Tuesday, August 27, 2024

விதி வலியது

இன்று காலையில் கேட்ட செய்தியே கலவரமாக இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு ஒஹையோ மாநிலத்தில் கொலம்பஸ் நகரில் வாழும் தம்பதியர்(கணவன் 38, மனைவி 31) தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். கணவன் மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பின் தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கு 4,6,8 வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள். பள்ளி முடிந்து திரும்பிய குழந்தைகள் கதவைத் தட்டியும் திறக்காததால் வெளியில் காத்திருந்திருக்கிறார்கள். 4 வயதுக் குழந்தை 'டே கேரில்' இருந்திருக்கும் போல. இருவரின் வண்டிகளும் அங்கே இருந்திருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்பில் அக்கம்பக்கத்து ஆட்கள் கதவைத் தட்டியும் பலனில்லாததால் காவலர்களை அழைத்திருக்கின்றனர். 

குழந்தைகளைச் சிறுவர் காப்பகத்தில் சேர்ப்பதற்கு முன் அவர்களுடைய நண்பர்களில் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டதிலிருந்து கலக்கமாகவே இருந்தது. கணவன் மனைவிக்குள் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. அந்தக் குழந்தைகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

மாலை என்னுடைய மருத்துவரின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். வாசலில் அவசர மருத்துவ உதவி வண்டி நின்று கொண்டிருந்தது. ஸ்ட்ரெச்சரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்."போச்சுடா! இனி மருத்துவரைப் பார்த்த மாதிரி தான். யாருக்கு என்ன ஆச்சோ? இங்கிருந்து நோயாளியை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள் போலிருக்கு" யோசித்துக் கொண்டே வண்டியை நிறுத்தி உள்ளே சென்றேன்.

ஒரே பரபரப்பாக இருந்தது. வேகமாக வந்த வாலிபனைப் பார்த்ததும் எனக்குப் பதட்டமாகி விட்டது. அவன் முகமும் சோர்ந்து இருந்தது. என்னைக் கண்டதும் வேகமாக வரவும், மருத்துவரும் "உனக்கு இவர்களைத் தெரியுமா லதா" என்று கேட்கவும், அந்தப் பையனின் பெயரைச் சொல்லி அவனை மட்டும் தெரியும் என்றேன்.

அவனுடன் இரண்டு பேர் கூட இருந்தார்கள். "என்னாச்சு" என்றவுடன் அவனுக்குப் பேச்சே வரவில்லை. கையெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. "சரி நீ போய் உட்கார்" என்று சொல்லிவிட்டு அந்த இரண்டு பேரிடமும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவர்களுடைய ரூம்மேட் ஒருவன் "எப்பொழுதுமே லூசுத்தனமாக எதையாவது செய்து கொண்டிருப்பான். இன்று காலையிலிருந்தே இன்னிக்கு ஒன்னு நடக்கப் போகுது என்று சொல்லிக்கொண்டே இருந்தான். நாங்கள் வேலைக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பி வந்தால் அரை மயக்கத்திலிருந்தான். அப்பொழுதே காலையில் 20 மாத்திரைகள் சாப்பிட்டேன்" என்றானாம். இவர்கள் என்ன, எது என்று கேட்டுத் தெளிவதற்குள் "பாத்ரூம் போகிறேன் என்றவன் மேலும் 25 மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறான்." மயக்கத்திலிருந்தவனை இவர்கள் அலறியடித்து நான் சென்ற மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கிறார்கள். அவரும் முதலுதவி செய்து விட்டு மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸை அழைத்து விட்டார்.

நான் பார்க்கும் பொழுது அவன் முழித்துக் கொண்டிருந்தான். நல்ல வேளை! அப்பாடா என்றிருந்தது!

அதற்குள் பெண் காவலர் வந்து தகவல்கள் கேட்க, "என்ன நடந்தது என்று இவர்களுக்குத் தான் தெரியும்" என்று கூறி நான் ஒதுங்கி நின்று கொண்டேன்.

"எதற்காக இப்படிச் செய்தான் என்று ஏதாவது தெரியுமா?"

அவர்களும் காரணத்தைக் கூறினார்கள். இதற்கு முன்பும் இப்படி ஏதோ ஒரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்து மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறான்.

படிக்க வந்தவன். அவனுடன் இருப்பவர்கள் வேலைக்குச் சென்று விட்டார்கள். இவன் இன்னும் படிக்கிறான். "அவனுடைய பெற்றோர்கள் அத்தனை நல்ல மனிதர்கள்.இவன் இப்படி அவர்களை நோகடிக்கிறானே. இப்ப எப்படி அவர்களைக் கூப்பிட்டுச் சொல்றதுன்னு தெரியலை" என்று வருத்தப்பட்டார்கள் அந்த இளைஞர்கள். 25-26 வயது தான் இருக்கும்.  இந்தியாவிலிருந்து மாணவர் விசாவில் வந்திருப்பவர்கள். நான் முன்பு பணிசெய்த இடத்தில் இங்கு வந்து படிக்கும் கல்லூரி மாணவர்கள் "இன்டெர்ன்" ஆக வந்திருந்தார்கள். அதனால் அவர்களில் சிலரை நன்கு தெரியும். அத்தனை பேரும் தெலுங்கர்கள். பலருக்கும் தமிழும் தெரிகிறது. நன்றாகப் பேசுவார்கள்.

ஏற்கெனவே, "50-60 லட்சம் வரை கடன் வாங்கி வந்து படிக்கிறோம். நல்ல வேலை கிடைக்க மாட்டேங்குது என்று எங்குப் பார்த்தாலும் புலம்பித் தள்ளுவார்கள்."

இங்கு வந்து ஒரு அற்ப விஷயத்துக்காக உயிரையும் விடத் துணிந்து விட்டான். அவன் பெற்றோர்களை நினைக்கத் தான் மனம் கனத்தது.

குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படாத பெற்றோரின் மரணமும் தன்னை நம்பி ஏகப்பட்ட செலவுகள் செய்து கனவுகளுடன் காத்திருக்கும் பெற்றோரைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாமல் சுயநலத்துடன் உயிரைப் போக்கிக் கொள்ள நினைத்த இளைஞனும் அனாதையான குழந்தைகளும் காத்திருக்கும் பெற்றோர்களும்...

வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொண்டு மீளத்தெரியாமல் இப்படி நடக்கிறதா?

அந்தக் குழந்தைகளுக்கும் தவிக்கும் பெற்றோருக்கும் தெய்வம் துணை இருக்கட்டும். அவர்களுக்காக வேண்டிக்கொள்வதைத்தவிர வேறு என்ன நம்மால் செய்து விட முடியும்?  செய்தியறிந்து பல ஊர்களிலிருந்து இந்தியர்கள் பலரும் அந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. 

ம்ம்ம்ம்.... விதி வலியது.




No comments:

Post a Comment

கலப்படம்

கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற...