'மொலாய் ரிசர்வ்' என்ற 1,000 ஹெக்டேரில் அமைந்துள்ள காடு இந்தியாவின் இரண்டாவது பெரிய நதியான பிரம்மபுத்ராவில் உள்ள மாஜூலித் தீவில் இருக்கிறது. ஆற்றின் வெள்ளப்போக்கில் ஏற்படும் மணல் அரிப்பால் அதன் மொத்த பரப்பளவு குறைந்துகொண்டே வந்து கடந்த 70 ஆண்டுகளில் பாதிக்கு மேல் சுருங்கிவிட்டது. இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அது மூழ்கிவிடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதை எதிர்த்து மக்கள் போராட, 1980ஆம் ஆண்டில் கோலாகாட் மாவட்டத்தின் அஸ்ஸாம் வனப்பிரிவு பிரம்மபுத்திரா ஆற்றின் மணல் திட்டு ஒன்றில் 200ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை மீண்டும் வளர்க்கும் திட்டத்தைத் தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக இந்தத் திட்டம் 1983ல் கைவிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதவ் பயேங் தனிமனிதனாக மரங்களை நட ஆரம்பித்து தற்போது 550 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்து நிற்கிறது. முதலில் மூங்கில் மரங்களை நட்டவர் பிறகு வெவ்வேறு மரங்களையும் செடிகளையும் நட்டு காலப்போக்கில் மரத்திலிருந்து விழும் விதைகளை வைத்தே காட்டை உருவாக்கியுள்ளார். காடு உருவானதும் விலங்குகளும் பறவைகளும் ஊர்ந்து செல்லும் உயிரினங்களும் இடம் பெயர்ந்து அவருடைய கனவை நனவாக்கியுள்ளது. இவரால் உருவாக்கப்பட்ட 'மொலாய் காடு' நியூயார்க் நகரத்தில் உள்ள சென்ட்ரல் பூங்காவை விடப் பெரியது. தற்பொழுது இந்தக் காட்டில் புலிகள், காண்டாமிருகங்கள், மான்கள், முயல்கள், குரங்குகள், கழுகுகள் உட்பட பல வகையான பறவைகளும் வாழ்ந்து வருகிறது.
2008ஆம் ஆண்டு 100காட்டு யானைகள் கொண்ட கூட்டம் வழிதவறி ஜாதவ் காடுகளுக்குள் நுழைந்தபோதுதான் அரசாங்கம் இந்தக் காட்டைப் பற்றியும் அதனை வளர்த்தெடுக்கும் ஜாதவ் பயேங் பற்றியும் அறிந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு மரத்தை நட்டு தான் வசிக்கும் தீவை காப்பாற்ற முயற்சிக்கும் இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலரும் வனத்துறை ஊழியருமான பத்மஸ்ரீ ஜாதவ் "மொலாய்" பயேங்கின் நினைவாக 'மொலாய் காடு' எனப் பெயரிட்டு கௌரவித்தது.
2012ல் ஜாதவ் பயேங்கின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஜிது கலிதா என்பவர் ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை விளக்கும் 'தி மொலாய் ஃபாரஸ்ட்' என்ற ஆவணப்படத்தை எடுத்தார். அது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டது. இவரை வைத்து எடுத்த பிற ஆவணப்படங்கள் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
16 வயதில் மரங்களை நடும் பணியைத் தொடங்கியவர் தன் இறுதி மூச்சு வரை தொடரும் என்று பணியை மேற்கொண்டு வருகிறார். தன் சிறுவயதில் நிழலில் ஒதுங்க இடமில்லாமல் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்த பாம்புகளைக் கண்டு மரங்களை வளர்க்கத் திட்டமிட்ட பயணத்தால் மணல் அரிப்பையும் ஓரளவு தடுத்து நிறுத்தியுள்ளார். இவருடைய ஊக்கமளிக்கும் கதையை சிறுகுழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில் 'ஜாதவ் அண்ட் தி ட்ரீ பிளேஸ்' என்னும் புத்தகமாகவும் வீடியோவாகவும் வெளிவந்துள்ளது. தற்பொழுது மஹாராஷ்ட்ரா மாநில கல்வித்திட்டத்தில் பாடமாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. சபாஷ்! இதை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சுற்றுபுறச்சூழலைப் பற்றி மேடைக்கு மேடை வாய் கிழிய பேசுபவர்களை விட எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் உண்மையாக காரியத்தில் தம்மை ஈடுபடுத்தி சாதித்து வரும் சொற்பமான சில மனிதர்களுள் ஜாதவ் பயேங்கும் ஒருவர். இயற்கையை முற்றிலும் கைவிடும் மனிதம் இன்னும் வீழ்ந்து விடவில்லை என்ற நம்பிக்கையை விதைக்கும் இவரைப் போன்ற மனிதர்கள் தான் உண்மையான சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள். அவர்களை அறிந்து நம்மால் ஆன உதவியைச் செய்வோம். கற்றுக் கொள்வோம். நம் குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துவோம். இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. நமக்காக. நம் எதிர்கால சந்ததியினருக்காக!
வாழ்த்துவோம்! வணங்குவோம்!
இந்தச் சுட்டியை அனுப்பிய ஈஷ்வருக்கு நன்றி🙏
No comments:
Post a Comment