Monday, February 26, 2024

அமேசிங் பிரிட்டன் -4 - எடின்புரஃஹ் - செயின்ட் ஆண்ட்ரூஸ் பயணக்குறிப்புகள்


எடின்புரஃஹ் - செயின்ட் ஆண்ட்ரூஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.

எடின்புரஃஹ் - செயின்ட் ஆண்ட்ரூஸ் பயணக்குறிப்புகள்

“யுனைடெட் கிங்டம்” என்றழைக்கப்படும் பிரிட்டனின் அழகே அதன் மாறுபட்ட நிலப்பரப்பு தான். அயர்லாந்தில் கடலும் பாறைகள் நிறைந்த மலைகளும் சிறிய வீடுகளும் மனதையும் கண்களையும் நிறைத்தால் ஸ்காட்லாந்தில் பசுமை போர்த்திய மலைகளும் வெண்நுரையுடன் கடற்கரைகளும் ஏகாந்தமாக இருக்கிறது. எடின்புரஃஹ் நகரிலிருந்து ஒரு மணிநேரத் தொலைவில் ‘St.Abb’s Head’ என்னும் கடற்கரையோர கிராமத்திற்குச் சென்று வருமாறு நாங்கள் தங்கியிருந்த விடுதியின் காப்பாளர் ஏற்கெனவே கூறியிருந்தார். பெரும்பாலும் பயண நிறுவனங்கள் நாட்டின்/நகரின் முக்கிய இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்வார்கள். நமக்குப் பிடித்த இடங்களுக்கு அல்லது நாட்டின் அரிய அழகுப்பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் நாமே வண்டியை ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. ஒட்டிக்கொண்டுச்செல்வது அதைவிட நல்லது.அதனால் இந்த இடத்தைத் தவறவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

கருமேகங்கள் வான் உலா வர, சிறிது தூறலும் சேர்ந்து கொண்டது. சாலையோரங்களில் இதுவரையில் கண்டிராத அடர்ந்த மஞ்சள் நிறப்பூக்கள் ஆவாரம் பூக்களை நினைவுறுத்தியது. மழைக்காலத்தின் அழகைச் சுமந்து நின்ற மலைகளும் தொடர, காலையிலிருந்து மதியம் வரை பிரின்சஸ் தெருவில் நடந்த களைப்பே தெரியாத அளவிற்குப் போக்குவரத்து நெரிசல் இல்லாத ‘குளுகுளு’ சாலைப் பயணம். கடற்கரையோரத்தை நெருங்கும் பொழுது ‘டண்பர்’ நகரம் தென்பட்டது. காசா? பணமா? உள்ளே சென்று பார்க்கலாம் என்று வண்டியை ஒட்டிக் கொண்டு அமைதியான தெருக்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தோம். புதிதாக கட்டப்பட்ட அழகான பெரிய வீடுகள். பழமையைப் பறைசாற்றும் பழைய கல் வீடுகள் என்று ரம்மியமாக இருந்தது. அங்கிருந்தவர்களிடம் கடற்கரைக்குச் செல்லும் வழியைக் கேட்டுக் கொண்டு வந்தால் ஒரு தெருவில் நுழைந்தவுடன் சில அடிகளில் கடல் தெரிந்தது!

ஓரிருவர் நடைப்பயணம் சென்று கொண்டிருந்தார்கள். ஸ்காட்டிஷ் எல்லையில் இருக்கும் அழகிய நகரம் இது. கடற்கரையோர வீடுகள் எல்லாம் அமெரிக்க கடற்கரையோர வீடுகளைப் போல பிரம்மாண்டமாக இல்லாமல் எளிமையாக அதே நேரத்தில் ஒருவித அழகுடன் இருந்தது. ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கண்டால் யாருக்குத் தான் பிடிக்காது? ஓடிச்சென்று காலை நனைத்து நுரை பொங்க ஓடிவரும் அலைகளோடு விளையாட ஆசை இருந்தாலும் ‘சில்ல்ல்’லென்றிருந்த தண்ணீர் தொலைவிலேயே நிறுத்தி விட்டது😒 கடற்கரைக்கென்றே ஒரு வாசம் உண்டு. முகர்ந்தும் முகராமலும் கொண்டே கரையோரம் ஒதுங்கியிருந்த கடற்பாசி, ஓடுகளைத் தாண்டி சிறிது தூரம் மணலில் நடந்தோம். இளம்பெண்கள் இருவர் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தவர்களைச் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் மட்டுமே அப்பொழுது அங்கு இருந்தோம். பொங்கி எழும் அலைகளின் ஓசையைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. கடல் மேல் அலையாடிக் கொண்டிருந்த பறவைகள் அழகு😍

கரையின் மீதிருந்த வழிகாட்டியில் ‘ஜான் முய்ர் லிங்க்’ என்று எழுதப்பட்டிருந்தது. ஸ்காட்டிஷ் அமெரிக்கரான ‘ஜான் முய்ர்’ டண்பர் நகரில் பிறந்தவர். இயற்கை ஆர்வலர். காடுகளை, மலைகளைக் காத்திட போராடியவர். பல புத்தகங்களை எழுதியவர். பிரபலமானவர். அவருடைய பெயரில் கலிஃபோர்னியாவில் பெரிய பூங்காவே இருக்கிறது. அவருடைய பிறந்த நாடான இங்கும் அவரைக் கொண்டாடும் விதமாக நாட்டின் இயற்கைப்பகுதிகளைக் கண்டுகளிக்கும் விதத்தில் ‘ஜான் முய்ர் லிங்க்’ ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அதன் வழியே பயணித்தால் நாட்டின் அனைத்துச் சிறப்புமிக்க இயற்கைவளங்களையும் பூங்காக்களையும் கண்டுகளிக்கலாம். அதற்குப் பல மாதங்கள் தங்கி இருக்க வேண்டும் அல்லது உள்ளூர் ஆட்களாக இருக்க வேண்டும். இப்போதைக்கு இது போதும் என்று அங்கிருந்து நகர மனமில்லாமல்

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
கடல் மட்டுமா அழகு நுரைபொங்கும் அலை கூட அழகு
கரை மட்டுமா அழகு கரையோரவீடுகளும் அழகு…. பாடிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தோம்.

திட்டமிடாத பாதைகளில் செல்லும் பொழுது நாம் காணும் மனதிற்கினிய காட்சிகள் தான் பயணங்களைச் சுவாரசியமாக்குகிறது. நல்லவேளை! இந்த ‘Dunbar’ நகரைத் தவற விடவில்லை என்று நினைத்துக் கொண்டோம்.இன்னும் எத்தனை இடங்களில் நிறுத்தப்போகிறோம் என்று தெரியவில்லை. வழியெங்கும் அழகான காட்சிகள் கவர்ந்து கொண்டே இருந்தது. ஒரு வண்டி மட்டுமே செல்லக்கூடிய மலைப்பாதையில் நடந்து செல்லும் மனிதரைக் கண்டு அதிசயித்தோம்😀 மரங்களற்ற பகுதியில் கற்சுவர்கள் சூழ வீடுகள் கொள்ளை அழகு! தூரத்திலிருந்தே கடல் தெரிய, மலையின் உச்சிக்குச் சென்று கொண்டிருந்தோம்.

இப்பொழுது மக்கள் நடமாட்டம் சிறிது அதிகமானது போல் இருந்தது. கையில் surfing boardஐச் சுமந்து கொண்டு நீச்சல் உடையில் மக்களைப் பார்த்தவுடன் தெரிந்து விட்டது. எங்களுடைய அடுத்த மண்டகப்படி இங்கே தான் என்று. பலரும் வண்டியை நிறுத்தி அங்கேயே உடைமாற்றிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ‘Pease Bay Leisure Park’ அறிவிப்புப்பலகையைக் கடந்து கார் நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தினோம். நாங்கள் இருவர் மட்டும் தான் வெளிநாட்டினர். அங்கிருந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ளூர் ஆட்கள் தான். கடல் அலையில் சறுக்கி விளையாடுவது இவர்களின் பொழுதுபோக்கு போல😲 கடலில் கால் வைக்கவே எனக்கு நடுக்கமாக இருந்தது. காட்டான்கள்! வாளியில் தண்ணீர் பிடித்து வெயிலானாலும் சுடு தண்ணீரில் குளித்த பரம்பரை😄😇 இந்த விளையாட்டெல்லாம் எனக்கில்லை எனக்கில்லை😂 ஆனால் வேடிக்கைப் பார்க்கப் பிடிக்கும். நகரத்திலிருந்து ஒதுக்குப்புறமான இடத்தில் இருப்பதும் வார இறுதி என்பதாலும் நல்ல கூட்டம். பிரபலமான இடம் போலிருக்கிறது!

அங்கே விடுமுறையில் தங்கிச் செல்ல ‘மொபைல் ஹோம்ஸ்’ என்றழைக்கப்படும் அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக வீடுகளை விற்றுக்கொண்டிருந்தது நிறுவனம் ஒன்று. அந்த வீடு ஒன்றை வாங்கி கரையோரம் அதற்கென இருக்கும் இடத்தில் வைத்துவிட்டால் விடுமுறையை இன்பமாக கழி(ளி)க்கலாம் . கிட்டத்தட்ட நகரத்தில் வாழ்வதைப் போல தங்குபவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் கூட இருந்தது! விலை அதிகம் தான்! இதற்குப் பதிலாக அவ்வப்பொழுது அங்கிருக்கும் வாடகை வீடுகளில் தங்கிக்கொள்ளலாம். விவரமானவர்கள், வசதியானவர்கள் இந்த வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டுச் சம்பாதித்துக் கொள்ளலாம். காசிருந்தால் சொகுசு வாழ்க்கை வாழ முடியும். எங்கும்ம்ம்ம்ம்ம்….

யோசித்துக் கொண்டே கடந்து வந்தால் கடற்கரையில் நின்று கொண்டிருந்தோம். கருமேகங்கள் எங்கே மறைந்தனவோ? நீல நிற வானம். அதன் பிரதிபலிப்பில் கடல் கொள்ளை அழகு. டண்பரை விட இங்கே அலைகள் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. இதை விட என்ன வேண்டும் அலையில் சறுக்கி விளையாடுபவர்களுக்கு? ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அலையின் போக்கில் வளைந்து வளைந்து லாவகமாக விளையாடுவதைப் பார்த்தால் பயமும் வருகிறது! ஆனால் பயமின்றி சிறு குழந்தைகளும் டால்ஃபின்களைப் போல அலையாடிக் கொண்டிருந்தார்கள். கடலை ஒட்டியிருந்த மலைமுகடுகள் அயர்லாந்தின் ‘Cliffs of Moher’ஐப் போல இருந்தது. ஐம்பூதங்களும் ஆட்சி செய்து கொண்டிருந்த அழகு நேரம் அது! அலையாடுபவர்களையும் மலைகளையும் அலைகளையும் பார்த்துக்கொண்டு சிறிது தூரம் நடந்தோம். மலை மேலே நடந்து செல்லும் பாதை ஒன்றும் இருந்தது. எங்கே ‘ஹைக்கிங்’ போகலாமா என்று கேட்டு விடுவாரோ என்று பயம். நல்ல வேளை! ஈஷ்வர் அப்படியேதும் கேட்கவில்லை. அங்கிருந்து செல்ல மனமில்லாமலே நகர வேண்டியிருந்தது.

எங்களின் மலைப்பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் மூடுபனி பவனி வர, காட்சிகள் மறைந்து காற்றாடிகள் மங்கலாகத் தெரிய, ஒருவழிப்பாதை நீண்டு வளைந்து வளைந்து சென்று கொண்டே இருந்தது. வழியில் பெரிய காய்கறித் தோட்டங்கள். பண்ணைகளில் மாடுகளும் ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்ததை நின்று வேடிக்கைப் பார்த்தால், “யாரடா இந்த மனிதர்கள்?” என்று எங்களை வேடிக்கைப் பார்க்க ‘செண்பகமே செண்பகமே’ கூட்டம் சாலையை நோக்கி நகர்ந்து வந்தது. அத்தனையும் ‘கொழுகொழு’ மாடுகள்! இயற்கையாக விளைந்த புற்களை உண்டு வாழும் கால்நடைகளின் திரட்சியில் தெரிந்தது ஆரோக்கியம் !

ஒருவழியாக நாங்கள் பார்க்க வந்திருந்த ஊரை வந்தடைந்தோம். அமைதியான மீனவ கிராமம் அது! வீடுகள் எல்லாம் கொள்ளை அழகு! மீனவர்கள் என்றாலே ஏழ்மையும் குடிசை வீடுகளும் தான் நமக்குத் தெரியும். நகரத்தில் இருக்கும் சகல வசதிகளுடன் இங்கும் வீடுகள் இருக்கிறது!

குப்பைகள் எதுவுமில்லாத தெருக்களில் வரிசையாக வீடுகள். விடுமுறை நாள். மாலை நேரம் வேறு என்பதால் கடைகள் மூடியிருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு சிறிது தூரம் நடந்து கீழே இறங்கினால் மீன்பிடி படகுகளுடன் கடல். நண்டு, லாப்ஸ்டர் நிறைய கிடைக்கும் போல. அதைப்பிடிக்கும் கூடைகளைச் சங்கிலிகளில் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். நடுநடுவே கரடுமுரடான பாறைகள். சீரும் அலைகளுடன் ‘St.Abb’s Head’ மனதைக் கொள்ளை கொண்டது. கடற்பறவைகள் ஆனந்தமாக உலாத்திக்கொண்டிருந்தது. ‘க்ளிக்’. ‘க்ளிக்’. உள்ளூர்க்காரர் ஒருவர் அவருடைய வேனில் தங்கி அங்கேயே கேம்ப் போட்டு தனிமையை அனுபவித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார் ஒருவர்😊

பனியில் கடற்பாறைகள் மங்கலாகத் தெரிய, அக்கம் பக்கம் யாருமில்லாத பூலோகம் ஏகமாக இருந்தது😍 கரையைத் தொட்டுத்தொட்டுச் செல்லும் அலைகள் பாடும் ராகம் மட்டுமே ஆக்கிரமித்திருந்த அந்த இடத்தை வளைத்து வளைத்துப் படங்களையும் வீடியோக்களையும் எடுத்துக் கொண்டோம். ‘அவென்ஜர்ஸ் எண்ட்கேம்’ படத்தில் இந்த இடம் வருகிறது. (https://www.youtube.com/watch?v=Pl9lW_oxQHo)

கோடைக்காலத்தில் பூக்களும் பறவைகளும் வண்ணத்துப்பூச்சிகளும் நிறைந்து இருக்கும் என்று அறிந்து கொண்டோம். மலையேற்றம், கடல் விளையாட்டு, இயற்கை ஆர்வலர்களுக்கு நல்ல இடம். அமைதியான நேரத்தில் அங்குச் சென்றதும் கூட நல்லது தான்.

அங்கிருந்து திரும்பிச்செல்லும் பாதை வேறு வழியில் செல்கிறது. இரு வண்டிகள் எங்களைக் கடந்து சென்ற பிறகு நாங்கள் இருவர் மட்டுமே அந்தச் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தோம். வண்டியை நிறுத்தி விட்டு சிறிது தூரம் நடந்து செல்ல, மழைக்காற்று செல்லமாக வருடியது. ‘பச்சைப்பசேல்’ மலை மீதிருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கடல் தான். மாலைச்சூரியன் மேகச்சீலைக்குள் ஒளிந்து கொண்டிருந்தான். வெகு தூரத்தில் தனியே இருந்த வீடு அந்தச் சூழலுக்கு மேலும் அழகைச் சேர்த்துக் கொண்டிருந்தது. வார்த்தைகளால் விவரிக்க இயலாத இயற்கை அழகு அங்கே குடி கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. அங்கு வாழ்பவர்கள் பாக்கியசாலிகள்!

மழைத்தூறல் ஆரம்பிக்க, மலையை விட்டு கீழிறங்கி எடின்புரஃஹ் திரும்பினோம். குட்டையான சுற்றுச்சுவர்களுடன் வழியில் தெரிந்த வீடுகள் டப்ளின் நகரை நினைவூட்டியது. வரும் பொழுதே இரவு உணவை கடையில் வாங்கிக்கொண்டோம்.அருகில் குட்டியாக ஒரு காஸ் ஸ்டேஷன். வண்டி உபயோகிப்பவர்கள் குறைவோ? பேருந்துகளில் பயணிப்பவர்கள் அதிகம் இருக்கலாம். அமெரிக்கா வந்தால் இந்நாட்டு மக்களுக்கு மயக்கமே வந்து விடும்😂

விடுதிக்குத் திரும்பி அடுத்த நாள் செல்லவிருக்கும் ஊரைப் பற்றின தகவல்களையும் பார்க்க வேண்டிய இடங்களையும் குறித்துக் கொண்டோம். மழையில்லாத நாட்கள் அபூர்வம் தான் போலிருக்கு! எப்படி இருந்தாலும் திட்டமிட்டபடி செல்வது என்று தீர்மானித்து ஆனந்தமாக உறங்கி விட்டோம். மறுநாள் காலையில் சுவையான காலை உணவை விடுதியில் உண்டு ‘St.Andrews’ நோக்கிய பயணத்தைத் துவங்கினோம். பை, பை எடின்புரஃஹ்💖

பெட்ரோல் போடலாம் என்று வண்டியை நிறுத்தி விலையைப் பார்த்தால்…அய்யோடா! எப்படித்தான் இங்கே வாழ்கிறார்களோ😟அமெரிக்காவில் தான் விலை குறைவு போலிருக்கு! நான் யோசித்துக் கொண்டிருக்க, ஈஷ்வர் என்ன செய்தும் பெட்ரோல் போட முடியாமல் அருகிலிருப்பவர் மட்டும் எப்படிப் போட முடிந்தது என்று பார்த்துக் கொண்டிருந்தார். அவர் திண்டாடுவதைப் பார்த்து அருகில் இருந்தவர் வண்டியைக் கடையை நோக்கி நிறுத்தினால் மட்டுமே பெட்ரோல் போட முடியும் என்று விளக்கிய பின்னர் தான் எங்களுக்குப் புரிந்தது. என்னவோ போடா மாதவா! இப்படியெல்லாம் கூட இருப்பார்களா? என்ன மாதிரியான லாஜிக் என்று தெரியவில்லை. ஆனால், அந்த மனிதர் பேசியதைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும் நன்றாக இருந்தது. ஸ்காட்டிஷ் மக்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்💕ஒருவித ராகத்துடன் பேசுகிறார்கள்.

மழைத்தூறல் ஆரம்பித்து விட்டது. குறுகிய சாலையில் மழையும் துணைக்கு வர இனிதே தொடர்ந்தது எங்கள் பயணம். எங்கும் நிறுத்தாமல் சென்றால் ஒண்ணேகால் மணிநேரத்தில் St.Andrewsஐச் சென்றடைந்து விடலாம். நொறுக்குத்தீனிகள் நிறைய வாங்கிக்கொண்டோம்😋😋😋

வழியெங்கும் இயற்கை தாலாட்டுகிறது. கடலோரத்தில் அமைந்துள்ள மிக அழகான ஊர் இது. மழை நிற்பதும் தொடருவதுமாய் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் என்று தான் அங்கு சென்றோம். பிறகு தான் தெரிந்தது அது கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நிறைந்த ஊர் என்று. முதலில் நாங்கள் சென்ற இடம் St.Andrews Cathedral. திங்கட்கிழமை ஆதலால் வண்டியை நிறுத்த இடத்தைத் தேடி அலைய வேண்டியிருந்தது. சுற்றிச்சுற்றி வந்து எப்படியோ தேவாலயத்திற்கு அருகிலேயே இடம் கிடைத்து விட்டது. தெருக்களில் வண்டியை நிறுத்த கப்பம் கட்ட வேண்டும்! அமெரிக்காவிலும் இதே கதை தான்.

மழையும் நின்று விட்டிருந்தது. St.Andrews Cathedral, ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய மிடீவல் காலத்து தேவாலயம். உள்ளே சென்று பார்க்க 7.50பவுண்ட்ஸ் என்று தகவல் பலகையில் போட்டிருந்தார்கள்😧 உள்ளே சென்றால் கல்லறை இருந்தது. என்ன கொடுமைடா மாதவா! ஏமாற்றமாகி விட்டது எனக்கு😞 அயர்லாந்திலும் ஊருக்கு வெளியே அநேக தேவாலயங்கள் சிதைந்த நிலையில் கல்லறைகளாக மாறிவிட்டிருந்தது நினைவிற்கு வந்தது.

1158ல் கட்டப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் அங்கே இருந்ததற்கான அறிகுறியாக உயர்ந்த கோபுரங்கள், நுழைவாயில், சுற்றுச்சுவர்கள் உடைந்த நிலையில் பார்க்கவே பரிதாபமாக. முடிந்தவரையில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். யார் கீழே படுத்திருக்கிறார்களோ என்று உள்ளே நடந்து செல்லவே பயமாகத் தான் இருந்தது. மயான அமைதி தான்! அங்கிருந்து ‘St.Andrews Castle’க்கு நடந்தே சென்று விடலாம். ஃபய்ஃப் (Fife) என்ற ஊரில் அமைந்திருக்கும் 450 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட கோட்டை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. பிஷப்பின் தங்குமிடமாக, அரண்மனையாக, சிறைச்சாலையாக ஒவ்வொரு காலகட்டத்தில் இருந்துள்ளது. கடற்கரையோரம் அமைந்துள்ள அழகிய கோட்டையின் உள்ளே கோட்டை முற்றுகையிடப்பட்டதை, மிடீவல் போர்க்காலங்களில் நடந்த கொலை, சூழ்ச்சிகளை மிக அழகாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இதன் கீழே ஒரு சுரங்கமும் இருக்கிறது.

உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் முறையான தகவல்களை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறையினருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதில் மேற்கத்தியர்களை அடித்துக் கொள்ளவே முடியாது. இந்தியர்கள் நாம் மறந்துவிட்ட மிக முக்கியமான வரலாற்றுப்பிழை. அதனால் தான் பொய்களைச் சொல்லி நம்மை எளிதில் ஏமாற்றி வரலாறு என்று உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் படிக்க வைக்கிறார்கள். இனியாவது நாம் விழித்துக் கொள்வோமோ? இப்படித்தான் எதையாவது ஒன்றைப் பார்த்தால் நம் நாட்டில் கூடச் செய்திருக்கலாமே என்று தோன்றும்.

பேசிக்கொண்டே வண்டியை எடுத்துக் கொண்டு நகரின் மையத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களைக் காணச் சென்றோம். மீண்டும் வண்டியை நிறுத்த இடம் தேடி அலைந்து தொலைவில் நிறுத்தி விட்டு நடந்து வருகையில் குறுகிய தெருக்களையும் பிரமிக்க வைக்கும் வகையில் பழமையைச் சுமந்து நிற்கும் கட்டடங்களையும் காண அதிசயமாக இருந்தது. புராதன நகரம். இங்குள்ள பல்கலையில் தான் இங்கிலாந்தின் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட் மிடில்டனும் சந்தித்துக் கொண்டார்களாம். ‘தி கிரௌன்’ நெட்ஃப்ளிக்ஸ் தொடரில் காண்பித்தார்கள். அட! நாம் சென்று வந்த ஊராச்சே என்று மகிழ்ச்சியாக இருந்தது.

மாணவர்கள் இருக்கும் இடம் என்றால் இளமை ஊஞ்சலாடத்தானே செய்யும்😄 கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பட்டாளம் எங்கும். அதுவும் நம்மவர்கள் நிறைய கண்களில் பட்டார்கள்! 2022ல் ‘ஸ்காட்டிஷ் கறி அவார்ட்’ வாங்கிய ‘மரிஷா’ இந்திய உணவகம்! சப்வேயில் சிக்கன் டிக்கா கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இங்கும் இதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் ஏராளமான கோட்டைகளும் தேவாலயங்களும் இருக்கிறது. அங்கே ‘அவுட்லாண்டெர்’ தொலைக்காட்சித் தொடரை எடுத்திருக்கிறார்கள். நாங்கள் பார்த்து ரசித்த இடங்களைத் திரையில் நிச்சயமாக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதற்காகவே பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்துள்ளேன். ‘கால்ஃப்’ விளையாட்டு இங்கு தான் துவங்கியிருக்கிறது. அதன் தொடர்பான அருங்காட்சியகங்களும் இருக்கிறது. இந்த விளையாட்டை விளையாடுபவர்களுக்குப் பிடிக்கலாம். எங்கு பார்த்தாலும் மனத்தைக் கவரும் காட்சிகள் ஏராளம் இங்கு கொட்டிக்கிடக்கிறது. பயணிகள் பலரும் வந்து செல்லும் பிரபலமான ஊராக இருப்பதில் வியப்பேதுமில்லை.

இங்கிருந்து மூன்றரை மணி நேரத்தில் ‘இன்வெர்னஸ்'(Inverness) என்ற ஊருக்குப் பயணம். வழியில் பல இடங்களில் நிறுத்திச் சென்றாலும் கூட இரவு 9 மணிக்குள் சேர்ந்து விடலாம். இருட்டுவதற்குள் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவுடன் கிளம்ப , மழையும் சேர்ந்து கொண்டது.

இந்தப் பயணத்தில் ஒன்று மட்டும் நன்கு புரிந்தது. ஸ்காட்லாந்தைச் சுற்றிப் பார்க்க நாமே வண்டியை ஒட்டிச் செல்வதே நல்லது. சிறிய நாடாக இருந்தாலும், ஸ்காட்லாந்தின் ஒவ்வொரு மூலைக்குப் பின்னாலும் ஆச்சரியங்களும் வசீகரங்களும் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு இடமும் தந்த இனிய அனுபவத்துடன் ‘இன்வெர்னஸ்’ நோக்கிய பயணம் தொடர்ந்தது.

Wednesday, February 21, 2024

நல்ல மனம் வாழ்க!

சுவாரசியங்களுக்குக் குறைவில்லாதது மதுரை. காலையில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி வலம் வருகையில் மேலச்சித்திரை வீதியில் 'துறுதுறு'வென்று ஒருவர் காலை உணவை விற்றுக் கொண்டிருந்தார். அவரைப் பற்றி ஏற்கெனவே யூடியூபில் பார்த்திருக்கிறேன். நான்கைந்து எவர்சில்வர் தூக்குவாளிச் சட்டிகளில் இட்லி, வெண்பொங்கல், வடை, சட்னி, சாம்பாரை சைக்கிளில் எடுத்துக் கொண்டு வருகிறார். சமயங்களில் தக்காளி சாதம், புளியோதரையும் கிடைக்கிறது. விலையும் மிகக்குறைவு. மூடியிருக்கும் கடை வாசலில் அவற்றை இறக்கி வைத்து விட்டு நிமிருவதற்குள் வாடிக்கையாளர்கள் வந்து விடுகிறார்கள்.

தட்டின் மேல் இலையை வைத்து மக்கள் கேட்பதைப் பரிமாறுகிறார். அவரே அதிகாலையில் எழுந்து அனைத்தையும் சமைப்பதாகக் கூறினார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தன்னைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இந்தத் தொழிலை லாபநோக்கில் செய்யாமல் மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறியதைக் கேட்டதும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மிகவும் எளிமையாகவும் தன்னடக்கத்துடனும் இருந்தார். அவரைப் பற்றின காணொளிகளைப் பலரும் பகிர்ந்து வருவதைக் கூறியதும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டார். தான் கொண்டு வந்ததை ஒரு மணிநேரத்தில் விற்றுவிட்டு வீடு திரும்புகிறார்.

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார் அனைத்தும் சுவையாக இருந்ததாக என் கணவரும் கூறினார்.

காசுக்காக அலைபவர்களின் மத்தியில் இத்தகைய மனிதர்கள் தான் சிறுதுளி நம்பிக்கையை விதைக்கிறார்கள். மனிதம் பிழைத்துக் கிடப்பதும் இவர்களைப் போன்றவர்களால் தான். 

என் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதும் மனம் நிறைந்த சேவையைச் செய்பவரைக் கண்ட திருப்தியில் 'ஜனார்தனன் dhaa' வுடன் ஈஷ்வரையும் சேர்த்து ஒரு 'க்ளிக்'. கிடைப்பதில் திருப்தி கொண்டு வாழும் மனம் படைத்தவர்கள் வெகு சிலரே. அதோடு அடுத்தவர் நலன் கருதி இந்த வயதிலும் உழைத்துச் சாப்பிடும் இவர் போன்ற மனிதர்கள் வெகு அரிது!


வாழ்க வளமுடன்!







Monday, February 19, 2024

உணவு நகரம் - நீயா நானா?


முடிவு எப்படியும் நம்ம "மதுரை" தான் என்றாலும் பங்கெடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை. அதற்காகவே "உணவு நகரம்" பற்றின நீயா நானா நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்தேன். மதுரை சார்பில் பேசியவர் நன்றாகப் பேசினார். சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, விருதுநகர் என்று பலரும் தங்கள் நகரங்களின் உணவுகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசினர்.

ஆனால், உணவு நகரம் என்பதற்கு உணவுகள் மட்டுமே பிரதான தகுதி அல்ல என்பது என்னுடைய கருத்து. உணவுடன் கூடிய கலாச்சாரம் தான் உணவு நகரத்திற்கான சிறப்பைப் பெறுகிறது. அந்த வகையில் மதுரையை விட்டால் வேறு எந்த நகரம் அதற்கான தகுதியைக் கொண்டுள்ளது?

காலையில் விடிந்ததும் கடையில் விற்கும் காபியைக் குடித்து வழியில் அரிசி, கோதுமை, கேப்பை பிட்டு வாங்கிச் சாப்பிட ஒரு கூட்டம் என்றுமே இருக்கிறது. நடந்து உடலை ட்ரிம்மாக வைத்திருக்க நினைப்பவர்களுக்கு முளை விட்ட தானியங்கள், சூப்புகள். நடந்து முடிந்ததும் காபி, வடையை லபக்குபவர்கள் என்றுமே மதுரையில் அதிகம். உணவகங்களில் தோசை, பூரி, வடை என்று காலை உணவை நண்பர்களுடன் உண்டு களித்து மகிழும் கூட்டம் என்று மதுரையில் இன்று வரை வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள் இருந்து கொண்டிருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இதைத்தவிர, திகர்தண்டா, குருத்து, பருத்திப்பால் கடைகளும் உள்ளது. காலை இடைவேளை உணவாக வகைவகையான வடைகள் தள்ளுவண்டிகளில் குறைந்த விலையில் கிடைக்கிறது. சுவையாகவும் இருக்கிறது. சிலர், மாவையும் விற்கிறார்கள். வீட்டில் நாமே சுத்தமான எண்ணையில் பொறித்துக் கொள்ளலாம். ஆமவடை, உளுந்துவடை, தவளவடை, சீயம், வாழைப்பூ வடை, கார வடை என்று தினுசுதினுசாக கிடைக்கிறது.

மதிய உணவிற்கு கவலையே வேண்டாம். வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும் வசதிகள் இருக்கிறது. கொரோனா காலத்தில் துவங்கிய பழக்கம் இன்று வயதானவர்கள் மிகுந்துள்ள மதுரையில் பலருக்கும் அத்தியாவசியமானதாக மாறியுள்ளது. வீட்டில் சமைக்கும் அளவிற்கு இல்லாவிட்டாலும் சுவையும் நன்றாக இருக்கிறது. மகாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த வசதிகள் நிறைய இருக்கிறது. மகால் 6வது தெருவில் மதிய உணவை விற்கும் ராம்குமார் என்பவரிடம் நாங்கள் வாங்கிச் சாப்பிடுகிறோம். நன்றாக இருக்கிறது. ஒரு கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், மோர், சோறு என்று ஒருவர் நன்றாகச் சாப்பிட 110 ரூபாயில் வேலை முடிந்து விடுகிறது. உணவைக் கொண்டு வந்து கொடுப்பவருக்கு 20ரூபாய் கொடுத்தால் சமைக்காமலே மதிய உணவு கிடைக்கிறது. தேவைப்படும் பொழுது ஒரு அவசரத்திற்கு இத்தகைய உதவிகள் வேண்டியிருக்கிறது. தினமும் சாப்பிடுபவர்களும் உண்டு.

மதிய நேரத்தில் இளநீர் விற்பவர்களும் வாசலுக்கே வந்து விற்றுச் செல்கிறார்கள். அவர் வரும் நேரம் வாசலில் காத்திருந்து வாங்கிக் கொள்கிறார்கள் சுகவாசிகள்!

மாலை நேரம் சுடச்சுடக் கீரை வடை, தேங்காய் அடை, சொஜ்ஜியப்பம் தள்ளுவண்டிகளில் கிடைக்கிறது. வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடும் கூட்டம் எப்பொழுதும். இதைத்தவிர பஜ்ஜி, வடை என்று காபி கடைகளில் கிடைக்கிறது. மாலை மங்கும் நேரத்தில் இரவு நேரக்கடைகள் உயிர் பெறுகின்றன. புளியோதரை, எலுமிச்சை சாதம், இட்லி, தோசை என்று சிற்றுண்டிகளில் இரவு 10 மணி வரை வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

உணவகங்களில் எப்பொழுதும் கூட்டம். சிறு கடைகளில் நிரந்தர வாடிக்கையாளர்கள். எப்பொழுதும் சுவையுடன் தரத்துடன் இருந்த 'மாடர்ன் ரெஸ்டாரெண்ட்' இப்பொழுது மாறியிருக்கிறது😔 ஆ னால் சபரீஷ், கௌரிகங்கா, டெம்பிள் சிட்டி உணவகங்கள் மக்களுக்கு விருப்பமான உணவகங்களாக மாறியிருக்கிறது.

இதைத்தவிர ஏராளமான பிரியாணி, பரோட்டா கடைகள் முளைத்திருக்கிறது! என்ன! குண்டு குண்டு பரோட்டாவின் சுவையும் அளவும் வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. அல்லது எங்களுக்கு மட்டும் பிடிக்கவில்லையோ? சில கடைகளில் அதிக மசாலா இல்லாத பிரியாணியின் சுவை நன்கு உள்ளது.

இரவிற்கென்றே பட்டர் பன்னும் திரட்டுப்பாலும். இப்படி நேரத்திற்குத் தகுந்தாற் போல கிடைக்கும் உணவுகள் ஏராளம்.

இதைத்தவிர சந்தைகளில் அந்தந்தப் பருவங்களில் கிடைக்கும் பனங்கிழங்கு, நுங்கு, மாம்பழம், நெல்லிக்காய், சீத்தாப்பழம், அல்வா, மிக்சர், பட்டர் சேவு, முறுக்கு வகையறாக்கள் என்று நீளும் பட்டியல். வருடம் முழுவதும் சாப்பாட்டிற்குக் குறைவில்லாத நகரம் என்றால் அது மதுரை தான். இங்கிருக்கும் ஒவ்வொரு கடைக்கும் சென்று சாப்பிட வேண்டுமென்றால் இந்த ஜென்மம் போதாது. மதுரையைச் சுற்றின கழுதை எப்பொழுதும் இங்கேயே தான் சுற்றுமாம். அது போல, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்களின் மனமும் சுவையும் மதுரையை மட்டுமே சுவாசித்துக் கொண்டிருக்கும்.

கோவில் நகரம், திருவிழா நகரம் போல உணவு நகரம் என்பதும் மதுரைக்கே உரித்தானது.

சரி தானே ?
 













Tuesday, February 6, 2024

விவாகரத்தான பெண்கள் Vs பொதுமக்கள்


'நீயா நானா'வில் நடந்த "விவாகரத்தான பெண்கள் Vs பொதுமக்கள்" அத்தியாயத்தில் கூமுட்டைத்தனமாக ஒருவர் "இந்த மாதிரி பெண்கள் சமூகத்திற்கு நல்லதல்ல" என்று கூறினார். மணமுறிவால் பாதிக்கப்பட்ட பெண்களால் இளைய சமுதாயமும் கெட்டு விடும் என்று எப்படித்தான் பேச முடிகிறதோ? உண்மையிலேயே பாதிக்கப்பட்ட பெண்களின் துயரத்தை அறியாத மூடன். குற்றம் சொல்வதாக இருந்தால் அந்தப் பெண்களின் நிலைமைக்குக் காரணமான ஆண்களைத் தானே குற்றம் சொல்ல வேண்டும்? எடுத்தவுடன், "மணமுறிவால் பாதிக்கப்பட்ட பெண்கள் தனியாக வாழக் கற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. தவறான முன்மாதிரியாக இருக்கிறார்கள்" என்று பொதுவில் வந்து பேசுகிறார். அவரும் அவர் மனைவியும் 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டு செல்வது போல் ஏன் இந்தப் பெண்கள் அவர்கள் கணவர்களுடன் சமாதானம் செய்து கொண்டு செல்லவில்லை என்று கேட்கிறார்.

இப்படித்தான் பல ஆண்களும் பெண்களின் மீது குறைகளைக்கூறி ஆண் சமுதாயத்தைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள்.

கணவன், மனைவி உறவுக்குள் நடக்கும் சண்டைகள், மனவருத்தங்கள், கோபதாபங்கள் வெளியுலகத்திற்குத் தெரிய வரும்பொழுது மேற்சொன்ன நபர்களைப் போன்றவர்கள் உண்மையை உணராமல் கூறும் தவறான அறிவுரைகள் முடிவில் இருவரையும் வெகுவாகப் பாதிக்கிறது. திருமணம் செய்து கொண்ட பலரும் சேர்ந்து மகிழ்ச்சியாக குடும்பமாக வாழ் வேண்டும் என்று தான் வாழ்க்கையைத் துவங்குகிறார்கள். சில குடும்பங்களில் ஆணின் அதிகாரப்போக்கோ பெண்ணின் அலட்சியப்போக்கோ அல்லது அவர்களது குடும்பத்தார்களின் இடையீடோ அல்லது வேறு பல எதிர்பார்ப்புகளோ நிர்ப்பந்தங்களோ மணமுறிவிற்குக் காரணமாகி விடுகிறது.

எளிதில் பெண்களைக் குற்றம் சொல்பவர்கள் ஆண்களைச் சொல்வதில்லை. பிரச்சினை எங்கிருந்து துவங்கியது? எதனால் ஏற்பட்டது? சரி செய்யக்கூடிய விவகாரங்களா? இல்லையென்றால் பிரிவில் தான் பாதிக்கப்பட்டவருக்கு நிம்மதியா? என்று யோசித்துப் பார்ப்பதற்குள் பணம், உறவுகள், அந்தஸ்து என்று பிரிவினையை ஏற்படுத்துவதும் நடக்கிறது.

இந்த விவாதத்தில் பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் தங்களின் சுயசார்பில் குழந்தைகளை வளர்த்தாலும்பெற்றோர்களின் பிரிவால் பல மனவலிகளைச் சுமந்ததைக் கூறினார்கள். ஆம், மணமுறிவில் பாதிக்கப்படுவது ஒருவர் மட்டுமல்ல. அவர்களின் குழந்தைகளும் தான். அவர்கள் அனுபவிக்கும் துயரங்களும் ஏராளம். அன்புடன் அரவணைத்துச் செல்லும் குடும்பங்கள் அமைந்து விட்டால் நல்லது. இல்லையென்றால் நித்தம் நித்தம் துயரம். மனக்கசப்பு. கோபம். என்று எல்லா நிலைகளிலும் அவர்கள் வெளிப்படுத்துவார்கள். அமெரிக்காவில் பள்ளிகளில் இத்தகைய குழந்தைகளைக் கையாள, அறிவுரை கூற குழந்தை உளவியல் நிபுணர்கள் இருக்கிறார்கள். பெற்றோர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறார்கள்.

இந்தியாவில் இன்னும் அந்த அளவிற்குப் பள்ளிகளோ,அரசுகளோ குழந்தைகளின் மனநலன் மீது அக்கறை கொள்வதில்லை.

இந்த விவாதத்தில் பொதுமக்கள் சார்பில் பேசிய பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் வலியை உணராதவர்களாக பேசியது போல் தோன்றியது. நம் சமூகம்எப்படிப்பட்டது என்று புரிந்தும் தெரிந்தும் தெரியாதது போல் பேசினார்கள்.

மணமுறிவில் பாதிக்கப்படுவது பெண்கள் அதிகம் என்றாலும் ஒரு சில நல்ல ஆண்களும் அவர்களின் மனைவிகளால் அதிகம் மனஉளைச்சலுக்கு ஆள்கிறார்கள் என்பதையும் பாதிக்கப்பட்ட பெண்களைப் போலவே விவாகரத்தான ஆண்களின் தர்மசங்கடங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். வலி பொதுவானது. அதில்ஆண், பெண் பேதமில்லை.

சில பெண்கள் கூறியது போல, பிரச்சினையின்பொழுது உடனிருந்த குடும்பம் அந்தப் பெண்கள் தனியே வந்தவுடன் ஒரு கட்டத்தில் விலகிச் செல்ல, ஏன்டா திருமண பந்தத்தை விட்டு வெளியே வந்தோம் என்று தோன்றுவதும் நடந்து கொண்டு தானிருக்கிறது. மீண்டும் சேர வாய்ப்பு கிடைத்தால் சேர்ந்து விடுவேன் என்று கூறிய பெண்களுக்கு அன்றைய தேவை எல்லாம் சில காலம் பிரிந்திருந்து வாழ்ந்திருத்தல் மட்டுமே. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் மேலும் புரிந்து கொள்ள சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கும். தவறு யார் மீது என்று சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க வசதியாக இருந்திருக்கும். ஆனால், சுற்றியிருப்பவர்களின் தலையீட்டால் அநாவசியப் பிரச்சினைகள் வளர்ந்து ஒருவரை ஒருவர் வெறுக்கும் அளவிற்குச் சென்று பின் வருந்திக் கொண்டிருக்கும் நிலைமைக்கு ஆளாகிறார்கள்.

எதையும் ஆராயாமல் அறிவுரைகளை அள்ளித் தெளிப்பதை முதலில் மக்கள் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான கவுன்சிலிங் அளிக்க வேண்டும். அதுவும் பலனளிக்கவில்லையென்றால் தான் பிரிவைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பலருக்கும் பிரிவு ஒன்று தான் நிரந்தர தீர்வாக இருக்கும். குறிப்பாக, மனநோயாளிகளைத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு. இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் நரகம் தான்.

இன்று பெண்களும் படித்து பணியில் சேர்ந்து சுயமாகச் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் அளவிற்கு முன்னேறி விட்டதால் சைக்கோக்களின் சித்திரவதைகளுக்குப் பலியாகாமல் தப்பிக்க முடிகிறது.

என்ன ஒன்று? சமூகம் என்று சொல்லிக்கொண்டு திரியும் சில மக்கள் தான் இன்னும் வளராமல் கூமுட்டைத்தனமாகப் பேசிக்கொண்டு காயமுற்றவர்களை (ஆண்/பெண்) மேன்மேலும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல விவாதம்.

இனியாவது ஆணோ, பெண்ணோ விவாகரத்தாகியிருந்தால் அவர்களின் வலிகளை உணர்ந்து நடந்து கொள்ளும் மனிதர்களாக சமூகம் மாறட்டும். அவர்களுக்கு ஆதரவாக மனிதத்துடன் நடந்து கொள்ள முயற்சிப்போம்.



Monday, February 5, 2024

அமேசிங் பிரிட்டன் - 3 - எடின்புரஃஹ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 311ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் மூன்றாவது பாகம்.

அமேசிங் பிரிட்டன் - 3 - எடின்புரஃஹ் பயணக்குறிப்புகள்

மலையோடும் மழையோடும் நீண்டு கொண்டே சென்ற ‘ஹேட்ரியன்ஸ் வால்’ஐ நாங்களும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். அங்கிருந்து ஸ்காட்லாந்து செல்ல இரண்டரை மணிநேரம். நெடுஞ்சாலையை எதிர்பார்த்து இங்கிலிஷ் கிராமங்கள் வழியே செல்லும் வழியெங்கும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது! பரந்து விரிந்த பசும்புல் நிலப்பகுதிகளும், குறுகிய சாலைகளும், உயர்ந்த மரங்களும் கூடவே தொட்டுத்தொடரும் மழையும் இங்கிலாந்தின் புறநகர் பயணத்தை மேலும் மெருகூட்டுகிறது. இவையெல்லாம் அமெரிக்காவில் நாங்கள் வாழும் பகுதியில் கூட சாத்தியமென்றாலும் ஏதோ ஒரு தனித்துவமான அழகு அங்கு இருக்கிறது. புற்களின் இயற்கையான நிறமும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு வரும் கருமேகங்களும் அவ்வப்போது வந்து கொட்டி விட்டுச் செல்லும் மழையும் தூறலும் கூட காரணங்களாக இருக்கலாம்.

மலைப்பகுதியில் பயணித்துக் கொண்டு இருந்ததால் மூடுபனி வேறு சேர்ந்து கொண்டு அந்த இடத்தையே ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது. பனியில் தெரிந்தும் தெரியாமலும் இலைகளற்ற மரங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக ‘வாட்டர்கலர்’ ஓவியங்கள் போல இருக்க, மனதில் அழகாகத் தீட்டிக் கொண்டேன்😎 எல்லா இடங்களிலும் சிறிது நேரம் வண்டியை நிறுத்தி அமைதியான சூழலை அனுபவிக்கத் தோன்றும். நிறுத்துவதற்குத் தான் எங்கும் இடமில்லை. மனிதர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் இயற்கை தனித்து நின்று சொக்க வைக்கிறது. மனமும் மயங்குகிறது. நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றோம். எங்குச் செல்கிறோம்? செல்லும் வழி சரி தானா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூட அங்கு யாரும் இல்லை. ஜிபிஎஸ் தான் வழிகாட்டி. அதை மட்டுமே முழுமையாக நம்பி ஆளரவமற்ற சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தோம்.

மாலை நேரம். வானம் தெளிந்து அஸ்தமிக்கும் சூரியன் சிறிது நேரம் தலையை வெளியே நீட்டி விட்டு மறைந்து கொண்டிருந்தான். இப்பொழுது வீடுகள் நிறைந்த குடியிருப்புகள் வழியே சென்று கொண்டிருந்தோம். கலிஃபோர்னியாவின் ஃபால்சம் நகரின் புதிய குடியிருப்புப்பகுதிகளை நினைவூட்டியது. ஒவ்வொரு வீடும் கொள்ளை அழகு! மனித நடமாட்டமற்ற அமைதியான தெருக்கள். வீட்டு வாசலில் குட்டி டிரைவ் வே. அதில் சிறிய கார்கள் தான் நின்று கொண்டிருந்தது. அமெரிக்காவைப் போல டிரக்குகளும் ஜீப்களும் வேன்களும் பெரிய டிரைவ்வேக்களும் தென்படவில்லை!

சரியான பாதையில் தான் செல்கிறோமோ என்று ஈஷ்வருக்கு அடிக்கடி சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. ஆனாலும் ஜிபிஎஸ் சொல்வதை மட்டுமே நம்ப வேண்டிய நிலை. வேறு என்ன செய்வது? கடைகள் எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

சிறிது நேரத்தில் காற்றாலைகளுடன் மலைகள் தெரிய ஆரம்பித்தது. சரியான பாதையில் தான் செல்கிறோம் என்ற நம்பிக்கையும் பிறந்தது. மலையில் புற்களை நன்றாக வெட்டி ‘சம்மர் கட்டிங்’ போட்ட தலையைப் போல இருந்ததைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது😉 நெடுஞ்சாலை வழியாகச் செல்லாமல் புறநகர்ப்பாதைகள் வழியே சென்றதால் பண்ணைகள் பல கடந்து சென்றோம். அமெரிக்காவில் பண்ணைகள் என்றாலே தூரத்திலிருந்து தெரிந்து விடும். சிகப்பு வண்ணம் அடித்த பண்ணை வீடுகள், உள்ளே பால் பதப்படுத்தும் நிலையங்கள், கால்நடைகளுக்குத் தேவையான தீனிகளை வைக்க பெரிய உயர்ந்த சேமிப்புக்கிடங்குகள், விதவிதமான இயந்திரங்கள் என்று பண்ணைகளுக்கென்றே சில அடையாளங்கள் இருக்கும். இங்கோ, செம்மறியாடுகள், ஆங்கிலப் புத்தகங்களில் இருக்கும் அழகான வீட்டுப் படங்களைப் போன்ற வீடுகள், பரந்த புல்வெளிகள் என்று குறுகிய சாலைகளில் அமைந்திருந்த நிலப்பரப்பும் மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறது. சாலைகளில் பெரிய மரங்கள் இங்கு குறைவு தான். மேற்கில் கதிரவன் நித்திரை கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். மரங்கள் அடர்ந்த மலைக்குன்றுகள் வலம் வர, ஸ்காட்லாந்து எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தோம். மேகங்களைத் தழுவும் பனிமூட்டத்தில் சிக்கிக் கொண்டிருந்தான் அஸ்தமனத்துச் சூரியன்.


அழகான சாலைகளின் ஓரம் மஞ்சள் Daffodil பூக்கள் வசீகரிக்க, இலைகளுடன் மரங்கள் இருந்திருந்தால் அந்த இடமே சொர்க்கபுரி தான்! கதிரவன் மறைய, போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது வானம். அதிசயமாக ஓரிரு வண்டிகள் கடந்து சென்றது. மலைகளில் பனி இறங்கி மரங்களை அணைத்து நின்றது அழகு! குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து விட்டோம். மணி இரவு 8.30. இதோ நெருங்கி விட்டோம் ‘எடின்பர்க்’ என்று நான் நினைத்திருந்த ‘எடின்புரஃஹ்’ நகரத்தை!

அமெரிக்காவில் இருக்கும் வீடுகளை ஒப்பிடுகையில் சிறிய வீடுகள் தான்! வீடுகளின் முன் இருக்கும் புல்தரைகளும் சிறிய அளவில் தான் இருந்தது. எளிதாகப் பராமரிக்க முடியும். ஒரு குடும்பம் தங்கி இருக்க இந்த வீடுகளே போதுமானது. ஆனால், அமெரிக்காவில் எல்லாமே மெகா சைஸில் தான்😐

பெரிய சாலையில் வரிசையாகப் பெரிய வீடுகள். அதில் ஒன்றை தங்கும் விடுதியாக மாற்றிப் பராமரித்து வருகிறார்கள் ஒரு சைனீஸ் தம்பதியினர். அங்கு தான் நாங்கள் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தோம். நான்கு வாகனங்கள் இடித்துப் பிடித்துக் கொண்டு நிற்க முடியும் அளவிற்கு கார் பார்க்கிங் ஏரியா. வீட்டின் உள்ளே சென்றால் சிறிய அலுவலக அறை. நாங்கள் வந்து சேர்ந்த விஷயத்தைக் கூற, அங்கிருந்த ஆப்பிரிக்க இளைஞன் பெட்டிகளை எடுத்துக் கொண்டு மாடியிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். நான்கு அறைகள். இரண்டு பாத்ரூம்கள். மற்ற அறைகளில் ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியவில்லை. அத்தனை அமைதி. சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த பொழுது நடுஇரவில் கூச்சலும் கும்மாளமும் போட்டுக் கொண்டு அங்குத் தூங்கிக்கொண்டிருப்பவர்களைப் பற்றின பிரக்ஞை எதுவுமில்லாமல் கடந்து சென்ற குடிகார தடியர்கள் கூட்டம் நினைவிற்கு வந்தது. நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. ம்ம்ம்ம்ம்….

பெட்டிகளை வைத்து விட்டு அங்குச் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டோம். அந்த ஆப்பிரிக்க இளைஞர் படிப்பதற்காக வந்து அங்கேயே தங்கி இருக்கிறார். வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு “தாய்நாட்டை விட பரவாயில்லை. உள்ளூர் மொழி தான் பிரச்சினையாக இருக்கிறது” என்றார். விவரங்கள் அறிந்தவராகவும் நட்புடனும் ஆங்கிலத்தில் நன்றாகவும் பேசினார். காலை உணவைக் கீழே இருந்த கூடத்தில் வந்து சாப்பிடலாம். ‘சுடச்சுட’ கேட்டது கிடைக்கும். அதாவது, அவர்கள் வைத்திருந்த உணவுப்பட்டியலில் இருந்து என்றார். இருக்கு நல்ல வேட்டை என்று நினைத்துக் கொண்டேன்😜

காலாற சிறிது நடந்து விட்டு வரலாம் என்று வெளியில் வந்தால் சில அடிகளுக்குள் பேருந்து நிறுத்தம். அதைக் கடந்து சிறிது தூரம் சென்றால் வரிசையாக வீடுகள். நல்ல மேடான பகுதி தான். ஏறுவதற்குள் மலையில் ஏறுவதைப் போல மூச்சுவாங்கியது. கண்களை உறுத்தாத வண்ணங்களில் ஸ்டக்கோ சுவர்களுடன் மலர்த்தொட்டிகளுடன் வீடுகள். ஒவ்வொரு வீட்டையும் பார்த்து இது எனக்குப் பிடித்திருக்கு அது பிடித்திருக்கு என்று விலையைப் பார்த்தால் அடி ஆத்தீ! நீ அமெரிக்காவுக்கே திரும்பிப் போயிடு சிவாஜி மொமெண்ட் தான். கஷ்டம்😞

நாங்கள் தங்கியிருந்த அறை சிறியதாக😒 அடிப்படை பொருட்களைத் தவிர வேறு எதுவுமில்லை.அமெரிக்க விடுதிகளில் இருக்கும் அறைகளை விட சிறியதாக இருந்ததது😟 கஸின் கொடுத்திருந்த புளியோதரை, பழங்களுடன் அன்றைய இரவு உணவை முடித்து விட்டோம். மறுநாள் காலை சீக்கிரமே கிளம்பி நகரைச் சுற்றிப்பார்க்க வேண்டும். விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமிருக்கும் என்று ஆப்பிரிக்க இளைஞர் ஏற்கெனவே கூறியிருந்தது ஞாபகத்துக்கு வர, முழுநாளும் சுற்றிய களைப்பும் சேர, சீக்கிரமே தூங்கி விட்டோம்.

மறுநாள் எழுந்து தயாராகி சுவையான காலை உணவை உண்டு முடித்து பேருந்தில் ஏறி ‘பிரின்சஸ் தெரு’விற்குச் சென்றோம். அங்கே பேருந்துகளில் நடத்துநர் எல்லாம் கிடையாது. ஓட்டுநர் மட்டும் தான். வண்டியில் ஏறுபவர்கள் அவர் முன் இருக்கும் இயந்திரத்தில் பணத்தைப் போட்டால் அல்லது கிரெடிட் கார்டை தட்டினால் சீட்டு வருகிறது. ஓட்டுநரிடம் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்ததும் சொல்லி விடுங்கள் என்று கூறி அமர்ந்து கொண்டோம். பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களிடமும் பேசிக்கொண்டே வர, அவர்களே நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் கூறிவிட்டார்கள். அவர்களுக்கு நன்றி கூறி இறங்கி தெருவைப் பார்த்தால் அப்ப்ப்பப்ப்ப்பா!

ஒரு மைல் நீளத்தில் இருக்கும் தெருவில் புதுமையும் பழமையும் கலந்த கட்டடங்கள் வியப்பைத் தருவதாக இருந்தது. சிறு குன்றின் மேல் தெரிந்த கோட்டையோ ஸ்காட்லாந்தின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கிறது. காலம்காலமாக மன்னர்கள் ஆண்ட பூமி என்பதைப் பறைசாற்றும் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க (ஓல்டு சிட்டி)பழைய நகர கட்டடங்கள் ஒரு தெரு முழுவதும் ஆக்கிரமித்துள்ளது என்றால் அதற்கு இணையான தெருவில் நவீன வர்த்தக கட்டடங்கள் மிகுந்த ரசனையுடன் இருந்தது அழகு. கிங் ஜார்ஜ் III மகன்களின் பெயரால் அழைக்கப்படும் ‘பிரின்சஸ் தெரு’வில் அத்தனை கடைகள் இருக்கிறது! ஸ்காட்லாந்தின் தலைநகர் ‘எடின்புரஃஹ்’ என்பதாலும் சுற்றுலாவினர் அதிகளவில் வருவதாலும் எதைத்தொட்டாலும் குதிரை விலை தான். சுற்றுலாவிற்கு வந்து அங்கும் கடைகளுக்குச் சென்று ஷாப்பிங் செய்பவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கென்றும் கைப்பைகள் முதல் உடைகள் வரை ஒரு பாணி உள்ளது. அது தான் கவருகிறது போல! இங்கே விஸ்கி பிரபலம். அதற்காகவே அநேக கடைகள்! குடிமகன்களுக்குக் கொண்டாட்டமான நகரம்.

பிரின்சஸ் தெருவில் தனியார் வண்டிகளை நிறுத்த எங்கும் வசதிகள் இல்லை. பேருந்தில் செல்வது தான் நல்லது. வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு எளிதான முறையில் வந்து செல்ல ரயில்வே நிலையமும் பிரின்சஸ் தெருவின் மையத்தில் இருக்கிறது. நடந்து செல்லும் வழியில் நன்கு பராமரிக்கப்பட்ட “பிரின்சஸ் ஸ்ட்ரீட் கார்டன்ஸ்”. கோடைகாலத்தில் வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பூங்காவில் அத்தனைப் பூச்செடிகள், நிழல் தரும் மரங்கள், நடுவே நீரோடை, குழந்தைகள் ஓடிவிளையாட, பெரியவர்கள் இளைப்பாற என்று அனைத்து வசதிகளுடன் திவ்யமாக இருக்கிறது. அதைச் சுற்றிப்பார்க்கவே நிறைய நேரம் வேண்டும்! அங்கே அமர்ந்த நிலையில் “FORGET-ME-NOT ELEPHANT” எனும் குட்டி யானை வெண்கலச்சிலை. பார்த்ததும் பிடித்துப் போன சிலைக்குப் பின்னால் அப்படி ஒரு சோகமான வரலாறு😔


தெருக்களில் ஸ்காட்லாந்தின் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு ‘bagpipes’ என்னும் மரத்தாலான வாத்தியத்தை இசைப்பவர்கள் அதிகம் தென்பட்டார்கள். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் இசைக்கருவியில் இருந்து வரும் இசையும் அந்த நிலப்பரப்போடு ஒத்துச் செல்லும் விதத்தில் இருப்பது அழகு. இதிலும் ஸ்காட்டிஷ், ஐரிஷ் பேக்பைப்ஸ் என்று இருவகை இசைகள் பிரபலமாம். என்னுடன் பணிபுரிந்த மேலதிகாரி ஒருவர் ஐரிஷ் வம்சாவளியில் பிறந்தவர். நியூயார்க் தலைநகரில் உள்ளூர் விடுமுறை பேரணிகளில் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு தீயணைப்பு வீரர்களின் இசைக்குழுவினருடன் bagpipe வாசிப்பார். அவரவர் கலாச்சாரத்தைப் பெருமையுடன் அறிந்து கொண்டு புலமை பெறுவதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் அவர்களும் அதனை ரசிப்பதும் இப்படித்தான் பன்முக கலாச்சாரம் ஆரோக்கியமாக வளர்கிறது. நினைவுகள் எங்கெங்கோ செல்ல, சிறிது நேரம் இசையைக் கேட்டு விட்டு பணத்தைக் கொடுப்பவர்களும், சேர்ந்து நின்று படத்தை எடுத்துக் கொள்ளும் சுற்றுலாவினர்களின் கூட்டத்தைக் கடந்து அங்கிருந்த இடங்களில் எதைப் பார்ப்பது எதை விடுப்பது என்று தெரியாமல் மேலே தெரிந்த கோட்டைக்குச் செல்ல வழி கேட்டு நடந்தோம் நடந்தோம் நடந்து கொண்டே இருந்தோம். மேட்டில் வேறு நடந்து செல்ல வேண்டியிருந்தது.

“வாடகை வண்டியில் வந்திருக்கலாம் போல. ‘ஜல்’லுன்னு கோட்டை வாசல்ல கொண்டு வந்து விட்டுட்டுப் போறான். ம்ம்ம்ம்ம்”.

“நீ தான நடந்து ஊரைப் பார்க்கணும்னு சொன்ன?”

என்னை நானே நொந்து கொண்டு மூச்சு வாங்க ஏறிக்கொண்டிருந்தேன். ஓரிடத்தில் குறுகிய பாதையில் குறைந்தது 50 படிகளாவது இருந்திருக்கும். புகைப்படங்கள் அதிகம் எடுக்கப்பட்ட அழகான இடங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்களும் ‘க்ளிக்’கிக் கொண்டோம். புராதன கட்டடங்கள் பலவும் தற்பொழுது கல்லூரிகளாகவும் அரசு அலுவலகங்களாகவும் மாறியுள்ளது. பல நூற்றாண்டு கட்டடங்கள் சுற்றுலாவினரைக் கவரும் விதமாக சீர்கெடாமல் பராமரிக்கப்பட்டு வருவது தான் அந்நகரின் சிறப்பு.


வேடிக்கைப் பார்த்துக் கொண்டே “Edinburgh Castle” முன் வந்து சேர்ந்தோம். அப்படியொரு கூட்டம்! சில வாரங்களுக்கு முன்பே அனுமதிச்சீட்டு வாங்கியிருக்க வேண்டும். கூட்டம் குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டும் அங்கே சீட்டு கிடைக்குமாம். மற்ற நேரங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி என்றார்கள். விடுமுறை வாரத்தைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் பல இடங்களில் அரண்மனைகளைப் பார்த்து விட்டதால் ஒன்றும் ஏமாற்றமாக இல்லை. வெளியிலிருந்து பார்க்க கொள்ளை அழகு. உள்ளே இன்னும் அழகாக இருந்திருக்கும். சிறிது தூரம் வரை சென்று பார்த்துவிட்டு வர அனுமதித்தார்கள். படங்களை எடுத்துக் கொண்டோம். பல திரைப்படங்களை இங்கு எடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அருகிலேயே தங்கும் வசதிகளும் இருக்கிறது. வாடகை விலையைக் கேட்டால்…😲

வெளியே வந்தால் ‘ஸ்காட்டிஷ் விஸ்கி’ யுடன் மதிய உணவு சரியாக 12 மணிக்கு கிடைக்கும் என்று கூறி அதுவரையில் அந்தக்கடையில் கிடைக்கும் விஸ்கியின் தரம், செய்யும் முறை என்று விளக்கிக் கொண்டிருந்தார் ஊழியர் ஒருவர். சரி, ஊரைச் சுற்றி விட்டு வரலாம் என்று ‘bagpipers’களையும் மேலும் பல புராதன கட்டடங்களையும் கடந்து கற்கள் பதித்த சாலைகளில் சென்று கொண்டிருந்தோம். குப்பைகளே இல்லாத அகலமான தெருக்கள். நடுநடுவே பிரபலமானவர்களின் மிகப்பெரிய சிலைகள். மக்கள் நடந்து செல்ல ஏதுவாக, வண்டிகள் எதற்கும் அனுமதி இல்லை. நெருக்கமான கற்கட்டடங்கள். எங்கும் சுற்றுலாவினர். கைப்பேசியில் விதவிதமாக படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். சாலையின் நடுவே அந்தக்கால ‘டெலிஃபோன் பூத்’. இன்றைய தலைமுறையினருக்கு அது என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் நிச்சயம் அதிசயித்துப் பார்ப்பார்கள்!

‘ஓல்ட் டவுன்’ மற்றும் உலக பாரம்பரிய தளத்திற்குள்ளேயே, ‘ராயல் மைல்’ என்று ஒரு மைல் தூரத்திற்கு நீளும் தெருவில் கலாச்சார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அதிகமாக உள்ளது. ஒரு ‘ஸ்காட்ஸ் மைல்’ நீளம் இரண்டு அரசு குடியிருப்புகளை (கோட்டை மற்றும் ஹோலிரூட் ஹவுஸின் அரண்மனை) இணைக்கிறது, பழைய மற்றும் புதிய பாராளுமன்றங்கள், நீதிமன்றங்கள், தேவாலயங்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் பரந்த அளவிலான பூங்காக்கள், கடைகள், உணவகங்கள், கஃபேக்கள், பப்கள் என்று ஏராளமாக இருக்கிறது. அத்தனை துடிப்பான அழகான நகரத்தில் தெருவில் பிச்சை எடுப்பவர்களும் அதிகமாக இருந்தது தான் வியப்பாக இருந்தது! புலம்பெயர்ந்தவர்களைப் போல தென்பட்டார்கள். வயதானவர்கள் அதிகமாக இருந்தார்கள். வறுமை கொடியது. ம்ம்ம்ம்…

அங்கிருந்து பழமையான ‘பார்லிமெண்ட் ஸ்கொயர்’ சென்றோம். அங்கிருந்த ‘Mercat Cross’ என்ற கட்டமைப்பு அரச பரம்பரையினரின் சரித்திரத்தை உணர்த்துவது போல பல முத்திரைகளைத் தாங்கி நிற்கிறது. நகரைச் சுற்றிப்பார்க்க வழிகாட்டிகள் பலரும் உள்ளனர். அவர்களுடன் சென்றால் அங்கிருக்கும் ஒவ்வொரு இடத்தைப் பற்றின வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இங்கிலாந்தைப் போலவே இங்கும் ‘ghost tours’ என்று அழைத்துச் செல்கிறார்கள். அதனால் தான் ‘ஹாரி பாட்டர்’ மாதிரி கதைகள் அத்தனை பிரபலமாகியிருக்கிறது போலும்! அதனை வைத்தே நன்கு காசு பார்க்கிறார்கள். அந்நாட்டின் பிரபல நூலாசிரியர் ‘Sir Walter Scott’ ஐப் போற்றும் விதமாக ‘Scott Monument’ ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். ஒரு நூலாசிரியருக்காக உலகில் எழுப்பப்பட்ட இரண்டாவது பெரிய நினைவுச்சின்னம் என்பதால் மிகவும் பிரபலமான இடமாக உள்ளது.

மதிய நேரம் நெருங்க, பசிக்கவே எங்கு செல்வது என்று குழப்பம். உணவகங்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் காத்திருக்க வேண்டியிருந்தது. மதுக்கோப்பைகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு இவர்கள் எப்பொழுது சாப்பிட்டு முடிக்க? அங்கிருந்த இந்திய உணவகத்தில் மட்டும் தான் கூட்டம் இல்லை. சுவை நன்றாக இருந்தாலும் விலை தான்😲 நாங்கள் சென்ற பிறகு சுற்றுலாவினர் பலரும் அங்கு வந்துச் சாப்பிட்டார்கள். இந்திய உணவு அங்கும் பிரபலம் போலிருக்கு! அந்தத் தெருவில் மட்டும் மூன்று இந்திய உணவகங்களைப் பார்த்தோம்!

சாப்பிட்டு விட்டு மீண்டும் நடை. நடந்து நடந்து தான் இந்த ஊரைப் பார்த்து அனுபவிக்க முடியும். அதனால் கால், முட்டி, கணுக்கால் நன்றாக இருக்கும் பொழுதே சென்று விட வேண்டும்😔 சுற்றுலாப் பேருந்துகளில் அமர்ந்து கொண்டே ஊரைச் சுற்றிப்பார்க்கும் வசதிகளும் இருக்கிறது. தெருவில் ஒரு சிறுவனும் சிறுமியும் வாசித்துக் கொண்டிருந்த இசையை சிறிது நேரம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தோம். திறமைசாலிகள்! பலரும் காசுகளைப் போட்டுவிட்டுச் சென்றார்கள்.

இப்படி ஒவ்வொரு இடத்தையும் பார்த்துக் கொண்டே ராயல் மைல் சாலையின் முடிவில் இருக்கும் ‘Holyrood Palace’ வந்து சேர்ந்தோம். ஸ்காட்லாண்ட் வந்தால் இங்கிலாந்து அரசி தங்கும் அரண்மனை. ‘Edinburgh Castle’ல் ஆரம்பித்த ராயல் சாலை Holyrood Palace’ல் வந்து முடிகிறது. அருகிலேயே ஸ்காட்டிஷ் பார்லிமெண்ட் கட்டடம் உள்ளது. எதிரில் இருக்கும் மலையில் ஏறினால் அந்த தெரு முழுவதையும் உச்சியிலிருந்து பார்க்க நன்றாகத் தான் இருக்கும். இளவட்டங்கள் ஏறிக்கொண்டிருந்தார்கள். எனக்கோ நடந்து நடந்து கால்கள் சலித்துப் போயிருந்தது. இப்பொழுது மீண்டும் வந்த வழியே நடந்து சென்று பேருந்து நிறுத்தத்திற்குச் செல்ல வேண்டும். நினைத்தாலே மலைப்பாக இருந்ததால் மலை ஏறும் நினைப்பை விட்டு விட்டு நடக்க ஆரம்பித்தோம்.

பேருந்தைப் பிடித்து விடுதிக்கு வந்து சிறிது நேரம் இளைப்பாறிய பிறகு எங்கு செல்வது என்று யோசித்தோம். அயர்லாந்தில் அட்லாண்டிக் கடற்கரையோரம் பயணித்தது போல ஸ்காட்லாந்தில் செய்ய முடியவில்லை. அதனால் ஒன்றைமணிநேரத் தொலைவில் கடற்கரையோரம் இருக்கும் ‘St.Abb’s Head’ என்னும் அழகிய கிராமத்திற்குச் சென்று வர தீர்மானித்தோம். அங்கு எங்களுக்கு இனிய அனுபவம் காத்திருக்கும் என்று அப்பொழுது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...