ஒரு சாதாரண இசைநிகழ்ச்சியில் நடந்த அசாம்பாவிதங்கள் என்று கடந்து செல்ல முடியவில்லை. இன்று தந்தி டிவியில் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் நடந்த உரையாடலைக் காண நேர்ந்தது. அவர் பேசியதில் அத்தனை முரண்பாடுகள். வட இந்தியாவில் நடக்கும் ரஹ்மானின் இசைநிகழ்ச்சியை விட அதிக எண்ணிக்கையில் தென்னிந்தியாவில் இந்த "மறக்குமா நெஞ்சம்" நிகழ்ச்சியை நடத்தி விட வேண்டும் என 'யாரோ' தீர்மானித்திருக்கிறார்கள். அதற்கு பலிகடா ஆனது ஏஆர் ரஹ்மானின் ரசிகர்களும் குடும்பங்களும்😞.
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ACTC நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹேமந்த் பொறுப்பற்றத்தனமாக பேசினார். இதுவரையிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் அனுபவம் இருப்பவருக்குத் திட்டமிட்டபடி 40,000 மக்கள் கலந்து கொள்ளவிருந்த இந்த நிகழ்ச்சியே முதல் நிகழ்ச்சி என்று கூறினார்.
முதலில் இத்தனை பெரிய மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். 25,000 பேர் கலந்து கொள்ள மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறது காவல்துறை. அதற்கான காவலர்களே பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருப்பார்கள். அப்படியென்றால் 40,000 பேர் வருவார்கள் என்று திட்டமிட்ட இந்த நிறுவனம் யாரை ஏமாற்ற நினைத்திருக்கிறது? இது கண்டனத்துக்குரியது மட்டுமில்லாமல் தண்டனைக்குரிய குற்றமும் அல்லவா? சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கிற்காக மீம் போடுபவர்களை நடுராத்திரியில் கைது செய்யும் காவல்துறையும் ஏவலாளியும் அமைதி காப்பது ஏனோ?
அடுத்து தேதி மாற்றத்தால் நடந்த குழப்பம் என்றார். பலரும் டிக்கெட்டை கேன்சல் செய்ததால் எண்ணிக்கையில் நடந்த குளறுபடியாம். ஆன்லைன் டிக்கெட் விற்பனை என்றால் எப்படி குழப்பமாகும்? ட்விட்டரில் பலரும் "கேன்சல் செய்யும் வசதியே அவர்களுடைய தளத்தில் இல்லை. எப்படி நாங்கள் செய்ய முடியும்" என்று புலம்பியிருக்கிறார்கள். பணத்தைக் கட்டி அனுமதிச்சீட்டு வாங்கியவர்களுக்கு மீண்டும் மறுதேதியிட்ட அனுமதிச்சீட்டு வழங்கியிருக்கிறார்கள். எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள் என்றால் தடுமாறுகிறார். ஆன்லைன் வர்த்தகத்தில் எப்படி குழப்பம் நடக்கும்? புரியவில்லை. அப்படியே நடந்திருந்தாலும் பழைய அனுமதிச்சீட்டுகளைக் கொண்டு வருபவர்களை இனம் காண முடியவில்லை என்றால் என்ன மாதிரியான நிறுவனம் இது? எதன் வகையில் மக்களை உள்ளே அனுமதித்தார்கள்? இது முழுக்க முழுக்க இவர்களின் அஜாக்கிரதையால் நடந்த தவறு. கஷ்டப்பட்டு ஒப்புக்கொள்கிறார். வேறு வழி?
25,000 பேருக்கு அனுமதி வாங்கி விட்டு 36,000 பேருக்கு டிக்கெட்டையும் விற்று 4,000 பேருக்கு காம்ப்ளிமெண்டரி டிக்கெட்டுகள் கொடுத்தார்களாம். மொத்தம் 40,000 கணக்கு. ஆனால் 45,000 பேருக்கு இருக்கை வசதிகள் செய்து வைத்திருந்தார்களாம். எத்தனை பெரிய அபத்தம்? காவல்துறைக்கு 'பெப்பே' காட்டியவர்களைப் பாவம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில் வைத்திருக்கிறது இந்த அரசு.
45,000 இருக்கைகள் போட தெரிந்திருக்கிறது. அதற்கான கட்டமைப்புகள் இருக்கிறதா என்று பார்த்தார்களா? கூட்டத்தைச் சமாளிக்க போதுமான ஆட்களை போடாதது யாருடைய தவறு? 45,000 பேருக்கு எத்தனை பௌன்சர்கள், அனுமதிச்சீட்டை சரிபார்ப்பவர்கள், இவர்களை நிர்வகிப்பவர்கள் இருந்தார்கள்? பதில் இல்லை.
கார்களில் வருபவர்கள் அதிகரித்திருக்கும் இந்த வேளையில் வெறுமனே 8,000 வண்டிகள் நிறுத்தவும் 20,000 இரு சக்கர வண்டிகள் நிறுத்தவும் ஏற்பாடு செய்திருந்தார்களாம். நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வருபவர்கள் ஷேர் ஆட்டோவிலா வரப்போகிறார்கள்? அங்கு நிறுத்த வசதி இல்லையென்றால் தொலைவில் எங்காவது ஓரிடத்தில் நிறுத்தி மக்களைப் பேருந்தில் அழைத்து வர செய்திருக்கலாமே? இத்தனை வருட அனுபவம் இருக்கிறது என்பவருக்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கூட்டம் என்று தெரியாமல் போயிருக்கிறது பாருங்கள். அத்தனை அலட்சியம்!
நம் மக்களுக்கும் பொது இடங்களில் ஒழுங்காக வரிசையில் நின்று சென்றால் விரைவில் அரங்கிற்குள் செல்லலாம் என்ற அடிப்படை அறிவு என்பது அறவே கிடையாது. முண்டியடித்துக் கொண்டுச் சென்று தான் மட்டும் அல்லது தன் குடும்பம் மட்டும் முதலில் உள்ளே செல்ல வேண்டும் என்ற மனநிலை தான். திரையரங்குகளில் கூட அப்படித்தான் நடந்து கொண்டார்கள். அதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் மூச்சு விடச் சிரமப்பட்டிருக்கிறார்கள். கொடுமையெல்லாம் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி பதட்டத்துடன் பேசியத்தைப் பார்க்க வருத்தமாக இருந்தது. இந்த வடு ஆறுமோ? பொறுக்கிகளை முட்டிக்கு முட்டி தட்டி அடிக்க காவல்துறை அங்கு இல்லை. இந்த நிறுவனம் பௌன்சர்களை வைத்திருந்ததாக சொன்னவர்கள் எத்தனை பேர் இந்த ஒழுங்கற்றவர்களை அப்புறப்படுத்தினார்கள்? அங்கு முறையிட கூட ஆட்கள் யாரும் இல்லை என்று சொல்வதற்கு கட்டுக்கடங்காத கூட்டம் வந்து விட்டது என்று சொல்கிறாரே தவிர உண்மையில் எத்தனை அனுமதிச்சீட்டு கள்ளச்சந்தையில் விற்பனை ஆகியிருக்கிறது? யார் விற்றிருக்கிறார்கள் என்று இவர்களுக்கும் மீறிய செயலாக பேசுகிறார். இருக்கலாம். அப்படியென்றால் அந்த 'கள்ள பார்ட்டி' யார் என்று கண்டறிய வேண்டியது யாருடைய கடமை?
யாருக்காக இப்படி விழுந்தடித்துக் கொண்டு நிகழ்ச்சியைப் பார்க்க வந்தார்களோ முதலில் அவரிடமிருந்த வந்த ட்வீட் தான் வேதனையைத் தருவதாக இருக்கிறது. உள்ளே வரமுடியாமல் போனவர்கள் அனுமதிச்சீட்டின் நகலை இவருக்கு அனுப்பினால் ஆவண செய்வாராம் A.R.ரஹ்மான். தனக்கு வெளியில் நடந்தது எதுவும் தெரியாது என்கிறார். ஓகே. அதில் ஓரளவு உண்மை இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். இவரைப் பார்க்கவும் பாடுவதைக் கேட்கவும் தானே பணத்தைக் கொட்டி அங்கே வந்தார்கள். இதுவரையில் பாதிக்கப்பட்ட பெண்களிடமோ நிகழ்ச்சியைக் காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய மக்களிடமோ நடந்த தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க கூட மனமில்லாமல் இருக்கிறார். 'மன்னிப்பு' என்ற வார்த்தை அத்தனை கடினமானதா? இன்று இவருடைய சுயரூபம் தெரிந்த மனிதர்கள் பலத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.
"வெளிநாடுகளில் எத்தனை கச்சேரிகளை நடத்தியுள்ளேன். இதுவரையில் இப்படியெல்லாம் நடந்ததில்லை." என்கிறார் ரஹ்மான். எப்படி நடக்கும்? இத்தனை பேர் அமர முடியும் என்றால் அத்தனை அனுமதிச்சீட்டுகள் மட்டுமே வெளிநாடுகளில் விற்க முடியும். அதிகமாக விற்று களேபரம் நடந்தால் லாடம் கட்டிவிடுவார்கள்.
காவல்துறையினரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியிருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர், வண்டிகள் நிறுத்துமிடங்களில் ஏகப்பட்ட கலாட்டா. இடமில்லாதாதல் காவலர்கள் தான் வண்டிகளை நகர்த்திக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தால் தான் பாவமாக இருந்தது என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.இந்த நிறுவனம் ஏன் வண்டிகள் நிறுத்துமிடத்தில் போதுமான ஆட்களை நிறுத்தவில்லை? கேட்டால் எதிர்பாராத கூட்டம். கள்ளச்சீட்டு கூட்டம் என்று கதை கட்டுகிறார் இந்த ஹேமந்த். ஏற்கெனவே இதே போல் கள்ளச்சீட்டு கூட்டத்தால் கோயம்புத்தூரி்ல் இதே ரஹ்மானின் இசைநிகழ்ச்சியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது இவர் நடத்திய நிகழ்ச்சியில். அப்பொழுதே அதை கவனித்து சரிசெய்திருக்க வேண்டாமா ரஹ்மான்? இந்தப் பொறுப்பைக்கூட தன் விசிறிகளுக்காக செய்ய மாட்டாரா? இப்பொழுது மீண்டும் ஒரு களேபரம் நடந்திருக்கிறது என்றால் யார் மீது குற்றம்? இவரைத் தண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்😡
பணத்தைத் திருப்பித் தருகிறோம் என்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மன உளைச்சலுக்கும் அதிலிருந்து அவர்கள் மீண்டு வரவும் என்ன செய்யப் போகிறார்கள்?
பணத்திற்காக பேயாய் அலையும் மனிதர்களிடம் மாண்பை எதிர்பார்ப்பது தவறோ?
இனி வரும் காலங்களிலாவது அரசும், காவல்துறையும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் பணத்திற்காகவும் புகழுக்காகவும் மட்டுமே இல்லாமல் நிகழ்ச்சியை வழங்குபவரும் பொறுப்புகளை கடமைகளை உணர்ந்து நடக்கட்டும். பொதுமக்களும் பொறுக்கிகளை இனம் கண்டு அநீதிகள் நடக்காத வகையில் விழிப்புடன் இருக்கட்டும்.
'மறக்குமா நெஞ்சம்' ஆறாத ரணமாகிப் போயிருக்கிறது!