Wednesday, January 18, 2023

4. யமுனோத்ரி

எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது.

யமுனோத்ரி

டேராடூன், மசூரியிலிருந்து எங்களை விரட்டி வந்த கருமேகக் கூட்டம் பர்கோட்-யமுனோத்ரி சாலையில் நாங்கள் தங்கியிருந்த குடில் வரை தொடர்ந்தது. வரும் வழியில் நடுநடுவே மழைத்தூறல்கள் இருந்தாலும் இரவில் ‘சலசல’ வென ஆரம்பித்து தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்ட மழை கேம்ப்-ன் கூரைகளில் ‘பொத்பொத்’ என்று கொட்டுவதும் மழைநீர் சுவர்களில் தெறித்து விழுவதும் நன்கு கேட்டது. வானத்தைக் கிழித்துக் கொண்டு ‘ஜோ’வென்று பேரிரைச்சலுடனும் பெருங்காற்றுடனும் கொட்டிக் கொண்டிருந்த இரவு நேர பேய்மழை ஒருவித அச்சத்தைக் கொடுத்தது. மணி அதிகாலை இரண்டை நெருங்கிக் கொண்டிருக்க, நாய் வேறு விடாமல் குரைத்துத் தூக்கத்தைக் கலைக்க, அத்துவானக் காட்டில் இருக்கிறோம் என்ற நினைவே கொஞ்சம் திகிலாகத் தான் இருந்தது! கண்ணை மூடித் திறப்பதற்குள் மணி நான்காகி விட, அமெரிக்க நேரத்திற்கு மாறி விட்டிருந்தேன். ‘கமகம’வென சமையலறையிலிருந்து வந்த மசாலா வாசத்தில் தூக்கமும் போயே போச்சு. ஈஷ்வர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மெதுவாக நடந்து சென்று மேலங்கியைப் போட்டுக் கொண்டு கதவைத் திறந்தால் முகத்திலறைந்த குளிர்காற்று ‘ஹலோ’ சொல்லிற்று!

இப்பொழுது மழையும் களைத்துப் போய் தூறலாக பெய்து கொண்டிருக்க, முற்றத்தில் இருந்த விளக்குகளின் ஒளியைத் தவிர சுற்றிலும் கும்மிருட்டு. எதிரே யமுனா நதி ஆரவாரத்துடன் பொங்கி ஓடிக் கொண்டிருந்த ஓசையும் பூச்சிகளின் ரீங்காரமும் தவிர, அவ்வபோது நாய் குரைக்கும் சத்தம் மட்டுமே அங்கு கேட்டது. நல்ல குளிர். சூடாக டீ குடித்தால் நன்றாக இருக்கும். எப்படா விடியும் என்று வெளியில் போடப்பட்டிருந்த இருக்கையில் தனியாக உட்கார்ந்து காத்திருந்தேன். “அக்கம்பக்கம் யாருமில்லா பூலோகம்” என்பது அது தான் போல! தனிமையும் இனிமையான தருணம் அது. எதையும் யோசிக்காமல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த நொடியில் அங்கிருப்பது தொலைந்து போனதற்குச் சமம். பூரணமாக அனுபவித்தேன்.

சமவெளியில் புண்ணிய நதி. எதிரே இமயமலை. அதையொட்டிய நெடுஞ்சாலை வழியே தான் யமுனோத்ரிக்குச் செல்ல வேண்டும். மெல்ல மெல்ல இருள் விலக, மூடுபனி மேகங்கள் மரங்களையும் மலையையும் மூடி ரம்மியமாகக் காட்சியளிக்க, மணி ஐந்தாகி விட்டிருந்தது. ‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ! ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ’ மொமெண்ட் அது.

நாங்கள் தங்கியிருந்த இடத்தின் பெயர் ‘ஜெயர ரிசார்ட்ஸ்’. அங்கிருந்த தாத்தா பிரகலாத சிங், வயது 70க்கு மேலே கூட இருக்கலாம். ஆள் ‘துறுதுறு’வென்று சமையல் முதல் அங்கு வரும் விருந்தினர்களைப் பொக்கைவாய்ச் சிரிப்புடன் கவனித்துக் கொள்பவர். சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு வரவா என்று கேட்டு வந்தார். தேநீரும் எடுத்து வரச் சொல்லிவிட்டு அமைதியான காலையில் மீண்டும் மீண்டும் தொலைந்து கொண்டிருந்தேன். பயணிகளை ஏற்றிக் கொண்டு யமுனோத்ரிக்குச் செல்லும் வண்டிகள் அந்த அதிகாலை நேரத்திலேயே ஒன்றிரண்டு சென்று கொண்டிருந்தது.

சூடான மசாலா ‘சாய்’ இதமாக இருக்க, ஈஷ்வரும் எழுந்து வந்து விட்டார். இருவரும் விரைவில் தயாராகி விட, பிரகலாத சிங்கிடம் துணிகளைத் துவைத்துத் தரும் வசதிகள் இருக்கிறதா என்று கேட்டு அவரும் துவைத்துத் தருகிறேன் என்றவுடன் அழுக்குத் துணிகளைக் கொடுத்து விட்டு வெளியில் சிறிது தூரம் ஆற்றங்கரையோரம் நடந்து சென்று வந்தோம். முன்தினத்தை விடத் தண்ணீரின் அளவும் இரைச்சலும் கூடியிருந்தது. ஆற்றின் பாதை முழுவதும் சிறிதும் பெரிதுமாக ‘மொழுமொழு’ பாறைகள் நிரம்பியிருந்தது! கரையின் விளிம்பில் நின்று மலையிலிருந்து ஆக்ரோஷமாக இறங்கி ஓடோடி வரும் சீற்றமிகு யமுனாவின் அழகை ரசித்து விதவிதமாக படங்களை எடுத்துக் கொண்டோம்.

காலையில் ஆறு மணிக்கு அசோக்குமார்ஜி-யும் தயாராகக் காத்திருக்க, பிரகலாத சிங்கும் காலை உணவை அழகாக மடித்துப் பைகளில் வைத்துக் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு வண்டியில் ஏறினோம். ரிசார்ட்டில் இருந்து பிரதான மண் சாலைக்குச் செல்ல 45 டிகிரி கோணத்தில் இருக்கும் சிறிய சாலையில் மேலேற வண்டி சண்டித்தனம் செய்தது. தார் போடாத கற்சாலையில் அழுத்தி டயர் உராய்ந்ததில் ரப்பர் வாசம் வரவே, எங்களை இறங்கச் சொல்லி விட்டு வண்டியைக் கஷ்டப்பட்டு மேலேற்றினார் டிரைவர்-ஜி. மோசமான அந்தச் சாலையில் வண்டி ஏற சிரமப்பட்டதைப் பார்த்து அவருக்கு ரிசார்ட்டின் மீதும் எங்கள் பயண முகவரின் மீதும் கோபம் வந்தது. அங்கிருந்து யமுனை ஆற்றின் மேல் போடப்பட்டிருந்த பச்சை வண்ண பாலத்தைக் கடந்து குண்டும் குழியுமாக இருந்த சாலைகளில் குலுங்கியபடி பயணித்து தேசிய நெடுஞ்சாலை 507ஐத் தொட்டதும் ‘அப்பாடா’ என்றிருந்தது! சிறிது தூரம் நிம்மதியாகச் சென்று கொண்டிருந்தோம். அதற்குப்பிறகு தொடர் மழையினால் உருத்தெரியாமல் சிதறிப் போயிருந்த சாலைகளில் தான் பயணம். சிறிதும் பெரிதுமாய் மலையிலிருந்து உருண்ட கற்கள் சில இடங்களில் சாலைகளோரம் குவித்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த பொழுது தான் முன்தினம் சந்தித்த ஆங்கிலத்தில் பேசிய டிரைவர் கூறியது நினைவிற்கு வந்தது. இரண்டு நாட்களுக்கு அந்தப் பகுதியில் ஏற்பட்ட மலைச்சரிவினால் வாகனங்கள் செல்ல தடை விதித்திருந்தார்கள். மழை நின்ற பிறகே சாலைகளிலிருந்த பாறைகளையும் கற்களையும் அகற்ற முடியும். அதுவரை மலைப்பாதையை முழுவதும் மூடி விடுகிறார்கள். பாதுகாப்பை உறுதி செய்த பிறகு தான் போக்குவரத்து மீண்டும் தொடர்கிறது. தொடர்ந்து வேலைகள் செய்தாலும் மழைக்கால சிரமங்கள் நிறையவே இருக்கிறது.

மலைச்சரிவு எல்லாம் இந்தப் பகுதிகளில் சாதாரணம் என்பது இங்கு வந்த பிறகு தான் எங்களுக்குத் தெரிந்தது. சாலையோர இரும்பு வேலிகள் கூட உடைந்து சின்னாபின்னமாக இருந்ததில் புரிந்தது மழையின் தீவிரம்! நாங்கள் பயணம் செய்யும் நாட்களில் பருவ மழைக்காலம் முடிந்திருக்கும் என்று நம்பியிருந்தோம். அதற்காகத்தான் செப்டெம்பர் இறுதியில் இந்த யாத்திரைக்குச் செல்வது சரியாக இருக்கும் என்று எண்ணி இங்கு வந்தால் ‘குளோபல் வார்மிங்’ தன் கைவரிசையைக் காட்டும் என்று யார் தான் எதிர்பார்த்தார்கள்?

வழி முழுவதும் ஒரு பக்கம் இமயமலைத்தொடர். மறுபக்கம் வண்டல் மண்ணை அள்ளிக் கொண்டு எங்களுடன் கூடவே வந்த யமுனா நதி. சரளைக்கற்கள் நிறைந்த சாலைகளில் எப்படித்தான் வயதானவர்கள் வண்டிகளில் பயணிக்கிறார்களோ என்று அச்சப்பட வைத்தது. வெயில் காலத்தில் இந்த சாலைப் பிரச்சினைகள் இருக்காது. போக்குவரத்து நெரிசல் தான் அதிகமாக இருக்கும் என்று தெரிந்து கொண்டோம். மலைகளைப் பிளந்து சாலைகளை அகலப்படுத்தும் வேலைகள் வேறு நடந்து கொண்டிருந்தது. சில இடங்களில் வண்டி எதிர்பாராமல் கற்களில் வழுக்கினால் நதிக்குள் தான் விழ வேண்டும். ஒரே “திக் திக் திக்” என்றிருந்தது. “சிவ சிவ” என்று அவனை வேண்டிக் கொண்டே அந்த கரடுமுரடான சாலையில் கருமேகங்களுடன் தொடர்ந்தது எங்களது பயணம்.

மூடு பனியில் மலைக்கிராமங்கள் மிக அழகாகத் தெரிந்தது. அதிக மனித உழைப்பைக் கோரும் படிகளில் செய்யும் வேளாண்மைமுறை தான் அங்கு சாத்தியம் என்பதும் கண்கூடாகத் தெரிந்தது. சில இடங்களில் அறுவடை செய்த நிலங்கள் காலியாக இருக்க சில அறுவடைக்காகக் காத்திருந்தது. பெரும்பாலும் அரிசி தான் விளைவிப்பார்கள் என்று தெரிந்து கொண்டோம். வழியெங்கும் மலையிலிருந்த கிராமங்களை இணைக்கும் சிறுசிறு பாலங்கள் கொள்ளை அழகு. மலையுச்சிகளிலிருந்த கோவில்கள் அங்கிருந்த எல்லா வீடுகளையும் விட உயரத்தில் சிறு படிகளுடன் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்படி அடர் சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணக் கொடி பறக்கும் கோபுரங்களுடன் அந்த சூழலையே ரம்மியமாக்கிக் கொண்டிருக்கிறது.

வண்டிகள், மனிதர்களுடன் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளும் மலைப்பாதைகளில் வலம் வருகிறது. அவர்களுக்கு வழியை விட்டுப் பொறுமையாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். தூறலும் தொடர, இயற்கையை ரசித்துக் கொண்டே வந்தால் நடுவே வண்டியை நிறுத்தி விட்டார்கள். கிளம்பிய ஒன்றரை மணிநேரத்தில் வழியில் மலைச்சரிவால் பாதையைச் சரி செய்யும் வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. தாத்தா கொடுத்த ஆலு புரோட்டாவை பச்சைமிளகாயில் செய்த காரசாரமான ஆச்சாறுடன்(நம்மூர் ஊறுகாய் தான்) சேர்ந்து சாப்பிட, சுவையோ சுவை. ஒரு ஆலு புரோட்டாவே போதுமானதாக இருக்கிறது. கூடவே தயிரும் கொடுத்திருந்தார். காலை உணவு முடிய, வண்டிகள் நகர ஆரம்பித்து விட்டது. வண்டி எங்கு நின்றாலும் ஆண்கள் மட்டும் இறங்கி வெளியில் சென்று உரமூட்ட முடிகிறது. வழியில் எங்குமே கழிப்பிட வசதிகள் இல்லை. பெண்களுக்கு கொஞ்சம் சிரமம் தான்.

மலைகளிலிருந்து உருண்டு வந்த பெரும்பாறைகள் சாலைகளில் பார்க்கும் பொழுது ஆபத்துகள் சூழ்ந்த அந்த இடத்தில் நெருக்கமாக இருந்த குடியிருப்புகளில் எப்படித்தான் வாழ்கிறார்களோ என்று அதிசயித்துப் போனோம்! தொடர் மழையால் அருவிகளுக்கும் பஞ்சமில்லை. வெயில் காலத்தில் இந்த அழகெல்லாம் இருக்குமா என்பது சந்தேகமே! ஆனாலும் வழியெங்கும் ‘கண்ல மரணபயத்த காட்டிட்டியே பரமா’ மொமெண்ட்கள் ஏராளம். அனுபவமிக்க ஓட்டுனர்களால் மட்டுமே இந்தப்பகுதிகளில் ஓட்ட முடியும். இல்லையென்றால் இந்நேரத்திற்கு ஏகப்பட்ட விபத்துகளைப் பார்த்திருப்போம். வண்டியோட்டுபவர்கள் ஒருவருக்கொருவர் கொஞ்சம் அனுசரணையாக ஒட்டிக் கொண்டுச் செல்வது பாராட்டப்பட வேண்டிய விஷயம். என்ன! வேற்று மாநில வண்டி ஓட்டுநர்கள் மெதுவாக ஒட்டிச் செல்வதால் அவர்களைக் கண்டால் மட்டும் உள்ளூர்க்காரர்கள் கோபப்படுகிறார்கள்.

ஆறு மணிக்குக் கிளம்பி ஒருவழியாக 9 மணிக்கு யமுனோத்ரியின் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த நேரத்தில் கூட வண்டிகள், பயணிகளுடன் வரிசையாக கோவேறு கழுதைகள், குதிரைகள் கூட்டமும் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த சிறிய உணவகத்தில் தலை முதல் கால் வரை மூடும் பிளாஸ்டிக் உறைகளை வாங்கிக் கொண்டோம். பட்டர் பன்னும் மசாலா டீயும் அருமையாக இருந்தது. சுடச்சுட’ காலை உணவுடன் வியாபாரமும் சூடுபிடித்துக் கொண்டிருந்த கடையில் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு நின்றிருந்ததைப் பார்த்தால் கொரோனா பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. அதெல்லாம் முடிந்து போன கதையாகி விட்டிருந்ததது. அமெரிக்காவில் தான் இன்னும் பயத்துடன் உலாவிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் நாங்கள் சென்ற அனைத்து இடங்களிலும் அப்படித்தான். கொரோனாவா? கிலோ என்ன விலை? என்ற ரேஞ்சில் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாகவும் கொஞ்ஞ்ஞ்சம் பயமாகவும் இருந்தது.

‘சார்தாம் யாத்திரை’ என்பது யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதர்நாத், பத்ரிநாத் என்ற நான்கு இடங்களில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வரும் புண்ணிய யாத்திரை ஆகும். இந்த நான்கு புண்ணிய தலங்களும் உத்தர்காண்ட் மாநிலத்தில் கர்ஹ்வால் பகுதியில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இமயமலைச்சாரலில் பனிச்சிகரங்களையும் புண்ணிய நதிகளையும் வழிநெடுக காணும் பாக்கியமும் பெற முடிகிறது. யமுனோத்ரியில் தொடங்கி கங்கோத்ரி, கேதார்நாத் தரிசனம் முடித்து பத்ரிநாத் கோவிலில் யாத்திரை நிறைவடைகிறது. உத்தர்காண்டில் யமுனோத்ரி மலையில் உற்பத்தியாகி டெல்லி- ஆக்ரா வரை பயணித்துப் பின் உத்தர பிரதேசத்தில் திரிவேணி சங்கமத்தில் கங்கா நதியுடன் கலக்கிறது யமுனா நதி. இந்தியாவில் கங்கா நதிக்கு அடுத்த புண்ணிய நதி என்பதால் “மா யமுனா” குடியிருக்கும் யமுனோத்ரி கோவில் முக்கியத்துவம் பெறுகிறது.

மலை அடிவாரத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் மலையேற மூன்று-நான்கு மணி நேரம் ஆகும். போய் விட்டு வாருங்கள்” என்று எங்களை அனுப்பி விட்டார் அசோக்குமார் ஜி. மழையில் “சொதசொத” வென்றிருந்த இடத்தில் குதிரை, கோவேறு கழுதைகளின் சாணிக்குவியல்களும் சகதியுடன் சேர்ந்து ஒரே நாற்றம். செங்குத்தான பாதையைக் கடந்து மேலே ஏற ஏற எனக்கோ மூச்சு முட்டிக் கொண்டு தலைச்சுற்றி வாந்தி வருவது போல இருந்தது. “என்னடா லதாவுக்கு வந்த சோதனை? ” தினமும் நடைப்பயிற்சி செய்து ஏதோ ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று கனவு கண்டதெல்லாம் பொய்யா கோப்பால்? என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன். நான் சிரமப்படுவதைக் கண்டு பயந்து போன ஈஷ்வர் “ஆர் யூ ஓகே? நடக்க முடியுமா? ரொம்ப கஷ்டப்படற மாதிரி இருக்க?” என்று கேட்டு “குதிரையில ஏறி வர்றியா?” என்றவுடன் குதிகால் வலியை நினைத்து ரொம்பவும் யோசிக்காமல் உடனே சரியென்று சொல்லிவிட்டேன். நடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை நிராசையாகி விட்டதே என்ற கவலை இருந்தாலும் வழியில் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்பது தான் பெருங்கவலையாகிவிட்டது.

யோசித்துக் கொண்டே வந்த எங்களைப் பார்த்தவுடன் ஒருவர் அவருடைய கோவேறு கழுதையை அழைத்து வந்து விட்டார். புதிதாக சைக்கிள் கற்றுக் கொள்ளும் பொழுது உயர்ந்த திண்ணை அல்லது படிகள் இருக்கும் வீடு வரை சைக்கிளை உருட்டிக் கொண்டு பிறகு அதன் மேல் ஏறுவது போல் அங்கும் உயரமான படிகளைத் தேடி கடிவாளத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு குதிரைக்காரர் கூறியது போல் சேணத்தின் மீது உட்கார்ந்து கொண்டேன். இரண்டு பாதங்களையும் வளையத்திற்குள் நுழைத்தவுடன் நன்றாக இறுக்கி பாதம் வெளியே வராதவாறு கட்டி விட்டார். ஈஷ்வர் நடந்து வருவேன் என்று சொல்ல, “அய்யோயோ தனியா நான் போக மாட்டேன். நீங்களும் ஒரு குதிரையில ஏறி வாங்க.” என்று நான் சொன்னது பிடிக்காவிட்டாலும் வேறு வழியின்றி ஒரு பெரிய குதிரையில் அவரையும் ஏற்றியாயிற்று.

நான் ஏறிய கோவேறு கழுதையின் பெயர் வாசந்தி. ஈஷ்வர் ஏறிய குதிரையின் பெயர் ராஜா என்று சொன்னார்கள். “என்னைச் சுமக்க வைத்த கொடிய நிலைக்கு ஆளாக்கினதற்கு மன்னித்துக் கொள் என்று மானசீகமாக அவளிடம் வேண்டிக் கொண்டேன். கோவத்துல எங்கேயும் தள்ளி விடாம பத்திரமா என்னைய கோவிலுக்குக் கூட்டிட்டுப் போடியம்மா வாசந்தி.” என்று அவளை அன்பாக முதுகு தடவி விட்டு ஈஷ்வரைப் பார்த்தால் ‘உர்ர்ர்ர்ர்’ரென்று மூஞ்சியை வைத்துக் கொண்டு “நான் நடந்து வரணும்னு நினைச்சிருந்தேன். இப்படி பண்ணிட்ட” என்றார் உக்கிரமமாய்! “பெத்தவங்க நல்லா தான் பொருத்தமா வச்சிருக்காங்கைய்யா பேரை” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே தேன் நிலவு படத்தில் வரும் ‘பாட்டுப் பாட வா’ பாடல் ஞாபகம் வர, நான் ஜெமினியாய், ஈஷ்வர் வைஜயந்திமாலா கதாபாத்திரங்களாய் மாறியிருப்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டே குறுகலான பாதையில் எங்களுடைய மலையேற்றம் தொடங்கியது. 

நுழைவாயிலில் தங்களுடைய அடையாள அட்டையைக் காண்பித்துப் பதிவு செய்து கொண்டு வர எங்களிடம் 500ரூபாயை வாங்கிக் கொண்டுச் சென்றார்கள் குதிரைக்காரர்கள். இரு வரிசையில் மட்டுமே செல்ல முடிகிற குறுகிய பாதையில் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் நல்ல கூட்டம். கோடைக்காலத்தில் பாதையை அடைத்துப் பெருங்கூட்டமாக இருக்கும் என்று கேள்விப்பட்டோம்! ஈஷ்வரா! இதுவே கூட்டமாகத் தெரிகிறது எனக்கு. நல்லவேளையாக கோடையில் இங்கு வரவில்லை. பலரும் நடந்து மலையேற, முடியாதவர்கள் குதிரை, கோவேறு கழுதைகளில் ஏறியோ நான்கு பேர் தூக்கிக் கொண்டுச் செல்லும் டோலிகளிலோ அல்லது காலை வெளியே தொங்கவிட்டபடி கூடைக்குள் உட்கார்ந்து கொண்டோ செல்லும் வசதிகள் இருக்கிறது. அதற்கேற்ற கூலியும் கேட்கிறார்கள். படிகளும் ஏற்றங்களும் கொண்ட பாதையில் குதிரையில் செல்வது கொஞ்சம் கடினம் தான். இளவயதினரும் டோலியிலும் குதிரையிலும் சென்று கொண்டிருந்தார்கள். அப்ப நான் பரவாயில்லை என்று தோன்றியது. மிக வயதான வட இந்தியப் பாட்டிகள் பலரும் முழங்கால் வரை சேலையைத் தூக்கிக் கொண்டு ‘கடகட’வென்று ஏறுவதைப் பார்க்கையில் நிறையவே பொறாமையாக இருந்தது. வயல்வெளிகளில் வேலை பார்த்த உடம்பு ‘கிண்’னென்று படு திடமாக இருக்கிறது. ஹ்ம்ம்… வாசந்தி படியேறுகையில் ஓரத்தில் போய் ஆற்றில் தள்ளி விட்டுவிடுவாளோ என்று பயம் காட்டியபடி சென்று கொண்டிருந்தாள். நடுவில் தண்ணீர்த்தொட்டியைப் பார்த்தவுடன் வழியை விட்டு விலகிச் செல்ல பயந்து விட்டேன். ஒரு கிலோ மீட்டர் சென்றிருப்போம். பக்கவாட்டில் பாறைகளின் வழியே ‘மா யமுனா’ ஓடிக் கொண்டிருந்தாள். “யமுனா மையா கீ ஜே” என யாத்திரிகர்களும் அவர்களைச் சுமந்து செல்பவர்களும் கோஷம் எழுப்பிக் கொண்டே செல்ல, சுற்றிலும் இமயமலையின் அழகும் கருமேகங்களுமாய் கண்ணில் விரியும் காட்சிகள் ஏகாந்தமாய் இருந்தது. நடந்து வந்திருந்தால் பல காணொளிகளும் படங்களும் கிடைத்திருக்கும். ம்ம்ம்!

வழியில் ஓரிடத்தில் நிறுத்தி டீ குடித்து சிறிது நேர இளைப்பாறல். அந்த நேரத்தில் குதிரைகளுக்கும் தீவனம் கொடுக்கிறார்கள். மீண்டும் குதிரை மீதேறி மலையேற ஆரம்பித்தோம். நடந்து வருபவர்கள் மலையேறச் சிரமப்பட்டால் நடு வழியிலும் குதிரை மீதேறி பயணம் செய்யும் வசதிகள் இருக்கிறது. சில இடங்களில் பாறைகள் தலையை இடித்து விடும் போல் அருகில் வருகிறது. பல இடங்களில் ஓரத்தில் செல்லும் பொழுது முட்டியை உரசிக் கொண்டே செல்லும் அபாயங்களும் டோலிகளைச் சுமந்து செல்பவர்கள் வேகமாக இடித்துக் கொண்டே செல்வதும் நடக்க வாய்ப்பிருப்பதால் கவனமாகச் செல்ல வேண்டியிருந்தது. என்னுடைய குதிரைக்காரரை அங்குமிங்கும் போகாமல் என்னுடனே இருக்க உடைந்த ஹிந்தியில் சொல்ல, “நான் பத்திரமாக அழைத்துச் செல்கிறேன். கவலை வேண்டாம்” என்று கூடவே வந்தார். கடல் மட்டத்திலிருந்து 3293 மீட்டர் உயரத்தில் இருக்கும் யமுனோத்ரிக்கு இரண்டு மணிநேரத்தில் வந்து சேர்ந்து விட்டோம். கோடைக்காலத்தில் குதிரையில் ஏறி வர மூன்று, நான்கு மணிநேரம் கூட ஆகலாம். அவ்வளவு கூட்டம் இருக்கும் என்று சொன்னார்கள்!

யமுனா நதிப் பாலத்தைக் கடந்து யமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் வழியில் ‘கருட கங்கா’ என்று கிளை நதி ஒன்று வருகிறது. கோடைக்காலத்தில் பனி படர்ந்து அழகாக இருக்கும் பகுதி நாங்கள் சென்றிருந்த பொழுது நதியாக ஓடிக் கொண்டிருந்தது. தூரத்திலிருந்தே தெரியும் ஆசிரமங்களில் தங்கும் வசதிகளும் இருக்கிறது. கோவிலை அடைத்தாற்போல தெரியும் நீல வண்ண கட்டடங்களும் அழுக்குத் தார்ப்பாய்கள் போர்த்திய குடில்களும் குப்பை மூட்டைகளும் திருஷ்டிப்பொட்டாக கண்களை உறுத்தியதில் வருத்தமாக இருந்தது. எத்தனை ரம்மியமான இடத்தில் இருக்கிறது இந்த புண்ணியத்தலம்! ஏனோ நமக்குக் கோவிலைப் பற்றின அக்கறையோ அந்தச் சூழலைக் காக்க வேண்டிய பொறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை. யாரிடம் சென்று முறையிடுவது? திருந்த வேண்டியது நாம் தானே?

இமயமலையிலிருந்து அருவியாய் அழகாகப் பயணித்து வரும் யமுனா நதிப் பாலத்தைக் கடந்து சென்றால் சிகப்பும் ஆரஞ்சும் வண்ணமும் கொண்ட ‘மா யமுனா’வின் கோவில் கோபுரம் ‘பளிச்’ என்று தெரிகிறது. பார்த்த நொடியில் ஏற்படும் பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்கத் தெரியவில்லை. மயிர்க்கூச்செறியும் தருணங்கள்! எத்தனை வருடக் கனவு, ஆசை!

இதிகாசத்தில் சூரிய பகவானின் மகளாக, எம் தர்மராஜனின் தமக்கையாக அறியப்படுகிறாள் ‘மா யமுனா’. கலியுகத்தில் மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு நதியாகப் பூமிக்கு வருகிறாள். அவள் சூரிய பகவானை நினைத்துத் தவம் செய்த இடமே யமுனோத்ரி கோவில்.

கோவிலில் நுழைவதற்கு முன் அல்லது யமுனா நதியில் குளிப்பதற்கு முன் அங்கிருக்கும் வெந்நீர் சுனையில் குளிக்க வேண்டும் என்பது ஐதீகமாம். பனிபடர்ந்த மலைகள் இருக்கும் பகுதியில் இதமான வெந்நீர் சுனை! நடந்த களைப்பை நீக்கி விடும் குளியல். ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி சுனைகள் இருந்தது. நல்ல கூட்டம். அருகிலிருந்த ‘திரௌபதி குண்ட’த்தில் பித்ருக்களை நினைத்துப் பூஜைகள் செய்கிறார்கள். அதற்கென தனியாகப் புரோகிதர்கள் இருக்கிறார்கள். அங்கே ‘திவ்ய ஷிலா’ என்றொரு பாறை இருக்கிறது. அதை வணங்கி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. யாத்திரிகர்கள் பலரும் அங்கே பித்ரு பூஜைகள் செய்து கொண்டிருந்தார்கள். அருகிலேயே கொதிக்கும் ‘சூரிய குண்டம்’ ஒன்று உள்ளது. அரிசியைக் கொண்டு வந்து துணியில் முடிந்து கொதிக்கும் நீர் உள்ள குண்டத்தில் வைத்தால் சில நிமிடங்களில் வெந்து சோறாகி விடுகிறது. அதைப் பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள். இக்கோவிலில் பயபக்தியுடன் வேண்டிச் செல்பவர்களுக்கு எம தர்மராஜனின் ஆசியும் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியமும் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

நாங்கள் அன்னையை வணங்கக் கோவிலுக்குள் சென்றோம். கூட்டமில்லை. நேராக சந்நிதிக்குச் சென்று திவ்ய தரிசனம் கண்டு வணங்கி நின்றோம். கட்டண வசூலிப்புகள் ஏதுமில்லை. நாங்கள் சென்ற வட இந்தியக் கோவில்களில் எங்கும் சுவாமியைப் பார்க்கக் கட்டணம் வசூலிக்கவில்லை. அவரவர் கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்களை வைத்துப் பூஜைகள் செய்து கொள்ள முடிகிறது. ‘மா கங்கா’, ‘மா யமுனா’ மற்றும் பனிக்காலத்தில் ‘குஷிமத்’ கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும் உற்சவ நாயகி என மூன்று திருவுருவ அன்னைகள் சன்னிதியில் ஒரு சேர இருக்கிறார்கள். அட்சயதிருதியை அன்று இந்தக் கோவிலின் நடை திறக்கப்படுகிறது. அப்பொழுது ‘குஷிமத்’ கோவிலிலிருந்து சோமேஸ்வருடன் வரும் உற்சவ நாயகி, தீபாவளி முடிந்த சில நாட்களில் சோமேஸ்வருடன் மீண்டும் ‘குஷிமத்’ கோவிலுக்குச் சென்று விடுகிறாள். யமுனாவின் சகோதரன் சனி பகவானின் குஷிமத் கோவிலில் தான் அன்னை ஆறு மாதம் தங்கியிருக்கிறாள்.

இயற்கையோடு கூடிய சூழலில் அங்கிருந்த ஒவ்வொரு கணமும் அற்புதமாக இருந்தது. மக்கள் பலரும் விதவிதமாக புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் ஜோதியில் ஐக்கியமாகிப் பல படங்களை ‘க்ளிக்’க்கிக் கொண்டோம். மீண்டும் வந்த வழியே பாலத்தைக் கடந்து குதிரைகள் காத்திருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். வாசந்தி எனக்காகக் காத்திருந்தாள். மலையிலிருந்து கீழே இறங்குவது தான் பெரும்சவாலாக இருக்கும் போலிருக்கிறது. படிகளில் இறங்க குதிரை மீதிருப்பவர்கள் உடலைப் பின்னுக்குத் தள்ளினால் தான் குதிரைக்கு எளிதாக இருக்கிறது. இல்லையென்றால் நாம் குப்புற விழ வேண்டியது தான். எதற்கு வம்பு என்று நாங்கள் ஏறிய சில நிமிடங்களில் இறங்கிக் கொண்டோம். தூரத்தில் மழை கொட்டும் காட்சி தெரிய, நடந்து செல்ல முடிவெடுத்தோம். பனிபடர்ந்த சிகரங்கள், அருவிகள், அடுக்கடுக்காய் மலைகள், கூடவே வரும் யமுனா நதி, சிறிதும் பெரிதுமாகப் பாறைகள், மூடுபனி என வழியெங்கும் மனதைக் கொள்ளைக் கொள்ளும் அழகுக்காட்சிகள்! வழியில் ஓரிடத்தில் சுடச்சுட ஜிலேபி, சந்திரகலா, சமோசா, பூரி, கச்சோரி தயாராகிக் கொண்டிருந்தது. ஆஹா! குதிரையில் வந்திருந்தால் இதையெல்லாம் சாப்பிடும் வாய்ப்பைத் தவற விட்டிருப்போமே. நல்ல வேளை! அப்படி நடக்கவில்லை. அத்தனை சுவையாக இருந்தது. மற்றோர் இடத்தில் மசாலா ‘சாய்’ சாப்பிட அமர்ந்தோம். கொதிக்கும் பாலில் வெறும் இஞ்சியைத் தட்டிப் போட்டு சிறிது மிளகுப் பொடியையும் சர்க்கரையும் டீத்தூளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்த டீ அத்தனை சுவையாக இருந்தது. அதற்குள் உத்தரகாசியில் பல இடங்களில் 24 மணிநேர தொடர்மழை எச்சரிக்கையை ‘ஜியோ’ குறுஞ்செய்தி அனுப்ப, விரைவில் திரும்ப வேண்டும் என்று வேகமாக இறங்கத் தொடங்கினோம். கருமேகங்கள் வருவதும் விலகுவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட, மலைகளும் அருவிகளும் அழகாகத் தெரிய படங்கள் நிறைய எடுத்துக் கொண்டோம்.

பேசிக்கொண்டும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் மழைத்தூறலில் கீழே இறங்க, மணி 2.30 ஆகி விட்டிருந்தது. அடிவாரத்தை நெருங்குகையில் இடிந்து விழுவது போல நிறைய வீடுகள்.  அங்கு தான் மக்கள் வாழ்கிறார்கள். ஏழ்மையான கோலம்! பார்க்க வருத்தமாக இருந்தது. ம்ம்ம்…

பேண்ட் நுனி ஈரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த சாணத்தின் வாசனை இப்பொழுது வண்டிக்குள்ளும்! வண்டியில் ஏறி 13 கிலோமீட்டர் தொலைவில் ‘ஹனுமன் சட்டி’ கோவிலுக்கு வந்தோம். ‘ஹனுமன் கங்கா’வும் யமுனா ஆறும் சந்திக்கும் இடத்தில் கடினமான ஏற்றத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. “அவசியம் போக வேண்டுமா? நிறைய படிகள் இருக்கும்” என்று டிரைவர் கேட்க, “அதெல்லாம் இருக்கட்டும். கோவில்களுக்குப் போகத் தானே வந்திருக்கிறோம்” என்று சாலையோரத்தில் இருக்கும் இந்தக் கோவிலுக்குச் சென்றால் நிமிர்ந்து பார்த்த தூரம் வரை வெறும் படிகள் தான் தெரிந்தது. “அடடா! தப்பு பண்ணிட்டோமா?” என்று என்னை ஒருகணம் யோசிக்க வைத்து விட்டது. அதுவும் சில இடங்களில் ‘நடுவுல ரெண்டு படிகளைக் காணோம்’ என்பது போல ஒரு படிக்கும் அடுத்த படிக்கும் இடையில் அத்தனை இடைவெளி! சிறிதும் பெரிதுமாகப் படிகளின் மேலே ஏறுவதற்குள் எனக்கு நாக்குத் தள்ளி விட்டது. தூரத்திலிருந்து நான் கஷ்டப்பட்டு ஏறுவதைச் சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்த அசோக்குமார் ஜி நாங்கள் மேலேறிச் சென்றவுடன் கையசைத்துக் காட்டினார். 

ஆரஞ்சு வண்ண நிறக்கொடிகளுடன் ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோவில். அழகான ஆரஞ்சு ஆஞ்சநேயர். அங்கிருந்த அர்ச்சகர் பூஜை செய்து குங்குமம் பூசி விட்டார். சிவலிங்கம் ஒன்றும் இருந்தது. பூத்துக் குலுங்கும் மலர்ச்செடிகளுடன் சிறிய தோட்டம். அங்கேயே குடியிருக்கும் கோவில் அர்ச்சகர் குடும்பம். மேலிருந்து நதிகளையும் ஆற்றையும் பார்க்கக் கொள்ளை அழகு. சுற்றியுள்ள மலைகளின் மேல் ஏறிச்செல்வது(ட்ரெக்கிங்) இங்கு பிரபலமாம். நாங்கள் செல்லவில்லை. ஆனால் அழகாக இருந்தது. சிறிய கிராமம் போல் இருந்த ஊரில் ஒரு பலசரக்கு/தேநீர்க்கடை. ஊர்ப் பெரியவர்கள் கூடி பொழுதைக் கழிக்கும் இடம் போலத் தெரிந்தது. சிறிது நேரம் அங்கிருந்தவர்களுடன் பேசிவிட்டு பர்கோட்டில் இருக்கும் எங்கள் குடிலுக்கு ஐந்து மணிக்கு வந்து சேர, சூடான தேநீரும் காத்திருந்தது.

ஆற்றின் அருகே நாங்கள் தங்கியிருந்த இடத்தில் ஒரே ஆண்கள் கூட்டம். ஏதோ பூஜை செய்கிறார்கள் என்று மட்டும் புரிந்தது. சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு ஆற்றின் கரையோரம் நடந்து கொண்டிருந்தோம். சிநேகமாக எங்களை அணுகியவர்கள் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்க, ஒருவர் தட்டு நிறைய பூரி, கேசரி, சுண்டல், பாயசம், கிச்சடி வைத்துக் கொடுத்தார். அவர்கள் மலை மேல் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்களாம். பித்ரு பூஜை செய்து முடித்திருந்தார்கள். அவர்களுடைய குருஜி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் நல்ல ஆங்கிலத்தில் பேசினார். சென்னை எம்ஐடியில் பிடெக் படித்து விட்டு இரு கோவில்களைக் கட்டி நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்றவுடன் மகிழ்ச்சியாகப் பேசி மறுநாள் நவராத்திரி ஆரம்பமாவதால் மிகவும் விசேஷமாக இருக்கும் என்று அவருடைய கோவிலுக்கு வருமாறு அழைத்தார்.  நாங்களும் வருவதாகக் கூறி விடைபெற்றோம். ரிசார்ட்டில் ஆற்றின் கரையோரம் இருந்த ஆரஞ்சு ஆஞ்சநேயருக்குப் பயபக்தியுடன் ஒருவர் பூஜை செய்து கொண்டிருந்ததைப் பார்க்க திவ்யமாக இருந்தது. இரவு எட்டு மணி வரை ஆற்றோரமாய் அமர்ந்திருந்தோம்.

தாத்தா இரவு உணவு தயாராகி விட்டதைக் கூற, அங்கே சென்றால் சுடச்சுடச் சப்பாத்தி, சப்ஜி, சாலட் தயாராக இருந்தது. எளிமையான வீட்டுச் சாப்பாடு தான். சாப்பிட்டு விட்டு அன்றைய நாளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம். யமுனை ஆற்றங்கரையில் பல முனிவர்கள் தங்கி கடுந்தவம் புரிந்து வாழ்ந்திருக்கிறார்கள். பாண்டவர்களின் வனவாச காலத்தில் அவர்கள் தங்கி இருந்த பல இடங்களும் இந்த ஆற்றங்கரையோரம் தான் என மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் பல இடங்களில் ‘வெல்கம் டு தேவ் பூமி’ வாசக வளைவுகள் அரசியல் பிரமுகர்களின் முகங்களுடன் வரவேற்கிறது.

உண்மையாகவே இது தேவ பூமி தான்!

“போலோ யமுனா மய்யா கீ ஜெய்!” காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

படங்களுக்கு இங்கே சொடுக்கவும்

வீடியோ காண இங்கே சொடுக்கவும்

Yamunotri





No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...