தூங்கும் நேரமும் கிடையாது. எனக்கு அப்படியெல்லாம் இல்லை. வழக்கம் போல காலையில் தாமதமாக எழுந்திருந்து பார்த்தால் ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர் “ஊர் அழகா இருக்கு. இன்னிக்கு முழு நாளும் விட்டுவிட்டு மழைன்னு போட்டிருக்கு. எப்படி ஊரைச் சுத்திப் பார்க்கப்போறோமா?” என்று கவலைப்பட்டார்.

நேற்று இரவு தெரிந்த மலைகளின் மீது கருமேகங்கள் தவழ்ந்து முத்தமிட்டுச் சென்று கொண்டிருந்தது கொள்ளை அழகு! சீராக மழை பொழிந்து கொண்டிருக்க, ஓடும் மேகங்களின் வழியே பச்சைபசேலென மரங்கள் சூழ மலையில் மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் கோவில் கோபுரங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வட இந்தியக் கோவில் கோபுரங்கள் பலவும் தெரிந்தது. நிறைய கோவில்கள் இருக்கும் போலயே என்று நினைத்துக் கொண்டேன். மழை நீருடன் மணலையும் அள்ளிக்கொண்டு ‘மா கங்கா’ தாவி ஓடிக்கொண்டிருந்தாள். ஆஹா! காலையில் அங்கு நடந்து செல்லலாம் என்று நினைத்தது நடக்காது போலிருக்கே! அதான் ஈஷ்வர் சோகமாக இருக்கிறார். ம்ம்ம்…

எதிரில் இருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் துளசி மாடம் ஒன்று மாடியை அலங்கரித்துக் கொண்டிருந்தது. அந்த மழையிலும் ஒருவர் அங்கே விளக்கேற்றி கும்பிட்டுச் சென்று கொண்டிருந்தார். நனைந்து கொண்டே செல்பவர்கள், பின்னால் அமர்ந்திருப்பவர் குடையைப் பிடித்துக் கொண்டு என்று இரு சக்கர வாகனங்களில் பறந்து கொண்டிருந்தார்கள் சிலர். நடந்து செல்வோர் மீது மழைநீரை வாரி இறைத்துக் கொண்டே இரைச்சலுடன் பெரிய வண்டிகள் என விடியல் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தது. மழை ஒன்பது மணி வாக்கில் நிற்கும் என்று போட்டிருக்கிறது. அதற்குள் தயாராகி சாப்பிட்டு முடித்து வெளியே கிளம்பலாம் என்று முடிவு செய்தோம்.

ஈஷ்வர் சாப்பிட்டு வருவதற்குள் விடுதி வரவேற்பாளரிடம் சென்று ஊரில் இருக்கும் முக்கிய கோவில்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து வாடகை வண்டியையும் ஏற்பாடு செய்யலாம் என்று அந்த குறுகிய லிஃப்ட்டில் ஏறி கீழே வந்தேன். மூன்று பேருக்கு மேல் அதில் இருந்தால் நிச்சயம் மூச்சு முட்டும். ஒரு சிறு கூட்டம் விடுதியிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்தது. பார்க்க தமிழ் ஆட்கள் போல தெரிந்தார்கள். தமிழிலும் பேசிக் கொண்டார்கள். அவர்கள் கிளம்பியவுடன் அங்கிருந்த இளவயதுப் பெண் சிரித்த முகத்துடன் வணக்கம் சொல்லி எப்படி இருக்கிறீர்கள்? என்ன உதவி வேண்டும் என்று கேட்டாள். “துறுதுறு”வென இருந்த அவள் முகத்தில் உதடு சிரிக்கையில் கண்களும் சேர்ந்து சிரிக்கும் பொழுது இந்தப்பெண்கள் தான் எத்தனை அழகு! அவருடன் பேசியதில் நேபாளத்திலிருந்து வந்திருப்பதாகவும் அருகில் தான் வீடு இருக்கிறது என்றும் கூறினார். அவரின் முகம் மதுரை நண்பரின் காதலியின் முகத்தை நினைவூட்டியது. நல்ல ஆங்கிலத்தில் தெளிவாகப் பேசினார். நானும் பதில் வணக்கம் சொல்லிவிட்டு அங்கு பார்க்க வேண்டிய கோவில்கள், இடங்களை பற்றித் தெரிந்து கொண்டு வண்டியையும் ஏற்பாடு செய்யுமாறு சொல்லி விட்டு ஈஷ்வருக்காக காத்திருந்தேன்.

பாட்டரியில் ஓடும் எலக்ட்ரிக் ரிக்க்ஷாவென்றால் ஒரு நாளைக்கு 800-900 ரூபாய் வாடகை என்றாள். பரவாயில்லையே என்று நினைக்கும் பொழுது தான் மழையில் அது சரிவராது நனையாமல் செல்ல கார் தான் சரிப்படும் என்று மூன்று மடங்கு பணம் கொடுத்து ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொண்டோம். மழை நிற்கும் அறிகுறிகள் ஏதும் இல்லாததால் ஜாக்கெட் சகிதம் கிளம்பி விட்டோம். வண்டியும் வந்து விட்டது. டிரைவரிடம் பேசும் பொழுது தான் அவருக்குத் ‘தோடா தோடா’ ஆங்கிலம் தான் தெரியும் என்று தெரிந்தது. கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று சிரித்துக் கொண்டே விஷ்ணுவைச் சரணடைய துவக்கப்புள்ளியான ஹரித்வாரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் அன்றைய பயணம் மழையோடு ஆரம்பமாயிற்று.

மதுரையைப் போலவே கொஞ்சம் சோம்பேறியான ஊர் தான் போலிருக்கிறது! அந்த நேரத்திலும் ஒரு சில கடைகளே திறந்திருந்தது. சிறிய, பெரிய புதிய, பழைய வீடுகள் என்று கலவையாக இருக்கிறது. சாலையின் இருபுறங்களிலும் வண்டிகளை நிறுத்தி வைத்திருந்தார்கள். வழியில் பெரிய ஆசிரமங்கள் பல இருந்தது. அங்கு போகணுமா என்று கேட்டுவிட்டு அவற்றைத் தாண்டி பல குறுகிய தெருக்கள் வழியாக முதலில் ‘தக்ஷ மஹாதேவ்’ சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் எங்கள் டிரைவர். மழை இன்னும் தூறிக்கொண்டுதான் இருந்தது.

கோவில் வந்து விட்டது. செருப்பை வண்டியில் விட்டுவிட்டு கோபுரத்தைத் தேடினால் மரத்தின் பின்னால் வட இந்திய கோவில் கோபுரம்! கோவில் வளாகத்தின் உள்ளே கோவில் கடைகள் இருக்க வேண்டியது என்பது வாஸ்து சாஸ்திரத்தில் எழுதப்படாத விதி. அங்கும் அப்படியே. கோவிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் தெரிவது கையில் இறந்த ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு கண்கள் சிவக்க ஜடாமுடி பறக்க உயர்ந்த நீலகண்டன் சிலை! அதன் பிறகு தான் தெரிந்தது தக்ஷன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்காததால் கோபம் கொண்ட சக்தி அந்த வேள்விக்குள் இறங்குகிறாள். அதைக் கேள்விப்பட்டு சிவன் தக்ஷணைக் கொன்று சக்தியை வேள்வித்தீயில் இருந்து வெளியில் எடுக்கிறார். அந்தக் காட்சியைத் தான் சிலையாக வடித்து வைத்திருந்தார்கள். சிங்கங்கள் இருபுறமும் கர்ஜித்துக் கொண்டு நிற்கும் வாயிலைத் தாண்டி உள்ளே சென்றால் கோவில். எப்படி போவது என்று தெரியாமல் வலது புறம் சென்றோம்.புல்லாங்குழலுடன் அழகிய கிருஷ்ணா ராதா சந்நிதி. அருகே பெரிய மரத்தின் கீழ் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர். ‘ஹனுமன்’ என்றே விளிக்கிறாரகள்.

ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு ஹனுமன் சாலீஸா சொல்லிக் கொண்டிருந்தார். முடித்து விட்டு அங்கிருந்த இளவயது அர்ச்சகரிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார். அர்ச்சகரும் ஏதோ புது ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்று நினைத்தாரோ என்னவோ ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தைச் சொல்லி குங்குமத்தைப் பூசி விட்டார். அங்கிருந்து அருகே உள்ள பெரிய மண்டபத்திற்குள் நுழைந்தால் வரிசையாக சக்தியின் திருவுருவங்கள். சக்தி பீடங்கள் ஒருங்கே அமைந்த பிரசித்தமான கோவில் என்று கேள்விப்பட்டோம். சக்தியின் பல அவதாரங்களை அங்கே பார்க்க முடிந்தது. தக்ஷன் யாகம் செய்வது போல சித்திரங்கள் கோவில் சுற்றுச்சுவற்றில் இருக்கிறது. லிங்க ரூபத்தில் சிவன். தொட்டுக் கும்பிட்டு அபிஷேகம் செய்ய முடிகிறது. இது

எங்களுக்குப் புது அனுபவம். நம் தென்னிந்தியக் கோவில்களில் கர்ப்பகிரகத்திற்குள் ஆச்சரியார்களைத் தவிர யாரும் செல்ல முடியாது. வட இந்தியாவில் அதுவும் சிவன் கோவில்களில் நாம் உள்ளே சென்று அருகில் நின்று தரிசித்து பூஜை செய்ய முடிகிறது. கோவிலில் பெரிய பெரிய ஆலமரங்களும் வேப்பிலை மரங்களும் உள்ளது. யாக குண்டம் தேவி சந்நிதியைக் கடந்து சென்றால் கங்கை உபநதியாக பாய்ந்து சென்று கொண்டிருக்கிறாள். அங்கே சந்தியாவந்தனம், பித்ரு பூஜை செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் சென்றிருந்த நேரம் தொடர்மழை பொழிந்து கங்கையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. வீடுகளில் இருந்து பலரும் சிறிய சொம்புடன் கங்கை நீரை எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். ஆஞ்சநேயரும் விநாயகரும் சேர்ந்து ஓரு சந்நிதியில் இருந்தார்கள். விஷ்ணுவின் அவதாரமாக வழிபடப்படும் ஆல மரங்களைச் சுற்றி நூல், சிகப்புத்துணிகளைக் கட்டியிருந்தார்கள். மழையில் அந்தக் கோவில் சூழல் அத்தனை அற்புதமாக இருந்தது. முதல் கோவில் தந்த அனுபவமே மழையையும் பொருட்படுத்தாமல் அடுத்த கோவிலுக்குச் செல்ல தூண்டியது. அழகான கோவில்.

ஹரித்வார் செல்பவர்கள் தவறாமல் இந்த சக்தி பீடத்திற்குச் சென்று வர வேண்டும். மழை இல்லையென்றால் இன்னும் சிறிது நேரம் நதிக்கரையில் இருந்திருக்கலாம். வெளியில் வர மனமின்றி வந்தோம். கோவிலுக்கு வெளியே சுடச்சுட சமோசா, பூரி, இனிப்புகள் என்று காலை உணவு தயாராகிக் கொண்டிருந்தது.

அங்கிருந்து மலையில் இருக்கும் ‘சண்டி தேவி’ கோவிலுக்குச் செல்லும் வழியில் ‘ராம் ஷீலா’ கோவில் ஒன்றிற்கு டிரைவர் அழைத்துச் சென்றார். நம் சேதுக்கரையில் இருந்து மிதக்கும் பாறை ஒன்றை வைத்து வழிபடுகிறார்கள். சிறிய ராமர் கோவில். தங்கும் அறைகளுடன் கூடிய ஆசிரமத்திற்குள் இருக்கும் கோவில் போல இருந்தது.

அடாது மழையிலும் விடாமல் நாங்களும் பயணித்துக் கொண்டிருந்தோம். புதிதாக பாலங்கள், சாலைகள் போடும் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் அவ்வளவாக இல்லை. சிறிது தொலைவில் கங்கா நதியும் படித்துறைகளும் கோவில்களும் தெரிந்தது அழகு. அகண்ட நதிப்புறத்தில் அமைதியாக வருபவள் குறுகிய இடங்களில் தாவி ஓடுகிறாள். ராமன் வில்லை போன்ற வடிவமும், உயர்ந்த திரிசூலமும் நிமிர்ந்து பார்க்க வைத்தது.

அடுத்த மண்டகப்படி ‘பவன் தா4ம்’ என்றொரு தனியார் கோவில். கோவில் என்றாலும் உள்ளே நுழைந்தால் சத்திரம் போல் விசாலமாக இருந்தது. இந்த அமைப்பு பல சேவைகளைச் செய்து வருவதால் வட இந்தியர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. வாசலில் அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடைகள் நிறைய இருந்தது. ‘நசநச’ மழையில் எங்களை வாசலில் இறக்கி விட்டுச் சென்று விட்டார் டிரைவர். உள்ளே காயத்ரி தேவி, சிவன், விஷ்ணு ஏகப்பட்ட குருக்களின் திருவுருவச் சிலைகள். இங்குள்ள கண்ணாடி அறை மிகவும் பிரபலமாம்.வேடிக்கைப் பார்க்க நன்றாக இருந்தது.

வட இந்தியர்களும் சாதுக்களும் அதிகம் வந்து தங்கிச் செல்லும் இடம். கும்பமேளா சமயங்களில் கூட்டம் நிறைய இருக்கும் என்று அந்த அமைப்பைச் சார்ந்த சாது ஒருவர் கூறினார். ஸ்மார்ட்ஃபோன் வந்தாலும் வந்தது நண்டு சிண்டெல்லாம் வளைத்து வளைத்து கண்ணாடி அறையில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தது. இளைஞர் பட்டாளங்கள் படம் எடுக்கும் விதத்தை வைத்துச் சொல்லி விடலாம் இது இன்ஸ்டா பைத்தியமா இல்லை ஃபேஸ்புக், யூடியூப் பைத்தியமா என்று. நானும் ஒரு பைத்தியம் தான். அதனால் எளிதில் இந்தக் கூட்டத்தைக் கண்டு கொள்வேன்.

அங்கிருந்து மீண்டும் சாலைப் பயணம். இப்பொழுது நகரத்திற்குள் சுற்றிக் கொண்டிருந்தோம். காவி உடையணிந்த சாதுக்கள் பலர் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். உயரமான புதிய தங்கும் விடுதிகள் ஏராளமாக முளைத்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறிய ஊரில் கும்பமேளா நடக்கும் என்றால் மக்கள் கூட்டம் எப்படி இருக்கும் என்று யோசித்தாலே ஆச்சரியமாக இருந்தது! வழியெங்கும் வெவ்வேறு குருக்களின் பெயர்களில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரமங்கள். மழை இல்லையென்றால் சாவகாசமாக நடந்து சென்று பார்த்து வரலாம்.

அடுத்து நாங்கள் சென்றது ‘வைஷ்ணோ தேவி’ கோவில். காஷ்மீரில் இருக்கும் கோவிலைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டியிருந்தார்கள். முகப்பே வித்தியாசமாக இருந்தது! ராமர், சீதா லட்சுமணன் படகோட்டி குகனுடன் செல்வது போல, கங்கை, லட்சுமி, பிரம்மாண்ட விநாயகர், ஆஞ்சநேயர் சிலைகள் என்று கழுத்தை நிமிர்த்தி பார்க்க வைக்கிறது. உள்ளே சென்றால் நவராத்திரி காலத்தில் மீனாட்சி அம்மன் கோவில் கொலு மண்டபம் போன்று வரிசையாக அலங்காரச் சிலைகள். நடுவில் நீண்ட குகைகள், படிகள், காளி, லட்சுமி தேவியின் திருவுருவங்கள் என்று சுற்றிச் சுற்றி மேலே சென்றால் காளி, சரஸ்வதி, வைஷ்ணவி தேவி மரத்தடியில் இருப்பது போல் அமைத்திருந்தார்கள்.

அங்கே ஒரு சாது உட்கார்ந்து பூஜை செய்து வருகிறவர்களுக்குப் பிரசாதம் கொடுக்கிறார். கீழே விற்கும் பிரசாதத்தை வாங்கி வந்தும் பூஜை செய்யலாம். அங்கே வந்திருந்த இளைஞர் ஒருவர் காஷ்மீர் கோவிலுக்கும் சென்றிருக்கிறாராம். இதே போல் தான் அதுவும் வளைந்து வளைந்து குகைக்குள் செல்வது போல இருக்கும் என்று கூறி அவருடைய பிரசாதத்தையும் அனுபவத்தையும் பக்தியுடன் பகிர்ந்து கொண்டார். இளைஞர்களிடம் பக்தி இருந்தால் நாட்டில் வன்முறையே இருக்காது என்று 20களில் இருந்தவரைப் பார்த்துப் பேசியபொழுது தோன்றியது. அவரிடம் விடைபெற்று வெளியே வந்தோம். கோவிலின் கீழே பெரிய மண்டபம். நடுவே பெரிய சிவலிங்கம். சுற்றிலும் திருப்பதி பெருமாள், பாண்டுரெங்கன், காளி, விநாயகர், ஆஞ்சநேயர், ராம் பரிவார், தேவியர்கள் திருவுருவச் சிலைகள். இதுவும் தனியார் கோவில் என்று நினைக்கிறேன். அந்த அமைப்பின் குருவிற்கும் சிலை வைத்து வழிபடுகிறார்கள்.

மழைக்கே அலுப்பு தட்டி விட்டது போல. சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சென்று விட்டது. அப்பாடா என்றிருந்தது!

ஹரித்வாரில் மூன்று சக்தி பீடங்கள் உள்ளன. அதில் ‘மா ச2ண்டி தேவி’ கோவிலும் ஒன்று. அங்கு செல்லும் வழியில் மழையால் சாலைகள் சேதமடைந்து பிளவுபட்டிருந்தது. பொதுமக்களே சாலையில் உருண்டு விழுந்த கற்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பெரு மழை என்றால் அதிகம் பாதிக்கப்படும் இடம் போல தெரிகிறது. அதற்கேற்ப துரித நடவடிக்கைகள் எடுப்பார்களா தெரியவில்லை. அங்கு தான் பயணிகள் கூட்டத்தையும் வண்டிகளையும் அதிகமாகப் பார்த்தோம். வெளியே இளநீர், பொரி, சாட் வகைகளை விற்கும் தள்ளு வண்டிகள் நிறைய இருந்தன. கோவில் முகப்பைப் பார்த்தால் கோவில் மாதிரியே தெரியவில்லை. உள்ளே சென்று மலைக்கு ரோப் காரில் செல்ல பயணச்சீட்டு வாங்க வரிசையில் ஈஷ்வர் நிற்க, “என்ன இங்கே பெண்களுக்கு என்று தனி வரிசை இல்லை” என்று அலட்டலுடன் ஒரு பெண்மணி ‘தாட் பூட் ‘ என பீட்டர் வீட்டுக் கொண்டு வந்தார். அங்கிருப்பவர்கள், “எல்லோருக்கும் சேர்ந்து ஒரே வரிசை தான்” என்றவுடன் அவருடன் வந்திருந்த பெண்மணியிடம், “என்ன இது? இப்படி இருக்கிறது இங்கே. அங்கேயெல்லாம்…” என்று ஆரம்பித்தவுடன் தெரிந்தது வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார் என்று. ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று ஓரு புறம் கூவ வேண்டியது அப்புறம் பெண்களுக்குத் தனி வரிசை வேண்டும் என்று கத்த வேண்டியது. என்னவோ போடா மாதவா!

“எலே இந்த வழியாத்தான் போகணுமாம்” என்று யாரோ தமிழில் பேசியது காதில் விழுந்தது. நடுத்தர மற்றும் வயதான தாத்தா பாட்டிகள் ஒரு இருபது பேர் போல நம் மக்கள் வந்திருந்தார்கள். ரோப் கார் ஏறுமிடத்திற்கு வரிசையில் நின்று ஏறி விட்டோம். பழனியில் ரோப் காரில் சென்று வந்த அடுத்த நாள் அங்கு நடந்த விபத்துப் பற்றி செய்திகளில் பார்த்தது கண்முன்னே வந்து சென்றதால் கொஞ்சம் பயமாக இருந்தது எனக்கு. கீழே பார்த்தால் பசுமையான காடு. பறவைகளின் இன்னிசை கீதம் மலைகளில் எதிரொலிக்க, மலை முகடுகளைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது மழைமேகங்கள். கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகான அருவிகள் என்று இயற்கைக்காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. கோடைக்காலத்தில் எப்படி இருக்குமோ தெரியாது. மழையில் குளிர்த்த மரங்களும் மனிதர்களும் நகரமும் புத்துணர்ச்சியாய் காண்பவர்களையும் தொற்றுக் கொள்கிறது!

மலையுச்சியில் கோவில் இருக்கிறது. மேலே ஏற ஏற வளைந்து செல்லும் கங்கா நதியும் படித்துறைகளும் ஹரித்வார் நகரமும் மிக அழகாகத் தெரிந்தது. ஒரு வழியாக உச்சிக்கு வந்து சேர்ந்தோம். நடந்து வருவதற்கு கூட வழி இருக்கிறது. ரோப் காரில் இருந்து இறங்கி கோவிலுக்குச் செல்ல நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் வயதானவர்கள் நிறைய மக்கள் இருந்தார்கள்! கோவிலுக்குச் செல்லும் வழியில் குண்டு குண்டு மந்திகள் கூட்டம் அழகு! பொரி சாப்பிட்டுப் போரடித்துப் போயிருக்கிறது போல. வேறு ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அழகர்கோவில் குரங்குகள் தோற்றத்திலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக பிங்க் நிறத்தில் முகம் இருந்தது. இங்குள்ள கோவில்களில் ஜரிகையுடன் கூடிய சிகப்பு வண்ணத் துணிகளை பக்தர்கள் வேண்டி முடிந்து வைத்திருக்கிறார்கள். வழியெங்கும் அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடைகள். பொரி, ஏதோ ஒரு இனிப்பு உருண்டை, பத்தி, குங்குமம் என்று அழகாக பைகளில் வைத்து விற்கிறார்கள். இந்தக் கடையில் வாங்கிட்டுப் போங்க. அந்த கடைக்கு வாங்க என்று வாசலில் நின்று கூவி அழைக்கும் கூட்டமும் இருக்கிறது.

அவர்களைத் தாண்டி கோவிலுக்குச் சென்றால் முகம் மட்டும் தெரிய மஞ்சள், ஆரஞ்சு வண்ண மலர்மாலைகளால் அலங்கரித்த பார்வதிதேவியின் அம்சமான ச2ண்டி தேவி. பளிச்சிடும் கண்கள். சிகப்பு வண்ண ஆடையில் தெய்வீகமாக இருக்கிறாள். வட இந்தியாவில் ஒன்று பளிங்கினால் செய்யப்பட்ட நேர்த்தியான தேவி முகங்கள். இல்லையென்றால் தட்டையாக பெரிதான கண்களுடனும் முகங்களுடனும் என்று இருக்கிறது. மதுரை ‘அழகி’யைப் பார்த்த கண்களுக்கு இதெல்லாம் வித்தியாசமாகவே தெரிந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

தேவியை திவ்யமாக தரிசித்து விட்டு படிகளில் ஏறி நடந்து வரும் வழியில் தமிழ் மக்களை பார்த்துப் பேசினோம். அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்கு. வெளியூரில் நம் மொழியில் பேசும் மக்களைக் கண்டால் வரும் ஆனந்தமே அலாதி தான். தென்காசி பக்கத்தில் இருந்து வந்திருந்தார்கள். ரயிலில் வாரணாசி பயணத்தை முடித்து விட்டு ரிஷிகேஷ், ஹரித்வார் பார்க்க வந்திருந்தார்கள். எங்களை பற்றிக் கேட்டு அவ்வளவு தூரத்திலிருந்தா வந்திருக்கிறீர்கள்? குழந்தைகளை அழைத்துக் கொண்டு வரவில்லையா என்று கேட்டு எங்கள் பயணம் சிறக்க வாழ்த்தினார்கள். மீண்டும் ரோப் கார் பயணம். கங்கை மேல் செல்லும் பாலங்கள், ஆரத்தி நடைபெறும் படித்துறை எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. கீழே வந்தவுடன் இளநீர் சாப்பிட்டு விட்டு மீண்டும் பயணம்.

இத்தனை மழைக்கு எங்கும் தண்ணீர் தேங்கிப் பார்த்ததாக ஞாபகம் இல்லை. மீண்டும் சாலைப் பயணம். தூரத்தில் பார்த்த பெரிய சூலாயுதத்தை இப்பொழுது அண்ணாந்து அருகில் பார்த்தோம். பிரம்மாண்டமாக இருந்தது. நகர் முழுவதும் மரங்களுடன் பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.தள்ளு வண்டிகளில் ஆப்பிளும், வாழைப்பழங்களையும் அதுவும் ஒரே ஒரு வகை தான் அதிகம் விற்கிறார்கள். அதில் கொஞ்சம் ஏமாற்றம் எனக்கு. கொத்தமல்லி, புதினா கட்டுக்களுடன் தயிர் வண்டிகள், சாலையோர டீக்கடைகளைத் தாண்டி ‘மானசா தேவி’ கோவிலுக்குச் சென்றோம். அங்கே குறிப்பிட்ட தூரத்தில் நெரிசலைக் கட்டுப்படுத்த வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். நடந்து போகலாம் இல்லையென்றால் பாட்டரி ரிக்க்ஷாக்களில் ஏறியும் போகலாம்.

நாங்கள் ஈ ரிக்க்ஷாவில் பயணிக்கும் அனுபவத்திற்காக அதில் ஏறினோம். சும்மா ‘ஜல்ல்’ என்று பறந்தது. வழியெங்கும் சிறு சிறு கடைகள் தான். அங்கு கிடைக்காத பொருட்களே இருக்காது போலிருக்கு! கோவிலுக்குச் செல்ல கொஞ்சம் தூரம் அதிகம் தான். நல்ல வேளை நடந்து வரவில்லை. இந்தியாவில் ஹார்ன் சத்தம் காதைக் கிழிக்கிறது. நமக்கெல்லாம் இன்னும் காது கேட்பது முன்ஜென்ம கர்ம பலன் தான்! அந்த இடத்தில் கூட நாய்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறது! ச2ண்டி தேவி கோவிலில் ரோப் கார் பயணச்சீட்டு வாங்கும் பொழுதே மானசா தேவி கோவிலுக்கும் சேர்த்து வாங்கி விடுவது நல்லது. இல்லையென்றால் வரிசையில் நின்று வாங்குவதற்குள் போதும்போதும் என்றாகி விடும். ரிக்க்ஷாக்காரர் இறக்கி விட்ட இடத்திலிருந்து இன்னும் சிறிது தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. ஆஹா! ஒரே தின்பண்டங்கள் கடையா இருக்கே! வரும் போது பார்த்துக்கலாம் என்று வரிசையில் ஐக்கியமானோம். வரிசை நீண்டு மெதுவாக நகர்ந்து ஏதோ ஒரு வீட்டின் வழியே குறுகிய பாதையில் செல்வது போல் இருந்தது.

ரோப் காரில் எங்களுடன் ஒரு குஜராத்தி தம்பதியினர் ஏறிக் கொண்டனர். அவர்கள் அடிக்கடி வந்து செல்வார்களாம். வண்ண விளக்குகளால் கோவில் கடைகள் ஜொலித்துக் கொண்டிருந்தது. மீண்டும் மழை. வயதானவர்கள் பலரும் வந்திருந்தார்கள். எப்படித்தான் இத்தனை படிகளிலும் ஏறி இறங்கி வருகிறார்களோ என்று ஆச்சரியமாக இருந்தது எனக்கு! கோவிலில் நல்ல கூட்டம். பணத்தை வாரி இறைக்கிறார்கள். பளிங்கினால் செய்யப்பட்ட அழகான மானசா தேவி, பார்வதி தேவியின் அங்கமாக வழிபடப்படுகிறாள். இதுவும் ஒரு சித்த பீடம். மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறினார்கள். திவ்ய தரிசனத்தை முடித்து விட்டு வரும் வழியில் கடையில் மண்குவளையில் சுடச்சுட சா2ய் சாப்பிட்டோம். அந்தச் சா2ய்க்கு அடிமையாகி விட்டேன் என்று கூட சொல்லலாம். ஆலு பரோட்டா, பூரி, கச்சோரி, கட்லட், உருளைக்கிழங்கு சமோசா, பிரட் சமோசா குலாப்ஜாமூன், லட்டு, மேகி, நொறுக்குத்தீனிகள் என பலவும் விற்றுக் கொண்டிருந்தார்கள். மழைக்கு இதமாகத்தான் இருந்தது. நீண்ட நடைக்குப் பின் ரோப் காரில் கீழிறங்கினோம்.

இப்பொழுது எதிர்திசையில் ஈ-ரிக்க்ஷா பயணம். அந்தச் சாலை கொஞ்சம் மேடு பள்ளங்களுடன் குப்பைகளுடன் இருந்தது. அமெரிக்க நேரப்படி இரவு நேரம். மெதுவாக எனர்ஜி குறைந்த பாட்டரி போல் அமைதியாகி விட்டோம். சிறிது நேரம் அறைக்குச் சென்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் வரலாம் என்று முடிவெடுத்து கார் இருக்கும் இடத்திற்கு வந்து சேர, டிரைவரும் மாலையில் கங்கா நதியில் ஆரத்தி நடக்கும் இடத்திற்குச் செல்லலாம் என்று கூறி எங்களை விடுதியில் விட்டுவிட்டுச் சடுதியில் பறந்து போனார்.

மாலை நான்கு மணி போல் வந்து ஆரத்தி நடைபெறும் “ஹர் கி பௌ1ரி’ என்னும் இடத்திற்கு அருகில் எங்களை விட்டு விட்டு, நடந்தோ எலெக்ட்ரிக் ரிக்க்ஷா பிடித்துக் கொண்டு செல்லுங்கள். பூஜை முடிந்ததும் கூப்பிட்டால் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி இறக்கி விட்டார். நாங்களும் ஒரு வண்டியைப் பிடித்துக் கொண்டுச் செல்ல, சாலையின் இருபுறமும் வழியெங்கும் குடிசைகளைப் போட்டுக் கொண்டு ஏழை மக்கள். வறுமையின் நிறம் அங்கே தெரிகிறது. ம்ம்ம்… வழியெங்கும் சோளக்கருது, கரும்புச்சாறு, சா2ட், ஐஸ்கிரீம், லஸ்ஸி, குல்ஃபி விற்கும் தள்ளுவண்டிகள். சித்திரைத் திருவிழா போல இருந்தது. மக்களும் சுவைத்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார்கள். இப்பத்தான் வந்து இறங்கியிருக்கோம். வம்பை விலைக்கு வாங்கக்கூடாது. அடுத்த பத்து நாட்கள் பயணம் தான் மிக முக்கியம் என்று கவனமாக முடிந்தவரை கஷ்டப்பட்டு வாயைக் கட்டிக்கொண்டு இருந்தோம்.

சாலையின் மறுபுறம் படித்துறைகள். கோவில்கள். கூட்டம் கூட்டமாய் மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்து மலை உச்சியில் இருக்கும் மானசா தேவி கோவிலும் வில் அம்பு பாலமும் மிக அழகாகத் தெரிகிறது. மக்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தார்கள். மழைநீரை அடித்துக் கொண்டு பிரவுன் வண்ணத்தில் நதியின் வேகம் அதிகமாக இருந்தது. சீக்கிரமே வந்து விட்டோம் என்று சுற்றிப் பார்த்து விட்டு வந்தால் கூட்டம் இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தது. மழையால் அந்த இடமே ‘சொதசொத’வென்று இருக்க, பிளாஸ்டிக் ஷீட் விற்றுக் கொண்டிருந்தார்கள். அதை ஒன்றை வாங்கி ஈஷ்வர் முதல் படிக்கட்டின் ஓரத்தில் கிடைத்த இடத்தில் போட, அமர்ந்து கொண்டோம். எங்கள் அருகில் நைனிடாலில் இருந்து ஒரு கணவனும் மனைவியும் வந்திருந்தார்கள். குண்டு மனிதர்களுக்கே இருக்கும் அழகும் வெள்ளந்திச் சிரிப்புமாய் அந்தப் பெண்மணி ஆங்கிலத்தில் நன்றாக பேசினார். ‘சா2ய் சா2ய்’ என்று விற்றுக் கொண்டிருந்தவரிடம் டீ வாங்கிக் குடித்தோம். சின்ன பேப்பர் கப்பில் கொஞ்சூண்டு தான் என்றாலும் சுவையாக இருந்தது. அதற்குள் எங்களுக்குப் பின்னால் தரையில் நான்கு வரிசைகளுக்கு கூட்டம். நின்று கொண்டு பார்க்கும் கூட்டம் வேறு. நேரம் செல்ல செல்ல இரு கரைகளிலும் கூட்டம் சேர ஆரம்பித்துவிட்டது. வார விடுமுறைகளில் அதிகமான மக்கள் பக்கத்து ஊர்களில் இருந்து வருவார்கள் என்றார் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி.

எதிரில் இருக்கும் கோவிலில் இருந்து தான் ஆரத்தி பூஜை நடக்கும். வானில் மெல்ல இருள் கவிழ துவங்கும் வேளையில் கோவிலில் பூஜைகள் துவங்கியது. கங்கை அன்னையை வேண்டி தீபங்கள் ஏற்றி நதியில் விட, அது அலைகளின் ஆட்டத்திற்கேற்றவாறு அசைந்து சென்றது அழகு. நடுவில் சூழலில் மாட்டிக் கொண்டு அமுங்கி விடுகிறது. சில தீபங்கள் மட்டும் நெடுந்தூரம் பயணிக்கிறது. சிறுவர்கள் குங்குமம், மஞ்சளில் திரிசூலம் அச்சு கொண்டு பொட்டு வைத்து காசு கேட்கிறார்கள். ஆசைக்கு நாங்களும் வைத்துக் கொண்டோம்.

இதற்குள் கூட்டம் சேர்ந்து “கங்கா மாதா கி ஜே” “பக்வானுக்கி ஜே” “ஹர ஹர மஹாதேவ்” என்று ஒருமித்த குரலில் சொல்வதைக் கேட்க புல்லரிக்கும் அனுபவமாக இருந்தது. பஜனைப் பாடல்களுடன் கங்கா ஆரத்தி துவங்கும் முன்பு பூஜை செய்ய விரும்புபவர்கள் பணமும் கட்டி பூஜை செய்யலாம். அனுராதா பட்வாலின் ஆரத்திப் பாட்டு ஒலிக்கையில் ஏழு அர்ச்சகர்களும் அடுக்குத்தீபங்களில் தீபாராதனை செய்யும் காட்சியில் நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று என்று ஐம்பூதங்களும் ஒன்றிணைந்த நிலையில் கங்கா நதி ஜொலித்துக் கொண்டிருக்க, மக்கள் கூட்டம் உணர்ச்சி வயப்பட்டு மனதால் ஒன்று கூடி தெய்வீகம் மட்டுமே அந்த இடத்தில் குடியிருந்தது. எல்லோருமே ஏதோ ஒரு பரவச மனநிலையில் இருந்தார்கள். இப்படியே இந்த உலகம் இருந்துவிடக்கூடாதா என்று ஏங்க வைத்த தருணம் அது. அந்த இடத்தில் கிடைத்த உணர்வுகளை உள்வாங்க சிறிது நேரமாயிற்று. மனதில் புரிந்தும் புரியாமலும் ஏதோ ஒரு நிம்மதி.

பூஜை முடிந்ததும் அனைவருக்கும் ஆரத்தி தட்டு கிடைத்து கங்கை அன்னையைப் பூஜிக்க முடிகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்த இடத்தில் எந்தவித கூச்சலும் குழப்பமும் இல்லாமல் கூட்டம் கலைந்து சென்றதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது! நாங்கள் மறுகரைக்குச் சென்று அங்கிருந்த கோவில்களைத் தரிசனம் செய்து விட்டு எங்கிருக்கிறோம் என்று தெரியாமலே கடைகள் இருக்கும் தெருவுக்குள் நுழைந்திருந்தோம். முதலில் பார்த்த உணவுக்ககடை பிரபலமான ஒன்று. அங்கே சுடச்சுட பூரியும் கிழங்கும் சூடான குலாப்ஜாமூனும் விற்றுக் கொண்டிருந்தார்கள். நான்கு சிறிய பூரி ஒரு செட் போலிருக்கிறது. காரமான உருளைக்கிழங்கு மசாலா. நின்று கொண்டு தான் சாப்பிட வேண்டும். பேருக்கு இரண்டு மூன்று மேஜைகள் இருக்கிறது. சுவை அள்ளுகிறது. பெரிய்ய்ய இரும்புச்சட்டியில் சூடான ஜீராவில் நீண்டவாக்கில் பெரிய்ய்ய்ய்ய ஜாமூன்கள் மிதப்பதைப் பார்க்கும் பொழுதே எச்சில் ஊறுகிறது. ம்ம்ம்ம்ம்… வாயில் வைத்தவுடன் கரைந்து இனிப்பு மட்டுமே சிறிது நேரம் நாவில் நடமாடுகிறது. பக்கத்துக் கடையில் ஜிலேபி வேறு அடுக்கி வைத்திருந்தார்கள். ஒரே நாளில் எத்தனை தான் சாப்பிடுவது. கொஞ்சம் பொறுமையாக இருப்போம் என்று கடாயில் காய்ச்சிய பாலை விற்கும் கடைக்குச் சென்று அதைக் குடிக்க.. ஏகாந்தம்.

மனமும் வயிறும் நிறைந்தாலே போதும். வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தோம். பானிபூரி, மசாலா பொரி, ஆலு பரோட்டா தள்ளு வண்டிக்கடைகளில் செம கூட்டம். உணவகங்களில் வரிசையில் காத்திருக்கிறார்கள். தீபாவளிக்கு இரு தினங்கள் முன்பு மதுரையில் விளக்குத்தூண் பக்கம் செல்வதைப் போல கூட்டம். துணிக்கடைகளை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று ஆசைக்கு சில ஆடைகளையும் வாங்கிக் கொண்டேன். நல்ல டிசைனகள். விலையும் அதிகமில்லை. தீபாவளி, நவராத்திரிக்காக துணிகள் வாங்கும் கூட்டம் வேறு. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் முட்டிக்கு கொண்டு நின்றது. ஒன்பது மணிக்குப் பெரும்பாலான துணிக்கடைகளை மூடி விடுகிறார்கள். உணவகங்கள் மட்டுமே இரவு நீண்ட நேரம் திறந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள என் பயணக்கட்டுரை.

தினந்தோறும் சித்திரைத் திருவிழா: ஹரித்வார்

நாங்கள் ஒரு வண்டியைப் பிடித்துக் கொண்டு விடுதிக்குத் திரும்பினோம். இனிப்பு சாப்பிட்டதால் தூக்கம் வரவில்லை. எதிரில் கங்கை நதிக்கரையில் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து விட்டு வருவோம் என்று கிளம்பினோம். அதற்குள் ஊர் உறங்கி விட்டிருந்தது. தெருவில் அதிக நடமாட்டம் இல்லை என்றாலும் புது ஊர் என்ற பயமும் இல்லை. பாலங்களுக்குக் கீழே பல குடும்பங்கள் வசிக்கிறது. காவல்துறையினர் ரோந்து சென்று கொண்டே இருக்கிறார்கள். முதல் நாளை விட தண்ணீர் அதிகமாகி இரண்டு படிகள் மேலே ஏறியிருந்தது. சிறிது நேரம் கங்கைக்கரையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அன்றைய சுகமான நாளை அசை போட்டபடி மீண்டும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். ஜாமூனின் தித்திப்பைப் போலவே அன்றைய நாள் இனிமையாக மனதிற்கு இதமாக புதுவித அனுபவமாக இருந்தது.

படங்களுக்கு இங்கே சொடுக்கவும்

வீடியோ காண இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...