Sunday, September 1, 2024

நீயாநானா


ஒரு முறை நியூயார்க் விமானநிலையத்தில் காத்திருந்த பொழுதில் தமிழர்களைப் போலத் தெரிந்த குடும்பம் ஒன்றைப் பார்த்தேன். ஒருவேளை அவர்களும் நம்மூருக்குத் தான் செல்கிறார்களோ என்று நினைத்தேன். அப்பா, அம்மா, மகள் போல ஒரு பெண், அவளுடைய கணவர், குழந்தைகள் என்று அங்குமிங்கும் பரபரப்பாகச் சென்று வந்து கொண்டிருந்தார்கள். என்னுடைய அருகிலிருந்த இருக்கையில் அம்மா போலத் தெரிந்த பெண்மணி அமர்ந்து கொண்டார். ஏதோ வேற்று மொழியில் பேசிக்கொண்ட மாதிரி இருந்தது! என்னடா லதாவுக்கு வந்த சோதனை? பார்க்க தமிழ் ஆட்களைப் போல இருந்து கொண்டு புரியாத மொழியில் பேசுகிறார்களே என்று மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.

ஆண் தான் பேசினார். "பல தலைமுறைகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து பிரேசிலில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்யச் சென்ற குடும்பங்கள் பலவும் அங்கிருப்பதாகவும் இவருடைய குடும்பம் தற்போது கலிஃபோர்னியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளது" என்று கூறினார். தமிழ் தெரியாது என்றார். ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தோற்றம் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட முடியும். அப்படி இருந்தார்கள். கனடாவில் நான் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் பலரும் ஆங்கிலம் கலக்காத கொஞ்சு தமிழில் கதைத்து என்னை வெட்கப்பட வைத்தார்கள். நம் மொழியையும் கலாச்சாரத்தையும் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகிறார்கள்.

எங்களுடைய 'சார்தாம்' பயணத்தின் பொழுது தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த குஜராத் வம்சாவளிகள், மலேசியாவிலிருந்து வந்திருந்த தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த வம்சாவளிகள் சிலரைச் சந்தித்து அளவளாவும் சந்தர்ப்பம் கிடைத்தது. பல சுவையான தகவல்களைத் தெரிந்து கொண்டோம். தமிழர்கள் பலரும் தங்கள் மூதாதையர் வாழ்ந்த, தங்களுடைய முகம் தெரியாத உறவினர்கள் வாழும் ஊருக்கு வந்து செல்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்ட பொழுது ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஆம். அவர்கள் தமிழில் தான் உரையாடினார்கள்.

இந்த வார 'நீயாநானா'வில் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த நான்காவது தலைமுறையினருடன் நேர்காணல்/விவாதம் நடந்தது. அதில் பலரும் இலங்கைத்தமிழர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பேசிய தமிழ் அப்படித்தானிருந்தது. கோவையிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற குடும்பத்தில் இருந்து வந்திருந்த பெண் மிக அழகாகத் தமிழ் பேசினார். எப்படி தமிழ்நாடே மறந்து கொண்டிருக்கும் கலாச்சாரத்தை, மூன்று தலைமுறைகள் எட்டிப்பார்க்காமல் இருந்த மாநில மொழியை பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கோபிநாத் கண்கள் வியக்க ஆச்சரியப்பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். பரத நாட்டியம், திருக்குறள், பாரதியார் பாட்டு, கும்மி ஆட்டம் என்று கலக்கினார்கள். பரத நாட்டியம் ஆடிய ஃபிஜி தீவிலிருந்து வந்திருந்த பெண் செருப்பு போட்டுக் கொண்டு ஆடியது தான் வித்தியாசமாகத் தெரிந்தது. பரதம் கற்றுக் கொடுத்தவர் முக்கியமான ஒன்றைக் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டிருக்கிறார்😖அந்தப்பெண் தான் ஒரு "கார்டியோ வாஸ்குலர் சர்ஜன்" என்றதும் கோபிநாத் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார். இதைத்தான் "don't judge a book by its cover" என்பார்கள்.

பர்மா, மலேஷியா, ஃபிஜி தீவு, உகாண்டா, ஆஸ்திரேலியா, கனடா, மாலத்தீவு, தென்னாப்பிரிக்கா என்று உலகின் பல மூலைகளில் இருந்து வந்திருந்த இளைஞர் பட்டாளம் கூறியதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் பலரும் இன்றும் வீடுகளில் தாய்மொழியில் பேசுவதும் பூஜை, புனஸ்காரங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள் என்று அனைத்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி ஆய்வாளர் ஒருவர் அங்கிருக்கும் கோவில்கள் தான் இதற்கு காரணம். அதனால் தான் நான்கு தலைமுறைகள் கடந்தும் பரதநாட்டியம், பாட்டு, தமிழ் அழியாமல் இருக்கிறது என்று கூறினார். சில பெண்கள் அழகாக கோலம், ரங்கோலியும் போட,

கோபிநாத்திற்கு ஒரே அதிர்ச்சி. "எமோஷன குறை. எமோஷன குறை" என்று காதில் ஓதியிருப்பார்கள் போலிருக்கு. காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடும் அழகிய கலையை மறந்து கொண்டிருக்கும் திராவிடர்களுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும்😁 கோலம் போடுவதில் இருக்கும் அறிவியலை மேல்நாட்டுக்காரன் ஆராய்ச்சி செய்கிறான். நாம் தெரிந்த கலையை மறந்து கொண்டிருக்கிறோம். என்னவோ போடா மாதவா😞 

என்னுடைய அனுபவத்தில் கனடா, அமெரிக்காவில் தமிழ் மொழி வகுப்புகள் அந்தந்த ஊர் தமிழ்ச்சங்கங்களால் முன்னெடுத்து குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகிறது. கலிஃபோர்னியா மற்றும் வேறு சில மாநிலப் பள்ளிகளில் வேற்று மொழியாகத் தமிழ் மொழியை அங்கீகரித்து க்ரெடிட் பெறவும் முடிகிறது. நியூயார்க்கில் இன்னும் அந்தளவிற்கு யாரும் முயலவில்லை.

இன்றைய 'நீயா நானா' மூலம் புலம்பெயர்ந்தவர்களின் இன்றைய தலைமுறையினர் தங்களுடைய மூதாதையர்களின் உறவுகளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முனைவதும் "தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என்று சொல்வதில் பெருமை கொண்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

வேற்று மொழிகளைக் கற்றுக் கொண்டாலும் வெளிநாடு சென்றாலும் தமிழ் அழியாது என்பதை நிரூபிக்கிறார்கள். நாமோ, மும்மொழிக்கொள்கையால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று துண்டுச்சீட்டுப்பார்த்து "வெயிட் அண்ட் சீ" சொல்லி அரசுப்பள்ளி மாணவர்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறோம்.





No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...