Tuesday, August 27, 2024

விதி வலியது

இன்று காலையில் கேட்ட செய்தியே கலவரமாக இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு ஒஹையோ மாநிலத்தில் கொலம்பஸ் நகரில் வாழும் தம்பதியர்(கணவன் 38, மனைவி 31) தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். கணவன் மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பின் தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கு 4,6,8 வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள். பள்ளி முடிந்து திரும்பிய குழந்தைகள் கதவைத் தட்டியும் திறக்காததால் வெளியில் காத்திருந்திருக்கிறார்கள். 4 வயதுக் குழந்தை 'டே கேரில்' இருந்திருக்கும் போல. இருவரின் வண்டிகளும் அங்கே இருந்திருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்பில் அக்கம்பக்கத்து ஆட்கள் கதவைத் தட்டியும் பலனில்லாததால் காவலர்களை அழைத்திருக்கின்றனர். 

குழந்தைகளைச் சிறுவர் காப்பகத்தில் சேர்ப்பதற்கு முன் அவர்களுடைய நண்பர்களில் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டதிலிருந்து கலக்கமாகவே இருந்தது. கணவன் மனைவிக்குள் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. அந்தக் குழந்தைகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

மாலை என்னுடைய மருத்துவரின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். வாசலில் அவசர மருத்துவ உதவி வண்டி நின்று கொண்டிருந்தது. ஸ்ட்ரெச்சரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்."போச்சுடா! இனி மருத்துவரைப் பார்த்த மாதிரி தான். யாருக்கு என்ன ஆச்சோ? இங்கிருந்து நோயாளியை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள் போலிருக்கு" யோசித்துக் கொண்டே வண்டியை நிறுத்தி உள்ளே சென்றேன்.

ஒரே பரபரப்பாக இருந்தது. வேகமாக வந்த வாலிபனைப் பார்த்ததும் எனக்குப் பதட்டமாகி விட்டது. அவன் முகமும் சோர்ந்து இருந்தது. என்னைக் கண்டதும் வேகமாக வரவும், மருத்துவரும் "உனக்கு இவர்களைத் தெரியுமா லதா" என்று கேட்கவும், அந்தப் பையனின் பெயரைச் சொல்லி அவனை மட்டும் தெரியும் என்றேன்.

அவனுடன் இரண்டு பேர் கூட இருந்தார்கள். "என்னாச்சு" என்றவுடன் அவனுக்குப் பேச்சே வரவில்லை. கையெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. "சரி நீ போய் உட்கார்" என்று சொல்லிவிட்டு அந்த இரண்டு பேரிடமும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவர்களுடைய ரூம்மேட் ஒருவன் "எப்பொழுதுமே லூசுத்தனமாக எதையாவது செய்து கொண்டிருப்பான். இன்று காலையிலிருந்தே இன்னிக்கு ஒன்னு நடக்கப் போகுது என்று சொல்லிக்கொண்டே இருந்தான். நாங்கள் வேலைக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பி வந்தால் அரை மயக்கத்திலிருந்தான். அப்பொழுதே காலையில் 20 மாத்திரைகள் சாப்பிட்டேன்" என்றானாம். இவர்கள் என்ன, எது என்று கேட்டுத் தெளிவதற்குள் "பாத்ரூம் போகிறேன் என்றவன் மேலும் 25 மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறான்." மயக்கத்திலிருந்தவனை இவர்கள் அலறியடித்து நான் சென்ற மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கிறார்கள். அவரும் முதலுதவி செய்து விட்டு மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸை அழைத்து விட்டார்.

நான் பார்க்கும் பொழுது அவன் முழித்துக் கொண்டிருந்தான். நல்ல வேளை! அப்பாடா என்றிருந்தது!

அதற்குள் பெண் காவலர் வந்து தகவல்கள் கேட்க, "என்ன நடந்தது என்று இவர்களுக்குத் தான் தெரியும்" என்று கூறி நான் ஒதுங்கி நின்று கொண்டேன்.

"எதற்காக இப்படிச் செய்தான் என்று ஏதாவது தெரியுமா?"

அவர்களும் காரணத்தைக் கூறினார்கள். இதற்கு முன்பும் இப்படி ஏதோ ஒரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்து மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறான்.

படிக்க வந்தவன். அவனுடன் இருப்பவர்கள் வேலைக்குச் சென்று விட்டார்கள். இவன் இன்னும் படிக்கிறான். "அவனுடைய பெற்றோர்கள் அத்தனை நல்ல மனிதர்கள்.இவன் இப்படி அவர்களை நோகடிக்கிறானே. இப்ப எப்படி அவர்களைக் கூப்பிட்டுச் சொல்றதுன்னு தெரியலை" என்று வருத்தப்பட்டார்கள் அந்த இளைஞர்கள். 25-26 வயது தான் இருக்கும்.  இந்தியாவிலிருந்து மாணவர் விசாவில் வந்திருப்பவர்கள். நான் முன்பு பணிசெய்த இடத்தில் இங்கு வந்து படிக்கும் கல்லூரி மாணவர்கள் "இன்டெர்ன்" ஆக வந்திருந்தார்கள். அதனால் அவர்களில் சிலரை நன்கு தெரியும். அத்தனை பேரும் தெலுங்கர்கள். பலருக்கும் தமிழும் தெரிகிறது. நன்றாகப் பேசுவார்கள்.

ஏற்கெனவே, "50-60 லட்சம் வரை கடன் வாங்கி வந்து படிக்கிறோம். நல்ல வேலை கிடைக்க மாட்டேங்குது என்று எங்குப் பார்த்தாலும் புலம்பித் தள்ளுவார்கள்."

இங்கு வந்து ஒரு அற்ப விஷயத்துக்காக உயிரையும் விடத் துணிந்து விட்டான். அவன் பெற்றோர்களை நினைக்கத் தான் மனம் கனத்தது.

குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படாத பெற்றோரின் மரணமும் தன்னை நம்பி ஏகப்பட்ட செலவுகள் செய்து கனவுகளுடன் காத்திருக்கும் பெற்றோரைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாமல் சுயநலத்துடன் உயிரைப் போக்கிக் கொள்ள நினைத்த இளைஞனும் அனாதையான குழந்தைகளும் காத்திருக்கும் பெற்றோர்களும்...

வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொண்டு மீளத்தெரியாமல் இப்படி நடக்கிறதா?

அந்தக் குழந்தைகளுக்கும் தவிக்கும் பெற்றோருக்கும் தெய்வம் துணை இருக்கட்டும். அவர்களுக்காக வேண்டிக்கொள்வதைத்தவிர வேறு என்ன நம்மால் செய்து விட முடியும்?  செய்தியறிந்து பல ஊர்களிலிருந்து இந்தியர்கள் பலரும் அந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. 

ம்ம்ம்ம்.... விதி வலியது.




Monday, August 26, 2024

கிருஷ்ணாஷ்டமி

இன்று பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள். அவரது வருகையை உவகையுடன் கொண்டாடும் பலரது உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். கிருஷ்ணன் என்றாலே அழகும் ஆனந்தமும் தான். கர்ப்பிணிப்பெண்கள் பலரும் கூட கிருஷ்ணனைப் போல ஒரு குழந்தை வேண்டும் என்று தான் நினைத்து வழிபடுவார்கள். அன்புள்ள குழந்தையாய், குறும்புகள் செய்யும் மகனாய், இளம்பெண்களின் மனதைக் கவரும் காதலனாய், பாசமிகு சகோதரனாய், நண்பனாய் எத்தனை எத்தனை ரூபங்களில் அவன் நம்மோடு உறவாடுகிறான். கடவுள் என்பவர் நம்மில் தினமும் வாழ்ந்து வருவதைக் கொண்டாடி மகிழும் உள்ளங்களில் தான் எத்தனை எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!

அவருக்குப் பிடிக்கும் என்று பால், சர்க்கரை, அவல், வெண்ணெய், நெய் என்று பட்சணங்கள் செய்து படைத்து உண்டு மகிழும் குடும்பங்கள் இன்று பல.

காலையில் சில காட்சிகளும் முகங்களும் நினைவிற்கு வந்தது.

காசியில் தங்கியிருந்த நாட்களில் காலையிலும் மாலையிலும் ‘முன்ஷி காட்’ படித்துறையில் அமைதியாக உட்கார்ந்து துள்ளியோடும் ‘மா கங்கா’வைப் பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டு இருந்தோம். ‘சும்மாயிருத்தல்’ கணங்களை அனுபவித்த நேரம் அது! சிரித்த முகத்துடன் ஒரு தம்பதியர் கையில் சிறு குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் படியில் அமர்ந்து கொண்டார்கள். கையிலிருந்த துணியை விலக்கினால் குழந்தை என்று நான் நினைத்தது அழகாக அலங்கரித்த குட்டி தவழும் கிருஷ்ணன் விக்கிரகம்😮 ஏதோ குழந்தையைப் போல அந்தப் பெண்மணி மடியில் கிடத்திக் கொண்டாள். ஆண் தண்ணீரில் இறங்கி கங்கா மாதாவை வணங்கி மூன்று முக்கு முங்கி எழுந்து வர, இந்தப் பெண்மணி சிறு குழந்தையைக் கொடுப்பது போல் சிரித்துக் கொண்டே லட்டு கோபாலை கணவரிடம் கொடுக்க, அவரும் இரு கைகளால் வாங்கிக் கொண்டு மீண்டும் மூன்று முறை முங்கினார். தன் சொந்தக் குழந்தையைக் குளிப்பாட்டியது போல் சிரித்துக் கொண்டே மனைவியிடம் கொடுக்க, அந்தப் பெண்மணியும் துண்டால் அழகாக துடைத்து வேறு துணியை மாட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தார். மிக மிக எளிமையான மனிதர்களாகத் தெரிந்தார்கள். ஆனால் அவர்களின் உலகில் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தார்கள். பார்க்க பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கடவுளையும் குழந்தையாக கொண்டாடுவதில் தான் எத்தனை இன்பம்! அவர்களிடம் எனக்குத் தெரிந்த இந்தியில் பேசிக்கொண்டிருந்தேன். கங்கையில் குளிப்பாட்ட வீட்டிலிருந்து தவழும் கிருஷ்ணன் விக்கிரகத்தை எடுத்து வந்திருக்கிறார்கள். குழந்தை இல்லை என்று நினைக்கிறேன். வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கத் தெரிந்து விட்டால் வாழ்க்கையே சொர்க்கம் தான். பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்று நினைத்து, வாழும் கணங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கிடையில் அந்த தம்பதியரை எனக்கு மிகவும் பிடித்தது. நாம் சந்திக்கும் மனிதர்கள் நமக்கு கற்பிக்கும் பாடங்கள் ஏராளம்!

அனைவருக்கும் இனிய கிருஷ்ணாஷ்டமி வாழ்த்துகள்!

ஹரே ராம! ஹரே கிருஷ்ண!

Sunday, August 25, 2024

உனக்கும் கீழே உள்ளவர் கோடி...

இந்த வார நீயா நானாவில் வேலைக்குச் சென்று கொண்டே படிக்கும் மாணவ, மாணவியர்கள் Vs அவர்களின் பெற்றோர்கள் என்ற விவாதம் நடந்தது. பங்கெடுத்த மாணவர்கள் பெரும்பாலும் புறநகரைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். குழந்தைத் தொழிலாளர்கள் என்று கூட சொல்லலாம். பலரும் சிறுவயதில் இருந்தே வேலைக்குச் சென்று பின் பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார்கள். வயதுக்கு மீறிய உடல் உழைப்பும் மனஉளைச்சலும் பார்க்கவும் கேட்கவும் வருத்தமாக இருந்தாலும் இது உண்மை. நடந்து கொண்டிருக்கிறது. குடும்பச் சூழ்நிலை காரணமாக குழந்தைகள் மேல் திணிக்கப்படும் வன்முறை இது. இங்குதான் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும்.

இப்பொழுதெல்லாம் பெண்களுக்கு இளவயதிலேயே எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்துவிடுகிறது. போதிய ஊட்டச்சத்து இல்லாதது தான் முதற்காரணம் என்று சொல்ல வேண்டியதில்லை. கணவனுக்கு ஈடாக இல்லாவிட்டாலும் ஏதோ அவர்களால் முடிந்த அளவிற்கு அம்மா, மனைவி என வேலைகள் செய்து குடும்பங்களைச் சமாளித்து வருகிறார்கள். வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நோவு என்று வரும் பொழுது தான் இந்தக் குழந்தைகள் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களும் சூழ்நிலையை உணர்ந்து பணியிடங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்களின் வயதிற்கு மீறிய வேளைகளில் ஈடுபடுகிறார்கள். முடிவு? சிறுவயதிலேயே அவர்களுக்கும் உடற்பிரச்னைகள்!

அவர்கள் வளர்ந்ததும் என்னவாக ஆசைப்படுகிறார்கள் என்று சொன்னதிலிருந்து அவர்கள் எத்தனை பாதிக்கப்பட்டுள்ளார்கள். யாரால்? என்று நன்கு புரிந்தது. ஒவ்வொரு கிராமத்திற்கும், ஊருக்கும் என இருக்கும் அரசு அதிகாரிகளின் வேலையே இவர்களைப் போன்றவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முறையாக சேர்கிறதா? இந்த மாணவர்களின் வாழ்க்கையைச் செழுமையாக்க அரசு இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சொல்வது தான். ஆனால் பெரும்பாலானோர் இவர்களிடமிருந்தும் எப்படி பணத்தைக் கொள்ளையடிக்கலாம் என்று தான் இருக்கிறார்கள் போலிருக்கு😔

அதில் ஒரு மாணவன் எதற்கும் ஆசைப்படுவதில்லை. விரும்பியதில்லை என்று அவனின் அத்தை கூற, "பிறந்ததிலிருந்து கிடைக்காத எதன் மீதும் தான் ஆசைப்பட்டதில்லை" என்று கூறியவன் மீது வருவது அனுதாபமா? வருத்தமா? தெரியவில்லை.

எங்கள் சாயப்பட்டறையில் கிட்டத்தட்ட என் வயது/அக்கா வயதுள்ள மகன்களை அழைத்துக் கொண்டு ஒரு தாய் கீழ்மதுரை ஸ்டேஷனிலிருந்து பள்ளி முடித்து அழைத்து வருவார். அரைமணிநேரம் நடந்து வரவேண்டும். மூவரும் வேலை செய்வார்கள். பாவம் முதல் பையன் தலையில் தான் அதிக வேலைகள் இருக்கும். அம்மா ஒத்தாசை செய்வார். இரண்டாவது பையன் அழுது கொண்டே இருப்பான். தூக்கம் வரும். கூடவே வீட்டுப்பாடங்கள் செய்வார்கள். இரவு வீடு திரும்ப 9.30 மணியாகி விடும். அப்பொழுதெல்லாம் அவர்களின் நிலைமையைக் கண்டு வருந்தியதுண்டு. அம்மாவும் அவர்களுக்காக இரவு உணவு, சமயங்களில் உடைகள், அவசரத்திற்குப் பணம் என்று கொடுத்து உதவுவார். இப்படிப்பட்ட மக்கள் ஏராளம் பேர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். முடிந்தவர்கள் உதவுகிறார்கள். அவர்களைப் பார்க்கும் பொழுது இப்படியெல்லாம் கூட கஷ்டப்படுகிற மக்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட்டதுண்டு. எனக்குப் பிடித்த உணவு இல்லையென்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஹோட்டலில் இருந்து உணவைக் கொண்டு வந்து சாப்பிடும் எனக்கு ஒருவேளை சாப்பாடு கூட இல்லாத நிலையில் இருப்பவர்கள் கற்றுக் கொடுத்தது ஏராளம். கல்வியின் அவசியத்தையும் உணர்த்திய காலம் என்று கூட சொல்லலாம்.

ஆனால் எல்லோருக்கும் எல்லாமே எளிதில் கிடைப்பதில்லை. அந்த மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறி பெற்றோர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். சமுதாயத்தில் தங்களுக்கென மரியாதையைப் பெற வேண்டும் என்று முனைகிறார்கள். நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கும் அவர்கள் நினைத்தது நடக்கட்டும்.

இப்பொழுதெல்லாம் பலரும் படித்து முடித்து வேலைகளில் வெளிநாடுகளில் இருந்து தங்கள் சமூகத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கு முடிந்த வரையில் கல்வி பயில உதவி செய்கிறார்கள். இதன் மூலம் தனக்கு உதவிய சமூகத்திற்கு உதவி உயர்த்தவும் செய்கிறார்கள். பல குடும்பங்கள் இதன் மூலம் உயர்ந்துள்ளதை நேரடியாகவே பார்த்து வருகிறேன். அப்படித்தான் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்று குரல்வளையை நசுக்குபவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் திருமாவளவன், நடுவராக வந்த இயக்குனர் மாறி செல்வராஜ் போன்றவர்கள் முறையாக இந்த இளைஞர்களுக்கு வழிகாட்டி உயர்த்த வேண்டும். செய்வார்களா?

நாங்கள் வருந்திய காலங்களில் தாய் மாமா ஒருவர் எப்பொழுதும் கண்ணதாசனின் இந்தப்பாடல் வரிகளைத் தான் கூறுவார். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..." சத்தியமான வார்த்தைகள்!


Saturday, August 24, 2024

சமயபுரம்


2018ல் சமயபுரம் அம்மன் கோவிலுக்கு மதிய நேர பூஜை ஆரம்பிப்பதற்குள் சென்று விட வேண்டும் என்று 11.45 மணி போல் சேர்ந்திருப்போம். வண்டியை முன்னாடியே நிறுத்தி விடச் சொல்ல, உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, தார்ச்சாலையோ உருகி ஓடிவிடும் வெப்பத்தில் கணகணத்துக் கொண்டிருந்தது. கஷ்டப்பட்டு நடந்து கோவிலுக்குள் நுழைந்தோம். இல்லை இல்லை ஓடினோம். நடையைச் சாத்திவிடுவார்களோ என்ற பயம். இத்தனை தூரம் வந்து அம்மனைப் பார்க்காமல் போய்விட்டால்? அதான் முடிந்தவர்கள் ஓடினோம். நல்லவேளையாக மாரியம்மன் சர்வ அலங்காரபூஷிதையாக மலர்கள், எலுமிச்சம்பழ மாலைகளுடன் கண்களையும் மனதையும. நிறைத்தாள். அப்பாடா! திவ்ய தரிசனம். தீபஒளியில் இன்னும் அழகாக காட்சி தந்தாள். கூட்டம் நெருக்கியடிக்க, வெளியே தப்பித்து வந்தோம்.

கோவில் வாசலில் இருந்து நீண்ட மண்டபத்தைக் கடந்து சந்நிதிக்குள் நுழையும் வரை ஒரே கடைகள். இந்தக்கடைகளை அப்புறப்படுத்தினால் என்ன? கேள்வியுடன் கடந்து வந்தேன்.

இந்த வருடம் திருவானைக்காவல், ஶ்ரீரங்கம் கோவில்கள் முடித்த பின் சமயபுரம் கோவலுக்குச் செல்ல வேண்டும் என்றேன். ஈஷ்வர் இதுவரை அங்கு சென்றதில்லை என்றவுடன் கண்டிப்பாக சென்றே தீருவது என்று முடிவெடுத்து அங்கே சென்றோம். சமீபத்தில் தான் குடமுழுக்கு நடந்திருக்கும் போல. அடர்வண்ணங்களில் கோபுரம் திக்குமுக்காட வைக்கிறது

வண்டியை எங்கேயோ நிறுத்தி விட்டார்கள். பிப்ரவரி மாத இறுதியிலே வெயில் சாத்திக் கொண்டிருந்தது. டிரைவர் வேறு “இப்படி போனவுடன கோவில் வந்துடும்” என்று எளிதாகச் சொல்லி விட்டார். வரிசையாக பூக்கடைகள், எலுமிச்சபழ மாலைகள், அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே கோவிலுக்கு வந்து விட்டோம்.
“இந்த வழியா உள்ளே போக முடியாது. அப்படியே உள்ள போனீங்கன்னா அந்த வழியா கோவிலுக்குள்ளாற போற வழி இருக்கு” என்று அங்குள்ளவர்கள் சொல்ல நாங்களும் நடக்க ஆரம்பித்தோம். மக்கள் கூட்டம். தை மாதம் வேறு. கேட்கவா வேண்டும்? விரதமிருந்து பலரும் நடந்து வருவதை வழியில் தான் பார்த்தோமே! மஞ்சள், சிகப்பு சேலைகளில் பெண்களும் தாடி வளர்த்து மஞ்சள் வேட்டியுடன் ஆண்களுமாய் எல்லா பக்கமும் நடந்து கொண்டிருந்தார்கள். முறையான அறிவிப்புப்பலகைகள் இல்லாமல் எப்படிப் போவது என்று தடுமாறி வழியில் கேட்டுக்கொண்டு அவர்கள் காட்டிய திசையில் சென்றால் மூங்கில்கள் கட்டி தகர கூரை போட்ட அடைப்பு வழியாக ஒரு கூட்டம் வரிசையில் நின்று கொண்டிருந்தது.

ஆஆஆஆஆ! இவ்வளவு நீள வரிசையா? அதுவும் “ஸ்பெஷல்” தரிசனத்திற்கு! ஏ அம்மே! வந்தாச்சு. திரும்பிப்போகவா முடியும்? ஐக்கியமானோம். மொட்டையடித்துக் கொண்டு சந்தனம் பூசிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நின்றிருந்தார்கள். ஓம்சக்தி வழிபாடு மன்றத்திலிருந்து வந்தவர்கள் “ஓம்சக்தி பாரசக்தி” என்று கும்பலாக சொல்லிக் கொண்டிருந்ததால் வெட்டிப்பேச்சு சத்தம் இல்லை. அவர்களுடன் வரிசையில் நின்றிருந்தவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.


 
“உன்னால முடியமா? வேர்த்துக் கொட்டுது” கேட்ட ஈஷ்வரிடம், “பாவம்ல. ஏப்ரல் வந்தா இந்த வெயில் இன்னும் உக்கிரமாயிடும். என் சிறுவயதில் மாமா திறுவெறும்பூரில் இருந்ததால் திருச்சி வெயில் மிகவும் பிரபலம்” என்று சிறதுநேரம் எங்களுடைய திருச்சி கோடைக்கால அனுபவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். நடுநடுவே சர்பத், ஐஸ்வண்டிகள் வர, சுற்றியிருந்தவர்கள் வாங்கிச் சாப்பிட்டார்கள். எனக்குச் சாப்பிட ஆசை தான். எதற்கு வம்பு என்று ஜொள்ளொழுக வேடிக்கை மட்டும் பார்த்தேன்.

வரிசை மட்டும் நகருவேனா என்றிருந்தது. பத்து நிமிடங்கள் அரை மணி நேரமானது. ஒரு மணி நேரம் நெருங்க, மெதுவாக ஊர்ந்து சென்ற வரிசை, அதுபாட்டுக்குச் சென்று கொண்டே இருந்தது. ஒருவழியாக கோவிலின் உள்ளே சென்று விட்டோம். முகத்திலறையும் வண்ணங்களுடன் சுவர்ச்சித்திரங்கள்! மனக்கண்ணில் வரைந்து பார்த்தேன்.

என்னை பாவமாக ஈஷ்வர் பார்க்க, நான் அவரைப் பாவமாக பார்க்க… கூட்டம் அம்மன் சந்நிதியை நெருங்க, “ஆத்தா மகமாயி பராசக்தி” என்று பெண்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி கண்களை மூடி வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்.

மணியோசைகளுக்கிடையே தீப ஒளியில் அவளின் தரிசனம் கிடைத்தது. அம்மன்களே அழகிகள் தான். ஆனால் சமயபுரத்தாள் வீற்றிருக்கும் கோலமும் அலங்காரங்களும் அடடா! கண்களும் மனமும் குளிர இனியதரிசனம்.

“வாவ்!” முதன்முதலில் அம்மனை தரிசித்த ஈஷ்வர்! இப்படியொரு பிரம்மாண்ட அம்மனை இப்பத்தான் பார்க்கிறேன் என்றார்.

கோவில் நிறைய மாறிவிட்டிருக்கிறது. “ஸ்பெஷல்” தரிசன கொள்ளையடிக்க மக்களை வரிசையில் நிறுத்தி வளைத்து வளைத்து… இம்சை! எத்தனை வயதானவர்கள், குழந்தைகள்! அவளின் தரிசனத்திற்காக அத்தனையையும் மறந்து வருபவர்களிடம் கொள்ளையடிப்பவர்களை அவள் தான் “கவனிக்க” வேண்டும்.

வெளியே வரும்வழியில் மண்டபம் முழுக்க கடைகள். அங்கும் கூட்டம். மேலே நிமிர்ந்து பார்த்தால் அழகான அம்மன் சித்திரங்கள். ஹை! மீனாட்சி! வேடிக்கை பார்த்துக்கொண்டே வாசலுக்கு வந்துவிட்டோம். அப்பொழுதுதான் செருப்பை வரிசையில் நுழைந்த இடத்தில் விட்டது நினைவுக்கு வர, மீண்டும் வெயிலில் நடை.
  
கோவிலை விட்டு வெளியே வந்தால் ஒரே சாப்பாட்டுக்கடைகள். வஞ்சனையில்லாமல் சாப்பிடும் கூட்டம் ஈக்கள் மொய்க்க கரும்புச்சாறு, இளநீர் விற்றுக்கொண்டிருந்தார்கள்.
 
ஈஷ்வர் களைத்து விட்டிருந்தார். இளநீர் குடித்து விட்டு வண்டியை நோக்கி நடந்தோம்.

“இப்பவே போதும்னு இருக்கு.”

“நோப். அடுத்து நான் பார்க்கணும் பார்க்கணும்னு பல வருடங்களாக காத்திருக்கும் இடத்திற்குப் போறோம்.”

“உனக்கு டயர்டாவே இல்லையா?”

“ம்ஹூம். ஊர சுத்திப்பார்க்கறதுன்னா தான் எனக்கு ரொம்ப பிடிக்குமே
கிளம்பிவிட்டோம்


Wednesday, August 14, 2024

சுதந்திர தினம்


நாங்கள் முதன் முதலில் புலம்பெயர்ந்த நாடு கனடா. அங்கு நான் கண்டு வியந்த பல விஷயங்களில் ஒன்று, கனடியன் வீடுகளில் அந்நாட்டின் கொடி பறந்து கொண்டிருந்த அழகு தான்! இந்தியாவில் அதுவரை நான் பார்த்திராத ஒன்று. நம் தேசியக்கொடியை பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் மட்டுமே காண முடியும். ஆனால், இங்கோ வீடுகளில், கடைகளில், பூங்காக்களில், அரசு அலுவலகங்களில் என்று காணும் இடங்களில் எல்லாம் பறந்து கொண்டிருக்கும். அதுவும் பெரிய பெரிய அளவுகளில் உயரத்தில் பறப்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கும்.
 
அமெரிக்காவில் ஜூலை 4 சுதந்திர தினத்தன்று பலரும் வீடுகளில் கொடியைப் பறக்க விடுவர். வேற்று நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் இரு நாட்டு கொடிகளையும் பறக்க விடுவதும் இங்கு வாடிக்கை.
அமெரிக்காவிலும் கறுப்பர்கள், வெள்ளையர்கள், யூதர்கள், செவ்விந்தியர்கள், புலம்பெயர்ந்தவர்கள் என்று பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். தினம் பல துப்பாக்கி வன்முறைச் செயல்களும், போதை மருந்துப் பிரச்னைகளும், வேலையில்லாத திண்டாட்டமும், ஏழ்மையும், மாநிலங்கள் வாரியாக பல்வேறு பிரச்னைகள் பூதாகரமாக இருந்தாலும் அவர்கள் தேசியக்கொடிக்குத் தரும் மரியாதையில் குறைவில்லை. யாரும் எனக்கு வேலை இல்லை, உணவு இல்லை என்று கொடியை அவமதிப்பது இல்லை. அவரவர் விருப்பத்துடன் வீட்டில் பெருமையுடன் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு வித பெருமிதம் அவர்களுக்கு! பள்ளியிலிருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தேசியக்கொடி பறக்கும் இடத்தை நோக்கி நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு தேசிய கீதம் இசைப்பதும் இறந்த போர் வீரர்களின் நினைவாக நகரில் கொடிகளை வைத்து மரியாதை செய்வதும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. தேசியக்கொடி நாட்டின் அடையாளம். நாட்டு மக்களுக்குப் பெருமை தரும் விஷயம்.
ஒலிம்பிக்ஸ் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்கள் மேடையில் நிற்க, அவர்கள் நாட்டு கொடி ஏற்றப்படுவதும் அவர்களின் தேசியகீதம் இசைக்கப்படுவதும் அந்த விளையாட்டு வீரர்களுக்கும் நாட்டுக்கும் எத்தனை பெருமை!

நமது பாரத தேசம் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்று 78 வருடங்களாகப் போவதை நாடே கோலாகலமாக கொண்டாட ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரம் மூலம் மூவர்ண கொடியை வீட்டிற்குள் ஏற்ற மக்களை ஊக்குவிக்கிறது அரசு. மக்களின் இதயங்களில் தேசபக்தி உணர்வைத் தூண்டுவதும் இந்திய தேசியக் கொடி பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் உத்வேகத்துடன் வீடுகளில் முதன்முறையாக கொடியேற்றி மகிழ்வுறுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது.
இதிலும் அரசியல் ஆதாயம் தேட முயல்பவர்களை நினைத்தால் தான் அதிசயமாக இருக்கிறது! தேசியம் என்றாலே வெறுப்பை உமிழும் இந்த தீவிரவாதப் போக்கு அபாயகரமானது.
 
நம் செல்வங்களையும் வளங்களையும் சூறையாடிச் சென்றவர்கள், நம் மீது திணித்த இன, மதவாத பிடியில் சிக்கிச் சீரழியவேண்டும் என்று நமக்கும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையில் தீராப்பகையை உருவாக்கிவிட்டுச் சென்றது இன்று வரை தொடருவது தெரிந்த வரலாறு. வெளியில் இருக்கும் எதிரிகளை விட உள்நாட்டில் இருந்து கொண்டே இந்தியாவை வீழ்த்த நினைக்கும் எதிரிகள் தான் பேராபத்தானவர்கள். அவர்களுடன் தான் நாம் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த எட்டப்பன்கள் இருக்கும் வரை நாடு முன்னேற பல்வேறு தடைகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். தேசியக்கொடி ஏற்றினால் தேசப்பற்று வந்துவிடுமா, வேலை கிடைத்து விடுமா என்று அறிவாளித்தனமாக பேசித்திரிபவர்கள் இன்றைய சொகுசு வாழ்க்கையில் சிறைசென்றவர்களின், சித்திரவதை அனுபவித்தவர்களின், இன்று வரையில் நாட்டுக்காக உயிர் துறக்கும் ராணுவத்தினரின் வலியை மறந்து அவர்களுக்கான மரியாதை என்று கூட நினைக்க மறந்தது வேதனை தான். தேசியத்தை வளர்க்காமல் தேசியஉணர்வைத் தூண்டாமல் துண்டாட நினைப்பதைத் தான் இந்த அரசியல் பேசும் நடுநிலைவாதிகள் செய்து கொண்டிருப்பது. பாகிஸ்தான், சீனா கொடிகளைக் கூட இவர்கள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்த தயங்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.
 
இந்தியா எனது தேசம் என்று நினைக்கும் எவரும் தங்கள் இல்லங்களில் நமது தேசியக் கொடியை ஏற்றுவதில் பெருமை கொள்வார்கள். இனி வரும் தலைமுறைக்காவது தேசியக்கொடியின் மீதான மரியாதையையும் மதிப்பையும் கற்றுக் கொடுப்போம்.
 
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

ஜெய்ஹிந்த்!


Monday, August 12, 2024

உலக யானை நாள்

மிருகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு குணம். சிலவற்றைப் பார்த்தவுடனே பயம் தொற்றிக்கொள்ளும். சிலவற்றைப் பார்த்தவுடனே உற்சாகம் பிறக்கும். நம் உயிரை நினைத்து அச்சம் கொள்ள வைக்கும் காட்டு மிருகங்களுக்கிடையில் கம்பீரமாக உலாவரும் யானையைப் பிடிக்காதவர்கள் மிகக்குறைவே!

தெருவில் வரும் யானையைப் பார்க்க குழந்தைகள் பட்டாளம் அதன் பின்னே பயத்துடன் செல்லும். அசைந்தாடும் வாலைத் தொட முயன்று அச்சத்தில் பின்வாங்கும். யானை மீதேற தைரியம் வேண்டும். அழும் குழந்தையை வலுக்கட்டாயமாக யானை மீது அமர வைப்பார்கள் பெற்றோர்கள். ஊசிமுனை போல் இருக்கும் அதன் தலைமுடி குத்தி பயம் சென்று வலியால் அழும் குழந்தைகள் ஏராளம். காட்டில் வாழவேண்டிய உயிரினத்தை அன்று மக்கள் குறைவாக மண், மரங்கள் அதிகமாக இருந்த காலத்தில் நாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். தற்போதைய தார் சாலைகளில் சுடும் மணலில் பரிதாபமாக அவை நடந்து செல்வதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது.

இன்றோ, தந்தங்களுக்காக அநியாயமாக கொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் யானை இனத்திற்கு ஏற்பட்டு வரும் அவல நிலையைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பாதுகாக்கவும் ஆகஸ்ட் 12, 2012 அன்று "உலக யானை நாள்" அறிவிக்கப்பட்டது.

மனிதர்களைப் போலவே கூட்டுக்குடும்பங்களாக வாழும் யானைகளைப் பற்றின குறுந்தொடர்கள் ஏராளம் வலைத்தளங்களில் காணக்கிடைக்கிறது. இனப்பெருக்கத்தின் பொழுது மட்டும் ஒன்று சேர்ந்தாலும் பெண் யானைகள் கூட்டம் தனித்தும் ஆண்யானைகள் தனித்தும் பயணிக்கிறது. பெண்யானைக் குழுவை வழிநடத்திச் செல்லும் வயதான "அப்பத்தா" யானைக்கு வழித்தடங்கள் அத்தனையும் துல்லியமாகத் தெரிகிறது. அதை அடுத்த தலைமுறைக்கும் உணர்த்துகிறது. பல வருடங்கள் கழித்து அவ்வழியே பயணிக்கும் அறிவும் ஆற்றலும் இருக்கிறது போன்ற வியக்கத்தகு விஷயங்களை மிக அழகாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

 

உணவுக்காக அலையும் இந்த உயிரினத்தால் காடுகள் செழிப்படைகிறது. காடுகள் செழித்தால் தான் மழை. மழைபொழிந்தால் தான் நமக்கு உணவும் வாழ்க்கையும். ஏனோ இதையெல்லாம் மறந்து இந்த அழகிய உயிர்களை நம்முடைய ஆசைக்குப் பலிகடாவாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். தந்தத்தால் செய்த பொருட்களை எந்தக் காலத்திலும் வாங்க வேண்டாம். முன்பு வேலை செய்த அலுவலகத்தில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தந்தத்தாலான பொருட்களைக் கைப்பற்றி பார்வையிட அனுமதித்தார்கள். 

         திடுக்கிட வைக்கும் காட்சி அது! வீடுகளில் அலங்காரமாக வைத்துக் கொள்ள பெரிய பெரிய தந்தங்கள், கடவுளின் உருவங்கள் என்று முறைகேடாக ஏற்றுமதி செய்யப்பட்டு நியூயார்க் நகரத்தில் இந்திய மற்றும் சீனக்கடைகளில் இருந்து கைப்பற்றிய பொருட்கள் அவை. அதற்காகப் பல நூறு யானைகளைக் கொன்றிருப்பார்கள் என்ற தகவல் மனிதம் தொலைத்த மானிடர்களின் அரக்க குணத்தைத்தான் பறைசாற்றியது. இம்மனிதர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க வேண்டும்.

இன்று பல தொண்டு நிறுவனங்களுடன் தன்னார்வலர்களும் அரசுகளும் சேர்ந்து யானைகளைக் காக்க முனைந்து வருவது சிறப்பு.  

யானைப்படங்கள், காணொளிகளைப் பார்த்தாலே உற்சாகம் பிறக்கும். அதுவும் அந்த குட்டியானைகள். ச்ச்சோ ஸ்வீட்💖💖💖

Sunday, August 11, 2024

மூப்பு

இந்த வருட ஆரம்ப மாதங்களில் ஊருக்குச் சென்றிருந்த பொழுது சுற்றியிருக்கும் வயதான உறவினர்கள், பெரும்பாலும் பெண்கள், தனிமரமாகி நிற்பதை உணர முடிந்தது. மகன்,மகள்களின் ஆதரவு, அருகாமை இருந்தாலும் ஓடியாடி களைத்த கால்கள் வேலை செய்தே பழக்கப்பட்டிருந்த வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையிலிருப்பதாக வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

மூப்பின் காரணமாக பலருக்கும் பல விதமான நோய்கள். கணவன் உயிரோடு இருக்கும்வரை கலகலப்புடன் இருந்த பெண்மணிகள் அனைவரும் இன்று தங்களுக்கென்று ஒரு ஆதரவு இல்லாததைப் போல உணருகிறார்கள். அதுவும் அடுத்தவர் துணையின்றி வாழும் நிலைக்குச் சென்றவர்களோ,
“போதும் இந்த வாழ்க்கை! இனி யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது”என்று சொல்லும் பொழுது கண்ணீரை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. என்னை வளர்த்தெடுத்தவர்கள். அவர்களின் இளம் வயதில் எங்களைப் பராமரித்த பசுமை நினைவுகள் இன்றைய நிலையை எண்ணி கண்ணீராய் கட்டுக்கடங்காமல் அழ, அப்பொழுதும் அவர்களே சமாதானம் செய்ய வேண்டியிருக்கிறது.

அதில் ஒருவர் சொன்னது தான் இன்றுவரையில் யோசிக்க வைக்கிறது.
குழந்தைகளுக்காக ஓடி அவர்கள் வாழ்க்கையில் செட்டிலாகி விட, பின் கணவருக்காக ஓடி, அவர் கரையேறி விட, தனக்கு என்று நோவு வரும்பொழுது பெற்ற பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்கிறோமே என்ற நிலை தான் பலரையும் வருத்தப்பட வைக்கிறது.

என்ன தான் தன்னைப் மெற்றவர்கள் என்றாலும் தானும் ஒரு கணவனாக, தகப்பனாக, பெண் என்றால் மனைவியாக, அம்மாவாக இருப்பவர்களுக்கு வயதானவர்களைக் கவனித்துக்கொள்வதில் ஏகப்பட்ட சிரமங்கள். சிலர் பல அலுவல்களுக்கு இடையிலும் வயதான அம்மா, அப்பாவை மிக நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.

நாம் குழந்தைகளாக இருந்த பொழுது ஊண், உறக்கமின்றி நம்மை கவனித்துக்கொண்டவர்கள் வயதில் முதிர்ந்த குழந்தைகளாக மாறும் பொழுது கவனித்துக் கொள்ளும் பொறுமையையும் பக்குவத்தையும் நேரத்தையும் பெற்றிருப்பவர்கள் பெரும் அதிர்ஷ்டசாலிகள்.
ஆனால் கடைசிக்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு மட்டும் யாருக்கும் வரக்கூடாது.

வாழ்க்கைச் சக்கரத்தில் நமக்கும் அந்த நிலை வரும் என்பதை உணர்பவர்கள் மட்டுமே வயதான பெற்றோர்களுக்கு ஆதரவாகவும் அனுசரனையாகவும் இருக்க முயற்சிக்கிறார்கள்.

எளிமையான இந்த வாழ்க்கை தான் எத்தனை சிக்கலானது?





'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...